ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 7,658 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12

மாலையில் ரவி வீட்டுக்கு வந்தான். பகலில் சாந்தாவுக்கும் பத்மினிக்கும் இடையே நிகழ்ந்தது எதுவுமே அவனுக்குத் தெரியாது. 

“அட! நீங்களா? என்ன ஆச்சரியம், இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டீங்க?” என்று குதர்க்கமாகக் கேட்டாள் சாந்தா. 

‘சாந்தா, ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி உங்கிட்டே பேசணும்.” 

“என்ன விஷயம்?” 

“சாந்தா. நான் சொல்லப் போவது உனக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம், ஆனா, தயவு செய்து, குறுக்கிடாம, நான் சொல்றது முழுவதையும் பொறுமையாக் கேளு,” என்று ஆரம்பித்து, ரவி தன்னுடைய கதையைத் தொடக்கத்திலிருந்து சாந்தாவுக்குச் சொன்னான். 

ஒரு விவரமும் விடாமல், அவன் கல்லூரியில் படித்த நாட்களிலிருந்து தொடங்கி, பத்மினியைப் பெண் பார்க்கச் சென்றது, அவர்களுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டது, பிறகு அது தடைபட்டுப் போனது, அவன் நடிகன் ஆனது, பத்மினி இறந்து போனதாகக் கேள்விப்பட்டது. பிறகு சமீபத்தில் அவளைப் பரிதாப நிலையில் சந்தித்தது-எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொன்ன பிறகு தொடர்ந்து கேட்டான்: 

“இப்போ சொல்லு சாந்தா, நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அவளுக்கும் வாழ்வு கொடுக்கணும்னு நினைக்கிறது தப்பா?” 

“தப்புத்தான்! நான் இருக்கும்போது, நீங்க எப்படி இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்?” 

“என்ன சாந்தா இது? இவ்வளவு விவரமா நான் எல்லாத்தையும் விளக்கிச் சொல்லியும் கூட இப்படி நீ கேக்கறியே! நான் என்ன வெறும் காம வெறியினாலேயா. இன்னொரு மனைவி வேணும்னு ஆசைப்படறேன்? இத்தனை வருஷமா என்னோட வாழ்ந்திருக்கியே, நான் அப்படிப்பட்டவன் இல்லைன்னு உனக்கே தெரியாதா? இத்தனை வருஷமா நான் என்னிக்காவது அந்த வகையிலே உனக்குத் துரோகம் பண்ணி இருக்கேனா? அப்படி மனசாலே கூட நான் நினைச்சதில்லை. ஆனா பத்மினியோட விஷயம் தனிப்பட்டது. இது அவளோ நானோ விரும்பி ஏற்படுத்திய சிக்கல் இல்லை, இதெல்லாம் விதியின் விளையாட்டு. தயவு செய்து கொஞ்சம் சிந்திச்சுப் பாரு!” 

“என்னத்தைச் சிந்திச்சுப் பார்க்கிறது? அவ என்னைவிட அழகா இருக்கா. அதனாலே என்னை இப்போ உங்களுக்குப் பிடிக்கலை, அவ்வளவுதான்! அவ அழகைக் காட்டி மயக்கி, உங்களை எங்கிட்டேயிருந்து கால்லே நின்னுட்டுக் குதிக்கிறீங்க”. 

”சாந்தா, அப்படியெல்லாம் பேசாதே! நான் உன்னை விட்டு நிரந்தரமாப் பிரிஞ்சு போறேன்னா சொன்னேன்? நீ என் மனைவி: உனக்கும் ஸ்ரீதருக்கும் என்றைக்கும் துரோகம் பண்ண மாட்டேன். உன் வாழ்க்கையிலே பத்மினிக்கும் கொஞ்சம் இடம் கொடு. அவ்வளவுதான் நான் கேக்கறேன்.” 

“முடியாது. நம்ம வாழ்க்கையிலே வேறு எந்தப் பெண்ணையும் குறுக்கிட விட மாட்டேன். வேறு எவளுக்கும் இடம் தர மாட்டேன்!” 

”சாந்தா! இவ்வளவு சொல்லியும், உனக்கு பத்மினி மேலே கொஞ்சம் கூட அனுதாபம் பிறக்கலையா? அவ என்ன தப்புப் பண்ணா சொல்லு? அவ எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டிருக்கா, ரொம்ப நொந்து போயிருக்கா. அவ வேணும்னு திட்டம் போட்டு உன்னுடைய வாழ்க்கையிலே குறுக்கிடணும்னு வரலை. தற்செயலா மறுபடியும் அவளைச் சந்திச்சேன். நான்தான் சொன்னேனே, அவ கண் பார்வை இல்லாம குருடியா இருந்தாள்னு. அவளுக்கு நான் நடிகன் ஆனதைப் பத்திக்கூட இப்பத்தான் தெரிஞ்சது. எனக்குக் கல்யாணம் ஆன விஷயம்கூட இன்னும் அவளுக்குத் தெரியாது. அவ ரொம்ப யோக்கியமானவ, தன்மானம் உள்ளவ. நீ இருக்கிறதைப் பத்தி அவளுக்குத் தெரிஞ்சா, அவ மறுபடியும் எங்கேயாவது ஓடிப் போயிடுவா, எப்படியெல்லாமோ தவிப்பா. இல்லை, தற்கொலை பண்ணிக்குவா. இது வரைக்கும் அவ பட்ட துன்பங்கள் எல்லாம் போதாதா? மறுபடியும் அவளுக்கு அந்தக் கதி ஏற்படக் கூடாது சாந்தா. அதனாலதான், அவளுக்குத் தெரியாம, இப்போ உன் கிட்டே இதைப் பத்திப் பேசறேன். அவளாக உன் வாழ்க்கையிலே குறுக்கிட விரும்பவே மாட்டா. ஆனா நீயே சம்மதிச்சிட்டா, பத்மினியோட மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அதனால்தான். உன்னோட சம்மதத்தை வாங்கிட்டு அப்புறம்  பத்மினியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். மூத்த மனைவியான நீயே, உன்னுடைய சகோதரியா பத்மினியை ஏற்றுக் கொண்டால்… பத்மினி இதைப்பத்தி அவ்வளவு வருத்தப்பட மாட்டா. உனக்கு அநியாயம் பண்றதா நினைக்க மாட்டா…” 

அன்று காலையில் பத்மினியைச் சந்தித்துப் பேசியதைப் பற்றிச் சாந்தா எதுவுமே சொல்லவில்லை. 

”பத்மினி வருத்தப்படறதைப் பத்தி நான் கவலைப்படணுமா? ரொம்ப நன்றாயிருக்கு நீங்க சொல்றது! நான் உங்க மனைவி! உங்களை இன்னொருத்தியோடே எந்தக் காரணத்தைக் கொண்டும் பகிர்ந்து கொள்ள மாட்டேன்!” 

ரவி பொறுமையை இழந்தான். “சாந்தா, நீ இவ்வளவு கல் நெஞ்சுக்காரியா இருப்பேன்னு நான் கனவிலேயும் நினைக்கலை! பத்மினியோட கதையைக் கேட்டா, கல்லு கூட உருகுமே! ஆனா நீ? நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். என்ன சொன்னாலும், நான் உங்க மனைவி, நான் உங்க மனைவின்னு கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரித் திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருக்கியே தவிர, நான் சொல்றதைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறியே! என் மனைவிங்கற அந்தஸ்து உனக்குக் கிடைச்சதே பத்மினியினாலேதான்! அதை மறந்துடாதே!” 

”என்ன?” சாந்தா அதிர்ச்சி அடைந்தாள். 

“ஆமாம், பத்மினி செத்துப் போயிட்டான்னு நான் நம்பினதனாலேதான், எங்க அம்மாவைத் திருப்திப்படுத்த நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சேன். இவ்வளவு நேரமா இதைச் சொல்லி உன் மனசைப் புண்படுத்த வேண்டாம்னு நினைச்சேன். ஆனா, உனக்கு மனசுன்னு ஒண்ணு இருந்தாதானே! அது வெறும் கல்லு. இப்போ தெரிஞ்சுக்கோ, பத்மினி மட்டும் உயிரோடு இருக்காள்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா, நான் உன்னை மட்டுமில்லை, வேறு எவளையுமே இந்த ஜன்மத்திலே கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சிருக்க மாட்டேன். அவளாலே உனக்குக் கிடைச்ச வாழ்விலே, இப்போ அவளுக்கே ஒரு சின்ன இடம் தர மறுக்கிறியே? கடைசி முறையாக் கேக்கறேன். என்ன சொல்றே? பத்மினியை நான் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கிறியா. இல்லையா?” 

“முடியாது, நீங்க என்ன சொன்னாலும் சரி, இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்!” என்று சாந்தா கத்தினாள். 

ரவி ஒரு தீர்மானத்திற்கு வந்தான்: 

“உன் சம்மதம் யாருக்கு வேணும், போடீ! நீ என் மனைவியாச்சேன்னு மதிப்புக் கொடுத்து உன்னோட சம்மதத்தைப் பெற நினைச்சேன். இல்லைன்னா. உன்னைக் கேட்கணும்கிற அவசியம் எனக்கில்லை. உனக்குத் தெரியாமலேயே இந்தக் காரியத்தை நான் பண்ணியிருக்க முடியும். உன்னைக் கேட்டும் பிரயோஜனமில்லாமப் போயிட்டது. ஆனா என்னையும் பத்மினியையும் எந்தச் சக்தியாலேயும் இனிமே பிரிக்க முடியாது. பத்மினி இல்லாத வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நீ சம்மதித்தாலும் சரி, சம்மதிக்கலைன்னாலும் சரி, நான் பத்மினியைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன். அவளை என் மனைவி ஆக்கிட்டு, அவளுக்கு வாழ்வு கொடுத்தே தீருவேன். நான் வர்றேன்,” என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டு ரவி கோபமாகக் காரை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டான். 

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *