என் தவறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 3,442 
 

கமலா மதியம் சாப்பாடு கொஞ்சம் தாராளமா வை ! கேள்விக்குரியாய் பார்த்த மனைவியிடம், ஸ்கூல்ல நல்லா படிக்கிற பையன் ஒருத்தன், பாவம் கஷ்டப்படறான், அவனை தினமும் மதியம் வர சொல்லி இருக்கிறேன். பாவம் கஞ்சிதான் தினமும் கொண்டுவர்றான்.

வேறு ஒன்றும் பேசாமல், மற்றொரு டிபனில் சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.

எனக்கு அவள் ஒன்றும் பேசாமல் எடுத்து வைத்தது, ஏதோமாதிரி இருந்தது. என்ன கமலா எதுவும் பேசாம இருக்கே. அந்த பையன் பத்தாவது படிக்கிற பையன். இன்னும் அஞ்சுமாசம்தான் இருக்கு பப்ளிக் எக்ஸாமுக்கு, தினமும் அவன் மதியம் கோதுமை கஞ்சி, கம்பங்கூழ் கொண்டு வந்துதான் சாப்பிடறான். இதை கவனிச்சுகிட்டே இருந்தேன். சரி நாம சாப்பிடற சாப்பாட்டை கொஞ்சம் கொடுத்தா என்னன்னு யோசிச்சேன்.

அந்த பையன்கிட்ட ஏன் தினமும் கஞ்சி கொண்டு வர்றேன்னு கேட்டுட்டீங்களா? இல்லையில்ல, அப்படி நேரடியா கேக்கலை, தம்பி நீ எக்ஸாம் போற பையன், நான் கொண்டு வர்ற சாப்பாட்டுல உனக்கும் ஒரு பங்கு எடுத்துட்டு வாறேன், வந்து வாங்கிட்டு போ அப்படீன்னு சொன்னேன். கொஞ்சம் யோசிச்சான். அப்புறம் தலையாட்டிகிட்டு போயிட்டான்.

மதியம் அந்த பையன் வந்து சாப்பாட்டை வாங்கிக் கொள்வான் என்று எதிர்பார்த்தேன். அவன் வரவில்லை. ஒரு பையனை அனுப்பி அவனை வரச் சொன்னேன்.

என்னப்பா மதியம் சாப்பாடு வந்து வாங்கிக்கன்னு சொன்னேனே? குற்றம் சாட்டும் தொனியில் கேட்டவுடன், அவன் பதறி சார் கொஞ்சம் நோட்ஸ் எழுத வேண்டி இருந்தது, அதனாலதான் இழுத்தான். சரி இந்தா என்று அவனுக்கு தனியாக வைத்திருந்த டிபனை அவன் கையில் கொடுத்தேன்.

வாங்கிக் கொண்டு சென்றவன் பத்து நிமிடத்திற்குள் டிபன்பாக்ஸை கழுவிக் கொண்டு வந்து கொடுத்தான். அப்பொழுதும் சாபிட்டுக் கொண்டிருந்த நான் என்னப்பா அதுக்குள்ள சாப்பிட்டாச்சா? வியப்புடன் கேட்டேன். சாப்பிட்டாச்சு சார்.

ஒருவாரமாய் அந்த பையன் மதியம் டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டு சென்று கழுவிக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் ஆசிரியர் நண்பர் ஒருவர் மதியம் என்னுடன் உட்கார்ந்து சாப்பிட வந்தார். வழக்கம் போல் நான் அந்த பையனுக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்த்தை பார்த்தவர், பரவாயில்லையே என்று சொன்னார். நான் சார் நல்லா படிக்கிறபையன் சார், வீட்டுல கஷ்டப்படறான், அதனால என்னால ஆன உதவி.. நான் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்த்தை கேட்டுக்கொண்டிருந்த அந்த பையன் எதுவும் பேசாமல் டிபன்பாக்ஸை வாங்கிக்கொண்டு சென்றான்.

மறுநாள் காலையில் நான் வர சிறிது நேரமாகிவிட்டது வகுப்புக்கள் நடக்க ஆரம்பித்து விட்டது. பள்ளியின் என் மேசை இருக்கும் அறைக்கு நுழைய முற்படுகையில் தலைமையாசிரியர் அவரது அறையில் இருந்து கூப்பிடுவதாக அலுவலக உதவியாளன் ஓடிவந்து சொன்னான். கையில் இருந்த டிபன்பாக்ஸை எனது மேசையில் வைக்க யாராவது ஒரு பையனிடம் கொடுத்தனுப்ப வேண்டி சுற்றுமுற்றும் பார்க்க அந்த பையன் சற்று தொலைவில் வகுப்புக்குள் நுழைய போய்க் கொண்டிருந்தான், அவனை கைதட்டி கூப்பிட்டேன். அவன் சற்று தொலைவில் சென்று கொண்டிருந்தாலும் நான் கூப்பிடுவது அவன் காதில் விழுந்திருக்கவேண்டும். ஆனால் அவன் பாட்டுக்கு விறுவிறுவென்று அந்த வகுப்புக்குள் நுழைந்து கொண்டான்.

எனக்கு கோபம் வந்தது. என்ன ஒரு நெஞ்சழுத்தம், கூப்பிட கூப்பிட காதில் வாங்காதவன் மாதிரி போகிறான், அதுவும் அலுவலக உதவியாளன் முன்னிலையில். இவனுக்கு வேறு சாப்பாடு தினமும் நான் சுமந்து வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அலுவலக உதவியாளனிடம் மனசு பொறுக்காமல் பார் இந்தபையனை, இவனுக்கு தினமும் நான் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்தும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் காதே கேக்காதவன் மாதிரி போறான் பாரு .. சார் இந்த காலத்து பசங்களுக்கு இந்த மாதிரி உதவி எல்லாம் செஞ்சாலும் நம்மளை எதிர்த்துத்தான் பேசுவானுங்க..அவர் பங்குக்கு ஏதோ சொன்னார்.

சுற்று முற்றும் பார்க்க எல்லா வகுப்புக்களும் நடந்து கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் நானே சிறிது தூரம் நடந்து சென்று என்டிபன்பாக்ஸை மேசையில் வைத்துவிட்டு தலைமையாசிரியரை சந்திக்க சென்றேன்.

மதியம் இன்னும் இரண்டு மூன்று ஆசிரியர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடவந்தார்கள். வழக்கம் போல் அந்தபையன் வந்தான். நான் ஏம்ப்பா இந்த டிபன்பாக்சை என்டேபிளில் வைக்கறதுக்காக உன்னை கூப்பிட கூப்பிட நீ பாட்டுக்கு வகுப்புக்குள்ள போயிட்ட? உனக்கும் சேர்த்துத்தானே இதைய சுமந்துகிட்டு வந்திருந்தேன்.

பையன் யோசித்து நின்றான். எப்ப சார் கூப்பிட்டிங்க, எனக்கு காது கேக்கலை சார். வகுப்புக்கு லேட்டாச்சு அப்படீன்னு வேகமாக போயிட்டிருந்தேன். கிளாஸ்ல கூட ஆசிரியர் நின்னுகிட்டு இருந்தார். அவன் சொன்னது எனக்கு சமாதானமாகவில்லை.

மற்ற ஆசிரியர்கள் அந்த பையனை பார்க்க அவன் கூச்சத்தால் உடலை நெளிந்தான். நான் கோபத்துடன் டிபன்பாக்சை கொடுக்க அவன் வாங்கிக் கொண்டு சென்றான்.

மறுநாள் மதியம் டிபன்பாக்சை வாங்கிச் செல்ல அந்த பையன் வரவில்லை, வேறு பையனை அனுப்பி அவனை வரச் சொல்லலாமா என்று நினைத்தவன், கூட இருக்கும் ஆசிரியர்கள் ஏதாவது நினைத்து கொள்வார்களோ என்று விட்டுவிட்டேன். மறுநாளும் அந்தபையன் வரவில்லை. நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டன. கொண்டு வந்த சாப்பாடும் வீணாகி அங்கிருந்த குப்பை தொட்டிக்குத்தான் போயின.

சாப்பாடு எனக்கு அளவா வேவை !. மனைவி என்னை பார்த்தாள். அந்த பையன் சாப்பாடு வாங்க வரதில்லை. சுரத்தில்லாமல் சொன்னேன்.

நீங்க ஏதாவது சொன்னீங்களா? மனைவி கேட்டாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை, அன்று நான் அவனை திட்டியதை சொன்னேன்.

இதுதாங்க உங்களை மாதிரி ஆளுங்களோட பிரச்சினை. அந்த பையன் உங்ககிட்டே நான் சாப்பாட்டுக்கே கஷ்டப்படறேன்னு சொன்னானா? இல்லியே நீங்களா அவனுக்கு உதவி பண்ணறேன்னு கிளம்பிடறது, அப்புறம் அவங்களோட தன்மானத்தை பாதிக்கற மாதிரி மத்தவங்ககிட்ட நாந்தான் இந்த பையனுக்கு சோறு போடறேன் அப்படீன்னு பெருமையா பேசறது. நான் ஒண்ணும் அப்படி சொல்லவேயில்லையே, பலஹீனமாய் சொன்னேன்.

அதெப்படிங்க, நீங்க நாலஞ்சுபேரு ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடறீங்க, அப்ப அந்த பையனை வர சொல்லி சாப்பாட்டை கொடுக்கறீங்க, அதை மத்தவங்க பாக்கும்போது பையனுக்கு மனசு கஷ்டமா இருக்காதா?

இந்த கேள்வி என் தவறை எனக்கு உணர்த்தியது.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)