ஒரு பொய் போதுமடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 1,282 
 
 

“ஏண்டி கழுவாடு எத்தன தடவ கத்தரது…? செவுடங்காதுல சங்கூதுன மாதர ஊருக்கே கேக்கற மாதர சத்தம் போட்டுக்கூப்புட்டாலும் உன்ற காதுல மட்டுலும் ஏற மாட்டேங்குது…?செவுடா நீயி…? வேகாத வெய்ய காலத்துல ஆராச்சும் கம்பளிய தலைக்கு மூடிப்படுப்பாங்களா…? ஏழு கழுத வயசாகியும் புத்தி வளருளீன்னா நாளைக்கு ஒருத்தங்கையில புடிச்சுக்கொடுத்தா என்னையத்தானே புள்ளைய வளத்தி வெச்சிருக்கிற லச்சணத்தப்பாருன்னு கேவலமா பேசுவாங்க. மூஞ்சில காரித்துப்பிப்போடுவே…. எந்திரி மொதல்ல” ஆடு மேய்கப்பயன்படும் பிரம்பு போன்ற தடியை எடுத்து எழாமல் உறங்குவது போல் நடிக்கும் தன் மகள் மாரியை இடுப்பு பகுதியில் அடித்தாள் அவளது தாய் சுந்தரி.

அடித்த வலி தாங்க முடியாமல் எழுந்த மாரி, படுத்திருந்த பாயைச்சுற்றி தலையணையும், கம்பளிப்போர்வையும் சேர்த்து அட்டாலியில் எட்டிப்போட்டு விட்டு பல்லு விளக்க கருவேலாங்குச்சி முறிக்க காட்டிற்குள் ஓடிய போது செறுப்பு அணியாததால் பெரிய முள் குத்திட ‘ஐயோ’ என அலறினாள்.

பக்கத்து காட்டிற்குள் காலையிலேயே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அவளது மாமன் மகன் ஓரி, ஓடி வந்து அவளது காலில் ஏறிய முள்ளை தன் இடுப்பில் அரணாவில் போட்டிருந்த ஊசியை எடுத்து குத்தி எடுத்து விட்டு, காயப்பூடு புடுங்கி முள் எடுத்த காயத்தின் மீது சாறு பிழிந்து முள் குத்திய இடத்தில் வெளியேறிய ரத்தத்தை நிறுத்தினான்.

ஓரியின் தொடுதலும், அருகாமையும் முள் ஏறிய காயத்தின் வலியைப்போக்கினாலும், அவன் தன் காலில் புடுங்கிய முள் இடம் மாறி தன் மனதில் குத்தியது போல், உடனே எதுவும் தன்னுடன் பேசாமல் அவன்  சென்றது மாரிக்கு மன வலியை உண்டாக்கியது.

ஓரி மாரிக்கு மாமன் மகனாக இருந்தாலும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே பேச்சு வார்த்தையே பல வருடங்களாக இல்லை. பக்கத்தில் இருந்த காட்டில் ஆடு மேய்த்தவனுக்கு ‘ஐயோ’ எனும் சத்தமே உதவும் நிலைக்கு அவனைக்கொண்டு வந்தது. இதுவரை தன் தாயின் உத்தரவால் தன் அத்தையின் பூமிக்குள் கால் வைக்காதவன், ஆபத்துக்குப்பாவமில்லை எனும் நிலையில் தான் இப்போது வந்துள்ளான். மாரிக்காக மட்டுமில்லை யாராக இருந்தாலும் ஓடி வந்து உதவியிருப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் கொண்டவன் ஓரி. 

இதுவரை ஓரியை தூரத்திலிருந்து பார்த்தவளுக்கு அருகில் பார்க்க மனதில் ஒருவித கிலேசம் உண்டானது. உடல் நடுங்கியது. தன் தாயும் அடிக்கடி ‘பேச்சு வார்த்த மட்லும் பகையில்லாம இருந்துச்சுன்னா என்ற பொறந்தவன் பையன் ஓரி வந்து உன்னப் பொண்ணுக்கேக்காம இருப்பானா…? நானும் தான் பொண்ணுக்கொடுக்க மாட்டேன்னு சொல்லியிருப்பனா…?’ என  சொல்லும் போது கற்பனையில் அவனைக்கணவனாகவே எண்ணி வாழத்துவங்கி விட்டாள் மாரி.

வந்தவன் முள் பிடுங்க உதவினானே தவிர ஒரு வார்த்தை அத்தை மகளுடன் பேசவில்லை. போகும் போது கூட தன்னிடம் சொல்லிச்செல்லாதது வருத்தமளித்தது. அவனை நெருக்கமாகப்பார்த்த பின் பிரிய மனமில்லை. வெகு நேரம் அவனுடன் நெருக்கமாக இருக்கத்தோன்றியது. ‘அவனோடு நான் ஒரு நொடியும் பிரியாமல் இருக்கும் வரம் வேண்டும்’ என தனது இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக்கொண்டாள்.

“என்னடி சொல்லறே….? எப்ப சேர்ந்தீங்க, இப்ப பிரியறதுக்கு….? இவளுக்கு முள்ளு ஏறிச்சாமா…. ஐயோன்னு கத்துனாளாமா…. மாமம் பையன் வந்து காலத்தூக்கி அவனோட மடில வெச்சு முள்ளப்புடுங்குனானாமா…. அந்த முள்ளு புடுங்கவே முடியாத மாதர மனசுல குத்திருச்சாமா…ஏதோ சினிமாப்படத்துல வர்ற கத மாதர இருக்குது. என்னமோ பத்து நிமிசம் பக்கத்துல இருந்துட்டு போனதுக்கே பத்து வருசமா காதலிச்சவங்க பிரிஞ்ச மாதர கவலப்படற….?” சினேகிதி ராசாத்தி பேச வெட்கத்தில் காலில் வட்டக்கோலமிட்டபடி தலை குனிந்து மகிழ்ந்தாள் மாரி.

“சும்மா வெள்ளந்தியா வெக்கப்பட்டா போதுமா…? ஆசப்பட்டவங்கள அடையறதுக்கு முயற்சியும் எடுக்கோணும். அப்பத்தா ஆயுசுக்கும் சந்தோசப்பட முடியும். உன்னோட மாமம்பையன் ஓரிய உனக்கு புடிச்சுப்போச்சு. அவனுக்கு பக்கத்துலயே இருக்கோணும்னு மனசுல தோணுதுன்னா அவனோட பார்வைல அடிக்கடி படற மாதற நடந்துக்கோ. அவனுக்கு புடிச்ச பலகாரத்த செஞ்சு கொண்டு போயி குடு. முடஞ்சா ஊட்டி விடு.  அவனோட அப்பனாத்தால எங்காச்சும் விசேசத்துல பார்த்தா சிரிச்சு வை. அவிங்க ஊட்டுக்கு அடிக்கடி போயிட்டு வாரவங்களப்பாத்து நல்லாப்பேசி சிநேகிதம் பண்ணிக்கோ. உங்கொம்மா கொப்பனுக்கு அவிங்க மேல இருக்கற பகைய மாத்தற மாதர பேசு. சில சமயம் தேவைன்னா பொய் கூடப்பேசு. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க. என்னக்கேட்டா ஒரு பொய் கூட போதும்னு நெனைக்கறேன். அது எதுன்னு யோசிச்சு சொல்லறேன்” என தனக்குத்தோன்றிய அறிவுரையை சிநேகிதி ராசாத்தி கூற, ‘சரி’ என சொல்லி விட்டு தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட காட்டுக்குள் ஓட்டிச் சென்றாள் மாரி.

“சொத்துப்பிரச்சனையால சொந்தம் உட்டுப்போச்சு. ஒரே வகுத்துல பொறந்துட்டு பத்து வருசமா பாசமிருந்தும் பேச முடியல. ஒன்னொரு தடவ இந்த பூமில பொறக்கறமோ இல்லியோ…ஆருக்குத்தெரியும்..‌? என்ற பொறந்தவன் சங்கரனுக்கு மாடு இழுத்துப்போட்டு காலு முறிஞ்சு போச்சாமா? மாரி சிநேகிதி ராசாத்தி வந்து சொல்லிப்போட்டுப்போனா. இந்த சமயம் பாத்து போனா போனது தான். இப்பப்போகலீன்னா நாஞ் செத்தாலும் பொறந்தூட்டு கோடி போட அவன் வர மாட்டான். எனக்குத்தம்பியா பொறந்தாலும் என்னையவிட ரோசக்காரன். போயி டவுன்ல திராச்சீமு, ஆப்பிலுமு வாங்கியாந்தீங்கன்னா நம்ம புள்ள மாரியும் கூட்டீட்டு நாமலும் ஓரெட்டு போயி பாத்துப்போட்டு, எப்படி காலு முறிஞ்சுதுன்னு கேட்டுப்போட்டு வந்திரலாம்” என தனது கணவன் சுந்தரனிடம் கூறினாள் சுந்தரி.

சுந்தரிக்கு எப்படியாவது தனது சகோதரன் மகன் ஓரிக்கு தனது மகள் மாரியை மணமுடித்து பல வருடங்களாக உள்ள தீராப்பகையை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்கிற மனதில் தோன்றும் ஆசை. கணவன் சுந்தரனோ தன் மனைவியின் சகோதரன் சங்கரனின் மனைவி தன்னை தேவையில்லாமல் வம்பிழுத்து கெட்ட வார்த்தைகளை பேசியதை மனதிலிருந்து அழிக்க முடியாததால் உறவுகளின் விசேச நிகழ்வுகளில் கூட அக்குடும்பத்தினரை பார்ப்பதையே தவிர்த்தார். அப்படிப்பட்டவர் தன் மனைவியின் முடிவுக்கு கட்டுப்படவில்லை.

“நீ என்ன சொன்னாலுஞ்சேரி அந்தக்கழுதமுண்ட ஊட்டு வாசப்படிய நான் வந்து முதிக்க மாட்டேன். அவ கிட்ட நானென்னா சொத்தா கேட்டேன்….? அஞ்சு பத்து அவசரத்துக்கு உன்னப்போயி உன்ற அப்பனாத்தா குட்டவோ, உன்ற பொறந்தவங்குட்டவோ வாங்கியிறச்சொன்னனா…? எம்பட பாட்டுக்கு என்ற அப்பனாத்தா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு எனக்கு குடுத்துட்டு போன காட்ல கெணறு வெட்டி, தோட்டம் பண்ணி இருக்கறத வெச்சு ஆருகுட்டையும் கையேந்தாம அஞ்சு பைசாங்கூட கடன ஒடன வாங்காம மரியாதையா வாழ்ந்திட்டிருந்தா என்னையப்போயி கானாம்போனானப்பேசறமாதர பேசிப்போட்டாளே….? அந்தத்தரங்கெட்டதோட மூஞ்சீலயே நான் முழிக்க மாட்டனாக்கு. சொல்லிப்போட்டேன் ஆமா. அப்படியே வந்தாலும் அவ மொதல்ல நம்ம ஊட்டுக்கு வந்து மன்னிப்பு கேக்கோணும்” எனக்கூறிய கணவன் பக்கமும் நியாயம் இருந்தாலும் குற்றம் பார்த்தா சுற்றம் இல்லீங்கற மாதர காலத்துக்கும் உறவு விட்டுப்போயிரும் என நினைத்தே சகோதரனைப்பார்க்க முடிவெடுத்தாள் சுந்தரி.

தந்தையின் பிடிவாதத்தால் மாமன் மகன் ஓரியை திருமணம் செய்ய முடியாமல் போய்விடுமோ என வருந்தியவளாய் சிநேகிதி ராசாத்தியிடம் யோசனை கேட்கச்சென்றாள் மாரி.

சுந்தரிக்கு திருமணமாகி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகியும் இது வரை தனது தந்தை வீட்டிற்குச்சென்று உதவி கேட்காத அளவுக்கு கணவன் சுந்தரன் அவளுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தான். ஒரு முறை தாய் வழிச்சொத்தில் பங்கு கேட்க சட்டமே பெண்களுக்கு சாதகமாக உள்ளதாக உறவுக்காரர் கூற, ‘சட்டமிருந்தாலும் தனக்கு அது பற்றிய திட்டமில்லை’ என மறுத்து விட்டார். அதன் பின் சுந்தரிக்கு கணவன் மேல் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கூடியது. ஆனால் இப்படிப்பட்ட நல்ல மருமகனை தன் தாய், தந்தை, சகோதரன், அவனது மனைவி உள்பட யாரும் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது, தேவையற்ற வார்த்தைகளால் ஏசிப்பேசியதால் மிகுந்த வருத்தமடைந்தாள். தன் சகோதரனின் மனைவி தன்னை தந்தை வீட்டிற்கே வராமல் செய்ததோடு அவளது குடும்பத்தினரை புகுந்த வீட்டிலேயே கொண்டு வந்து குடியமர்த்தி விட்டாள்.

கெட்டவர்களை கெட்டவர்களென சொல்வதை விட நல்லவர்களை கெட்டவர்களெனக்கூறுவது பாவச்செயல் என்பது பாவம் அப்பெண்ணிற்கு புரியவில்லை. சிலர் சுயநலத்துக்காக, சுய லாபத்துக்காக நல்லவர்களை கெட்டவர்கள் எனவும், கெட்டவர்களை நல்லவர்கள் எனவும் கூறும் நிலை தற்போது அதிகரித்து விட்டது. அதுவே சுந்தரியின் சகோதரன் மனைவியின் நிலையும். 

தன் சகோதரன் சங்கரனுக்கு சுந்தரிதான் பெண் பார்த்து நல்ல குடும்பம் எனவும், ஒரு வகையில் ஒன்று விட்ட உறவு எனவும் சங்கரியைத்திருமணம் செய்து வைத்தாள். பெண் வீட்டில் திருமணம் செய்திட வசதி இல்லாத நிலையில் தன் நகை ஒன்றை அப்பெண்ணுக்கு கொடுத்து திருமண செலவையும் தானே ஏற்று திருமணம் நடத்தி வைத்தாள். அந்த நன்றி கூட இல்லாமல் திருமணமாகி ஒரே மாதத்தில் சுந்தரியை பகைத்துக்கொண்டாள் சகோதரன் சங்கரனின் மனைவி சங்கரி. இருப்பினும் பதினைந்தாண்டு காலம் சிறு சிறு வெறுப்புப்பேச்சால் ஏற்பட்ட பகையை மறந்து உறவு விட்டுப்போகக்கூடாது என போக்கு வரத்து வைத்துக்கொண்டாலும் கடுமையான வார்த்தைகளால் சங்கரி தன் கணவன் சுந்தரனைப்பேசிய பின் கடந்த பத்து வருடங்களாக முகம் கொண்டு பார்க்காத நிலையில் மனதில் பகை வளர்ந்து விட்டது.

“என்ற நங்கையாக்காரி சுந்தரி தான் எனக்கு கண்ணாலம் பண்ணி வெச்சா. அத நானும் இல்லீங்களே. அதுக்காக நானும் வெகுளியா இருந்தன்னு வெச்சுக்கோ காட்ல வெளையற வெள்ளாமப்பணத்த என்ற மாமியாக்காரி புள்ளைக்காரிக்கே கொடுத்துப்போடுவா. அப்பறம் என்ற கொழந்தைங்க எறந்து திங்கவா போகும்…? அதுக்குத்தான் கெட்ட வார்த்தைய  ரெண்ட எடுத்து உட்டேன். ரோசக்காரக்குடும்பம் பத்து வருசமா எட்டிப்பாக்கறதில்லை. ” என தனது உறவுக்காரப்பெண்ணிடம் கூறி வில்லியாகச்சிரித்தாள் சங்கரி.

“என்னதான் நீ பேசுனாலும் பணத்துக்காக அக்கா தம்பி பாசத்த சோளத்தட்டு நறுக்குன மாதர துண்டு பண்ணிப்போட்டது நியாமில்ல சங்கரி. இதே உன்ற தம்பி பொண்டாட்டி இப்படிப்பண்ணியிருந்தா உனக்கு சந்தோசமா இருக்குமா…? உன்ற குடும்பத்துக்கு ஒரு நியாயம், புகுந்த குடும்பத்துக்கு ஒரு நியாயம்னு அநியாயம் பண்ணிப்போட்டே. ஆனா நீ போட்ட திட்டத்துக்கு நேத்துக்காத்தால இடியே உழுந்திருந்சு. அதாச்சும் தெரியுமா உனக்கு…?”

“என்னடி சொல்லறே…?” அதிர்ச்சியுடன் தனது உறவுக்காரப்பெண் ராணியைப் பார்த்துக் கேட்டாள் சங்கரி.

“என்னத்தச்சொல்லறது. நேத்துக்காத்தால அத்தை மகளுக்கு கால்ல முள்ளேறி ‘ஐயோ…’ ன்னு கத்துனத கேட்டு மனசு தாங்கமாட்டாம ஆடு மேய்க்கிறத உட்டுப்போட்டு உன்ற மகன் ஓரி ஓடிப்போயி அவ கால இவனோட மடில எடுத்து வெச்சு முள்ளக்கெளஞ்சிருக்கறான். பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்ததுனால இப்ப பத்தி எரியுது….” 

இதைக்கேட்டு மயக்கம் வருவது போலிருந்தது சங்கரிக்கு. தனது சகோதரன் மகள் மதனியை தனது மகன் ஓரிக்கு இரண்டு வயது மூத்தவளாக இருந்தாலும் கட்டி வைத்து விட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவளுக்கு மாரியை ஓரி விரும்பும் செய்தி பேரிடியாய் நெஞ்சில் இறங்கியது போலிருந்தது.

“நேத்து அவனோட மடில கால வெச்சு முள்ளுப்புடிங்கிப்போட்டு பேசாம போனவன இன்னைக்கு அவளோட மடில படுக்க வெச்சு பணியாரம் ஊட்டி உட்ருக்கான்னா எப்படி மை வெச்சு மயக்கியிருப்பான்னு பாரு”

“இத நீயி நேருல பாத்தையா ராணி..‌?”

“நாம்பாக்குல. என்ற மவ ராசாத்தி மாரிக்கு நல்ல சிநேகிதி. அவ பாத்துப்போட்டு வந்து சொன்னா. பேசாம பகைய மறந்துட்டு ரெண்டு பேருக்கும் கண்ணாலத்தப்பண்ணி வெக்கப்பாரு. புடிவாதமா இருந்தீன்னா பையன் உனக்கு இல்லாமப்போயிருவான். காளை கட்டவுத்துட்டு ஓடிறப்போகுது” எச்சரித்த ராணியை கவலை தாங்காமல் கட்டிப்பிடித்தபடி அழுதாள் சங்கரி.

உறவுகள் ஒன்று கூடி ஒரு நல்ல நாளில் மாரியை ஓரிக்கு முறைப்படி பெண் கேட்க பலகாரங்கள், பழங்கள், சேலை, பூக்கள் என் தட்டுக்களில் வைத்து எடுத்துச்சென்றவர்களை சுந்தரி எதிர்கொண்டு வந்து ‘ஆரக்கேட்டு பொண்ணக்கேட்டு வந்தீங்க…? ஆடு,  மாடு வாங்கற மாதர வாங்கிப்போடுலாம்னு பாத்தீங்களா…? போங்க அப்படியே திரும்பி….’ என பேசுவது போல் நினைத்த சங்கரிக்கு அப்படியேதும் பேசாமல் அமைதியாக சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஆனந்தக்கண்ணீருடன் வரவேற்றதைக்கண்டு ‘இப்படிப்பட்ட நலலவர்களை இவ்வளவு நாள் பகைத்துக்கொண்டோமே’ என எண்ணியபடி “நங்கே… என்ன மன்னிச்சுப்போட்டேன்னு ஒரு வார்த்த சொல்லிப்போடு….” என கூறியவளை, “நாம்பறிச்ச ரோசாடி நீயி. அந்த செடில இருந்த ஒரு முள்ளு குத்தி போட்டதுனால இத்தனநாளா காயப்பட்டுப்போனேன். இப்ப ஒன்னம் ஒரு ரோசாவ உன்ற ஊட்டுக்கு குடுத்து காயத்துக்கு ஒத்தடம் போடலாம்னு நெனச்சிருந்தேன். இப்ப நீயே ரோசாவப்பொறிச்சுட்டு போக வந்துட்டே…. பொறிச்சுக்கோ. ஆனா எனக்காட்டா முள்ளுப்படாம பொறிச்சுக்கோ….” என சுந்தரி கூற, பல வருட பகை மறந்து, மாரியின் விருப்பத்தை நிறைவேற்ற மாரி ஓரிக்கு தன் மடியில் படுக்க வைத்து பணியாரம் ஊட்டியதாகப்பொய் சொல்லி இந்த திருமணத்துக்கு ஓரியின் தாய் சங்கரியை சம்மதிக்க வைக்க யோசனை சொன்ன ராசாத்தியும், அதை நிறைவேற்றிய அவளது தாய் ராணி உள்பட அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாகச்சிரித்தனர்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *