அந்த வருடத்தின் குளிர்காலம் கடுமையாக இருந்தது. பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே இருந்தது. மூடுபனிக்குள் மூழ்கியது போல் இருந்தது அந்த நகரம். மேகங்கள் எல்லாம் துண்டு துண்டுகளாகி பூமியில் விழுந்து விட்டது போல் ஆங்காங்கே சாலைகளில் கட்டிடங்கள் மேல் மரங்களின் மேல் வெண்பனிச் சிதறல்கள். அந்த நகரமே வெண் மயமாகக் காட்சி அளித்தது.
குளிர்காலத்தின் விடியல்கள் தாமதமாகிவிடுவது போலவே அன்றும் காலை பத்து மணிக்கு மேல்தான் சூரியன் மெல்ல எட்டிப் பார்த்தது. சுட்டெரிக்காத மிக மென்மையான சூரிய ஒளி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவத் தொடங்கியிருந்தது. சூழல் எப்படி இருந்தாலும் அதற்கேற்ப மனிதர்களின் வாழப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்டிவ் அந்த குளிரில் அவசர அவசரமாகவும் பரபரப்புடன் அலுவலகத்திற்குப் புறப்பட்டு கொண்டிருந்தான்.
அவனது அலுவலக கட்டிடம் இருபத்தி மூன்று மாடிகளைக் கொண்டிருந்தது . இருபத்தி மூன்றாவது மாடியில் தான் அவன் பணிபுரியும் அறையிலிருந்தது. அந்த அறைக்குள்ளே தினமும் 12 மணி நேரச் சிறை வாசம். கணினியை வெறித்துப் பார்த்து கண்கள் பூத்துப் போகும் இவையெல்லாம் அவனுக்கு வழக்கமாக இருந்ததாலும் எப்போதாவது ஜன்னல் வழியே தெரியும் வெளி உலகத்தைப் பார்க்கும் போது வெளி உலகம் எவ்வளவு சுதந்திரமாக என்று எண்ணத்தோன்றும் அவனுக்கும் ஒரு பெருமூச்சு வந்து போகும்.
நினைவு தெரிந்த நாள் முதலே அவன் தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்து வந்தவன். அவனது அப்பாவைப்பற்றி அம்மா எதுவும் சொன்னதில்லை. அவன் பிறந்த சில நாட்களிலேயே அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டு அவர் பிரிந்து சென்று விட்டார் என்கிற அளவில்மட்டுமே அவனுக்குத் தெரியும். எப்போது அவரைப்பற்றிக் கேட்டாலும் அவள் முகம் இறுக்கமாகி விடும்.
“அவரைப் பற்றி மட்டும் என்னிடம் எதுவும் கேட்காதே…
எந்தக் குறையும் இல்லாமல் உன்னை நான் வளர்த்து விட்டேன்.
பிரிந்து விட்ட பிறகு எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடு” என்பாள்.
அப்பாவின் நினைவுகள் எதுவும் அவனுக்கு இல்லை.
அவருடைய ஒரு புகைப்படம் மட்டும் வீட்டில் ஒரு பழைய பெட்டிக்குள் இருந்தது. அதில்தான் அவன் அவரைப் பார்த்திருக்கிறான். அவரது முகம் அவனது மனதுக்குள் பதிந்திருந்தது.
அவரிடமிருந்து ஜீவனாம்சம் வருகிறதா என்பதைக்கூட அம்மா சொல்வதில்லை. அம்மா பர்னிச்சர் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். தொடர்புகளே இல்லாது போயிருந்த நிலையில் தன் தந்தையை எப்போதாவது சந்திக்க வேண்டும் என்ற அவனது நிறைவேறாத ஆசை மட்டுமே அவனுக்குள் இருந்தது.
அவன் கல்லூரியில் படித்த காலத்தில் அவனது நண்பன் ராபர்ட் தன் தந்தை இரண்டு முறை விவாகரத்து செய்து கொண்டதாகச் சொன்னான். ராபர்டின் தந்தை தற்போது தனிமையில் ஜீவனாம்சங்களை வழங்குவதற்காகவே உழைத்துக் கொண்டிருந்தார் இவை எல்லாம் இங்கு சகஜம் என்றாலும் அவன் மட்டும் இவைகளிலருந்து கொஞ்சம் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருந்தான்.
இந்த மேற்கத்தியக் கலாச்சாரத்தில் சற்றே மாறுபட்ட மனோபாவம் அவனுக்குள் இருந்தது. அவன் படித்த ஒரு புத்தகத்தில் இந்தியா என்கிற பிரதேசம் பற்றி அறிந்திருந்தான். கொஞ்சம் பழமையான தேசம் என்றாலும் அங்கே இருக்கும் குடும்ப அமைப்பு அவனுக்குப் பிடித்திருந்தது. அதுவே அங்கு சமூகத்தின் வலுவான கட்டமைப்பாக உள்ளது பற்றியும் அறிந்திருந்தான். ஒரே துணையுடன் வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து விட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இருந்தான். அப்படி ஒரு துணையைத்தான் அவன் வாழ்வில் தேடிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு அப்படி ஒரு துணையும் கிடைத்துவிடும் என்றும் நம்பிக் கொண்டிருந்தான்.
இந்த சூழலில்தான் ஒருநாள் அவனது கல்லூரி தோழி லிண்டாவை ஒரு முறை ரயில் பயணத்தில் சந்தித்தான்.
“ஹாய் லிண்டா எப்படி இருக்கே?
வாட் எ சர்ப்ரைஸ். உன்னைச் சந்தித்தது.”
“ஐ யம் பைன். ஸ்டிவ் நீ எப்படி இருக்கே.”
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த இருவரும் கல்லூரியில் படித்த காலத்தைப் பற்றி உற்சாகமாக உரையாடினர்.
கல்லூரி தோழர்கள் நடுவில் கனவுக்கன்னியாக இருந்தவள் லிண்டா.. இவனுக்கும் அவளைப் பிடிக்கும் என்றாலும் காதல் இருந்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. அவனுடைய கல்லூரியில் படிக்கும் ஜோ அவளை உருகி உருகிக் காதலித்திருந்தான்.
இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தனர்
லிண்டா உன் கணவன் ஜோ எப்படி இருக்கான்…?
“சாரி. ஸ்டிவ். ஜோவுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை நிறையக் கருத்து வேறுபாடுகள். இரண்டே வருடத்தில் டைவர்ஸ் செய்து கொண்டோம்” என்றாள்.
எப்படியும் இனி அவள் ஒரு நிரந்தரமான துணையைத் தேடிக் கொண்டிருப்பாள் என்கிற நம்பிக்கையில் அவளிடம் கொஞ்சம் நெருக்கமாகப் பேசத் தொடங்கினான்.
“வாழ்க்கை முழுவதும் ஒரே துணையுடன் வாழ்வதைப் பற்றி நீ என்ன நினைக்கிற லிண்டா.”
லிண்டாவின் புருவங்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.
“எந்த ஒரு சூழ்நிலையிலும் தனி மனித உரிமை மற்றும் சுதந்திரம் இவற்றுக்கு மதிப்பளிக்கும் இருவரிடையே மட்டும்தான் இது சாத்தியம் இல்லென்னா ஒருத்தர ஒருத்தர் சகிச்சுக்கிட்டு வாழ வேண்டியிருக்கும். அந்த வாழ்க்கை நரகமாக இருக்கலாம். அப்படி ஒரு விஷயம் நடைமுறையில் சாத்தியமே இல்லைன்னு நினைக்கிறேன்.”
“லிண்டா…என்னைப் பொருத்தவரை வீடுன்னா வெறும் கான்கிரீட் கட்டிடமில்ல. மனுசங்க சேர்ந்து வாழுற இடம். குடும்பமென்பது கணவனும் மனைவியும் இணைந்து வாழ்ந்து குழந்தைகளை ஆளாக்கி வாழ்வில் நிறைவு அடைவது. இந்தியாவில அறுவது வயசு எண்பது வயசு வரை சேர்த்து வாழ்ந்தவங்க அதைக் கொண்டாடுவாங்களாம். உறவினர்களும் நண்பர்களும் அவங்களை வணங்குவதுண்டாம். மூத்த தம்பதிகள் மத்தவங்ஙளை ஆசிர்வாதம் பண்ணுவாங்களாம். என்ன ஒரு பண்பாடு. அப்படி ஒரு வாழ்க்கையை வாழனும் நினைக்கிறேன்…அப்படிப்பட்ட ஒரு துணையைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்.”
“யு கிரேசி மேன்”…என்றாள். சற்று நேரம் அவனையே விநோதமாகப் பார்த்தவள்…
“ஏய்…உன்னை மாதிரியே வினோதமான தோழி ஒருத்தி எனக்கு இருக்கா. கிளாரா எங்க கம்பெனியில் தான் வேலை பார்க்கிறா. சரியான பத்தாம்பசலி. ஒரு நாள் அவளை நான் உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒருவேளை நீங்க ரெண்டு பெரும் சந்திச்சு ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சிருந்தா திருமணம் செய்து கொள்ளலாம்” என்றாள்.
லிண்டாவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்ட பின் தன் அலுவலகத்திற்குச் சென்றான் ஸ்டிவ்.
சில வாரங்களுக்குப் பிறகு இரவில் தன் படுக்கையில் உறங்கப் போகும்முன் ஸ்டிவின் செல்பேசி சிணுங்கியது லிண்டாவிடமிருந்து அழைப்பு.
“ஹாய் ஸ்டிவ். உனது வாழ்க்கை துணையை சந்திக்கும் நாள் வந்துவிட்டது நண்பனே. நாளை தயாராக இரு. கிளாராவை சந்திப்பதற்கு ஸ்டிராபோர்டு மருத்துவமனைக்கு வந்திடு.”
வாட்….? மருத்துவமனைக்கா…?
என்ன சொல்ற லிண்டா…
“யா. லாராவின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஸ்டிராபோர்டில் அட்மிட் ஆகியிருக்கிறார். லாராவுக்கு அம்மா இல்ல. தாயார் இறந்து விட்ட நிலையில் அவதான் தன் தந்தையை பார்த்துக்கிட்டிருக்கா….” என்றாள்.
ஸ்டிவ் ஆச்சரியத்தில் உறைந்து போனான். இப்படி ஒரு துணைக்காகதானே அவன் காத்திருந்தான் தனக்கு பொருத்தமான, வாழ்க்கை முழுவதற்குமான ஒரு துணையைச் சந்திக்க நேரும் நாள் வந்துவிட்டதா. எப்படியும் அவளுக்கு தன்னைப் பிடிக்க வேண்டும், தன்னை நிராகரித்து விடக்கூடாது என்கிற ஆதங்கம் அவனுக்குள் அதிமானது. புத்தம் புது உடையில் பளிச்சென்று தெரிந்தவன் முடிந்தவரை தன்னை கொஞ்சம் அலங்காரப்படுத்திக் கொண்டு புறப்பட்டான்.
மருத்துவமனையில் கிளாராவின் தந்தை அட்மிட் செய்யப்பட்டிருந்த அறைக்குள் இருவரும் ஆர்வத்துடன் நுழைந்தனர். ஸ்டிவின் இதயத்துடிப்பு அதிகமாகியது. அறைக்குள் நுழைந்ததும் அவனது கண்களில் முதலில் பட்டது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கிளாராவின் தந்தை. அவரது முகத்தைப் பார்த்ததும் அவனுக்குள் அதிர்ச்சியில் ஆச்சரியமும் சொல்லொணா உணர்வுகளும் ஏற்பட்டன. அது அவன் புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருந்த அவனது தந்தையின் முகம்.