ஒருபோதும் தேயாத பென்சில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,915 
 
 

‘வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” – உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள்.

”கீச்சுன்னு கதவு திறந்து மூடின சத்தம்கூட நிக்கலை. அதுக்குள்ள எப்படி ராஜி வீடு பிடிச்சுப்போச்சு?” என்று அவளை உட்காரவைக்கப் போவதுபோல், தன் பக்கம் இழுத்துச் சேர்த்துக்கொண்டு சந்திரா நின்றாள். சந்திராவுக்கு ஏற்கெனவே பெரிய கண்கள். இன்னும் கொஞ்சம் பெரிதாகி அவை ராஜியை அகலமாகப் பார்த்தன.

”பாருங்க அணில் குஞ்சு மாதிரியே தோள்ல தொத்த ஆரம்பிச்சுட்டா” என்று ராஜி என்னிடம் சொன்னபோது பிடித்து இருந்தது.

ஓர் அணிலாக சந்திராவை நினைத்துப்பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. நரை விழ ஆரம்பித்து இருந்த 60 வயது அணில். முருங்கைப் பூ கொரித்துக்கொண்டு, சரசரவென்று தென்னை மரம் ஏறிக்கொண்டு, பதி போடுகிற பூனையைக் கண்டால் பயந்து உச்சிக் கிளையில் ஒளிந்து சத்தம் போடுகிற அணில். சில சமயம் தானாக முன்னங்காலில் பற்றியிருக்கிற கொட்டையைப் பசலிப் பழக் கண்களால் பார்த்துத் தியானம் செய்கிற அணில்.

எனக்குச் சட்டென்று இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தி வந்த அந்தக் கனவு ஞாபகம் வந்தது. அது எப்படித் தொலைந்துபோய்விட்ட ஒரு கனவின் சாவி, எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிற ராஜியின் கையில் இருக்கிறது?

மளமளவென்று திறந்துகொண்ட கனவில் நான் ஒரு மலை அடிவாரத்தில் நிற்கிறேன். ஒரு வனம் முடிகிற மாதிரி அடர்ந்த நிழலும் தூரத்தில் தெரிகிற மலைகளில் நகரும் வெயிலுமாக ஓர் அமைப்பு. நான் சட்டைகூடப் போடவில்லை. திருச்செந்தூர் கோயிலுக்குப் போகும்போது செய்கிற மாதிரி, ஒரு நீளத் துண்டு மாத்திரம் தோளில்கிடக்கிறது. துண்டு மெல்லிசாகவும் அதே சமயத்தில் மெத்துமெத்தென்றும் எப்படி இருக்கும்? ஆனால், அப்படித் தான் இருந்தது. காற்றைவிட, காற்றடிக்கிற நேரத்துத் துணி நம் உடம்பில் படும்போது இருக்குமே அதுபோல.

நான் என் கையை முழுதாக நீட்டியிருக்கிறேன். கொஞ்சம்கூட மடங்கவோ, வளையவோ இல்லை. இரண்டு கைகளையும் ஏந்திப் பிச்சைக்கு நின்றால் அல்லது ஓடுகிற ஆற்றில் தண்ணீரை அள்ளி மறுபடி ஆற்றிலேயே விட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

வெற்றுக் கை இல்லை. இரண்டு கைகளும் நிரம்பி வழிகிற மாதிரி வாதாம் பழங்கள். அவ்வளவு செக்கச்செவேர் என்று இருக்கும் வாதாம் பழங்களை எல்லாம் இப்படிச் சொப்பனத்தில்தான் பார்க்க முடியும். அது ஒரு விநோதம் என்றால், இன்னொரு விநோதம், அந்த வாதாம் பழங்களை எட்டிக்கூடப் பார்க்காமல், என் முழங்கையிலும் தோளிலும் உச்சந் தலையிலும் ஏறி இறங்கி விளையாடுகிற அணில்கள். எத்தனை என்று எண்ண முடியவில்லை. சதா இடம் மாறிக்கொண்டே இருக்கிற அணில்களை எப்படி எண்ண முடியும்?

அதன் கால் நகம் மேல் துண்டின் இழைக்குள் சிக்கி, அதை உதறி மேலே ஏறுகிறபோது, துண்டு என் மார்பு ரோமத்தின் மேல் நகர்வதுகூட எனக்கு நினைவிருந்தது.

கையை நீட்டியது நீட்டியபடியே நிற்கிறேனே தவிர, அந்த வாதாம் பழங்களை அணில்கள் தொடுவதாக இல்லை. தூரத்து மலையில் வெயில் நகர்ந்துகொண்டு இருக்கிறது. மலையில் நிழல் நகர்வதுதானே வெயில் நகர்வதாகவும் தெரியும். அப்படித் தெரிந்தது.

சொப்பனத்தில் வந்ததுபோலவே, நான் கைகளை நீட்டிக்கொண்டு நிற்கிறேன்.

ஜன்னலில் அசையும் துணியில் வெளிச்சம் இடம் மாறுகிறது. மேலே மின்விசிறி சுற்றுகிறது. மேஜையில் இருக்கும் கணினித் திரையில், நீலப் பின்னணியில் மறுபடி மறுபடி பத்துப் பதினைந்து பச்சைக் கிளிகள் உட்கார்வதும் பறப்பதுமாக ஒருமூங்கில் புதரை நிரப்பிக்கொண்டு இருக்கின்றன.

ராஜேஸ்வரியும் சந்திராவும் சோபாவில் உட்காரக்கூட இல்லாமல், வீட்டைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சந்திரா இதுவரை உட்கார்ந்து இருந்த திவானின் வெதுவெதுப்பான பள்ளத்தையே நான் பார்க்கிறேன்.

என்னை இப்படித் தனியாக விட்டுவிட்டு சந்திரா போய்விடுவது என்பது ராஜி வருகிற ஒவ்வொரு முறையும் நடப்பதுதான். தனி என்றால், நாங்கள் இங்கே இருக்கிறோம், நீங்கள் அங்கே இருங்கள்.

குறுக்கே வரக் கூடாது என்பது மாதிரிகூட இல்லை. அது வேறு மாதிரி. வெளியே தள்ளிக் கதவைப் பூட்டி, சாவியையும் கடலுக்குள் எறிந்ததுபோல இருக்கும். எந்தச் சத்தமும் கேட்காமல் ஒரு கறுப்பு இசைத்தட்டு சுழல்கிற காட்சி இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. இரண்டு சிறகுகள் மாதிரி வெளிச்சம் பிரதிபலிக்க, வழவழப்பான அரக்குக் கறுப்பில், அவ்வப்போது ஓர் அலையில் ஏறி இறங்குகிற படகின் அசைவுடன், அது சுற்றுவது அழகுதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதன் சத்தமற்ற, ஒலிபரப்பப் படாத மௌனம் எத்தனை வதை?

அடுத்த அறையில் இருந்து சீனா மணி அசைகிற சத்தம் வருகிறது. தானாகக் காற்றில் அசைந்து உலோகக் குழல்களின் தொங்கல்கள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாகிற சத்தம் இல்லை. முதல் சத்தத்தில் ஒரு விரல் உண்டாக்குகிற கலவரம் இருந்து, அப்புறம் அது அடங்க அடங்கத் தானாக எழுகிற மணியோசை. அது ராஜேஸ்வரியின் விரலாகத்தான் இருக்கும்.

ராஜேஸ்வரிக்குத்தான் அப்படி ஒரு பழக்கம். எதையும் சும்மா பார்க்க ராஜியால் முடிவது இல்லை. எங்களுக்குக் கல்யாணமாகி சொர்ணாவும் பிறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன். தொட்டில் கம்பின் கடைசல் வழவழப்பும் அதன் மூவர்ணக் கொடி நிறங்களும் ஞாபகத்தில் வருகிறது என்றால், அது சரியாகத்தானே இருக்கும்.

அப்போது எல்லாம் போட்டோ தொங்கவிடாத பட்டாசல் உண்டா? எங்களுடைய கல்யாண போட்டோவை ராஜேஸ்வரி அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். “நீங்க மாத்திரம் பாத்து ரசிச்சாப் போதும்னு உங்க உயரத்துக்கு மாட்டிக்கிட்டீங்களாக்கும்? நாங்க எல்லாம் பார்க்க வேண்டாமா? நிமிர்ந்து பாத்துப் பாத்துப் பொடனி வலிக்குது சாமி” என்று என்னைப் பார்த்துச் சொன்னாள். எனக்கு அந்த ‘சாமி’ பிடித்திருந்தது. அந்தச் சொல்லில் ஓர் இடைவெளி குறைந்து நான், சந்திரா, ராஜி எல்லோரும் மேலே ஏறுகிற, மல்லிகை தொங்குகிற, லேசாக வாத்திய இசை ஒலிக்கிற ஒரு லிஃப்ட்டின் சச்சதுரத்தில் நிற்பதாகத் தோன்றியது.

இதற்குள், ராஜி சந்திராவிடம் ஸ்டூல் இருக்கிறதா என்று கேட்டாள். தையல் மெஷின் பக்கம் இருந்ததை அவளே எடுத்துப் போட்டாள். மேலே ஏறி, அந்தப் புகைப்படத்தை எடுத்து நீட்டினாள். ராஜியிடம் இருந்து நான் அதை வாங்க வேண்டும் என்று கையைக்கூட நீட்டிவிட்டேன். சந்திரா யார்? என்னதான் சினேகிதி என்றாலும், இதெல்லாம் நடக்கவிட முடியுமா? “இங்கே கொடு” என்று சத்தம் கொடுத்தாள். கழற்றிய எங்கள் புகைப்படச் சட்டத்துடன், ராஜி அந்த ஸ்டூலில் நின்ற நேரத்தை, கைக்கடிகார முள்போல இப்போதும் என்னால் திருப்பிவைத்துக் கொள்ள முடியும்.

ராஜி தன் புடவைத் தலைப்பால் ஒரு தடவை அதைத் துடைக்கிறாள். “தூசி தூசி… யப்பா எவ்வளவு தூசி” என்கிறாள். முதலில் ‘சாமி’ பிடித்ததுபோல, இப்போது இந்த ‘யப்பா’ பிடிக்கிறது.

ராஜி கட்டியிருந்தது ஒரு கருநீலப் புடவை. சந்திரா சொல்வது மாதிரி சொன்னால், ‘நவ்வாப் பழக் கலர்.’ புடவை முழுவதும் வளையம் வளையமாகக்கிடக்கிறது. கோயில் வாசல் வளையல் கடையில் இருந்து எல்லா வளையல்களும் உருண்டு உருண்டு வந்து, ஒன்றின் மேல் ஒன்றாக மண்டபத் தரையில் சுழன்றன. வளையல்களுக்கு உயிர் இருப்பதுபோலவும் ஒவ்வொரு வெவ்வேறு நிற வளையலும், குவியலுக்குள் புதைந்து, இன்னொரு புதிய நிறத்தோடு வெளியே வருவதும் நன்றாகத்தானே இருக்கும். ஸ்டூலில் நிற்கிற ராஜியின் புடவையில் இருந்து எந்த விநாடியிலும் அப்படி ஒன்றிரண்டு வளையல்கள் உருண்டு கீழே வரக்கூடும். அப்படி வரும்போது, உடையாமல் அவற்றை ஏந்திக்கொள் வதற்காகவே நான் அருகில் நிற்கிறேன் என்று தோன்றிற்று.

ராஜி இறங்கின கையோடு எங்கள் புகைப்படத்தைப் பார்த்தாள். ”வெளிச்சம் காணலை” என்று வாசலுக்குப் போனாள். சந்திராவும் கூடவே போனாள்.

நாங்கள் அப்போது வாடகைக்கு இருந்த வீட்டின் நடையை ஒட்டி இரண்டு மரத் தூண்கள் வழுவழு என்று இருக்கும். ராஜி அந்தத் தூணில் சாய்ந்துகொண்டாள். நடைப் பக்கத்து அரைவட்டக் கல்படிகளில் சந்திரா உட்கார்ந்து ராஜி முகத்தையே பார்த்தபடி இருந்தாள்.

“நல்லா இருக்கு” என்று முதலில் சொல்லி, “ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்க” என்று ராஜி சொல்லும்போது, சந்திரா உட்கார்ந்தவாக்கில் ராஜியின் மடங்கின முழங்கால் பகுதியில் தலையைச் சாய்த்துக்கொண்டாள். அப்படிச் சாய்ந்திருந்த நேரம் சில நிமிஷங்கள்கூட இருக்காது. அந்தக் குறைந்த நேரத்துக்குள் ராஜியின் ஒரு கை நீண்டு, சந்திராவின் சாய்ந்த தலையைத் தன்னோடு சேர்த்துக்கொண்டது.
இதுபோன்று பெரிதாக ஒன்றுமே இல்லாத இடங் களில் எல்லாம் எனக்குக் கண் நிரம்பிவிடும். நிரம்பின கண்களோடு ராஜியையும் சந்திராவையும் அப்படியே அணைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. தொட்டிலில்கிடந்த பிள்ளை சிணுங்கியது ஒரு வகைக்கு நல்லதாகப் போயிற்று.

ராஜி படத்தை உற்றுப்பார்த்தபடி சொன்னாள், “சித்ரா ஸ்டுடியோவுல எடுத்ததா? அதானே பார்த்தேன்.”

”ஐய்ய்… அப்படின்னா உனக்கு சித்ரா ஸ்டுடியோ எல்லாம் தெரியுமா ராஜி?”

தெரியும் என்று ராஜி சொல்லவில்லை. “எபியும் நானும் அங்க போட்டோ எடுத்திருக்கோம்” என்று மட்டும் சொன்னாள். ராஜியின் குரல் ராஜியின் குரல்போல இல்லை. அந்த மரத் தூணுக்குள் இருந்து கேட்டதுபோல இருந்தது. அதைச் சொன்ன பிறகு ஒரு நிமிடம்கூட அந்த இடத் தில் உட்கார்ந்து இருக்கவில்லை.

ராஜி எழுந்த அளவுக்கு வேகமாக எழுந்திருக்க சந்திரா சிரமப்பட்டாள். ஏதோ வாசலில் போட்டு இருந்த கோலம்தான் அவளை எழுந்திருக்கவிடாமல் தடுப்பது மாதிரி, கோலத்தையே பார்த்தாள்.

கண்கள் கலங்கும்போது எதையாவது அசையாமல் பார்க்கத்தானே தோன்றும். தொட்டில் பக்கம் நிற்கிற என்னை ராஜி பொருட்படுத்தவில்லை.

சந்திரா ஏற்கெனவே நிறைய இதைப்பற்றிச் சொல்லி இருக்கிறாள். ஏற்கெனவே என்றால், சொர்ணாவை சந்திரா உண்டாகி ஏழெட்டு மாதம் ஆகியிருந்த சமயத்தில், எபி என்கிற எபினேசரைத்தான் ராஜேஸ்வரி காதலித்தாள். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகே ராஜி வீட்டில் கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். மோதிரம் எல்லாம் மாற்றிய பிறகுதான் அந்த விபத்து நடந்தது.

அடைத்துகிடந்த குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் காத்துக்கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி எப்படி அவ்வளவு வேகமாக எபினேசரின் மோட்டார் சைக்கிளில் மோதியது என்று தெரியவில்லை. எபி மட்டும் இல்லை… இன்னொரு சைக்கிள்காரர்கூட… சைக்கிளில் கட்டியிருந்த வேலிக்கருவை விறகின் பச்சை வாடை, அடித்த வெயிலில் சுள்ளென்று பரவியது. கோர்ட் விசாரணைக்குப் போய்விட்டு ஜெயிலுக்குத் திரும்புகிற இரண்டு கைதிகளில், தாடிவைத்த பையன் ஈரமான ரத்தத்தைப் பார்த்ததும் கையை உயர்த்தினதில், விலங்கின் மேல் போட்டு இருந்த துண்டு நழுவியது. எபியின் முகம் அந்த விலங்கையே பார்ப்பதுபோலத் தரையில் அழுந்தி இருந்தது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு, “அதுக்குப் பிறகு ராஜிக்குக் கையில விலங்கு போட்டுக் கூட்டிக்கிட்டுப் போகிற யாராவது எதிரே வந்தால்கூட, பார்க்க முடியாதாம். அவள் போகிற பஸ்ஸில் அப்படி யாராவது இருந்தால், உடனே இறங்கிவிடுவாளாம் பாவி” என்று சந்திரா அழுத நேரம் இப்போது ஞாபகம் வருகிறது. சரிந்துகிடக்கிற ஒரு சைக்கிளும் பச்சை விறகு வாசமும் பின்னால் எத்தனையோ தடவை என்னைத் தொந்தரவு செய்திருக்கின்றன.

ராஜி எங்கள் போட்டோவைக் கீழே எங்கும் வைக்கவில்லை. ஸ்டூலை எடுத்துப் போடும்போதும் சரி, ஏறி ஆணியில் மாட்டும்போதும் சரி, அவளா கவே சமாளித்துக்கொண்டாள். சரியாக இருக்கிறதா, சாய்ந்து இல்லையே என்று கழுத்தை ஒடித்துப் பார்த்துவிட்டு இறங்கி, ஸ்டூலை எடுத்தது மாதிரியே தையல் மெஷின் பக்கம் போட்டாள்.

சீனா மணி ஓசை பூராவும் நின்றுவிட்டு இருந்தது. நான் போட்டோவில் இருந்து, எபினேசரிடம் நகர்வதற்குள், இரண்டு பேரும் அடுத்த அறைக்கு நகர்ந்துவிட்டார்கள்போல. புத்தர் சிலையைப்பற்றிய பேச்சு கேட்கிறது. அந்த அறையில் ஒரு வெண்கல புத்தரை வைத்திருக்கிறோம். சிறியதுதான். உட்கார்ந்திருப்பார். குறுக்கே மார்பின் இடதுபுறமாகப் போகிற ஆடை வலது தோள் வரை போயிருக்கும். வலது கை, வலது தொடையின் கீழ் முகமாகத் தொங்க, மடியில் இருக்கிற இடது கையில் ஒரு தீர்த்தச் செம்பு போன்ற பாத்திரம் இருக்கும். ராஜி சரியாக அந்தப் பாத்திரத்தைப்பற்றிச் சந்திராவிடம் கேட்க ஆரம்பித்தாள். ”நிற்கிறது, உட்கார்கிறது, பெருமாள் மாதிரி படுத்துக்கிடக்கிறது எல்லாம் பார்த்திருக்கோம். இது என்ன புதுசா, மடியில ஒரு செம்பு வச்சுக்கிட்டு? உனக்குத் தெரியுதா சந்திரா என்னதுன்னு?”

“நானும் மனுஷின்னு இந்த வீட்டுலதான் இருக்கேன். அப்பபோ தூசியிருக்கா தும்பு இருக்கான்னு தட்டிவிடுதேன். இன்னிக்கு வரைக்கும் அவரு உட்கார்ந்திருக்கிறதுதான் தெரியும். மடியில என்ன இருக்குன்னு உத்துப் பாத்ததே இல்லை. எது எல்லாம் பிறத்தியாருக்கு லாஸ்ட்ல படுமோ, அது எல்லாம் உன் கண்ணுக்கு எப்படித்தான் முதல்லயே பட்டுருதோ ராஜி?” சந்திரா மிகுந்த ஆற்றாமையோடுதான் கேட்டாள்.

“எப்படித்தான் முதலிலே படுகிறதோ என்பதற்குப் பதிலாக, எதுக்குத்தான் முதலிலே படுகிறதோ என்று கேட்டால் சரியாக இருக்கும்” ராஜி இதைச் சொல்லும்போது பேச்சு வழக்கில் இருந்து விலகி, ஒரு நாடகத்தின் மத்தியில் வருகிற வசனம் போல, அதிக நிறுத்தங்களுடன் பேசினாள். எப்படி என்பதையும், எதற்கு என்பதையும் ஆங்கிலத்தில் ஒரு தடவை உச்சரித்தாள். நிச்சயமாக ராஜி அதைப் புத்தரைப் பார்த்துக்கொண்டு புத்தரிடமேதான் கேட்டிருப்பாள்.

எனக்குச் சற்று நகர்ந்து, அடுத்த அறைக்கோ அல்லது ராஜியும் சந்திராவும் புத்தருடன் இருக்கிற அறைக்கோ போக வேண்டும் என்று தோன்றியது.

ராஜியின் நடமாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்றும், ராஜி எங்கள் வீட்டில் இருக்கிற எல்லாப் பொழுதுகளிலும் சந்திராவுடன் நானும் இருக்க வேண்டும் என்றும் நினைப்பதில் பிசகு எதுவும் உண்டா?

அப்புறம் ராஜியின் அருகில் சந்திரா அடைகிற மலர்ச்சியை என்னால் ஏன் ஒருபோதும் உண்டாக்க முடியவில்லை என்கிற தவிப்பும் இன்னொரு காரணம். ராஜி இதை அனுமதிக்கிறதில்லை.

எங்கள் வீட்டுக்குத்தான் அவள் வந்திருப்பாள் என்றாலும், என்னுடைய இடங்களை அவள் மட்டுமே தீர்மானிப்பாள் என்பது நன்றாகவே தெரியும். ராஜியின் மனதுக்குள் வெவ்வேறு அறைகள் இருக்கும். நான், சந்திரா, ராஜி இருக்கிற அறை, சந்திராவும் ராஜியும் இருக்கிற அறை. நானும் சந்திராவும் தனியாக இருக்க, அவள் மட்டும் தனியாக இருக்கிற அறை என்று நிறைய இருக்கும்.

நம்முடைய வீடுதானே அல்லது சந்திராதானே, சந்திராவின் சினேகிதிதானே என்று அவற்றில் எந்த அறையில் இருந்தும் எந்த அறைக்கும் போய்விட முடியாது.

அப்போது போடியில் இருந்தோம். ராஜி சாயுங்காலம்தான் வந்திருந்தாள். ராஜிக்கு மொட்டைமாடி பிடிக்கும். சொல்லப்போனால் யாருக்குத்தான் பிடிக்காது? மேலே போய்விட்டாள். புங்கைமரக் கிளைகளுக்கே ஒரு அடர்த்தி உண்டு இல்லையா. அது அசைந்து அசைந்து தரையில் சொட்டிக்கிடந்த பழைய எச்சங்களை மெழுகிக்கொண்டு இருக்க, ராஜி தன்னுடைய மடிக்கணினியில் புல்லாங்குழல் கேட்டுக்கொண்டு இருந்தாள். அது நான் எப்போதோ கேட்ட சீனத்துப் புல்லாங்குழல் மாதிரி இருக்கிறதே என்று படியேறிப் போனேன்.

ராஜி அப்படி அழுதுகொண்டு இருப்பாள் என்று எப்படி நான் எதிர்பார்க்க முடியும்? என்ன தான் உடனே கவனமாகத் திரும்பினாலும் சத்தம் கேட்காமல் இருக்குமா? நம் காலுக்கு இருக்கிற ஜாக்கிரதை தரைக்கு எப்படி உண்டாகும்?

பாதம் உரசின சத்ததில் ராஜி திரும்பி ஒருதடவை பார்த்தாள். ‘ஏன் இங்கே வந்தாய் நாயே?’ என்று கேட்டிருந்தால்கூட அப்படி இராது. ‘ஸாரி’ என்ற படி இறங்கினேன். அவளுடைய பெயரைச் சேர்த்துச் சொல்லக்கூட முடியவில்லை.

கீழே வந்து சந்திராவிடம் சொன்னேன். ”சரி” என்றாள். சரியென்றால் என்ன அர்த்தம்? எது சரி. யார் சரி. இதில் என்ன சரியும் தப்பும் வந்தது? மொட்டை மாடியில் இருந்து நமக்குப் பிடித்த ஒரு சத்தம் கேட்கிறது. இன்னும் கொஞ்சம் கேட்போம் என்று போனால் தப்பா? ஒரு தடவைக்கு நான்கு தடவை, வீட்டுக்குப் பின்னால் நிற்கிற மஞ்சள் கொன்றையில் ஒரு குருவிச் சத்தம் கேட்டால் எட்டிப் பார்க்காமலா இருப்போம்? சத்ததில் குருவி என்ன, கொக்கு என்ன, ராஜி என்ன?

”நீங்கள் போட்டுச் சாப்பிட்டுக்கிறீங்களா?”- சந்திரா என்னிடம் கேட்டாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. உலகத்தில் சாப்பாடு தவிர, எவ்வளவு இருக்கிறது மனுஷனுக்கு. நான்கு கரண்டி கோதுமை உப்புமாவைக் கிண்டி, அதை ஒரு பீங்கான் தட்டில் மூடிவைத்துவிட்டால் போதுமா?

“நான் மேலே போறேன். வர லேட்டாச்சுன்னா நீங்க படுத்துத் தூங்குங்க” – சந்திரா மேலே கொண்டுபோவதற்கு சாப்பாட்டுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு இருந்தாள்.

“இவ்வளவையும் ஒத்தையில எப்படி மேலே கொண்டுபோவே?” என்று கேட்டதற்கு சந்திரா ஒன்றும் சொல்லவில்லை. “நான் கொண்டுவந்து வைக்கவா?” என்பதற்கும் பதில் இல்லை. ஒரு மனுஷன் இதற்கு மேல் என்னதான் செய்ய முடியும். தண்ணீர் ஜாடியில் களகளவென்று தண்ணீரைத் திருகி நிரப்பியபடி சந்திரா குனிந்திருந்தாள். தண்ணீர் நிரம்புகிற சத்தம் ஏதோ ஒரு வகை யில் நம்மையும் நிரப்பத்தான் செய்கிறது.

சந்திரா பக்கம் போய் இறுக்கிக்கட்டிக்கொள்ள நினைத்தேன். தலையை இரண்டு முறை தட்டிக் கொடுத்துவிட்டு, “அது அழுதுக்கிட்டு உக்காந்திருக்கும்மா” என்றேன். “வந்து சொல்லுதேன்” என்று சந்திரா படியேறும்போது சொன்னாள்.

ஏதோ ஒரு சிறு மூடியோ தட்டோ அவள் கையில் இருந்து நழுவிப் படியில் விழுந்து துள்ளியது.

சந்திரா வந்து சொன்னாள். “தரையில ஒண்ணுமே விரிக்காமல் அப்படியே படுத்தாச்சாக்கும்?” என்று ஆரம்பித்தாள். ஒரு தலையணையை எனக் குக் கொடுத்துவிட்டு இன்னும் ஒன்றைத் தன் மடியில் வைத்துக்கொண்டாள். சற்று அமைதியாக உட்கார்ந்திருந்தாள். திரும்பிப் படுத்து சந்திராவையே பார்த்தேன். சேலைக்கு வெளியே தெரிந்த கரண்டைக் காலில் காய்ப்பு ஏறியிருந்தது. மிஞ்சி வளையத்தை விரலோடு உருட்டியபடி சந்திரா சொல்ல ஆரம்பித்தாள். “கல்யாணம் வேண்டாம்னா. மேல் படிப்புப் படிச்சா. பேங்க் வேலையை விட்டுட்டு, காலேஜ்ல சொல்லிக்கொடுக்கப் போனா, அங்கே போனா. இங்கே வந்தா. ஆனால், ஏன் இப்படி ஆகுது அவளுக்கு மட்டும்.”

மறுபடியும் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தாள்.

“ராஜிக்கு ஒண்ணுக்கு மேல ஒண்ணா வந்துக்கிட்டே இருக்கு. அவளாக் கொண்டு எல்லாத்தையும் பல்லைக் கடிச்சுக்கிட்டு நீச்சல் அடிச்சுக்கிட்டு இருக்கா.”- இப்படியே பொதுப்படையாக இன்னும் நாலைந்து சொல்லிக்கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில் என் புஜத்தை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்ட சந்திராவை ஏறிட்டுப் பார்த்தேன்.

“ரெண்டு பக்கத்திலேயும் கட்டி இருக்காம். கொஞ்சம் முத்திப்போயிட்டுதாம். சுத்தமா எடுத்திரணும்னு சொல்லிட்டாங்களாம்.”

நான் இப்போது சந்திரா முகத்தைப் பார்க்கவில்லை. எங்கே கட்டி, எதை எடுக்கச் சொல்லிவிட்டார்கள் என்றெல்லாம் கேட்கவில்லை.

“அதைத் தனியாவா விட்டுட்டு வந்திருக்கே” என்றேன்.

நான் அங்கேதான் பார்ப்பேன் என்று நினைத்திருக்க வேண்டும். சேலைத் தலைப்பை இழுத்துவிட்டுக்கொண்டு சந்திரா எழுந்தாள்.

மச்சுப் படி ஏறும்போது மூக்கை உறிஞ்சுவது கேட்டது.

மிக நெருக்கமாக சந்திராவை இழுத்து முகத்தோடு முகம் வைத்தபடி ராஜி கேமராவைப் பார்த்துச் சிரித்தாள். “இதைகூட நீங்கள் பதிவு செய்யலாம் சார்” என்று சந்திராவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். திடீரென்று என்ன தோன்றியதோ, சந்திராவின் மடியில் படுத்து, “எங்க அம்மை” என்று முகத்தைப் புதைத்துக்கொண்டாள். ஏதோ ஒரு அவசரமான அசைவில், கையோ உடம்போ பட்டு தொட்டிச் செடி நடனமிடுவது போலச் சிலிர்த்தது. நான் மிக வேகமாக ஒவ்வொன்றையும் க்ளிக் செய்துகொண்டு இருந்தேன்.

இதுவரை எடுத்த படங்களைவிடவும் இந்தப் படங்கள் நிச்சயமாக நன்றாக அமையும் என்று தோன்றும்போது, ஒரு புகைப்படக்காரனுக்கு உண்டாகிற கிளர்ச்சியை நான் அடைந்திருந்தேன். விரலை அழுத்தித் தளர்த்தும்போது உண்டாகிற சத்தமும், சந்திராவின் மேலும் ராஜி மேலும் பாய்கிற வெளிச்சமும் அடுத்தடுத்த மிடறுக்கான போதையை உண்டாக்கிக்கொண்டு இருந்தன.

சந்திரா, “போதும்ப்பா. எதுக்கு இவ்வளவு? ஒரு கணக்கு இல்லையா?” என்றாள். கணக்குகள் அற்ற தருணங்களில் உண்டாகிற சந்தோஷம் அவள் முகத் தில் இருந்தது.

ராஜி படிகளில் இருந்து இறங்கி என்னிடம் வந்தாள். “எங்கே எங்கே, நாங்க நல்லா விழுந்திருக்கோமான்னு பார்க்கட்டும்” என்று என்னிடம் இருந்து கேமராவை வாங்கினாள்.

”போட்டோவுல நான் நல்லாவே இருக்க மாட்டேன், எங்கிட்ட காட்டவே வேண்டாம்” என்று சந்திரா எங்களைவிட்டு நகர்ந்தாள்.
“நான் நல்லா இருப்பேனா?” ராஜி என்னிடம் கேட்டாள்.

அது கேள்வி இல்லை. ஒப்புதல் கேட்பது. நான் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்தேன். சிரித்தால் போதுமென்று இருந்தது.

“உனக்கென்ன குட்டி, அன்றைக்குப் பார்த்தது மாதிரி அப்படியே இருக்கியே” சந்திரா மறுபடியும் எங்கள் பக்கம் வந்தாள். குட்டி என்று சொன்ன பிறகு ராஜியைத் தொட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியிருக்கும்.

ராஜி சிரித்துக்கொண்டுதான் சொன்னாள், “அப்படியேதானே இருப்பேன், ஒருபோதும் தேயாத பென்சில் மாதிரி” என்று நிறுத்தினாள்.

“ஏன் தெரியுமா, ஒருபோதும் எழுதாத பென்சில் இல்லையா இது. எழுதினாத்தானே தேயும்” என்று மேலும் சிரித்தாள்.

“அறையட்டுமா உன்னை?” கையை ஓங்கிக்கொண்டு சந்திரா, ராஜி பக்கம் சென்றாள்.

சந்திராவை ‘நில்’ என்று சொல்வதுபோலக் கையைக் காட்டிவிட்டு, ராஜி அந்த மலையாளக் கவிதையை வரி வரியாகச் சொல்ல ஆரம்பித்தாள்!

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *