கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 4,771 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

9. தொண தொணன்னு கூத்து கூத்துனுட்டு | 10. நீலக் கலர்ல கயிறு கட்டிக்கலாமா? | 11. லூசாடா நீ? 

சாமிநாதன் தறிக் குடோனில் இருந்தான். கைக்கோளபாளையத்து ராஜேந்திரன் மிஸ்டு கால் விட்டுக் கொண்டேயிருந்தான். இவன் செல்லிலும் பைசா இல்லாததால் அவனை இவன் திருப்பிக் கூப்பிடவில்லை. தேவை பூராவும் ராஜேந்திரனுக்குத்தானே! பேசட்டும் என்று விட்டுவிட்டான். காய்ன் பூத்திலிருந்து புதிய நெம்பரில் அழைப்பு வந்தது. பக்கத்துத் தறிக்காரனைத் தன் தறியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் குடோனை விட்டு வெளியே வந்தான். 

“ஹலோ யாருங்க?” 

“ஏன்டா மிஸ்டு கால் குடுத்தா திருப்பிக் கூப்பிடமாட்டியா!” “எங்கிட காசே இல்லடா ராஜேந்திரா.. இருந்தாத்தான திருப்பிக் கூப்பிடறதுக்கு? நீ ஏன் கைக்கோளபளையத்துல தான இருக்கே? முப்பது ரூவாய்க்கி ரீசார்ஜ் பண்டிப் பேசுறது?” 

“சட்டைய மாத்தீட்டு வீரசங்கிலி வந்துட்டேன்டா. ரெகுலரா ரீசார்ஜ் பண்ற கடைக்கும் மிஸ்டு கால் உட்டுட்டேன். திருப்பிக் கூப்பிட மாட்டீங்றான். பொன்னி கிட்ட பத்து ரூவா வாங்கி மளிகைக்கடையில நின்னுட்டுக் கூப்பிடறேன். குடோன்லயா இருக்கே?” 

“ஆமான்டா. தறி ஓடீட்டு இருக்குது” 

“பகல் ஷிப்ட்டா? வசதியாப் போச்சு” 

“எனக்குப் பகல் ஷிப்ட்டுன்னா உனக்கென்னடா வசதியாப் போச்சு?” 

“நாளைக்கி நைட்டு நீ முக்கியமான காரியம் பண்டோணும்”

“எதாச்சிம் பிரச்சினையைக் கொண்டாந்து உட்டுறாதடா! ஏற்கனவே நான் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கெடக்கேன்” 

“பிரச்சினை எல்லாம் இல்லடா. உனக்கு ஷிப்ட் எத்தனை மணிக்கு முடியும்?” 

“ஒன்பது மணிக்கு மேலதான்” 

“இன்னிக்கு ஒன்பது மணிக்கு ஒரு ஆப்பாட்ட்டிலோட உன் குடோனுக்கே வர்றேன்” 

“நீயும் குடிச்சுப் பழகிட்டியா?” 

“எனக்கெதுக்கு அந்தக் கெரகம். உனக்குத்தான்” 

“குடுமி சும்மா ஆடாதே! விசயத்தைச் சொல்லு” 

“பிரியா இருக்குதுல்ல” 

“வாங்குன விலைக்கே வந்துட்டியா?” 

“சொல்றதைக் கேளுடா. முந்திரிக் கொட்டையாட்ட முந்தீட்டுப் பேசாதே. பிரியா என்கூட எங்க வேணாலும் வந்துடறேன்னு ஒரு வாரம் சொல்லுது!’ 

“சந்தோசம தானே? கூட்டீட்டுப் போ. உங்க வீட்டுல யாரும் ஒன்னும் சொல்லப் போறதில்ல. அவிங்க வீட்டுலயும் யாரும் ஒன்னும் சொல்லப் போறதில்ல” 

“அவ சித்தப்பனுகளுக்குப் பயப்படறாடா. முட்டுக்கட்டை போட்டுட்டானுகன்னா போச்சு. அதனால தான் வர்றேங்றா! அப்புறம் பின்னாடி சரி பண்ணிக்கலாம்ங்றா!’ 

“யாருக்கு இப்ப அவசரம்? உனக்கா? பிரியாவுக்கா?” 

“நான் தான் அவசரப்பட்டேன். எத்தனை நாளைக்கு நான் இப்படியே கெடக்கறதுன்னு பிரியாகிட்ட கேட்டுட்டேயிருந்தேன்” 

“பழுக்க வெச்சிட்டே. பழுத்தா மரத்துல இருந்து வுழத்தான செய்யும். சரி, நான் என்ன பண்ணணும். சீக்கிரம் சொல்லு. தறி ஓடீட்டு இருக்குது” 

“நாளைக்கு நைட்டு பன்னெண்டு மணிக்கு உன்னோட சைக்கிள்ல உங்க ஊர்ல இருந்து அவளைக் கூட்டிட்டு வரணும்.” 

“உங்க ஊருக்கா?” 

“இல்லைடா.. உங்க ஊர்ல இருந்து மேக்கூர்மேல நைட்டு கூட்டிட்டு வராம கிணிப்பாளையத்து வழியா வீரசங்கிலிப் பிரிவு இருக்குதுல்ல திங்களூர் போற ரோட்டுல…” 

“ஆமா” 

“அங்க கொண்டாந்து உட்டுட்டீன்னா போதும்”

“இவளை எங்க ஊர்ல எவத்திக்கி பிக்கப் பண்ணிக்கறது? அவ போன் நெம்பரை நான் செல்லுல உட்டடிச்சுட்டேன்” 

“நான் மதியம் அவ நெம்பரை மெசேஜ் அனுப்புறேன். உங்க கோயிலுக்கு மேல வடக்க தார் ரோடு வருதுல்ல.. அங்க நின்னு ஏத்திக்கோ” 

“சரிடா, அப்ப நைட்டு ரெண்டு ஆப் வாங்கீட்டு வா. நாளைக்கு மப்பு இல்லீன்னா காரியம் பண்ண எனக்குத் தைரியம் வராது சரியா” 

“சரிடா.. மெசேஜ் அனுப்புறேன். நைட்டு ஒன்பது மணிக்கு டான்னு வர்றேன்” என்ற ராஜேந்திரன் போனை வைக்க சாமிநாதன் குடோனுக்குள் நுழைந்தான். செல்லுக்கும் ஐம்பது ரூபாய்க்கு அவனையே ரீசார்ஜ் போடச் சொல்லியிருக்கலாம் என்று நினைத்தான். 

மளிகைக் கடையில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு சட்டையில் கிடந்த பணத்தை எடுத்து வரலாம் என்று ராஜேந்திரன் மேற்குச் சாலையில் கிளம்பினான். அவனுக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. பிரியா மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தான் ராஜேந்திரன். எப்போ எப்போ என்று தான் மூன்றரை வருடமாகத் தவித்துக் கிடந்தான். பிரியா எப்போதும் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று தான் தவித்தான். கூடிவருவது போல பிரியாவும் தாக்குப் பிடிக்க முடியாமல் சரி சொல்லிவிட்டாள். இரவோடு இரவாகக் கொளப்பலூர் நண்பன் வீட்டுக்கு பிரியாவோடு போய் இறங்கிவிட வேண்டியது தான். 

கொளப்பலூர் நண்பன் தினேஷ் எந்த நேரம் வேணாலும் காதலியோடு வரலாம் என்று கூறிவிட்டான். தினேஷ் போன வருடம் காதல் திருமணம் செய்து கொண்டவன் தான். இப்போது குழந்தை ஒன்று பெற்று அப்பாவாகிவிட்டான். “என்னுடைய திருமணம் பச்சை மலையில் காலையில் நண்பர்களை வைத்துக் கொண்டு நடந்தது! சரியாக ஆறு மணிக்குத் தாலி கட்டினேன். இரண்டு வீட்டிலும் எந்தப் பிரச்சினையும் இபோது இல்லை. அதே நண்பர்களைக் கூட்டி வருகிறேன். உன் காதலிக்குத் துணையாக என் சம்சாரம் வருவாள். கவலையே படாதே” என்று தான் தினேஷ் இவனுக்குத் தைரியம் கூறியிருந்தான். ராஜேந்திரனுக்கு இத்தனை நாள் இல்லாமல் தன் முதுகில் இறக்கைகள் இரண்டு முளைத்து விட்டதாய் சந்தோஷப்பட்டான். 

பாக்கெட்டில் இருந்த செல் அதிர்ந்தது! சன் தலைப்புச் செய்திகள் சப்தம் கேட்டது! பைக்கை வேப்ப மரத்து நிழலில் நிறுத்தினான். பாக்கெட்டிலிருந்த செல்லை எடுத்து யார்? எனப் பார்த்தான்.ஊட்டுக்காரி என்று காட்டியது! எப்போதும் இவன் தான் திருப்பிக் கூப்பிடுவான். ஆனால் பைசா இல்லையே! 

“சொல்லு பிரியா!” 

“எடுக்கறதுக்கு ஏன் இவ்வலவு நேரம்?” 

“வண்டில வீடு போயிட்டிருந்தேன் பிரியா!” 

“என் போன்ல இன்னிக்குக் கட்டர் கார்டு போட்டுட்டேன், நூற்றி இருபது ரூபாய் முழு டாக் டைம் போட்டுட்டேன்” 

“ஏன் அப்படி?” 

‘இனிமேல் என் செல்லுல காசு புல்லா இருக்கணும்ல”

“சரி இருக்கட்டும். சந்தோசம்” 

“எனக்குச் சேலை எடுத்தாச்சா? அதிக விலையில எல்லாம் வேண்டாங்க” 

“மதியம் தான் கொளப்பலூர் போய்த் தினேசைக் கூட்டிட்டுக் கோபி போறேன். அதிக விலை இல்லாம நூறு ரூபா சேலை எடுக்கச் சொல்றியா?” 

“ஐயோ ஆமாம். நூறு ரூபா சேலை தான் ஒடைக்குக் கட்டுறதுக்குச் சரி. ஜாக்கெட் அளவுக்கு என்ன பண்ணுவீங்க?” 

“ஆமாம்ல! என்ன பண்றது? பேசாம சுடிதார் ரெடிமேட்ல எடுத்துடவா? சுடிதாரோட இருக்கப்பவே தாலி கட்டிடறேன்” 

“ஐய்யே! சரி, பட்டுச் சேலை எடுத்தீங்கன்னா பச்சை கலர் எடுங்க. என்கிட்ட ஜாக்கெட் இருக்கு. இல்லைன்னா லைட் ப்ளூகலர்ல எடுங்க. அப்புறம் ரெண்டு சேலை இருந்தால் போதும். ரெண்டு செட் சுடிதார். அதும் நீங்க வாங்கிக் குடுத்ததைத்தான் என் பேக்ல வச்சுட்டேன். ஒரே ஒரு பேக் தான் கொண்டு வர முடியும்” 

“அதையும் எடுத்துக்காம வந்தீன்னாக்கூடப் போதும். எனக்கு நீ வந்தீன்னா சரி. உனக்கு எல்லாமும் வாங்கித்தர நானாச்சு” 

“ஐயோ! நெஞ்சு எனக்கு ஈரமாயிடுச்சு. ரெண்டு நாளைக்கு எப்ப வேணாலும் கூப்புட்டே இருபேன்பா. உங்க செல்லை ஆப் பண்ணிடாதீங்க. எனக்கு ஒரே டென்சனா இப்போ இருந்தே இருக்கு! பயமாவும் இருக்கு!” 

“எதுக்குப் பயம்?” 

“பயமா இருக்காதா பின்னே? வீட்டைவிட்டு பேக்கோட நைட்டு வெளிய கிளம்பணும். இப்பவே நெஞ்சு தடக்தடக்குனு அடிச்சுக்குது” 

“இப்போ எனக்குத்தான் உன் மேல பயமா இருக்குது. ஏய் என்னை ஏமாத்திப் போடாதப்பா!’ 

“சேச்சே! நெஞ்சே வெடிச்சாலும் சரி நான் வந்திடுவேன். நீங்க வராம உட்டுடாதீங்கப்பா சாமிநாதன் கிட்டப் பேசிட்டீங்ளா? என்னமோ பேசணும்னு சொன்னீங்க நேத்து!” 

“இப்போத்தான் பேசினேன். உன் நெம்பரைக் கோட்டை விட்டுட்டானாமா! மெசேஜ் அனுப்புறேன்னு சொன்னேன். இன்னிக்கு நைட்டு அவன் குடோனுக்கே அவனுக்குப் பாட்டில் வாங்கீட்டுப் போறேன்.’ 

“பாட்டிலா? அது எதுக்கு அவனுக்கு? ஐயோ நீங்க ஏங்க!” 

“பாடுற மாட்டைப் பாடித்தான் கறக்கணும் பிரியா. உன் ஊர்ல எனக்கு வேற யாரையும் தெரியாது. இவன் தான் எனக்குக் காரியத்துக்கு உதவுவான். சொன்னா சொன்ன மாதிரி உன்னை என்கிட்ட கொண்டு வந்து நிறுத்துவான் பாரு, அதும் சொன்ன இடத்துல ” 

“அதுக்க்காக அவனுக்கு நீங்க பாட்டல் வாங்கிக் குடுக்கணுமா?” 

“ஆமாம் பிரியா, அவனுக்கும் உதறலா இருக்கும்ல? அரைப் பாட்டில் நனைச்சுக்கிட்டான்னா தெம்பு வந்த மாதிரி தைரியமா உன்னை வீரசங்கிலிப் பிரிவுக்குக் கூட்டிட்டு வந்துடுவான்.” 

“எனக்கென்னமோ என்கிட்ட பொய் பேசிட்டு நீங்க குடிச்சுட்டு இருக்கிற மாதிரி தெரியுது! அப்பிடி கிப்படி துளி வாசம் அடிச்சுது. மவனே மாட்டிக்கிட்டீங்க என்கிட்ட. நீங்க வண்டியில என் ஊருவரை வந்து கூட்டிட்டுப் போக முடியாதா?” 

‘சின்னதா எதாச்சும் நடந்துடுச்சுன்னு வச்சுக்க. காரியம் கெட்டுப் போயிடும். உனக்குச் சொன்னா புரியாது” 

“புரியும் சொல்லுங்க!” 

“வேண்டாம்னா விடேன் பிரியா! அவன் கூட்டிட்டு வருவான்! கூட நீ வந்தால் போதும்” 

“இன்னைக்குத்தான் முதன்முதலா கோபமா பேசியிருக்கீங்க!”

“கோபமில்ல இது!” 

“சமாளிக்காதீங்க. கோபம் தான்” 

“ஆமாம் கோபம் தான். திட்டம் போட்டாச்சு. இனி மாத்த முடியாதுல்ல.” 

“கோபமே உங்களுக்கு வராதோன்னு இத்தனை நாள் நினைச்சுட்டே இருந்தேன்” 

“அது வந்து காரியம் நல்ல விதமா நடக்கணும்ல? எல்லா ஏற்பாடும் சரியா இருக்கணுனு பதறிக்கை தான்” 

“எனக்கு ஒரு ஆசை!” 

“ஆசையா? சொல்லு. சீக்கிரம் சொல்லு” 

“இல்ல, எல்லாருமே மஞ்சள் பூசிக் கயிறு கட்டிக்கிறாங்க. நாமளும் மஞ்சள் கலர்ல தான் கட்டோணுமா! நீலக் கலர்ல கயிறு கட்டிக்கலாமா?” 

“உனக்கு எப்புடி ஆசை வருதுன்னு பாரு!’ 

“காதலிச்சுக் கல்யாணம் பண்ணினவன்னு மத்தவங்களுக்குத் தெரியணும்னா நீலக்கலர் தான் சரின்னு நினைச்சேன். இது என்னடான்னா காதலிச்சு கல்யாணம் பண்றவங்களும் அதே மஞ்சள் கயிறு. அதே மூனு முடிச்சு” 

“நீ ஒளறாம உருப்படியா பேசு பிரியா!” 

“ஒரு ஐடியா சொன்னா உளர்றனா நானு? சரி, அந்த மஞ்சள் கலரே கட்டுங்க. நான் கழுத்தை நீட்டிக்கறேன். துணிக்கடைக்கு உள்ளார போய் என்னைக் கூப்பிடுங்க. பார்டர் பெருசா சிறுசா? எல்லாம் கேட்கணும்” 

“கண்டிப்பா கூப்பிடுறேன், போய்க் கிளம்பணும் பிரியா.. ஏகப்பட்ட வேலை இருக்கு!’ 

“உங்க ஊர் பசங்க நம்ம கூட வருவாங்ளா!” 

“ஐயோ! வேற வினையே வேண்டாம். நான் உன்னை லவ் பண்றது ஒரே ஒருத்தன் உங்க ஊர் சாமிநாதனுக்கு மட்டும் தான் இந்த ஒரு வருசமா தெரியும். சரி வெச்சிடு பை!” 

சாமிநாதன் வீட்டின்னுள் குறைந்த சத்தத்துடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். மணி இரவு பதினொன்றரையைத் தாண்டிவிட்டது. ராஜேந்திரன் பத்து மணிக்கு ஒருமுறை கூப்பிட்டுச் சொல்லிவிட்டான். ராஜேந்திரன் பரபரப்பு இவனுக்குள்ளும் தொற்றிக் கொண்டது. 

அப்பனுக்கு ஒரு கோட்டர் கொடுத்தது போக இன்னும் ஒரு கோட்டர் வன் பாண்ட் பாக்கெட்டில் இருந்தது. சரக்கடித்தால் பிர்யாவுக்கு புடிக்காதுடா என்று ராஜேந்திரன் கூறீயிருந்தான். 

“கோட்டரைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே குடிக்க வேண்டாம் என்றால் எப்படி? பிரியாவிற்குப் பிடிக்காது என்றால் எனக்கென்ன?” யோசித்தவன் கட்டிலில் இருந்து எழுந்து போய் டம்ளர் எடுத்தான். அப்பா கட்டிலில் குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்தது. கொஞ்சமாய்த் தண்ணீர் கலந்து குடித்தான். ஊறுகாய்க் காகிதத்தை வாயில் கடித்து எலுமிச்சை பீஸ் ஒன்றை நாக்கில் வைத்துக் கொண்டே சப்பினான். டிவியில் “கத்தாழை கண்ணால குத்தாதே நீ என்னே, இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை” பாடல் ஓடிக் கொண்டிருந்தது. பாட்டிலில் மிச்சமிருந்த சரக்கு இவனைப் பார்த்துச் சிரித்தது! 

உடுவேனா என்று அதையும் டம்ளரில் ஊற்றினான். தண்ணீர் கலந்தான். மணி பதினொன்றே முக்கால் ஆகிவிட்டது. டம்ளரை எடுத்ததும் மடக்மடக்கெனக் குடித்து டம்ளரைக் கீழே வைத்துவிட்டு ஊறுகாய்ச் சாரை நக்கிக் கொண்டான். கண்ணாடியில் முகம் பார்த்துத் தலையை வாரிக் கொண்டான். 

சிந்தால் பவுடரை முகத்தில் பூசிக் கொண்டவன் துண்டில் பட்டும் படாமல் துடைத்துக் கொண்டு கதவை நீக்கினான். சைக்கிளைச் சத்தமில்லாமல் வெளியே எடுத்து வாசலில் நிறுத்தினான். திரும்ப வந்து கதவைச் சாத்திவிட்டுச் சைக்கிளை எடுக்கத் திரும்புகையில் மணி இவன் சைக்கிள் பின் சக்கரத்தில் உச்சா அடித்தது. பிறகு இவனைப் பார்த்து வாலை ஆட்டிக் காட்டிவிட்ட்டு ஓடியது. 

நாய் உச்சா அடித்தால் நல்லது என்றெல்லாம் சாமிநாதன் யோசிப்பதேயில்லை. அதேபோல் கெட்டது என்றும் பார்ப்பதேயில்லை. தனக்கு நல்லது என்று ஒன்று நடக்கப் போவதே இல்லை என்கிற போது பூனை ஓடினால் என்ன? நாய் உச்சா போனால் என்ன? செம்பூத்து ஓடினால் என்ன? என்று எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை. 

இவன் மறந்தாற்போல் சைக்கிளைப் பிரிவுக்குப் போகும் பாதையில் உருட்டிக் கொண்டு சென்றான். திடீரென ஞாபகம் வந்தது. சைக்கிளைத் திருப்பினான். மூன்றாவது வீதியில் தான் பிரியாவின் வீடு. வீதி விளக்கு எரிந்துக் கொண்டு தான் இருந்தது. வீதியே அமைதியில் இருந்தது! வடக்கே சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் மேட்டில் வேப்பமர ஓரமாக நிறுத்தினான். இவனது செல் சட்டைப் பாக்கெட்டில் விர்விர் என்று அதிர்ந்தது. ராஜேந்திரனாய் இருக்குமோ என்று எடுத்துப் பார்த்தான். பிரியா! 

“ஹலோ” 

“சாமிநாதனா?” 

“ஆமாம் சொல்லு” 

“வீட்டுல இருந்து கிளம்பிட்டியா?’ 

“அப்பலையாவே வடக்கெ வந்து ரோட்டு மேல நின்னுட்டு இருக்கேன்” 

“எங்கம்மா தூங்கறதுக்கு லேட் பண்ணிடுச்சு. இப்பத்தான் குறட்டைச் சத்தமே வருது” 

“தூங்கிடுச்சுல்ல. சரி சீக்கிரம் வா. உன்னையக் கொண்டு போய் உட்டுட்டு வந்து தூங்கணும். காலைல ஷிப்டுக்குப் போகணும். வா!’ என்று கூறி கட் செய்தான். 

மூங்கில்பாளையம் ஊரே அமைதியாய்க் கிடந்தது! 

சாமிநாதனுக்குக் கொஞ்சம் திருகலாய்த்தான் இருந்தது! 

பாக்கெட்டிலிருந்து ஹான்ஸ் பொட்டணத்தை எடுத்துக் கொஞ்சம் கொட்டி நசுக்கி உதட்டுக்குள் வைத்துக் கொண்டான். தூரத்தில் பிரியா தோளில் பேக்கோடு சுடிதாரில் வந்து கொண்டிருந்தாள். பிஸ்கட் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். 

இவன் சைக்கிள் அருகே வந்தவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். “பயமா இருக்கு சாமிநாதா! படபடன்னு நெஞ்சு அடிச்சுக்குது. சைக்கிளை எடு. சீக்கிரம். இங்க நாம நிற்கவே வேண்டாம் என்றாள். இவன் சைக்கிளை எடுத்தான். பின்னால் உட்காரச் சொன்னான். பிரியா கேரியரில் உட்கார்ந்து கொண்டதும் “வண்டியெ உடு” என்றாள். பிரியாவின் கூந்தலில் இருந்தா அல்லது உடம்பிலிருந்தா என்றே தெரியாமல் கமகமவென ஒரு வாசம் இவனுக்கு அடித்துக் கொண்டே இருந்தது. 

“ராஜேந்திரன் போன் பண்டுனானா?” 

“இப்ப பத்து நிமிசத்துக்கும் முன்னாலகூடப் பண்ணினாப்ல!”

“நேரா கொளப்பலூர் கூட்டிட்டுப் போயிடறானாமா. காலைல பச்சைமலை கூட்டிட்டுப் போய்த் தாலி கட்டுறானாமா! தெரிஞ்ச பையன் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டான்னு என்கிட்டச் சொன்னான்” 

“நான் ரொம்ப வெய்ட்டா இருக்கிறனா?”

“நான் தனியா உட்கார்ந்து ஓட்டிட்டுப் போற மாதிரிதான் இருக்குது. ஒரு கூடைப் பூவு சைக்கிள் கேரியர்ல வச்சுட்டுப் போனா கனக்கவா செய்யும்? அது மாதிரிதான்” 

“என்னைய வெய்ட்டே இல்லிங்றே! தண்ணி அடிச்சிருந்தா வெய்ட் தெரியாது உனக்கு!” 

“தண்ணி போட்டா உனக்குப் புடிக்காதுன்னான். நானும் பதினொன்ற வரைக்கும் அடிக்காமத்தான் டிவியப் பார்த்துட்டுக் கெடந்தேன். அப்புறம் எனக்கும் கொஞ்ஜம் திடுக்திடுக்குனு இருந்தங்காட்டி உனக்குத் தண்ணியடிக்கிறது புடிக்கலைன்னா எனக்கென்ன அப்படின்னு போட்டு ஒரு கோட்டரைக் குடிச்சுட்டேன்” 

“ஒரு கோட்டரா? எங்க சித்தப்பனுக ஒரு கோட்டர் குடிச்சுட்டு ஊட்டுல ரகளை பண்ணிட்டு இருப்பாங்க. நீ குடிச்ச மாதிரியே தெரியாம பேசிட்டு இருக்கியே! சிலருக்கு உடல்வாகு அப்பிடியா?” 

“எனக்கும் மசமசப்பாத்தான் இருக்குது. அப்படி இருந்தங்காட்டி தான் இட்டாரியில கூட லைட் இல்லைன்னாலும் சைக்கிள் பூவாட்டப் போவுது பாரு. படிக்காதவன் படத்துல ரஜினி, லட்சுமி லட்சுமின்னு காரைக் கூப்பிடுவாப்லைல்ல, அது மாதிரி என்னோட சைக்கிள் பேரு கண்மணி. நல்லா இருக்குதா?” 

“கண்மணி யாரு, உன்னோட காதலியா?’ 

“எனக்கேது காதலி? இருந்தவளும் ஏமாத்தீட்ட்டுப் போயிட்டா”

“கிணிப்பாளையம் ஊர் மேலேயா போகணும்?’ 

“எந்த ஊர் மேலயும் நாம போகலை ப்ரியா. உன்னைய வீரசங்கிலிப் பிரிவுக்கு இட்டேரி இட்டேரியாவே கூட்டிட்டுப் போயிடுவேன்” 

“போய் ரோட்டு மேல நிற்க வேண்டாம். தள்ளி ஊள்ளார நின்னு போன் போடுவோம். வந்து ரோட்டுல நின்னுட்டுக் கூப்புட்டாப்லைன்னா அப்புறம் ஓடிப் போய் ஏறிக்கறேன். சரியா?” 

“சேரி பிரியா” 

“இந்த ஊருன்னு தான் பேரு. நீ போற வழியெல்லாம் எனக்குப் புதுசாவே இருக்குது. வீரசங்கிலிப் பிரிவு எனக்கு மேக்கூர் வழியா வந்தாத்தான் தெரியும். இதுல போனதே இல்ல” 

“நீ எப்பிடி ராஜேந்திரன் கூட ஜோடி சேர்ந்தே?” 

“மொதல் மொதலா சின்னான் கல்யாணத்தப்ப கைக்கோலபாளையத்துல பார்த்தது. அதுவா தேடிவந்து கோயில்லயே பேசுச்சு. நெம்பர் கேட்டுச்சு குடுத்தேன்” 

“ம். அவன் மொதல்ல சொன்னானா? நீயா?” 

“நானே சொல்லியிருப்பேன். நான் சொன்னா நல்லா இருக்குமா? அப்புறம் அதுவாவேதான் கல்யாணம் பண்ணிக்கறியா பிரியான்னு கேட்டுச்சு. சரின்னுட்டேன்” 

“நல்ல பையனைத்தான் புடிச்சிருக்கே! ஒரு தப்புத்தண்டா இல்ல. எப்பிடி கண்டுபுடிக்கறீங்க இவன் நல்லவன் கெட்டவன்னு?” 

“பேச்சுல தெரியாதா? எல்லாம் தெரியும்” 

“அப்புறம் பேப்பர்ல போடறாங்களே! காதலன் ஏமாற்றி ஓட்டம்.. கர்ப்பிணி காதலி கதறல்னு.. அவங்களும் நல்லவன்னு தான பழகியிருப்பாங்க” 

“எல்லா விரலும் ஒரே மாதிரியாவா இருக்குது? ஒன்னு குட்டை ஒன்னு நெட்டையாத்தான இருக்குது. இன்னும் எவ்ளோ தூரம் போகணும்?” 

“இதென்ன பிரிவுகிட்ட வந்தாச்சு. எப்பிடி கரைக்டா கேட்டே?’ “இல்ல வெகுநேரம் மிதிச்சுட்டே வந்துட்டு இருக்கியேன்னு கேட்டேன்” 

“அதா.. அது தான் பிரிவு. நாம இங்கயே நிற்போம். ரோட்டுல ஏதாச்சிம் வண்டி போயிட்டே இருக்கும். அது சரிப்படாது. நீ அவனைக் கூப்பிடு” என்று சாமிநாதன் சொன்னதும் பிரியா ராஜேந்திரனை செல்லில் கூப்பிட்டாள். எதிர்முனையில் எந்தச் சத்தமும் இல்லை. சுவிட்ச் ஆப் என்று கூடச் சொல்லவில்லை. மீண்டும் அடித்தாள். மீண்டும் மீண்டும் அடித்தாள். 

“என்னாச்சு பிரியா? என்னோட செல்லுல கூப்பிடறேன். நீ நிறுத்து” என்றவன் இவன் செல்லில் ராஜேந்திரனைக் கூப்பிட்டான். எந்தச் சத்தமும் இல்லை! 

“இதென்னது? இது ஏன் இப்பிடிப் பண்ணுது?” என்று தலையில் கைவைத்து ரோட்டோரமாய் உட்கார்ந்தாள் பிரியா! இப்போது இதயம் எகிறி எகிறிக் குதிக்க ஆரம்பித்துவிட்டது! என்ன என்னவோ யோசனைகள் ஓடின! அழுகை முட்டிக் கொண்டு வந்தது. 

“விளையாட்டுப் பண்றானா? அட கருமம் புடிச்சவனே” என்று சாமிநாதன் சொல்லிவிட்டு, ராஜேந்திரன் செல்ல்லுக்கு முயன்று கொண்டே இருந்தான். 

“சுவிட்ச் ஆப் அப்பிடின்னாலாச்சும் சொல்லணும். ஒரு சத்தத்தையும் காணமே ப்ரியா.. இல்ல அவனாச்சும் கூப்பிடணும் அதும் இல்ல. என்னன்னு நெனைக்கறது?” என்று சாமிநாதன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த ப்ரியாவிடம் கூறினான். ப்ரியா பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். 

“பயப்படாதே பிரியா சித்தங் கூரியத்துல எப்பிடியும் வந்துருவான்.என்னை ரெண்டு நாளாப் போட்டு உரிச்செடுத்துட்டான். வராம எல்லாம் போகமாட்டான். பார்ப்போம். மணி பன்னண்டரை தான் ஆச்சு” என்றான். இவனுக்கு என்ன ஏது என்று புரியவில்லை. அப்படிப் பறந்தவன் எப்படி ஏன் செய்யணும்.? 

“எனக்குப் பயமா இருக்குது சாமிநாதா. வராமப் போயிடுச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்? ஐயோ! திடீர்னு ஏன் இப்படி எல்லாம் நடக்குது எனக்கு?” 

“அதைம் இதைம் நினைச்சுக்காத பிரியா. வந்துடுவான்” என்றான். பிரியா தன் செல்லில் இருந்து கூப்பிட்டாள். எந்தச் சத்தமும் இல்லாமல் போகவே திடீரென அழ ஆரம்பித்துவிட்டாள். சாமிநாதனுக்கு சங்கடம் ஆகிவிட்டது. ஊருக்குள்ளிருந்து சாமத்தில் யாருக்கும் தெரியாமல் கூட்டிவந்த பிறகு இப்படி உட்கார்ந்து கேவிக்கேவி அழுகிறாளே! 

“அழுவாத பிரியா” என்றான். 

“அழுவாத நான் என்ன பண்ணட்டும்? இவனை நம்பித்தான நான் வீட்டுல இருந்து வந்தேன். ஐயோ… என் புத்திய நான் எதால் அடிச்சுக்கறது?” 

“அழுவாத பிரியா. நான் வேணா சைக்கிள் எடுத்துட்டுக் கைக்கோளபாளையம் போய்ப் பார்த்துட்டு வரட்டா? உன்னைய எப்படி இருட்டுல தனியா உட்டுட்டுப் போறது!” 

“நீ எங்கியும் போய் பார்த்துட்டு வரவேண்டாம் சாமிநாதா! ச்சே! இப்பிடிப் பண்ணிட்டானே!” 

“வரமாட்டான்னே முடிவு பண்ணிட்டியா நீ?” 

“வர்றவனா இருந்தா இன்னுமா வர்றான். இனி நான் எப்படி வீட்டுக்கு உள்ளார போறது?” என்று சத்தமாய் அழுதாள். திடீரென எழுந்தாள். 

“நான் செத்துப் போயிடறேன் சாமிநாதா. இங்கயே மரத்துல எங்காச்சும் தொங்கிடறேன். எனக்குப் பைத்தியம் பிடிச்சுட்ட மாதிரி தலையெல்லாம் சூட இருக்குது” என்றாள். சாமிநாதன் ஹான்ஸ் பாக்கெட்டை எடுத்து அதிகமாகவே புகையிலையை எடுத்து வாயில் திணித்துக் கொண்டான். இப்படி நடக்குமென்று இவன் எதிர்பார்க்கவும் இல்லை. 

“சாவுறது நிமிசத்துல செத்துடலாம் பிரியா. இதுக்குப் போய் யாராச்சும் சாவாங்களா! அவனுக்கு என நிலைமையோ அங்கே! மணி ஒன்னுக்கும் மேல ஆயிடுச்சாட்ட இருக்குது! வரமாட்டான்னு நீயே உறுதியா சொல்றே! சரி, இங்க நின்னு இனிப் பார்த்துட்டு இருக்காட்டி உட்காரு போவோம்” என்றான். பிரியா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேக்கைத் தோளில் சரியாக மாட்டிக் கொண்டு கேரியரில் உட்கார்ந்தாள். 

சாமிநாதன் மூங்கில்பாளையம் நோக்கி சைக்கிளை விட்டான். திருப்பி இவளோட ஊர் திரும்புவோம் என்று இவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. பிரியாவிற்குப் பலவிதமான யோசனைகள் ஓடியதால் சாமிநாதனிடம் பேச்சும் கொடுக்கவில்லை. ஊரில் சாமிநாதன் இவள் வீட்டை எட்டிப் பார்க்கையில் வீட்டில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. பேச்சுக் குரல்கள் கேட்டன.

– தொடரும்…

– எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *