ஐந்து குட்டிக் கதைகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 5,512 
 

மொத்தம் ஐந்து குட்டிக் கதைகள். இந்த ஐந்தையும் தனித்தனியாக வாசித்தால் தனித்தனி குட்டிக் கதைகளாகத் தெரியும். அதையே ஒன்றாகப் படித்தால் ஒரே கதையாகவும் விளங்கும்.

மாப்பிள்ளையும், பொண்ணும்!

“பொண்ணு உன் தங்கச்சி மவனுக்குதானே?”

“ம்ம்… சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு அவ பொண்ணை தந்தாவணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்பத்து வழக்கம்”

“சொந்தத்துலே கொடுத்தா அதுகளுக்கு பொறக்குற புள்ளைகளுக்கு ஊனம் வரும்னு சொல்றாங்களே?”

“சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். அதுக்கோசரம் உறவை வுட்டுத் தந்துட முடியுமா?”

பிறந்து ஒரு நாள் கூட ஆகாத ‘பொண்ணு’ தூங்கிக் கொண்டிருந்தாள். அப்பா, அம்மாவோடு ஹாஸ்பிடலுக்கு வந்திருந்த ‘மாப்பிள்ளை’ குச்சி மிட்டாய் சப்பிக் கொண்டிருந்தான்.

யாரைடி கட்டிப்பே?

“தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!”

“கொமாருமாமாவைத்தான் பெரியவளானா கல்யாணம் கட்டிப்பேன்!”

கொமாருமாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அடிக்கத் துரத்தினான். அத்தைகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டவளை பிடிக்கவியலாத இயலாமையில் அழுதுகொண்டே, “நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அதுமாதிரி பேசவேணாம்ணு சொல்லு!”

அவனது அழுகை சிரிப்பையும், குதூகலத்தையும் சொந்தங்களுக்கு தந்தது. திரும்ப கேட்டார்கள். “ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?”

“ம்…….” இம்முறை அவள் யோசித்துக் கொண்டேயிருக்க…

அரண்டுபோன அவன் மனசுக்குள் கத்தினான். “கொமாரு மாமாவைத் தான் கட்டிப்பேன்னு சொல்லுடி சனியனே!”

கொருக்கலிக்கா, முந்திரிக்கா!

தென்னை ஓலைகளுக்கு இடையே பார்த்தபோது புத்தம் புதுசாய் தெரிந்தாள். ஓலை பின்னிக் கொண்டிருந்தான் முறைமாமன்.

முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் சிகப்பிட்டிருந்தது. போனவாரம் விளையாடும் போதுகூட, ’கொருக்கலிக்கா முந்திரிக்கா நிறைய நிறைய கொண்டுவா!’ ராகத்தில், ’கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் கட்டிக்கோ!’ என்று பாடி, செமஅடி வாங்கினாள். பெண் உடனே பெரியவள் ஆகிவிடுகிறாள். ஆண் அப்படியேதான் இருக்கிறான். இப்போது அவள் கட்டிக்கச் சொல்லி கேட்கமாட்டாளா என்று ஏங்கினான்.

“மாமா” மெல்லிசாக கூப்பிட்டாள்.

‘என்ன?’

“என்னைக் கட்டிக்கிறியா மாமா?”

“போடி மூக்குச்சளி. உன்னை எவன் கட்டிப்பான்?”

செருப்பால அடிப்பேன்!

“ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?”

“என்ன பேசுறது?” சொல்லியாக வேண்டும் என்று தோன்றினாலும், எப்படி சொல்லுவது என்கிற தயக்கத்தில் இருந்தான்.

“சும்மா ஏதாவது பேசேன்” அவளே தூண்டினாள்.

“உங்கிட்டே திடீர்னு ‘ஐ லவ் யூ’ சொன்னா என்ன பண்ணுவே?” நூல்விட்டான்.

“செருப்பால அடிப்பேன்” மிரண்டுப்போய் எழுந்து விட்டான்.

“சொன்னது என் அத்தைப்பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்” சத்தமின்றி, முணுமுணுப்பாய் தலைகுனிந்து சொன்னாள்.

அத்தைப்பையனான அவனுக்கு கடற்காற்றின் சத்தத்தில் அவள் சொன்னது கேட்கவேயில்லை.

பஜாரியான தேவதை!

“நீ பார்க்க எப்படி இருப்பே?”

“ஜோதிகா மாதிரி இருப்பேன்”

“நானும் சூர்யா மாதிரி இருப்பேன்”

“அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?”

“ஆமாம். சூர்யா மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்”

“அதானே பார்த்தேன்?”

“சூர்யாவை விட சூப்பரா இருப்பேன்”

“அட்றா…. அட்றா…. நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?”

“நேர்ல வேணா பாப்போமே?”

“பார்க்கலாம் சார். நேரா உங்க வீட்டுக்கு வாங்க”
“அய்யய்யோ பொண்டாட்டி. நீயாடி? இது என்ன புது நம்பர்?”

“என் பிரெண்டோட நம்பர். முதல்லே வீட்டுக்கு வாடா. வெச்சுக்கறேன்”

தேவதைகள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. மாமன்களுக்கு மகள்களாக பிறக்கிறார்கள். என்ன? கல்யாணம் கட்டிக் கொண்டதற்குப் பிறகுதான் பஜாரிகளாக மாறிவிடுகிறார்கள்.

(நன்றி : தினகரன் வசந்தம் 17-4-2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *