கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 3,389 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம்-9 

குப்பிப்பாட்டியையும் சங்கிலிப்பாட்டியையும் பார்த்து விட்டு மேஜர் மூர்த்தி தன்னைப் பின்தொடர்ந்து திண்ணைக்கு வந்து தன் மாமாவைக் கேட்டான்: “இந்தத் தெருவிலேயே விடோஸ் ஜாஸ்திதான் போல் இருக்கு.” மாமா சொன்னார்: “நாலைந்து வருஷங்களுக்கு முன்னால் நீ பார்த்திருந்தாயானால் தெரியும். தெருவுக்கு ‘விடோஸ் ஸ்டிரீட்’ என்று பெயர் வைத்துவிடலாம்போல் இருந்தது. வீட்டுக்கு ஒரு விதவையைத் தவிர தெருவிலே யாரும் கிடையாதே.” 

“இந்த நாலைந்து வருஷங்களிலே மாறுவதற்கும் காரணம்?” 

“ரிடையர் ஆனவா நாலைந்துபேர் வந்து குடியேறினாங்கிறது முதல் காரணம். இரண்டாவது, சென்னை இவாகுவேஷன் டயத்திலே ஊருக்குக் குடும்பங்களை அனுப்பினவாள்ளே பாதிப்பேர், முன்னால் நினைத்தபடி குடும்பத்தைப் பட்டணத்துக்கு அழைச்சுக்க முடியாமே போயிட்டுது. தவிரவும் அரிசி முதலிய அவசியப் பொருள் எல்லாம் இங்கே கிராமத்திலே இன்னிக்கும் கிடைக்கிறமாதிரி நல்ல தரமா பெரிய பட்டணங்களிலே கிடைக்கல்லே. அவசியமில்லாத பொருள்கள் கிடைக்காது. பிளாக் மார்க்கெட்டிலே பணங்கொட்டி வாங்கறதை விடத் தேவை யில்லைன்னு இருந்துவிடுவது சுலபம் இங்கே! முக்கியமாகப் பொருளாதாரக் காரணங்கள்தான் எல்லாம். கிராமத்திலே ஓரளவு ஜனங்கள் ஜாஸ்தியாயிட்டா..” என்றார் மாமா. 

“பொதுவா இது சரியான விஷயம்னு தோணல்லியே எனக்கு” என்று ஆக்ஷேபித்தான் மேஜர் மூர்த்தி. 

மாமா ஒரு விநாடி யோசித்தார். “நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியறதுன்னு நினைக்கிறேன். நம்மைப்போல நடுத்தர வகுப்பினருக்கு மட்டுமே நான் சொன்னது உண்மை. மத்தவாளைப்பத்திப் பொருளாதார நிபுணர்களைத்தான் கேட்டுக்கணும். எனக்குத் தெரியாது.” 

“அதுவும் சரிதான். தவிர அவா நிபுணத்துவத்திலே ஆளுக்கு ஒன்று சொல்லத்தான் சொல்வார்கள்.” 

“சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தைப் பற்றிய வரையில் நான் சொன்னது உண்மை. 1939 வாக்கிலே என்னையும் ஒருகரை சீனுவாசையரையும் மகாலிங்கையரையும் தீக்ஷிதரையும் தவிர, தெருவிலே புருஷாளே கிடையாதுன்னாப் பார்த்துக்கோயேன்!” 

“இப்பவே தெரு, உயிர் இல்லாமல்தான் இருக்கு. அப்போ எப்படி இருந்திருக்கும்னு-” வெளிக் குறட்டோரம் போய்த் தெருவிலே எச்சில் துப்பிவிட்டு, மேஜர் மூர்த்தி மீண்டும் ஒரு தரம் கிழக்கும் மேற்கும் பார்த்தான். வெயில் ஏற ஏறத் தெருவிலே வெயில் தெரியாதுபோல் இருந்தது. இரண்டு புறங்களும், தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் வேப்ப மரங்களுமாக வளர்த்திருந்தார்கள். மகாலிங்கையர் வீட்டு வாசலில் அழகிய தளமிட்ட சிறு கிணறும் கிணற்றைச் சுற்றி ஏழெட்டுப் பாக்குச் செடிகளும், நாலைந்து புஷ்பச் செடிகளும் இருந்தன. செம்பரத்தை மலர்ந்திருந்தது. பாரிஜாதம் கீழே கல்தளத்தில் உதிர்ந்திருந்தது. பட்டுரோஜா ஏராளமாக மொட்டுக் கட்டியிருந்தது. ஒரு மல்லிகைக்கொடிக் ‘கமான்’ ஆர்ச்சில், சிவப்பு எறும்புகளும் சம்பங்கிப்பூக்களும் மல்லிகை இலைகளுமாக அடர்ந்திருந்தது. தெருவிலிருந்த ஒவ்வொரு வீட்டு வாசலிலுமே, புஷ்பச் செடிகளும் வேறுபல சிறு மரங்களும் இருந்தன. அவன் மாமா வீட்டு வாசலிலே ஒரு கிளுவை மரம் தளதளவென்று தளிர் விட்டிருந்தது. மூன்று வேப்ப மரங்கள் முண்டும் முடிச்சுமாக, கோணலும் மாணலுமாக உயர்ந்தோங்கி வளர்ந்து அடர்ந்திருந்தன. கோடை நாளில் அக்கிரஹாரம் மிகவும் சுகமாக இருக்கும் என்று எண்ணினான் மேஜர் மூர்த்தி. ஐப்பசியில் கோடை மாதிரிதானே இருந்தது? 

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் மேஜர் மூர்த்தி. மணி ஏழரை தான் ஆகியிருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே சூரிய உஷ்ணம் அதிகமாகத்தான் இருந்தது. அவன் அணிந்திருந்தது மிகவும் மெல்லிய பனியன்தான். ஆனால் உடம்பெல்லாம் கசகசவென்று புழுக்கமாகத்தான் இருந்தது. 

தெருவிலே இப்போது நடமாட்டத்துக்குக் குறைவில்லை. கிழக்கே ஒரு வீட்டு வாசலிலே குழிபோட்டு, நாலைந்துபேர் கோலி அடித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் அல்ல. அந்தக் கோஷ்டியிலே ரொம்பச் சின்னவனுக்கு வயசு பதினைந்தாவது இருக்கும். ரொம்பப் பெரியவனுக்கு வயது இருபத்தைந்திருக்கும். கோலி ஆடக் கை வளையாததை அவன் வீச்சுப் பேசிச் சமாளித்துக் கொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. ஏழெட்டுப் பேர் இந்தக் கோஷ்டியைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கக்கத்திலே தன் சாமான்களை இடுக்கிக் கொண்டே மேலே ஒரு துணியைப் போர்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான் கிராமத்துப் பரியாரி. அன்று திங்கட்கிழமை என்று ஞாபகம் வந்தது, மேஜர் மூர்த்திக்கு. 

மோர்க்காரி ஒருத்தி கூவிக் கொண்டிருந்தாள். பட்டணத்து மோர்க்காரி மாதிரியில்லை அவள். அவளைப் பார்ப்பதற்கு ஆரோக்கிய மாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அவளிடம் ஒரு கப் மோர் வாங்கிச் சாப்பிட்டால் தேவலைபோல் இருந்தது மூர்த்திக்கு. ஆனால் மாமாவும் மாமியும் என்ன சொல்வார்களோ என்ற பயம் அவனுக்கு. 

கூடைக்காரிகள் இரண்டொரு பேர் கீரை, முள்ளங்கி என்று கூவிக் கொண்டிருந்தார்கள். ஒரு கிழவி, சிவராமையர் வீட்டு வாசலில் நின்று மிகவும் சாந்தமாக, “என்ன ஐயரே! இன்னிக்கி ஒண்ணும் வாங்கல்லியா?” என்று கூப்பாடு போட்டாள். அவளைக் கூப்பிட்டுக் கூடையை இறக்கிவிட்டு, “இந்தா! வாங்கிக்கே.. பச்சையா ஏதாவது வாங்கு” என்று தன் மனைவிக்கு உத்தரவிட்டார் மாமா. 

அக்கிரஹாரத்துப் பேர்வழிகள் பலர், குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். காரியம் இருந்ததோ இல்லையோ, அவசர மாகத்தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு கிழவர் பச்சைக் கம்பளியை மேல்வேஷ்டியாக மடித்துப் போட்டுக்கொண்டு, நெற்றியிலே கீற்றுச் சந்தனமும் விபூதியும் பளபளக்க ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டு மேற்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். மேற்கேதான் இருக்க வேண்டும் கோயில் என்று எண்ணினான் மேஜர் மூர்த்தி. அவர் அவ்வளவு அதிகாலையில் கோயிலுக்குப் போகாமல் வேறு எங்கே போய்க் கொண்டிருக்கப் போகிறார்? 

“கோயில் எந்தப் பக்கம்?” என்று மாமாவை விசாரித்தான் மேஜர் மூர்த்தி. 

“மேற்கே தெருவோடு போய் வடக்கே திரும்பி நாலடி நடந்தா சின்ன அக்கிரஹாரம். அதோடு மேற்கே போய் வடக்கே திரும்பினால் தேர் முட்டி; கீழ் சன்னதி; கோயில்” என்றார் சிவராமையர். 

ஒரு நிமிஷம் கழித்துச் சொன்னார். “இரு, கொல்லையிலே வேலியடைக்கப் பறையனை வரச்சொல்லியிருக்கேன். அவன் வந்ததும் அவனுக்கு வேலை சொல்லிவிட்டு வரேன். கோயிலுக்குப் போயிட்டு வரலாம்…” என்றார். 

கோயிலுக்குப் போவதென்பது மிகவும் புனிதமான, மிகவும் நூதனமான அநுபவம் மேஜர் மூர்த்திக்கு. தான், அதற்கு அச்சமயம் தயாராக இருப்பதுபோலத் தோன்றவில்லை அவனுக்கு, “இப்ப வேண்டாம். சாயங்காலமாப் போயிட்டு வருவோம்” என்றான் மூர்த்தி. 

“எங்க ஊரைச் சுத்திப் பார்க்கவேண்டாமா?’ 

“பாத்துண்டாப் போச்சு. முதல்லே இந்தத் தெருவைத் தெரிஞ் சுக்கறதுன்னா முக்கியம்” என்றான் மூர்த்தி. 

சிவராமையருக்குப் பரம திருப்தி; “உன்னைப்போல நம்ம அரசியல் தலைவர்களெல்லாம் இருந்துட்டா, எவ்வளவோ தேவலை” என்றார். 

“நம்ம ஊர் அரசியல் தலைவர்களையெல்லாம் பத்திப் பேச எனக்கு எதுவும் யோக்யதை இருப்பதாகத் தெரியவில்லை. நான் உள்ளூர்க்காரனே இல்லையே!” 

“உன் போட்டோவைப் பேப்பரிலே பார்த்ததுலே நீயும் ஒரு தலைவனாகறத்துக்கு இருப்பதாகத்தான் நான் நினைத்தேன்” என்றார் சிவராமையர். 

“ஒரு நாள் பூராவும் எனக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால் மத்த தலைவர்களையெல்லாம் பார்த்த பிறகு அந்த ஆசை போய்விட்டது” என்றான் மூர்த்தி.

“ஏன்?” 

“ஏன் என்கிறது ரொம்பப் பெரிய கேள்வி. அவ்வளவு சுலபமாகப் பதில் சொல்லிவிட முடியாது. ஒண்ணு சொல்லலாம்; எனக்குச் சுய நலம் ஜாஸ்தி. என் சுக சௌகரியங்களும் என் சம்பாத்தியமுந்தான் எனக்கு முக்கியமாகப் படறது.” 

“நம்ப தலைவர்களிலேயும் பலருக்கு அப்படித்தான்னு ஊரார் சொல்றாளே!” என்றார் சிவராமையர். 

“அதைப்பத்தி நம்ப சொல்வானேன், நம்ப கவலைப் படுவானேன்? எனக்கு என் கவலை ஜாஸ்தியாய்ப் போச்சு. ஊர்க்கவலை குறைவாக இருக்கு. நான் எப்படித் தலைவனாக இருக்க முடியும்?” 

“தலைவராக விரும்பற ஒவ்வொருவரும் இந்த லைனிலே ஆத்ம விசாரம் செய்துவிட்டு வந்தாளான்னா நன்னாருக்கும்; நாட்டுத் தலைமை அப்புறம் நன்னாவே நடக்க ஆரம்பிச்சுட்டாக்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” 

“நம்ப ஜனங்களுக்குத் தலைவனாயிருப்பது ரொம்பவும் சுலபம்; பல விஷயங்களிலேயும் நம்ப ஜனங்களுக்கு வழிகாட்ட வேண்டியது அவசியமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் தலைவனாகப் போக எனக்கு ஆசையேயில்லை. சும்மா என் காரியத்தைப் பாத்துண்டு சும்மா இருந்தாப் போதும்னுதான் இருக்கு” என்றான் மூர்த்தி. 

தெருவோடு தங்கள் அநுபவங்களைப் பேசிக் கொண்டு இரண்டு முஸ்லிம்கள் போனார்கள். 

“இந்த ஊரிலே துலுக்காள் வேறே இருக்காளா?” என்றான் மூர்த்தி. 

“துலுக்கத் தெரு ஒன்று இருக்கு” என்றார் சிவராமையர் சுருக்கமாக. 

தெருக்கோடியிலே மூங்கிற் புதரண்டை நின்றுகொண்டு, “சாமி. சாமி!” என்று யாரோ உரக்கக் கத்தினான். “பறையன்-வந்துட்டான்” என்றார் சிவராமையர். காவேரிக்கரை போகும் வழியாக அவனைக் கொல்லைப்புறம் வரச்சொன்னார் சிவராமையர். அக்கிரஹாரத்துக்குள்ளே ஹரிஜன் வரக்கூடாது என்று கூறுவது உண்மைதான் என்பது மேஜர் மூர்த்திக்கு அப்போதுதான் தெரிந்தது. கிறிஸ்துவுக்குப் பின் 1946-லே, மகாத்மா காந்தியின் இருபது வருஷப் பேச்சுக்கெல்லாம் பிறகும், இது சாத்தியமாக இருந்தது என்பது அவனுக்கு ஆச்சரியமூட்டுவதாகத்தான் இருந்தது. 

அதிகாலையில் வந்திருக்க வேண்டிய குடுகுடுப்பைக்காரன் ஒருத்தன், நேரம் தப்பி வந்து, ஜக்கம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய குடுகுடுப்பையும் எவ்விதமான இசையோடும் சேராத பாட்டும், சம்பிரதாயமான ஏதோ ஒன்றை ஞாபக மூட்டுவதுபோல இருந்தன. கிராமத்திலே, காலைப்பொழுது குடுகுடுப்பைக்காரன் இல்லாமல் இருக்கமுடியாது போலும்! 

தெருவோடு போய்க்கொண்டிருந்த ஒருவர், “என்ன சிவராமையர் வாள்! சௌக்கியந்தானே!” என்று விசாரித்து விட்டுப் பதிலுக்குக் காத்திராமலே போய்விட்டார். 

அவர் போனபிறகு, “அவர்தான் ஒருகரை சீனுவாசையர். எங்க ஊரிலேயே மிகவும் சுவாரசியமான புள்ளி’ என்றார் சிவராமையர் தம் மருமானிடம். 

“சுவாரசியமான மனுஷரா? அப்படீன்னா? நான் அவரைச் சரியாகப் பார்க்கவில்லையே!” என்றான் மேஜர் மூர்த்தி. 

சிவராமையர் மட்டுமல்ல. தெருவிலே பலரும் ஒருகரை சீனு வாசையரை ஒரு தினுசான மனிதராகத்தான் கருதினார்கள். அப்படிக் கருதுவது ஓரளவு சுலபமாக இருந்தது. இல்லாவிட்டால் ஒருகரை சீனுவாசையர் ஞாபகப்படுத்திய சில அடிப்படையான வாழ்க்கைத் தத்துவங்களை மறப்பது மிகவும் சிரமப்பட்டுப் போய்விடும். ஒரு தினுசு என்று கூறிவிட்டு, அசடு, பைத்தியக்காரன் என்று பேச்சளவில் சொல்லாமல், செயலளவில் ஏற்றுக்கொண்டு ஒதுங்கிவிடுவது கிராம் சமூகத்தில் சுலபமாக இருந்தது. 

அவர் சுவாரசியமான மனிதர் என்பதைச் சிவராமையர் ஒப்புக் கொண்டார். பலர் அதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பார்ப்பதற்கு ஒன்றும் சீனுவாசையர் தனிப்பட்ட மனிதராகக் காணப்படமாட்டார். அவர் முகத்திலே இருந்த எடுப்பான மூக்கு, அவருக்கு வாழ்க்கையிலே வெற்றி வாங்கித் தந்திருக்க வேண்டுந்தான்; ஆனால் மூக்கு, தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு ஏழெட்டுப் பிள்ளைகள்; நாலைந்து பெண்கள். இதில் ஒரு பகுதி மூத்த சம்சாரத்தினுடையவை. இளையாள், பாவம்! நோஞ்சான். அவளை வியாதி படுத்தாத நாளே கிடையாது. கும்பகோணம் டாக்டர் வாரத்துக்கு ஒருநாள் வீட்டிற்கு விஜயம் செய்யாமல் இருப்பது துர்பலம். நாலைந்து வருஷங்களாகவே ஒருகரை சீனுவாசையரின் இரண்டாவது மனைவி, படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறாள். லக்ஷ்மி என்கிற பெயருடைய அவள், உண்மையிலேயே லக்ஷ்மிதான் என்று தெருவார் கூறுவார்கள். தன் மூத்தாள் பிள்ளை குட்டிகளைத் தன் பிள்ளைகுட்டிகளைவிட ஆரம்ப நாட்களில் அதிகப் பிரியத்துடன் நடத்தி, அதனால் தெருவாரின் நல்ல அபிப்பிராயத்தையும் நன்மதிப்பையும் பெற்றவள் அவள். பார்ப்பதற்கும் அழகாக இருப்பாள். 

ஒருகரை சீனுவாசையர் தர்மிஷ்டர்; செலவாளி, சக்திக்கு மீறிய தயாள புத்தியுள்ளவர். இது சில சமயங்களில் அவரையே கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிடும். அதற்காகத் தாம் தாராள மனப்பான்மையை இழந்துவிட வேண்டியது அவசியம் என்று அவர் ஒப்புக்கொண்டுவிடமாட்டார். உதாரணமாக ஒரு கதை அவரைப் பற்றி: 

அவருக்குத் தோட்டங்கள் நிறையவே இருக்கின்றன. உரிய காலத்தில் மாவும் பலாவும் நாரத்தையுமாக அவருக்கு விளைவு அதிகமாகவே இருக்கும். தேவைக்கு அதிகப்பட்டு விளைவதை விற்றுக் காசு பண்ண வேண்டும் என்கிற ஆசை கிடையாது அவருக்கு முதல் தரம் ஆனதையெல்லாம் வண்டியேற்றி, வண்டிச் செலவையும் தாமே கொடுத்து, கும்பகோணத்தில் வக்கீல் பண்ணிவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த தன் மூத்த சகோதரனுக்கு அனுப்பிவிடுவார் இந்த மூத்த சகோதரனைப்பற்றிப் பிறகு சொல்லுகிறேன். அண்ணாவுக்கு அனுப்பியதுபோக எஞ்சுவதைப் பலருக்கும் தாராளமாகப் பகிர்ந்து அளித்துவிடுவார். சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே வருஷத்தில் ஏழெட்டு நாட்களாவது ஒவ்வொரு வீட்டாரும், ஒருகரை ஐயர் கொடுத்தனுப்பியது என்று எதையாவது சாப்பிடாமல் இருக்கமாட்டார்கள் என்று சொல்லலாம். எதையும் எதிர்பார்த்து இதையெல்லாம் செய்பவரல்ல இவர். சுபாவத்தில் இருந்த ஒரு தாராளபுத்தி: அவ்வளவுதான். 

ஒரு நாள் தெருவுக்கெல்லாம் கொடுத்ததுபோக மிஞ்சிய ஒரு பலாப்பழத்தை வீட்டிலே நறுக்கச் சொன்னார். அவருடைய படுகைத் தோட்டத்துப் பலா ரொம்பவும் நன்றாக இருக்கும். நறுக்கியது வேரிலே காய்த்துப் பழுத்திருந்த பலாப்பழம். ருசிக்கும் மணத்துக்கும் கேட்கவா வேண்டும்! அவர் வீட்டில் பெரியவர்களும் சின்னவர்களுமாகப் பத்துப் பன்னிரண்டு பேர் வழிகளாவது இருந்தார்கள். ஒருகரை ஐயரோ ஒரு பழத்தைத் தவிர மற்றதை எல்லாம் தானம் செய்துவிட்டார். ஒரு பழம் நறுக்கினால் ஆளுக்கு நாலு சுளை கிடைப்பதே சந்தேகம். பெரியவர் சும்மா இருந்துவிடலாம். சிறுவர்களால் அதுவும் பலாப்பழ விஷயத்தில் -சும்மா இருக்க முடியுமா? எல்லாம் போகத் திண்ணையில் வந்து அன்று உட்கார்ந்த மகாலிங்கையருக்கும் அவர் பிள்ளைக்கும் அன்று நறுக்கிய பலாப்பழத்தில் இரண்டிரண்டு சுளை கொண்டு வந்து கொடு என்று ஒருகரை ஐயர் உத்தரவிட்டதும், பையன்களுக்கு மட்டுமல்ல, அவர் மனைவி லக்ஷ்மிக்குமே கோபம் வந்துவிட்டது. 

ஒருகரை ஐயரின் பிள்ளைகள் எல்லோரும் கெட்டிக்காரர்கள்; அதுவும் மூத்தபிள்ளைக்கு விஷமம் ஜாஸ்தி அவன் அப்போது கும்ப கோணம் கலாசாலையில் பி.ஏ வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். சமையலறையில் இருந்தபடியே அவன், “அந்த மாமாவுக்குப் பலாச்சுளை பிடிக்காது; அவர் பிள்ளைக்கு அது உடம்புக்கு ஒத்துக்காது” என்று சொன்னபோது மகாலிங்கையருக்கோ அவர் பிள்ளைக்கோ இன்னது செய்வது என்றே தெரியவில்லை. இதேதடா சங்கடம் என்று எவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து நகர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நகர்ந்து விட்டார்கள். 

இதில் விசேஷம் இதுதான்; இது சங்கடமான நிலைமை என்று ஒருகரை ஐயர் ஒப்புக்கொள்ள மாட்டார். 

நியாயம், தர்மம் போன்ற பலவிதமான அசட்டுக் கொள்கைகளை உடையவர் ஒருகரை ஐயர் முன்னொரு காலத்தில் இதெல்லாம் அசட்டுத் தனமில்லாத கொள்கைகளாக இருந்திருக்கலாம்; 1946-ஆம் வருஷ முடிவிலே இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னும் நியாயம், தர்மம் எல்லாம் உலகில் உண்டு, ஆட்சி செலுத்த முடியும் என்று நம்பியிருப்பதே அசட்டுத்தனந்தானே; வேறு என்ன? என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள். 

அசடு, பைத்தியக்காரன் என்று இவரை ஓரளவு ஒதுக்கி விட்டு இருந்துவிடுவதும் அவ்வளவு சாத்தியமாக இல்லை. அவர் செய்த ஒவ்வொரு காரியமும் தெருவிலே, கிராமத்திலே மற்றவர்களையும் பாதிப்பதாக இருந்தது. அவருடைய நல்ல தனத்துக்கு எதிராகத் தங்களுடைய கெட்டதனம் பயன்தர மறுப்பதை எண்ணிய பலருக்கும் கோபம் வந்தது என்னவோ உண்மைதான். இந்தக் கோபத்தை நியாயமானது என்று சொல்லமுடியாதுதான், எனினும் அதனால் பாதகம் இல்லை என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். 

நல்லார் ஒருவருக்காகப் பெய்யும் மழை என்கிற வாக்கியம் பொய்த்துக் கொண்டிருந்த காலம் அது. நல்லவர்களுக்காக மழை பெய்ததோ என்னவோ? அதன் பலன்கள் கெட்டவர்களுக்குத்தான் அதிகமாகக் கிடைத்தன. ஒருகரை ஐயரைப் போன்ற பெரிய மிராசுதார்கூடத் தம்முடைய நல்லதனத்தினால், நியாயம், தர்மம் என்கிற கொள்கைகளினால் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுத் தம் செலவுகளைச் செய்துவர வேண்டியிருந்தது. மகாலிங்கையரைப் போன்றவர் – சொல்பம்தான் என்றாலும் – ஏதோ எப்படியோ பணம் சேர்த்து நிலம் வாங்கினார். ஒருகரை ஐயருடைய மிகச் சிறந்த நிலத்தில் ஆறு மா இப்படி மகாலிங்கையருக்குச் சேர்ந்துவிட்டது என்பது ஆச்சரியமான விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். மகாலிங்கையருக்கு ஆஸ்தி குறைவு. வருவாயும் குறைவு. ஆனால் குடும்பம் குறைவில்லை. எனினும் அவரிடம் பணம் சேர்ந்தது. காலணாவும் அரையணாவுமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு சேர்ப்பது என்றால் என்ன அர்த்தம்? பிறருக்கு நியாயப்படி கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சேர்ப்பது என்றுதான் அர்த்தம். நிலம் வாங்கினார். அவருடைய நிலத்திற்குப் பணம் உதவியவர்கள் கீரைக்காரி முதல் பிள்ளையார் வரையில். சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருமேதான். மேஜர் மூர்த்தியைச் சந்தித்து ஒரு விநாடி பேசினாரானால் உடனேயே அவன் தன்னைப்பற்றியவரையில் எத்தனை காலணாப் பெறுவான் என்று மதிப்பிட்டுவிடுவார் மகாலிங்கையர். 

ஒருகரை ஐயரின் செல்வத்திலே அதே கீரைக்காரி முதல் பிள்ளையார் வரையில் எல்லோரும் பங்கெடுத்துக்கொண்டார்கள். அவர் மனசறிந்து மனம் ஒப்பியே கொடுத்தார்; ஏமாந்து கொடுக்கவில்லை. கொடுத்துக் கட்டுமா என்று சிந்தித்துத் தயங்கவில்லை அவர். கொடுத்தார்; கொடுக்கக் கொடுக்க இருந்தது. அவரிடமும் குறைந்து விட்டது வாஸ்தவமோ என்னவோ? அவர் குறைவை உணரவில்லை. 

பெரிய குடும்பத்தில் நாலாவது பிள்ளையாகப் பிறந்தவர் சினுவாசையர். ஏழைக் குடும்பந்தான். பணக்கார உறவினர் ஒருவர் ஸ்வீகாரம் கேட்டபோது ஏழைப்பெற்றோர் கொடுத்து விட்டார்கள். ஒருகரை சீனுவாசையர், சாத்தனூர் வீட்டுக்கும் நிலத்துக்கும் அதிபர் ஆன கதை இது. ஏராளமான சொத்து என்று ஒரு விதத்தில் சொல்லலாம்; ஒருகரை ஐயர் கையில் அது ஏராளமாகவே உபயோகப்பட்டது. 

ஸ்வீகாரத் தந்தையும் தாயும் மனங்கோணாமல் முகம் சிணுங் காமல் நடந்து கொண்டார் சீனுவாசையர். ஸ்வீகாரத் தந்தை, சீனுவாசனை ஸ்வீகாரம் எடுக்கும்போதே கிழவர்; அவர் அதிக நாள் உயிர் வாழவில்லை. அதற்குப் பிறகு விதவைத்தாய் நெடுநாள் இருந்தாள்; ஆயுளில் கடைசிப் பத்து வருஷங்கள் பைத்தியமாகவே இருந்தாள். அவளை வீட்டை விட்டுத் துரத்தியிருந்தால் யாரும் சீனுவாசையரைக் கேட்டிருக்க முடியாது; கடவுள் தவிர யாரும் கேட்க முடியாது. ஆனால் சீனுவாசையர் அதைச் செய்யவில்லை. ஸ்வீகாரத் தாயை வீட்டிலேயே வைத்து, எவ்வளவு ஜாக்கிரதையாகக் காப்பாற்ற முடியுமோ, அவ்ளவு ஜாக்கிரதையாகக் காப்பாற்றினார். மூத்த மனைவி மூன்று பெண்களைப் பெற்றுவைத்துவிட்டு இறந்து விட்டாள். இரண்டாவது மனைவியாக வந்தவள் பைத்தியக்கார மாமியாருக்கும், தாராள மனம் படைத்த கணவருக்கும். திருப்திகரமாகக் குடித்தனம் நடத்தினாள். அவளுடைய சீமந்த புத்திரி இறந்த பிறகுதான் கிழப் பைத்தியம் இறந்தாள். சாகிற சமயத்திலே ஒரு தெளிவான விநாடி யிலே, தன் ஸ்வீகாரப் பிள்ளையும், நாட்டுப் பெண்ணையும் மனங் குளிர வாழ்த்தி ஆசி கூறிவிட்டுச் செத்து வைத்தாள். 

ஸ்வீகார சொத்திலிருந்துதான் கும்பகோணத்துக் குடும்பம் நிர்வகிக்கப்பட்டு வந்தது என்று கூறுவது முழுவதும் உண்மையாகாது. சீனுவாச ஐயருக்கு மூத்தவர்கள் மூவரும் – சீனுவாச ஐயர் சொத்துக்கு அதிபதியாகத் தலையெடுக்கு முன்னரே – ஏதோ தலைப்பட்டுச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவருடைய தம்பிகள் இருவரும், சீனுவாச ஐயரின் பணக்கார நிழலிலே ஒதுங்கினார்கள். ஏராளமாகச் செலவு செய்து அவர்களை நல்ல படிப்புப் படிக்கவைத்தார். அவர்களுடைய படிப்பும் வீணாகவில்லை. இளையவன் பெரிய வக்கீலாகத் தஞ்சாவூரிலே தினம் நானூறு ஐந்நூறு என்று சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மூத்த வன் வடக்கே அக்கவுண்டண்டு ஜனரலாக மாதம் ஆயிரத்தைந்நூறு சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவர்கள் சுபாவம் தனிப்பட்ட சுபாவம். யாரிடமும் தனிப்பிரியம் என்று சொல்ல எதுவும் இல்லாமல் தங்கள் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். 

சீனுவாசையருடைய அண்ணன்மார்கள் மூவருக்கும் தம்பியின் ஸ்வீகார சொத்தால் ஏராளமான லாபம். அண்ணா, அண்ணா என்று பய பக்தியுடன் செய்வார் ஒருகரை ஐயர். இதைச் சுயநலத்துக்கு உபயோகப் படுத்திக்கொள்ளக் கூடியவர்கள் அவருடைய அண்ணன்மார்கள் மூவரும் என்பதுதான் வருத்தப்படவேண்டிய விஷயம். உழைப்பும் இடையறாத கவனிப்பும் தரவேண்டிய லாபமும், முதலில் இருந்து நாற்பது வருஷங்களில் மறைந்துவிட்ட மூன்று வேலி நிலமும், கும்பகோணத்தில் சீனுவாசையரின் அண்ணன்மார்கள் வீட்டிலே தேடிப் பார்த்தால் கிடைக்கும் என்று தெரு வார் அனுதாபப் பட்டுச் சொல்வார்கள். ஆனால் இதை அனுதாபத்துக்குரிய விஷயமாக நினைக்கவில்லை சீனுவாசையர். அண்ணன்களுக்கு உரிய தைச் செய்ததாகத்தான் அவர் நினைப்பு. 

அவருடைய மூத்த பிள்ளை விஷமக்காரன்; மகா கெட்டிக் காரன் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டோம் இல்லையா? கும்பகோணத்துப் பெரியப்பா யாராவது வந்துவிட்டால், எதிர்வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து, தன் மனசிலுள்ளதை அவன் சொல்ல ஆரம்பித்து விடுவான். பெரியவனாகி நினைவு தெரிந்த நாள்முதல் அவனுக்கு – அவன் பெயர் ராமசந்திரன் – தன் தாய் படுகிற கஷ்டமும், தன் தகப்பனாரால் வீட்டில் ஏற்படுகிற பொருளாதார நெருக்கடியும் நன்கு தெரிந்திருந்தன. ‘சுருட்டிண்டு போக வந்துவிட்டான் பாருடா?’ என்று தன் பெரியப்பாவைப் பற்றிக் கூறுவான் ராமசந்திரன். பெரியப்பாவுக்கு மரியாதை தர வேண்டும் என்கிற ஞாபகமே கிடையாது அவனுக்கு அவர்களும் மரியாதைக்கு உரியவர்கள் மாதிரி அப்படி நடந்துகொண்டுவிட மாட்டார்கள். 

சீனுவாசையரின் ஸ்வீகாரத் தாய் பைத்தியம் என்று சொன்னேனல்லவா? அதுமட்டும் அல்ல. சீனுவாசையரின் சொந்தக் குடும்பத்திலேயே பைத்தியம் உண்டு. அவர் தாத்தா பைத்தியமாக இறந்தார். அவருடைய அத்தைகளில் ஒருத்தி முற்றிய பைத்தியம்; இன்னமும் உயிருடனிருக்கிறாள். இப்படியாக அவருடைய குடும்பத்து ரத்தத்திலேயே பைத்தியக் களங்கம் கலந்திருந்தது. 

சீனுவாசையரின் மூத்தபிள்ளை கெட்டிக்காரன். விஷமக்காரன்; ஆனால் பைத்தியமுங்கூட. சாத்தனூர் சர்வமானிய அக்ரஹாரத்திலே சிறுவனாகவும் பையனாகவும் பெரியவனாகவும் அவன் செய்த அட்டூழியங்களைச் சிறிதேனும் சொல்ல வேண்டியது அவசியந்தான்; ஆனால் அதை அதற்குரிய இடத்திலே சொல்லலாம். இந்த இடத்தில் ஒன்றுமட்டும் சொல்ல வேண்டும். மற்றப்படி எப்படியோ? அவனுக்குப் படிப்பு நன்றாக வந்தது. சென்னை ராஜதானியில் முதலாவதாக பி.ஏ. ஹானர்ஸ் பரீக்ஷை பாஸ் செய்துவிட்டு, ஒரு கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலையாக இருந்தான். 

அவனுடைய முதல் தம்பி சந்திரசேகரனும் அவனுடன் இருந்தான். பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். அவனும் கெட்டிக்காரன்தான். 

சீனுவாசையர் இந்த விஷயத்தில் ரொம்பவும் அதிருஷ்டக்காரர் தான். அவருடைய ஏழு பிள்ளைகளில் ஒன்றுகூடச் சோடை போகவில்லை. பேச்சிலும் படிப்பிலும் ஒருவரையொருவர் மிஞ்சிவிடுவார்கள். மூத்தபையனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது; ஒரு குழந்தையும் இருந்தது. அவன் இப்போதெல்லாம் சாத்தனூருக்கு விடுமுறை நாட்களில் வருவதோடு சரி. 

ஒருகரை ஐயரையும் அவர் குடும்பத்தையும் பற்றி இங்கே இவ்வளவு சொல்லியது போதும் என்று நினைக்கிறேன். அவருடைய குணாதிசயங்கள் சற்று விசித்திரமாகவேதான் இருக்கும். சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில் நாம் தங்கவேண்டிய இந்த ஒருநாள் பொழுதில் அவரைப் பற்றிச் சாவகாசமாகவே அறிந்துகொள்ளப் பொழுது இருக்கிறது; உரிய இடத்தில் அறிந்துகொள்ளுவோம். 

மேற்கே சற்றுமுன் போன ஒருகரை சீனுவாச ஐயர் கிழக்கே திரும்பி வந்துகொண்டிருந்தார். தெருவிலே போகிறவர். வருகிறவர்களிடம் எல்லாம் நின்று, அவர்களையும் நிறுத்தி இரண்டொரு வார்த்தை பேசி விட்டுத்தான் நடந்தார் அவர். 

வருகிறபோது அவரைச் சரியாகக் கவனித்தான் மேஜர் மூர்த்தி. அவருக்கு வயசு அறுபதுக்குமேல் ஆகியிருக்க வேண்டும். எனினும் வயது அவ்வளவு ஆனதாகத் தெரியவில்லை. சின்ன முகமும் சின்னக் கண்களும் மெலிந்த தேகமும் சற்று உயரமுமாகக் காட்சி அளித்தார் அவர். தோய்த்துத் தோய்த்துத் காவியேறியிருந்த ஒரு வேட்டியும், மேலே பட்டுக் கரை அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார். இரண்டும் சலவையை ஆதியில் பார்த்ததாகத்தான் இருக்கும். ஒருகரை ஐயர் எந்தத் துணியையும் இரண்டாவது சலவைக்குப் போடுவது கிடையாது. 

நிமிர்ந்து நின்றுகொண்டு, ஒரு கையை இடுப்பில் தாங்கிக் கொண்டு தலையை ஒரு புறமாகச் சாய்த்தபடியே பேசினார் அவர். எல்லோரிடமும் ஒரே மரியாதையாகத்தான் பேசினார் அவர். எதிர்ப்பட்ட பரியாரி, வண்ணான், கூடைக்காரி, பால்காரன், மகாலிங்கையர், சுப்புப் பாட்டி, ஏழு வயதுச் சின்னமணி எல்லோருடனும் பேசாதிருக்கக் கூடாது என்பது அவர் கொள்கைபோலும். எல்லோருடனும் உரக்கவே சிரித்துச் சிரித்துக்கொண்டுதான் பேசினார். சிறுவர்கள்கூட அவரிடம் நின்று ஒரு வார்த்தை பேசினார்கள் என்பதையும் கவனித்தான் மூர்த்தி. 

சிவராமையர் வீட்டு வாசலிலும் ஒருவிநாடி நின்றார். சிவராமையரிடம் சொன்னார்; “சாஸ்திரிகளைத் தேடிண்டு போனேன். அவரில்லை. மேலத்தெருவுக்கு எங்கேயோ போய் விட்டாராம்” என்றார். 

“பல ஜோலிக்காரர் அவர்” என்றார் சிவராமையர். 

“நம்ப தெருவிலே இருக்கிறது ஒரே ஒரு சாஸ்திரிகள்; அவர் மேலத் தெருவுக்குப் போயிடறார். நமக்குச் சாஸ்திரிகள் தேவையானால் நம்ப போகணும் மேலத்தெரு சாஸ்திரிகளைத் தேடிண்டு” என்றார்.

அவரே ஒரு விநாடி கழித்து இன்னொன்றும் சேர்த்துக் கொண்டார். “சாஸ்திரிகள் விஷயத்திலே மட்டுமல்ல; எல்லா விஷயங்களிலும் இப்படித்தான் இருக்கு. நம்ப தெருவிலே இருக்கிறது ஏதாலேயும் நமக்குப் பிரயோசனங் கிடையாது… இருக்கிறதில்லை; பாருங்களேன்!” என்றார். 

இதே கருத்துக்கு வேறு உதாரணமும் சேர்த்தார் ஒருகரை சீனுவாசையர்; “நம்ப தெருவிலே இருக்கிற படித்தவர்களாலே நமக்கு ஏதாவது கொஞ்சமாவது பிரயோஜனம் இருக்கா. பாருங்களேன். நமக்குக் கும்பகோனம்பட்டிலே வேலையிருந்தாக்கூட நாம் நம்ம தெரு வக்கீலைத்தே ம இளமவில்லை; வேறு வக்கீலைத்தான் தேடறோம் உ படிப்பு நமக்கு உறுபோகமாறதில்லை, ஸார். நான் அதைப் பத்தாகி விட்டது” என்றார். 

“வாங்களேன்! இப்படித் திண்ணையிலே இரண்டு நிமிஷம் உட்கார்ந்துட்டுப் போங்களேன்” என்றார் சிவராமையர். 

“உட்காரும் போது எனக்கு ஏது?” என்று கூறிக்கொண்டே வாசல் ஹாலோடி ஏறி வந்து திண்ணையில் உட்கார்ந்தார் ஐயர். 

அவருக்குத் தன் மருமகனை அறிமுகம் செய்து வைத்தார் சிவராமையர். மேஜர் மூர்த்தியைப்பற்றி விசாரித்து அறிந்து கொண்டபின் ஒருகரை சீனுவாசையர் சொன்னார்: “சம்பளம், யுத்தப்படி எல்லாம் சேர்த்து வாங்குவதிலும், யுத்த விலையில் சாமான்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குவதிலும் தவிர, மற்றப்படி யுத்தம் அக்கிரஹாரத்தில் யாரையும் அதிகமாகத் தொடவில்லை என்று நான் நினைத்தேன்.” 

“வெள்ளத்திலே துரும்புபோல என்னையும் அடித்துக் கொண்டு போயிற்று யுத்தம் என்று சொல்லலாமே தவிர, அதை ஒரு அநுபவமாகவே நான் இதுவரையில் கருதவில்லை என்பதுதான் உண்மை. சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில் என் மாமா ஆத்துக்கு வந்த பிறகுதான் என் அநுபவங்களின் தராதரங்கள், அவற்றின் முக்கியத்துவம் எல்லாம் எனக்குத் தெரியவந்தன என்று நானே நினைக்கிறேன். நான் வாழ ஆரம்பித்ததே. சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்துக்கு வந்த பிறகுதான் என்று எனக்குத் தோன்றத் தொடங்கியிருக்கிறது” என்றான் மூர்த்தி. 

ஒருகரை ஐயர் ஒரு விநாடி தயங்கினார். பிறகு சொன்னார். “பேச்சு நன்றாகப் பேசறேள்; ஒப்புக்கொள்ளுகிறேன். பேச்சிலே கொஞ்சம் உண்மையின் கலப்பு இருந்துட்டா நல்லது தான்” என்றார். மேஜர் மூர்த்திக்குத் தூக்கிவாரிப்போட்டது. உண்மைதான். அவன் கூறியது ஓரளவு மிகைப்படுத்திக் கூறியதே தவிர வேறல்ல. ஆனால் உணர்ச்சி வேகத்திலும் உண்மை ஓரளவு அதிலே கலந்திருக்கத்தான் இருந்தது. ஒரு நாள் 60 

இதனால் ஒருகரை சீனுவாசையரிடம் அவன் மதிப்பு ஒருபடி உயர்ந்தது. அவர் மனிதர் மனோபாவத்தை ஓரளவு உணர்ந்த மாதிரிதான் பேசினார். ஒரு கணம் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்திலே அவர் ஒட்டாதவராக இருக்கவேண்டும் என்று மூர்த்தி எண்ணினான். ஆனால் அது தவறு; அவரைப் போன்றவர் கள் இன்னும் பத்துப்பேர் தெருவிலே இருந்துவிட்டால் கிராமத்து வாழ்க்கை முன்னெல்லாம் இருந்தது என்றார்களே அந்தமாதிரி வளம் பெற்று மீண்டும் விளங்கத் தொடங்கினாலும் தொடங்கி விடலாம். 

என் பேச்சுப் பிடிக்கவில்லை உங்கள் மருமானுக்கு. அதான் ‘சட்டுனு பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டார்” என்றார் ஒருகரை ஐயர், சிவராமையரிடம். 

“சற்று நிதானமாகப் பேசறவன்தான் என் மருமான்” என்று அவனுக்கு உதவி செய்ய வந்தார் சிவராமையர். 

இந்த உதவி தனக்குத் தேவையாக இருந்ததுபற்றி மேஜர் மூர்த்திக்கே வெட்கமாகத்தான் இருந்தது. அவன் சமாளித்துக் கொண்டு, “நான் சொன்னதில் எந்த அம்சத்தில் உண்மை குறைவாக இருந்தது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்” என்றான். 

இதற்குள் ஒருகரை சீனுவாசையரின் கவனம் அவனிடமிருந்து திரும்பிவிட்டது. சிவராமையரின் பேத்திகளில் ஒருத்தி வாசற்படிமேல் வந்து நின்றுகொண்டு இரண்டு கைகளாலும் நிலைப்படியைப் பிடித்துக் கொண்டு, ஒற்றைக்காலை ஆட்டிக் கொண்டே நின்றாள். ஒரு கரை சீனுவாசையரைப் பார்த்ததும் அவளுக்கு வெட்கம் தோன்றிவிட்டது. நாக்கைப் பிதுக்கிக் கொண்டு ஓடிவிட்டாள். “என் மாட்டுப்பொண் என்ன, இந்தக் காலத்து மாட்டுப் பொண்கள்ளாம் மாதிரி இல்லை. மாமனாரைக் கண்டால் வெட்கப்படறாளே!” என்றார். மேஜர் மூர்த்தியின் முகத்தில் தெரிந்த புரியாத பாவத்தைக் கண்டு, “அந்தப் பொண்ணை என் மூன்றாவது பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்குக் கல்யாணம் செய்து கொள்ளப் போறேன் ஸார்” என்றார். 

ஒரு விநாடி கழித்துச் சிவராடையரைக் கேட்டார்.

“ஆமாம். உங்க மருமானுக்குக் கல்யாணம் ஆயிடுத்தோ?” என்று. 

“இத்தனை நாழி இதைக் கேக்காமல் இருந்துட்டேளேன்னு பார்த்தேன்; இன்னும் ஆகல்லை” என்றார் சிவராமையர். 

“எங்க அண்ணா பேத்திக்கு ஊர் ஊராக அலைஞ்சிண்டிருக் கேனே நான்! உங்க மருமான்னா, நல்ல குடும்பம், பார்க்க லஷணமாயிருக்கான். ஜாதகம் கொடுங்கோ” என்றார் சீனுவாசையர், 

“தேடிப் பார்த்துத் தரேன்.” 

“எங்கே தேடப்போறேளோ?” என்றான் மேஜர் மூர்த்தி கேலியாக. அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவன் சாத்தனூர் வந்து 16 மணி நேரத்திற்குள்ளாக அவன் கல்யாணத்தைப்பற்றி இதுவரையில் இருபது தடவையாவது பிரஸ்தாபம் வந்திருக்கும்போல் இருந்தது! சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திற்குள் வந்திருந்தவர்கள் எல்லோருக்குமே அந்தத் தெருவார் கல்யாணம் செய்து வைத்துவிட்டுத் தான் மற்றக் காரியங்களைப் பார்ப்பார்களோ? 

ஆனால் ஒருகரை சீனுவாசையர் அவனை லட்சியமே செய்ய வில்லை. அவர் அவனுடைய மாமாவைக் கேட்டுக்கொண்டிருந்தார், “என்ன எதிர் ஜாமீன் கேட்பார்கள்?” என்று. 

“அவனுக்கு எதிர் ஜாமீன் கேட்க யார் இருக்கிறார்கள்? அவன் இஷ்டம்” என்றார் சிவராமையர். ஒருகரை ஐயர் இந்த விஷயத்தை விடாமல் கிண்டிக் கேட்டுக்கொண்டிருந்தது அவருக்கு ஓரளவு சிரமமாக இருந்தது என்பது தெளிவாகவே தெரிந்தது. 

“தை மாசத்திலே ஒரு முகூர்த்தத்தை ஏற்பாடு பண்ணிப் புடுவோம்னா!” என்று கூறிக்கொண்டே ஒருகரை ஐயர் அங்கிருந்து நகர்ந்தார். படி இறங்கும்போதுதான் அவருக்குப் புதிதாக அறிமுகம் ஆனவரிடம் விடை பெற்றுக்கொள்ளவில்லை என்பது ஞாபகம் வந்ததுபோலும்! கைகூப்பிக் கும்பிட்டுவிட்டு, “வரேன் ஸார்! மத்தியானமா ஆத்துப்பக்கம் வாங்களேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். 

அவர் போனபிறகு சிவராமையர் சொன்னார்: “அவாத்திலே பிள்ளை குட்டிகள் ஏராளமா இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் கல்யாணம் ஆறது அரும்பாடு. தெருவிலே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளைத் தன் மாட்டுப்பெண் என்பார்; எந்தப் பிள்ளையைப் பார்த்தாலும் எங்காத்து மாப்பிள்ளை என்பார் அவர்.” 

அக்கிரஹாரத்திலே சந்தடி அடங்கிக் கொண்டிருந்தது என்பதைக் கவனித்தான் மேஜர் மூர்த்தி. கோலிக்குண்டு ஆடிக் கொண்டிருந்தவர்கள் கூட ஓய்ந்துவிட்டார்கள். பழையது சாப்பிடுவது என்கிற பழைய பழக்கம்’ இன்னும் கிராமத்திலே ஆட்சி செலுத்தியதனால் அதற்கு இதுதான் சமயமாக இருக்க வேண்டும். இரண்டொரு கூடைக்காரிகள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, “தயிரோ தயிர்!” என்று கூவினாள். இன்னொருத்தி கறிகாய்காரி. ஒரு மலைப் பாம்பைத் தோளின்மேல் போட்டுக் கொண்டு ஒரு தாட்டியான பிச்சைக்காரன் ஒவ்வொரு வீட்டுக் குறடாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தான். மலைப்பாம்பு அவனைப்போலப் பஞ்சம் அறியாத ஜந்துவாக, வழவழவென்று பிரமாண்டமானதாக இருந்தது என்பதைக் கவனித்தான் மேஜர் மூர்த்தி. 

“இவன் எதற்காகப் பிச்சைக்காரனாக வேஷம் போட வேண்டும்?” என்று தன் மாமாவைக் கேட்டான் மேஜர் மூர்த்தி. 

“வேலை செய்ய மனசில்லாத சோம்பல்தான் காரணமாக இருக்க வேண்டும்” என்றார் சிவராம ஐயர். 

“இவங்களை எல்லாம் கட்டாயப்படுத்தி வேலை வாங்க வேண்டும்.” 

“அது சுலபமில்லை.” 

“இவங்களுக்குப் பிச்சை போடுவதை நிறுத்திவிட வேண்டும்” என்றான் மேஜர் மூர்த்தி. 

“சுலபத்தில் யாரும் போடுவதில்லை. அவனுக்கு எப்படியோ கல்லிடிமங்கத்தனத்தில் ஒரு பிடி சோறு, தேவைக்கு அதிகமாகவே கிடைத்து விடுகிறது. அவன் ஏன் வேலை செய்யப் போகிறான்?” 

வீட்டுக் கொல்லையிலிருந்து, “சாமி! சாமி!” என்று பறையன் குரல் கொடுத்தான். “போய் அவனுக்கு வேலை சொல்லிவிட்டு வரேன்” என்று உள்ளே போனார் சிவராமையர். 

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருந்ததுபோலவே ஒவ்வொரு ஊருக்கும் – ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒவ்வொரு தெருவுக்குமே – தனி ஆத்மா, தனி உயிர், தனி உள்ளம், தனி வாழ்வு இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளவேண்டிய விஷயம். 

திரியும் நன்றாக இருந்து, எண்ணெயின் தரமும் சரியாக இருந்தால் ஒவ்வொரு தீபமும் சரியாக ஒளி தந்துவிடுந்தான். தனித்தனியாகப் பெரிய விஷயங்கள் இல்லை, இவை இரண்டும்; எனினும் இரண்டும் சரியாக அமைவது சில இடங்களில், சில சமயங்களில்தாம் என்பது மனிதர்கள் கண்கூடாகக் காண்கிற உண்மை. 

தெரு என்பது வெறும் தீபந்தான். திரியும் எண்ணெயும் அதிலுள்ள மனிதர்கள். 

கிராமத்து வாழ்விலே நம்பிக்கை இழந்துவிட்டார்கள். ஜனங்கள் இன்று. அதற்குக் காரணம் என்று எதைச் சொன்னால் என்ன? உண்மை ஒன்று நிலைத்துவிட்டது. பட்டணத்து வாழ்வு மனிதர் மனத்தை மயக்கி விட்டது. உப்புச் சப்பில்லாத வாழ்க்கைதான் அது; அவசரத்திலே, தின்கிற சோறு கையில் ஒட்டாது; ஓட்டம் பிடிக்கிற அவசர வாழ்க்கைதான் அது. அந்த அவசரந்தான் மனசை மயக்கியதோ? யார் சொல்ல முடியும்? தெய்வ அமைதி அலுத்துவிட்ட சமயத்தில் ராக்ஷஸ அவசரம் அலுக்காது இருக்க இடம் இருக்கும் அல்லவா? 

ஒருவர்பின் ஒருவராக. குடும்பத்தலைவர்களும் அவர்களைப் பின்பற்றிக் குடும்பத்தவர்களும் கிராமத்திலிருந்து நான்கு தலை முறைகளாகவே நகர்ந்துகொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உண்மை. சிவராமையர் சொன்னார்: ‘சில வருஷங்களுக்கு முன் வீட்டுக்கொரு நாதியற்ற விதவையைத் தவிர அந்தத் தெருவிலே யாரும் இருக்கவில்லை’ என்று. நல்ல வேளையாக யுத்தம் வந்து பட்டணங்களில் நெருக்கடி ஏற்பட்டது; இல்லாவிட்டால் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே இப்பொழுதிருக்கும் நாலைந்து பாழ்மனைகளுக்குப் பதிலாக இருபது முப்பது பாழ்மனைகளாவது இருந்திருக்கும். 

மேஜர் மூர்த்தி மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போதே தெரிந்தது. வீடுகளில் பாதிக்கு மேல் புதுக்கிச் செப்பனிடப் பட்டவைதாம். ஒரு சில, பூரணமாகப் புதுப்பிக்கப்பட்டிருந்தன; பல வீடுகள், அதிகச் செல வில்லாமல், பழசுக்கு மேல் ஒட்டுப் போட்டு, ஒட்டுப் போட்டுப் புதுப்பிக்கப் பட்டிருந்தன. 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே ஓர் அமைதி குடி கொண்டிருந்தது; ஏமாற்றுதலான அமைதி என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அமைதி அந்தத் தெருவாசிகள் யாரிடமும் இருந்ததாகத் தெரியவில்லை. தெருவின் புறத்தோற்றத்திலே அமைதி இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்த அமைதி மனிதர்களின் அகத்திலே எதிரொலி செய்யவில்லை. அந்நியனாக வந்து அதிக நேரம் அங்கே இன்னும் தங்காத மேஜர் மூர்த்திக்கே அது புரிந்தது. 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரம் எப்பொழுதாவது ஒரு காலத்தில் தபோவனமாக இருந்திருக்கலாம். இப்போது அது தபோவனம் இல்லை. மனிதர்கள் என்று சொல்லிக் கொண்ட பல்வேறு தரப்பட்ட மிருகங்கள் வசித்துவந்த தெருதான். மற்ற ஊர்த் தெருக்களுக்கும் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்துக்கும் வெளித்தோற்றத்திலே வித்தியாசம் நிறையவேதான் இருந்தது. 

தெருவின் வசதிகளிலே, தோற்றத்திலே குறைவில்லை. ஆனால் தெரு மனிதர்களிடையே வேறு என்ன இருந்ததோ இல்லையோ, தபோபலம் மட்டும் இருந்ததாகத் தெரியவில்லை. 

தெருவில் முப்பது வீடுகள் ஒழுங்காக இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் ஆண், பெண், குழந்தை என்று ஒரு குடும்பம் எப்படியோ வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தது. எப்படி என்று அறிந்துகொள்ள விரும்பினான் மேஜர் மூர்த்தி. 

இ.தே. ரா. பிரச்னைகளும் அகில இந்தியப் பிரச்னைகளும் இப்போது அவன் மனசை விட்டு மாயமாக மறைந்துவிட்டன. அவை எல்லாம் உயிரற்ற, அவசியமே அற்ற பிரச்னைகளாகத் தோன்றின இப்பொழுது. காலைவேளையில் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில், தான் என்கிற தனிநிலையில், தன்னலத்திற்காக அவன் இப்போது ஒரு பிரச்னையையும் எதிர் நோக்கவில்லை. தனக்கும் இந்தச் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்துக்கும் எந்த மாதிரியான சம்பந்தம், எப்படி ஏற்படக் கூடும் என்று அவன் சிந்தித்துப் பார்க்க விரும்பவில்லை. ஏதாவது சம்பந்தம் ஏற்படும், எப்படியோ ஏற்படும். ஏற்படத்தான் போகிறது என்று அவன் மனசில் ஏதோ ஒன்று கூறியது. 

காலைவேளையில் என்றுமே அவன் மனம் இப்படிக் குழம்பியதில்லை. 

ஐரோப்பாவில் கிழக்கு முனையிலும் மேற்கு முனையிலும் தவறான கட்சியில் யுத்தத்தில் ஈடுபட்ட மிகவும் முக்கியமான தவிர்க்க முடியாத நெருக்கடியான பல சந்தர்ப்பங்களிலுங்கூட அவனுக்கு இந்த மாதிரி உணர்ச்சி ஏற்பட்டு, மனசைக் குழப்பியது கிடையாது. தன் விதியை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டதில்லை. இப்போது இந்த அமைதியான தெருவிலே, அப்படிப்பட்ட உணர்ச்சி உண்டாயிற்று அவனுக்கு. அசாதாரணமான அநுபவங்களில் பழகிய அவன், இந்தச் சாதாரண அநுபவத்தை, தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தில் ஒரு சிறிய அக்கிரஹாரத்திற்கு, தன் மாமா வீட்டிற்கு வந்ததை ஒரு பெரிய, அசாதாரணமான அநுபவமாக ஏன் எண்ண வேண்டும் என்பது தான் அவனுக்குத் தெரியவில்லை. மிகமிகச் சாதாரணமான இந்த அநுபவம் ஏன் விதியின் செயலாக அவனுக்குப் பட வேண்டும் ? ஏன் தன் விஸ்தாரமான வாழ்க்கையிலே தவிர்க்க முடியாத செய்கையாகப் பட வேண்டும் அவனுக்கு? 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தின் அழைப்பை அவன் அப்பொழுது ஏற்றுக்கொண்டதே விதியின் செய்கைதானே? தத்துவ ரீதியாக இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் பற்றிச் சிந்திக்கப் பழகாதவன் மேஜர் மூர்த்தி. அநுபவபூர்வமாக, அதுவும் சொந்த அநுபவமூலமே, தத்துவங்களையும் லக்ஷ்யங்களையும் அறியப் பழகியவன் அவன். 

தன் வாழ்க்கையின் மற்ற எல்லா நாட்களையும்விட இந்த நாள் அதிக அர்த்தம் வாய்ந்தது என்று அவன் மனசில் தோன்றிய எண்ணத்துக்கு ஆதாரந்தான் என்ன? 

பலம் பொருந்திய உள்ளம் பலஹீனமடைந்து விட்டதென்று அர்த்தமா? அல்லது எல்லா மனிதர்களுக்குமே அவர்கள் வாழ்வில் இந்த மாதிரி எண்ணம் என்றாவது ஒருநாள் தோன்றுவதுண்டா? 

மேஜர் மூர்த்தி தொழிற்கல்வி தவிர வேறு எதையும் அவ்வள வாகப் படித்தறியாதவன். மிகவும் சுலபமாகப் பதில் சொல்லக்கூடிய பல பிரச்னைகளுக்குங்கூட அவனால் என்றுமே பதில் சொல்ல முடிந்தது கிடையாது. 

ஒவ்வொரு மனிதனும் வாழுகிற ஒவ்வொரு நாளுமே அவன் வனுக்கு, அவனவன் அளவில், ஒவ்வொரு விதத்தில் முக்கியமான நாட்கள் தாம். இந்த உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதன் ஒவ்வொரு நாளுமே வெற்றிகரமான வாழ்க்கை நடத்த முடிகிறது; எவ்வளவு வெற்றிகரமாக, அந்த நாளின், அந்த நாழிகையின், அந்த விநாடியின் செயலிலே ஈடுபடுகிறான் என்பதைப் பொறுத்ததுதான் வாழ்க்கையில் வெற்றி. 

இன்று பொழுது விடிந்து இன்னும் நாலு நாழிகை நேரம் ஆகவில்லை. இரவு விழ இருபத்தைந்து நாழிகை நேரத்துக்குமேல் இருக்கிறது. அதற்குப் பிறகு தூக்கம் வர, நினைவு மறக்க ஒரு பத்து நாழிகையோ பதினைந்து நாழிகையோ..? 

விழித்தெழுந்தால் வேறு ஒரு நாள்! 

விழித்தெழாவிட்டால், அது எந்தத் தேசத்தில் எந்தக் காலத்தில் எந்த நாள் என்று இன்னும் யாரும் கண்டு சொல்லிவிடவில்லை. 

மேஜர் மூர்த்தி இஷ்டப்பட்டிருந்தானானால் அந்த நாளை அவன் வேறு ஓர் ஊரில் கடத்தியிருக்கலாம். 

அக்கிரஹாரத்திலுள்ள மற்றவர்களைப்போல் அவன். ஊரிலே தெருவிலே வேரோடியிருக்கவில்லை. அவன் அந்நியன்தான் அங்கே. ஒரு இரவுத் தூக்கமும், நாலு நாழிகைநேரச் சிந்தனைகளும் அவனை அத் தெருவான் ஆக்கிவிட முடியாது. 

உலகிலே எங்கும், எந்தத் தெருவிலும், எந்த ஊரிலும் அந்நியனாக இருக்கவே பிறந்தவன் அவன். 

அப்படி இருப்பது நல்லதா, கெட்டதா என்று தீர்மானிக்க முயன்றான் அவன். 

மனிதன் என்று சொல்லிக் கொள்பவன் எங்கேயாவது ஒரு ஊரில், பரந்த பூமியில் ஒரு குறுகிய இடத்தில், வேரோடி நிற்பதுதான் நல்லது. அவன் உலகில் நிலைக்க, அவன் தேசமும் குலமும் குடும்பமும் உதவுகின்றன. அதில்லாவிட்டால் ஒருவனை மனிதன் என்று ஒப்புக் கொள்வதே சிரமமாகிவிடும். மனிதனுடைய மனிதத்தன்மை வளருவதே அவன் ஓரிடத்தில் வேரோடி நிலைப்பதனால்தான் என்று சொல்லவேண்டும். 

அம்மாமி, கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி மேஜர் மூர்த்தியை வற்புறுத்தினாள். அவன் சாத்தனூர் வந்து சேர்ந்ததும் சேராததுமாக, முதல் இரண்டொரு வாக்கியங்கள் அவனுடன் பேசுவதற்குள்ளாகவே, அவள் வாழ்க்கைப் பிரச்னையின் அடிப்படையைத் தொட்டுவிட்டாள். அவளைப் பற்றிய வரையில் தத்துவ விசாரம் எல்லாம் தேவையில்லை. தலைமுறை தத்துவமாக வந்திருக்கிற மனுஷ்ய தத்துவம், குடும்ப தத்துவம், உலக தத்துவம். வாழ்க்கைத் தத்துவம் இவைதாம் அவளுக்குத் தெரியும். 

ஊரெல்லாம் சுற்றியலைந்த அவனுக்குத் தெரியாத இந்தத் தத்துவம் அவன் மாமிக்குத் தெரிந்துவிட்டதே! 

வந்தவுடன் கல்யாணத்தைப்பற்றிக் கேட்டாளே! 

ஆனால் கல்யாணம் செய்துகொள்ளவா சாத்தனூருக்குத் தன் மாமா வீட்டுக்கு வந்திருந்தான் மேஜர் மூர்த்தி? 

அத்தியாயம்-10 

சாத்தனூர் கிராமம் என்கிற தத்துவம் மிகவும் பழமையானது; நிரந்தரமானது. 

சாத்தனூர் கிராமம் என்கிற தத்துவம் மாறுவதற்கு இடமே கிடையாது. 

மனித தத்துவமும் குடும்ப தத்துவமும் அதன் அடிப்படைகள். ஒரு துளி ஜலத்திலே உலகம் பூராவையுமே காண்பவன் ஞானி. அதே போல் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே பிரபஞ்சத்தின் போக்குப் பூராவையும் கண்டுவிடலாம் என்று தோன்றியது மேஜர் மூர்த்திக்கு. 

சாத்தனூர் கிராமம் புறத் தோற்றத்தில்கூட மாறுவது அவ்வளவாகச் சாத்தியமில்லை. 

எரிமலை அருகில் இல்லை, நெருப்புக் கக்கி அதைச் சாம்பலாக்கி விட. சாத்தனூரைக் கோயில்கள் காவல் காத்து நின்றன தெய்வங்கள் தாமாக விரும்பிக் குடியேறின கோயில்கள். பூமா தேவி ஆடாமல் அசையாமல், ஆதிசேஷன் தோன்றாமல் பூகம்பம் வந்துவிடாமல் கனம் தந்து காவல் காத்து நின்றன. 

சாத்தனூருக்குப் பகைவர்கள் இல்லை, பரந்த பூமியிலே. சாத்தனூர், புண்ணிய பூமிதான். சந்தேகம் என்ன? அதன் பெயரைக் கேட்டவர்கள் இவ்வுலகில் மிகவும் சொல்பப்பேர்தானே இருக்க முடியும்? 

மகா யுத்தங்களும், மகாமகா யுத்தங்களும் சாத்தனூருக்குப் பக்கத்தில் வந்தது கூட இல்லை. 

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது மகாயுத்தத்தின் சுரு மேகங்கள் இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் கவிந்து கொண்டிருந்த பொழுதுகூட, சாத்தனூரில் விலைவாசிகள் தவிர, வேறு எதுவும் பாதிக்கப் படவில்லை. 

மேகங்களுக்கும் மேலிருந்து பதுங்கிப் பாய்ந்து அழிக்க விரும்பும் பகைவன், நிர்மலமான சாத்தனூர் வானத்திலே தவறியுங்கூடத் தோன்றிவிட வில்லை. எந்தப் பகைவனின் கவனத்தையும் கவராத புண்ணிய பூமிதான் சாத்தனூர். 

கடல் எங்கேயோ கிடந்தது. கடல் பொங்கினாலுங்கூட இடை யில் உள்ளதை எல்லாம் அழித்துக் கொண்டுதான் சாத்தனூரை எட்ட முடியும். 

சாத்தனூருக்கு எதுவும் நேர்ந்துவிடாது; சாத்தனூரைத் தேடி வந்திருந்த தனக்குத்தான் ஏதாவது நேரவேண்டும். 

இருபது நாழிகை நேரத்தில், ஒரு பகல்வேளைப் பொழுது முடிவதற்குள், ஏதோ பிரமாதமாக நடக்கப்போகிறது என்கிற எண்ணம் எழுந்தது மேஜர் மூர்த்தியின் மனசிலே. 

இந்தச் சிந்தனைக்கு ஆதாரம் ஏது? 

தேவையா என்ன? 

மனிதனின் வாழ்வில் நடப்பதில் முக்கியமானதெல்லாம் தேவையே இல்லாமல் நடப்பதுதான். 

தன்னை உந்தித் தள்ளிக்கொண்டு வந்து, சாத்தனூர் சர்வ மானிய அக்கிரகாரத்தில் தன் மாமா வீட்டில் கொண்டுவந்து நிறுத்திய விதி, தன்னை ஒரு பலமான, ஆழ்ந்த அநுபவத்துக்கு இலக்காக்கிச் சோதனை செய்யப் போகிறது என்று தோன்றியது மேஜர் மூர்த்திக்கு. 

அன்று பொழுது அஸ்தமிப்பதற்குள் பிரமாதமாக என்ன நடந்து விட முடியும். அந்தக் கிராமத்தில்? 

பிரமாதமாக ஏதோ நடக்கப்போகிறது என்றும், அதை வரவேற்க தான் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவன் உள்ளத்திலே ஒரு நினைப்புத் தோன்றி, விசுவரூபம் எடுத்து, பேயாட்டம் ஆடியது. எதற்காகவோ அங்கே திண்ணையில் உட்கார்ந்தபடியே காத்திருப்பதுபோலப்பட்டது, மேஜர் மூர்த்திக்கு. 

சாத்தனூர் வரும் வரையில் மேஜர் மூர்த்தியின் மனசில் அப்படியான களங்கமும் கலக்கமும் இல்லை. ஆனால் வந்து, இரவு தேவலை என்கிற உணர்ச்சி அவனுள்ளே மேலோங்கி நின்றது. ஆனால் பிராயச்சித்தம் உண்டா? செய்ய முடியுமா? – என்பதுதான் பிரச்னை. இராதுபோல் இருக்கிறதே என்று தோன்றியது. 

மாமி கடிந்துகொண்டாள், செல்லமாக. “சீச்சீ! இப்படி எல்லாம் அசட்டுப்பிசட்டென்று உளறாதே. ஒரு கை அடித்துச் சப்தம் உண்டாகி விடாது; தண்ணீரைக் கையால் விலக்கினால் விலகிப் போய்விடாது. நீ சின்னப் பையன்; விஷயம் தெரியாமல் அலட்சியமாக இருந்துவிட்டாய் என்பதற்காக நாங்களும் – விஷயம் தெரிந்தவர்களும் -அலட்சியமாக இருந்துவிட முடியுமா?” 

“நான் மேல்படிப்புப் படிக்க ஜர்மனிதான் நல்ல இடம் என்று தேடிக்கொண்டு போனது பிசகு, மாமி. இங்கே சாத்தனூருக்கு வந்திருக்க வேண்டும்” என்றான் மூர்த்தி, 

“நீ கெட்டிக்காரன்தாண்டா?” என்றார் சிவராமையர். இந்த விஷயங்களை இவ்வளவு சின்ன வயசிலேயே அறிந்து கொண்டு விட்டாயே? அது பெரிசுதான். எனக்குக் குட்டிச் சுவருக்கு ஆகிற வயசு ஆகிறது. இன்னும் உங்க மாமி சொல்லுகிற விஷயங்களில் பாதிக்குமேல் புரிவதில்லை. நான் என்ன செய்யறது?” என்று அவர் குறைப்பட்டுக் கொண்டார். 

வேடிக்கையாக இருந்தது மூர்த்திக்கு. அவன் சொன்னான்: “இத்தனை நாள் மாமியுடன் வாழ்ந்து நீங்களும் ஞானம் பெற்றிருப்பீர்கள் என்றுதான் நினைத்தேன்” என்று. அவன் இதைக் கேலியாகச் சொல்லவில்லை. உண்மையிலேயே மாமியின் வார்த்தை ஒவ்வொன்றிலும் தெரிந்த அநுபவ ஆழம் அவனை வியப்புறத்தான செய்தது. 

“பொறு பொறு” என்றார் சிவராமையர். “மாமியினுடைய ஞானம் பூராவும் உனக்கு இப்போது- அதற்குள்ளாகவே, தெரிய வராது. அவளிடம் பாடம் கற்றுக்கொள்ளப் பெரிய பெரிய மகான்களெல்லாம் வந்து போவதில் தவறில்லை என்றுதான் எனக்குச் சிற்சில சமயம் தோன்றும்” 

மாமி குறுக்கிட்டாள். ஆத்திரத்துடன், “நன்னாப் பரியாசம் பண்றேள், மாமாவும் மருமானுமாகச் சேர்ந்துண்டு! நான்தான் அகப்பட்டேனா, உங்கள் கேலிக்கு? மணி எட்டாயிடுத்து. போய், சொன்ன சாமானை எல்லாம் வாங்கிண்டு வாங்கோ. பதினொரு மணிக்குள் இலை போட வேண்டாமா?” என்றாள். 

“இதுவும் அவளுடைய அறிவுப் பொக்கிஷத்தில் தோன்றுவது தான்” என்றார் சிவராமையர். 

“போறும்; அசடு இன்னும் வழியாதங்கோ. மருமான், பட்டணத்துக்குப் போய், நாட்டுப்புறத்து மாமா மாமியைக் கேலி பண்ணப் போறான்” என்றாள் மாமி. 

கூடைக்காரி ஒருத்தி ஆளோடி ஏறி, “கீரையம்மா!” என்று கூவிக் கொண்டு வந்தாள். அந்தக் கூடைக்காரியைப் போலவே அவள் கூடையில் இருந்த கீரையும் ‘தள தள’ வென்று பசுமையாக இருந்தது. பல்லெல்லாம் தெரியச் சிரித்துக் கன்னத்தில் குழி விழ அவள் கடைக்கண்ணால் சிவராமையரையும் அவருடன் நின்ற மூர்த்தியையும் பார்த்துக்கொண்டே, “மாப்பிள்ளை ஐயா வந்திருக்காங்களா?” என்று விசாரித்தாள். 

சிவராமையர் சிரித்தார். மேல்நாட்டுப் பெண்கள் பலருடன், சமமாகக் கூச்சமில்லாமல் பழகிய மேஜர் மூர்த்திக்கு வெட்கமாக இருந்தது. கிராமத்தில் பலருக்குமே இந்த ஆண் பெண் உறவு விஷயத்தில், கல்யாணம் குடும்பம் என்கிற உறவில் களங்கமற்ற சிந்தனை இருந்தது. மேஜர் மூர்த்திக்கும் அவன்போல் நாகரிகமடைந்துவிட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண் பெண் உறவுபற்றி மனசில் களங்கம் ஏராளமாகத்தான் இருந்தது. 

மூர்த்தியின் மாமி கூடைக்காரியின் கேள்விக்கு நிஷ்களங்க மாகவே பதில் அளித்தாள். “மாப்பிள்ளை ஆகவேணும்டி யம்மா; மாப்பிள்ளையாக வேணும். நல்ல கீரையாக் கொடு” என்று காரியத்தில் கண்ணாகக் கேட்டாள். 

மூர்த்தி வாய்விட்டுச் சிரித்துவிட்டான். 

“நம்ம மங்களத்துக்கு நல்ல ஜோடிங்கம்மா” என்றாள் கூடைக்காரி.  

“நீ முடிச்சு வச்சுட்டயோல்லியோ, சரி; கத்திரிக்காய் பச்சை மிளகாய் இருந்தால் கொடு” என்றாள் மாமி. 

அதுவும் கொடுத்துவிட்டு, மூர்த்தியையும் சிவராமையரையும் கண்ணால் ஒரு வீச்சு வீசிவிட்டு, கூடையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு ஒய்யாரமாக ஒரு கையை வீசிக் கொண்டு நடந்தாள் கூடைக்காரி. 

“பலே கைகாரி அவள்!” என்றார் சிவராமையர். 

“யாரு? கோவிந்தம்மாள்தானே? அடேயப்பா!” என்றாள் மாமி. 

“கீரை பார்க்கறத்துக்கே குளுமையாக இருக்கு. இந்த மாதிரிக் கீரையை நான் பார்த்தே பலநாள் ஆகிவிட்டது” என்றான் மூர்த்தி. 

“அரிசலாற்றுக்கும் காவேரிக்கும் இடையே உள்ள மாங்குடிப் படுகையில் பயிராகிற கறிகாய் ருசியாக இருக்கும். நன்றாகவும் இருக்கும்” என்றார் சிவராமையர். 

“அதுவும் ஒங்க மாமாவுக்குக் கோவிந்தம்மாள் கொணர்ந்து தருகிற காய்கறி, கீரை எல்லாம் தனி ருசியாகத்தாண்டா கிட்டா இருக்கும்.” என்றாள் மாமி. 

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் மேஜர் மூர்த்தி. மாமியின் கபடமற்ற முகத்தைப் பார்த்த பிறகுதான், அது வெறும் கேலி என்று புரிந்தது அவனுக்கு. 

அத்தியாயம்-11 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்து வாழ்க்கை என்னவோ அந்தக் கூடைக்காரி கோவிந்தம்மாளைப்போலவே. அவளுடைய கூடைக் கீரையைப் போலவே, பசுமையாகவும் இளமையாகவும் மனசுக்குச் சுகம் தருவ தாகவுந்தான் இருந்தது என்று எண்ணினான் மூர்த்தி. 

காலை இளம் வெயில் இப்போது இளமை மாறிச் சுள்ளென்று தைக்கத் தொடங்கிக்கொண்டிருந்தது. நீள நிழல்கள் சுருங்கிக் கொண்டிருந்தன. 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்திலே ஜன நடமாட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஊரில் உயிர் இருப்பதை அறிவிக்கப் போதுமான ஜன நடமாட்டமே தவிர, அது ஜனக்கூட்டம் அல்ல. பட்டணத்திலும் டெல்லியிலும் பம்பாயிலும் கல்கத்தாவிலும், யுத்தகாலத்தில் ஜப்பானிலும், போர் முனையிலும் ஜனக்கூட்டத்தை அறிந்திருந்த மேஜர் மூர்த்திக்கு இந்த அவசரமற்ற ஜன நடமாட்டம் திருப்தியளிப்பதாக இருந்தது. 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தில் அப்போது குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்த ஆண், பெண், குழந்தை இவர்களுக்கு எங்கும் போய்ச் சேர எவ்வித அவசரமும் கிடையாது. போகும் வழியில் ஒவ்வொருவருடனும் நின்று சாவகாசமாகப் பேசப் பொழுதிருந்தது. உட்கார்ந்து பேசக்கூடப் பொழுது இருந்தது. 

பொழுது விடிவதும், ஸ்நான பானாதிகளும், உணவும் ஓய்வும், பொழுது அஸ்தமிப்பதும் உறங்குவதும் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில் மிகவும் சாவதானமாக நடந்த காரியங்கள். உலகம் வேறு இடங்களில் வெகு துரிதமாக முன்னேறிக்கொண்டிருக்கலாம். பின்னேறிக் கொண்டிருக்கலாம்; அல்லது நின்ற இடத்திலேயே நிலைக்க அவசரம் அவசரமாக சிவராமையர் வீட்டில் வெகு சுகமாக, ‘ஒரு லட்சியத்தை நோக்கி’ வாழ்வு கம்பீரகதி போட்டுக்கொண்டிருந்தது. 

லட்சியம் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய லட்சியம். அதனால் தான் அதை நோக்கிச் சாவதானமாக நடப்பது சாத்தியமாக இருந்தது. 

உலகத்தில் மனிதன் தோன்றிய நாள் முதலாக இதுதான் மனிதனுடைய லட்சியம். 

இதை வேறு தினுசாகச் சொல்லிப் பார்த்துக்கொள்வது சரி என்று பட்டது மேஜர் மூர்த்திக்கு. 

குடும்பத்தை லட்சியமாகக் கொண்ட இடத்தில்தான் மனித குலத்தின் உயர்ந்த கிளைகள் தோன்றியிருக்கின்றன. அந்தக் கிளைகளில் தான் மகோன்னதமான தனி மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். 

மிகவும் எளிய விஷயம். இது புரியத் தனக்கு இத்தனை நாள் ஆயிற்றே என்று இருந்தது மூர்த்திக்கு. 

சுமார் இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முன்னதாகவே இரண்டொரு தீர்க்கதரிசிகள் உணர்ந்துகொள்ளாமல் இல்லை. சீனத்தின் குருக்கள், “எங்கே தகப்பன் தகப்பனாக இருக்கிறானோ, பிள்ளை பிள்ளையாக இருக்கிறானோ, அண்ணன் அண்ணனாகவும், தம்பி தம்பியாகவும் இருக்கிறார்களோ, எங்கே புருஷனும் மனைவியும் புருஷனும் மனைவியுமாக இருக்கிறார்களோ, அங்கே அரசனும் அரசனாக இருப்பான்; மந்திரியும் மந்திரியாக இருப்பான் என்று கூறி இருக்கிறார்கள். 

உண்மை இதுதான். 

யூதர்களும் ஹிந்துக்களும் சீனர்களும் உலகத்தில் வேறு எந்த ஜாதியினரையும்விட அதிக நாட்கள் நிலைத்து விட்டார்கள். 

ஏன் என்று கேட்டு, ‘இந்தக் குடும்ப உறவு’ என்கிற முடிவுக்கு வர எந்த ஆராய்ச்சியாளனுக்கும் இன்னும் தைரியம் வரவில்லையே! ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள், இன்றைய விஞ்ஞான அதிகாரிகளின் முடிவுகள், மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசங்களை, வேற்றுமைகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றனவே தவிர வேறு அல்ல. 

மனிதனுடன் மனிதனை நெருக்கமாகக் கொண்டுவர மேலை நாடுகளில் இன்று எவ்விதமான முயற்சியும் நடைபெற்று வரவில்லை. உண்மையை வெகுநாட்களுக்கு முன்னரே அறிந்து கொண்டு வாழ்வு நடத்திய கீழைநாட்டு மக்களுங்கூட, இன்றைய நாகரிக மோகத்துக்கு அடிமைப்பட்டு உண்மையை மறந்து, அழிவு தேடி அல்லல்படுகிறார்கள் என்று எண்ணினான் மேஜர் மூர்த்தி. 

என்ன அவசரம்? என்ன அவசரம்? 

யாருக்கும் தெரியவில்லை. 

இயற்கையும் அண்டை அயலிலுள்ள மனிதனும் சேர்ந்து செய்த சதிக்குப் பின் சதி என்கிற சரித்திர உண்மைகளை எல்லாம் மீறிச் சீனாவால் நிற்க முடிகிறது. 

மனிதத் தன்மையை இழக்காமல் சரித்திர சோதனைகளுக் கெல்லாம் ஈடு கொடுத்துக்கொண்டு ஓர் இந்தியா நிற்கிறது. நூற்றுக் கணக்கான மாறுதல்களை, உருவம் அழியாமல் ஏற்றுக் கொண்டு மீள்கிறது. 

யூத குலம் நாடு நாடாக வீடு தேடி அலைந்தும், கங்கணம் கட்டிக் கொண்டு பிறர் செய்கிற துன்பங்களை எல்லாம் சகித்துக் கொண்டும் சரித்திரத்திலே சிறந்த இடம் பெறுகிறது. 

இடையில் தோன்றி நிமிர்ந்து நின்று கச்சை கட்டிக் கொக்கரித்த எத்தனையோ தேசங்கள், பிரம்ம வருஷத்தில் ஒரு விநாடி இரண்டு விநாடி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, உலகைப் படாத பாடெல்லாம் படுத்தி விட்டு மறைந்தே விட்டன. சரித்திர பாடத்தில் தவிர வேறு எங்கும் அவை இன்று காணப்பட மாட்டா! 

அவை அழிவைத் தேடி அவசரப்பட்டனபோலும்! அழிந்து விட்டன. 

சீஸர்களும், நெப்போலியர்களும், ஹிட்லர்களும் வகுத்த வழிகள் அவசர வழிகள் என்று எண்ணினான மேஜர் மூர்த்தி. அவர்களைப் பற்றி உலகம் படித்தது; அவர்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதே தவிர, அவர்களுடைய சரித்திரத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள யாரும் விரும்பியதாகத் தெரியவில்லை. 

யாரும் என்று சொல்வது பிசகுதான். 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகார வாசிகளை, அவர்களுடைய வாழ்க்கை வழிகளை யாரும் அழித்துவிட முடியாது. ஹிட்லரும் சரி, ஹிட்லருக்குமுன் பிரிட்டீஷ் இந்திய சர்வாதிகாரிகளும் சரி, அதற்கும் முந்திய இஸ்லாமிய ஒளரங்கசீப்புகளும் சரி, சாத்தனூர் சர்வமானிய அக் கிரகாரவாசிகளின் வாழ்க்கை வழிகளைத் தொடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 

மனிதன் – சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்திலாவது மனிதனாக வாழ்வதை அவர்களால் தடை செய்ய முடியவில்லை. 

பிரிட்டீஷாரின் அவசரச் சட்டங்கள் கூடப் பலிக்கத்தான் இல்லை என்று சிந்தனைப் பெருமிதத்துடன் நினைத்தான் மேஜர் மூர்த்தி. மனிதன் மனிதனாக வாழ முயல்வதைப பிரிட்டீஷார்கூட அதிகாரபூர்வமாகத் தடை செய்துவிட முடியவில்லை. 

ஜப்பானை ஜெயிக்க, ஜர்மனியைத் தோற்கச் செய்து அழிக்க, பிரிட்டீஷாருக்கு அதி அவசரந்தான். ஆனால் அவர்களுடைய அவசரம் சாத்தனூர்வாசிகளுக்கு அவ்வளவாகப் புரியக்கூட இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

“சாத்தனூர் கிராமத்திலிருந்து யுத்தத்திற்கு எத்தனை பேர் சென்றிருப்பார்கள்?” என்று மேஜர் மூர்த்தி சிவராமையரைக் கேட்டான். 

“மூன்று நாலுபேர் நேரடியாக யுத்தகளத்துக்குச் சென்றிருந்தால் அதிகம். மற்றப்படி மற்றவர்களெல்லாம், மறைமுகமாக யுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்தான்” என்றார் சிவராமையர். 

“மறைமுகமாக என்றால்…?” 

“யுத்தகாலத்தில் சாதாரண குமாஸ்தாக்களுக்குக்கூடக் கிராக்கி ஏறிவிடுகிறதே! அந்தக் கிராக்கியைப் பூராவும் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான் எல்லாக் குடும்பத்தாரும். குடும்பத்துக்கு ஒரு குமாஸ்தாவுக்குக் குறையாது. இரண்டொரு அதிருஷ்டக் குடும்பங்களில் ஏழெட்டுக் குமாஸ்தாக்கள் வரையில் கூட உண்டு” என்றார் சிவராமையர். 

“குமாஸ்தா என்றால்…?” 

“குமாஸ்தா என்றால் உத்தியோகம் என்று வைத்துக் கொள்ளேன். பெரிய பெரிய உத்தியோகமானாலுங்கூடப் பிறர் காரியந்தான் என்பதனால் அதைச் செய்பவன் குமாஸ்தா என்றுதானே ஏற்படும்….?” என்றார் சிவராமையர். 

அவர் சொன்னதும் நியாயந்தான் என்று தோன்றியது மேஜர் மூர்த்திக்கு. அப்படியானால் இந்த யுத்தம் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தையும் அதன் வாழ்க்கையையும் பெரிதும் பாதித்திருக்கிறது என்று தானே சொல்லவேண்டும்? யுத்தம் அவ்வளவாக அவர்களைப் பாதிக்கவில்லை என்று, தான் அவசரப்பட்டு முடிவு கட்டிவிட்டது தவறு என்று தோன்றியது அவனுக்கு. ஆனால் அப்படி யுத்தத்தினால் நேரடியாகவோ, சிவராமையர் சொன்னது மாதிரி மறைமுகமாகவோ, பாதிக்கப் பட்டவர்களில் பெரும் பகுதியினர் ஊரில் வசிக்கமாட்டார்கள். அவர்கள் பெற்றோர், உற்றார், உறவினர் சிலர் மட்டுமே சாத்தனூர் வாசிகளாக இருப்பார்கள். 

இந்தச் சிந்தனையைத் தொடராமல் மேஜர் மூர்த்தி, தன் மாமாவைக் கேட்டான்: “யுத்த காரணமாக இந்தக் கிராமத்தில் கூடப் பணப் புழக்கம் அதிகந்தானே?” என்று. 

“அதிகந்தான். ஏழையாக இருந்தவனைத் தவிர மற்றவர்களிட மெல்லாம் பணப் புழக்கம் அதிகரித்தது என்னவோ வாஸ்தவம். இப்போது, பணப்புழக்கம் அதிகமாக இருந்த காலத்தில் செலவு செய்யக் கற்றுக் கொண்டவன், மீண்டும் சாதாரண வாழ்க்கை வாழக் சுற்றுக்கொள்ள முயற்சி செய்கிறான். முயற்சி பலிப்பதில்லை. என்ன செய்வது?” என்றார் சிவராமையர். 

“ஏழை மட்டும் அந்த நாட்களிலும் ஏழையாகவே இருந்து விட்டானாக்கும்?” என்றான் மூர்த்தி. 

“கடவுளின் ஆட்சி என்கிற ஆதரவு மனிதனுக்கு இருக்கிற வரையில் உலகில் ஏழைகள் என்கிற ஜாதியினர் என்றும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். ஏழைப்பங்காளன் என்கிற பெயர் கடவுளுக்கு நிலைக்க வேண்டுமே, அதற்காகவேனும்” என்றார் சிவராமையர். 

சிவராமையர் இவ்வளவு அனுதாபத்துடனும் கசப்புடனும் பேசுவார் என்று மூர்த்தி எதிர்பார்க்கவில்லை. ஒரு விநாடி திகைத்து விட்டான். 

இவர்கள் இதே விஷயத்தைத் தொடர்ந்து ஏதாவது பேசியிருப் பார்கள். அதற்குள் நச்சுவாய்க்கிழவர் நாராயணையர், “ஏண்டா சிவராமா, மருமான் வந்திருக்கானாடா? நீதான் உட்கார்ந்திருக்கயாக்கும் என்று விடியற் காலையிலே வந்தேன். ஒரே புகை நாற்றமாக இருந்தது.” 

மேஜர் மூர்த்தி சும்மாயிருந்திருக்கலாம்; ஆனால், “நான் தான் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்” என்றான். 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தில் புகை பிடிப்பதை நேருக்கு நேராக ஒப்புக் கொள்பவனைச் சமூகம் மகா பாபி என்றுதான் மதிக்கும். அடுத்த வீட்டானின் மனைவியை அடித்துக் கொண்டு போய் விடலாம்; சொந்த உறவிலேயே காதல் நாடகங்கள் நடத்தலாம்; பிள்ளையார் கோயில் சொத்தைச் சாப்பிடலாம்; அஞ்சாமல் கூசாமல் பொய்ச்சாட்சி சொல்லலாம்; நயவஞ்சகம் பேசலாம்; கொலை, கொள்ளை செய்யலாம்; புகை பிடிக்கலாம்; கள் குடிக்கலாம்; – ஆனால் எதையும் நேரடியாகச் செய்யக்கூடாது. பிறர் கண்ணில் படும்படியாகச் செய்யக்கூடாது. செய்வது தவறில்லை. செய்ததாகச் சொல்வது தான் தவறு. பிறர் செய்தால் கண்டிக் கலாம். தான் செய்வது மறந்துவிட்டது மாதிரி கடவுளுக்கும் தனக்கும் மட்டும் தெரிந்து ரகசியமாக இருக்கிய விஷயத்தில், இகத்தில் தண்டனை கிடையாது என்பது, சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரவாசிகள் உணர்ந்துவிட்ட உண்மை. பரத்தில் எப்படியோ அவர்களுக்குத் தெரியாது. 

பரத்தில் மட்டுந்தான் என்ன? இதே ‘கடவுளின் ஆட்சி தானே எங்கும்? 

சிகரெட் பிடிப்பதைத் தான் ஏற்றுக்கொண்டதில்தான் செய்து விட்ட தவறு, பாவம், மூர்த்திக்குத் தெரியாது. 

சிவராமையர் சிரித்துக்கொண்டே நச்சுவாய்க் கிழவருக்குப் பதில் சொன்னார்: “பையனுக்கு நம் ஊர் நடவடிக்கைகள் தெரியாது. சிகரெட் பிடித்த சாம்பமூர்த்திராயர் தெருவை விட்டே, ஊரை விட்டே ஓட நேர்ந்தது தெரியாது” என்றார். 

“யார் அது, சாம்பமூர்த்திராயர்? சிகரெட் பிடிப்பது அவ்வளவு பெரிய பாவமா? அது தெரியாதே எனக்கு. ஆனால் கதையைச் சொல்லுங்கள்” என்றான் மேஜர் மூர்த்தி. 

“கதை, பெரிய கதை. தவிர, தாத்தாவுக்கும் அவருடைய சிநேகிதர் காத்துக் கொண்டிருக்கிறார். பொழுது வீணாகக் கூடாது” என்றார் சிவ ராமையர். 

“சிவராமா! நீ இருந்தாலும்…” என்று நச்சுவாய்க் கிழவர் தொடங்கு முன், சிவராமையர், “இதோ பார் கிட்டா, கடைத் தெருவுக்கு அவசரமாகப் போயிட்டு வரணுமே; வருவோம்; வந்து குளிக்கக் காவேரிக்கு வேறு போகணும்” என்றார். 

நச்சுவாய்க் கிழவரிடம் பேச்சுக் கொடுக்கத் தன் மாமாவுக்கு இஷ்டமில்லை என்பது மேஜர் மூர்த்திக்கு வெளிப்படையாகவே தெரிந்தது. அவனுக்கு அப்போதிருந்த மனோபாவத்தில் அவன் அந்த நச்சுவாய்க் கிழவரிடங்கூட மூச்சு விடாமல் பேசிக் கொண்டு நின்று கொண்டிருக்கத் தயார்தான். ஆனால் கடைத் தெருவுக்குப் போய் வருவதும், ஊரைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுவதும் அவசியந்தானே? 

சிவராமையரும் மூர்த்தியும் கிளம்பினார்கள். 

அத்தியாயம்-12 

சிவராமையர் வீடு சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தின் நடுமத்தியில், தென்னண்டைச் சரகத்தில் இருந்தது. கீழண்டையும் மேலண்டையும் வாழைத் தோட்டம். எதிரே தென்னந்தோப்பு. 

மண் ரோடுதான். ஆனால் கால் வைப்பதற்குக் கடினமாகவோ சகதியாகவோ இல்லை. ஐப்பசி மாதத்தில், ஆரம்பத்திலேயே குளிர் விழுந்து விட்டபடியால் மழை அதிகம் பெய்யவில்லை. அந்த வருஷம் காவேரியில் முழு ஆறு ஜலம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த வருஷம் வெள்ளம் வந்து விடுமே என்கிற பயம் சிறிதுகூடக் கிடையாது. 

இரவில் குளிரிற்றே தவிர, சூரியன் உதித்த பிறகு, சூரிய வெப்பம் அதிகமாகத்தான் இருந்தது. மரங்கள்கூட ஆடாமல் அசையாமல்தான் நின்றன. தூரத்தில் காகங்கள் கரைந்தன. கிழக்கேயிருந்து நாய்களின் குரைப்புச் சப்தம் கேட்டது. மரங்களின் கிளைகளிலிருந்து பலவிதமான பட்சிகள் கிரீச்சென்றும் பளிச்சென்றும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. எங்கேயோ ஓர் எருமை மாடு அதற்கு உரிய குரலில் கத்திற்று. எதிர்ப்பட்ட ஒரு பசுவும் கன்றும் அழகான காட்சியாக மூர்த்தியின் கண்களில் பட்டன. அந்தக் கன்று துள்ளி விளையாடிக்கொண்டே, தெருவில் அங்கும் இங்கும் போனதைப் பார்த்துக்கொண்டே, தெருவில் இறங்கிய மூர்த்தி, தன் மாமாவிடம் சொன்னான்: “உலகில் எங்கேயும் மிருகங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. சாவு என்கிற கோரத்தாண்டவத்தின் மத்தியிலே, தென் பிரான்சு தேசத்தில், எங்களுக்கு எதிர்ப்பட்ட ஒரு பசுங்கன்று எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. பசு, மனிதனுக்கு இரையாகி விட்டது. கன்று மட்டும் எப்பொழுதும்போல், மனிதன் மனிதனுக்கு இழைக்க முயன்று கொண்டிருந்த தீமையை உணராமல், துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த விநாடியில் என் கையிலும் என் ஜர்மன் சகாக்களின் கையிலும் இருந்த சக்திவாய்ந்த ஆயுதங்கள் உண்மையில் பயனற்றவை, சக்தியே அற்றவை என்றுதான் எனக்குத் தோன்றியது.” 

“அந்த மாதிரி ஒரு விநாடியை ஓர் ஆயுள் முழுவதும் நீடிக்க முடியாமல் இருப்பதுதான் மனிதன் சோக வாழ்வுக்கே சிகரமாக அமைகிறது” என்றார் சிவராமையர். 

ஒரு விநாடிக்குமேல் அவ்வுணர்ச்சி எனக்கும் நீடிக்கவில்லையே? அடுத்த விநாடி எதிர்ப்பட்ட எதிரியை அழித்து. ஆணவங்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறதே!” என்றான் மூர்த்தி. 

“அந்த விநாடியின் ஞாபகம் இப்பொழுது ஏற்படுகிறது என்கிற போது அவ்விநாடி இரட்டித்து விட்டது இல்லையா?” என்றார் சிவராமையர். 

“அது என்ன பிரயோசனம்? தலைமை தாங்குகிறவர்களுக்கல்லவா இந்த விநாடி தோன்றவேண்டும்; தோன்றி நீடிக்க வேண்டும்?” என்றான் மூர்த்தி. 

“அசோக சக்ரவர்த்திக்குத் தோன்றிற்று என்கிறார்கள்.” 

“ஆமாம்; உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் ஆண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களில், ஒரு பகுதியில் ஒரு காலத்தில் ஆண்ட ஒரு அசோகனுக்கு இந்த உணர்ச்சி உண்டாகியது உண்மைதான். உலக சரித்திரத்தை மாற்ற இது போதவில்லையே!” என்றான் மூர்த்தி. 

“போதவில்லை. ஏன் போதவில்லை என்று யார் சொல்வது?” என்றார் சிவராமையர். 

“கடவுள், மனிதனைப் படைத்தான் என்று வைத்துக் கொள் வோம்; மனித சுபாவத்தையும் படைத்தான்; மனிதனுக்கு ஒரே கண்ணையும் அக்கண்ணுக்கு ஒரே நோக்கையும் படைக்காததுதான் கடவுளின் பிசகு.” 

மேஜர் மூர்த்தி சொன்னது என்ன என்று சிவராமையருக்குச் சரிவரப் புரியவில்லை. அவர் பதில் சொல்லாமல் நடந்தார். 

மூர்த்தி சிறிது நேரம் பேசாமல், தங்களுக்கு முன் சென்ற நிழல்களைப் பார்த்துக்கொண்டே சென்றான். நாலடி நிழல் தெருவில் மேடு பள்ளம் பார்க்காமல், சுத்தம் அசுத்தம் பார்க்காமல், ஈரம் உலர்ந்தது பார்க்காமல் போய்க்கொண்டிருந்தது. முதுகில் பட்ட வெயில் சூடும், முன்னால் ஓடிய நிழலுந்தான் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த அவர்களுக்குச் சூரியனைப்பற்றிய காட்சிகள். 

மேஜர் மூர்த்தி பத்தடி நடப்பதற்குள்ளாகவே மறுபடியும் பேசத் தொடங்கினான். சாதாரணமாக அதிகமாகப் பேசாத மனிதன் தான் அவன். இன்று என்னவோ சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரம் என்கிற அநுபவம், சிவராமையர் குடும்ப வாழ்வு என்கிற அநுபவம் என்கிற இரண்டு அனுபவங்களுமாகச் சேர்ந்து அவன் பேச்சு வெள்ளம் என்ற மடையைத் திறந்து விட்டது போல் இருந்தது. 

மூர்த்தி சொன்னான்: “மனிதனுக்கு நிழலைத் தந்து விட்டான் ஈசுவரன். வெளிச்சம் தெரிகிறதோ இல்லையோ, நிழல் தெரிகிறது!” 

“நிழல் இருந்தால் வெளிச்சமும் உண்டு என்றுதான் ஏற்படும் இல்லையா?’ என்றார் சிவராமையர். 

“நிழலைப் பின்பற்றிப் பின்பற்றி மனிதன் நடந்து பழகிக் கொண்டிருக்கிறான். நிழல் விழுகிற பக்கத்துக்கு எதிர்ப்பக்கம் திரும்பி நடந்தால், தன் நிழல் தன்னைத் தொடரும் என்பது மனிதனுக்குத் தெரிவதில்லை. நிழலைத் தொடர்ந்துகொண்டே காலத்தைக் கடத்தி வருகிறான். எதிர்ப்பக்கம் திரும்பினால் வெளிச்சம் கண்ணில் பட்டுவிடும்: ஆனால் எப்படியோ மனிதன் திரும்பாமலே காலந் தள்ளிவிடுகிறான்” என்றான் மூர்த்தி. 

“உண்மைதான். ஆனால் வெளிச்சம் கண்ணைக் கூசுகிறதே?” என்றார் சிவராமையர். 

மேஜர் மூர்த்தி திரும்பிப் பார்த்தான். கீழ் வானம் வைகாசி மாசத்து வானம்போல் நிஷ்களங்கமாக இருந்தது. சூரிய ஒளி கண்ணைக் கூசத்தான் கூசியது. 

தெருவின் கீழண்டைக் கோடியில் இருந்த மூங்கிற் புதர் பழுப்பும் பச்சையும் கழியும் குச்சியும் இலையுமாக, காட்டேரி போல் லேசான காற்றில் அசைந்தாடிற்று. அதன் கோரக்குரல் நாற்பது கஜம் தாண்டிக் கிரீச்சிட்டது. 

வெளிச்சத்தை அணுக விரும்புகிறவன் எத்தனையோ கோர ஸ்வரூபங்களைத் தாண்டிச் செல்லத்தான் வேண்டியிருக்கும். அதற்காகப் பயந்து, இருக்கிற இடத்திலேயே இருக்கிறேன் என்று மனிதன் சொன்னால் முடியுமா? 

“முன்னேயும் பின்னேயும் பார்த்துக்கொண்டு – குறுகிய  அளவிலே தான் என்றாலும் – முன்னேறுபவன்தான் மனிதன்” 

“பிள்ளையாண்டான் யாருடா சிவராமா?” என்று தன் மாமாவை யாரோ விசாரிப்பதைக் கேட்டுத் திரும்பினான் மூர்த்தி. யாரோ ஒரு பாட்டி கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும். அதிகங்கூட இருக்கும். 

“மருமான், மங்களம், மதுரத்தின் பிள்ளை” என்றார் சிவராமையர். 

“மதுரத்தின் பிள்ளையாடா? இப்பத்தான் வந்தானா? எங்காத்திலே ஒரு நாள் சாப்பிடச் சொல்லடா, அப்பா!” என்றாள் மங்களப்பாட்டி. 

மதுரத்தின் பிள்ளை என்று சொல்லித்தான் சிவராமையர் தன் மருமானைத் தன் தெருவில் பலருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டியிருந்தது. ஊரிலே ஒரு வயதுக்காரர்களுக்கு தன் தாயாரைத் தெரியும் போல் இருந்தது. உண்மைதானே! அவனுடைய தாயாரின் பிறந்த ஊர் சாத்தனூர். அவனுடைய தகப்பனாரின் பிறந்த ஊருக்குப் போயிருந்தானானால் அவனை ஸ்ரீநிவாசையரின் பிள்ளை என்று பலருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டி வந்திருக்கும். இங்கே, சாத்தனூரில் அவன் தாய்தான் முக்கியம். 

தாய்தான் முக்கியமாக இருக்கவேண்டும் என்றுதான் மூர்த்தியும் நினைத்தான். அதுதான் இயற்கை நியதி. 

மூர்த்திக்குத் தாயையும் தெரியாது. தகப்பனையும் தெரியாது. அவன் கேட்டான்: “இந்தப் பாட்டிக்கு எங்கம்மாவைத் தெரியுமா?” என்று. அதைக் கேட்ட பிறகுதான் அது எவ்வளவு அசட்டுத்தனமான கேள்வி என்பது அவனுக்குப் புரிந்தது. 

“என்னடா அப்படிக் கேக்கிறே!” என்றாள் மங்களப் பாட்டி. 

“கிட்டா! மங்களத்துக்கு அந்த நாளிலே மதுரத்துக் கிட்டத்தான் அளவிட முடியாத பிரியம். தின்பதற்கு எது பண்ணினாலும் முதல்லே மதுரத்துக்கு, மதுரத்துக்குன்னு எடுத்து வைத்துவிடுவாள். அதற்கப்புறந்தான் தன் புருஷனுக்குக் கொடுப்பது, தன் குழந்தைகளுக்குக் கொடுப்பது எல்லாம். எனக்கு அடிதான் கிடைக்கும் மங்களத்துக்கிட்டே. மதுரத்துக்குத் தான் மற்றதெல்லாம் கிடைக்கும்” என்றார் சிவராமையர். பிறகு மங்களப் பாட்டியிடம், “கிட்டாவை அழைச்சுண்டு வரேன், சாயந்தரமா வரேன் ஆத்துக்கு” என்றார். 

அவள் போனபிறகு மேஜர் மூர்த்தி கேட்டான், “மங்களம் நமக்கு உறவா?” என்று. 

“அப்படி ஒண்ணும் நெருங்கிய உறவில்லை. எனக்கு இரண்டு விட்ட சித்தியாகணும். ஆனால் அவளுக்கு அந்த நாளிலெல்லாம் மதுரத்திடந்தான் உசிரு. மதுரமும் குழந்தையிலே குறுகுறுவென்று துடியா இருப்பாள். ஆனால் மங்களத்திடம் பிரியமெல்லாம் மதுரத்துக்கு வாங்கித் தின்கிற வரையிலுந்தான். அதற்குப் பிறகு திரும்பிகூடப் பார்க்க மாட்டாள்” என்றார் சிவராமையர். 

“நாம் பிரியம் வைக்கிற இடமெல்லாம் அதே மாதிரியாகிறது என்பதுதானே மனித அநுபவம்?” என்றான் மேஜர் மூர்த்தி. 

“மனித அநுபவத்தைப்பற்றி நமக்கு ஓரளவுதான் எட்டுகிறது. 

பல கிளைகள் நமக்கு எட்டுவதே இல்லை” என்றார் சிவராமையர் அடக்கமாக. 

மேஜர் மூர்த்தி பரந்த உலகில் பறந்து சென்றவன். பல களில் சுற்றித் திரிந்துவிட்டு, அடிபட்டு, அலைந்து அலைக்கழிந்து வீடு திரும்பியவன். அவனுக்கு அநுபவம் இருந்தது. அந்த அநுபவங்களை எல்லாம் பற்றிச் சிந்திக்கத் தெம்பிருந்தது. அவனுக்கு ஏற்பட்டிருந்த அநுபவங்களையும் விட அதிகமாகச் சாத்தனூரிலேயே அடைந்துவிட்டவர் போலப் பேசினார் சிவராமையர்; சிந்தித்துப் பார்த்திருந்தவர் போலப் பேசினார். எவ்வளவு அடக்கமாகவும் பேசினார்! மேஜர் மூர்த்திக்கு வியப்பாகத்தான் இருந்தது. 

“என் வாழ்வில் நான் கண்டவரையில், ஆசைப்படாதவனே அதிருஷ்டசாலி என்று சொல்ல எனக்குத் தோன்றுகிறது” என்றான் மேஜர் மூர்த்தி. 

சிவராமையர் நாலடி நடந்த பிறகுதான் இதற்குப் பதில் அளித்தார். ஏதோ தீர்க்கமாக யோசித்துவிட்டு பதில் சொல்பவர்போலச் சொன்னார். அப்படியும் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லையே!” என்றார். 

மேஜர் மூர்த்தி, “ஆசைப்படுகிறவன் ஏமாறுகிறான் என்கிற அர்த்தத்தில் சொன்னேன் நான்’ என்றான். 

“அது சரி, ஆனால் ஆசையற்றவன் மனிதனே அல்ல” என்றார் சிவராமையர். 

“அப்படிச் சொன்னால்? அதுவும் உண்மை என்று சொல்லத் தான் தோன்றுகிறது!” என்று ஒப்புக்கொண்டான் மேஜர் மூர்த்தி. 

சற்றுத் தயக்கத்துடனேயே சிவராமையர் சொன்னார்: “உன் மாமியைச் சொல்லு. அவளுக்கு இன்னமும் குறைதான், பிள்ளை பிறக்கவில்லையே என்று! ஆனால் பிள்ளை பிறக்காதது அவளைப் பற்றிய வரையில் ஏமாற்றம் ஆகிவிடவில்லை. மற்றவர்களிடம் அவளுக்கு ஒரு அன்பு பிறப்பதற்கு அந்தக் குறை ஒரு காரணமாக அமைகிறது என்று எண்ணும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது” என்றார். 

“பிள்ளை பிறந்திருந்தால் அம்மாமிக்கு மற்றவர்களிடம் இவ்வளவு பிரியமும் அன்பும் இருந்திராது என்கிறீர்களா?” என்று கேட்டான மூர்த்தி. 

அப்படியும் தீர்மானமாகச் சொல்லிவிட முடியாது” என்றார் சிவராமையர். 

“பின் எப்படி?” 

“என் நீண்ட வாழ்வின் காரணமாக நான் கொண்ட ஒரு முடிவு மட்டும் அசைக்க முடியாதது, மாறாதது என்று தெரிகிறது. வாழ்க்கையின் அடிப்படையான ஆதாரமான எந்த விஷயத்தையும்பற்றி எவ்வளவு பேர் எத்தனை நாள்தான் எவ்வளவோ அறிவோடு விவாதம் நடத்தினாலும் தீர்மானமான முடிவு கண்டுவிட முடியாது என்பதுதான் அந்த நிச்சயம். ஆகவே, கூடியவரையில் நான் யாருடனும் எவ்வித விவாதமும் நடத்துவது கிடையாது. சீட்டாடும்போது கூடத்தான்!” என்றார் சிவராமையர். 

“உண்மைதான்” என்று ஒப்புக்கொண்டான் மேஜர் மூர்த்தி. 

சிவராமையர் சொன்னார் மீண்டும்: “இன்று நீ வந்த உணர்ச்சி உற்சாக வேகத்தில் நான்கூடச் சின்னப் பையன் மாதிரி – நாட்டுப்புறத் தானாகிய நான் -சகல விதத்திலும் நாகரிகம் அடைந்தவனாகிய உன்னுடன் சரிசமமாக ஏதோ பேசிப் பார்க்கிறேன்.” 

மேஜர் மூர்த்தி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். “நான் ஊரெல்லாம் சுற்றியிருக்கிறேன். உண்மைதான்! அடிபட வேண்டிய இடத்திலெல்லாம் அடிபட்டிருக்கிறேன்; அடித்தும் இருக்கிறேன் ! ஓடி ஓடி ஓய்வில்லாமல் அலைந்திருக்கிறேன். ஆனால் உண்மையாத உங்களிடமிருந்து ஏதாவது கற்றுக் கொண்டு போகத்தான் நான் இப்போது சாத்தனூர் வந்திருக்கிறேன்” என்றான் மேஜர் மூர்த்தி. 

“நான் என்ன உனக்குக் கற்றுக்கொடுக்கப் போகிறேன்? என் பேத்திகளில் ஒருத்தியை நீ கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாயானால், பாட்டியும் பேத்தியுமாக நீ கற்றுக் கொள்ள வேண்டியதை எல்லாம் கற்றுக் கொடுத்துவிடுவார்கள்! அதைத் தவிர, சாத்தனூரில் வேறு என்ன நீ கற்றுக்கொள்ள இருக்கிறது?” என்றார் சிவராமையர். 

நேற்றைவிட இன்று நான் அறிவாளியாகிவிட்டேன், அதற்குக் காரணம் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரந்தான் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான் மேஜர் மூர்த்தி. 

“அப்படி நீ நினைப்பதற்கு நான் ஆட்சேபமே சொல்லவில்லை. நம்ம ஜில்லாவில், நம்பப் பிரதேசத்தில், நம்ப நாட்டில், நம்ப உலகத்தில், சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரம் தனி ஒரு இடம் அல்ல. 

எத்தனையோ இடங்களைப்போல இதுவும் ஒன்று. இதற்கென்று தனியாக ஓர் ஆத்மாவும் பாவமும் இருப்பது, ஏற்படுவது என்பது உன்னால் ஏற்படலாமே தவிர வேறில்லை.. புரிகிறதா?” என்றார் சிவராமையர். 

“புரிகிறது; எமர்ஸன் இதையே சொன்னான்; ‘நீ எங்கே சென் றாலும் உன்னையேதான் அழைத்துப் போகிறாய்’ என்றான். அதுதான் நீங்கள் சொல்வதும்” என்றான் மூர்த்தி. 

கிட்டத்தட்ட அதுதான். உன் நோக்கின் மேன்மையைப் பொறுத்தது,உன் லட்சியத்தின் திடத்தைப் பொறுத்தது, இவ்வுலகின் எந்த இடத்திலிருந்தும் உனக்குக் கிடைக்கிற லாபம்” என்றார் சிவராமையர். 

“உண்மைதான்” என்றான் மூர்த்தி. 

– தொடரும்…

– ஒரு நாள் (நாவல்), முதற் பதிப்பு: 2004, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *