என்னைப் பார் காய்ச்சல் வரும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 4,023 
 

பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4

மாயா அக்காவின் ஆன்மா குறித்த சர்ச்சைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மிளிறத் தொடங்கியது. இத்தனை நிகழ்வுகளையும் எப்படி ஊர்மக்கள் மாயா அக்காவின் ஆன்மாவுடன் இணைத்தார்கள் என்றால், இதைப் போன்ற அமானுஷ்யங்கள் யாவும் நிகழ்ந்தேறிய காலகட்டம் அக்காவின் இறப்பிற்குப் பின்பு தான். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒருமித்த கருத்துகளும் கூட. இவை போகப் பேய் விரட்ட வரவழைக்கப்பட்ட கோடாங்கியிடம் பாதிக்கப்பட்டவர்கள் கூறிய பெயரும் “மாயா” தான்.

பொதுவாக நானும் நண்பர்களும் தெருவின் ஒரு தாழ்ந்த பகுதியான நாரை ஊரணியில் தான் மட்டைப் பந்து ஆடுவோம். பேய் விரட்ட மற்றும் கழிப்பதற்காக எறியப்படும் குங்குமம், எழுமிச்சை மற்றும் இதர பொருட்களை அங்கு தான் கொட்டுவார்கள். அந்தக் காலகட்டத்தில் பல இடங்களில் அத்தகையப் பொருட்களை காணலாம். குழந்தைகள் பயந்தாலோ அல்லது உடம்பு சரி இல்லை என்றாலோ முட்டையை எடுத்து அவர்களின் தலையைச் சுற்றி, அந்த முட்டையை எடுத்துச் சென்று மாயா அக்கா எரிந்த அந்த முச்சந்தியில் தான் உடைப்பார்கள். இன்றும் நீங்கள் அந்தத் தெருவில் உடைந்த முட்டையை அந்த முச்சந்தியில் காணலாம். சிலர் யாரோ கீழே போட்டுவிட்டனர் என்றெண்ணலாம் ஆனால் அதுவல்ல உண்மை.

சென்ற பாகத்தில் குறிப்பிட்ட பாதிப்படைந்த நபரில் ஒருவர் தான் நசிமா அக்கா. அந்த அக்காவிற்கு முதலில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒருநாள் பொழுது சாய்ந்த வேளையில் அந்த அக்கா கதவை உள்தாழிட்டு ஐயோ! எனக்கு உடலெல்லாம் எரிகிறது காப்பாற்றுங்கள் என்று அவர் கதறியது தான் அங்குப் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அனைவரும் பதறிப்போய் கதைவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் அதுவும் ஒருவிதமான தன்னிலை மறந்த செயல் தான். அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாமல் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அங்கே அவரது வார்த்தைகள் அக்காவின் மரணத்தை தவிர வேறு யாரோடும் ஒப்பிடும் அளவிற்கு இல்லை.

கோடாங்கியைக் கூட்டிவந்து பாதிக்கப்பட்டவருக்கு இரவில் பேய் விரட்டும்போதெல்லாம் தெரு முழுவதும் யாரும் ஒரு மணிநேரத்திற்கு வெளியே வரவேண்டாம் என்று முன்கூட்டியே கூறிவிடுவர். பாதிக்கப்பட்டவரின் வீட்டு வாசலில் வைத்து இறுதியாகச் சில சடங்குகள் செய்வது வழக்கம். அதனால் அந்த நேரங்களில் பயந்துகொண்டு யாரும் வெளியே வருவதுமில்லை.

ஒருமுறை இரவில் என் அப்பா ஒருமணிக்கு மேல் சிறுநீர் கழிக்கச் செல்லும் வேளையில், வெளியே இருந்து வந்த ஒரு மாடு எங்கள் மாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோலை மேய்வதைக் கண்டு அதைச் சற்றுதூரம் விரட்டியடிக்க முற்பட்டார். அப்படி விரட்டிச் செல்லும் வழியில் சரியாக அந்த முச்சந்தியில் கால் தடுமாறிக் கீழே விழுந்துள்ளார். அதன்பின்னரே அப்பாவின் உடல்நிலையில் நிறைய பின்னடைவு ஏற்பட்டதாக அம்மா கூறினார். ஆனால் மாயா அக்காவின் குடும்பத்தோடு இருந்த உறவின்பால் அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. அன்றைய இரவே அப்பாவும் அந்த இடத்தில் சிறிது அச்சமடைந்துள்ளார்.‌ ஏனென்றால் அந்த நேரமும் இடமும் அப்படி. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அதுவே முழுவதுமாக காரணமென்று கூறமுடியாதவாறு மாரடைப்பால் உயிர் நீத்தார்.

இப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பத்து பேரையும் தாண்ட, பல மாதங்கள் இந்தப் பேச்சு அறவே இல்லாமல் போனது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து என் அத்தை மகள் நிஷாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மாவட்டம் தோறும் அக்காவை அழைத்துச் செல்லாத மருத்துவமனைகளே கிடையாது. அத்தனை பரிசோதனைகள் செய்தும், ஆராய்ச்சி செய்தும் கூட ஒரு மருத்துவரும் இறுதியான முடிவைக் கூறவில்லை. மதுரைக்குச் சென்றும் உபயோகமில்லை. இறுதியாக அனைவரும் ஒருமனதோடு சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர். முன்பு இராமநாதபுரத்தில் பார்த்த வரை சிலர் தைராய்டு என்றும், சிலர் சர்க்கரை குறைபாடு என்றும் பலவாறு மாற்றுக் கருத்துகளை முன்வைத்தனர். அக்காவின் காலில் ஆறாத ஒரு புண்ணும் உருவாகியது. அது வடுவாகி எழும்பே சிறிது வெளியில் தெரியுமாறானது. சென்னையில் ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் அக்கா. அங்குதான் ஓரளவு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அக்காவைக் காண அப்பா ஊரிலிருந்து சென்னை புறப்பட்டார். அப்பாவிற்கு அக்காமீதுள்ள அலாதிப் பிரியம் அவரைத் தனியே சென்னைக்கு வரவழைத்தது. ஆனால் வழி தெரியாதவாறு ஒருநாள் முழுவதும் தேடியழைந்து மாலையில்தான் இறுதியாக அந்த இடத்தைச் சென்றடைந்தார். அக்காலகட்டத்தில் தனிநபர் கைப்பேசி உபயோகிப்பதெல்லாம் மிகமிக அரிது. அவர் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே மீண்டும் ஊருக்குப் புறப்படவேண்டிய கட்டாயத்தால் இருமனதோடு அங்கிருந்து புறப்பட்டார்.

அப்படி ஒருமுறை நிஷா அக்காவைக் காண ஊரிலிருந்து மாயா அக்காவின் மூத்த அக்கா மதி வந்தபோது தான் ஒரு பிரளயம் ஏற்பட்டது. திடீரென அக்கா அவரைக் கண்டு கோபமடைந்தார், அவரை முறைத்துள்ளார். அவரது தன்னியல்பற்ற செயல்பாடுகளால்தான் அனைவருக்கும் மீண்டும் பழைய நிகழ்வுகள் எல்லாம் யோசனைக்கு வந்தது. மதியக்கா மனவேதனையுடன் ஊருக்குத் திரும்பினார். இப்படியாக பெரியப்பா மிகவும் வருத்தத்திர்க்குள்ளாகி ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருக்க, அங்கு வந்த ஒரு இசுலாமிய நண்பர் ஐயா ஏன் இப்படி அமர்ந்துள்ளீர் என்று கேட்க, பெரியப்பாவும் தன் மன வேதனையை அவரிடம் எடுத்துரைத்தார். அதற்கு அவர் ஐயா இந்த மந்திரித்த புனித நீரை உங்கள் குழந்தையைச் சிறிது குடித்துவிட்டு பின் முகம் கழுவச் சொல்லுங்கள் என்று கூறி அந்த அல்லாஹ்வே கூறியதைப் போல் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

ஆட்டம் தொடரும் !!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *