ஏகபத்தினி விரதம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 8,592 
 

வானத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டனவா? இரவு வந்துவிட்டது. ஓட்டை விழுந்த மேகம், பொய்யான மினுக்கங்கள்.

ஜன்னற் கம்பிகளின் வெளியே நிலா சிரிக்கின்றது. மயக்குகின்ற சிரிப்பு. விடிவதற்கு முன்னர் மறைந்துபோய்விடும். ஜன்னற் கம்பிகள்… உள்ளேயும் ஒரு சிறைத்தன்மையை உணர்த்துகின்றன.

அவளும் இந்த இதயத்தினுள் சிறைப்பட்டிருந்தாள். அவளுடைய நினைவு வந்தபின்னர் இந்த வானத்தையும் நிலாவையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த நிலவுக்கு முன்னால் அவள் மிதந்து வருவாள். அப்படியே ஜன்னற் கம்பிகளை ஊடறுத்து நுழைந்துகொண்டு இந்தக் கண்களினுள்ளும் வந்துவிடுவாள் – கண்கள் தான் இதயத்தின் கதவுகளோ? இதயத்தில் அவள் நினைவுகள் ஏறுகின்றபொழுது ஓர் இதமான சுமை. அது சுமையா, அல்லது சுகமா?

முகத்தைப் புதைத்துக்கொண்டு குப்புறப் படுப்பதற்காக ஒரு பக்கமாகச் சரிந்தபொழுது.. (கிறீச் – கட்டில் தனது வேதனையை வெளிப்படுத்துகிறது. இப்படி எத்தனை பேரைச் சுமந்திருக்கும்?) அழுக்குத் தலையணை முத்தம் பெறுகின்ற அதிஷ்டத்தைத் தட்டிக்கொள்கிறது. அநியாயமாக அவளுடைய சொந்தம் இந்த அழுக்குத் தலையணைக்குக் கிட்டிவிட்டது.

அட, இந்த மலிவான ஹோட்டலில் மெல்லிய காற்றுக்கூட வந்து உடலைத் தழுவிக்கொள்கிறதே! அதிசயமான சங்கதி!

வாழ்க்கையில் அதிசயங்களுக்குக் குறைவில்லை. ஜயதிலக, நாணயக்கார, சிவபாதம், நசூர்டின் எல்லோரும் மாலையில் அறையைவிட்டு வெளியேறும்போது சிரித்துக்கொண்டே போனார்கள் – மேய்ச்சலுக்கு! இலங்கையிலிருந்து கிளம்பும்பொழுதே அவர்களுடைய திட்டம் இது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதல்முறையாக பாகிஸ்தானுக்குச் சென்றபோதும் இப்படி இரண்டோ மூன்று தினங்கள் புதுடில்லியில் தங்குமடம் போட்டுத்தான் வந்தார்கள். (ஹோட்டல் தீனில் அவர்களுக்கு அவ்வளவு பிரியம்!) இரவு வெகுநேரம் கழித்து நல்ல ‘கலை’யில் சிரித்துக் கும்மாளமடித்துக்கொண்டே வருவார்கள்!

இவர்கள் மட்டுமல்ல! இலங்கையிலுள்ள நண்பர்களும்கூடத்தான்.. கொழும்பிலே போர்டிங் அறைநண்பர்களாக இருந்தவர்களுடைய திருகுதாளங்கள் கொஞ்சநஞ்சமா? இரவோடிரவாக எத்தனை கள்ளக் கடத்தல்கள் செய்திருக்கிறார்கள். முற்றும் துறந்த ஒரு சன்னியாசியைப் போல (முனிவர்கள் அப்படித்தான் பற்றற்று இருப்பார்களாம்!) பக்கத்தில் நடக்கின்ற கூத்துக்களைக் கண்டுகொள்ளாமல் நிஷ்டையில் இருப்பதைக் கண்டு அவர்களும் அதிசயித்திருக்கிறார்கள்.

சுமாரான இளைஞர்கள் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்களோ? ஆண்களெல்லோரும் ஏன் இப்படி ஏதோ நியதிக்குட்பட்டவர்கள்போல கேடுகெட்டுப்போகிறார்கள்? பண்பான வாழ்க்கை நெறிகளை வெறுக்கிறார்கள்? சமூகத்திலுள்ள சட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அவர்கள் விதிவிலக்கானவர்களா? இப்படியெல்லாம் நடந்துகொள்ள அவர்களால் எப்படி முடிகிறது? எப்படிச் சிரிக்கிறார்கள்?

அவர்களுக்கென ஒவ்வொருத்தி – ஒரு காதலி இருக்கமாட்டாளா? எந்தப் பெண்ணுமே அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கமாட்டாளோ? அல்லது பசித்த நேரத்தில் போடுகின்ற சாப்பாட்டைப்போல அந்த உறவுகளையும் சாதாரண விஷயங்களாகக் கருதுகின்ற மரக்கட்டைகளா இவர்கள்? இந்த அழுக்கான அறையினுள் நுழைகின்ற இதமான காற்றைப்போல ஏன் ஒருத்தி அவர்கள் மனங்களினுள் புகுந்துகொள்ள மறுக்கிறாள்?

இந்த இதயத்தினுள் புகுந்துகொண்ட அவளது நினைவு வந்த மாத்திரத்தில் மின்னலைப்போல இன்பக்குமுறல் தோன்றும் – மல்லிகையின் நறுமணத்தை அள்ளி வருகின்ற தென்றல் தரும் இதமான சுகத்தைப்போல.

0

இரண்டு வருடங்களுக்கு முந்திய கதை அது. பாகிஸ்தானுக்குச் செல்வதற்காக அவளைப் பிரிகின்ற நேரம்.. மனதை வாட்டுகின்ற பெரிய கவலை – அவளது நினைவுகள். அழகான சிரிப்பு. ஆதரவான கண்கள். அவற்றை ஒரு நாளைக்காவது தரிசிக்காமல் இருக்க முடியாதே! இனி நான்கு வருடங்கள் – அந்த சுகங்களையெல்லாம் மறந்து சந்நியாசியாகிவிடவேண்டும் எனும் நினைவில் கசப்பு. நான்கு வருடங்கள் – படிப்பு முடிந்து வருகிறபோது அவள் காத்திருப்பாளோ என்னவோ… நிறைகுடம் தளும்பத் தொடங்கியது. உள்ளத்தின் கலக்கத்தை உணர்த்துகின்ற கண்களில் கலக்கம்.

‘…படிப்பு முடிஞ்சு திரும்பிவர நாலு வருசங்கள் செல்லும்… அதுவரையும் எப்படித்தான் இருக்கப்போகிறேன்…? தனிமை எவ்வளவு மோசமாய் வாட்டும் எண்டு நினைக்கவே பயமாய் இருக்கு…! ஏன்தான் இந்த ஸ்கொலர்ஷிப் கிடைச்சுதோ? உன்னை விட்டுட்டு எப்படி இருக்கப்போறேன்? ஒரு நாளைக்குப் பாக்காட்டியும் எனக்குச் சாப்பாடு இறங்காது… இந்த விசித்திரத்திலை அங்கை சாப்பாடோ, நித்திரையோ இல்லாமற்தான் இருப்பன் போலிருக்கு… நீயெண்டால் அம்மா, ஐயா, சகோதரங்களோடை இருப்பாய்… தனிமை அவ்வளவாய் தோற்றாது. சொந்த பந்தங்கள் கோயில் திருவிழாக்கள்… என்னை நினைப்பியோ தெரியாது… சிலவேளை வீட்டுக்காரர் கலியாணமும் பேசுவினம். நீயும் இவன் எங்கை இனி வந்து என்னைக் கட்டப்போறான் எண்ட நினைவோடை ஓமெண்டிடுவாய்… நான் வந்து வானத்தைப் பார்த்துக்கொண்டு நினைக்கவேண்டியதுதான்” – முகத்திற் தழும்பி வடிகின்ற கண்ணீர்த்துளிகள்.

அவள் இரக்கத்தோடு பார்த்தாள். முகத்திலே கருமை – சோகத்தின் வாட்டம்.

‘நீங்கள் ஆம்பிளை… எல்லாத்தையும் வெளிப்படையாய் சொல்லிப்போட்டியள். பொம்பிளையாய்ப் பிறந்த நாங்கள் மனதுக்குள்ளே எல்லாத்தையும் அடக்கி வைச்சு கவலைப்படவேண்டியதுதான். என்ரை மனவருத்தத்தை எப்பிடிச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. உங்களை விட்டிட்டு நான் இருப்பனா? ஒண்டை மாத்திரம் நிச்சயமாய்ச் சொல்லுறன். ஒரு பெண்ணைக் காதலிச்சுப்போட்டுப் பிறகு வேறயொருத்தியை கட்டுறது ஆம்பிளையளுக்குச் சுலபமாய் இருக்கலாம். ஆனால் பொம்பிளையளுக்கு அது கஷ்ட்டம்.”

அதற்கு மேல் அவளால் கதைக்க முடியவில்லை. அழுகை வந்திருக்க வேண்டும். அவளாகவே வலிந்து இந்த மார்பில் சாய்ந்து கொண்டாள். நெடுநேர மௌனம். கைகள் அணைத்துக்கொண்டன. அவளுடைய சூடான கண்ணீர் நெஞ்சிலே கசிந்தது. ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

நீண்ட பிரிவின் ஆரம்பம்.

இரண்டு வருடங்கள் நீட்சியடைந்தன. அதற்கிடையில் பாகிஸ்தான் அரசியல் வானில் கருமேகங்கள் சூழத் தொடங்கின. பெருமழையைப்போல கட்சிக் குழப்பங்கள், மக்கள் போராட்டங்கள். வெளிநாட்டு மாணவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டமை ஒருவித மகிழ்ச்சியை அளித்தது. இலங்கை.. சொந்தபந்தங்கள்.. அவள்!

தலையணையின் அணைப்பைக் கைவிட்டு நிமிர்ந்தபோது மேகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நட்சத்திரமொன்று தனது உறவைக் கழட்டிக்கொண்டு விழுவதுபோல.. ஒளிப்பொட்டொன்றின் வீழ்ச்சி.. வீழ்ந்து அது மறைந்துவிட்டது.

அவள் இன்னும் மறையாமல் இந்த மனதில் ஓர் ஒளிப்பொட்டாக இருக்கின்றாள். இலங்கைக்குச் சென்றிருக்கவே தேவையில்லை.. அப்படியான ஒரு மனமுறிவு. அந்தச் சோகமான கதை..

வீட்டுக்குச் சென்றபொழுது அவள் ‘ரியூற்டரி’க்குச் சென்றிருக்கிறாள் என அறியமுடிந்தது. ஆவலின் உந்துதல் அவ்விடத்தைத் தேடிப்போக வைத்தது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் பஸ்ஸை விட்டு இறங்குமுன்னரே அவள் இன்னொரு இளைஞனுடன் சோடி சேர்ந்து வந்த காட்சி கண்களைக் குற்றியது. மனதிலே ஒரு ‘திக்’.. ஒருவேளை அவளுடைய நண்பனாகவும் இருக்கலாம். அல்லது அடுத்தும் சில ‘திக்.. திக்.’

‘அவள் காணக்கூடியதாக முன்னரே சென்று கேட்டுவிட்டால் எல்லாம் புரிந்துவிடுகிறது’ என்ற மனதின் சமாதானம். ஆனால்.. அவள் அந்த நேரத்தில் இப்படியொரு சந்திப்பை எதிர்பார்க்கவில்லை.

முதலில் அதிர்ச்சி- பின்னர் அலட்சியம். அலட்சியமென்றால் கண்களில் கனல் பறக்கிற கோபம். தலையைச் சட்டென மறுபுறமாக வெட்டுகின்ற புறக்கணிப்பு. நெஞ்சிலிருந்து ஒரு நட்சத்திரத்தின் வீழ்ச்சி. அதையும் பொருட்படுத்தாமல் அவள் வீட்டுக்குச் சென்றபொழுது அங்கேயும் அந்தப் புலி தன் பசுத்தோலை மாற்ற விரும்பவில்லை. தாயாரின் முன்னிலையில் காரசாரமான திட்டல்கள்.

காதலென்பது பாலுணர்வுகளின் பண்பான பிரதிபலிப்பு மாத்திரம்தான் என அவள் கருதுகிறாளா? அதுதான் காதலென்றால் அதைச் சுலபமாக ஜெயதிலகாவும், சிவபாதமும் மூலை முடுக்கெல்லாம் காசை வீசி எறிந்துவிட்டுப் பெற்றுக்கொண்டு போகிறார்களே! அவர்கள் புத்திசாலிகளா? ஆண்களில் எத்தனையோபேர் நச்சுப்பாம்புகளாக இருப்பது உண்மைதான். ஆனால் இப்படியான பெண்களை எந்த வகையில் சேர்ப்பது?

இதமாக வந்து உடலை அணைத்துக்கொள்கின்ற தென்றலைப்போல, மலர்கிற பருவத்திலுள்ள ஒரு மொட்டின் புனிதம்போல.. இதயத்தோடு இழையோடியுள்ள அந்தப் பாசத்தைச் சிதைக்க அவளுக்கு எப்படி மனம் வந்தது?

அதிர்ச்சிக்கு மருந்துபோல ஒரு தந்தி – பாகிஸ்தானில் குழப்ப நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதும் பாடநெறியைத் தொர்வதற்காக அழைப்பு வந்தது.

00

‘சம்சாரம் தேடிக்கிறதில ரொம்ப அவதானம் வேணுங்கிறன். உங்களுக்கு இஷ்டமான பொண்ணைவிட உங்கள்ள இஷ்டப்படுற பொண்ணைத்தான் கட்டிக்கணும்.. அப்படின்னாத்தான் சீவியம் சந்தோஷமாயிருக்கும்.”

பக்கத்து அறையில் யாருக்கோ ஞானம் பிறந்திருக்கிறது. இவர்கள் எந்த ஊர்க்காரர்கள்? இவர்களையும் யாரோ ஒருத்தி ஏமாற்றியிருப்பாளோ? ஊர் எதாக இருந்தாலும் மனிதர்கள் எல்லோருடைய பிரச்சினைகளும் ஒரே மாதிரியானதுதானா?

எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு இயக்கங்களையும் நிர்ணயிக்கின்ற அவளது உயிர்த்துடிப்பான நினைவுகளை அகற்ற முடியவேயில்லை. இது பெரிய குறை. இந்த மனது ஏதோ பாவம் செய்திருக்கவேண்டும். நண்பர்களைப்போலத் தறிகெட்டுத் திரியாமல் அவள் ஒருத்திக்காகவே இந்த மனதைப் பொத்திப் பொத்தி வைத்திருந்ததற்கு இதுதானா பரிசு? படுக்கையை விட்டு எழுந்து நின்று இந்த அறையே அதிரும்படி ‘ஓ’வெனக் கதறவேண்டும். அப்பொழுது இந்த மனம் வெடிக்கும். அவளுடைய நினைவுகளெல்லாம் அகன்றுவிட்டால் தலை சுகமடையும்.

ஒன்பது மணியைப்போல சிவபாதம் வந்தான்.

‘என்னப்பா அதுக்கிடையில திரும்பியிட்டாய்?”

‘உனக்காகத்தான்!”

‘எனக்காகவோ ஏன்?”

‘சாப்பாடு வேண்டித்தர!”

‘எனக்கென்ன சுகமில்லை எண்ணு நினைச்சியா…? உதவிக்கு வந்திருக்கிறாய்?”

‘அப்படித்தான் தெரியுது… விசரா…! அவளொருத்தியை நினைச்சு ஏன்தான் இப்படி அழிஞ்சுபோறியோ தெரியாது…? எவ்வளவு கெட்டிக்காரனாய் இருந்தனீ? உன்ரை படிப்பை வீணாக்கப்போகிறாய்… இதுக்கெல்லாம் வடிகால் அதுதான்…”

வருத்தத்துக்குப் பரிகாரம் சொல்கின்ற வைத்தியரின் கரிசனை அவனிடம்.

இதற்குப் பரிகாரம் அதுவல்ல! நூறுவீதம் நிச்சயமாகத் தெரியும். ஆனால் அவளையே நினைத்து வாடுகின்ற இந்த மனதுக்குப் பெரிய தண்டனை கொடுக்கவேண்டும்.

சிவபாதத்தின் கையில் மாலைப் பத்திரிகை ஒன்று இருந்தது. (அன்றைய இரவு நடனங்கள் எங்கெங்கே நடைபெறுகின்றன என்ற விவரங்கள் இதில் அடங்கியிருக்கும்.) இந்த விஷயங்களில் நல்ல ‘சர்வீசு’ உள்ள அவன் தகுதியான இடத்தைத் தெரிந்தெடுத்தான். ‘சந்துகள் பொந்துகள்’ போன்ற பல இடங்களிலெல்லாம் திரும்பி அலுப்புத் தட்ட ஆரம்பிக்கும்போது ஒரு வீட்டின் முன்னால் நின்றான். தட்டப்பட்டதும் கதவு திறந்துகொண்டது. வெளியே அலங்கோல தெருவுடன் இருந்த வீடு! உள்ளே கம்பளமும் அலங்காரமும் கண்களைக் கவரும்படி இருந்தது. தனக்குத் தெரிந்த இந்தியில் ‘சாகிப், டான்ஸ் தெக்கினேஹ?” எனக் கேட்டான். வேறு ‘கஸ்டமர்ஸ்சும்’ இருந்தனர். நடனம் ஆரம்பித்தது. இடையில் ஒரு பணியாள் வந்தாள். அவளோடு நண்பன் கதைத்தான். பணம் கைமாறியது.

ஒரு தனி அறைக்குள் மனைவியைப்போல அந்தப் பெண் வந்தாள். கதவைச் சாத்தினாள். மெதுவாகச் சிரித்தாள். சிரிக்கவேண்டும்போலிருந்தது. ஆனால் சிரிப்பு தொண்டைக்குள் அடைத்துக் கொண்டது. வியர்வையில் சேர்ட் நனைந்தது.

அவள் விசித்திரமான பார்வையுடன் ‘அப்னே பஸ்ட் டைம் ஜீ?” என்றாள். வெட்கத்தால் தலை கவிழ்ந்தது. இந்த ஆண்மை எங்கே போயிற்று? தடுமாற்றம் சில உண்மைகளை ஒப்புவிக்க நிர்ப்பந்தித்தது.

அமைதியாக யாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தவள் பின்னர், ‘Oh I suppose this is going to be your first night..!’ எனப் பெரிதாகச் சிரித்தாள். சந்தோஷமா? அல்லது ஏளனமா?

உண்மையும் அதுதான்! பெரிய பொக்கிஷமாகக் கட்டிக் காத்து வந்த ஏகபத்தினிவிரதம் முதல் முறையாக புதுடில்லியில் வைத்துக் கலையப்போகிறது.

மனதிலே ஒருவித படபடப்பு. உடலை அண்மித்துக்கொண்டு சென்ற பொழுது.. ‘தம்பி!” என்றாள்.

ஆச்சரியத்துடன் திரும்பியபொழுது தொடர்ந்து ஆங்கிலத்திலே கதைத்தாள்.(தம்பி என்ற ஒரு சொல்தான் தமிழில் தெரிந்திருக்கிறது.) தலைமுடியை ஆதரவுடன் கோதிவிட்டாள். முகத்தில் பனித்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டாள்.

‘இங்கு பசியோடு வருபவர்களுக்குச் சாப்பாடு இருக்கிறது. உங்களுக்குப் பசியில்லை. வெறி! யார்மேலேயோ வெறுப்பை வைத்துக்கொண்டு உங்களையே அழித்துக்கொள்ளப் பார்க்கிறீர்கள். உண்மையாகப் பார்த்தால் அவள் உங்களைக் காதலிக்கவில்லை. நீங்கள்தான் காதலித்திருக்கிறீர்கள். அவள் இதுபோன்ற ஹோட்டல்களுக்குக்கூட லாயக்கில்லாதவள். இது உங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஒரு விபத்து. விபத்திலே காயம் ஏற்பட்டால் தங்களையே அழித்துக்கொள்வார்களா? காலப்போக்கில் இந்த வடு ஆறிவிடும். உங்களுக்காக நிச்சயம் இந்த உலகத்தில் ஒருத்தி இருக்கிறாள். துணிவு வேண்டும். கோழையாக இருக்கக்கூடாது.. இந்த ஸ்கொலர்சிப் எல்லாம் பயனற்றுப் போய்விடுமே? இதற்காகத்தானா ஸ்ரீலங்காவிலுள்ள அவ்வளவு மக்களினுள்ளும் உங்களைத் தெரிவு செய்து அனுப்பினார்கள்?”

அவள் சொல்லிக்கொண்டேபோனாள். ஒரு தாயின் பரிவு. இப்பொழுது மனதிலுள்ள வேதனைகளெல்லாம் கரைந்து காலியாகி காற்றிலே மிதப்பதுபோன்ற சுகம்.

ஒரு பெண்ணின் செய்கையினால் பெண்ணினத்தின் மேலுண்டான வெறுப்பும் அதனால் ஏற்பட்ட விரக்தியும் இன்னொரு பெண்ணின் செய்கையில் துடைக்கப்பட்டுவிட்ட சுகம். உலகத்தில் மனிதர்கள் எல்லாம் கெட்டுப்போய் விட்டார்கள் என்று யார் சொன்னது?

உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருத்தி! நாடு, இனம், மொழி, சாதி பேதங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன? அவளது இரக்கம் நிறைந்த பார்வை, பரிவான தேற்றுதல்.

‘ரேக் இற் ஈஸி.”

அவளிடமிருந்து நிறைவான மனதுடன் விடை பெற்று வெளியேறியபொழுது புதியதொரு வெறி! அது எடுத்துக்கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பவேண்டும் என்பது.

(வீரகேசரி பத்திரிகையிற் பிரசுரமானது – 1978)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *