ஒரு மதியக் காட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2024
பார்வையிட்டோர்: 2,075 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எக்கா… பவுதீமக்கா…”

“ஆரூட்டி அது?”

“எக்கா நாமில்லா… எசக்கியம்மை… வெளீல வந்துதான் பாரேன்… அடுக்களைக்கு உள்ள இருந்தே சத்தங் குடுக்கியே…”

“ஏட்டி கைசோலியால்லா இருக்கேன்.. அடுப்பிலே இருக்க சொத்தைக் கமத்தீட்டு மீனைக் களுவணும்…”

“மீங்காரன் அதுக்குள்ளே வந்திட்டுப் போயிட்டானா? எங் கண்ணிலேயே காணல்லியே!”

“இப்பத்தாம் போனாம் பாத்துக்கோ… கீளத்தெருவிலே நிப்பான்.”

“சரி போனாப் போறான். இன்னமுங் கடங் கேட்டா தரவா போறான்? மூணு ரூவா பாக்கி நிக்கி. சவத்தை ஏச்சும் பேச்சும் கேட்டு மீனு வாங்கித் திங்கணுமாக்கும்? சின்னப்பயதான் மீனு இல்லேண்ணா சோத்துப் பருக்கை திங்க மாட்டான்… சவம் போனாப் போட்டு… என்ன மீனுக்கா? சாளையா?”

“அந்த எளவை ஏன் கேக்க? நெத்திலி போல இருக்கு… ரெண்டணாவுக்கு அஞ்சுங்கான்… ஆறு கேட்டா அடிவிடிக்கில்லா வாறான். என்ன எளவாம் நாத்தமுண்ணாலும் இருக்கட்டும்ணுதான் எட்டணாக்கு வாங்கினேன். ஆஞ்சு களுவினா ஒரு பிடி இருக்குமோ என்னம்போ? இதை நான் என்னண்ணு கறிவச்சு எத்தனை பேருக்கு வெளம்ப?”

“ஆங்… உள்ளது… அந்தச் சட்டியை எட்டி எடுக்கா? களுவித் தாறன்…”

புறவாசல் படியில் குத்தவைத்து உட்கார்ந்து மூடியில் சாளைகளையும் மீன் சட்டியில் தண்ணீரும் வைத்துக்கொண்டு மீனைக் கழுவத் தொடங்கினாள் இசக்கியம்மை.

மீன் நறுக்க என்று அர்த்த சந்திர வடிவில் தேய்ந்த அரிவாள்மனை புறவாசல் சுவரோரம் சாய்ந்திருக்கும். அந்தத் தேய்ந்த அரிவாள்மனையை எடுத்து வைத்து, ஒரு காலால் முட்டுக் கொடுத்து ஒவ்வொரு சாளையையும் நறுக்க ஆரம்பித்தாள். தலையை வெட்டி, வாலை நறுக்கி வயிற்றைக் கீறி, விரல் நுழைத்து குடலைப்பிடுங்கி, தோலைச் சுரண்டி…

மீன் கழுவுவதற்குச் சாட்சி போல், அரிவாள்மணையின் முன்னால் ஒரு தவிட்டுப் பூனை, புறவாசல் மதில்மேல் இரு காகங்கள். அடிக்கடி காகங்களைச் சீறும் பூனை. ஒவ்வொரு தலையாக இசக்கியம்மை அறுத்துப் போட, ‘அவுக் கென்று வாயில் கவ்வி, ‘கறுபுறு’ என்று கடித்துத் தின்னும் பூனையின் தலை குனிந்திருந்தாலும் கண்கள் யாந்திரிகமாக இடமும் வலமும் அசைந்தன.

“எக்கா! கொஞ்சம் தண்ணி ஊத்து.”

பகவதியம்மாள் செம்பில் தண்ணீர் கொண்டுவந்து வாக்காக ஊற்றிக் கொடுத்தாள். இரண்டு மூன்று தண்ணீர் மாற்றி, மண் சட்டியில் உரசி உரசிக் கழுவிக் கொட்டினாள் இசக்கியம்மை. எண்ணெய் மினுக் குடன் தண்ணீர் படர்ந்தது. காற்றில் ஒரு ‘உலும்பு’ வாடை. தண்ணீர் விட்டுக் கழுவிய கையை முகர்ந்து பார்த்து மூக்கைச் சுளித்துவிட்டுக் கேட்டாள்.

“அவியலா, புளிமொளமாக்கா?”

“நீ ஒருத்தி. இது அவியலுக்குங் காணுமாங்கும். கொளம்புதான் வைக்கணும்.”

“தேங்கா திருவியாச்சா?”

“திருவியாச்சு…”

“எல்லாம் எடுத்து வையி… ரெண்டு இளுப்பு இளுத்து வளிச்சுத் தந்துக்கிட்டுப் போறேன்…”

அம்மியின் முன் வலக்காலை மடக்கி அமர்ந்து, இடக் காலை அம்மியின் வாட்டத்துக்கு இணையாக நீட்டி, கண்டாங்கியை முட்டு வரை ஒதுக்கி, குழவியின் இருதலைகளையும் பிடித்து இழுத்து இழுத்து அரைத்தாள் இசக்கியம்மை. திருவிய தேங்காய்ப்பூ, மிளகாய் வத்தல், கொத்துமல்லி, நல்லமிளகு, உள்ளி, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்துச் சதைத்து, நீர்விட்டு, மஞ்சணை போல் அரைத்தாள். செம்மஞ்சள் நிறத்தில் உருண்டையாக உருட்டி, தட்டத்தில் வைத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழவியைக் கழுவி, ஓரத்தில் நகர்த்தி, அம்மியைக் கழுவி, அம்மிப்பால் திரட்டி, வலது கையைக் குழித்துச் சாய்த்து தட்டில் வடித்தாள். கையைக் கழுவி கண்டாங்கி முந்தியில் துடைத்துக்கொண்டே பகவதியம்மாளிடம் கேட்டாள்.

“ஒரு மாங்கா கூடப் போடப்பிடாதாக்கா?”

குழம்பைக் கூட்டி அடுப்பில் வைத்துவிட்டு பகவதியம்மாள் சொன்னாள்.

“போடணும்… கொளம்பு புளிச்சுக் கெடக்குமோ என்னமோ? சவத்து மாங்கா அண்டம் புளிச்சி… பல்லிலே பட்டாலே கூசுது…”

“அதுக்கு உனக்கு புளி கொறச்சு விட்டாப் போராதா?”

“ஆனாலும் ஒரு கணக்கு வேண்டாம்ணா? அது கெடக்கட்டும்… உனக்கு இப்பம் சோலி ஒண்ணும் இல்லியா? இங்கிண வந்து சொர்ணா விட்டு நிண்ணா வீட்டிலே பொங்காண்டாமா?”

“அதுக்காச் சுட்டிதாலா வந்தேன். வீட்டிலே ஒரு பொடி அரிசி இல்லே. ரெண்டு விடி அரிசி தாக்கா! சம்முகப்பா கிட்டே ஏளு மரக்கா நெல்லு கேட்டிருக்காரு பாத்துக்கோ.. முன்னறுப்பு… அவிச்சுக் குத்தி னதும் மொதக் காரியமா கொண்டாந்து தந்திருகேன்…”

“ஏட்டி… அதுக்கு நான் இன்னும் நெல்லு குத்தல்லியே! புளுங்கலு நல்ல காயல்லே பாத்துக்கோ… அவிச்ச அண்ணும் பித்தனாளும் ஒருவாடு மளையில்லா…ஆலாடக் கூடப் போடல்ல. புளுங்கலு அடையடையா பூத்துப் போச்சு…நல்ல அறக்காஞ்சு குத்தினாத்தான் அரிசி. பானையிலே ரெண்டு மரக்கா கெடக்கும். இன்னும் ரெண்டு மூணு நாளு வடிக்கக் காணுமோ என்னமோ! அஞ்சு மரக்காலாவது அள்ளி மாடுமேய்ச்சிப் பயகிட்டே குடுத்து புளுங்கலைக் குத்திக்கிட்டு வரச்சொல்லணும்… பின்ன என்ன செய்ய?”

“நாளி அரிசியாவது தாக்கா…”

“ஏட்டி இருந்திண்ணா தரவா மாட்டேன்… நான் பொய் சொல்லு கம்ணா நெனச்சுப்போட்டே?”

“அதுக்கில்லக்கா… மத்தியானத்துக்கு ஒண்ணும் இல்ல பாத்துக்கோ… ரெண்டு ரூவாயாவது தாயேன்… நாளைக்குக் கொண்டாந்து தந்திருகேன்…”

“ஏட்டி, நீ என்ன விடமாட்டே போலிருக்கே… சொன்னா நான் வச்சுக்கிட்டு இல்லேண்ணா சொல்லுக்கம்ணு நெனப்பே… ஒன்னாணை கையிலே வள்ளிசா ஒரு காசு கிடையாது. இருந்த எட்டணாவையும் பொறக்கி மீங்காரனிட்டே குடுத்தாச்சு… பணகுடியிலேருந்து காமாச்சி வந்திருந்தாள்ளா? வந்திட்டுப் போகச்சிலே சும்ம என்னண்ணு அனுப்பு கது? நுப்பது ரூவா கையிலே குடுத்தேன்… இனி நெல்லு வித்தாத்தான் எங்கிட்டே காசு பாத்துக்கோ”

இசக்கியம்மை புறப்பட்டபோது மீன் குழம்பு கொதித்து வீடெல்லாம் மணத்தது.

– சுதந்திரப்பறவைகள், 1985

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *