ஒரு சபலம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 4,829 
 
 

‘இன்று… அலுவலகத்திற்குச் செல்லலாமா, வேண்டாமா..?’- ரகுநாத்திற்குள் மனசுக்குள் அலைமோதல்.

அங்கு சென்றால்…

‘எப்படி ஜானவியின் முகத்தில் விழிப்பது..? இதுதான் ஆண்பிள்ளைத்தனமா….? என்று அவள் கேட்டால் என்ன பதில் சொல்வது..?’- என்று நினைத்து நினைத்து மனம் குமைய….

‘இப்படி எத்தனை நாட்களுக்குப் பயந்து ,ஒளிந்து அலுவலகத்திற்குச் செல்லாமல் இருக்க முடியும்..? என்றாவது ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்காதா..? – என்று அதே மனம் புரள…

நேற்றைய… அடி, காயத்தின் வலி இன்றைக்கு மாறாது. குறைந்தது… ஒரு வாரம், பத்து நாட்களாவது சென்றால்தான்… அதன் உக்கிரம், வேகம் கொஞ்சம் தனியும். அப்போது கொஞ்சமாய் ஏறெடுத்துப் பார்த்து, கொஞ்சம் துணிந்து … அவளை சமாதானப்படுத்துவதோ, தன்னுடைய நியாயத்தை எடுத்துச் சொல்வதோ சுலபம். காதிலும் ஏறும். அதை விடுத்து சம்பவம் நடந்த மறுநாளே அவள் எதிரில் நின்றால்…. அவமானம், தாக்கம் சூடு மாறாமல் இருப்பவளுக்குள் வலி வருத்தம் அதிகமாகி.. ஆத்திரம் வந்து….’அதை நினைத்துப் பார்க்கவே அவனுக்கு நெஞ்சு நடுங்கியது.

அதனால்… ஒருவாரம் விடுப்பு எடுத்துக் கொள்வது நல்லது ! என்று தீர்மானத்திற்கு வந்தான்.

தனக்குப் பழக்கமான மருத்துவரைப் பார்த்து மருத்துவ விடுப்பு சான்று பெற்று,கூடவே அதற்கான விண்ணப்பத்தையும் எழுதி அலுவலகத்தை அனுப்பினான்.

மனம் கொஞ்சம் லேசானது. ஆனாலும் அது அதிக நேரம் நீடிக்கவில்லை,.

மனக்கோழி மறுபடியும் குப்பையைக் கிளறியது.

“என் கண்ணீருக்கு நீதானே காரணம். எனக்குப் பதில் சொல் ?! “- என்று ஜானவி இவன் மண்டைக்குள் உட்கார்ந்து கொண்டு ஆணித்தரமாக அழிச்சாட்டியம் செய்ய….

மெல்ல நடந்தவைகளை அசை போட்டான்.

தான் வேலை செய்யும் அலுவலகத்தில் புதிதாய் சேர்ந்து, தன் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்த ஜானவியைக் கண்டதும் எல்லோரும் போல இவனும் சொக்கிப் போனான்.

அவள் அருகிலிருப்பால்….மற்ற அலுவக நண்பர்கள், ஊழியர்களெல்லாம் இவனைப் பொறாமையாகப் பார்க்க… இவனுக்குக் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.

ஜானவி இருக்கையில் அமர்ந்ததும் வேலை புரிபடாமல் விழிக்க….. இவன்தான் அவளுக்கு உதவி செய்து, வேலையைக் கற்றுக் கொடுத்தான்.

சொல்லிக்கொடுப்பதைக் கூர்மையாகக் கவனித்து , கற்பூர ப்புத்தியாய்ப் பிடித்துக் கொண்டு சரியாய் செய்வதைப் பார்க்க இவனுக்குப் பிரமிப்பு. மேலும் … அவளின் சின்னச் சின்னச் சந்தேகங்களை இவன் நிவர்த்தி செய்து, பழக, பேச.. … அவள் நேர்த்தி, நிதானம், அழகு, புத்தி , பழக்கம்… எல்லாம் பிடித்துப் போயிற்று.

ஒருநாள்…

‘அழகு, இளமை, புத்திசாலித்தனமெல்லாம் மொத்தமாக உள்ள இவளையே நாம் திருமணம் செய்து கொண்டாலென்ன..?’- தோன்ற… உடன் செயலில் இறங்கினான்.

தன் தாயை அணுகினான்.

“அம்மா! என்னோட ஜானவி என்கிற பெண் வேலை செய்றாள். அவளை நான் திருமணம் செய்ய ஆசைப் படுறேன். தப்பா நினைக்காதீங்க. நாங்க காதலிக்கலை, காதலர்கள் இல்லே. நான்தான் இப்படி நினைக்கிறேனேயொழிய அவள் இப்படி நினைக்கிறாளா , நினைச்சிருக்காளா… எனக்குத் தெரியாது. ஆனாலும் என்னை மறுக்க மாட்டாள் என்கிறது உறுதி .”சொன்னான்.

“சரப்பா. இப்போ அதுக்கு என்ன..? “அன்னம் திருப்பிக் கேட்டாள்.

“ஒரு நல்ல நாள் பார்த்து அவளைப் பெண் கேட்க போகலாம்ன்னு யோசனை. ..!”

“யோசனை நல்லாத்தானிருக்கு…சாதி..?”

இவனுக்குத் திக்கென்றது.

“தெரியலம்மா. எனக்கு அது தேவை இல்லே.”- கறாரகச் சொன்னான்.

அதனால் அன்னம் அதை பற்றி அடுத்தக் கேள்வி கேட்கவில்லை.

மாறாய்….

“சரி. அவளுக்கு முறை மாமன், காதலன்னு ஏதாவது முட்டுக் கட்டை ..? “கேட்டாள்.

விழித்தான்.

“சொல்லுடா..?”

“அதை அங்கே போய் தெரிஞ்சிக்கலாமே…!”

“அங்கே போய் அதைக் கேட்டுத் திரும்புறதை விட..நீ அவளிடம் நேரடியாய் உன் விருப்பத்தைச் சொன்னா… அவள் இருக்கு, இல்லே உண்மையைச் சொல்லி, தன் விருப்பத்தையும் சொல்வாள். அதன் பிறகு நாம அங்க போகலாம், போகவேண்டாம் என்பதைப் பத்தி முடிவெடுக்கலாமே..?!”

தாயின் பேச்சு சரியாய் இருந்தாலும்…இவனுக்கு அதைச் செயல்படுத்த மனமில்லை.

“அ… அம்ம்மா..”- பரிதாபமாகப் பார்த்தான்.

“என்ன..?”

“வ… வந்து… வந்து….”

அன்னம் சட்டென்று ஒரு முடிவிற்கு வந்தாள்.

“நீ அதுக்கெல்லாம் சரி படமாட்டே. அவள் கைபேசி எண் உன்னிடம் இருக்கா..? “கேட்டாள்.

“இ.. இருக்கு…”

“கொடு. நானே அவன்கிட்ட பேசறேன்…”

“அ… அம்ம்மா…!!”

“கொடுடா…”அதட்ட…

வேறு வழி இல்லாமல் அவன் தன் கைபேசியில் ஜானவியின் எண்களைத் தட்டிக் கொடுத்தான்.

வாங்கி காதில் வைத்த அடுத்த சில வினாடிகளில்…

“யாரு..? ஜானவியா…? “கேட்டாள்.

“அ.. ஆமாம் நீங்க யாரு.?”

“நான் உன்னோடு வேலையை செய்யிற ரகுநாத் அம்மா. என் பையன் உன்னைக் கட்டிக்கலாம்ன்னு ஆசைப் படுறான். உன்னிடம் நேரடியாக கேட்க… வெட்கம், கூச்சம். அதனால் என்னை விட்டுக் கேட்கச் சொன்னான். உனக்கு விருப்பம்ன்னா… நாங்க ஒரு நல்ல நாள் பார்த்து பெண் கேட்டு உன் வீட்டுக்கு வர்றோம் ! “சொன்னாள்.

கேட்ட ஜானவிக்கு குப்பென்று சந்தோசம் காதை அடைத்தது.

‘அம்மா, அப்பாவிடம் அப்புறம் சேதி சொல்லிக் கொள்ளலாம் !’- நினைத்து…

“நீங்க எப்போ வேணுமின்னாலும் தாராளமாய் வரலாம்.”- சொன்னாள்.

“சந்தோசம்மா. நாளைக்கே நல்ல நாள். ஞாயிறு விடுப்பு நாள் வேற. நானும் என் பிள்ளையும் காலை பத்து மணிக்கு வர்றோம். உன் அம்மா, அப்பாகிட்ட சேதி சொல்லி தயாராய் இரு “சொல்லி வைத்தாள்.

‘எவ்வளவு சீக்கிரத்தில் வேலை முடிந்து விட்டது ! அம்மா இப்படி சட்டென்று முடித்து விட்டாள்.?!’- ரகுநாத்திற்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.

“அம்மான்னா அம்மாதான் ! “மகிழ்ச்சியில் தாயை இறுக்கி அணைத்தான்.

“விடுடா…”அன்னம் உதறினாள்.

பெண் பார்க்கும் படலம்.

மறுநாள் காலை. 10.௦௦.

சரியான நேரத்தில் இவர்கள் இருவரும் ஜானவியின் வீட்டின் முன் காரில் சென்று இறங்கி உள்ளே சென்று அமர்ந்தார்கள்.

பெண்ணைப் பெற்றவர்களுக்கு முகமெல்லாம் பூரிப்பு, சந்தோசக் களை.

அவர்களுக்குப் பின்னால்..அவள் தங்கை யாழினி. ஜானவியைக் காட்டிலும் சிகப்பாய், துறுதுறுப்பாய், துள்ளலாய்… நிற்க ….

சட்டென்று இவனுக்குள் மின்னல் பளிச்சிட்டு மின்சாரம் பாய்ந்தது.

மனசு… உடன் அக்காள், தங்கை இருவரையும் தராசு தட்டுகளில் உட்காரவைத்து மாறி மாறி எடை போட…தங்கை பக்கமே சாய்ந்தது.

பெண் பார்க்கும் படலம் முடிந்து… ஜானவி உள்ளே சென்றாள்.

அம்மா… அடுத்து உடனே ….நாள், தேதி குறித்துவிடுவாள் ! – நினைத்து பதற்றமடைந்த ரகுநாத்..

“அம்மா ! “காதைக் கடித்தான்.

“என்ன..? “கிசுகிசுத்தாள்.

“ஒரு நிமிசம் வாயேன் ! “சொல்லி கொஞ்சம் தள்ளி வீட்டு வெளியே அவளைத் தனியே அழைத்துச் சென்றான்.

“அவ தங்கச்சி நல்லா இருக்காள்ம்மா.”சொன்னான்.

“என்னடா சொல்றே.?! “அன்னம் அதிர்ந்தாள்.

“ஆமாம்மா..!”

“அக்காவைப் பார்க்க வந்துட்டு. தங்கச்சியைக் கேட்கிறது நியாமா..?”

“நியாயமில்லே. தெரியுது. இருந்தாலும் திடீர்ன்னு ஒரு ஆசை, எண்ணம். இதை மறைச்சு நான் ஜானவியை முடிச்சா…கேட்டிருக்கலாமோ, கிடைத்திருப்பாளோ..! ஒரு முடிச்சி, உறுத்தல் உள் மனசுல உறுத்திக்கிட்டே இருக்கும். அவளைப் பார்க்கும்போதெல்லாம் இந்த எண்ணம் வரும். மாமியார் வீடு வந்து அவளைப் பார்க்கும்போதெல்லாம் இது அலைக்கழிக்கும் . இது தேவை இல்லேன்னு என் மனசுல படுது. கொடுத்தால் லாபம். கொடுக்கலைன்னாலும் வற்புறுத்தல் வருத்தம் வேணாம். எனக்கு ஜானவி போதும் , திருப்தி. திருமணம் ஒரு முறை. இதுல ஏன் மனசுல குறை..? “சொன்னான்.

மகனின் சபலம். அன்னம் மனசுக்குள் சின்னதாய் ஒரு வருத்தம்.

இவன் சொல்லை மீறி ஜானவியை முடித்துச் சென்றால்… அவனுக்குள் குறை குறைதான். அவன் வழியிலேயே விட்டுப் பிடிப்பதுதான் சரி. – நினைத்தாள்.

”சரி. உன் ஆசை கேட்டுப்பார்ப்போம். கொடுக்கலன்னா வருத்தம் கூடாது ! “சொன்னாள்.

“சரிம்மா..”இருவரும் திரும்பி வந்தார்கள்.

அமர்ந்தார்கள்.

ஜானவி பெற்றவர்கள் இவர்களைப் பார்த்தார்கள்.

“பையன் சின்னப் பெண்ணைப் பிடிச்சிருக்கு சொல்றான் ! “அன்னம் சொன்னாள்.

கேட்ட எல்லோருக்கும் இடி. அதிர்ச்சி.

ரகுநாத் யாழினியைக் கவனிக்க வில்லை. கண்ணில் பட்ட ஜானவியைத்தான் பார்த்தான்.

அவள் சட்டென்று முகம் சிவக்க..சடனாய்த் திரும்பி அறைக்குள் நுழைந்தாள்.

ஜானவியைப் பெற்றவருக்கு நிலைமை புரிந்தது.

“மொதப் பொண்ணு இருக்கும்போது அடுத்ததுக்குத் திருமணம் என்கிறது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். அதனால… நாங்க யோசனைப் பண்ணி பொண்ணுங்களைக் கேட்டு சொல்றோம்.”சொன்னார்.

முடிந்தது.

வீட்டிற்கு வந்த பிறகுதான்… ரகுநாத்திற்குத் தன் தவறு புரிந்தது. அப்போதைக்குத் தன் மனதில் பட்டத்தை நியாயப்படுத்தி சொல்லி முடித்து வந்தாலும்….ஜானவிக்கு எத்தனை பெரிய அவமானம்,பாதிப்பு ! நினைக்க நினைக்க அவனுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை.

எவ்வளவு பெரிய தவறிழைத்து விட்டோம். ! தன்னையே நொந்தான்.

‘இனி… ஜானவி முகத்தில் எப்படி விழிக்க..? என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்த..? பேசுவாளா..? வருத்தம், தாக்கம் மெளனமாக இருந்து பேசாமல் போய்விடுவாளா..?’- ஆயிரம் குத்தல் குடைச்சல்கள்.

இதோ அவளை நிமிர்ந்து பார்க்க திராணி இன்றி… விடுப்பு.

மணியைப் பார்த்தான். 11.00.

வாசலில் அழைப்பு மணி.

‘அம்மாவா..?’திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

எதிர்பாராத அதிர்ச்சி. யாரைப் பார்க்க தெம்பில்லாமல் விடுப்பு எடுத்தானோ அவள்!

ஜானவி..!!

நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லாமல் தலை குனிந்தான்.

என்னென்ன கேள்விகள் கேட்கப்போகிறாளோ..? இல்லை.. இது நியாயமா…? என்று கேட்டு கண்ணீரைக் கொட்டி சபிக்க வந்திருக்காளோ..? ! – இவனுக்குள் அடிவயிற்றில் பயம் பந்தகச் சுருண்டு வாய்க்கு வந்து…

இவளும்.. அவமானத்தாக்கம் ! அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறாளா..? ஏன்…. என்னைத் தேடி வரவேண்டும்…?

“உள்ளே வரலாமா..? “ஜானவிதான் கேட்டாள்.

இவனை சுயநினைவிற்குக்கொண்டு வந்தாள்.

“ம்ம்….’

உள்ளே வந்தவள் வீட்டை நோட்டமிட்டு…

“உங்க அம்மா இல்லியா..?”

“வெளியே போயிருக்காங்க ..”

“ரொம்ப நல்லதாய் போச்சு. உட்காரலாமா..?”

“ம்ம்…”

அமர்ந்தாள்.

அமர்ந்தான்.

“ஏன் அலுவலகத்துக்கு வரல…?..”

பதில் சொல்லித்தானாகவேண்டும் !!
“மனசு சரி இல்லே..”

“யாழினி… கிடைப்பாளா மாட்டாளான்னா..?”

சுளீர் வலி ! எதிர்பாராத அடி.

“………………….”

“என்னை நிமிர்ந்து பார்த்து ஏதாவது சொல்லுங்க..?”

“தெம்பில்லே…. ஜானவி..!”

“ஓ… அதான் விடுப்பா…?”

”…………………..”

“ரகுநாத்! உங்களுக்குத் தெரியுமா.. திருமணச் சந்தையில் அக்காவைப் பார்க்க வந்து… தங்கையைக் கேட்கிறதும், தங்கையைப் பார்க்க வந்து அக்காவை கேட்பதும் சகஜம். தங்களுக்குப் பிடிச்சதை தேர்ந்தெடுக்கிறது, ஆசைப்பட்டதை அடையிறது அவங்க அவுங்க விருப்பம். பார்க்க வந்ததைத்தான் பத்திக் கிட்டுப் போகணும் என்கிறது கட்டாயமில்லை. அதை வற்புறுத்தறதும் அழகில்லே. திருமணச் சந்தையில் மூத்தவள்தான் முன்னாடி போகனும், இளையவள் பின்னாடி போகனும் என்கிறது சட்டமில்லே. இன்னைக்கு அவளுக்கு ஒரு ராஜகுமாரன்னா.. நாளைக்கு அக்காளுக்கு.”

ரகுநாத் அவளை அதிசயமாகப் பார்த்தான்.

“நீங்க இன்னைக்கு வீட்ல இருப்பீங்கன்னு தெரிஞ்சிதான் வந்தேன்.”

“ஏ..எப்படி..?”

“உங்க மனசு தெரியும். ஒரு பொண்ணுகிட்ட தன் விருப்பத்தைச் சொல்ல தைரியம் நீங்க… நேத்து வந்து என்னைப் பார்த்துட்டு இன்னைக்கு விடுப்புன்னு ஆள் வராமலே கடிதம் வந்தா என்ன அர்த்தம்..? என் முகத்துல முழிக்க வெட்கம், பயம், தயக்கம். அதான் உடனே வந்தேன்.”

ரகுநாத்திற்குப் பிரமிப்பாய் இருந்தது.எவ்வளவு தெளிவாய், துல்லியமாய் தன்னை அளவெடுத்திருக்கிறாள்..? தாம் மறுகிக் கொண்டிருக்கும்போது இவள் நேற்றைய சம்பவத்தின் பாதிப்பு கொஞ்சமும் இல்லாமல் எப்படி இப்படி நிதானமாய்ப் பேச முடிகிறது..? இதற்கு எவ்வளவு பரந்த மனம், இதயம் வேண்டும்..?

“ஜானவி..! உனக்கு வருத்தம் ஏதும் இல்லேயா..?!”

”இல்லே !”

“பொய் !”

“கொஞ்சம் இருந்துச்சி !”

“புரியல..? !”

”சட்டுன்னு முகத்தில் குத்து. கொஞ்சம் அதிர்ச்சி, ஆட்டம். இது இயற்கை.”

“என் மேல் உனக்கு கோபமில்லையா..?”

“இருந்தால் வந்திருக்க மாட்டேன். எதையும் மன்னிக்கிறதும் மறக்கிறதும்தானே மனித தர்மம்….!!!…”

“மன்னிச்சுக்கோ ஜானவி. நான் கொஞ்சம் சபலப்பட்டு..”

“அதான் மன்னிச்சிட்டேனே..”

“நான் உன்னையே…”

“ஏன்…என் தங்கச்சி என்னாச்சி..? “அவனை வியப்பாய்ப் பார்த்தாள்.

“அவளுக்கு வேறொரு ராஜகுமாரன் வருவான் !”

“வேண்டாம்ப்பா. அவ… என்னைப் பார்க்க வந்துட்டு தன்னை க் கேட்டதில் உங்க மேல செம காண்டுல இருக்கா…”

“தப்பு பண்ணிட்டேன்னு சொல்லு. உன் அளவுக்குப் புத்தி அவளுக்கும் இருக்கும் புரிஞ்சிப்பா.”

“இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். !”

“சம்மதிப்பே ! என்னைப் புரிஞ்சி சமாதானம் செய்ய வந்த நீ சம்மதிப்பே..”சொல்லி மெல்ல எழுந்து…..

“ப்ளீஸ் ! “கெஞ்சலாகச் சொல்லி அவள் கையைப் பிடித்தான்.

“என் மருமகள் நீதான். உன்னைத் தவிர வேற யாருமில்லே ! “என்று அழுத்தம் திருத்தமாக அன்னம் குரல் கேட்க…

இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தார்கள்

“எல்லாத்தையும் நான் வெளியில் நின்னு கேட்டேன் ” சொல்லி வந்த அன்னம் ஜானவியை அன்பு, ஆசையாய் அணைத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *