உற்றத் தோழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 11,004 
 
 

அண்ணா நகரில் ஒரு மல்டி ப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில் குடியிருப்பு. கணவன் ஒரு பெரிய ஆட்டோமொபில் கம்பெனி சி .இ .ஒ . எனக்கு அண்ணா நகரின் அருகில் உள்ள ஒரு பிரபல cbse பள்ளியில் நல்ல வேலை.ஒரே மகள் அபர்ணா. 10 வயது அபர்ணா . எங்கள் ஒரே மகள். வட்ட முகத்தில் எப்போதும் சிரிப்பு . ஒரு குட்டி பந்து போல் எப்போதும் ஓடி கொண்டே இருக்கும் சுறுசுறுப்பு . எல்லோரிடமும் பிரியம்.யாரவது கஷ்டப்பட்டால் ஓடிச்சென்று உதவி செய்யும் தன்மை.இந்தச் சின்ன வயதில் அவளுக்கு இருக்கும் மச்சுரிட்டி எனக்கு இல்லையோ என்று நினைக்க வைக்கும் அளவுக்குச் சமத்து.

சாயங்கால வேளையில் எங்கள் அப்பார்ட்மெண்டைச் சுற்றி பட்டாம்பூச்சி போல் விளையாடும் குழந்தைகளை ரசித்தபடி தான் வேலையில் இருந்து திரும்புவேன்..

‘அபர்ணா .வா டைம் ஆருது .வி ஹாவ் வொர்க் ‘ என்று கூப்பிட்டால் ‘ ப்ளீஸ் அம்மா கொஞ்ச நேரம். 5 மினிட்ஸ்..’ என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சுவாள்.

எப்படியும் ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் பால்கனியில் இருந்துக் குரல் குடுக்க வேண்டும். அப்போது தான் வீட்டிற்குள் வருவாள்.

வரும் போதே புயல் தான்.’ அம்மா இன்னிக்கி நோ ஹோம்வொர்க். கீதா மிஸ் ஆப்சென்ட். சோ எனக்கு இன்னிக்கி டிவி டைம் கொஞ்சம் ஜாஸ்தி குடு.’

‘நோ பாப்பா. நோ ஹோமேவோர்க் மீன்ஸ் அம்மா அண்ட் அபர்ணா டாக் டைம் ஜாஸ்தி பண்ணிக்கலாம். வான்ட் டு நோ வாட் யு டிட் வித் யுவர் ப்ரிண்ட்ஸ் டுடே.’ சிரித்தபடியே நான் கேட்க்கும் போது ..
பல கதைகள் எனக்கு சொல்லும் என் குட்டி தேவதை என் உயிர்.

தினமும் நான் தூங்கும் முன்என் கழுத்தைக் கட்டி கொண்டு, ‘அம்மா யு ஆர் மை பெஸ்ட் ப்ரெண்டு ‘ என்று என் மகள் சொல்லும் பொது என் ஜென்மம் எடுத்த பலன் கிடைத்தார் போல் ஒரு உணர்வு.
எங்கள் இருவருக்கும் நடுவே வர என் கணவனாலும் முடியாது. அப்பா என்றால் அவளுக்கு ரொம்ப பிரியம்.
அனால் எல்லா விஷயங்களிலும் அவள் என் பேச்சைத் தான் கேட்பாள் என்பதில் எனக்கு ஒரு கர்வம் ..
ஏன் என் கணவனுக்கும் தான்.

நேற்று மாலையில் வீடு திரும்பும் போது விளையாடும் இடத்தில் அபர்ணா இல்லை. வீட் டிற்கு போய் விட்டாள் போல இருக்கு என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்தால் வீடு பூட்டி இருந்தது . என் கையில் இருந்த சாவி கொண்டு திறந்து நேராக பால்கனி சென்று பார்த்தேன்.அவளை காணவில்லை.

ஒரு 10 நிமிடம் கழித்து ஓடி வந்தாள் .’ என்னடா எங்க போன நீ? கீழ உன்னை தேடினேன்.’ என்றபடி அவள் முகத்தை பார்தேன்.முகம் வாடி இருந்தது.’என்னடா என்ன அச்சு?’ என்றவுடன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்.

‘ அம்மா ஆம் நாட் பீலிங் வெல் ..நான் போய் தூங்கட்டுமா ??’

‘என்னடா அச்சு உனக்கு? டாக்டர் கிட்ட போலாமா? கொஞ்சம் ரசம் சாதம் சாப்டுடா . அம்மா பிசஞ்சு தரேன்.அப்புறம் தூங்கலாம் ‘ என்று சொல்லியபடி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தேன்.. கொஞ்சம் கத கத வென்று தான் இருந்தது.

‘ப்ளீஸ் அம்மா வேண்டாம். ஆம் கோயிங் டு ஸ்லீப் ‘ என்றபடி என் பதிலுக்கு காத்திராமல் ஓடினாள் .

அடுத்த நாள் காலையில் எழுந்து ‘ நான் ஸ்கூல் பஸ்ல போகலை .. நீ கொண்டு விடறியா?’ என்ற போது எனக்கு கொஞ்சம் கவலை வந்தது.

புது டூ வீலர் வாங்கிய அன்று அவளை ஸ்கூல் கொண்டு விட வேண்டும் என்று அவளை கேட்ட போது ,
‘ நோ அம்மா என் பிரெண்ட்ஸ் எல்லோரும் பஸ்ல தான் வருவா. நான் அதுல போனா தான் எனக்கு ஜாலி ‘ ப்ளீஸ் என்று என்னை கெஞ்சியவள்.ஒரு நாள் கூட பஸ் தவிர வேறு வாகனத்தில் ஏற மறுப்பவள் ..இது என்ன இன்று இப்படி?. என்ன ஆச்சு இவளுக்கு.?

‘ரமேஷ் . எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு.பேசாம நான் ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டுடறேன்.’ என்ற என்னை பார்த்து என் கணவன் ‘ எல்லோருக்கும் குழந்தை மேல் பிரியம் உண்டு.டோன்ட் டர்ன் இட் இன்டு அன் அப்செஷன் . அவள் இன்னிக்கி ஏதோ பிரியப் படுகிறாள் என்றால் கூட்டிக் கொண்டு போ. எல்லாத்துக்கும் உள் அர்த்தம் தேடாதே ‘ என்று எனக்கு புத்தி கூறி விட்டுச் சென்றான்.

ஸ்கூல் செல்லும் வழிஎல்லாம் நான் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தேன். வெறுமே உம் கொட்டிக் கொண்டு வரும் இந்த பூனை குட்டி என் மகள் தானா என்று எனக்கு சந்தேகமே வந்து விட்டது..

அவளை ஸ்கூலில் இறக்கி விட்டு விட்டு வேலைக்குச் சென்றேன்..ஒன்றும் ஓடவில்லை. ஆனது ஆகட்டும் என்று 2 நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன்.

மாலையில் அவளுக்கு பிடித்த நூட்லஸ் செய்து வைத்து விட்டு பஸ் ஸ்டாப்பில் அவளை அழைத்து வர சென்றேன்.

பஸ்சில் இருந்து இறங்கும் போதே முகம் வெளிறி போய் இருந்தது. என்னை பார்த்ததும் ஓடி வந்து என்னை கட்டி கொண்டாள் . ஏதோ விஷயம் என்பது எனக்கு புரிந்தது. ஸ்கூலில் எதாவது பிரச்சனையா?

தாய்மையை போற்றும் எல்லோரையும் நிற்க வைத்து அடிக்க வேண்டும் போல இருந்தது..ஒரு தாய்க்கு தான் தெரியும் என்று ஈசி யாக எழுதி வைத்து விடுகிறார்கள்.எப்படி தெரியும்.?இது போன்ற தருணங்களில் ஒரு தாயாக தவறுகிறோமோ என்ற குற்ற உணர்ச்சி தவிர்க்க முடிவதில்லை. என் குழந்தை மனதில் என்ன இருக்கு என்பது அவள் சொல்லாமல் எனக்கு தெரிந்திருக்க வேண்டுமா?? நான் ஒரு நல்ல தாயா ?..
எண்ண அலைகள் மனதில் முட்டி மோதுவதை தவிர்க்க முடியவில்லை .

வீட்டிற்கு சென்று ரொம்ப கம்பெல் பண்ணித்தான் சாப்பிட வைக்க வேண்டி இருந்தது. ‘ வாடா செல்லம் இன்னிக்கி அம்மா உன் கூட ப்ளே பண்ண வரேன். ஸ்கெட் ஷூஸ் எடுத்துக்கோ ‘ என்றேன்.

‘ வேண்டாம் அம்மா நான் விளையாட போகலை’. சொல்லும் போதே கண்களில் நீர் முட்டியது.

வாசலில் காலிங் பெல் சத்தம் . சென்று கதவை திறந்தேன்..ஒரு குட்டி பட்டாம்பூச்சி கூட்டம் போல அபர்ணாவின் சினேஹித பட்டாளமே நின்றிருந்தது .’ ஏன் ஆண்டி அப்பு விளையாட வரலை?’ என்று கோரஸ் பாடியவர்களை உள்ளே அழைக்கும் முன் அபர்ணா ஓடிச் சென்று பெட் ரூமுக்குள் ஒளிந்து கொண்டாள் ‘ ‘அவளுக்கு உடம்பு சரி இல்லை. நாளைக்கு வருவாள்’. என்று அவர்களை அனுப்பி விட்டு உள்ளே சென்றேன்.

கட்டிலில் குப்புற கவிழ்ந்து கிடந்தாள் . வயிற்றில் ஒரு சங்கடம். மனது துடித்தது. மெதுவாக சென்று அவளிடம் சொன்னேன்.

‘கண்ணம்மா அம்மா உன்னோட பெஸ்ட் பிரெண்டு. நீ தானே சொல்வ. இப்போ என் கிட்ட என்னோமோ சொல்லணும் உனக்கு. நான் தப்பா நினைக்க மாட்டேண்டா . என் கிட்ட சொல்லாம யார் கிட்ட உன்னால சொல்ல முடியும்? லவ் யு டா செல்லம். நீ கஷ்டபடறத பார்த்தா எனக்குத் தாங்க முடியலைடா.சொல்லு என்ன ப்ராப்ளம் ??’

அவ்வளவு தான். மடை திறந்து கொட்டியது போல கண்ணில் இருந்து அருவியாக வழிந்தக் கண்ணீரை துடைக்க கூட முடியாமல் என்னை கட்டிக் கொண்டாள் .

‘அம்மா .. நீ என்னை திட்ட மாட்டியே? என்னை பாட் கிர்ல்னு சொல்லுவியா ?? என் பிரெட்ன்ஸ் எல்லாம் என் கூட பேச மாட்டாளா ??”

‘ப்ளீஸ் கண்ணம்மா .நான் உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேன்.யார் சொன்னா உன் பிரெண்டுஸ் எல்லாம் உன் கூட பேச மாட்டானு.? எதுவானாலும் என் கிட்ட சொல்லு ” என்றதும் திக்கித் திணறி சொல்ல தொடங்கினாள் .

‘ அம்மா நேத்திக்கி என்னோட பிரெண்டு ஷர்மிளா விளையாட வரவே இல்லை. நான் அவ வீட்டுக்குப் போய் அவள கூப்பிட போனேன். அவ வீட்ல அவ அண்ணா மட்டும் தான் இருந்தான் . ஷர்மிளா வெளில போயிருக்கா நீ வேணும்னா உள்ள வந்து விளையாடுன்னு சொன்னான். நான் வேண்டாம்னு சொன்னேன். அவன் சொன்னான் சரி உள்ள வா. உனக்கு ஒரு சாக்லட் கொடுக்கேறேன்னு . சாக்லட் வாங்கிண்டு வந்துடலாம்னு போனேன்..அப்போ…அப்போ..’

என் உயிரை கத்தியால் அறுத்திருந்தால் கூட எனக்கு அவ்வளவு வலி இருந்திருக்காது.

‘அவன் என்னை பேட் டச் பண்ணினான் அம்மா..நான் கத்தினேன் .உடனே அவன்..நீ இதை வெளில சொன்னா உங்க அம்மா உன்னை இனிமே யார் கூடவும் விளையாட விட மாட்டா . உன் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் நீ ரொம்ப பாட் கேர்ல்னு தெரிஞ்சுடும்.உன் கூட பஸ்ல யாரும் பேச மாட்டான்னு சொன்னான் அம்மா ”

என் ரத்த நாளங்கள் எல்லாம் உறைந்தது.ராஸ்கல்.10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் அவன். எங்கிருந்து அவனுக்கு இவ்வளவு வக்கிரம்? எனக்கு அவன் முக்கியம் இல்லை. காலம் காலமாக எது நடந்தாலும் பெண்களை ப்ளாக் மெயில் செய்யும் யுக்தி யார் சொல்லிக் கொடுக்கிறார்கள் ??
மனம் பின் நோக்கி நகர்ந்தது..
‘ நீ இப்போ எங்கேயும் போக வேண்டாம்’ அம்மா குரல் கண்டிப்பாக ஒலித்தது..
‘அம்மா …நான் எல்லா வேலையும் முடிச்சுட்டேன்.கொஞ்ச நேரம் தான் சுஜா கூட விளையாட வந்திருக்கா.’ கெஞ்சினேன்
‘ஒரு மண்ணும் வேண்டாம். உனக்கு என்னிக்கி ஒழுங்கா நடந்துக்க தெரியறதோ அன்னிக்கி போனா போறும்’.
இதற்கு என்னிடம் ஒரு பதிலும் இல்லை.’ நான் என்ன தப்பா நடந்துண்டேன்??’ அழுகை முட்டியது எனக்கு .வாசலில் எல்லோரும் ஓடும் சத்தம் கேட்டதில் கொள்ளவில்லை.நான் மட்டும் போக முடியாது.
‘ என்ன பண்ணினேன் சொல்லு?’ குரல் உரத்தது .
‘பண்ணின நீ சட்டியும் பானையும். போக கூடாதுன்னா கூடாது தான். ஆம்பிள்ளை பசங்க கூட ஆட்டம் போடாதேன்னு சொன்னா கேட்கறியா.?? அவ இவ வந்து உன்னை பத்தி ஆவலாதி சொல்லும் போது நேக்கு மானம் போறது. பொண்ணா இலட்சணமா தேமேன.உள்ளேயே இரு’ ‘’இல்லே நான் ஒண்ணு ம் பண்ணலே அவன் தான்…’ வாக்கியத்தை முடிக்கவில்லை நான் .’போறும் வாயை மூடு.’கதவைத் தாளிட்டு கொண்டு போய் விட்டாள் .
கையை காலை உதைத்து உருண்டு அழத் தொடங்கினேன். கொஞ்ச நேரம் பொறுத்து வெளியே வந்த அம்மா பளார் பளார் என்று முதுகில் நாலு சாத்து சாத்தி .. ‘ எங்கம்மா கிட்ட எதிர்ல நின்னு கூட நாங்க பேச மாட்டோம்.
நில்லுனா நிக்கணும் உக்காருன்னா உக்காரணும் .நீ என்னாடன்னா எல்லாத்துக்கும் கைகேயி வேஷம் போட்டு ஊரை கூட்டற . எல்லாம் உங்க அப்பா குடுக்குற இடம்.வரட்டும் இன்னிக்கி அந்த மனுஷன் ‘
என்றவாறே திரும்பவும் சமையல் அறைக்குள் சென்று விட்டாள் .

நேற்று நடந்தாற்போல் இருக்கு.
என் மகளை நான் சப்போர்ட் செய்யவில்லை என்றால் யார் செய்வார்கள்??
மனதில் ஒரு வைராக்கியத்துடன் எழுந்தேன்.
ஹிஸ்டரி வில் நாட் ரிபீட்

‘ கெட் அப் கண்ணம்மா . வா என் கூட . நன்னா புரிஞ்சுக்கோ.யு ஆர் அன் ஏஞ்சல் . யார் என்ன சொன்னாலும் நீ கவலை படாதே. தட் பாய் இஸ் எ க்ரூக் . உன் மேல ஒரு தப்பும் கிடையாது. நீ இன்னிக்கி விளையாட போகலைன்னா நீ அவனை பார்த்து பயபடறேன்னு அவனுக்கு தெரிஞ்சுடும்.அவன் ஜெயிக்க கூடாது.
அவனை பார்த்து நீ தைரியமா சொல்லணும். என் அம்மாவிற்கு உன்னை பத்தி தெரியும் இனிமே என் வம்புக்கு வந்தேன்னா போலீஸ் கிட்ட போய்டுவேன்னு.”

அவளுக்கு முகம் அலம்பி டிரஸ் பண்ணிக் கூடச்சென்றேன். ப்ளே ஏரியா வாசலில் நின்று அவளை உந்தித் தள்ளினேன்..தயங்கித் தயங்கி அவள் மெதுவாகச் சென்றாள். அவள் நண்பர் கூட்டம் அவளை பார்த்ததும் ஓடி வந்து சூழ்ந்துக் கொண்டது.

என் கண்கள் அந்தப் பையனை தேடியது. ஒரு பெஞ்சில் உக்கார்ந்திருந்தான்.’ அபர்ணா’ என்று குரல் கொடுத்து அவனை நோக்கி சைகை செய்தேன்.

அபர்ணா அவன் அருகில் சென்றாள் . அந்த சின்ன வண்ணத்து பூச்சி கையை ஆட்டி அவனிடம் பேசுவதை பார்க்கும் போது கண்ணில் நீர் கோர்த்து வழிந்தது.

அவள் பேச பேச அவன் கொஞ்சம் கொஞ்சமாக குறுகினான். அவன் கண்கள் தானாக என்னை நோக்கின. அவன் கண்களை நேராக ஒரு நிமிடம் பார்த்தேன்.

அவன் கண்ணில் கண்ட மிரட்சி எனக்கு ஒரு திருப்தியை கொடுத்தது. இது மட்டுமே என் பெண்ணை காப்பாற்றும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எந்த காலத்திலும் அவள் தன் தாயைத் துணையாகக் கொள்ள தவற மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது .

ஏனென்றால் நான் என் மகளுடைய உற்றத் தோழி.

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *