கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 4,580 
 
 

வெக்காளிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு… புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் விடிய வெகுநேரம் இருக்கிறது. என்ன செய்யலாம்? ஒன்று அடித்துப் போட்டது போன்று ஆழ்ந்து உறங்கவேண்டும். இல்லையா, ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்; இரண்டும் இல்லாமல் தூங்காமல் விழித்துக் கொண்டே படுத்திருப்பது பெரும்பாடாய் இருந்தது.

அவளிருந்த குடிசைக்கு இன்னும் ஒரு மூங்கில் தட்டி போடமுடியவில்லை. பழஞ்சாக்கை பிரித்து மறைவுக்கு கட்டி வைத்திருக்கிறாள். எந்தத் திருடன் வரப்போறான் இந்த மாளிகைக்கு? ஆனாலும் பேத்திகள் இரண்டும் இப்பவோ, அப்பவோன்னு இருக்கு பெரிய பொண்ணாவ; அவர்களுக்காவது ஒரு பாதுகாப்பும், மறைவு, சரவும் வேணுமே! பொறுப்பில்லாத இவளின் குடிகாரப் பிள்ளையையும் அவனுடன் தினம் தினம் போராடிப் பலனில்லாமல் கடைசியில அரளி விதையை குடித்துவிட்டுச் செத்த மருமகளையும் நினைத்தால் வயிறு கொதித்தது வெக்காளிக்கு.

கணவன் இறந்தபொழுது, ஒற்றை மகனை நம்பித்தான் வாழ்க்கையைத் தொடர்ந்தாள். அந்த பிள்ளையும் கெட்டு, சீரழிந்து மனைவி இறந்த அன்று ஓடியவன்தான்; எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான்; இருக்கிறானா, இல்லையா? என்று ஒரு செய்தியும் தெரியவில்லை.

அறுப்பறுத்த நெல் ஒரு மணி சாக்கில் வைக்கவிடமாட்டான். அப்படியே அள்ளிக் கொண்டு போய் கடையில் கொட்டி, காசாக்கி குடித்துவிடுவான்.

மருமகள் இறந்ததை நினைத்தால்தான் துக்கமாய் இருக்கும் வெக்காளிக்கு. மகன் தொலைந்ததில் எள்முனை வருத்தமில்லை. அந்தக் கதையை நினைத்தாலே மனது கனத்துவிடும். அடுத்து என்ன செய்யப் போகிறோம்? என்று நினைத்தாலே மனது பாரமாகிவிடும். நாளையிலிருந்து நூறு நாள் வேலை ஆரம்பிக்கப் போகிறார்கள்… என்ற சேதியே, புது உற்சாகத்தைக் கொடுத்தது. ஆத்துல தண்ணீ வர்றவரைக்கும் தொடர்ச்சியா வேல கொடுக்கச் சொல்லி உத்தரவாகி இருக்காம். அப்பாடி… வாரம் ஆறு நாள் வேலை. ஞாயிறு லீவு. செவ்வாய்க்கிழமை ஒவ்வொரு வாரமும் அறுநூறு ரூபாய் கைக்கு வந்துவிடும். பேத்திகள் இருவருக்கும் பள்ளிச் சீருடை எடுக்க வேண்டும். இந்த வருடம் புது யூனிஃபார்ம் பள்ளி திறந்து மாதம் முடியப் போகிறது. இனியும் தாமதித்தால் வெளியில் நிறுத்திவிடுவார்கள்.

பேத்திகளுக்கு நல்ல சாப்பாடு ஆக்கிப் போடவேண்டும். முதியோர் உதவித் தொகை மாதம் ஆயிரம் வருகிறது. வர்ற பணம், நான்கே நாட்களில் எங்கே போகிறது? என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் வெக்காளி வீண் செலவாளி இல்லை. கட்டுசெட்டாய் குடும்பம் பண்ணுவாள். உதவித் தொகை வாங்குவதால் இவள் கார்டுக்கு இலவச அரிசி நான்கு கிலோ மட்டும் தருவார்கள். மண்ணெண்ணெய், ஜீனியெல்லாம் கிடையாது. மேலத்தெரு முத்தம்மாள் இரண்டு கார்டு வைத்துள்ளாள். இலவசமாய் வாங்கி கிலோ ஐந்து ரூபாய் என்று விற்பாள். அவளிடம் நூறு ரூபாயைக் கொடுத்தால் இருபது கிலோ அரிசி வாங்கிவிடலாம். பெரிய பானையிலும் சிறிய குண்டிலும் கொட்டி வைத்தால், மூன்று பேருக்கும் இருபத்தைந்து நாட்களுக்கு வரும். மீதமுள்ள நாட்களுக்கு அதிக விலை கொடுத்துதான் அரிசி வாங்கவேண்டும்.

புளி காய்க்கும் நேரம் பாக்கியத்து மகன்களிடம் கிலோ இருபது என்று வாங்கி அரிந்து பானையில் அடைத்து வைத்தால், ஏழெட்டு மாதங்களுக்கு வரும். மேச்செலவுக்கு  மட்டும் பொருள்களையும் காய்கறியையும் வாங்கினால் போதும்… என்று எண்ணிக் கொண்டே படுத்திருந்தவள் சற்றே கண்ணயர்ந்துவிட்டாள்.

கோழி கூவும் சத்தம் கேட்டவுடனேயே வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். நூறு நாள் வேலை இருக்கிறது என்ற நினைப்பே சுறுசுறுப்பையும்; உற்சாகத்தையும் கொடுத்தது. பேத்திகளை எழுப்ப மனமில்லை; பாவம், தாயில்லாப் பிள்ளைகள். சற்று தூங்கட்டும்.. என்று நினைத்து, தான் மட்டும் எழுந்து பாயைச் சுருட்டி எரவானத்தில் வைத்தாள். திரைச்சாக்கை தூக்கி மடித்து விட்டாள். லேசாய் இருள் பிரிய ஆரம்பித்தது.

நேற்று பொறுக்கி வைத்த சாணி உருண்டை வாசல் சுவரோரம் ஒரு செங்கல் மீது இருந்தது. ஒரு கை அள்ளி கரைத்து வாசலுக்கு தெளித்து, கொல்லைப்புறமும் தெளித்தவள், பேத்திகள் எழுந்தவுடன், ஒன்று கட்டை விளக்குமாற்றால் கூட்ட, பெரிசு அழகாய் கோலம் போட்டுவிடும். வெக்காளிக்கு கோலமெல்லாம் வராது. அடுப்புக் கரியை எடுத்து பல்விளக்கினாள். வரட்டியை ஒடித்து வைத்து அடுப்பை மூட்டினாள். உலைப்பானையை ஏற்றினாள். மாவத்தலும் கத்தரி வத்தலும் கொஞ்சம் இருந்தது. போட்டு ஒரு குழம்பை வைத்தாள் ; சாதத்தை வடித்துவிட்டு குழம்பு கொதிக்கும் நேரம், பேத்திகளை எழுப்பினாள். அமுதாவும் சுமதியும் எழுந்து பாயைச் சுருட்டும் பொழுதே, குழம்பு மணம் நாசியை நிறைத்தது. தூக்கம் விலகி, சுறுசுறுப்பாய் பல்விளக்கி வந்தனர். ஒருத்தி கூட்ட, பெரியவள் கோலம் போட்டாள். ஒன்றிரண்டு பத்து பாத்திரங்களை விளக்கி வைத்தனர்.

“அமுதா, சோறு இருக்கு… கொழம்பு இருக்கு. வேணுங்கறதை போட்டு சாப்புடுங்க. தங்கச்சியோட பத்ரமா பள்ளிக்கூடம் போயிட்டு வரணும். கொளத்துல கிளத்துல எறங்கபுடாது. ஆத்தா வேலைக்கு போயிட்டு வந்துடறேன்….” என்று சொல்லிவிட்டு, அன்னக்கூடையை எடுத்துக் கொண்டு நடந்தாள். நாலு தப்படி நடந்தவள்,

“ஏ.. அமுதா, அந்த நூறு நாள் அட்டையை எடுத்துட்டு வா ஆயா; அத மறந்துட்டு போறம்பாரு…” என்று சொல்ல, உள்ளிருந்து அட்டை போடப்பட்ட பையை தூக்கிவந்து பேத்தி கொடுத்தாள்.

“யாத்தா, நீ சோறு தின்னியா..?” என்றாள் பேத்தி அட்டையைக் கொடுத்தவாறே!

“அடி என்னப் பெத்தவளே… இவ்ளோ சுருக்கா சாப்புடமுடியாது..வேல முடிச்சுட்டு வந்து சாப்புட்டுகுறேன். நீங்க பாச்சா பூந்துடாம நல்லா மூடி வைங்க. சோறையும் கொழம்பையும். ஏ ராசாத்தி, இந்தா இதுல ஆளுக்கு ஒர்ருவா எடுத்து ஏதுனாச்சும் வாங்கித் தின்னுங்க!” என்று வெற்றிலை பையிலிருந்து இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்துப் பேத்தியிடம் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

தேனம்மா அப்பொழுதுதான் வீட்டு வாசலில் காலை நீட்டி போட்டுக் கொண்டு தலை சீவியவாறிருந்தாள். அபூர்வம் தன் கணவருடன் என்னவோ வாக்குவாதத்தில் இருந்தாள். செவிடு நாகம்மாள் பொது பைப்பில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். ராணி யாரிடமோ வட்டி தராததற்கு மானங்கானியாய் விட்டு கடாசிக் கொண்டிருந்தாள்.

“என்னங்கடி இது, ஆளாளுக்கு இப்புடி மசமசன்னு நின்னா என்னா அர்த்தம்? ஒருத்தி கூட இன்னும் பொறப்பட்ட பாடு இல்ல. அவ அவ வேல கெடைக்கலியேன்னு அய்யோன்னு நிக்கிறா; இவளுவளுக்கு தட்டுல வச்சு நீட்டுது அரசாங்கம் வேல இந்தா, கூலி இந்தான்னு, இவளுவ பண்ற ஆடம்பரமும் அம்புட்டும்? வேல இந்தா, கூலி இந்தான்னு ஒரு பயம் வேணாம்?” என்று முனகிக் கொண்டே நடந்தாள்.

பள்ளிக்கூடம் பிள்ளைகள், டியூஷன் போகும் பெண்கள் எல்லாம் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தனர். அத்தனை பேரும் ஒரேமாதிரி சீருடையில் அழகாய்ச் சென்றனர். வெக்காளி தன் பேத்திகள் இருவரையும் அதே சீருடையில் நினைத்துப் பார்த்தாள். என்ன பாந்தமாய், அழகாய் இருக்கும் அவர்களுக்கு? என்று நினைத்துக் கொண்டே எதிரே வந்த பெண்ணிடம் விசாரித்தாள்.

“பெரிய கொளம் வெட்டணும்னு சொல்லிட்டாங்க..!” என்றாள் அவள்.

சரி, என்று பெரிய குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வெக்காளி.

அங்கு ஒரு ஈ, காக்கா இல்லை. புங்கை மர நிழலில், படித்துறை மேல்படியில் அமர்ந்தாள். வெகுநேரம் கழித்துத்தான் ஜனங்கள் வர ஆரம்பித்தனர்.

“என்னா ஊருக்கு முன்னாடி வந்து ஒக்காந்துட்ட?” என்றாள் ஜெகது.

“என்னமோ, வேலன்னா வீட்ல இருக்க ஒட்டலை எனக்கு. வேல செய்யற எடத்துக்கு வந்து, முன்னாடியே இருந்தாத்தான் இருப்பா இருக்கு!” என்றாள் வெக்காளி.

கிளார்க்கும் கண்காணிப்பாளர்களும் வந்தவுடன் அட்டையை கொடுத்து விட்டு குளத்தில் இறங்கினாள். ஆளுக்கு மூணு கம்பு வீதம், அளந்து போட்டார்கள். மேல தெரு காத்தான், வெட்டி வைக்க, இவள் அசராமல் மண் கூடையை கரையோரம் அணைத்தாற்போல் கொட்ட ஆரம்பித்தாள். மற்றவர்கள் ஓய்வெடுக்க வெக்காளி தன் வேலையில் கண்ணாய் இருந்தாள்.

“”எக்கா, நமக்கு அளந்து போட்ட அளவு முடிஞ்சாச்சு; இனிமே சாயங்காலம் கையெழுத்து போட எந்திரிச்சா போதும்; போயி ஒக்காரு…” என்று காத்தானும் மண்வெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, எச்சில் தொட்டு இரண்டு கைகளையும் தேய்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

வெக்காளிக்கு உட்கார மனமில்லை. வெயில் உரைக்கவே ஆரம்பக்கவில்லை. உச்சி வெயில் ஏறும்பொழுது இளைப்பாறினால் போதும்; சுற்றிலும் பார்த்தாள். ராசம்மாவும் பொன்னுக்கண்ணுவும் மூச்சு வாங்க தடுமாறிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே இளவயதுப் பையன்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

வெக்காளியால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாவம் வயதானவர்கள், வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வேண்டிய வயது. என்னவோ, வீட்டுச் சூழலும் ஆதரவற்ற நிலையும் அவர்களை வேலைக்கு வரவழைத்திருக்கிறது.

“ராசம்மா அக்கா, நீ போயி ஒக்காரு ஒம்பங்கு வேலையை நான் செய்யறேன்…” என்றவள், பொன்னுக்கண்ணைப் பார்த்து, “”சின்னம்மா, நீயும் போயி செத்த ஒக்காரு; எத்தனி நேரம் பிடிக்கும். இதோ நாந்தூக்கி கொட்டிட்டு வர்றேன்..” என்று தூக்கிவிட மனிதர் இல்லாமல், தானே ஒண்டியாய் தூக்கிக் கொண்டு போய் கொட்டிவிட்டு வந்தாள்.

“நீ நல்லா இருப்பே ஆயா, இதுவரை கெஞ்சாத கெஞ்சும் கெஞ்சினோம், ஒரு கை தூக்கி விடுங்கன்னு; ஒண்ணும் மயங்கலை, ஆங்கலை, நீயா வந்து தூக்கி கொட்ற; என்னா இருந்தாலும், காளி மனசு மனசுதான்!” என்று இரண்டு கிழவிகளும் வாயார வாழ்த்திக் கொண்டு நிழலில் உட்கார்ந்தனர்.

நேரம் ஆக ஆக குளத்தில் ஒருவரும் இல்லை. எல்லாம் கரையேறி சென்றுவிட்டனர். முடியாத வயதானவர்கள் ஓரத்து மரநிழல்களில் ஒதுங்கி உட்கார்ந்தனர். இன்னும் முடியாத சிலர், முந்தானைவிரித்து ஒருக்களித்து படுத்துவிட்டனர். வெக்காளிக்கு உட்காரவே மனமில்லை.

வெக்காளி வேலை நடக்கும் இடத்தைவிட்டு உயிரே போனாலும் நகரமாட்டாள். வாங்கும் காசுக்கு வஞ்சனை இல்லாமல் உழைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் காசு உடம்பில் ஒட்டும். உண்ணும் உணவு செரிக்கும். ஒருவர் ஒன்று சொல்வது போல் எந்தக் காலத்திலும் வைத்துக் கொள்ளமாட்டாள்.

இத்தனை நேர் வெயிலில் நின்றதாலோ என்னவோ, வெயிலில் வந்து உட்கார்ந்ததும் “விர்’ரென்று வந்தது. ஐய்யையோ, தண்ணிகொண்டு வர மறந்துட்டமே! என்று பதட்டப்பட்டபொழுது,

“ஆத்தா, இந்தா!” என்ற குரல் கேட்டது. கண் திறந்து பார்த்தாள். எதிரே சின்ன பேத்தி சுமதி நின்றிருந்தாள். கையில் தண்ணீர் பாட்டிலும் தூக்கு வாளியும்.

“சாப்புடு ஆத்தா..!” என்று நீட்டியது.

“ஏதுடா?” என்றாள்.

“பள்ளிடத்திலேர்ந்து மத்தியானம் வீட்டுக்கு வந்தோம். அக்காதான் ஆத்தா பசியோட இருக்கும்னு குடுத்துச்சு. சாப்புடு ஆத்தா. நா பள்ளீடம் போறேன். வரட்டுமா?” என்று சொல்லி போகும் பேத்தி, தன்னைப் பெத்த தாய் போலவே தெரிந்தாள் காளிக்கு.

சாப்பிட்டு முடிக்கும் நேரம், “சர்’ரென்று நான்கு ஜீப்கள் வந்தன. குளத்தின் நான்கு கரைகளிலும் நின்றன. திமுதிமுவென்று அதிகாரிகளும் அலுவர்களும் குளத்தை வளையம் போல் சுற்றி வளைத்து நின்றனர்.

முக்கால்வாசிபேர் வெளியே சென்றிருந்தனர். ஓரத்து மரநிழலில் உட்கார்ந்திருந்த ஜனங்களெல்லாம் வாரிச் சுருட்டி எழுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த உதவிப் பெண்கள் எழுந்து ஓடினர். சிகரெட் குடிக்கச் சென்ற கிளார்க் அலறியடித்து ஓடிவந்தார்.

ரெஜிஸ்டரை கொண்டுவரச் சொன்னார்கள். அட்டைகளை எடுத்தனர். ஒவ்வொரு பெயராகப் படித்தனர். இல்லாதவர்களுக்கு விடுப்பு போட்டனர்; இருப்பவர்கள் கூடை வைத்திருக்கிறார்களா? மண்வெட்டி வைத்திருக்கிறார்களா? என்று சோதித்து, வைத்திருந்தவர்களுக்கு மட்டும் வருகை போட்டனர். அதிகாரிகள் வந்திருக்கும் செய்தி பரவி, டீக்கடைக்குச் சென்றவர்களும் வீட்டிற்குச் சென்றவர்களும் விறகொடிக்கச் சென்றவர்களும் ஓடி வந்தனர். அவர்களுக்கு விடுப்பு போட்டது போட்டதுதான். கடுமையாக எச்சரித்து இன்னொரு முறை வேலை நேரத்தில் இடத்தில் இல்லையென்றால் அட்டை நீக்கப்படும் என்று உறுதியாகச் சொன்னார்கள்.

இந்தக் களேபரத்தில் பொன்னுக்கண்ணுவிற்கு மயக்கம் வந்துவிட்டது. சாதாரணமாகவே பயந்த சுபாவம் கொண்ட அந்த மூதாட்டிக்கு, வெயில் படபடப்பும் அதிகாரிகள் கெடுபிடியும் சேர்த்து மயக்கம் வரவைத்துவிட்டது. இத்தனைக்கும் அது, அட்டை, அன்னகூடை எல்லாம் முறையாக எடுத்து வந்திருந்தது. உடனே பெண்களெல்லாம் “குய்யோ…முய்யோ’ என்று கத்திக்கொண்டு, பொன்னுகண்ணுவைச் சூழ்ந்து கொண்டனர். வந்திருந்த அதிகாரிக்கு பொறி தட்டியது.

“ஏம்ப்பா…. அந்த அம்மா வயசானதா இருக்கே. ஓ.ஏ.பி. பணம் வாங்கித் தரலாமே அதுக்கு?” என்றார்.

“அதெல்லாம் அது மூணு வருஷமா வாங்குது சார்!…” என்றான் வீட்டிற்குச் சென்றதால் அதிகாரியிடம் மாட்டிக் கொண்ட குமாரு.

“ஏம்ப்பா, ஓ.ஏ.பி. வாங்கறவங்க எப்புடி இங்க வரலாம் வேலைக்கு? நடக்கவே சீவன் இல்லை. அந்த பாட்டிக்கு? செத்துகித்து தொலைஞ்சா யாரு பதில் சொல்றது? எல்லோரும்ல கூண்டுல ஏறணும்?” என்றார் கடுப்பாக.

“அதுபோல இங்க நெறைய கேசு இருக்கு சார்.. ” என்றது கூட்டத்திலிருந்து அதே குரல் மீண்டும்.

முதியோர் உதவித் தொகை வாங்குவோரெல்லாம் தனியாக பிரிக்கப்பட்டனர். மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வாங்கும் அவர்கள், மறுநாளிலிருந்து வேலைக்கு வரக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டுவிட்டு, அதிகாரிகள் குழு புறப்பட்டுச் சென்றது. உதவித் தொகை வாங்கும் வயோதிகர் கூட்டம், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதது.

“பாவிகளா எங்கள வயல் வேலைலயும் எறக்க மாட்டேங்கறீங்க, நடவு கள எடுப்புன்னா, வாலிபமா பாத்து எறக்குறீங்க. நாங்க ஒங்க அளவுக்கு வேல செய்யாமயா இருக்கோம்? அறுப்புன்னாலும், “ஒத்த நடவாளுன்னு எறக்கறதில்லை. பழுத்த மட்டையைப் பார்த்து, பச்சை மட்டை சிரிச்ச கதையாயில்ல இருக்கு? “ஒங்களுக்கும் வயசாவாதா நாளைக்கு?’ வயசானா வாயி, வயிறு இல்லையா? நாங்க எப்புடி சாப்புடுவோம்? ஆறு கொளத்துல உழுந்து சாவ வேண்டியதுதானா?” என்று உருண்டு பிரண்டு அழுதுகொண்டே சென்றனர். பார்க்கவே கண்றாவியாக இருந்தது.

மறுநாளும் அதே குளத்தில்தான் வேலை. ஆற்றில் தண்ணீர் வந்து வயல் வேலையும் சாகுபடியும் ஆரம்பிக்கும்வரை, தொடர்ந்து வேலை கொடுக்கச் சொல்லி அரசாங்க உத்தரவாம். அன்றும் கூட்டமாய் வந்தவர்கள், வெட்டச் சொன்ன இடத்தில் மேலாக வரண்டிக் கொண்டு, வேலை செய்தனர். ஒரு பெண்மட்டும் மாங்குமாங்கென்று தானே வெட்டி, தானே தூக்கி வந்து கரையோரங்களில் அம்பாரமாய்க் குவித்துக் கொண்டிருந்தாள். கிட்டே நெருங்கிச் சென்று பார்த்தால் அட, வெக்காளியேதான்!

“ஏம்மா, நேத்திக்குத்தான் மேலதிகாரி படிச்சுப் படிச்சு கண்டிப்பா சொன்னாருல்ல? ஒங்க அட்டையையும் எடுத்து போயிட்டாரு. ஓ.ஏ.பி. வாங்கற நீ, இன்னைக்கு வேலைக்கு வந்தீன்னா என்னா அர்த்தம்?” என்றார் கிளார்க் கோபமாக.

“ஐயா, நா பணங்காசுக்கு ஆசப்பட்டு வேலைக்கு வரலை; பேராசைக்காரியும் கெடையாது; ஒழைச்ச கட்டை; ஓய்ஞ்சு ஒக்கார முடியலை. மத்தவங்க உண்ணுறதைப் பாத்துட்டுப் பேசாம இருந்துடுவேன். ஆனா ஒழைக்கிறதைப் பார்த்துட்டு ஒரு நொடி கூட என்னால இருக்கமுடியாது. நீங்க அட்டையும் கொடுக்க வேணாம்; பணமும் தரவேண்டாம்; ஆனா நா வேல செய்வேன். இல்லாட்டி உயிரே போறாப்புல இருக்கும் எனக்கு!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் மண் வெட்டிவைத்து, கூடையில் தூக்க ஆரம்பித்தாள் வெக்காளி. கூட்டமும் விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *