எல்லாம் உங்களுக்காக?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2024
பார்வையிட்டோர்: 171 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊரெங்கும் தீபாவளிக் குதூகலம். குணசீலன் வீட்டுப் பண்டிகை அலங்காரத்தில் மின்னியது. வண்ண வண்ண விளக்குகள். புதிய திரைச் சீலைகள். இன்னும் பலவகைப் புதுசுகள் வீட்டில் குடிபுக ஆரம்பித்தன.

எல்லாவற்றையும் குணசீலனின் மனைவி குமாரிதான் செய்து கொண்டிருந்தாள். குணசீலன் வரவேற்பறையில் ஓய்வாக அமர்ந்து நாளிதழில் மூழ்கி இருந்தான். குமாரி அவனை எட்டிப்பார்த்தாள்.

“ஏங்க… நீங்க பண்றது உங்களுக்கே நல்லாயிருக்கா…நான் ஒருத்தி ஒண்டியாக் கிடந்து அவஸ்தைப்படறேன்.. நீங்க என்னடான்னா புதுமாப்பிள்ளையாட்டம் உட்கார்ந்திருக்கிங்களே..!

சட்டியில் வெடிக்கும் கடுகாய் வெடித்தாள் குமாரி. குணசீலன் மௌனமாய் அவளைத் திரும்பிப் பார்த்தான். வாய் திறந்து பேசவில்லையானாலும் அவனது மௌனமொழி அவளை ஏதோ செய்தது.

“என்னங்க இது! நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படிப் பாக்கறீங்க… நான் என்ன எனக்காகவா இவ்வளவு கஷ்டப்படறேன்! எல்லாம் உங்களுக்காகத்தானே.. உங்க நண்பர்கள் உங்க உறவினர்கள் வீட்டுக்கு வந்தா என்னையா பாராட்டுவாங்க… எல்லாரும் உங்களை மெச்சிக்கணும். புகழ்ந்து பாராட்டணும்னு தானே இதெல்லாம்…”

அவளது வார்த்தை மழையில் குளிர்ந்து போனான். இதழில் ஓர் இளநகை படர்ந்தது. குமாரி அவனருகில் வந்து அவன் காலடியில் அமர்ந்தாள். சட்டென்று அவன் நிமிர்ந்தான். என்னவென்பது போன்ற பார்வை கண்களில்.

இங்க பாருங்கத்தான்… எல்லாரும் பண்டிகை நாளுக்கு முதல் நாள் வீட்ல பெரியவுங்களுக்குச் சாம்பிராணி போடுவாங்க… நாமும் நம்ம வீட்ல செய்யணும். கல்லறைக்குப் போய் சாமி கும்பிட்டுட்டும் வரலாம். நீங்க என்ன நெனைக்கிறீங்க.. வீட்லேயே கும்பிட்டா போதுமா இல்லே…”

அவனிடம் எதையோ எதிர்பார்த்தாள். அவன் மௌனமாய் அவளைப் பார்த்தவாறு சிந்தனை வசப்பட்டுப் போனான். புதிதாய் முகத்தில் ஓர் இரக்கம் வந்து சேர்ந்தது.

‘நான் ஒன்னும் உங்களை வற்புறுத்தலீங்க. எல்லாம் உங்களுக்காகத்தான். வீட்ல எதுவும் செய்யலேன்னாலும் கல்லறைக்குப் போயாச்சும் சடங்கு செஞ்சுட்டு வந்துடுவோம். இல்லேன்னா உங்க சொந்தக்காரங்க உங்களைக் கொறை சொல்லுவாங்க.. அதனால்தான்!”

குணசீலன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். அந்தச் சின்னஞ்சிறு அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான். சன்னல் பக்கமாய்ப் போய் நின்றான். கீழே பாய்ந்த பார்வையில் யாரோ ஒரு அப்பாவும் அம்மாவும் தங்களின் ஒரே மகனைக் கையில் பிடித்தவாறு உள்ளே நுழைந்தது தென்படுகிறது. அந்த முப்பது வயது இளைஞனின் மனம் தானும் இப்படி இருந்த நாட்களில் ஓடி நிற்கிறது.

எவ்வளவு பாசமான அப்பாவும் அம்மாவும்.. தாய்க் கோழி தன் சிறகுக்குள் வைத்துக் காப்பது போல் காத்து, அன்பையும் அறிவையும் இருவரும் அள்ளி அள்ளி வழங்கி அவனை வளர்த்து ஆளாக்கி – சுற்றமும் நட்பும் குணசீலன் பெயருக்கேற்ற பிள்ளை என்று பாராட்டும்படி விட்டவர்களாச்சே..

எல்லோரையும் போல் பல்கலைக்கழகம் புகுந்து பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்று வெளியே வந்து அப்பா அம்மா ஆசீர்வாதமும் உறவினர்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்ட போதே அப்பாவின் நண்பர் ஒருவர் உடனடியாகத் தன் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்த்துக் கொண்டார்.

அதிர்ஷ்டக்காரப் பிள்ளை என்ற பட்டமும் சேர்ந்து கொண்டது. குணசீலன் அம்மாவையும் அப்பாவையும் உயிராய் நேசித்தான். எல்லாமே அவர்கள்தான் என்றிருந்தான். ஒரு சில சமயங்களில் அவனது அலுவலகத் தோழியர்கூட அவனை “அம்மா பிள்ளை’ என்று கிண்டல் செய்வதுண்டு. அப்படிப்பட்ட அந்த இளைஞனைத் தன் கண்ணுக்குள் சிறைப்படுத்திக் கைக்குள் போட்டுக் கொண்டாள் குமாரி.

குமாரி ஒரு ஒட்டுமாங்கனி. ஐரோப்பிய அப்பாவுக்கும் இந்திய வம்சாவளி அம்மாவுக்கும் பிறந்தவள். அவள் அழகு அவனை அசரவைத்தது. அதிகமாய் ஐரோப்பிய மணம் வீசினாலும் அவ்வப்போது தமிழ்ப் பெண்ணாய் அவள் நடந்து கொண்டவிதம் அவனை அவளிடம் அடமானம் வைத்தது.

குணா… இது உங்களுக்காகவே வாங்கினேன். அழகா இருக்கா” என்பாள் ஒரு நாள்.

“இந்த டிரஸ்ஸை உங்களுக்காகவே போட்டுக்கிட்டேன் பிடிச்சிருக்கா உங்களுக்கு” என்பாள் இன்னொரு நாள்.

அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனை அசத்திவிடும். அவன் இப்படி ஒரு வார்த்தையை எங்குமே கேட்டறியாதவன். அவனது அப்பா அம்மாகூட இப்படி அவனிடம் உனக்காக, உனக்காக என்று என்றைக்குமே சொன்னதில்லை. குணாவுக்கு அவள்தான் இப்போது அனைத்துமாகிப் போனாள்.

அது ஓர் தீபாவளி நாள். அப்பா அம்மாவுடன் நண்பர்கள் புடை சூழ அவன் அந்தச் சின்னஞ்சிறு வீட்டில் அமர்க்களமாய்த் தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருந்தான். நண்பர்கள் உறவினர்கள்
கூடியிருந்தார்கள். மகிழ்ச்சி ஆரவாரத்தில் அவன் மிதந்துகொண்டிருந்தபோது அவள் வந்தாள். ஓடிப் போய் வரவேற்றான்; உரிமையுடன் கைப்பற்றி அழைத்து வந்தான். அனைவருக்கும் அறிமுகப் படுத்தினான்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைக் கூறிய அவள் அவன் கையில் ஒரு சாவியைக் கொடுத்து.

“குணா உங்களுக்கு என்னோட தீபாவளி பரிசு..! அப்பாகிட்ட சொல்லி உங்களுக்காக வெளிநாட்டிலேருந்து இறக்குமதி செய்யச் சொன்னேன்..வந்து பாருங்களேன்..” என்றாள்.

குணா மட்டுமன்று கூடியிருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள். அவன் காரை ஆசையுடன் தொட்டுப் பார்த்தான். அவன் வசதிக்கு இப்போது கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத கார் அது.

“பிடிச்சிருக்கா குணா… உங்களுக்குத்தான்… ஓட்டிப் பாருங்க.. உற்சாகப்படுத்தினாள். காரை அவன் ஓட்டினான். அவன் மனதில் பெருமை நிரம்பியது. அவள் அவனின் எதிர்காலத்தை எழுத ஆரம்பித்தாள்.

தன் பிள்ளையின் மனதை நோக வைக்க விரும்பாத பெற்றவர்கள் அவன் விருப்பம் போல் அவளைக் கைப்பிடிக்க சம்மதித்தனர். நல்ல தோர் நாள்பார்த்துச் சுபமுகூர்த்த வேளையில் அவள் கழுத்தில் அவன் தாலி கட்டினான். புது மனைவியோடு புதுப்புது இடங்களுக்குச் சென்று வந்தான். வந்த மறுநாளே அவள் அவனிடம் சொன்னாள்.

“அத்தான்.. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். நாம ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் போய்டுவோம். அப்பதான் நமக்கும் நல்லது. அவங்களுக்கும் நல்லது. பேசாம இப்பவே முடிவு பண்ணுங்க” என்றாள்.

அவன் கொஞ்சம் யோசித்தான். அந்த இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் புறாக் கூட்டம் போல் வாழ்வதைவிட, அவள் சொல்வது போல் தனிக்குடித்தனம் போனால் கொஞ்சம் சுதந்திரமாய் இருக்கலாமே என்ற எண்ணமும் உண்டானது. ஒத்துக்கொண்டான்.

அம்மா அப்பா அதைக் கேட்டுக் கவலைப்பட்டதுகூட அவனை வருத்தவில்லை. மாமனார் காணிக்கையாய் மாளிகை வாசம் கிட்டியது. மாதங்கள் ஆறு ஓடிய போது மருமகள் தாயாகப் போகிறாள் என்ற ஆசையோடு வீட்டுக்கு வந்தவர்களின் ஆசையில் மண்ணைப் போட்டு அழ வைத்தாள் மருமகள்.

“ஏன் அப்படிப் பண்ணினே குமாரி” என்று அதட்டியவனை வாயடைக்க வைத்துவிட்டாள் வழக்கம் போல் தன் பாட்டைப்பாடி. இப்ப நமக்கு என்னங்க வயசாச்சு.. இப்போவே பிள்ளையைப் பெத்துக்கிட்டா அப்புறம் சந்தோஷமா இருக்க முடியாதுங்க.. உங்களுக்காகத்தானே நான் இருக்கேன். இப்பவே பிள்ளைங்க வந்துட்டா நம்ம சந்தோஷம் குறைஞ்சு போயிடும்.. அதுக்காகத்தான்…’

அவளின் சிணுங்கலில் அவன் அடங்கிப் போனான். சில நாள்கள் அம்மாவும் அப்பாவும் போனில்கூட அவனிடம் பேசவில்லை. வேலை நேரத்தில் ஒரு நாள் அம்மாவைப் போய்ப் பார்த்தான். அம்மா அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஓ வென அழுதார்!

“இதெல்லாம் நல்லதுக்கு இல்லே குணா.. நீ கொஞ்சம் ஆண்பிள்ளையா நடந்துக்கப்பாருப்பா” என்று அறிவுரை கூறினார். தஞ்சாவூரு பொம்மைமாதிரி அம்மாவுக்குத் தலையை ஆட்டிக் கொண்டு வீடு திரும்பினான். இரவெல்லாம் மனதில் ஒரே புழுக்கம்.. தூக்கம் வராமல் புரண்டான். நடு நிசியில் மருத்துவமனையில் இருந்து போன் வந்தது. அவனது அம்மாவும் அப்பாவும் தீ விபத்துக்குள்ளாகி அபாயகரமான நிலையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு ஓடினான்.

அடுப்பில் பால் காய்ச்சப் போன அம்மா ஞாபக மறதியினால் தவறுதலாக எதையோ செய்து விட அடுப்பு நெருப்பு அவரைப் பற்ற- அவரைக் காப்பாற்றப் போன அப்பாவும் அந்த நெருப்போடு ஐக்கியமாகி இருவரும் அவன் வருவதற்குள் இந்த உலகத்தை விட்டே போயிருந்தனர்!.

பிரேத பரிசோதனை முடிந்தபின் பெற்றோர்களின் கருகிய உடல்கள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டன. பெற்றுவளர்த்து சீராட்டி பாலூட்டி ஆளாக்கிவிட்ட தாயும் தகப்பனும் அவன் கையால் கொள்ளிவாங்கக் கூட விருப்பமில்லாமல் அடுப்பு நெருப்பிலேயே எரிந்து போனது அவன் மனதை வெகுவாய்ப் பாதித்தது ! கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கினான்.

சன்னலில் கண் வைத்திருந்தவனின் தோளில் கை வைத்துத் தன்பக்கம் அழைக்கிறாள் குமாரி. திரும்பிப் பார்த்தவன் கண்கள் நீரில் மிதக்கின்றன. அவள் கலக்கத்துடன் அவனைப் பார்க்கிறாள்.

குமாரி.. நெஜமாத்தான் சொல்றியா… என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் படையல் போட்டு பூஜை போடணும்னு நீ நெஜமாத்தான் சொல்றியா… இதுவும் எனக்காகத்தான் செய்றேன்னு சொல்றியா…? உண்மையாவே இதெல்லாம் எனக்காகவா… எனக்காகத்தானா…? என்னோட சந்தோஷத்துக்குத்தானா…”?

அவள் அச்சத்துடன் அவனைப் பார்க்கிறாள். “உனக்குத் தாலி கட்டிட்டேன்கிறதுக்காக உன்னோட மனசு நோகக் கூடாதேன்னு நான் நீ சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டினேன். ஆனா நீ ஒரே ஒரு தடவை என்னைப் பெத்தவுங்க மனசைப் புரிஞ்சு நடந்துக்கலியே குமாரி.

அவுங்க உயிரோட இருந்தப்ப அவுங்களுக்கு உன்னோட கையால ஒரு கப் பால்கூட நீ தந்தது இல்லை… ஆசையா அன்பா ஒரு வார்த்தை கூட நீ பேசினதே இல்லை குமாரி… இப்ப இந்த வேஷமெல்லாம் எதுக்காக… யாருக்காக இந்த பூஜையும் புனஸ்காரமும்.. நெருப்போட நெருப்பாகி-சாம்பலா போய்ட்ட அவுங்க இப்ப இதை உன்கிட்டே கேட்டாங்களா குமாரி…!” இவ்வளவு நாளா நீ போட்ட வேஷம் போதும் குமரி. இனிமேலேயும் இப்படிப்பட்ட வார்த்தையை நீ உபயோகிக்காதே.. உன்னோட சுயநலத்துக்காக நீ பயன்படுத்திற வார்த்தை ஜாலத்தை இன்னிக்கே நிறுத்து.

உன்னோட தூய்மையான அன்பும் பரிவான உபசரிப்பும் கெடைக்காம அன்னிக்கு அவங்கபட்ட வேதனைச் நம்மை சும்மா விடாது குமாரி…

தயவு செய்து இந்த நாள்ல அவுங்கள மனசார நெனைச்சு உள்ளம் உருகி வேண்டிக்கப்பாரு.. அவுங்க மனசும் ஆறும்.. உன்னோட பாவமும் தீரும்”

சொல்லிவிட்டு வெளியேற முயன்றவனின் கால்களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்கிறாள் குமாரி. குனிந்தவன் அவளைத் தன் கைகளில் சேர்த்துக் கொள்கிறான்.

குற்றங்களை மறந்து மன்னிக்கும் பண்பைக் குறிக்கின்ற தீபத்திருநாள் அந்தத் தம்பதிகளைப் புரிந்து கொள்ள வைத்தது.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *