1
அலை அலையாய் திரளாவிட்டாலும் ஏதோ தெரிந்தவர்கள் தூரத்து உறவினர்கள் வருகை வரை எட்டியிருந்தது அன்றைய கூட்டம். தமிழ்ப்பிரியன் எழுத்துக்கும் அசைக்க முடியாத வாசகர் கூட்டம் உண்டென சிறு சிறு குழுக்கள் நிரூபித்துக்கொண்டிருந்தனர். நல்ல வேலை, இந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு வேலையேதும் இல்லை.
தமிழ்ப்பிரியனின் நாற்பத்து ஒன்பதாவது நூல்வெளியீட்டு விழாவுக்கு வந்து சேர்ந்திருப்போர் அல்லது இழுத்துவரப்பட்டிருப்போர் இருபது பேரோ இருநூறு பேரோ; சட்டப்படியும் தருமப்படியும் அன்று அவர்தான் விழாநாயகன்.
அந்த மெலிந்த வற்றலான தேகத்துக்குள்ளும் பழுத்த காய்ந்த முடிகள் முளைத்திருந்த மண்டைக்குள்ளும் இருக்கிற சரக்கை ஏதோ மலேசியத் தமிழ்மக்களில் புரிந்துகொள்கிற, குறைந்தபட்சம் தெரிந்துகொள்கிற அளவுக்காவது கூட்டம் இருந்தது என்னவோ மதித்துப் பூஜிக்கவேண்டிய சமாச்சாரம்தான். ஒருவேளை ஒரேயடியாக பொன்விழா நூல்வெளியீட்டில் வந்து முகத்தைக் காட்டிக்கொள்ளலாம் எனும் திட்டமோ என்னவோ வராதவர்களுக்கு.
சிறப்புப் பிரமுகரும் தலைமை தாங்கிய செல்வந்தரும் முன்வந்து பெருந்தொகை கொடுக்காமல் போயிருந்தால் அன்றைய நூல்வெளியீட்டு விழாவில் விற்பனை செய்யப்பட்டிருந்த நூல்கள் ஈட்டித்தந்தவை முதலுக்கே மோசத்தை ஏற்படுத்தியிருக்கும். நல்ல வேளை; கரிசனம் கொண்ட அவ்விருவரின் கொடை தமிழ்ப்பிரியனை துவளாது தாங்கிப்பிடிக்கும் கைத்தடிகளாயிருந்தன. அவ்விரு பெரியவர்களுக்குமே தமிழ் படிக்கத் தெரியாது; அதற்கு அவர்களது அட்டவணையும் அனுமதிப்பது இல்லை என்பது வேறு விஷயம்! குறைந்தபட்சம் அவர்களது கொடையுள்ளத்தையாவது பாராட்டியே தீரவேண்டும்.
எத்தனையோ நாட்கள் உயிரையும் மூலையையும் பிழிந்து அதில் சொட்டுகிற சொற்கள் ஒவ்வொன்றையும் வரிசையாக அடுக்கிக் கட்டுகிற படைப்புகள் மக்கள் கவனத்தை ஈர்க்காமல் சீ பட்டுக்கிடக்கிறபோது நன்கொடைகள் என்னைய்யா நன்கொடைகள்…
நிகழ்ச்சி ஒருவழியாக சிறப்பாக நடந்து முடிந்தது.
2
ஒவ்வொரு நூல்களை எழுதி முடித்ததும் அதை பிரசுரத்துக்கு அனுப்பி அதன் முதல் பிரதியைக் கொண்டுவந்து புடுராயா கோட்டுமலை பிள்ளையாருக்குக் காணிக்கை செலுத்துவது தமிழ்ப்பிரியனின் வழக்கம். நாற்பத்து எட்டாவது நாவலான ‘அவள் வாழ்கிறாள்’ஐக் கொண்டுவந்து காணிக்கையாக்கும்போதுதான் ‘பலிக்காமல்’ நாவலின் கதை பிறந்தது.
எத்தனையோ முறை அந்தக் கோயிலுக்கு வந்திருந்தாலும் இதை கவனித்திருந்தாலும் இது பழைய சங்கதிதானே என்று புறந்தள்ளியிருந்ததை இந்த முறையும் விட்டுவைக்க அவர் விரும்பவில்லை.
“சார் சார், ஜோசியம் பாருங்க சார். உங்க எதிர்காலம் எப்பிடின்னு சொல்லிப்புடறேன்,” ஒருத்தன். இன்னொருத்தன், “சாமி, வாங்க சாமி. கிளி ஜோசியம் பாருங்க சாமி. மனுஷன் வேணும்ன பொய் சொல்லிபுடுவான். கிளி பொய் சொல்லாது சாமியோ. துள்ளியமா காட்டும் உங்க எதிர்காலத்த. வாங்க சாமி,” அவனைக் கடக்க இன்னொருத்தன் ட்ராயிங் பேப்பரில் பென்சிலால் தன்னுடைய உள்ளங்கையை அச்சடித்து வரைந்து ரேகைகள் என்று காட்ட முக்கிய மூன்று கோடுகளை இழுத்துவிட்டு ‘கைரேகை ஜோசியம் இங்கே பார்க்கப்படும்’ என்று விளம்பரம் செய்துகொண்டிருந்தான். அந்த விளம்பரம் வேலை செய்யாமல் போக தானே முன்வந்து “கைரேக ஜோசியம்” என்று கூவிக்கூவி அழைக்க இம்முறை திரும்பிப் பார்த்தார் தமிழ்ப்பிரியன்.
இந்த முறை இவனுங்களை விடுவதாய் இல்லை.
“இந்த என் கையி. பாரு,” என்று வலது உள்ளங்கையை நீட்டினார். “கொஞ்ச காலமாக பணப்பிரச்சனை இருக்குமே?” என்றான் ஜோசியக்காரன். “எந்த காலத்தில் இல்லை பிரச்சனை? வேற ஏதாவது சொல்லுமைய்யா!” என்றார் தமிழ்ப்பிரியன். பெயரைக் கேட்டான்; பதில் சொன்னார். பெயரில் இருக்கும் எழுத்துக்களை மாற்றி அமைத்தால் எதிர்காலம் சிறக்கும் என்றான் கைரேகை ஜோசியக்காரன். எண் கணித ஜோதிடம் சொல்ல வேண்டியதைக் கைஜோதிடம் சொன்னது அவருக்குக் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருந்தது. அவனுடைய போக்குக்கே விட்டுவிட்டார்.
இவ்வளவு நேரம் தனக்கு கேளிக்கை காட்டியமைக்காகவாவது அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றிற்று தமிழ்ப்பிரியனுக்கு. பத்து வெள்ளியை நீட்டியதும்தான் மீசை மயிர் விலகி உள்ளிருந்த கரும்பல் தெரிந்தது முதல் முறையாக. இவனுடைய எதிர்காலத்தைக் கணித்து இவனே பரிகாரம் செய்திருந்தால் இந்த ஐந்தடியில் இவன் உட்கார்ந்திருப்பானா என்று யோசித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்; சிந்தனையை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு.
பெயரை மாற்றிவைத்தால் போகம் விளையும் என்றானே! அந்த விஷயம் தமிழ்ப்பிரியனை கொஞ்சம் தொந்தரவு செய்தது. கொஞ்சம் இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டிப் போட்டு எடுக்க ‘பலிக்காமல்’ நாவலின் கரு பிறந்தது. அதுதான் தமிழ்ப்பிரியனின் நாற்பத்து ஒன்பதாவது நூல். அதன் வெளியீட்டு விழாதான் அன்மையில் ஆடம்பரத்துக்கு இடமில்லாமல் நடந்து முடிந்தது.
3
துஷ்வந்த் வருவதாக முன்கூட்டியே சொல்லிவைத்திருந்தான். அவனுடைய கடைக்கு முப்பது பிரதிகளை எடுத்து வைத்துத் தயாராய் காத்திருந்தார் அவனது வருகைக்கு.
“வணக்கம்யா. மொதல்ல கையக் கொடுங்க” என்று உரிமையோடு கையைக் குலுக்கினான் துஷ்வந்த். தமிழ்ப்பிரியனும் அவனுக்கு தாராளமாக கையைக் குலுக்கலுக்குத் தந்துதவினார்.
“உங்களோட ‘பலிக்காமல்’ கதை அற்புதங்கைய்யா. இவ்வள அருமையான கருவ உங்களால மட்டும் எப்பிடி சல்லட போட்டு கண்டுபிடிக்க முடியுதோ தெரியல. ஜோசியக்காரன் கட்டளைக்கு நம்ம புள்ளைங்களோட பேர தாறுமாறா வச்சிக்கிறது இன்னைக்கும்கூட இருந்துக்குட்டுதான வருது. அதனால வாயில நுழைய முடியாத பேரயெல்லாம் வச்சிக்கிட்டு இருக்குறது நம்ம மக்களுக்கு ரொம்ப சாதாரணமா போயிருச்சு.
என் பேரப்பாருங்க… துஷ்வந்த். ஏதோ ஸ்டைலுக்கு வச்சப் பேரு மாதிரி இருக்கு. எல்லாம் எங்கப்பா அம்மாவச் சொல்லனும். புதுமையா இருக்கனும்னு சொல்லி சொதப்பல் பண்ணி வச்சிருக்காங்க என் பேர. ஜோசியக்காரன் வி-ல ஆரம்பிக்கற மாதிரி பேர் வச்சாக்கா நல்லதுன்னு சொல்லியிருந்தாராம். அதனாலதான் துஷ்வந்த்,” என்று அலுத்துக்கொண்டான்.
தமிழ்ப்பிரியனுக்கு பெருமிதமாக இருந்தது. தனது உழைப்பு ஒருத்தனுடைய சிந்தனையை மாற்றியிருப்பதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதைவிட ஓர் எழுத்தாளனுக்கு வேரென்ன அங்கீகாரம் இருக்க முடியும்? அவனது தோளில் தட்டிக்கொடுத்தபடி, “அது முடிஞ்சிபோனதுப்பா. இனிமே அதத் திருத்துற பொருப்பு ஒன்னோடது. உனக்குப் பொறக்குற புள்ளைங்க பேர வக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு வைக்கனும்,” என்றார்.
“சரி. உன்னோட கடைக்கு முப்பது புஸ்தகம் கேட்டுருந்த இல்ல… இதோ அங்க மேச மேல அடுக்கி வச்சிருக்கேன் பாரு,” என்று வாசல் பக்கத்தில் இருந்த மேசையைக் கைகாட்டினார். அதில் இரண்டு அடுக்குகளாக பதினைந்து பதினைந்து என்று முப்பது நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
துஷ்வந்த் அந்த நூல்களுக்கான கணக்கு வழக்குகளை எழுதிக் கொடுத்துவிட்டு முன்பணத்தையும் கொடுத்தான். பிறகு, அந்த நூல்களை இரண்டு ஓட்டத்தில் எடுத்து அவனது வண்டியில் எடுத்து அடுக்கி வைத்தான்.
4
துஷ்வந்த் கொஞ்சம் பரபரப்பாக இருந்தான். தனது முதல் குழந்தையின் பெயர் சூட்டு விழாதான் நெடு நாட்களுக்குப் பிறகு அவன் வீட்டில் நிகழ்கின்ற சுபகாரியம்.
தமிழ்ப்பிரியனும் அந்நிகழ்ச்சிக்கு அன்போடு அழைக்கப்பட்ட முக்கிய பிரமுகர். தனக்கென ஒதுக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். ஆள் நெருக்கடியினால் காற்றாடி இருந்தும் புழுக்கம் சூழ்ந்திருந்தது அந்த வீடு; அதிலும் குறிப்பாக தமிழ்ப்பிரியன் அமர்ந்திருந்த மூலை. அவர் கையில் வைத்திருந்த பெயர் சூட்டு விழா அழைப்பிதழை வைத்து விசிரிக்கொண்டார். அந்த அழைப்பிதழ் மீது அவருக்குக் கொஞ்சம் வெறுப்பாகவே இருந்தது.
“எங்கள் அன்பு மகள் பூஷிகா-வின் பெயர் சூட்டு விழாவில் கலந்து சிறப்பியுங்கள்” என்ற வாசகங்களில் இருக்கும் குழந்தையின் பெயர் அவரை நெருடிக்கொண்டே இருந்தது. ‘பலிக்காமல்’ கதை பலிக்காமல் போனது அவருக்கு வருத்தங்கள்தான்.
துஷ்வந்த் விழாவைத் தொடக்கி வைக்க தமிழ்ப்பிரியனை அழைத்தான். தனது அடுத்தக் கதையின் நாயகன் தன்னைக் கூப்பிடுவது போன்ற பிம்பம் தோன்றியது தமிழ்ப்பிரியனுக்கு. “ஐயா, வாங்க நிகழ்ச்சியத் தொடங்கிடலாம்,” என்று இன்னொரு முறை அழைத்தான் துஷ்வந்த்.
நன்றி – மலேசிய தேசிய பல்கலைக்கழக இந்து பிரதிநிதித்துவ சபையின் சிறுகதை நூல் – [அவதாரம்]