ஒரு நாள் ஒரு பொழுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 3,398 
 
 

எனது விடுமுறையில் ஒரு காலைப்பொழுது அமைதியாக கடந்துகொண்டிருந்தது ஜன்னல்களை விரித்துவிட்டு வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறேன் வீட்டின் முன்னால்… இரவெல்லாம் உறங்கிக்கொண்டிருந்த அந்தப்பாதை விழித்துவிட்டதுபோல் ஒரு பிரமை எனக்கு, பாடசாலைகளை நோக்கி படையெடுக்கும் மாணவமாணவிகளின் நடமாட்டம் ஒருபுறம், தனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டு விட்டு தனது காரியாலத்திற்கு வேளைக்குசென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தோடு மோட்டார்சைக்கிளில் பறந்து செல்லும் பெற்றோர்கள், ஒருபுறம், இதனிடையே உறுமிக்கொண்டும் போட்டிபோட்டுக்கொண்டும் பறந்து செல்லும் அரச தனியார்பேருந்துகளின்அட்டகாசங்கள், அமைதியாக என் உடலை வருடிச் செல்லும் குளிர்காற்று..இனி…பத்திரிகை கண்ணோட்டத்தை பார்ப்பதற்காக தொலைக்காட்சியின் அருகில் எனது வரவுக்காக காத்துக்கிடக்கும் சாய்வுநாற்காலியில் சாய்ந்துகொள்கிறேன்.

அறிவிப்பாளர் அவரது பாணியில் அட்டகாசமாய் அன்றைய நாளிதழை வாசித்துக்கொண்டிருக்கிறார், இன்னும் சற்றுநேரத்தில் என்னை அறியாமலே எனது விழிகள் உறக்கத்தை நோக்கிசெல்லக்கூடும் காரணம் அறிவிப்பாளரின் “ஆகவே ஆகவே எனவே எனவே “என்றவார்த்தைகள் ஏதோ ஒருவகை தாலாட்டு மாதிரி என்னை உறக்கத்திற்கு அழைத்துவிடுவது தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வாகிவிட்டது.,

“மனிசன் ரீவி பார்கிறண்டா முழிச்சிகிட்டு இருக்கணும் இது என்னடாண்டா ரீவி அது அதுட பாட்டுல வேலசெய்யிறான் உங்களுக்கு ரீவிய போட்டா சதாவும் தூக்கம்தான் அதில என்ன தாலாட்டாபடிக்காங்க” மனைவின் அதட்டலான குரலுக்கு “ஆ…இப்ப என்ன நடந்திட்டு..”.

திடீரென விழித்துக்கொள்கிறேன். எதிரே தேனீர் கப்புடன் வந்த மனைவி முன்னால் வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள், அனேகமாக சமையல் அறை அல்லது முற்றம் அதுவும் இல்லாவிட்டால் டொயிலட்வரை செல்லக்கூடும் நேற்று வயிற்றுக்குழப்பம் என்று சொன்னதாக ஒரு ஞாபகம்.

சும்மா சொல்லகூடாது காலயில் பிளேண்டி குடித்தால் உச்சாகமத்தான் இருக்கின்றது, முன்பெல்லாம் அங்கர் டீ இல்லாவிட்டால் ஏதோ ஒன்றை இழந்துபோனமாதிரி அன்றைய பொழுதே அமாவாசையாகத்தான் கழியும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமையாலும் புதிது புதிதாக முழைத்த பதுக்கல் வியாபாரிகளாலும், ஏற்பட்ட விலையேற்றமும் தட்டுப்பாடுகளும் பால்மாவில் ஒரு வெறுப்பையே பொதுவாக எல்லோரிடமும் ஏற்படுத்திவிட்டது, என்றுதான் சொல்லவேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு வெறும் பிளேண்டி கொடுத்தால் ஏதோ குறையாக நினைக்கும் காலம் மாறி “தயவுசெய்து வெறும்பிளேண்டி இருந்தா போடுங்க”என்று விருந்தாளிகளே கேட்கும் அளவிற்கு காலமாக மாறிவிட்டது.

“என்னங்க…ஒங்களுக்கு கனநாளைக்குப்பிறகு அப்பக்காறியிட்ட ஓடர்பண்ணி பாலப்பம் வாங்கியிருக்கன் சாப்பிடுங்க, நான் வாசல கூட்டி குப்பைகள குப்பவேக்கில வச்சிட்டு வாறன் இண்டைக்கு குப்பைமெசின் வாறநாள்”

இந்த குப்பை மெசின்காறன் எப்போதான் ஒழுங்காவாறான் ,கிழமைக்கு ஒருமுறையாவது வருவாநெண்டா வீட்டில குப்பை பிரச்சினை கொஞ்சமாவது குறையும் அவனுகளிடம் கேட்டா ”நாங்க என்ன செய்யலாம் சார் மெசினுக்கு டீசல் இல்லை பெரிய கஸ்டமாகத்தான் இருக்கு, அது மட்டுமா நாங்க ஒரு றோட்ட சொன்னா…அங்கால நாளைக்கு போகலாம் இன்றைக்கு எம்பிடறோட்ட பாருங்க என்று பெரிய ஐயா சொல்லுவாரு.. நாளைக்கு.. கேட்டா இல்ல காலயில சேமன் கோள் எடுத்தாரு அவங்கட றோட்ட பாக்கசொல்லி ஒவ்வொருநாளும் எங்கட ஐயாவுக்கும் பிர்ச்சினதான் என்ன செயலாம்” என்பான்.

இன்று விடுமுறைதானே கொஞ்சம் ஜாலியாக பொழுதை கழிப்போம் என்றால் மனைவி விடவா போகிறாள்.

”என்னங்க.. போனகிழம விரால் மீன்வாங்கிறதாக சொன்னீங்தானே ..”

“ம்..ஆரம்பிச்சாச்சா”, மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன்.

”என்னாங்க..நான் என்னவோ சொல்லிறன் நீங்க முகத்த.. ம்…முண்டு வச்சிருகிங்க”

”அப்படி ஒண்டுமில்ல நானும் இப்போதான் மனதுகுள்ள நினைச்சத நீயும் சொல்லுறாய் அதுதான் நம்மடமனிசிக்கு ஜோசியம்கூடதெரியும் போல என்று ஒரு நினைபுத்தான்”

”சும்மா பேசிக்கிட்டு நேரத்த போக்காட்டாம கெதியாவாங்கிட்டு வாங்க” நான் எதுவுமே பேசவில்லை விரால் மீன் வாங்கும் நினைவுகளோடு துவிச்சக்கர வண்டியை எடுத்துக்கொள்கிறேன்.

மோட்டார்சைகிளில் போகலாம்தான். இப்போ இருக்கிற பெற்றோல் தட்டுப்பாடும் விலையேற்றமும் சம்பளத்தையே கடித்துக்கொண்டு நிக்குது ஊரில் நல்ல பணக்காறன்கூட துவிச்சக்கர வண்டியிலதான் போறானுகள், நம்ம போவதால யாரும் ஒன்றும் நினைக்கபோறல்ல, தூரம்தான் எதற்கும் போய்பார்க்கவேண்டியதுதான்

துடிக்க துடிக்க ஆற்று மீன் வாங்குறதெண்டா கிட்டங்கி ஆற்றுப்பக்கம் போக வேண்டும், ஆற்றோரமாக உடனுக்குடன் பிடித்து வைத்திருப்பார்கள்,கொஞ்சம் மலிவுஎன்றாலும் முன்னயமாதிரி இல்லை அவர்களும் நல்லாகபடித்து விட்டார்கள் பக்கத்து ஊர்காறனா வெளிஊர்காறனா என்று அறிந்துகொண்டே விலைசொல்ல பழகிவிட்டார்கள், எப்படியோ பிறஸ்ஷாக வாங்கவேண்டும் என்றால் என்ன விலை கொடுத்தும் வாங்கத்தானே வேண்டும்.

“அண்ணே அந்த பெரிய விரால் என்னமாதிரி”

“எடுங்க சார் கிலோ இரண்டாயிரம்தான்”

“குறையாதா”

“குறையும் இல்ல நிறையும் இல்ல விரும்பினா எடுங்க”

இதற்குமேல் அவனிடம் பேசமுடியாது,சிலவேளைகளில் தணிக்கைக்குட்படுத்த வேண்டிய வசனங்களை தரிசிக்கவேண்டி ஏற்படலாம் போன கிழமை கிலோ ஆயிரம் ரூபா என விற்றவனுகள், அவனுகளைத்தான் எப்படி குறை சொல்வது ஒவ்வொரு நாளும் நாட்டில் வினாடிக்கு வினாடி விலை ஏறிகொண்டே போகும்போது, இருப்பதை விற்றால்தானே அவர்களின் பசியும்தீரும்.

என்ன செய்யலாம் நமது தலைவிதி வாங்கவேண்டியதுதான்,சும்மா சொல்லக்கூடாது நல்ல தரமான மீன் இடைதான் இரண்டுகிலோ என்றாலும் மனைவியின் பலநாள் ஆசை அல்லவா?.

“அண்ணே அதை தாங்க” நான் அதை வாங்காவிட்டாலும் உடனே வாங்குவதற்கு பக்கத்தில் காசை காட்டிக்கொண்டு பலர் நிண்றுகொண்டிருக்கிறார்கள்.

“சார் பார்த்திங்கதானே இரண்டுகிலோவைவிட கொஞ்சம்கூடத்தானஇருக்கு நாலாயிரம் வரும் உங்களுக்காக நூறு கொறைத்து..இந்தாங்கோ..அப்படியே தரவா உடைத்துதரவா..” (உடைத்து என்பது அவர்கள் பாசையில் சாகடித்து தருவது)

”இல்லை அப்படியே வேக்கில போட்டுத்தாங்க.” துடிக்கத்துடிக்க வேண்டும் என்ற மனைவியின் வேண்டுதல் ஞாபகத்தில் வந்துவிடுகிறது,

அப்படியே துவிச்சக்கர வண்டியின் ஹெண்டிலில் மீன் வேக்கை கொளுவிக்கொண்டு கிட்டங்கி பாலத்தை கடந்து ஆற்றோரமாக வந்துகொண்டிருக்கிறேன், எதிரே சற்று வேகமாகவந்த மணல்லொறிக்கு ஒதுங்கவேண்டிய நிலமை, மீனும் ஏனோ அதன்பலம் கொண்டு அசைந்து சொப்பிங்வேக்கைவிட்டு வெளியே பாய்ந்து நெளிந்துகொண்டு ஓடத்துவங்கிவிட்டது, நானும். மின்னல் வேகத்தில் சைக்கிளைவிட்டு இறங்கி மீனை பிடிப்பதற்குள் அது ஆற்றுக்குள் ஓடி மறைந்துவிடுகிறது.

சில விநாடிகள் எதுவுமே புரியாமல் ஆற்றைவெறித்து பார்த்து கொண்டு நிற்கின்றேன்,

”என்னங்க இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீங்க ஆற்றுகுள்ளயா மீன்பிடிக்கிங்க …”

தொலைபேசியின் மறுமுனையில்…மனைவி

“ஆமா..எப்படி கண்டுபிடிச்ச..”

“சும்மா போங்க ஒங்களுக்கு எப்பவும் பகிடிதான் கெதியாவாங்கோ மதியமாகிட்டு.”

தொலைபேசியை துண்டித்து விடுகிறேன். வீட்டில்…

நடந்தவைகளை மனைவியிடம் முறயிடும்போது “உங்களுக்கு மூளகீள கெட்டுப்போச்சா.அவ்வளவுக்கு யோசிகிறதில்லையா” இதைவிடவும் வெளியே சொல்லமுடியாத ஓரிரு வார்த்தைகளுக்கு பொறுமையுடன் முகம் கொடுக்கவேண்டியிருக்கும்.

(கற்பனை)

– நன்றி: தமிழன் வார இதழ் 04/09/2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *