ஓர் அகலிகையின் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 2,163 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நவ் த ஸ்டூடண்ட்ஸ் ஆஃப் மதுரை யுனிவர்ஸிடி ப்ரஸென்ட் தெர் ஒன் ஆக்ட் ப்ளே இன் இங்கிலீஷ்-” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்த கைத்தட்டலும் ஆரவாரமும், மாணவர்களின் ஆர்வத்தைப் பிரதிபலித்தன.

ஒரு வாரம் நாகபுரியில் நடைபெறுகிற அனைத்திந்தியப் பல்கலைக்கழக மாணவர்களின் இளைஞர் விழாவில், இதுவரை இந்தியிலும் பிற மொழிகளிலும் நடந்த நாடகங்களைப் பெருவாரியான மாணவர்கள் புரிந்து கொள்ள இயலாமல் தவித்தனர். இடையிடையே ஒன்றிரண்டு ஆங்கில நிகழ்ச்சிகள் நடந்தபோது, வரவேற்று ரசித்து மகிழ்ந்தனர்.

உண்மையில், மதுரைப் பல்கலைக்கழகத்தின் நாடகம் நேற்றே அரங்கேறியிருக்க வேண்டும். ஆனால் நேற்று காலையில் நடந்த அசம்பாவித நிகழ்ச்சியால், அந்த நாடகம் ஒத்தி வைக்கப்பட்டு, இப்போது அரங்கேறுகிறது.

அன்று காலையில், தங்கும் விடுதியின் சுற்றுப் புறங்களில் உலாவிக் கொண்டிருந்தார்கள் தமிழக மாணவர்கள் சிலர். மாணவர்களை அழைத்து வந்திருந்த சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் சுந்தரமும், திருச்சிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சொக்கலிங்கமும் அவர்கள் கூடவே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சக மாணவர்களின் வேகமான நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல், உடல் பருத்த மாணவன் ஒருவன், மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியவாறு, கடைசியில் தள்ளாடி நடந்து கொண்டிருந்தான்.

ஒரு நீர்ப்பாசனக் கால்வாய்க் கரையில் நடந்து கொண்டிருந்தபோது, சரக் என்று கால் தடுமாறி நழுவி. கால்வாய்க்குள் விழுந்துவிட்டான் அவன். அந்த இடத்தில் கால்வாய்த் தண்ணீர் ஆழம் அதிகம் போலிருக்கிறது. நீச்சல் தெரியாத அந்த மாணவன், “ஐயோ! ஐயோ! காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” என்று அலறிய குரல் கேட்டு, சுந்தரமும் சொக்கலிங்கமும் திரும்பிப் பார்த்தார்கள்.

சொக்கலிங்கத்துக்கு நீச்சல் தெரியாது. உடனே, “உதவி. உதவி…! யாராவது நீச்சல் தெரிந்தவர்கள் ஓடி வாருங்கள்…!” என்று ஆங்கிலத்தில் கூவினார்.

பேராசிரியரின் கூக்குரல் கேட்டு சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். வங்காளத்தைச் சேர்ந்த ஒரு மாணவன், சரேலென்று அம்பாகத் தண்ணீருக்குள் பாய்ந்து, மூழ்கிக் கொண்டிருந்த மாணவனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி இழுத்து வர முயலும் போது, இன்னும் இரண்டு மாணவர்களும் குதித்து, எல்லோரும் சேர்ந்து அவனைத் தூக்கி வந்து கரை சேர்த்தார்கள். முதலுதவிக்குப் பின் அந்த மாணவன் கண் திறந்தான்.

மதுரையைச் சேர்ந்த அந்த மாணவன் அன்று முழுவதும் படுக்கையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். பிறந்த ஊரிலிருந்து வெகுதூரத்தில், தண்ணீரில் மூழ்கி இறந்து விடுவோமோ என்ற பயத்தில் அவன் மிகவும் ‘அப்ஸெட்’ ஆகியிருந்தான். அவனைச் சுற்றியிருந்த மதுரை மாணவர்கள் அன்று நாடகம் நடிக்கும் ‘மூடி’ல் இல்லாததால் அன்று நடைபெறவிருந்த நாடகம் மறுநாளைக்கு ஒத்திப் போடப்பட்டது.

பேராசிரியர் சொக்கலிங்கமும் சுந்தரமும் மாணவப் பருவத்திலே ஒன்றாகப் படித்த நண்பர்கள்.

அன்று காலையில் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, சொக்கலிங்கத்துக்குத் திடீர் என்று நினைவில் ஒரு மின்னல் தெறித்தது.

“ஏன் சுந்தர்! உனக்குத்தான் நீச்சல் தெரியுமே…? நீ ஏன் கால்வாயில் குதிச்சு அந்தப் பையனைக் காப்பாத்த நினைக்கலே?” என்று படப்படப்புடன் கேட்டார் அவர்.

அந்தக் கேள்வி, பளீர் என்று சாட்டையடியாய் சுந்தரத்தின் உள்ளத்தைத் தாக்கி நடுங்க வைத்தது.

“சொக்கு!… அந்தப் பையன் ரொம்பக் குண்டாயிருந்தான். நான் அவ்வளவு குண்டுப் பையனைத் தூக்கிக் காப்பாற்றப் போய், நானே ஆபத்தில் சிக்கிக்குவேனோ என்கிற பயம் எனக்கு…” என்று தயங்கித் தளர்ந்த குரலில் சொன்னார் சுந்தரம்.

“நோ… நீ முதல்லே குதிச்சிருந்தா, பின்னாலே மற்ற ஸ்டூடண்ட்சும் குதிச்சிருப்பாங்க. இல்லியா…? ஒருத்தன் உயிர் ஆபத்திலே இருக்கும்போது, அவன் குண்டா ஒல்லியா, அவனைக் காப்பாத்த முடியுமா முடியாதானு யோசிக்க ஏது நேரம்?”

“அதென்னமோ, சொக்கு! எனக்கு எப்போதுமே அப்படி ஒரு பயம் வந்திடும்…. ஆபத்திலே இருக்கிற ஒருத்தனைக் காப்பாத்துறதைவிட, நம்ம உயிருக்கு ஆபத்தில்லாம தப்பிச்சுக்கிடுவோம்னுதான் எனக்குத் தோணுது… இது இப்படியே எனக்கு இயல்பாய்ப் போச்சு…”

சுந்தரத்தின் இந்தச் சுபாவம் எத்தனை பெரிய அவமானத்திற்கும் இழப்பிற்கும் அவரு வாழ்க்கையைப் பலியாக்கிவிட்டிருக்கிறது என்பது, அவருக்கு மட்டும்தான் தெரியும். சொக்கலிங்கத்துக்குத் தெரியாது.

நாகபுரிப் பல்கலைக்கழகத்தின் நாடக அரங்கில், மதுரை பல்கலைக்கழக நாடக அறிவிப்பும் ஆரவாரமும் முடிந்து, ஆழமான அமைதி அங்கே வந்து அமர்ந்தது.

ஆங்கில நாடகம் என்ற உற்சாக வரவேற்போடு, அடுத்துச் செய்யப்பட்ட அறிவிப்பு, மாணவர்களை மேலும் ஆர்வம் கொள்ள வைத்தது.

“இப்போது நீங்கள் காணப் போவது, ‘இன்று கௌதமர் கல்லாகிறார்’ என்னும் புராண நாடகம்” என்றதும், அவையில் எல்லோரும் புருவத்தை உயர்த்தினார்கள்.

விசில் ஒலியைத் தொடர்ந்து, நீல வண்ண முன்திரை மெல்ல விலகிக் கொண்டு, அரங்கினுள்ளே ஒரு புராண கால ஆசிரமத்தைப் பார்வைக்கு வைத்தது.

மாணவர்கள் எல்லோரும், மேடையிலே வைத்த கண் வாங்காமல் உட்கார்ந்திருந்தார்கள்.

“அடி துரோகி…! இந்தப் புனிதமான ஆசிரமத்தை உன் காமக் களியாட்டத்திற்கு இடமாக்கிவிட்டாயே!… கணவனை ஏமாற்றிவிட்டுக் கள்ளப் புருஷனோடு சேர்…”

“நிறுத்துங்கள் ஸ்வாமி! என்னைப் பொறுத்த வரையில் என்னை அணைத்திருந்த உருவம் கள்ளப் புருஷன் இல்லை; தாலி கட்டிய கணவர்தான். இப்போது பூனை உருவத்திலே போன இந்திரனை அடையாளம் கண்டு கொண்ட நீங்கள், நடு ஜாமத்திலே சேவல் உருவத்தில் வந்து கூவிய அவனை ஏன் உங்கள் ஞான திருஷ்டியால் கண்டு கொள்ளவில்லை? திரிகாலமும் உணரும் சக்தி வாய்ந்த பிரும்மரிஷியாகிய உங்களாலேயே, சேவலுக்குள் இருந்த இந்திரனைக் கண்டு கொள்ள முடியாதபோது – சாதாரணப் பெண்ணாகிய நான் உங்களுடைய உருவத்திற்குள் இருந்த அவனைத் தெரிந்து கொள்ள முடியுமா, ஸ்வாமி?”

“சீ! வேசி…! கணவனுக்கும் காமாந்தகாரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் கல் மாதிரிக் கிடந்த நீ, இனிமேல் கல்லாகக் கடவது!”

“நில்லுங்கள் ஸ்வாமி!… நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு உங்கள் சாபத்தை அளியுங்கள். ஒரு மனைவியின் கடமையை மறந்து, தவறி விட்டதற்காக என்னைச் சபித்திருக்கிறீர்களே – நீங்கள் ஒரு கணவனுக்குரிய கடமையைச் சரியாக நிறைவேற்றினீர்களா?

ஸ்வாமி!… அம்மி செய்வதற்கான கல்லாக இன்று என்னைச் சபித்திருக்கிறீர்களே – அன்று நம் பாணிக் கிரஹத்தின்போது, அம்மி மிதித்து ‘இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் நாம் சேர்ந்தே அனுபவிப்போம்; உன்னை இறுதிவரை காப்பாற்றி இல்லறம் நடத்துவேன்’ என்று உறுதியளித்தீர்களே – இப்போது என்னை இந்தப் பழியிலிருந்து காப்பாற்றினீர்களா?

முருகப் பெருமானை ஏமாற்றி, கணேசர் பார்வதி பரமேஸ்வரனைச் சுற்றி வந்து, உலகத்தையே சுற்றி விட்டதாகக் கூறி மாம்பழத்தைப் பெற்றது போல – என் சுயம்வரத்தில் இந்திராதி தேவர்களை ஏமாற்றி, நீங்கள் ஒரு பசுவைச் சுற்றி வந்து ஈரேழு பதினான்கு புவனங்களையும் சுற்றி விட்டதாக வியாக்யானம் செய்து, என்னை மனைவியாகப் பெற்றீர்கள் – அந்த ஏமாற்றத்திற்குப் பிறகும், இந்திரன் என்னை எப்படியாவது அடைவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும், இல்லையா? – இப்போது எல்லாம் முடிந்து போன பிறகு அவனுக்குச் சாபமிட்ட நீங்கள், முன்பேயே, ‘நீ என் மனைவியைத் தொட்டால் இப்படி ஆவாய்…” என்று அவனுக்கு ஒரு சாபம் – வேதவதி இராவணனுக்குக் கொடுத்திருந்தாளே – ‘உன்னை விரும்பாத பெண்ணை நீ பலாத்காரம் செய்தால் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும்’ என்று – அதுமாதிரி நீங்களும் இந்திரனுக்கு ஒரு சாபம் கொடுத்து வைத்திருக்கலாம், இல்லையா?” என்று அடுக்கடுக்கான பாணங்களாக வரும் அகலிகையின் கேள்விகள், மகரிஷியை மேலும் திணறடித்துக் கொண்டிருக்கின்றன.

“ஸ்வாமி, பெண்களையெல்லாம் பலஹீனமானவர்கள், அபலைகள்! பேதைகள் என்று சொல்லி, வேத மந்திரங்கள் சொல்வதற்குக் கூட ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள் – சிரார்த்தம், ஹோமம் போன்ற சமஸ்காரங்களைச் செய்யும்போது, நாபியிலிருந்து சப்தம் எழுப்பி மந்திரங்களை உச்சரிக்கக் கூட பலம் இல்லாதவர்கள் பெண்கள் என்று சொல்லுகிறீர்களே – அத்தகைய பலஹீனமான மனைவியைக் காப்பாற்றாமல் போய்விட்டது உங்கள் குற்றம் இல்லையா?… ‘ஸப்தர்ஷய; ப்ரதமாம் க்ருத்திகானாம் அருந்த தீம்! யத் த்ருவதாம் ஹ நின்யு: ஷட் க்ருத்திகா மூக்ய யோகம் வஷந்தி இயம் அஸமாகம் ஏதது ஆஷ்டமீ! என்று – உங்கள் மனைவி, மிக்க பதிவிரதை என எட்டாவது கிருத்திகையாக உலகில் வாழ வேண்டும் என்று – மந்திரம் சொன்னீர்களே, அந்த மனைவிக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உங்கள் ஞான திருஷ்டியால் உணர்ந்து அவளைக் காப்பாற்றினீர்களா? திருமணத்திற்குப் பிறகு, கணவனும், மனைவியும் உடலும் உயிருமாகப் பரிணமிக்கிறார்கள் என்று சொல்வார்களே – இப்போது என்மேல் ஏற்பட்டிருக்கும் களங்கத்திற்கு என்னை மட்டும் பலியாக்கி விட்டு, நீங்கள் எப்படி ஒதுங்கிக் கொள்கிறீர்கள் ஸ்வாமி? உலகத்தில், பாணிக்கிரஷணத்தன்று மந்திரம் சொல்கின்ற மற்ற கணவன்மார்கள், அர்த்தமே தெரியாமல் வெறுமே மந்திரத்தை முணு முணுத்திருக்கலாம். ஆனால் நீங்கள், வேதங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்து சொல்லித் தரும் ரிஷி சிரேஷ்டரல்லவா?”

அந்த அகலிகை வாய் திறந்த எரிமலையாகக் குமுறிப் பேசிக் கொண்டிருக்கிறாள்.

பதில் சொல்ல வாயில்லாமல் கௌதம முனிவர் கல்லாக நின்று கொண்டிருக்கிறார்.

அகலிகையாக நடிக்கும் மாணவியின் பாவபூர்வமான நடிப்பும், ஸ்பஷ்டமான சமஸ்கிருத உச்சரிப்பும், அழகான ஆங்கிலப் பேச்சும், அவையில் எல்லோருடைய கவனத்தையும் கட்டியிழுத்து வைத்திருந்தன.

அகலிகையின் பேச்சு மற்றவர்களின் இதயத்தைத் தொட்டது என்றால், டாக்டர் சுந்தரத்தின் இதயத்தைக் கிழித்துக் குதறிக் கொண்டிருந்தது.

அந்த அகலிகை கேட்கும் கேள்விகளையே இன்னொருத்தி, தன் முன்னால் நின்று கேட்பது போன்ற ஓர் உருவெளித்தோற்றம், அவரது மனத்திரையில் அழுத்தமாக நிழலாடிக் கொண்டிருந்தது.

விழா முடிவில், சிறந்த நாடகமாக மதுரைப் பல்கலைக்கழகத்தின் நாடகமும், சிறந்த நடிகையாக அலிகையாய் நடித்த வித்யாவும் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.

வால்மீகி, துளசிதாஸர் முதலிய வடநாட்டுப் புலவர்களின் ராமாயணக் கதைகளையும் கம்பர், எழுத்தச்சன் முதலிய தென்னாட்டுக் கவிஞர்களின் ராமாயணங்களையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர் சுந்தரத்தையே பரிசளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கச் சொன்னார்கள்.

மாணவர்களுக்கான பல்வேறு பரிசுகளையும் வழங்கிய போது, சிறந்த நடிகைக்கான பரிசை வாங்க வந்த வித்யா, “தாங்க யூ, சார்!” என்று அவரைப் பார்த்து மெல்லச் சிரித்ததும், ஜிவ்வென்று அவரது உள்ளத்திற்குள் ஒரு நினைவு மின்னல் ஈட்டியாக ஊடுருவிப் பாய்வதை உணர்ந்தார்”

இந்த விழிகளை – இந்த மாதிரி விழிகளை – இத்தகைய விழிச்சுடர்களை – அவர் முன்பே பார்த்திருக்கிறாரே?

உடலெங்கும் மெல்லிய அதிர்வுகள் பதியம் போட, அந்த நினைவைத் தொடரவும் முடியாமல் உதறவும் முடியாமல் – மற்றவர்களுக்குப் பரிசு வழங்குவதில் கவனத்தைத் திருப்பினார் சுந்தரம்.

மறுநாள், இளைஞர் விழா நிறைவடைந்தது.

நாகபுரியிலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலையில், ஹைதராபாத் சந்திப்பில் எல்லோரும் கீழே இறங்கி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.)

அப்போது, எதிர்பாராத விதமாக மறுபடியும் வித்யாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

நண்பனுடன் அவர் ஒரு ஸ்டாலில் காப்பியை வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தபோது எதிரே வித்யா வந்து கொண்டிருந்தாள்.

“ஹலோ வித்யா! கங்கிராட்ஸ்…”

அவளைப் பார்த்ததும் உற்சாகம் பொங்கியவராய் சொக்கலிங்கம் அவளுடன் பேசத் தொடங்கினார்.

“நாக்பூரிலே உன்னை நேரிலே பாராட்டணும்னு நினைச்சேன். ஆனா வாய்ப்புக் கிடைக்கலே. உன் நடிப்பு ரொம்ப பிரமாதம். சிம்ப்ளி சுபர்ப்… பை த பை.. வித்யா!… உன்னோட அப்பா அம்மா யார் என்று நான் தெரிஞ்சுக்கலாமா?”

“அப்பா ஒரு விவசாயி, ஸார்! ரொம்பப் படிக்காத கிராமத்து ஆள்…” என்று அவள் சாதாரணமாய்ச் சொன்னதும், சுந்தரமும் திகைத்தவராய் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். “ஈஸிட்?… உன்னோட அம்மா?” என்று தொடர்ந்தார் சொக்கலிங்கம். “அவங்க ஒரு ஆஸ்பத்திரியிலே நர்ஸாயிருக்காங்க…”

”ஐஸீ… உன்னோட பேச்சையும் புத்திசாலித்தனத்தையும் பார்த்து, நீ நல்லாப் படிச்ச குடும்பத்திலே பிறந்து வளர்ந்த பொண்ணாயிருப்பேனு நினைச்சேன். ஓ.கே… சேற்றிலே மலர்ந்ததுங்கிறதனாலே செந்தாமரைக்குச் சிறப்பு இல்லாமப் போயிடுமா, என்ன?… அது சரி, வித்யா! நீ நடிச்ச நாடகத்தை எழுதியது யார்? என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கும் அவர்கள் திகைக்கக் கூடிய பதில்தான் வந்தது. “நான்தான் ஸார்!…” என்று இயல்பாக இளமையின் நியாயமான பெருமையுணர்வுகூட இல்லாமல் சொன்னாள் வித்யா..

‘ஓ’… ஒரு விவசாயிக்கும் நர்ஸுக்கும் பிறந்த பெண்ணிடம் இவ்வளவு ஆங்கில சமஸ்கிருத அறிவு புதைந்து கிடக்கிறதே’ என்று மனத்திற்குள் வியந்தவராய், அவளையே – அவளது விழிகளையே மீண்டும் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார் டாக்டர் சுந்தரம், ரயில் புறப்படுவதற்கான முதல் மணி அடித்தது.

வித்யாவோடு இன்னும் பேச வேண்டும் என்ற விழைவு, சுந்தரத்தின் மனதின் அடித்தளத்திற்குள் பொங்கிப் பிரவகித்தாலும் – அவள் அன்று அகலிகையாக நின்று அரங்கத்தில் கேட்ட கேள்விகளின் சூடு, அவருடைய நெஞ்சை அக்னியாஸ்திரங்களாக இன்னும் தகித்துக் கொண்டிருந்தது.

நாகபுரி இளைஞர் விழா முடிந்து இரண்டு மாதங்களில் சுந்தரத்திற்கு மதுரைக்கு மாறுதலாகி விட்டது.

மதுரைக்கு அவர் வந்து கல்லூரியில் பணியில் சேர்ந்த மறு வாரமே ஓர் இனிய அதிர்ச்சி.

அன்று டவுன் ஹால் சாலையில் போய்க் கொண்டிருந்த சுந்தரத்தின் எதிரே, சாலையின் மறுபக்கத்தில் வித்யா – வித்யாவே – வந்து கொண்டிருந்தாள்!

அதிர்ச்சியின் இனிமை, ரத்த நாளமெங்கும் சித்திரை வைகையாய்ப் பிரவகிக்க, “ஹலோ வித்யா!” என்று குரலில் மகிழ்ச்சி ஆரோகணமாய் ஒலிக்க சாலையையும் ஜனக்கூட்டத்தையும் மறந்து கூவிவிட்டார் சுந்தரம்.

“ஸார்! நீங்களா? – நீங்க எப்போ மதுரைக்கு வந்தீங்க?” என்று விழிகளில் – அதே சுடர் தெறிக்கும் அழகு விழிகளில் – மகிழ்ச்சி துள்ளிக் குதிக்கக் கேட்டாள் வித்யா.

“இப்போ எனக்கு மெட்ராஸிலிருந்து மதுரை கவர்ன்மெண்ட் காலேஜுக்கு ட்ரான்ஸ்ஃபராயிருக்கு. இங்கே வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. மதுரை யுனிவர்ஸிடி ஏரியாவிலே நீ எங்கே இருக்கிறே, நீ ஸிடி காலேஜ் ஸ்டூடண்டா, மொஃபைஸல் காலேஜ் ஸ்டூடண்டானு விசாரிக்கணும்னு நினைச்சுக்கிட்டேயிருந்தேன். உன்னை மறுபடி சந்திக்க முடியுமோ முடியாதோன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன். பை காட்’ ஸ் க்ரேஸ் நீ எதிரே வந்து நிக்கறே! – வாட் எ ப்ளெஸன்ட் சர்ப்ரைஸ் – மதுரையிலேதான் உங்க வீடு இருக்கா?” என்று விசாரித்தார் சுந்தரம்.

“ஆமாம், ஸார்!… பக்கத்திலே மேல வடம் போக்கித் தெருவிலேதான் எங்க வீடு… இங்கே டெய்லர் கடைக்குப் போயிட்டு இப்போ வீட்டுக்குப் போய்க்கிட்டிருக்கேன்… ஸார்! உங்க வீடு எங்கே?”

“அண்ணா நகரிலே ஒரு வீட்டிலே குடியிருக்கேன்… சரி இப்போ உங்க வீட்டுக்குப் போகலாமா?” என்று சட்டென்று கேட்டுவிட்டார் அவர்.

இங்கிதத்தை மீறி இதயத்தின் நெடு நாளைய ஆர்வம் துள்ளி வெளி வந்துவிட்டது.

அவருக்கு ரொம்ப நாளாகவே ஓர் ஆவல் அடைகாத்துக் கொண்டிருந்தது.

வித்யாவையும் அவளது பெற்றோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது ரத்த நாளமெங்கும் அலை மோதிக் கொண்டிருந்தது –

“ஓ பை ஆல் மீன்ஸ். உங்க மாதிரி ஒரு பன்மொழி ஆராய்ச்சியாளர் – பேராசிரிய மேதை – விஜயம் செய்ய எங்க வீடு புண்ணியம் செஞ்சிருக்கணும். ஸார்!…. என்று மனப்பூர்வமாகவே சொல்லி, ஜலதரங்கமாகச் சிரித்தாள் வித்யா.

டவுன் ஹால் சாலையைக் கடந்து, மேல வெளி வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே, அவளுடைய குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார் சுந்தரம்.

“வீட்டிலே இப்போ அப்பா இருப்பாரா வித்யா?” என்று அவர் கேட்டதும் அவள் முகத்தில் திடீரென்று ஒரு குழப்பம் இருளாகப் படிவதைக் கவனித்தார்.

“அப்பா காலமாகிட்டாங்க, ஸார்!… நான் ஒரு வயசுக் குழந்தையாக இருந்தபோது இறந்துவிட்டாங்களாம்..”

“அப்படியா?… ஐ யாம் வெரி ஸாரி வித்யா!” என்று இரக்கத்தில் குரல் கம்மச் சொன்னார் சுந்தரம்.

அவள் முகத்தில் வருத்தத்தின் மெல்லிய மேற்போக்கான சுவடுகள் புலப்பட்டதே தவிர, அதற்கு மேல் தந்தையின் நினைவு அவளைக் கலவரப்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொண்டார் அவர்.

“அப்பா இறந்திட்டார் என்கிற வருத்தம் மட்டுமில்லே, ஸார்! என் அப்பாவைப் பற்றியோ எங்க குடும்பம் பற்றியோ, மற்ற உறவுகளைப் பற்றியோ அம்மா எதுவுமே சொல்லமாட்டேங்கிறாங்க… இருபது வருஷத்துக்கு முன்னாலே, ஒரு நாள் ராத்திரி வீட்டுக்குள்ளே திருடர்கள் கத்தியுடன் புகுந்து, அம்மாவையும் என்னையும் கொல்ல முயற்சி செய்தபோது, அப்பா அவர்களோடு சண்டை போட்டு, எங்களைக் காப்பாத்துறக்காக, உயிர்த்தியாகம் பண்ணிட்டார் என்கிறதை மட்டும்தான் அம்மா என்கிட்டே சொல்லியிருக்காங்க.”

வித்யாவின் சொற்கள் படீர் என்று சுந்தரத்தின் செவிகளைத் தாக்கி ஊடுருவி, உடலை நடுங்கச் செய்தன. ‘அப்படியானால், வித்யாவின் அம்மா…’ அம்மாவைப் பற்றிக் கேட்க அவர் வாயெடுத்தபோது…. “இது தான் ஸார்! எங்க வீடு” என்று காட்டினாள் வித்யா. தெற்கே பார்த்தபடி நிமிர்ந்து நின்ற அந்த ஓட்டு வீடு பூட்டியிருந்தது. “அம்மா அச்சாபீசுக்குப் போயிருப்பாங்க…” என்று மெல்லச் சொன்னாள் வித்யா.

“உங்கம்மா நர்ஸ்னுதானே சொன்னே – அச்சாபீஸிலே என்ன?” என்று சாதாரணமாகக் கேட்டார் சுந்தரம்.

சட்டென்று அவளுடைய முகமெங்கும் மேலும் நாணச் செம்மை படர்ந்து, அழகும் இளமையும் பரிமளித்துக் குலுங்கியது.

தலை குனிந்தவாறு, கால் விரல் நுனியால் தரையில் அரைவட்டங்கள் வரைந்தபடி, “எனக்கு..எனக்கு… கல்யாணம் நிச்சயமாயிருக்கு, சார்! அதுக்கு இன்விடேஷன் அச்சடிக்கப் போயிருக்காங்க…” என்று மெதுவாக முணுமுணுத்தாள் அவள்.

எத்தனை படித்தவளாயிருந்தாலும் எவ்வளவு புதுமைச் சிந்தனைகள் உள்ளவளாயிருந்தாலும் திருமணம் என்றால் அவளும் மகிழ்ச்சியில் ஆரோகணித்து, நாணத்தில் அவரோகணிக்கத்தான் செய்கிறாள்!… சுந்தரத்தின் நெஞ்சம் பட் பட்டென்று வேகமாகத் துடித்தது.

“அப்படியா.. மாப்பிள்ளை யார்?” என்று விசாரித்தார் அவர்.

அவள் இன்னும் அதிகமாகக் குனிந்து அதிமாக அரை வட்டங்கள் வரையத் தொடங்கினாள். முகமெங்கும் இன்னும் அதிகமாகக் குங்கும வண்ணம் படர்ந்தது.

“ஓகே… இதையெல்லாம் உன்கிட்டே கேட்கக் கூடாது தான்…அம்மாகிட்டே கேட்டுக்கறேன்…” என்று செயற்கையாகச் சிரித்தார் அவர்.

“ஒன் மினிட், ப்ளீஸ்… வீட்டுச் சாவியைப் பக்கத்து வீட்டிலேதான் கொடுத்திட்டுப் போயிருப்பாங்க அம்மா.. வாங்கிக்கிட்டு வந்திடறேன்…” என்று இளம் மானாய்த் துள்ளி ஓடியவள், சில வினாடிகளில் சாவியுடன் வந்து கதவைத் திறந்தாள்.

“வாங்க ஸார்!” என்று முன்னே நடந்தவளாய் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் வித்யா.

சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டவராய் வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம்.

முன்பக்கம் இருந்த சிறு வராந்தாவைத் தாண்டியதும், வலது பக்கம் ஒரு அறை திறந்திருந்தது.

உள்ளே புத்தகங்கள் அடுக்கிய அலமாரிக்கு முன்னால், படிப்பதற்கான மேஜையின் மேல் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் சுந்தரம் அதை உற்று நோக்கினார். சட்டென்று அவர் உடலெங்கும் ஓர் அதிர்வு பரவி முகம் இருண்டது.

அவருடைய அதிர்ச்சியைக் கவனிக்காத வித்யா, “ஸார்! இதுதான் என்னோட அம்மா…” என்று முகமெல்லாம் மகிழ்ச்சி விகசிக்க அறிமுகப்படுத்தினாள்.

வித்யாவின் அம்மாவின் விழிகள் – அந்த அழகான விழிகள் – அந்தச் சுடர்தெறிக்கும் விழிகள் – சுந்தரத்தின் இதயத்திற்குள் அஸ்திரமாகப் பாய்ந்து தாக்கித் தகர்த்தன.

அவள்… அவள் கமலாதான்!…அவர் மனைவி கமலாவேதான்!

சென்னையைச் சுற்றி, ரியல் எஸ்டேட் ‘கொலம்பஸ்’ களால் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருந்த ‘நகர்’ களில் குறிஞ்சி நகரும் ஒன்று. அங்கேதான் இளம் தம்பதியான சுந்தரமும் கமலாவும் தனி வீடு பார்த்துக் குடி போயிருந்தார்கள்.

வழுக்கைத் தலையில் காணப்படும் முடிகளைப் போல், அங்கென்றும் இங்கொன்றுமாக வீடுகள் நின்று கொண்டிருந்தன. பெயர்தான் சென்னையே தவிர குறிஞ்சி நகருக்குப் பக்கத்தில் இருந்தது அம்பலப்பாக்கம் என்ற கிராமம்தான்.

குறிஞ்சி நகர்வாசிகள், மாலை ஏழு மணியானால் அவரவர்கள் தத்தம் வீடுகளுக்குள் அடைத்துக் கொண்டு விடுவார்கள். வெளியே தலைகாட்ட மாட்டார்கள்.

தனித்திருந்த அந்த வீடு, இளம் தம்பதிகளுடைய தேனிலவுக்கும் காதல் விளையாட்டுக்களுக்கும் கும்மாளத்துக்கும் ரொம்ப வசதியாகத்தான் இருந்தது.

கூட்டுக்குள் கொஞ்சிக் குலவும் இளம் சிட்டுக்களாய், சுந்தரமும் கமலாவும் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். கமலாவின் முதற் பிரசவம் கூட புகுந்த வீட்டில்தான் நடந்தது.

தங்க விக்ரகம் போல் ஒரு பெண் குழந்தையுடன் மூன்றாம் மாதம் மீண்டும் குறிஞ்சி நகருக்கு வந்தார்கள்.

ஆனால் எல்லா மகிழ்ச்சிகளும் முத்தாய்ப்பாக

ஒரு நாள் நள்ளிரவு, இரண்டு முகமூடித் திருடர்கள் சுந்தரத்தின் வீட்டுக்குள் கதவை உடைத்துப் புகுந்து விட்டார்கள்.

கையில் கத்திகளை வைத்துக் கொண்டு பயமுறுத்தி, வீட்டில் இருந்த பணம் நகை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பியபோது

கமலாவின் அழகையும் இளமையையும் பார்த்துத் திருடர்களுக்குச் சபலம் ஏற்பட்டுவிட்டது.

ஒருவன் கமலாவை நெருங்கிச் செல்ல இன்னொருவன் சுந்தரத்தின் கையைப்பிடித்துக் கொண்டு, கத்தியை உயர்த்தி ‘ஏய், சத்தம் போடாம இருக்கணும். வாயைத் தொறந்தே குத்திக் கொன்னுடுவேன்’ என்று எச்சரித்தும், சரேல் என்று அவன் கைப்பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டு உயிருக்குப் பயந்து வெளியே ஓடிவிட்டான் சுந்தரம்.

திடுக்கிட்டுப் போய்த் தனியே நின்ற கமலா, தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றிக் கூச்சல் போட ஆரம்பித்தாள்,

அந்தச் சமயத்தில் – உள்ளே தாவி வந்தான் ஒரு கிராமத்து ஆள்.

டூரிங் சினிமா இரவுக்காட்சி பார்த்துவிட்டு, பஞ்ச்சராகிப் போன சைக்கிளைத் தள்ளிக் கொண்டே அம்பலப்பாக்கம் திரும்பிய அவன், பெண்ணின் கூக்குரல் கேட்டு உள்ளே ஓடிவந்து நிலைமையைப் புரிந்து கொண்டான்,

இரண்டு திருடர்களும், குறுக்கே வந்த கிராமத்தானைத் தாக்க முற்பட்டார்கள்.

கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது.

தன் இயற்கைச் சுபாவப்படி, உயிருக்குப் பயந்து ஓடி வந்த சுந்தரம் சட்டென்று மனம் மாறி, கமலாவைக் காப்பாற்றுவதற்காக, அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் போய்க் கதவைத் தட்டி உதவிக்கு அழைத்தான்.

பல வீடுகளில், அந்த அகால வேளையில் கதவு தட்டும் சப்தத்தைக் கேட்டு, சந்தேகப்பட்டுப் பயந்து, கதவைத் திறக்கவில்லை.

ஒன்றிரண்டு வீடுகளில் இருந்த ‘ஆண்’கள் தைரியமாகக் கதவைத் திறந்து, சுந்தரத்தின் பின்னால் ஓடி வந்தார்கள். சுந்தரமும் மற்றவர்களும் வீட்டை அடைந்தபோது –

அவர்கள் உதவுவதற்கு ஒன்றும் இல்லை : ‘நடந்ததற்கு’ சாட்சிகளாகத்தான் ஆனார்கள்!

வீட்டு வாசலிலே, ரத்த வெள்ளத்திலே அடிபட்டுக் கிடந்தான் அந்தக் கிராமத்து விவசாயி.

பதற்றத்துடன் நுழைந்த சுந்தரத்தைப் பார்த்ததும் அவர்தான் வீட்டுக்காரர்’ என்று புரிந்து கொண்டான் அவன்.

“ஐயா!… உங்க புள்ளையக் காப்பாத்த முடிஞ்சுது; ஆனா, உங்க பொண்டாட்டியைக் காப்பாத்த முடியலே…” என்று முனங்கியவாறு சோர்ந்து மயங்கிவிட்டான் அவன்.

எல்லோரும் திகைப்புடன் உள்ளே போனார்கள். உள்ளே-கசக்கப்பட்ட மலராக, அலங்கோலமாக, பாதி நினைவுடனும் பாதி மயக்கமாகவும் கிடந்தாள் கமலா.

அடிபட்டுக் கிடந்த விவசாயியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது, வழியிலேயே இறந்து விட்டான்.

போலீஸ், வழக்கு, புலன் விசாரணை… என்று செய்திகள் தொடர் கதையாகிக் கொண்டிருந்தன.

இப்போது தனிக்குடித்தனம் இடம் பெயர்ந்து, பொதுக்குடும்பத்திற்குள் வந்து சங்கமித்துக் கொண்டது.

கமலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட களங்கத்திற்காக, யாரும் அவளிடம் பரிதாபம் காட்டவில்லை. உறவினர்கள் மட்டுமல்ல, சுற்றிலும் இருப்பவர்களின் பார்வையிலும் அவள் -ஏதோ தானே விரும்பிக் கெட்டுப் போனவள் மாதிரி – கேவலமாகப் பட்டாள்.

உடலால் களங்கப்பட்ட அவளை, அதன் பின்பும் தன் மனைவியாகக் கருத, சுந்தரத்தின் உள்ளம் இடம் கொடுக்கவில்லை.

ஆனால்,

அன்று நடந்த சம்பவத்திற்கு அவனும் – ஏன் – அவன் தானே பொறுப்பு?

தன் கண் முன்னாலேயே, தன் மனைவியைப் பிற ஆடவன் கெடுக்க வந்தபோது, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவிட்ட அவன், அந்தக் களங்கத்துக்கு முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டாமா?

குடும்பத்தினரும், உறவினர்களும் அவளைச் சாக்கடையில் விழுந்த கேவலமான ஒரு புழுவாகப் பாவித்து, பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிலே அடுத்தடுத்து நடந்த சுப காரியங்களில், கமலாவைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கினார்கள். அவளாகவே முன் வந்து நின்றாலும் ஏதோ ஓர் அமங்கலியைப் புறக்கணிப்பது போல, அவளைத் தவிர்த்து விட்டுச் சுபகாரியங்களைச் செய்தார்கள்.

கணவனிடம் நாலு கேள்வி நறுக்கென்று கேட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டு விடலாமா என்று கூட அடிக்கடி அவளுக்கு ஓர் எண்ணம் கிளர்ந்தெழும்.

ஆனால், சின்னஞ்சிறு பிஞ்சுக் கைகளை நீட்டி சிறுமலர் மொக்காய் விழித்து, பஞ்சுப் பொதியாய்த் தவழும் அந்தக் குழந்தையின் சிரித்த முகம், அந்த எண்ணத்தை அடிவயிற்றுக்குள்ளேயே புதைத்துவிடும்.

தன் குழந்தைக்காகவாவது, தான் வாழ்ந்தாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் அவள்.

ஒருநாள் இரவு கையில் குழந்தையுடன், அந்த நரகத்தை விட்டு வெளியேறினாள் கமலா.

‘குடும்பத்தின் மீது படிந்திருந்த அவமானச் சின்னமும் தோஷமும் விலகிவிட்டன’ என்று மனதிற்குள் நினைத்தவர்களாய் எல்லோரும் நிம்மதியாக இருந்துவிட்டார்கள்.

ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கமலாவின் நினைவே எல்லோருக்கும் அற்றுப் போய்விட்ட நிலையில், சுந்தரம் மறுமணம் செய்து கொண்டான்.

தொடர்ந்து தமிழ், வடமொழிகளில் ராமாயண ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்று, புகழ், செல்வாக்கு, பதவி உயர்வு எல்லாம் பெற்றான். ஆனால் கணவன் என்பதிலிருந்து தந்தை என்னும் பிரமோஷன் மறுபடி கிடைக்கவில்லை .

கமலாவின் போட்டோவைப் பார்த்தவாறு பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த சுந்தரத்தை வாசலில் ஒலித்த குரல், நிகழ்காலத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தது.

“வித்யா…!” என்று குரல் கொடுத்துக் கொண்டே கையில் திருமண அழைப்பிதழ் கட்டுடன் வந்த கமலா, அறையில் நிற்கும் சுந்தரத்தைப் பார்த்ததும் – இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் தடுமாற்றமில்லாமல் அவரை அடையாளம் கண்டு கொண்டவளாய், திடுக்கிட்டுப் போய் அப்படியே நின்று விட்டாள்,

முற்றிலும் எதிர்பாராத நிலையில், இருவரும் ஒருவரை யொருவர் பாத்தவாறு நிற்கும் திகைப்பைக் கண்டாள் வித்யா,

அவர்களுக்கிடையே ஒரு மௌனமான பூகம்பம் அதிர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள் அவள். சில வினாடிகளில், அந்த நிசப்த சூழ்நிலை கரைந்து மறைந்தது.

“கமலா! என்னை மன்னிச்சுடு…” என்று அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டார் சுந்தரம், அவரது கண்களில் நீர் திரண்டு நிரம்பிக் கொண்டிருந்தது.

“அன்னிக்கு உன்னைத் திருடர்கள் கிட்டே விட்டுட்டு நான் வெளியே ஓடினது தப்புத்தான், கமலா! உன் கற்பைக் காப்பாற்ற நான் கடைசிவரை அங்கேயிருந்து போராடியிருக்கணும். அந்தப் போராட்டத்திலே நான் செத்துக்கூட இருக்கலாம்! அதுதான் ஒரு கணவனுக்கு அழகு – ஆனால் நான் ஒரு கணவனாகவே நடந்துக்கலே. ஆண்மையற்ற கோழையாக, உயிருக்குப் பயந்து ஓடிட்டேன். அது என்னோட ரத்தத்திலே ஊறிய சுபாவம். மத்தவங்களுக்கு ஆபத்து ஏற்படற சமயத்திலே, அவங்களுக்கு உதவணும்னு எனக்குத் தோணறதில்லை; எனக்கும் ஆபத்து வந்திடக்கூடாதுன்னு நினைக்கிற சுபாவம் எனக்கு… அதுக்காக என்னை மன்னிச்சுடு, கமலா!’ என்று தழுதழுத்த குரலில் அவளது கைகளைப் பிடித்தபடியே சொன்னார்.

அந்தக் கைகளைக் கால்களாக நினைத்துப் பிடித்து, அழுது மன்னிப்புக் கேட்பது போல் அவருடைய முக பாவமும், குரலும் தணிந்து தளர்ந்து போயிருந்தன.

“அதற்குப் பிறகும், உன்கிட்டே கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கிட்டேன். உனக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு நானும் பொறுப்பு ஏத்துக் கொண்டிருக்கணும். என்னுடைய கையாலாகாத்தனத்தினாலே உனக்கு ஏற்பட்ட தாழ்வுக்கு நான் ஆறுதல் கூறி அதற்குப் பிறகு என்னுடைய அதீத அன்பாலே என்னுடைய கோழைத்தனத்தை ஈடுகட்டியிருக்கணும்… ஆனால், அந்தக் கடமையையும் செய்யத் தவறிவிட்டேன் நான்… ஊரையும் உறவையும் வைத்து, உன்னைத் தொடர்ந்து அவமானத்துக்குள்ளாக்கி, வீட்டிலிருந்தே நீ வெளியேறக் காரணமாயிருந்திட்டேன். என்னை மன்னிச்சிடு, கமலா…!”

தன்னுடைய இமாலயத் தவறுகளையெல்லாம் காலங்கடந்த கண்ணீரால் கழுவிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தபடியே, பேசாமல் நின்றாள் கமலா.

“நான் உனக்குக் கணவனாகவும், வித்யாவுக்குத் தந்தையாகவும், இரண்டு கடமைகளையும் சரியாகச் செய்யாதவனாயிட்டேன். ஆனால் நீ ஒரு தாய்க்கு உரிய கடமையோடு, தனியே உழைச்சுப் பாடுபட்டு மகளை வளர்த்து ஆளாக்கிட்டே… நான் எவ்வளவு பெரிய தப்புச் செஞ்சிட்டேன் என்பதை, நாக்பூரிலே வித்யா, எனக்குத் தெரியும் மொழியாலே, இலக்கியத்தாலே – எனக்குப் புரிய வச்சுப் புத்தி கற்பிச்சிட்டா. அவள் என்னுடைய மகள்னு தெரிஞ்சதும், எனக்கு எவ்வளவு சந்தோஷமா யிருக்குது, தெரியுமா?… உன்னைக் காப்பாத்தறதுக்காக அந்த விவசாயி உயிர்த்தியாகம் பண்ணினார் என்கிறதுக்காக அவரையே என் குழந்தைக்குத் தகப்பனாராக்கிட்டியே கமலா? சோரம் போய் பிள்ளை பெத்துக்கிட்டவகூட பெத்த பிள்ளைக்குத் தகப்பன்னு தாலி கட்டிய புருஷனைத்தான் சொல்லுவா… ஆனால் நீ? என்று சுந்தரம் உள்ளம் வெடித்து ரத்தமெல்லாம் கண்ணீராய்க் கசியக் கேட்டபோது, கமலா திக்பிரமை பிடித்து நின்றாளே ஒழிய, பதில் சொல்ல வார்த்தைகள் எழும்பவில்லை.

“ஓ.கே… நடந்ததெல்லாம் போகட்டும்… உனக்குத் துரோகம் பண்ணிட்டு நானும் சந்தோஷம் அடைஞ்சிடலே. என் ஆண்மையற்ற கோழைத்தனத்துக்குக் கடவுள் தண்டனை கொடுத்திட்டார். கமலா என்னை மன்னிச்சுடு… இனிமே, என் மகளுக்கு நானே தகப்பனார் ஸ்தானத்திலே இருந்து, கல்யாணம் செஞ்சு கொடுக்கிறேன்” என்று கனத்த குரலில் அவர் தெரிவித்ததும், கமலாவின் விழிகள் தடுமாற்றத்துடன் மகள் பக்கம் நகர்ந்தன.

எதிர்பாராமல் கணவனைச் சந்தித்த பிரமையில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த கமலாவுக்கு, இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை.

கடந்துபோன நிகழ்ச்சிகளின் பல்வேறு இழைகளையும், சுந்தரத்தின் பாவ மன்னிப்புக் கோரிக்கைகளையும் சேர்த்து, சிக்கல்களைச் சீர்படுத்திக் கோவையாக்கிப் புரிந்து கொள்ள, அந்தக் கெட்டிக்காரப் பெண்ணுக்கு அதிக நேரம் ஆகவில்லை .

கௌதமர், அகலிகையிடம் திரும்பி வந்திருக்கிறார்.

கௌதமர் செய்த தவற்றையெல்லாம் மன்னித்து அவரை ஏற்றுக் கொள்வதா? அல்லது –

சில வினாடிகளுக்குள்ளேயே உருவாகி உறுதியடைந்து விட்ட தீர்மானத்துடன், வித்யா சுந்தரத்தின் பக்கம் தன் சுடர்விழிப் பார்வையைக் குவித்தாள்.

“இப்போ, தகப்பனார் ஸ்தானத்திலிருந்து கன்னிகாதான மந்திரங்களைச் சொல்லி, பாணிக்கிரஹணம் பண்ணிக் கொடுப்பீங்க, இல்லியா? – அந்த மந்திரத்தை அர்த்தத்தோடு சொல்லி, என் அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்ளே-கடைசியிலே என்ன செஞ்சீங்க? பெண்ணின் உயிர் கற்புனு இலக்கணம் சொல்கிற ஆண்கள், அந்த உயிருக்கு ஆபத்து வர்றபோது, தங்கள் உயிரைக் கொடுத்தாவது அதைக் காப்பாற்ற வேண்டாமா, ஸார்? ஓடிப்போகும் பேடிகளுக்குப் பெண்ணிடம் கற்பை எதிர்பார்க்கிற யோக்கியதை ஏது ஸார்…?

நெருப்புத் துண்டுகளாய் மகளின் வாயிலிருந்து வெடிக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கமலா திடுக்கிட்டுப் போனாள்.

“வித்யா! அதுதான் அவர்.” என்று தாய் சொல்ல வந்த விளக்கத்தைக் காதிலேயே வாங்கிக் கொள்ள விரும்பாமல், தொடர்ந்து, தீப்பிழம்பாய் எரிந்து கொண்டிருந்தாள் வித்யா,

“மணமேடையில் அக்னி சாட்சியாய் மந்திரம் சொல்லி, தாலி கட்டிய மனைவியின் கற்பைக் காப்பாற்றுகிற ஆண்மை இல்லாத கணவனுக்கு, குழந்தைக்குத் தந்தையாகிற அருகதை கிடையாது ஸார்! தன்னுடைய மனைவியைக் காப்பாற்ற முடியாத ஒரு பன்மொழிப் பேராசிரியரின் மகள் என்பதைவிட, யாரோ ஒரு பெண்ணைக் காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்த அந்த விவசாயியின் மகள் என்று சொல்லிக்கிறதிலே நான் பெருமைப் படறேன்…!” என்று உச்சஸ்தாயியில் பிரகடனம் செய்த வித்யா, தாயின் பக்கம் திரும்பினாள்.

“அம்மா! மாரேஜ் இன்விடேஷன் ரெடியாயிருச்சா? இந்த ப்ரொபஸருக்கு ஒரு இன்விடேஷன் கொடுக்கணும்மா! ஸார்! நீங்க அவசியம் கல்யாணத்துக்கு வரணும். சார்! என்று நிச்சலனமாய்ப் பேசிய வித்யாவை ஏறிட்டுப் பார்த்தார் சுந்தரம்.

அன்று – நாகபுரியில் மேடையிலே ஆவேச ப்ரளயமாய் நின்ற அகலிகையாக இல்லை, அந்த அகலிகையின் மகளாக வித்யா அவனது ஈரவிழிகளுக்குள் பிரதிஷ்டையானாள். அவரது கண்ணீர்த் துளிகள் பெண்மையின் உத்வேகப் பரிணாமத்தைத் திருமஞ்சனமாட்டிக் கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *