கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 5,300 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12

அத்தியாயம்-5 

“யாரு? சிவராமனா?” என்று கேட்டுக் கொண்டே வந்த கிழவருக்கு உடனே பதில் அளிக்கவில்லை அவன். பதில் தேவையில்லை என்று எண்ணினானோ, அல்லது கிழவர் யார் என்று முதலில் தெரிந்து கொள்ளலாமே என்று காத்திருந்தானோ அவனுக்கே தெரியாது. 

கிழவருக்கு வயது அறுபதாவது இருக்கும். அவன் மாமாவுக்குச் சகபாடிபோலும்; அவர் எந்தத் திசையிலிருந்து வந்தார் என்று மூர்த்தி ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. நரை பரந்த தலையும், ஒரு மாதத்துத் தாடியும், மீசையுமாக, குழி விழுந்த மஞ்சள் வர்ணமான கண்களுடன், பார்ப்பதற்கு விகாரமாக இருக்க வேண்டியவர் கம்பீரமாக இருந்தார். முகத்திலே தேஜஸ் என்பார்களே அது இருந்தது; மூக்கு எடுப்பாக, கம்பீர மாக இருந்தது. கன்னங்கள் குழிவிழுந்து உலர்ந்து போயிருந்தன. நெற்றியில் சுருக்கங்கள் எண்ணிக்கையற்றிருந்தன. முதுகுக் கூனவில்லை. நிமிர்ந்துதான் நடந்தார். கைகள் நீளம் நீளமாக, விரல்கள் நீண்டு, ஒவ்வொரு விரலும் சாட்டைபோலத் துடிதுடிப்புடன் இருந்தன. அரையிலே மல்வேஷ்டியைப் பஞ்சக் கச்சமாகக் கட்டியிருந்தார். பூணூலைத் தவிர மேலே ஒன்றுமில்லை. 

“சிவராமனா?” என்று கேட்டுக்கொண்டே நெருங்கி வந்தவரின் மங்கிய கண்களுக்கு, திண்ணையில் உட்கார்ந்திருந்தது, சிவராமையர் அல்ல என்பது உடனே தெரிந்து விட்டது. “யாரது? புதுசா இருக்கே?” என்றார், கண்களுக்கு மேல் கைவிரல்களை வளைத்துக்கொண்டு. 

“சிவராமையருடைய மருமான் நான். பட்டணத்திலிருந்து நேத்திக்கு ராத்திரி வந்தேன்” என்றான் மேஜர் மூர்த்தி, திண்ணையைவிட்டுக் கீழே இறங்கி மரியாதையாக நின்று கொண்டு. “சண்டையிலெல்லாம் அகப்பட்டுக் கொண்ட பையனா? மதுரத் தின் பிள்ளையா நீ ? தெரியறது தெரியறது? மதுரத்தின் முக ஜாடைதான் உனக்கும்” என்றார் கிழவர். அவர் மங்கிய கிழக்கண்கள் எதிலும் எதையும் பார்த்திருக்கக்கூடிய சக்தி வாய்ந்தவை – மதுரத்தின் முகம் அவருக்கு மறந்து எவ்வளவு நாளாகிறதோ என்று எண்ணிய மூர்த்தி, “வாங்கோ, உக் காருங்கோ. மாமாகூட முழிச்சுண்டுட்டா – ஏந்திருந்து வந்துடுவா” என்றான். 

அவனுக்குக் கிராமத்துப் பழக்க வழக்கங்கள் இன்னும் தெரிய நியாயமில்லையே! கிழவர் ஏதோ காரணமாகத்தான் தன் மாமாவைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார் என்று அவன் எண்ணினான். 

கிழவர் மேற்கே நாலாவது வீட்டுக்காரர். திண்ணையில் பாயைப் போட்டுக்கொண்டு இரவு பூராவும் வயதிற்குரிய சிந்தனைகளாலும், கொசு உபத்திரவத்தாலும் தூங்காமல் அவஸ்தைப்பட்டுவிட்டு கிழக்கே வெளுத்ததும், வம்பளக்க யார் அகப்படுவார்கள் என்று தன் வீட்டுத் திண்ணையிலே மேல் துண்டைப்போட்டு விட்டு, துண்டை மறந்து விட்டதையும் பொருட் படுத்தாமல் வந்துகொண்டு இருந்தார். சிவராமையருக்கு நன்றாகத் தெரியும். இந்த நச்சுவாய்க் கிழவரை, அவ்வளவு அதிகாலையில் அவருடன் பேச்சுக் கொடுத்து மாட்டிக் கொள்ள அவர் விரும்பமாட்டார் – அந்த நேரத்தில் விழித்துக் கொண்டால்கூடக் கிழவருக்குப் பயந்து கொண்டு, ரேழி தாண்டி வரமாட்டார். கிழக்கே அவருக்கேற்ற சகாக்களுடன் ஒன்றிவிடும் வரையில் சிவராமையர் வெளி வந்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். கிழவர் நச்சுவாய்க் கிழவர். வாய் ஓயாமல் பேசிப் பேசியே நாற்பது வருஷங்களுக்கு முன்னரே தனது மனைவியைக் கரை ஏற்றிவிட்டவர். தாயில்லாத இரண்டு சிசுக்களை வைத்துக்கொண்டு சிரம ஜீவனம் செய்து வளர்த்துப் பெரியவர்களாக்கினார். அவருடைய மூத்த பெண் மங்களம் தகப்பனைப் போல – வம்புக்காரி. அவள் கல்யாணம் செய்து கொண்டு கணவனுடன் பக்கத்து ஊரில் நாலு வருஷங்கள் வாழ்ந்துவிட்டு இரண்டு ஆண் குழந்தைகளுடன் அறுத்துக் குளித்துவிட்டு வீடு திரும்பிவிட்டாள். கிழவருக்கு வீட்டிலே குடும்பம். அந்தப் பெண்ணும், அவளுடைய இரண்டாவது பிள்ளையும்தான். அவளுடைய மூத்தபிள்ளை பட்டணத்திலே ஒரு சுருட்டுக் கம்பெனியில் குமாஸ்தாவாக நாற்பது ஐம்பது சம்பாதித்துக் கொண்டிருந்தான். இரண்டாவது பிள்ளை அத்தியானம் பண்ணியிருப்பதாகவும் பெயர் – அவன் அத்தியானம் பண்ணியதைவிட அதிகமாகத் தெருவிலே அதிக் கிரமங்கள் செய்து கொண்டிருந்தான் -அயோக்கியத்தனங்கள் படித்துக் கொண்டிருந்தான் என்று தெருவார் சொல்லுவார்கள். 

கிழவருடைய பிள்ளை வடக்கே, லாகூரிலோ அதற்கும் அப்பாலோ எதோ பெரிய உத்யோகத்தில் இருந்தான். தகப்பனாருக்கென்று மாதம் மாதம் முதல் வாரத்தில் நூறு ரூபாய் மணியார்டரில் அனுப்பி விடுவான். அவ்வளவுதான் அவனுக்கும் அவன் தகப்பனுக்கும் இருந்த உறவு. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கூடப் பல வருஷங்கள் இருக்கும். கிழவர் இடையில் ஒரு தரம் சாகக் கிடந்தபொழுது – அக்கிழம் வருஷத்துக்கு லாகூர்ப் பையன் வர ஒருதரம் சாகக் கிடப்பது வழக்கம் மறுத்துவிட்டான். வைதீக கர்மாக்களைச் சரிவர நடத்தி விடும்படியும் அதற்கான பணத்தைத் தான் அனுப்பி விடுகிறேன் என்றும் கடிதம் எழுதி விட்டு வராதிருந்து விட்டான். அக்கடிதத்துக்குப் பதில் வராததுபற்றி அவன் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. கிழவர் பிழைத்தெழுந்து கடிதம் போட்டார். அடுத்த மாதம் முதல் வாரம் மீண்டும் நூறு ரூபாய் மணி யார்டர் வந்தது- அவ்வளவுதான். அவர் சாகக் கிடந்தது பற்றியோ அவர் பிழைத்தெழுந்ததுபற்றியோ அவன் எவ்வித உணர்ச்சியும் காட்டிக்கொள்ளவில்லை. 

இது கிழவருடைய மனசை எவ்விதத்தில் பாதித்தது என்பது தெருவில் யாருக்கும் தெரியாது. அதற்கு உண்மைக் காரணம், அது எவ்விதத்திலும் அவரைப் பாதிக்கவில்லை என்பதுதான். பிள்ளையிடம் அவருக்குப் பிடிப்புக் கிடையாது. அடுத்த தடவை அவர் சாகக் கிடக்கும்போது அவனுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றே அவர் சொல்லி விட்டார். மணியார்டர் மாசா மாசம் வந்து கையெழுத்து ஆகிப் போவதி லிருந்துதான் பையன் தன் தகப்பனார் உயிருடனிருக்கிறாரா இறந்து விட்டாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். மணியார்டர் என்றாவது பட்டுவாடா ஆகாமல் திரும்பிப் போய் விட்டதானால் தகப்பனார் இறந்து விட்டார் என்று பையன் அநுமானித்துக்கொண்டு ஒரு முழுக்குப் போட்டாலும் போடலாம். அது கூட நிச்சயமில்லை. அவன் முழுக்குப் போடுவ தும் போடாததும் லாகூரில் அது குளிர்காலமா, கோடைக் காலமா என்பதைத் பொறுத்துத்தான் இருக்கும்! 

தகப்பன் பிள்ளைக்கு இடையே இருந்த இந்த உறவு தெரு வாருக்கு வெகு நாளாகவே ஆச்சரியமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் அமானுஷ்யமான இந்த உறவைப் பற்றி அவர்கள் ஆச்சரியப் படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? 

கிழவனாரைத் தெருவிலே யாருக்கும் பிடிக்காது என்பதற்கு அவர் சள்ளுச் சள்ளு என்று வாய் ஓயாமல், எதிரே நிற்பவர் மேலெல்லாம் எச்சில் தெரிக்கப் பேசிக்கொண்டிருந்தது மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியாது. கிழவருக்கு அக்கிரஹாரத்தில் வீடிருந்தது – ஏதோ சொல்பமாக நிலபுலன்கள் இருந்தன. மாசா மாசம் தவறாமல் பிள்ளை அனுப்பிய நூறு ரூபாய் இருந்தது. அவர் சௌகரியமாக இருக்கலாம். அப்படி இருப்பதில்லை அவர். பொய்ச் சாட்சி சொல்ல யார் கூப்பிட்டாலும் அணாவுக்கு நாலு பொய் ஜோடித்து ஆயிரம் சத்தியம் செய்யத் தயாராக இருந்தார் அவர். கும்பகோணம் கோர்ட்டிலே ஓயாமல் வேலை இருக்கும் அவருக்கு. அவர் குடியிருப்பது சப் ரிஜிஸ்திரார் கோர்ட்டிலே தான். எந்தக் குடும்பத்தில் எந்தக் காரியம் நடக்கிறது? அது எவ்வளவு சீக்கிரத்தில், தனக்கு (ஒரு காசு) சாதகமாக வாய்க்கப் போகிறது என்று கழுகுப் பசியுடன் காத்திருப்பார். இத்தனையும் போதாதென்று யாராவது கடன்கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு, நாலு வட்டிக்குக் கடன் கொடுப்பார். இது விஷயத்தில் முக்கியமாக அவரிடம் அவசரத்தில் கடன் வாங்குகிறவர்களைத்தான் குறை சொல்லலாமே ஒழிய அவரைக் குறை சொல்வதற்கில்லை. ஆனால் அவரை வெறுப்புக்கு ஆளாக்கிய காரணங்களிலே இது முக்கியமானது ஒன்று. 

இவ்வளவும் மேஜர் மூர்த்திக்குத் தெரியாதது தான். ஆனால் அவர் அண்மையில் வந்து அவன் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, “இங்கே என்ன சுருட்டு வாசனை வீசுறதே” என்றதுமே ஓரளவு அவனுக்கு அவரிடம் வெறுப்பு ஏற்பட்டு விட்டது. 

“ஆமாம் நான்தான் சிகரெட் பிடித்தேன்” என்றான் மேஜர் மூர்த்தி. 

தலையில் இரண்டு தரம் போட்டுக் கொண்டார் கிழவர். “பிராமணனாகப் பொறந்துட்ட… ஐயோ! என்ன பண்றது? காலம் கலிகாலம்!” என்று மீண்டும் இரண்டுதரம் தலையில் போட்டுக் கொண்டார். 

நல்ல வேளையாக மேஜர் மூர்த்தி பதில் சொல்லவில்லை. பதில் சொல்லியிருந்தானனால் அது அவனை – அவரை எவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டிருக்குமோ? 

அச்சமயம் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, கையில் மூங்கில் கழி பிடித்துக்கொண்டு மேற்கு நோக்கி நடந்து கொண்டிருந்த ஒருவரைக் கிழவர் பார்த்துவிட்டார். பதற்றமாக எழுந்து, வயசுக் கொவ்வாத வேக நடை நடந்து, “என்ன, சீனுவாச ஐயர்வாள், கேட்டேளோ இந்த அக்கிரமத்தை, அக்கிரஹாரத்திலே-” என்று ஏதோ சொல்லிக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்தார். 

அவர் மேலே என்ன சொன்னார் என்பது மூர்த்தியின் காதில் விழவில்லை. அச்சமயம் அவன் மாமி, “கிட்டா! பல்லைத் தேய்… காபி தயாராயிடும் நீ பல் தேச்சுட்டு வரச்சே” என்று கூறிய படி வாசல் பக்கம் வந்தாள். 

அவன் மாமி வருவதற்கும், சாத்தனூர் கோயில் மணி உஷக் கால பூஜைக்காக ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. ஐரோப்பாவிலே பிரமாதமாகச் சொன்ன மாதாகோவில் மணிகள் பல ஒலிப்பதை ஞாபகம் மூட்டியது மேஜர் மூர்த்திக்கு சாத்தனூர் கோயில் மணி. மாமியைக் கேட்டான்; “இந்த ஊரிலே சிவன் கோயிலா லிஷ்ணு கோயிலா?” 

ஒரு நிமிஷம் இதென்ன பைத்தியக்காரக் கேள்வி என்று எண்ணியவள்போல அவன் மாமி அவனை ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்த்தாள். பிறகு அவன் கேள்வி நியாயமானதுதான் என்ற முடிவுக்கு வந்தவள்போல, “சிவன் கோயில்தான்” என்றாள். பிறகு, “இந்த ஊர் சுப்பிரமணிய சுவாமிக்கு சக்தி அதிகம்” என்றாள். 

எந்த மாதிரியான சக்தியைப்பற்றித் தன் மாமி பேசினாள் என்பது மேஜர் மூர்த்திக்குத் தெரியாது. உள்ளூர் சாமியின் சக்தியை அறிந்து கொள்ள அவனுக்கு அது வரையில் தான் சந்தர்ப்பம் இருந்ததில்லையே! 

அத்தியாயம்-6 

கிழக்கு மேற்காக இருந்த தெருவிலே சூரிய வெளிச்சமும் நீண்ட நிழல்களும் தோன்றத் தொடங்கிவிட்டன. 

தெருக்கோடி மூங்கிற் புதர் இபஸீபாது ஏசுவாகவோ, நிழலுரு வாகவோ காட்சி தரவில்லை – மூங்கிற் புதராகவே காட்சியளித்தது. சிறு சிறு இலைகளும், கோணலும், மாணலுமாக இருந்த முள்களும், உலர்ந்து பழுப்பேறிய பகுதியும், பசுமை தாங்கிய பகுதியுமாகக் காட்சி அளித்தது. 

மூங்கிற் புதரைப் பார்த்துவிட்டு ஏசுவை எண்ணி இரண்டு நிமிஷம் தான் பிரமித்தது மேஜர் மூர்த்திக்கு ஞாபகம் வந்தது. 

பழுதையும், பாம்பும் என்று அவன் படித்திருந்தான். மூங்கிற் புதருக்கும், ஏசு கிறிஸ்துவுக்கும் முடிச்சுப் போட முடியும் என்று அவன் அதற்குமுன் எண்ணியதில்லை. 

காலை இளஞ் சூரியனின் வெளிச்சத்திலே மூங்கிற்புதர் மூங்கிற் புதராகவே காட்சி அளித்தமாதிரி தினத்தில் ஒரு நாழிகை, ஒருவேளை, ஒரு பொழுது மனிதர்கள் தாங்கள் உண்மை சொரூபத்துடன் காட்சி யளிப்பது என்று ஏற்பட்டு விட்டால் உலகமே மாறிவிடும் என்று தோன்றிற்று அவனுக்கு. 

சங்கராசாரியார் சொன்னதுபோல உலகம் வெறும் மாயை அல்ல. ஒவ்வொரு விநாடியும்; ஒவ்வொரு விதமான ஆனால் அவ்விநாடிக்கு உண்மையான வர்ணப்போர்வை போர்த்திக்கொண்டு காட்சியளித்தது உலகம். சென்றுபோன விநாடியை எண்ணி, இவ்விநாடியைப் பொய் என்று கொண்டு விடுபவர்கள் செய்வது மிகவும் தவறான காரியம். உலகம் பொய்யென்ற தோற்றம்தான், மகத்தான பொய். அதை மீறி எழுந்து விடுகிற மனிதனுக்கு உலகம் எவ்வளவு உண்மையானது என்பது தெளி வாகவே தெரிந்து விடுகிறது. உலகத்தின் ஒவ்வொரு விநாடியின் தோற்றமும் உண்மையானதே! வேறு என்னவாக இருக்க முடியும்? 

தெருவில் படர்ந்திருந்த தங்க நிற வெய்யிலும், நீண்ட நீல நிழல்களும் அடுத்த விநாடி மாறி விடுகின்றன என்பதில் அவை பொய்யாகி விடுமா? 

அப்படியானால் மனிதன் என்கிற சிருஷ்டியுமே மகத்தான பொய்யாகி விடுமே என்று எண்ணினான் மேஜர் மூர்த்தி. 

கண்ணுக்கெதிரேயே தென்னை மரத்து நிழல்கள் குறுகிக் கொண்டிருந்தன.ஆமாம் நேர் எதிர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே ஒரு பெண், வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். காலைக்கதிரவன் தெருவிலே புகுந்து வரைந்து கொண்டிருந்த சித்திரங்களைக் காட்டிலும் நித்தியமான ஒரு நாள் பூராவும் அழியாத சித்திரமாக இழைத்துக் கொண்டிருந்தாள் அப்பெண். 

நாலு நீளக் கோடுகளும் நாலு குறுக்குக் கோடுகளும் சேர்த்து இழுத்துவிட்டு அழகு நலம் சமைத்தாள் அவள். பிறகு அது தன் காலடியில் கிடக்க நிமிர்ந்து நின்று கிழக்கும் மேற்கும் பார்த்து விட்டு சாட்டை போலத் துவண்டு காலை நிழல் போல நீண்டு கருத்துக் கிடந்த பின்னல் சடையை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு மேஜர் மூர்த்தி நின்றிருந்த பக்கம் பார்த்தாள். மேஜர் மூர்த்தி முதலில் அவள் கண்ணில் படவில்லை. அவன் மாமி தான் பட்டாள்; “என்ன மாமி! அதுக்குள்ளே காபி” என்று ஆரம்பித்தவள் அச்சமயம் மேஜர் மூர்த்தியைப் பார்த்துவிட்டாள் போலும். அன்னியன் எதிரில் இவ்வளவு பேசி விட்டோமே என்று சுபாவமாக ஒரு நாணம் குறுக்கிட்டது. சொல்ல வந்ததை முடிக்காமல் விறுக்கென்று உள்ளே திரும்பிப் போய்விட்டாள். 

மேஜர் மூர்த்தியின் முகபாவத்தை பார்த்த அவன் மாமி சிரித்தாள். “அன்னபூரணி – அந்தப் பெண்ணுக்குப் போ அன்னபூரணி -உன்னைப் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டே உள்ளே போய் விட்டாளே என்று ஏமாந்துடாதே. உன்னைக் கல்யாணம் பண்ணிண்டால் உன் கண்ணிலே விரலைக் கொடுத்து ஆட்டிவிடுவாள்” என்றாள். 

“நல்லவேளை. முன்னதாகச் சொல்லிவிட்டாயே! நான் இந்த அன்னபூரணியைக் கல்யாணம் பண்ணிக்கவில்லை. பயமாயிருக்கு” என்றான் மேஜர் மூர்த்தி. 

“அவளைக் கல்யாணம் பண்ணிக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும். ரொம்ப கெட்டிக்காரக் குட்டி. ஒரு குடும்பத்தைச் சர்வ சாதாரணமாக நடத்தி வச்சிடுவாள். சாமர்த்தியக்காரி. வெடுக் வெடுக்வென்று பேசும்; முழுசு முழுசாக காரியமும்…எங்கிட்ட உசிராயிருக்கும் அது. எனக்கு ஒரு பிள்ளை இருந்தால் அவளைத்தான் நான் என் மாட்டுப் பொண்ணா வச்சுப்பேன்” என்றாள் மாமி. 

மாமிக்கு இந்தப் பிள்ளையில்லாக் குறை பெரிய குறைதான் என்று உணர்ந்திருந்த மூர்த்தி பேசாதிருந்தான். மாமி தொடர்ந்து சொன் னாள்; “அன்னபூரணி தங்கமானப் பொண்ணு. ஒரே பொண்ணு. அப்பா ரிடையர்டு தாசில்தார். பாடம் பாட்டு எல்லாம் நன்னாச் சொல்லி வச்சிருக்கார். ஐயாயிரம் ரூபாய் கையிலே பணம் கொடுப்பார். பதினாயிரம் வரையில் செலவு செய்வார். பொண்ணும் தங்கமான குணம்” என்றாள் மாமி மீண்டும். 

“அவளை எனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பாயோ நீ!’ என்று கூறிச் சிரித்தான் மேஜர் மூர்த்தி. 

“யாருக்கு அதிருஷ்டம் இருக்கோ? இன்னிக்குக்கூட யாரோ அவளைப் பார்க்க வரப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தா. பார்க்க லக்ஷ்மியாட்டமா, நன்னாத்தான் இருக்காள். வரவனுக்கு அதிருஷ்டம் இருக் கணும். தை மாசத்துலே ஜாம் ஜாமுன்னு கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடுமா.” 

தன் மாமியினுடைய இவ்வளவு உத்ஸாகமும் கெட்டுவிடக் கூடாது என்று மூர்த்தி பேச்சுக்காக விசாரித்தான். “யார் அந்த தாசில்தார்?” என்று. 

“நாராயணசாமி அய்யர்னு பேரு. எங்கெல்லாமோ இருந்திருக்கார். நிறைய சம்பாதிச்சிருக்கார். ஆசாரமா, இப்போ நியமநிஷ்டையா இருக்கார்; வைசுவதேவம் பண்ணாமே இப்போவெல்லாம் சாப்பிடறதேயில்லை என்றாள் மாமி. 

“வைசுவதேவம்னா…” 

“அது உனக்கு எங்கே தெரியப் போறது? மாமாவைக் கேட்டுக் தெரிஞ்சுக்கலாம், வா! காபி சாப்பிட நாழியாறது. குழந்தைகளெல்லாம் எழுந்து ஓடும்” என்று கூறிவிட்டு மாமி உள்ளே போய்விட்டாள். 

மீண்டும் ஒரு முறை தெருவைக் கிழக்கும் மேற்குமாகப் பார்த்தான் மூர்த்தி. கிராமத்துத் தெருவாக இருந்தாலும் கொஞ்சம் கலகலப்பாகத் தான் இருந்தது. மேலண்டைக் கோடியிலிருந்து ஒரு பால்காரி ஒரு பசு மாட்டையும் ஒரு கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டு இருந்தாள். கன்றுக்குட்டி துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண்டே வந்தது. பால்காரி யின் கையிலிருந்த பால் சொம்பில் பட்டு சூரியனின் பிரகாசமே அதிகரிப்பதுபோல் இருந்தது. 

தெரு வீடுகளின் முன்பக்கமெல்லாம் பெருக்கி மெழுகி கோல மிட்டாகியிருந்தது என்று கவனித்தான் மூர்த்தி – அல்லது இன்னும் சில வீடுகளில் கோலம் இட்டுக்கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பணக்காரர்கள் வீட்டில் தவிர மற்ற வீடுகளிலெல்லாம் அவரவர்கள் வீட்டுப் பெண்களே கோலமிட்டார்கள். 

இதற்கு விலக்குத் தன் மாமி வீடுதான் என்று எண்ணினான் மூர்த்தி. 

அவனைத் தாண்டிக்கொண்டு அதே சமயம் உள்ளே போன ஸ்திரீ, வீட்டு வேலைக்காரியாகத்தான் இருக்க வேண்டும்.ஆமாம். அவள் உள்ளே தலையைக் காட்டிய உடனேயே அவன் மாமி அவளைக் கோபித்துக் கொண்டாள். “ஏண்டி, தில்லைக் கண்ணு- என்ன நாளுக்கு நாள் மோசமாகிண்டிருக்கு! தெருவிலே எல்லோர் வீட்டு வாசலிலேயும் சாணி தெளிச்சுக் கோலம் போட்டு அரை நாழியாறது; நீ இப்பத்தான் வரே” என்றாள். 

“போ பாட்டி! தில்லைக் கண்ணுவைக் கோவிச்சுக்காதே! பாவம்! அவ புருஷன் சண்டைக்குப் போயிட்டு ஆறு வருஷம் கழிச்சு முந்தா நாள் தான் வந்திருக்கான்” என்றது ஒரு சிறுமியின் குரல். 

தில்லைக் கண்ணுவின் குரலே கேட்கவில்லை என்று கவனித்தான் மேஜர் மூர்த்தி, ஒரு பத்துநிமிஷ நேரத்திற்குள் அவள் கையில் வாளி ஜலம், ஒரு விளக்குமாறு, கோல டப்பா முதலியவற்றுடன் வெளியே வந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த பெண் – ஐயா என்ற பெயர் அவளுக்கு என்று ஞாபகப் படுத்திக் கொண்டான் மூர்த்தி – ” நான் இன்னிக்கு தேர்க்கோலம் போடறேண்டி, தில்லைக்கண்ணு.” என்று கூறிக் கொண்டே வந்தாள். 

“பெரிய கோலமா போடம்மா போடு. இன்னிக்கு உன்னைப் பார்க்க உன் புருஷன் வரப்போறானேல்லியோ. தேர்க்கோலம் போடு தில்லைக் கண்ணு” என்றாள் கேலியாக. 

“போடி! உனக்கு வேறென்ன வேலை!” என்று கூறிக் கொண்டே ஐயா கோலமாவு டப்பாவைக் கையில் எடுத்தாள். 

பல் தேய்த்துக் காபி சாப்பிட உள்ளே போனான் மேஜர் மூர்த்தி. 

அத்தியாயம்-7 

சிவராமையராத்துக்குக் கீழண்டை மூன்றாவது வீட்டுக்குச் சொந்தக்காரர் மகாலிங்கையர். தெருவிலே பெரிய மனிதர் என்ற பெயர் அவருக்கு. பெயரளவில் பெரிய மனிதர் அவர். வாழ்க்கையில் மிகவும் சின்ன மனிதர். 

கிராமச் சமுதாயத்திலே என்றும் இந்த மாதிரி சின்ன மனிதர் களுக்குக் குறைவு இருந்தது கிடையாது என்று தான் சொல்லவேண்டும். கிராமத்து மனிதர் குறுகிய மனப்பான்மையுடையவர் என்று சொல்லி, என்னென்ன குணாதிசயங்களைக் கேவலம் மனுஷ்யத்துவம் அழறது என்று எண்ணுவோமோ அவ்வளவும் அவரிடம் குடிபுகுந்திருந்தது. 

பக்கத்து வீட்டில் மேளம் கொட்டினால் மகாலிங்கையருக்குக் கண்ணில் ஜலம் வந்து விடும். கண்ணிலோ, காதிலோ கோளாறில்லை. மனசில்தான் உள்ளது கோளாறு எல்லாம். பிறர் சுகமாக வாழ்வதைக் கண்டு மனம் பொங்குவார் அவர். மற்றவன் நன்றாகச் சாப்பிடுவதை ஒரு நாள் கண்ணாரக் கண்டு விடுவாரேயானால் இரண்டு நாள் அவர் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிடுவார்! மகானுபாவர்! பட்டுக்கரை வேஷ்டி கட்டிக் கொண்டு போகிற பையனை பார்த்தால் கோபம் வரும் அவருக்கு. “உன் பவிசுக்கு என்னடா பட்டுக்கரை வேஷ்டி” என்பார். உலகத்து நியாயத் தராசையே தன் கையில் வைத்திருப்பவர் போலச் சக்கர வட்டமாகப் பேசுவார். அந்தப் பேச்சு ஒன்றுதான் அவருக்கு எஞ்சியிருந்த கௌரவம் மற்ற கௌரவமெல்லாம் அற்று விட்டது அவருக்கு என்று கூறுவது மிகையாகாது. 

சர்வமானிய அக்கிரகாரத்துப் பிள்ளையார் கோவில் டிரஸ்டி அவர். அதாவது பிள்ளையாருக்கென்று தலைமுறை தலைமுறையாக வந்தி ருந்த ஏழெட்டு மாமரங்களும், படுகை நிலம் பத்து செண்டும் இந்தத் தலைமுறையில் பிள்ளையாருடையது அல்ல மகாலிங்கையருடையது தான். காவிரிக்கரை மடத்துச் சாவியும் அவரிடம் தான் இருந்தது. தெருவாருக்கு இன்னமும் மகாலிங்கையரிடம் பிள்ளையார் கோவில் சாவியும் மடத்துச் சாவியும் இருந்தது ஆட்சேபகரமாகத்தான் இருந்தது – ஆனால் பிள்ளையாருக்கே ஆட்சேபம் இல்லாதபொழுது தெருவார் என்ன செய்ய முடியும்? எதுவும் செய்யாமல் தான் இருந்தார்கள், தெருவார்கள். பிள்ளை யார் விரும்பினாரானால் தன்னுடையதைக் கேவலம் ஒரு தனிமனிதனிடமிருந்து மகாலிங்கையரைப் போன்ற ஒரு மனிதரிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளமுடியாதா? 

மகாலிங்கையர் பெரிய குடும்பத்தில் உதித்தவர். அதாவது ஒரு காலத்தில் சாத்தனூரில் செல்வாக்கும் செல்வமும் நிறைந்திருந்த வம்சத்தில் வந்தவர். மகாலிங்கையரின் தாத்தா காலத்திற்கு முந்தியே செல்வம் போய் விட்டது. வாயளவில் செல்வாக்கு மட்டும் மகாலிங்கையர் வரைக்கும் வந்து விட்டது. அவருக்குப்பின் அவர் பிள்ளை சுப்புணிக்கு அந்தச் செல்வாக்கும் மிஞ்சாது என்றுதான் தோன்றியது. ஆனால் சுப்புணி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனுடைய கவலை எல்லாம் தன்னுடைய ஒரே எருமை மாட்டைப் பற்றித்தான். 

சுப்புணியைத் தவிர மகாலிங்கையருக்கு இன்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நகரத்துப்பேர் வழிகள் -ஒருவன் கும்பகோணத்தில் சின்ன வக்கீலாகவும், ஊருக்கு வந்தால் பெரிய மனிதனாகவும் இருந்தான். அவன் பெயர் ராமச்சந்திரன். அவன் பிள்ளை குட்டிகளுடன் கும்பகோணத்திலேயே வசித்து வந்தான். அவசியம் நேர்ந்தாலொழிய சாத்தனூர் கிராமத்திற்கு வருவது கிடையாது. சுப்புணிக்குத் தன் “ஜ்யேஷ்டபிராதா, அண்ணா ‘eldest brother’ இடம் அலாதிப் பிரியம் – அவனை அண்ணா என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளமாட்டான் சுப்புணி. சம்ஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் சேர்த்துச் சொன்னால்தான் அவனிடம் தனக்குள்ள மரியாதையைக் காண்பித்த மாதிரி என்கிற ஞாபகம் போலும் அவனுக்கு. சம்ஸ்கிருதம் அவனுக்கு இரண்டொரு வார்த்தைகள் தெரிந்திருக்கலாம். ஆங்கிலத்தில் அவன் அறிந்தது இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுந்தான். சமயம் வாய்த்தபோதெல்லாம் தன்னுடைய eldest brother ஐப் பற்றி சுப்புணி பேசத் தொடங்கியதற்கு இது ஒரு காரணம் என்று சொல்லுகிறவர்கள் உண்டு. ஆனால் உண்மையிலேயே சுப்புணிக்குத் தன் அண்ணாவிடம் அளவுக்கு மீறிய, உண்மையிலேயே அனாவசியமான மதிப்பு உண்டு. 

மகாலிங்கையருடைய மூன்றாவது பிள்ளை நடேசன். வடக்கே எங்கேயோ ஒரு ஊரில் ஒரு சின்ன ஆபீசில் ஒரு சின்ன குமாஸ்தாவாக இருக்கிறான். ஏதோ ஒரு சமஸ்தானத்தில் – பெயர் தமிழ் உச்சரிப்புக்குச் சரிப்பட்டு வராத ஒரு ராஜ்யத்தை ஆளுகிற பிரதிநிதிக்கு கீழ்ப்பட்ட பிரதிநிதிக்கு எட்டாவது குமாஸ்தாவின் ஒன்பதாவது குமாஸ்தா நடேசன். ஆனால் அந்த, வாயில் பெயர் நுழையாத, சமஸ்தானத்துக்கே நடேசன்தான் திவான் என்கிற முறையில்தான் சாத்தானூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில், முக்கியமாக மகாலிங்கையர் வீட்டில் பிரஸ்தாபம். “மகராஜாவோடே எங்க நடேசன் பேசிண்டிருக்கச்சே..” என்று மகாலிங்கையர் பேசத் தொடங்குவார். நடேசன் சாத்தனூருக்கு வருவது மிகவும் அரிது- ஒரு சமயம் வந்த போதும் சமஸ்தானத்துக் கௌரவம் பூராவையும் தெரு தாங்காது என்று கண்டுகொண்டு விட்டான். குமாஸ்தா உத்தியோகம் ஆனபிறகு அவன் இரண்டாவது தடவை இன்னும் சாத்தனூருக்கு வரவில்லை. 

இந்த மூன்று பிள்ளைகளைத் தவிர மகாலிங்கையருக்கு இரண்டு பெண்களுண்டு, பெண்களின் அதிருஷ்டம் – அவர்கள் இருவருமே நல்ல இடங்களில் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். பிள்ளை குட்டிகளுடன் அசட்டுக் கௌரவம் எதையும் வேண்டாமலே உண்மையில் ரொம்பவும் சௌகரியமான வாழ்க்கை நடத்திவந்தார்கள். அவர்கள் இருவராலும் மகாலிங்கையருக்கும், அவர் பிள்ளைகளுக்கும் லாபம்தான். அடிக்கடி சாத்தனூர் வந்து போவார்கள் இருவருமே. 

தன் குடும்பத்தைத் தவிர, தன் தம்பியின் குடும்பத்தையும் சேர்த்துக் கண்காணித்துக் கொள்கிற பொறுப்பு பல வருஷங்களுக்கு முன்பே ஏற்பட்டிருந்த மகாலிங்கையர் தம்பியின் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டதுமல்லாமல், தம்பியின் மனைவியை ரொம்பவும் கவனமாகவே பார்த்துக் கொண்டார் என்று தெருவிலே விஷமமாகச் சொல்வார்கள். அது எப்படியானாலும் இப்போது மகாலிங்கையருக்கும் அவருடைய தர்ம பத்தினியல்லாத தர்மாம்பாளுக்கும் விஷய சுகங்களில் ஈடுபடுகிற வயசெல்லாம் கடந்து பல வருஷங்களாகிவிட்டன. 

தர்மாம்பாளுக்கு ஐந்து பிள்ளைகளும், நாலு பெண்களுமுண்டு. பெண்களெல்லாம் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஏதோ சுமாரான இடங்களில் வாழ்க்கைப்பட்டு சௌகரியமாகவே இருந்தார்கள். அவளுடைய பிள்ளைகளும் பலவிதமான தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவன் வக்கீல் – பட்டிணத்திலே சுமாராக ஜீவனம் நடத்தி வந்தான். ஒருவன் பள்ளி உபாத்தியாயர் திருச்சி ஜில்லாவிலே ஊர் ஊராகப் போய்க் கொண்டு இருந்தான். ஒருவன் புனாவிலே மிலிடெரி அக்கவுண்ட் ஸில் குமாஸ்தா. நாலாமவன் படித்துப் பட்டம் பெற்ற பிறகு சென்னையிலே சொல்ப அளவிலே ஏதோ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான். யுத்த காலத்திலே ஏதோ பிளாக் மார்க்கெட் உதவியால் பணம் சுமாராகச் சேர்த்திருந்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். 

புனாவில் மிலிடெரி அக்கவுண்ட்ஸ் வேலையாயிருந்தவன் பெயர் சாமா. அவன், தன் பெண்டாட்டி. பிள்ளைகளுடன் ஒரு மாச லீவில் வந்து இப்போது சாத்தனூரில் ஒரு வாரமாகத் தங்கியிருக்கிறான். 

விடியற்காலையில் தலையில் முண்டாசை வரிந்து கட்டிக் கொண்டு கையில் மூங்கில் கழியுடன் வீட்டை விட்டுக் கிளம்பிய தன் பெரியப்பா மகாலிங்கையரைச் சாமா கேட்டான்: “காவேரிக் கரைப் பக்கமா..?” 

“இல்லை, தெருக்கோடிப் பிள்ளையார் கோயில் வரைக்கும்” என்று பதில் அளித்தார் மகாலிங்கையர், 

அந்தப் பிள்ளையார் கோவிலுக்குத்தான் மகாலிங்கையர் டிரஸ்டி. தினமும் எழுந்தவுடன் பல்கூடத் துலக்காமல் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு போய்ப் பிள்ளையார் கோயிலைத் திறந்து பிள்ளையாரைத் தரிசித்துவிட்டு, ‘சௌக்கியமா?’ என்று குசலம் விசாரித்துவிட்டு முண்டாசை அவிழ்த்துத் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, தலையில் நாலு குட்டுக் குட்டிக்கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட்டுவிட்டு வருவது மகாலிங்கையருடைய பழக்கம். இந்த ஐம்பது வருஷ காலத்தில் உடம்பு சரியில்லாத நாள் என்றுகூட, அவர் இந்த வழக்கத்தில் தவறினவர் இல்லை. பிள்ளையார் பக்தி அல்ல இதற்குக் காரணம். அது தெருவாருக் கும் வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். ஏதோ பழக்கம் – அவ்வளவு தான். அவருடைய கையிலிருந்த மூங்கில் தடி அவர் கையிலே ஐம்பது வருஷங்களுக்கு மேலாக சர்வீஸ் பார்த்திருந்தது. ஒரு சமயம் அதன் உதவியால் ஏழு வழிப்பறிக்காரர்களைக் கழி சுத்தி விரட்டியிருப்பதாக மகாலிங்கையர் அடிக்கடி சொல்வார். அது எவ்வளவு நிஜமோ? அந்த விஷயம் மகாலிங்கையரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ‘மகாலிங்கையரைவிட அந்த மூங்கில் தடிக்கு ஆயுசு கெட்டி’ என்று வைத்துப் பார்க்கும்போது ஒரு விந்தையான பிரச்னை எழும். 

பிள்ளையார் கோயிலுக்குத் தினம் அதிகாலையில் போகிற பழக்கத்தை பழக்க வேகத்தில் அந்தத் தடி மட்டும் செய்யுமா? மகாலிங்கையர் போனபிறகும் அது தானாகவே நடந்து போகுமா? பிறர் கையில் ஏறிக்கொண்டு அவரும் மகாலிங் கையர் மாதிரி தினம் பிள்ளையார் கோயில்வரை போய்விட்டு வர வற்புறுத்துமா என்பது ரஸமான பிரச்னைதான். மகாலிங்கையர் செத்த பிறகுதான் தெரியும் அது. 

மகாலிங்கையர் ஒன்றும் அப்படிச் சீக்கிரம் செத்து விடுவதாகவும் இல்லை. பள்ளிக்கூட உபாத்தியாயராக – அவர் அப்படி ஒன்றும் அறிவாளி அல்ல நாற்பது வருஷங்கள் கத்தித் கத்தித் தொண்டைக் குழிக்கு வலுவு ஏற்றி வைத்திருந்தார். அவர் சாத்தனூரில் பல தலைமுறைப் பையன்களின் காதுகளைப் பதம் பார்த்துக் கைளுக்கு வலுவு ஏற்றிக் கொண்டிருந்தார். ட்வில் ஷர்ட் போட்டுக்கொண்டு தங்கமல்லாத தங்கப் பொத்தான்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு தன் மாரைத் தானே பார்த்துக்கொண்டு நடக்கக் கிளம்பினாரானால் ஆறு மைல் சளைக்காமல் நடப்பார். அவருக்கு வயது கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆகிவிட்டது. கிழவர் என்று அவரைச் சொல்ல முடியாது. நடை தளரவில்லை. தலையில் நரையில்லை. உடலில் தளர்ச்சியில்லை. கண்கள் மங்கவில்லை. பற்கள் மட்டும் பல உதிர்ந்து விட்டன, அவ்வளவுதான். மனசிலும் உள்ளத்திலும் உடம்பிலும் வாலிபம் நிறைந்திருந்தது. அவர் அதிருஷ்டக்காரர்தான். 

“கேட்டேளா அக்கிரமத்தை!” என்று கூறிக்கொண்டே சிவராமையர் வீட்டுத் திண்ணையிலிருந்து இறங்கிவந்து தம்மைப் பிடித்த நச்சுவாய்க் கிழத்தின் தொணதொணப்பிலிருந்து தப்ப அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. “பால சுப்பிரமணிய ஐயர் உங்களை ஏதோ அவசர காரியமாக அரைமணியாத் தேடறாரே!” என்று மகாலிங்கையர் சொன்னதுதான் தாமதம். உலகில் உள்ள அநியாயங்கள், அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, பாலசுப்பிரமணிய ஐயரைத் தேடிக்கொண்டு கிளம்பி விட்டார் தொணதொணப்புக் கிழவர். 

மகாலிங்கையர் வழக்கம்போல அமைதியாகப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று நாலுதரம் குட்டிக்கொண்டு மூன்று தரம் தோப்புக் கரணம் போட்டுவிட்டு வீடு திரும்பினார். 

அத்தியாயம்-8 

பாலசுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒரு சகோதரத் தொழிலாளி, தொணதொணப்புக் கிழங்களிலே சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே அவருக்குத்தான் முதல் ஸ்தானம் கொடுக்கவேண்டியதாக இருக்கும். இரண்டாவது ஸ்தானத்துக்கு லாயக்கானவர்தான் நமக்கு ஏற்கெனவே பரிசய மான வேங்கடராமையர் என்பவர். 

சர்வமானிய அக்கிரஹாரத்தின் தென்னண்டைச் சாரியில் கீழண்டைக் கோடி வீடு பாலசுப்பிரமணிய ஐயருடையது. 

கோடி வீடு அவருடையதாக இருப்பது சர்வமானிய அக்கிர ஹாரத்துக்கே மிகவும் நல்ல காரியம் என்று தெருவார் சொல்லுவார்கள். தீவட்டிக்கொள்ளைக்காரன் யாராவது பாலசுப்பிரமணிய ஐயரைச் சந்தித்து அவரோடு பேச்சுக் கொடுத்துவிட்டானானால் போதும். அவரிடம் இருந்து தப்பி வருவதற்குள் பொழுது விடிந்துவிடும் என்பார்கள். தீவட்டிக் கொள்ளைக்காரன், எரிந்து கருகிவிட்ட தீவட்டிகளுடன் வெறுங்கையை வீசிக்கொண்டு திரும்ப வேண்டியதுதான் என்பார்கள். இது நிஜமோ? பொய்யோ? யாரும் சொல்லமுடியாது. இரண்டு தலைமுறைகளில் சர்வமானிய அக்கிரஹாரத்தில் நடந்த ஒரே கொள்ளை, மேலண்டைக் கோடியில் தொடங்கியதுதான் அதிசயம். தீவட்டிக்கொள்ளைக்காரன் உரிய சிக்ஷையை மட்டுமன்றி, பாலசுப்பிரமணிய ஐயரையும் தப்பிவிட்டான். அவன் அதிருஷ்டம் அவனுக்குத் தெரியுமோ என்னவோ? 

பாலசுப்பிரமணிய ஐயர் சுகஜீவி. அவர் எதற்காக ஜீவித்தார் என்று சொல்வது வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம். அவர் எப்படி ஜீவித்தார் என்று சொல்வது சுலபம். சர்வமானிய அக்கிரஹாரத்திலே ஒரு வீடு, சர்வமானிய பூமியிலே ஓர் ஏக்கரா நிலம், படுகையிலே ஒரு வாழைத் தோட்டம். அக்கரையிலே ஒரு மாந்தோட்டம் – இவ்வளவும் இருந்தன அவருக்கு. தன்னந் தனியான மனிதர். அந்த வீட்டிலே வசிக்கப் பல்லிகளையும் பாலசுப்பிரமணிய ஐயரையும் தவிர வேறு யாரும் கிடையாது. அவருக்கு வாழ்க்கை சாத்தியமாக இருந்ததே, அவருடன் பேசுவதற்கு எதிர்பட்ட அப்பாவி ஜீவன்களால்தான் என்று கூறுவது மிகையே ஆகாது. 

அவருக்குத் தெரியாத விஷயம் என்று உலகில் ஒன்றும் கிடையாது. தீவட்டிக்கொள்ளைக்காரன் வந்து அவரிடம் மாட்டிக் கொண்டிருந்தானானால், அவரிடம் தீவட்டிக் கொள்ளையைப்பற்றியே இரவு பூராவும் பேசிவிடுவார் அவர். அவர் ஏதோ ஒரு காலத்தில் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவராக இருந்திருக்க வேண்டும் என்கிற தீர்மானத்துடன்தான் அவன் திரும்ப முடியும். தீவட்டிக் கொள்ளை முதல் தீவாந்தரசிக்ஷை வரையில் அவருக்கு எல்லா விஷயங்களும் எப்படியோ தெரிந்திருந்தன என்பதுதான் அவரைப்பற்றிய வரையில் சுவாரசியமான விஷயம். கொல்லனிடம் கொல்லு வேலையைப்பற்றி ‘அத்தாரிடி’யுடன் பேசுவார் அவர். கொல்லன் தான் கடைசியில் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். தாவரசாஸ்திர மாணவனுடன் தாவரம் பேசுவார் அவர். அவருடைய அறிவு பள்ளிப்புஸ்தகங்களிலே ஏறியதில்லை. அவர் சொல்கிற பெயர் வேறாக இருக்கலாம். விஷயம்; ஒன்றுதான்! எல்லாவற்றையும் பார்த்து வைத்துக்கொள்ள அவருக்குப் பொழுது எப்படித்தான் இருந்ததோ, யாருக்கும் தெரியாது. 

அவர் பேசுவதைக் கேட்க அவருக்கு மனிதன் தான் வேண்டு மென்பதில்லை. வீட்டு வாசலிலே உள்ள பூத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டேயிருப்பார். நேற்றிரவு விழுந்து செத்துவிட்ட வெட்டுக்கிளியுடன் மனிதனுடைய இல்வாழ்க்கை இன்ப ரகசியங்களை எல்லாம் பேசிக்கொண்டேயிருப்பார். 

கன்றுக்குட்டிக்கு வைக்கோல் பிடுங்கிப் போடும்போது வைக் கோல் போருடன் பேசிக்கொண்டேயிருப்பார்; கன்றுக் குட்டியுடன் பேசுவார். கன்றுக்குட்டிக்கு அவர் பேச்சுப் புரியாது. ‘மே’ என்கும். வாலைக் கிளப்பிக்கொண்டு துள்ளிக் குதித்தோடித் தன் ஆக்ஷேபத்தைத் தெரிவிக்கும். அதற்கு எல்லாம் சளைத்துவிட மாட்டார் பாலசுப்பிரமணிய ஐயர். அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டேதான் இருப்பார். கன்றுக்குட்டி துள்ளி ஓடிவிட்டால் என்ன? அது கட்டியிருந்த கால், இருந்த இடத்திலேயே தான் இருக்கும்! 

பாலசுப்பிரமணிய ஐயர் ஏகாங்கி. ஓயாமல் பேசுகிற இந்தப் பழக்கந்தான் அவரை ஏகாங்கியாக்கிவிட்டது என்று சொல்வார்கள். கன்றுக்குட்டி துள்ளி ஓடிப்போன மாதிரி அவர் உறவினர்கள், ஒருவர்பின் ஒருவராகத் துள்ளி ஓடிவிட்டார்கள். சிலர் துள்ளி ஓடிச் சாவையே எட்டி விட்டார்கள். சிலர் வேறு வியாஜமாகப் போனவர்கள் திரும்பவேயில்லை. ஊமைகள்மட்டும் வசிக்கிற நகரம் ஏதாவது உண்டா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வதந்தி. அவர் மனைவிக்கு, காரணம் என்னவோ யாரும் சொல்வதற்கு இல்லை. உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிட்டது 

பிடித்துவிட்டது. ஒரு நாள் புடைவையைக் கிழித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளிவந்தவள், தெருவை விட்டு வெளியேறிவிட்டாள். ஊர் திரும்பவில்லை அவள். பாலசுப்பிரமணிய ஐயருக்கு அவளைத் தேடிக்கொண்டு போக நேரம் கிடைக்கவில்லை. அவர் பேசி முடித்த பிறகுதானே நேரம் கிடைக்கும். பேசுவதற்கு, செத்துக்கிடந்த வெட்டுக்கிளி முதல் கன்றுக்குட்டி கட்டுகிற கால்வரையில் இருக்கும்போது அவர் பேசி ஓய்வது தான் ஏது? 

மாட்டைக் கறந்து, பாலைக் காய்ச்சி, காபி போட்டுச் சாப்பிட்டு விட்டு அதிகாலையிலேயே வாசல் திண்ணைக்கு வந்து விட்டார் பாலசுப்பிரமணிய ஐயர். கிழக்கே வெளுத்திருந்தது. உதயசூரியனை வார்த்தை சொல்லி வரவேற்றார் அவர். தேவகாலத்து முனிவர்களுக்குப் பிறகு அவர்தாம் சூரியனை நேருக்கு நேர் அழைத்துப் பேசிய மனிதராக இருக்க வேண்டும். சூரியபகவான் இந்தப் பேச்சைக் கேட்டுச் சற்றுத் துரிதமாகவே உயரக் கிளம்பி வந்தான். 

காற்றிலே அலைந்தாடிய மூங்கில் புதர் சலசலத்தது. கழியோடு கழி உரசப் பேசியது. பாலசுப்பிரமணிய ஐயரும் பேசினார்; கவியைத் தவிர வேறு யார் மூங்கிற்புதரையும் சூரிய பகவானையும் ஆவாஹனம் செய்து கொண்டு அவற்றுடன் நேருக்கு நேர் பேசிவிட முடியும்? பாலசுப்பிரமணிய ஐயர் பைத்தியம் அல்ல; கவி. ஆம்; கவிதான். 

இந்த மானிட கவியைச் சந்திக்கச் சற்றே மட்டமான கவியான வேங்கடராமையர், சூரியபகவானைக் கண்குளிரப் பார்த்துக்கொண்டே வந்தும்! தாம் வந்தது சங்கிலிப் பாட்டிக்குச் சகுனத் தடையாக அமைந்தது என்பதை அவர் கவனிக்கவில்லை. 

சங்கிலிப்பாட்டி வடவண்டைச் சரகத்தின் கீழண்டைக் கோடியில் இரண்டாவது வீட்டில் வசிப்பவள். அவள் ஒரு அவசர காரியமாக மேலண்டைக் கோடியில் இருந்த சாஸ்திரிகள் வீட்டை நாடி, வெளியே தெருவில் கால் வைத்ததுதான் தாமசம்; அவள் கண்ணிலே பட்டு விட்டார் வேங்கடராம ஐயர். 

“கரியாப் போவான், படுபிராமணன்! ஒத்தைப் பிராமணன் எதிர்ப்படுகிறானே. காரியம் என்ன ஆகுமோ! முருகப் பெருமானே, நீயே துணை!” என்று தயங்கினாள் ஒரு விநாடி 

சங்கிலிப் பாட்டியின் பேரன் அன்று டைப்ரைட்டிங் பரீக்ஷைக்குப் பணம் கட்டத் தன் பாட்டியைப் பணம் கேட்டிருக்கிறான். பன்னிரண்டு ரூபாய் கட்டவேண்டுமாம். இந்தத் தடவையாவது ஸ்வாமி புண்ணியத்திலே பரீக்ஷை தேறணுமே என்று எண்ணி, இன்றில்லாவிட்டால் நாளை, மறுநாளாவது பணங்கட்ட நல்லநாள் பார்த்துச் தரச் சொல்ல வேண்டும் என்று சங்கிலிப்பாட்டி சாஸ்திரிகள் வீட்டை நோக்கிக் கிளம்பினாள், வேங்கடராம ஐயன் சனீசுவரன்மாதிரி எதிரே வந்து கொண்டிருந்தான். ‘இந்த வருஷமும் அருமைப் பேரனுக்குப் பரீக்ஷை தேறாமல் போய்விட்டால்?” என்று சிந்தித்தாள் பாட்டி. சாஸ்திரிகளைக் கேட்டு நல்ல நாள் பார்த்துப் பரீக்ஷைக்குப் பணங் கட்டச் சொல்லிப் பேரனுக்குப் பணம் தந்தாலும் அவன் தேறப்போவதில்லை என்கிற ரகசியம் அவளுக்கு எப்படித் தெரியப் போகிறது? பரீக்ஷைக்குக் கொடுக்கிற பணம் சென்ற வருஷங்களில் கொடுத்த பணம் போலவே கும்பகோணம் ஹோட்டல்களுக்குத்தான் போகும். பரீக்ஷை அதிகாரிகளுக்குப் போய்ச் சேராது என்பது பாவம், பாட்டிக்குத் தெரியாது! 

டைப்ரைட்டிங் பரீக்ஷை கொடுத்துச் சிரமப்பட்டுப் பாஸ் செய்து, அதற்குப் பிறகு சிரமப்பட்டு வேலைபார்த்துச் சிரமப்பட்டுச் சம்பாதிப்பது என்னவோ தூரத்து லட்சியம்; அநேகமாக நடக்காத காரியம் என்பது அவள் பேரனுக்குத் தெரியும். டைப்ரைட்டிங் பரீக்ஷையை வைத்து உடனடியாகச் சம்பாதித்துக் கொண்டுவிடுகிற காரியம் அந்தப் பையனுக்குச் சுலபமாக இருந்தது. 

அவளுடைய பேரன் அறிவாளி; பிழைக்கிற பிள்ளை. அவன் பெயர் குபீல் சுவாமிநாதன். ‘குபீல் குபீல்’ என்றுதான் சிரிப்பான் அவன், அதனால் அவனுக்கு அந்தப் பெயர். சங்கிலிப் பாட்டிக்கு அவன், பெண் வயிற்றுப் பேரன். கும்பகோணத்தில் ஹைஸ்கூலில் படிப்பதாகப் பெயர், சுயமாகவே அறிவாளியாதலால் அவன், பள்ளிப்படிப்பு பலனளியாத காரியம் என்று ஆரம்பமுதலே தீர்மானித்து நடந்துகொள்ளத் தொடங்கி விட்டான். சீட்டாடவும் சீட்டியடிக்கவும், சினிமா பார்க்கவும் கும்பகோணத்திலே கற்றுக் கொண்டிருந்தான்; அதுவும் படிப்புத்தானே! 

தன்னுடைய பேரப்பிள்ளைகளிலே இந்தப் பிள்ளையிடத்தான் சங்கிலிப்பாட்டிக்கு அபார வாஞ்சை அவனை அவன் தகப்பனிடமிருந்து பிரித்துத் தன்னுடன் சாத்தனூரில் கொண்டு வந்து வைத்துக்கொண்டு, ‘சாமாவுக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும்’ என்று சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். பையன் சாப்பிடுவதிலே மட்டும் வஞ்சனை பண்ணுவதில்லை. 

சங்கிலிப்பாட்டிக்கு ஒரே லட்சியம் தன் வாழ்க்கையில் தன் பேரப்பிள்ளை டைப்ரைட்டிங் பாஸ் பண்ணிவிட வேண்டும். அந்தக் குப்பிப்பாட்டியாத்து ராமரத்தினத்திற்குப் போட்டியாகச் சென்னை பட்டணத்திலே ஓர் ஆபீஸிலே குமாஸ்தாவாக வேலைக்கு அமர்ந்துவிட வேண்டும். அதற்கானது எதுவும் செய்ய அவள் தயாராக இருந்தாள். 

வீடு வாசலென்று அவளுக்கும் சொற்ப சொத்து இருந்தது, பையன் டைப்ரைட்டிங் பாஸ் பண்ணுவதாக ஆசைக் காட்டி, வீட்டை விற்றுப் பணம் தா என்று கேட்டிருந்தால்கூடக் கொடுத்திருப்பாள். பையனுக்குத் தற்சமயம் கிடைத்த பதினைந்து ரூபாய் போதுமானதாக இருந்தது. 

நல்ல காரியமாக, கிளம்பிக் கொண்டிருக்கிற சமயத்திலே திடீரென்று எதிரே ஒற்றைப் பிராமணன் முளைத்தானே என்று வேங்கட ராம ஐயரைத் திட்டிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டை நோக்கி நடந்தாள் அவள். 

சங்கிலிப்பாட்டியின் நீண்ட நிழல் அவள் முன் சென்றது. அவளுக்கு முன் அவள் நிழல்தான் வைத்திநாத தீக்ஷிதரின் வீட்டு வாசலைத் தொடும். 

ஆனால் அவளுடைய நிழல் வைத்திநாத தீக்ஷிதரின் வீட்டைத் தொடுவதற்குமுன் அவளைத் தொட்டுவிட்டாள் குப்பிப் பாட்டி 

குப்பிப்பாட்டியும் சங்கிலிப்பாட்டியும் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தின் நிரந்தரவாசிகள்; அழியாத செல்வங்கள். தெருவில் வீடுகள் பாழ்த்துக்கொண்டிருந்தன. குடும்பங்கள் நசித்துக்கொண்டிருந்தன. ஊர் விட்டு ஊதியம் தேடிக் கிளம்பியவர்கள், கிடைத்த ஊதியம் போதாமல், ஊரிலிருந்த பிதுரார்ஜிதமான வீட்டையும் வாசலையும் தின்று தீர்த் துக்கொண்டிருந்தனர். தெருவில் காலைநிழல் குறுகிப் பின்னோடி மறைந்து விடும். ஒவ்வொன்றும் விநாடிக்கு ஒரு வண்ணமாக மாறிக் கொண்டிருந்தன. குப்பிப் பாட்டியும் சங்கிலிப்பாட்டியும் மட்டும் மாறுவதில்லை. கிராமத்தின் நேற்றைய சரித்திரத்தில் அடுத்தடுத்த – ஆனால் மிகவும் வித்தியாசமான பக்கங்கள் இந்த இரண்டும். 

சங்கிலிப்பாட்டிக்குத் தன்னுடைய அருமந்த, டைப்பிஸ்டு ஆக இருந்த அந்தப் பேரனைத் தவிர யாரும் கிடையாது; யாரும் தேவையில்லை, அவளுக்கு. குப்பிப்பாட்டிக்கு வீடு கொள்ளாமல் பேரனும் பேத்தியும் கொள்ளுப் பேரனும் கொள்ளுப் பேத்தியுமாக இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய சுக துக்கங்களிலும் தினசரித் துயரங்களிலும் உற்சாகங் களிலும் பூரணப் பங்கு எடுத்துக் கொண்டிருந்தாள் குப்பிப்பாட்டி அவள் பிறந்தது சிவகங்கையில். வடக்கத்தி வடமாள் என்கிற பெருமையுடன் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே செயலுள்ள ஒரு மிராசுதாருக்கு வாழ்க்கைப் பட்டாள். இப்போது சிவகங்கை ஏதோ ஒரு பூர்வ ஜன்ம ஞாபகந்தான் அவளுக்கு. அவள் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்து விட்ட பிறகு, ஒரு நாளாவது சிவகங்கைக்குத் திரும்பியதில்லை. 

அவள் கணவன் நீளமடி கட்டிக்கொண்டு, சதா வாய் ஓயாமல் வெற்றிலைபாக்கை – கடைவாய் சிவப்பாய் வழிய – மென்று கொண்டே பெரிய ஆஸ்தியை ரங்காட்டம் ஆடியே தீர்த்துவிட்டவன். ஆனால் அவன் தீர்த்து முடிப்பதற்கும், அவன் மூத்த பிள்ளை தலைப்பட்டு பி.ஏ. ஆனர்ஸ் பரீட்சையில் பிரமாதமாகத் தேறி, ஐ.ஏ.எஸ். பரீக்ஷை கொடுத்துத் தேறாமல் நல்ல வேலை சம்பாதித்துக் கொள்வதற்கும் சரியாக இருந்தது. பிள்ளை, தன் தாயாரைக் கொண்டிருந்தான். டெல்லியில் 1925-ல் சர்க்கார் இலாகாவில் சின்னக் குமாஸ்தாவாகத் தொடங்கியவன் அஞ்சாமல் கொள்ளாமல் வருஷத்துக்கு ஒரு டிபார்ட்மெண்டு பரீக்ஷை தேறி, ஏழெட்டு வருஷங் களில் பெரிய வேலையையும், நிறையச் சம்பளத்தையும் எட்டிவிட்டான். அவன் தம்பிகள் நால்வரும் அவன் நிழலிலே தலை தூக்கினார்கள். அவன் தங்கைகள் இருவருக்கும் அவன் சம்பாத்தியத்திலேயே கல்யாணமாயிற்று. குப்பிப்பாட்டி அதிருஷ்டசாலிதான். அவளுடைய மூத்த பிள்ளை சோடை போகவில்லை. 

இது எவ்வளவு பெரிய அதிருஷ்டம் என்பது மூத்த பிள்ளை சரியில்லாது அவஸ்தைப்பட்ட குடும்பங்களுக்கே தெரியும்! 

குப்பிப்பாட்டியினுடைய கணவன் இறக்கும்போது அவருக்கு வயது ஐம்பதுக்குமேல் ஆகிவிட்டது. குப்பிக்கு நாற்பத்தைந்துக்குமேல் இருக்கும். நல்ல குடும்பம் கெட்டு மீண்டும் திருந்திவிட்டது. தன் கணவன் இருக்கும்போதே அவனையும் அவனுடைய நீண்ட மடியையும் பழக்க வழக்கங்களையும் பொருட்படுத்தாமலே வாழப் பழகிவிட்டாள் அவள். அவன் போனதற்கு அழுது தீர்க்கவேண்டுமே. இல்லாவிட்டால் ஊரார் என்ன நினைப்பார்களோ என்று அழுது தீர்த்தாள் என்று சொல்லலாமே தவிர, வேறு உண்மை உணர்ச்சி அவளை உந்தியது என்று சொல்வதற்கில்லை. விதவைக்கோலம், சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்துப் பெண்களுக்குப் பரிச்சயத்தால் பயத்தை இழந்துவிட்ட ஒரு நிலைமையே தவிர வேறு அல்ல. பிரம்மசாரி, கிருஹஸ்தன், சந்நியாசி என்று புருஷர்களுக்கு மூன்று பருவ வாழ்க்கை சொல்வதுபோல, பெண்களுக்குக் கன்னி, கிருஹினி, விதவை என்கிற மூன்று பருவ வாழ்க்கைகளும் சகஜமானவை தான் என்கிற நினைப்பு உண்டு. 

சாதாரணமாகச் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதவையாவது உண்டு. ஒவ்வொரு விதவைக்கும், அவரவர் குடும்பத்திலே உரிய இடம் உண்டு; உரிய அன்பு உண்டு, குடும்பத்தாரின் உள்ளங்களிலே. ஹிந்துக்குடும்பங்களில் விதவை களின் நிலைமை கண்ணீருக்கு மட்டுந்தான் உரியது என்று எண்ணுவது மடமையாகும். அவர்களில் பலர், பலவிதமான பாவங்களை எழுப்ப வல்லவர்கள்தாம். மற்றவர்களுக்கு இருந்ததைவிட அவர்களுக்கு வாழ்க்கை ஓரளவு சுலபமாகவே இருந்தது. வழிகள் சந்தேகத்திற்கு இடமின்றித் தீர்மானமாகிவிட்டன. பலருக்குப் பெரும் பிரச்னைகளாக இருந்த பல விஷயங்கள் அவர்களுக்குப் பிரச்னைகளே அல்ல, தெருவிலே கன்னி விதவைகள் இருந்தார்கள்; வயசு அதிகமாகாத விதவைகள் இருந்தார்கள்; இரண்டொரு விபசார விதவைகள் இருந்தார்கள். ஆனால் விதவைகளின் தொகைக்கு, விபசார விதவைகள் சதவிகிதம் ரொம்பக் குறைந்ததுதான். தற்காலத்து விதவா விவாக உரிமையை வற்புறுத்தும் நாவல்களைப் படித்தறியாததனால் விபசார விகிதம் குறைவாக இருந்ததோ என்னவோ யார் சொல்ல முடியும்? 

குப்பிப்பாட்டி அதிருஷ்டக்கார விதவை. வயது அதிகமாகி விட்டது; கிட்டத்தட்ட அறுபதை எட்டிக் கொண்டிருந்தாள் அவள். குடும்பம் எல்லாம் சீராக இருந்தது. மூணு சீட்டாடிக் கணவன் இழந்து விட்ட நில புலன்களை எல்லாம் மகன் சம்பாதித்துத் திரும்பவும் வாங்கி விட்டான். மாட்டுப் பெண்களும் பேத்திகளும் மாறி மாறிப் பிரசவத்திற்கென்றும், உடம்பு சரியாக இல்லை, ஊர்போய் இருந்து சாப்பிட்டுவிட்டு வரலாமே என்றும், குப்பிப்பாட்டியிடம் உள்ள பிரியத்தால் அவளுடன் கொஞ்சநாள் இருந்துவரலாமே என்றும், வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவள் வீடு, எப்பொழுதும் கலகலப்பாக இருந்தது. அவள் வாழ்க்கை பூரணத்துவம பெற்று நிறைந்திருந்தது. இன்பங்களோ, துன்பங்களோ அவளை அதிக நேரம் பாதிக்க முடியாது. மனசில் ஒன்று உறைக்கு முன் வேறு ஓர் இன்பமோ துன்பமோ குறுக்கிட்டுவிடும் அவளுக்கு. இதைப் பரிபூரண வாழ்க்கை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? 

குப்பிப்பாட்டி வர்ணமற்ற ஸ்திரீ அவளுடைய வர்ணமெல்லாம் அவள் குடும்பத்தின் காரணமாக அவளுக்கு அவ்வப்போது ஏற்பட்டதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக அவளுக்கு அந்தரங்க சுத்தியாக ஒரு தெய்வபக்தி இருந்தது. தன் மூத்த பையன் சுயமாக உள்ள தன் கெட்டிக்காரத்தனத்தினால் வேலை செய்தான், நல்ல பதவியில் இருந்தான்; ஏராளமான சம்பளம் வாங்கினான் என்று அவள் எண்ணவில்லை. சாத்தனூர் முருகன்தான் வேலை செய்ததும், சம்பளம் வாங்கித்தந்ததும் என்பதே அவள் நினைப்பு. மற்றப்படி எப்படியோ? இந்தச் சிந்தனை முருகனுக்குத் திருபதி கரமானதாகத்தானே இருக்க வேண்டும். அவன் குப்பிப்பாட்டிக்கு அள்ளியே தந்தான் என்று சொல்லவேண்டும். தள்ளாத காலத்திலும், கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் சாத்தனூர் முருகன் சந்நிதியிலே தினம் மாலை வேளையில் காட்சியளிக்கத் தவறமாட்டாள் குப்பிப்பாட்டி. சாதாரணமாகக் குப்பிப்பாட்டியை வெளியில் தெருவில் காண்பதே அபூர்வம். தன் வீடு உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவள் அவள். இன்று ஏதோ காரியமாக, ஒருகரை ஆத்திலே போய் ஏதோ அவசர சமாசாரம் சொல்லிவிட்டுவர அதிகாலையில் கிளம்பியிருந்தாள். 

சங்கிலிப்பாட்டி எதிர்ப்பட்டவுடனே குப்பிப்பாட்டி, “எங்கேடியம்மா சங்கிலி? எங்கே மேற்கே கிளம்பினே?” என்றாள். 

முதலில் ஒத்தைப் பிராமணன். ‘இப்போது எங்கே போகிறாய்?’ என்ற கேள்வி. சங்கிலிப்பாட்டிக்குக் கோபம் கோபமாக வந்தது. அருமந்தப் பேரனின் குமாஸ்தா வேலை இன்னும் எட்டிப் போய்க் கொண்டிருந்தது அவள் கற்பனையில், “நீ கேக்கலியேன்னு தாண்டியம்மா காத்திண்டிருந்தேன்” என்று பதில் அளித்தான் சங்கிலிப்பாட்டி .

ஆனால் கோபத்துக்காகக் குப்பிப்பாட்டியுடன் நின்று பேசாமல் போய்விட இஷ்டமில்லை அவளுக்கு குப்பிப்பாட்டிக்கு மனசில் ஒரு வருத்தத்தையாவது உண்டாக்கி விட வேண்டும் அல்லது மனசில் இருக்கிற – எங்கேயாவது மூலையில் ஒரு வருத்தம் இருக்காதா? – ஒரு வருத்தத்தையாவது கிளப்பிவிட வேண்டுமென்று ஆசை அவளுக்கு. “கிட்டுவின் பிள்ளைக்கு உடம்பு சரியாயில்லைன்னியே! எப்படி இருக்கு?” என்றாள். 

“சுவாமி புண்ணியத்திலே தேவலைன்னு நேத்திக்குத்தான் கடுதாசு வந்திருக்கு?” 

“பட்டணத்திலே உன் பேத்தி…?” 

“பிரசவிச்சிட்டா; ஆஸ்பத்திரியிலேதான் பிரசவமாம். ரொம்ப சிரமப்பட்டுது. ஆனால் தாயும் குழந்தையும் சௌக்கியம்” என்றாள் குப்பிப் பாட்டி. 

வேறு எதுவும் குத்தலாகக் கேட்கச் சங்கிலிப்பாட்டிக்கு வாய் வரவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது போல, “வரட்டுமா? தீக்ஷிதர் ஆத்துவரையிலும் போறேன்” 

“என்ன ஏதாவது விசேஷமா?” 

“ஒண்ணுமில்லை; ஒரு நாள் பார்த்துத் தரச் சொல்லணும், போறேன்” என்று கிளம்பினாள் சங்கிலிப்பாட்டி. 

சங்கிலிப்பாட்டியின் நிழல் அவளுக்கு வழி காட்ட விரும்பியது போல அவள் முன் சென்றது. குப்பிப்பாட்டியின் நிழல் அவளைப் பின் தொடர்ந்தது. 

காபி சாப்பிட்டுவிட்டு மாமா சிவராமையர் வீட்டு வாசலில் வந்து நின்ற மேஜர் மூர்த்தி, இந்த இரண்டு பாட்டிகளும் ஏதோ இரண்டு வார்த்தைகள் நின்று பேசிவிட்டுப் பிரிவதைப் பார்த்தான்.

– தொடரும்…

– ஒரு நாள் (நாவல்), முதற் பதிப்பு: 2004, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *