கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 7,884 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-19 

அத்தியாயம்-17

நானும் அவளும், உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்.
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்.
திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
-பாரதிதாசன்

கல்யாணி அம்மாளுக்கு வயது 38 தான். ஆனால், காண்பதற்கு வயதில் அதைவிட மிகவும் முதிர்ந்தவராகவே காட்சி அளித்தார்.தலையில் ஆங்காங்கே மின்னல கோடுகள் போன்ற நரை அப்போதே, தெரியத் தொடங்கி விட்டிருந்தது. அவரைப் பார்க்கும் போதே இளவயதில் மிகவும் அழகுள்ளவராக இருந்திருக்க வேண்டும் என்பது உடனே புரியும். அந்த அழகின் அடிச்சுவடுகள் இன்னமும் முழுமையாக மறையவில்லை என்றாலும், முகம் அககாலமான அளவிற்கு வயதான தாகத்தான் தெரிந்தது.

வழக்கமாக அணியும் வெண்ணிற சேலையை உடுத்தியிருந்தார், தலை மயிரைப் படித்து வாரி இருக்க இழுத்து கழுத்துக்கும் பின்னால் சிறிய கொண்டையாக முடித்திருத்தார். மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தார். அவருடைய முதன்மையான பொழுதுபோக்கு – படிப்பது, அதிகமாகப் படித்து படித்துக் கண்கள் பலவீனம் அடைந்து விட்டிருந்தன.

ஒல்லியான உடல். அவரும் உஷாவும் ஒரே உயரம். கஞ்சி போட்ட வெள்ளை நூல் சேலையின் மடிப்புக்கள் நேராக, சீராக இருந்தன, தலையின் ஒரு முடி கூட கலைந்திருக்கவில்லை ஒரு சன்யாசியாசினியைப் போல் காட்சி தந்தார். ஆனால் தோற்றத்தில் கம்பிரம் நிறைந்திருந்தது.

கல்யாணி அம்மாளின் முகத்தில் எப்போதுமே ஒரே விதமான கண்டிப்பான பாவம் தான் இருக்கும். உஷாவைக் கண்ட தும் அந்த முகத்தின் இறுக்கம் சற்றே நீங்கிற்று. கண்களில் லேசான மென்மை தோன்றியது. உஷாவை வரவேற்கும் வகையில் கல்யாணி அம்மா புன்னகைத்தார்.

அந்தப் புன்சிரிப்பைக் கண்டதுமே முன்பு எத்தனையோ முறை தோன்றிய அதே எண்ணம் இப்பொழுதும் உஷாவுக்குச் சட்டென்று மனத்தில் பளிச்சிட்டது. “அம்மா சிரிக்கும் போது எவ்வளவு அழகாகத் தெரிகிறார்? எத்தனை இளமையாகத் தெரிகிறார்! சிரிக்கும் போது அந்த முகமே முற்றிலும் மாறி விடுகிறதே! அம்மா அடிக்கடி, இன்னும் அதிகமாகச் சிரிக்கக் கூடாதா!”

ஆனால் கல்யாணி அம்மாள் சிரிக்க மாட்டார். யாரும் அவர் வாய் விட்டுச் சிரிக்கும் ஓசையை இதுவரையில் கேட்டிருக்கவில்லை – உஷா உள்பட. அந்தக் கண்டிப்பான முகத் தில் புன்முறுவல் தோன்றுவதே அரிது. அத்தி பூத்தது போன்ற அந்தப் புன்முறுவல்கள் உஷாவைக் கண்டபோது மட்டுமே தோன்றும். எப்போதாவது கல்யாணி அம்மா புன்முறுவினால் அந்த உஷாவுக்காகத்தான். அவளுக்காக மட்டுமே.

“அம்மா!”

“வாம்மா. எப்படி இருக்கே?”

“நீங்க எப்படி. இருக்கிங்கம்மா?”

“எப்பவும் போலத்தான். ரொம்ப அழகா தெரியறியே. குழந்தை.”

கல்யாணி அம்மாளின் கூர்மையான, புத்தி நுட்பம் நிறைந்த கண்கள், உஷாவை ஏற இறங்க அளந்தன.

‘குழந்தை என்றைக்குமே அழகுதான். ஆனால் இந்த முறை, ஏதோ பிரத்தியேகமான களையுடன் அவள் அங்கமெல்லாம் மின்னுவது போலத் தெரிகிறது. ஜெகத் ஜோதியாக ஜொலிக்கிறானே! என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு என்ன விசேஷமோ? ஏதோ அடக்கிக் கொள்ள முடியாத மகிழ்ச்சியை உள்ளே தேக்கி வைத்திருப்பவள் போலத் தெரிகிறாளே!’

“என்ன? ஏதாவது விசேஷமான நியூஸ் உண்டா? ரொம்ப உற்சாகமா இருக்கே போலிருக்கு?”

“ஆ… அதெல்லாம் ஒண்ணுமில்லே. நத்திங் ஸ்பெஷல்.”

“ஏய் உஷா! ஜாக்கிரதை! அம்மாவை ஏய்க்க முடியாது”. ஏதாவது மானசீக எக்ஸ்-ரே சக்தி உண்டா அம்மாவிடம்? என்னைக் கண்டவுடன் எப்படி பளிச்சென்று கேட்டுவிட்டார்! ஏதோ விஷயம் உண்டு என்பதை என்னைப் பார்த்தவுடன் யூகித்து விட்டாரே!

உள்ளே சென்று குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, பெட்டிகளைத் திறந்து துணிமணிகளை உள்ளே அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நேரமெல்லாம் “சொல்லலாமா? எப்படிச் சொல்வது?” என்ற எண்ணம் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. கல்லூரியைப் பற்றி, தோழியரைப் பற்றி, மற்ற சகல விஷயங்களைப் பற்றி தாயாரிடம் வளவளவென்று அளவளாவித் தள்ளினாளே ஓழிய முக்கியமாகச் சொல்ல வேண்டிய விஷயத்தைப் பற்றிப் பேச மட்டும் உஷாவுக்குத் துணிவு வரவில்லை.

இப்படியே இரண்டு நாட்கள் நகர்ந்தன. பல முறை “அம்மாவிடம் சொல்லிவிடலாம்” என்று நினைத்தும் கடைசி நிமிஷத்தில் உஷாவுக்கு வாய் அடைத்துப் போய் விட்டது. இதை எப்படிச் சொல்ல ஆரம்பிப்பது என்றே விளங்களில்லை.

ஆனால், இப்படியே தாமதித்துக் கொண்டு போனால் எப்படி? அம்மாவிடம் உண்மையைச் சொல்லித்தானே ஆகவேண்டும்? இன்னும் ஐந்து நாட்கள் கழித்து ராஜீவே நேரில் வந்து விடுவாரே! அவர் சற்றும் பொறுமையே இல்லாத மனிதர், விளையாட்டுக்காக அவளை மிரட்டியது போல், பிரிவின் துயரம் தாங்க மாட்டாது அவர் நிஜமாகவே குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக வந்து இறங்கி விட்டால்? அப்போது என்ன செய்லது?

ராஜீல் ஒரு விசித்திரப் பிறவி, அவசரப்பட்டு முன்கூட்டி வந்தாலும் வந்துவிடுவார்! அதற்குள் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லாவிட்டால் ஆபத்து? உடனே சொல்ல வேண்டும். ஆனால் எப்படி…

ஊருக்குத் திரும்பிய மூன்றாம் நாள் அதிகாலையில் எழுந்து, பல்தேய்த்து முகத்தை அலம்பி, உஷா வீட்டின் முன் வராந்தாவில் உட்கார்த்திருந்தாள். வயதான சமையற்காரி தங்கம் அங்கேயே உஷாவுக்குக் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். மேஜையின் மீது காப்பியை வைத்துவிட்டுத் தங்கம் உள்ளே சமையற்கட்டுக்குச் சென்று விட்டாள்.

தம்ளரை உஷா கையில் எடுத்து உதடுகளின் அருகே கொண்டு போனாள், சாதாரணமாக, உஷாவுக்குக் காப்பி என்றால் உயிர், அதிலும், தங்கம் போடும் ஸ்பெஷல் காப்பியை நினைத்து நினைத்து ஹாஸ்டலில் ஏங்குவாள். ஆனால், ஏனே, இன்று அந்த காப்பியின் நறுமணமே அவள் வயிற்றைக் குமட்டியது, அவளால் ஒரு சொட்டுக்கூட விழுங்க முடியவில்லை. திடீரென்று வயிற்றைப் பிரட்டியது.

அவசரமாகத் தம்ளரை மேஜையின் மீது வைத்துவிட்டு உஷா தனது தனி அறையினுள் இருந்த அட்டேச்ட் பாத்ரூமுக்கு வேகமாக ஓடினாள்.

சரியான நேரத்துக்குள் தான் போய் வாஷ் பேஸினிடம் சேர்ந்தாள். ஏதோ வலிப்பு உண்டானது போல், வயிற்றில் ஏற்பட்ட இழுப்புகளால் அவள் உடல் முழுதுமே இரண்டாக மடிந்து போக, வாஷ்பேஸின் மீது குனிந்து திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தாள்.

இழுப்புகள் ஓய்ந்தன. வாந்தி நின்றது. அதற்குள் வியர்வையால் உஷாவின் முகமெல்லாம் நனைந்து போயிருந்தது. குழாயைத் திறந்துவிட்டு வாஷ்பேஸினைச் சுத்தப் படுத்தினாள். வாயை நன்றாகக் கொப்பளித்து விட்டு, தண்ணீரை முகத்தின் மீது தெளித்துக் கொண்டாள். தண்ணீரின் குளிர்ச்சி அவளுக்குச் சற்றே தெம்பூட்டுவதாக இருந்தது.

வாஷ் பேஸின் பக்கத்தில் ஒரு ஸ்டேண்டில் டவல் தொங்கியது. அதை எடுக்கக் கையை நீட்டி உஷா திரும்பினாள் – அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

பாத்ரூம் கதவின் அருகே கல்யாணி நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் கத்தி முனைகளைப் போல் உஷாவைத் துளைத்துவிடும் ரீதியில் நோக்கின.

உஷா திக்கு முக்காடிப் போனாள். அம்மா எப்போது வந்தார்? எத்தனை நேரமாக கதவின் அருகே நின்று கொண்டிருந்தார்? கல்யாணி அங்கே வந்த கால் நடை ஓசையே கேட்கவில்லையே?

டவலை எடுத்து உஷா தனது முகத்தை ஒற்றிக் கொண்டாள். அறைக்குள் நுழைவதற்குக் கல்யாணியைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. மௌனமாகக் கல்யாணி அவளுக்கு வழி விட்டாள்.

சோர்வுடன் உஷா கட்டிலின் மீது உட்கார்ந்தாள்.

“ஓ நோ! எல்லாமே தவறான முறையில் போய்க் கொண்டிருக்கிறதே! என் ரகசியத்தை அம்மா இந்த விதத்திலா அறிய வேண்டும்? அய்யோ? இத்தனை நாட்கள் அனாவசியமாகத் தாமதிக்காமல் வந்த உடனே நானே அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லியிருந்தால், இப்போது இந்தச்சங்கடமான நிலைமையை எதிர் நோக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே!”

காலதாமதமாக இப்பொழுது வருத்தப்பட்டு என்ன பயன்? வெடிக்கப் போகும் பூகம்பத்தைச் சமாளிக்க உஷா தன்னைத் தானே மானசீகமாக ஆயத்தப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

நீடித்துக் கொண்டே போன மௌனத்தை முதலில் கலைத்தது கல்யாணி.

“பேசாமலே உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்!”

அம்மாவின் குரலில் எத்தனை கடுமை!

உஷா ஒன்றும் சொல்லவில்லை

“பதில் சொல்லு!” அம்மாவின் குரலில் கடுமை அதிகரித்துக் கொண்டே போயிற்று.

“வாந்தி வந்தது.”

“அதை நானும் பார்த்தேன்! சாதாரண வாந்தியா, இல்லை மசக்கையினாலே வந்ததா? இது மார்னிங் ஸிக்நெஸ் தானே?” கல்யாணியின் குரல் சாட்டையடி போல ஒலித்தது.

“அம்மா, ப்ளீஸ்! இதை ஒரு பெரிய விவகாரம் ஆக்க வேண்டம். நானே சொல்லலாம்னு தான் இருந்தேன். நான் ஊருக்கு வந்த உடனேயே சொல்லாமே இவ்வளவு தூரம் தள்ளிப் போட்டது என் தவறு! அம்மா, என்னை நம்புங்க. நான் உங்ககிட்ட இருந்து எதையும் மறைக்கணும்னு நினைக்கலை.”

“எதை மறைக்க நினைக்கல்லை? முதல்லே இதுக்குப் பதில் சொல்லு. கர்ப்பமா இருக்கியா?”

“அம்மா….. நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கே….”

“கர்ப்பமா இருக்கியா?”

நிதானத்தோடு, பார்வையில் தெளிவோடு, சற்றே எதிர்க்கும் தன்மையோடு உஷா கல்யாணியை தலை நிமிர்ந்து நோக்கினாள்.

“ஆமாம்.” அவ்வளவேதான். எளிமையான ஒரே வார்த்தையில் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டாள்.

“என்ன! அடி…. அடிப் பாவி!” கல்யாணிக்கு ஆத்திரம் தாளவில்லை. “என்ன நெஞ்சழுத்தம்டீ உனக்கு! இவ்வளவு தைரியமா. இவ்வளவு, சர்வ சாதாரணமா ஆமாம்னு சொல்றியா! சே! உனக்கு வெட்கமே கிடையாதா?”

“இல்லைம்மா. என்ளைப் பொறுத்தவரைக்கும் இதிலே வெட்கப்படறதுக்கு எதுவுமே இல்லைன்னுதான் நினைக்கிறேன். என் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான மனிதரைச் சந்தித்தேன். அவரோட பழகினேன். அவரும் என் மேலே அளவு கடந்த அன்பும் மதிப்பும் வச்சிருக்கார். என்னை உடனே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறார். என் கூடவே ஊருக்கு வந்து அவரே உங்க அனுமதியைக் கேட்கிறதாகச் சொன்னார். நான் தான் அவரைத் தடுத்தேன். ஒரு வாரம் கழிச்சு வாங்கன்னு சொன்னேன். இதுக்காகத்தாம்மா முதல்லே நானே உங்ககிட்ட எல்லாத்தையும் விவரமா, தனியா சொல்லணும்னு…”

”ஆஹா! அம்மா மேலே என்ன பக்தி! என்ன கருணை! இதுக்கு நான் நன்றி சொல்லணுமா?” கல்யாணி பரிகாசமான வார்த்தைகனால் சவுக்கடி கொடுத்தாள், “என் அனுமதி இல்லாம இவ்வளவு தூரத்துக்குப் போன பிறகு, இனிமே என்னைக் கேட்டு என்ன ஆகவேண்டியிருக்கு? என்னிடம் சொல்லாமலே கல்யாணத்தையும் ஒரு வழியா முடிச்சிருக்கலாமே? இப்ப எதுக்காக இத்தனை சிரமம் எடுத்துக்கிட்டு ஊருக்கு வந்தே?”

“அம்மா, ப்ளீஸ்! இதை ஒரு மெலோட்ராமா ஆக்காதீங்க! அம்மா. நான் செஞ்சது தப்புதான். ஒத்துக்கறேன். நான் நடந்துக்கிட்ட விதம் சரியில்லைதான். ஆனா… அம்மா… நான் வேணும்னு திட்டம் போட்டு இப்படி நடந்ததுக்கல்லை… அது எப்படியோ நடந்து போச்சு…” என்றாள் உஷா.

அத்தியாயம் 18

அடிவா னத்தில் தொலைதூ ரத்தில்
அவன் குரல் கேட்கிறது
முடிவைக் காண முடியாப் புதிர்கள்
முடிந்து மடிகிறது!
-மு.மேத்தா ‘கண்ணீர்ப் பூக்கள்’

“ஆமாம்! எப்படியோ நடந்து போச்சு! இப்படிப் பேச வெட்கமா இல்லை? இதுவும் ஒரு சாக்கா? உன்னை எப்படி யெல்லாம் வளர்த்தேன்! எத்தனை ஒழுங்கா, அருமையா வளர்த்தேன்! என்ன பிரயோஜனம்? எல்லாத்தையும் மறந்து, ஒழுக்கத்தைத் தூக்கிக் குப்பையிலே எறிஞ்சிட்டியே!” என்று இரைந்தாள் கல்யாணி.

“அம்மா! போதும் நிறுத்துங்க” உஷா கொதித்து எழுந்தாள், “இந்த மாதிரி வார்த்தைகளை யெல்லாம் பேசாதீங்க! ஓர் ஆணும், பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறதிலே என்ன குற்றம் கண்டுட்டீங்க? அவர் என்னைக் கெடுத்துட்டு நிர்க்கதியாத் தவிக்க விடல்லையே? என்னை ஊரறிய உலகம் அறியக் கல்யாணம் செய்துக்கப் போறார். என் வயத்திலே வளரும் குழந்தையைத் தன்னுடையதுன்னு பகிரங்கமா, பெருமையா ஏத்துக்கப் போறார். அப்புறம் என்னம்மா?”

“இதுக்காகத்தான் காலேஜ் படிப்புக்கு மெட்ராஸுக்கு அனுப்பி வைக்கணும்னு அடம் பிடிச்சியா?”கோபமாகக் கேட்டாள் கல்யாணி.

“ஏம்மா இப்படிக் குத்தலாப் பேசறீங்க? இப்படி நடக்கும்னு நான் மட்டும் எதிர்பார்த்தேனா? அவரைத் தற்செயலா சந்தித்தேன்… அவ்வளவு நான்…”

“யார் அந்த ‘அவர்'”

“படிச்சவர், பணக்காரர், அழகானவர். எனக்கு வரப்போகும் கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்கணும்னு நீங்க விரும்பி இருப்பீங்களோ, அத்தனையும் அவரிடம் இருக்கு.ஆனா…”

“ஆனா என்ன?”

“என்னை விட வயசிலே ரொம்ப மூத்தவர், அவருக்கு நாற்பதுக்கு மேலே ஆச்சு…”

கல்யாணியால் இதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஆவேசமாக அவள் ஏதோ சொல்ல முற்பட்ட போது உஷா குறுக்கிட்டாள்.

“அம்மா! நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும், என்ன சொல்வி இப்ப என்ன பிரயோசனம்? அவர் குழந்தையை என் வயித்திலே சுமந்துக்கிட்டு இருக்கேன். அப்படியிருக்க, அவர் வயசைப் பத்தி இப்ப விவாதிக்கிறதிலே ஏதாவது அர்த்தம் இருக்கா? நீங்களே யோசிச்சுச் சொல்லுங்க.”

தர்க்க சாஸ்திர ரீதியில் உஷா கூறிய வார்த்தைகளின் நியாயத்தைக் கல்யாணியால் மறுக்க முடியவில்லை. மனித சக்திக்கு அப்பாற்பட்ட அளவில் பெரும் பிரயத்தனப்பட்டு, தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்கிக் கொண்டாள். ஆனது ஆகிவிட்டது. இனி மேல் ஆவேசமாகக் கூச்சல் போடுவதாலும். உஷாவைத் திட்டுவதாலும் என்ன பயன்?

“யார் இந்த மனுஷன்? அவர் பேரென்ன? எங்கே இருக்கார்? என்ன செய்யறார்?” என்று கேட்டாள் கல்யாணி.


உஷா தனது இரு கரங்களையும் இணைத்து இறுக்கிக் கொண்டாள். இது மற்றுமொரு சங்கடம் நிறைந்த பிரச்னை. இதனை வெகு ஜாக்கிரதையாக, நாசூக்காகக் கையாள வேண்டும். ”அம்மா, அவருடைய தொழிலைப் பத்திச் சொன்னா, நிச்சயமா அது உங்களுக்குப் பிடிக்காது. எனக்குத் தெரியும். ஆனாலும் ப்ளீஸ், நான் சொல்லப் போறதை கேட்டு ஆத்திரப்படாதீங்க. மறுபடியும் கோபமாச் சத்தம் போடாதீங்க…”

“ம்…ம்….சரி, சரி…!” நருக்கென்று “கல்யாணி குறுக்கிட்டாள். ”சுத்தி வளைச்சது போதும். விஷயத்துக்கு வா. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு.”

”அம்மா…. அவர் பெயர்… ராஜீவ் குமார்.. வந்து… வந்து…. அவர்தான்.. பிரபல சினிமா நடிகர் ராஜீவ் குமார்!” தயங்கித் தயங்கி உஷா இந்த வார்த்தைகளை வெளிக் கொணர்ந்த நேரம், அவளால் கல்யாணியின் பார்வையைச் சந்திக்க முடியவில்லை. தன் பாதங்களை நோக்கியபடி அவள் உடுத்தியிருந்த நைலக்ஸ் சேலையின் முன்றானையை விரல்களுக்கு மத்தியில் மடித்து, கசக்கி, நசுக்கி, பிழித்து எடுத்து விட்டாள்.

நிசப்தம் நீடித்துக் கொண்டே போயிற்று. உள் தயக்கத்துடன் உஷா தனது கண்களை உயர்த்திக் கல்யாணியைப் பார்த்தாள்.

”அம்மா, என்னம்மா ஆச்சு!”

உஷா திக்குமுக்காடிப் போனாள். கல்யாணியின் முகமெல்லாம் வெளுத்துப்போய் இருந்தது. அவள் முகத்தில் எமனே காட்சி தந்தான். அவள் கண்களில் தெரிந்த பாவனை உஷாவுக்குத் திகிலூட்டுவதாக இருந்தது. பயந்து நடுங்கிப் போனாள். தனது ஆயுட் காலத்தில் கல்யாணியின் இந்தத் தோற்றத்தை உஷா கண்டிருக்கவில்லை.

தற்காலிகமாகக் கல்யாணி பேசும் சக்தியை இழந்து விட்டிருந்தாள். திடீரென அவள் கால்கள் தடுமாறின. மடிந்துபோய் விட்டன, ஓடிச் சென்று உஷா அவளைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் நிச்சயமாகக் கல்யாணி அப்படியே நின்ற இடத்திலேயே வீழ்த்தப்பட்ட மரம் போல் மடிந்து கீழே விழுந்திருப்பாள்.

உஷா பதறிப்போய் விட்டாள். “அம்மா! அம்மா! என்னம்மா என்ன ஆச்சு உங்களுக்கு? உடம்பு சரியில்லையா?”

கைத் தாங்கலாசுக் கல்யாணியைக் கட்டில்வரை மெதுவாக நடத்திச் சென்று, உஷா தனது தாயாரை அதன்மீது படுக்கச் செய்தாள், துணியால் செய்த உயிரற்ற பொம்மையைப் போல் கல்யாணி தெம்பில்லாமல் தலையனை மீது சாய்ந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன். மயக்கம் அடைந்து, சுய நினைவை இழந்திருந்த மாதிரி தெரிந்தது.

உஷா பாத்ருமுக்கு ஓடிச் சென்று அவசரமாக வாஷ்பேஸின் குழாயிலிருந்து ஒரு தம்ளரில் தண்ணீர் பிடித்து வந்து, கல்யாணியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள்.

நிதானமாகக் கல்யாணி கண்களைத் திறந்தாள். பதற்றத்துடன் உஷா அவளையே உற்று நோக்குவதைப் பார்த்தாள்.

“அம்மா! என்னம்மா உடம்புக்கு பழனி மாமாவை அனுப்பி உடனே டாக்டரை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லட்டுமா?” என்று அக்கறையுடன் விசாரித்தாள் உஷா.

‘எது வந்தாலும் எத்தகைய சோதனை உண்டானாலும் எதற்கும் மனம் தளராத அம்மாவா இப்படிக் கதி கலங்கி உணர்ச்சி வயப்பட்டு விழுந்து கிடக்கிறாள்? அதிலும் எதற்கு? நான் ஒரு சினிமா நடிகரை மணக்கப் போகிறேன் என்று அறிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியா இது? நோ, நோ! அப்படி இருக்க முடியாது. நான் சொன்ன செய்திக்கு இது அளவுக்கு மீறிய ரியாக்ஷனாக இருக்கிறதே! அதனால் இருக்க முடியாது. பின்பு அம்மா ஏன் இப்படி ஆகிவிட்டார்? மயக்கம் போட்டு விழுந்ததற்கும், பிரேதக் களைப்பட்ட வெளுத்துப்போன இந்த முகத்துக்கும் என்ன காரணம்? ஒருவேளை அம்மா ஏதாவது கடுமையான நோய்வாய்ப்பட்டு இருக்கிறாரா? இதை என்னிடமிருந்து மறைத்து வைத்து விட்டாளா? என் மனத்தைச் சலனப்படுத்தக் கூடாது என்பதற்காக அம்மாவே வேலைக்காரர்களிடம் அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லக் கூடாது என்று கட்டளை இட்டிருப்பாளா? இருதய நோயாக இருக்குமோ?

‘இப்போதே பழனி மாமாவைக் காரில் சென்று உடனே டாக்டரை அழைத்து வரச் சொல்கிறேன்!’ என்று மனத்துக்குள் நிச்சயித்துக் கொண்டு உஷா அறையை விட்டு வெளியேறத் திரும்பினாள்.

எங்கிருந்துதான் கல்யாணிக்கு அத்தனை சக்தி வந்ததோ! போகத் திரும்பிய உஷாவைச் சடாரென்று கையைப்பற்றிக் கொண்டு தடுத்து நிறுத்தினாள்.

“வே…வே.. வேண்டாம். டா..டாக் .. டாக்டரைக்… கூ… கூப்பிடாதே!” கல்யாணியின் குரல் மிகவும் தாழ்ந்து, கரகரத்துப் போயிருந்தது. எங்கோ கிணற்றடியிலிருந்து மெல்லியதாக வெளி வருவது போல் தோன்றியது.

“ஒண்ணுமில்லை.. சில நிமிஷங்களிலே சரியாயிடும்… குடிக்க… கொஞ்சம் தண்ணி.”

சமையற்கட்டுக்கு விரைந்து உஷா ஒரு தம்ளரில் குடிநீரைக் கொண்டு வந்தாள். கல்யாணியின் அருகில் அமர்ந்து, அவள் தோள்களுக்குப் பின் ஆதரவாகக் கை கொடுத்து, மற்றொரு கையால் தம்ளரைக் கல்யாணியின் உதடுகளுக்கு அருகே ஏந்தினாள் உஷா. சிரமப்பட்டுத் தலையைச் சற்றே உயர்த்திக் கல்யாணி ஒரு வாய் தண்ணீரை அருந்தினாள். போதும் என்றாற்போல் தன் கையால் தம்ளரைத் தள்ளிவிட்டு மீண்டும் பலவீனமாய்ப் பின்னுக்குச் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

“இப்போ எப்படி அம்மா இருக்கு? கொஞ்சம் தேவலையா?”

கண்களை மூடியவாறே ஆமாம் என்பது போல் கல்யாணி லேசாகத் தலையை அசைத்தாள். கண்களைத் திறக்காமலேயே, திடீரென்று “அவர் பெயர் என்னன்னு சொன்னே? ராஜீவ் குமாரா?” என்று கல்யாணி கேட்டாள்.

“ஆமாம்மா”

“அவருடைய போட்டோ ஏதாவது உன்கிட்டே இருக்கா?”

“இருக்கும்மா.”

“அதைக் காட்டு பார்க்கலாம்.”

உஷா தனது அலமாரியைத் திறந்து புடவைகள் பலவற்றின் அடியில் பத்திரமாக அவள் ஒளித்து வைத்திருந்த கவர் ஒன்றினை வெளியே இழுத்தாள். அதிலிருந்து ராஜீவ் அவளுக்கு அளித்திருந்த புகைப்படத்தை வெளியே எடுத்தாள். புகைப்படத்தின் அடியிலிருந்த வெற்றிடத்தில் “To my only love-From your own Rajiv” என்று அவன் கைப்பட எழுதியிருந்தான்.

ராஜீவின் புகைப்படத்தை உஷா கல்யாணியிடம் கொடுத்தாள்.

வெகுநேரம் கல்யாணி அந்தப் புகைப்படத்தை மௌனமாக உற்றுப் பார்த்தாள். பின்பு அதை உஷாவிடமே திருப்பிக் கொடுத்தாள். தன்னிடம் போட்டோவை நீட்டிய பொழுது கல்யாணியின் கை நடுங்குவதை உஷா கவனித்தாள்.

இதுவும் விந்தையான விஷயமே! எதற்கும் அசைந்து கொடுக்காத இரும்பு நெஞ்சம் படைத்த கல்யாணியின் கரம் நடுங்குவதா, உதறுவதா!

திடீரென்று கல்யாணி தனது இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக்கொண்டாள். வெகு நேரம் அப்படியே இருந்தாள். அறையில் நிலவிய நிசப்தம், அணு குண்டு வெடிக்கப்போகுமுன் நிலவும் பயங்கர ஓசையை எதிர்நோக்கும் மனோ நிலையை உண்டாக்குவதாக இருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கல்யாணி ஒரு மிக முக்கியமான தீர்மானத்துக்கு வந்த தோரணையில், முகத்திலிருந்து கைகளை அகற்றி, நிமிர்ந்து உட்கார்ந்தாள். வேண்டுமென்றே தனது பார்வையை உஷா மீது பட விடாமல். அவள் விழிகளைச் சந்திக்க முடியாமல், வேறு எங்கோ பார்த்தபடி, உயிரே இல்லாத, தெம்பே இல்லாத வறண்டு போன குரலில் கல்யாணி பேசினாள்.

“நீ கர்ப்பமா இருக்கிறது வேறு யாருக்காவது தெரியுமா?”

”தெரியாது.”

“சரி உஷா, இதைப் பத்தி யார்கிட்டேயும் பேசாதே, உடனே அபார்ஷன் செய்தாகணும். நானே ஒரு நல்ல டாக்டர்கிட்ட ரகசியமா ஏற்பாடு பண்றேன். நீ இந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. இந்தக் குழந்தையைப் பெத்துக்கக் கூடாது.”

“அம்மா!” உஷா பேராச்சரியமடைந்த நிலையில் ஒரு கணம் பிரமிப்பில் வாய் அடைத்துப் போனாள். சீக்கிரமே தன்னைச் சமாளித்துக் கொண்டாள். “அம்மா! நீங்களா இப்படி யோசனை சொல்றீங்க? என்ன அக்கிரமம் இது! நான் அபார்ஷன் செய்து கொள்ள மாட்டேன். எனக்கு இந்தக் குழந்தை வேணும்! நான் ராஜீவை உண்மையா நேசிக்கிறேன். அவரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!”

“முடியாது.” அதே ஜீவனற்ற, உயிரற்றுப்போன குரலில் கல்யாணி பேசினாள். “நீ அவரைக் கல்யாணம் செய்துக்க முடியாது.”

“ஏன் முடியாது? உங்க அனுமதியைக் கேட்டுப் பெற வந்ததனாவேதானே இப்படி யெல்லாம் உங்களாலே பேசமுடியுது? உங்களைக் கேட்காம ரகசியமா அவரை நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருந்தா அப்போ என்ன பண்ணியிருப்பீங்க? இப்பவும் சொல்றேன். உங்களாலே என்னைத் தடுத்து நிறுத்த முடியாது! எனக்கு வயசு பதினெட்டு ஆச்சு! சட்டப்படி யாராலும் இந்தக் கல்யாணத்தைத் தடுக்க முடியாது!”

“ஐயோ! உஷா!” – தாள முடியாத வேதனையில் தவித்துத் துடிப்பவளைப்போல ஒலித்தது கல்யாணியின் குரல். இதற்கு மேல் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவளாக கல்யாணி திரும்பி உஷாவை நேருக்கு நேர் பார்த்தாள். அந்தப் பார்வையில் அதிர்ச்சி, திகில், கெஞ்சல், துக்கம் – எல்லாமே கலந்திருந்தது. “உஷா, நான் சொல்றதைக் கேளும்மா குழந்தை! இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது! இந்தக் கல்யாணம் நடக்கவே கூடாது!”

புத்தி ஸ்வாதீனமற்ற வெறி பிடித்தவள் போல் கல்யாணியின் கண்கள் இயற்கைக்கு ஒவ்வாத வகையில் அதீதமான பிரகாசத்துடன் பளிச்சிட்டது.

“ஏன் நடக்கக் கூடாது?” உஷா கடுமையான ரீதியில் கேட்டாள்.

“உஷா, உன்னை மன்றாடிக் கேட்கிறேன்! காரணத்தைக் கேட்காதே! என்னை வற்புறுத்தாதே! சொல்ல வைக்காதே! ஏம்மா, குழந்தை, நான் உன்னைப் பெத்த அம்மா இல்லையா? உனக்காகவே இத்தனை வருஷமா உயிர் வாழ்த்தவடீ நான்! சரியான காரணம் இல்லாமே நான் உன் விருப்பத்துக்குத் தடையா நிற்பேனா? என்மேலே நம்பிக்கை வை! அம்மா எது சொன்னாலும் நல்லதுக்குத்தான் சொல்றன்னு நினைச்சுக்கோ!”

“என்னை மன்னிச்சுடும்மா. இது சாதாரண விஷயமில்லே. என் வாழ்க்கைப் பிரச்னை. காரணம் தெரியாமல் கண்மூடித்தனமாக நீங்க சொல்றதை என்னாலே பின் பற்ற முடியாது. ராஜீவை நான் கல்யாணம் செய்துக்கிறதுலே உங்க உண்மையான ஆட்சேபனை என்ன? ஏன் இந்தக் கல்யாணம் நடக்கவே கூடாதுன்னு இவ்வளவு பிடிவாதமாகச் சொல்றீங்க? என்ன காரணம்?”

கல்யாணி திடீரென்று ஒரு முடிவுக்கு வத்தாள். சடாரென்று எழுந்து நின்று உஷாவின் கண்களுக்கு நேராக விழித்தாள். ஒரு நீண்ட மூச்சை உள்ளுக்குள் சுவாசித்துக் கொண்டாள்.

”சரிடி சொல்றேன், சொல்றேன்! உண்மை தெரிஞ்சா அந்த வேதனையை, அந்த அதிர்ச்சியை உன்னாலே தாங்க முடியாதேன்னு அதிலிருந்து உன்னைக் காப்பாத்த நினைச்சேன்! ஆனா நான் எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் நீ பிடிவாதமாக விட மாட்டேங்கறே! உண்மையைக் கேட்டுக்கோ! வேதனையை நல்லா அனுபவி!”

மேலும் தொடர முடியாமல் கல்யாணி தடுமாறினாள்.

அத்தியாயம் 19

They are all gone into the world of light,
And I alone sit lingering here;
Their very memory is fair and bright,
And my sad thoughts doth clear.
-Henry Vaughan – 1622-1695

உஷாவின் தீட்சண்யமான தூண்டுதலுக்கு முன், கல்யாணி சகிப்புத் தன்மையின் எல்லையைக் கடந்து விரட்டப்பட்டு, சுய கட்டுப் பாட்டை முற்றிலும் இழந்தாள்.

“ஏன்னா… ஏன்னா… அவர் உன் அப்பாடீ! உன்னைப் பெத்த தகப்பனாரிடீ!”

உரத்த குரலில் இப்படிக் கத்திவிட்டு கல்யாணி முழுமையாக உடைந்து போனாள். கட்டிலின் மீது விழுந்து, அடிவயிற்றிலிருந்து எழும்பி வந்த கதறல்களால் உடல் முழுதும் அதிர, விம்மி, விம்மி அழத் தொடங்கினாள்.

சிலை போல உஷா அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். ஒரு கணம் உலகமே நின்றுவிட்ட மாதிரி ஒரு பிரமை உண்டாகியது. ஒரு வினாடி அவள் மூச்சே நின்று விடும் போலிருந்தது.

இந்தப் பெருத்த அதிர்ச்சியை ஒரேயடியாக அவளால் உட்கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

உஷாவின் குரல் வெளிவந்ததும், யாரோ அவள் கழுத்தை நெரித்துப் பிடித்திருந்த மாதிரி அவள் குரல் சங்கடமாக ஒளிந்தது. “அம்மா…இப்ப நீங்க சொன்னீங்களே… அது பொய்தானே? உண்மையில்லைன்னு சொல்லுங்கம்மா! ராஜீவைக் கண்டால் உங்களுக்கு ஆகாது… அவர் மேலே உங்களுக்கு ஏதோ வெறுப்பு… எப்படியாவது அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிறதைத் தடுத்து நிறுத்தணுங்கறதுக்காக இப்படி ஒரு குரூரமான பொய்யைச் சொன்னீங்க… அப்படித்தானே? சொல்லுங்கம்மா…நீங்க இப்பச் சொன்னது பொய்தானே?” பரிதாபமாகக் கெஞ்சிக் கேட்டாள் உஷா.

“இல்லை உஷா: இப்படிப்பட்ட விஷயத்திலே பொய் சொல்லுவேன்னு நம்பறியா? இது பொய் இல்லைம்மா. உண்மை.”

“ஆனா, இது எப்படி உண்மையா இருக்க முடியும்?” – உரத்த குரலில் கதறினாள் உஷா. “எங்க அப்பா செத்துப் போயிட்டார்னு நீங்கதானே சொன்னீங்க! நான் பிறந்த சில மாதங்களுக்குள்ளே அவர் இறந்து போயிட்டதாகச் சொன்னீங்களே? எங்க அப்பா உயிரோட இருக்காருன்னா? நீங்க ஏன் விதவைக் கோலத்தில் இருக்கீங்க. எனக்கு ஒண்ணுமே புரியலையே! அப்படீன்னா நீங்க என்னைப் பெத்த அம்மா இல்லையா? வேறு ஒரு தாய்க்குப் பிறந்தவளா நான்?”

பெருமூச்சு இரைத்துக் கல்யாணி தனது தலையை அசைத்தாள். “இல்லை உஷா, நீ எனக்குப் பிறந்தவள்தான்”.

“ஆனா… அவர் மனைவியின் பெயர் கமலான்னு சொன்னாரே…”

“என் உண்மையான பெயர் கமலா. இருபது வருடங்களுக்கு முன்னாலே அவரைக் கல்யாணம் செய்துக்கிட்டேன். அப்புறமா அவரை விவாகரத்துச் செய்துட்டேன், விவாகரத்துக்கு அப்புறம், சட்டப்பூர்வமா என் பெயரைக் கல்யாணின்னு மாத்திக்கிட்டேன்.”

“ஆனா….ஆனா… பள்ளிக்கூடத்திலேயும், காலேஜ்லேயும் என்னை அட்மிட் பண்ணும் போது எங்க அப்பாவுடைய பெயர் பிரகாஷ்னுதானே கொடுத்திருக்கீங்க….” அடித்துக்கொண்டு போகும் ஆழமான வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவன், ஒரு சிறு துரும்பு அகப்பட்டால் கூட, அதனால் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்ற பைத்தியக்காரத்தனமான ஆசையில், அதனைப் பற்றிக் கொள்வது போல், உஷா உண்மையை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாமல் இப்படிக் கேட்டாள்.

“அவருடைய உண்மையான பெயர் பிரகாஷ், நடிகர் ஆனதும் அவர் வைச்சுக்கிட்ட பெயர்தான் ராஜீவ் குமார்”.

உஷாவின் தலை சுற்றியது. அவளிடம் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அத்தனை விவரமாக எடுத்துக் கூறிய ராஜீவ், தனது உண்மையான பெயர் பிரகாஷ் என்பதை மட்டும் சொல்ல மறந்து விட்டாரே! சொல்லியிருந்தால் மட்டும். இந்தப் பயங்கரமான உண்மையை அவளால் எப்படி யூகித்திருக்க முடியும்? உலகில் ஆயிரம் பிரகாஷ்கள் இல்லையா?

“அம்மா! எனக்கு ஒண்ணுமே விளங்கலை! அது உண்மையானா, எங்க அப்பா இறந்து போயிட்டதாக ஏன் எல்லோர் கிட்டேயும் சொன்னீங்க? இத்தனை வருஷங்களாக ஏன் விதவையா வேஷம் போட்டீங்க? என்னைப் பெத்த அப்பா உயிரோட தான் இருக்கார்ன்னு ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை?”

“உஷா… நான் உனக்குப் பெரிய அநீதி இழைச்சுட்டேன். மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துட்டேன். அத்தனை வருஷங்களுக்கு முன்னாலே நான் எடுத்த முடிவுக்கு இன்னைக்கு இப்படியொரு விளைவு உண்டாகும்னு என்னாலே எதிர்பார்க்க முடிஞ்சிருந்தா நான் அப்படி நடந்துக்கிட்டே இருந்திருக்க மாட்டேன். ஆனா… இப்படியெல்லாம் நடக்கும்னு நான் கனவிலேயும் நினைச்சிருக்க முடியுமா?”

தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள் கல்யாணி. ராஜீவைப் பிரிந்து கிராமம் திரும்பும்வரை. எல்லாமே ஏற்கனவே ராஜீவ் உஷாவிடம் சொல்லியிருந்த அதே விவரங்களைத்தான் சொன்னாள். அதெல்லாம் முன்பே உஷாவுக்குத் தெரிந்த விவரங்கள்தான். ஆனால் அதன் பிறகு…

“விவாகரத்துக் கோரி கோர்ட்டிலே விண்ணப்பிக்கும்படி, என் வக்கீல் கிட்டச் சொன்னேன். கிராமத்துக்குத் திரும்பின பிறகு தான், நான் கர்ப்பமாயிருந்தது எனக்கே தெரிய வந்தது. இருந்தாலும் நான் என் முடிவை மாத்திக்க விரும்பலை. எப்படியும் ஆண் வாடையே இல்லாமே தனியா வாழணும்னு தீர்மானிச்சேன்.

“விவாகரத்து முடியறதுக்கு இன்னும் ஒண்ணரை வருஷம் ஆகும்னு வக்கீல் சொன்னார். பரவாயில்லை. நடக்க வேண்டியதைக் கவனியுங்கன்னு சொன்னேன். அதுக்கப்புறம் பிரகாஷ் என்னைப் பார்க்க மறுபடி முயற்சி செய்யலை. நான் கர்ப்பமா இருக்கிறது அவருக்குத் தெரிஞ்சா, எங்கே மறுபடியும் வந்து என்னைத் தொந்தரவு செய்வாரோன்னு பயந்தேன். குழந்தை பிறக்கப் போகுதுன்னு அவருக்குத் தெரிஞ்சா, விவாகரத்துக்குச் சம்மதிக்க மாட்டாரோன்னுகூடப் பயந்தேன். அதனாலே இந்த விஷயத்தையே பிரகாஷ் கிட்ட இருந்து மறைச்சுட்டேன். தனக்கு ஒரு மகள் இருக்காங்கிற உண்மை இன்னி வரைக்கும் அவருக்குத் தெரியாது.

“நீ பிறந்தே. அதுக்கப்புறம். விவாகரத்தும் ஆயிடுச்சு. நான் விடுதலை அடைஞ்சுட்டேன்!

“ஆனா, நீ பிறந்ததும், உன் முகத்தைப் பார்த்ததும், நான் உன்னை என் கைகளிலே எடுத்துக்கிட்ட உடனே நான் நினைச்சிருந்தது எவ்வளவு தவறுன்னு எனக்கே புரிஞ்சது. உன் மேலே எனக்கு ஏற்பட்ட பாசம் அன்பு அதுவரைக்கும் வேறே யார் மேலேயும் எனக்கு ஏற்பட்டதில்லை. இப்படியும் என்னாலே ஒருத்தரை நேசிக்க முடியும்னு அப்போதுதான் நானே உணர்ந்தேன். நீயே என் உலகம் ஆயிட்டே. இனி உனக்காகவே வாழணும்னு தீர்மானிச்சேன்.

“அருப்புக்கோட்டையிலே எனக்கு விவாகரத்து ஆனதைப் பத்தி யார் கிட்டயும் நான் சொல்லலை. இருந்தாலும், நீ பிறந்ததும், தொடர்ந்து கணவரைப் பிரிஞ்சு நான் வாழறதைக் கண்டு, ஊர் ஜனங்க மனசுலே பல சந்தேகங்கள் உண்டாயிட்டது. பல சந்தேகமான கேள்விகளைக் குடைஞ்சு குடைஞ்சு கேட்டுக்கிட்டே இருந்தாங்க.

“இதிலிருந்து எல்லாம் தப்பிச்சுக்கிட்டு, உன்கூட நிமமதியா வாழணும்னு நினைச்சேன். அருப்புக்கோட்டையிலே இருந்த வீடு, நிலம் எல்லாத்தையும் வித்துட்டு, இங்கே ஸ்ரீரங்கத்துக்கு வந்துட்டேன். இந்த வீட்டைக் கட்டினேன். இங்கே நிலத்தை வாங்கிப் போட்டேன்.

“இங்கே யாருக்குமே என்னைத்தெரியாது. சம்பந்தங்களையும் துண்டிச்சுக்க விரும்பினேன். என் பெயரைச் சட்டபூர்வமா கல்யாணின்னு மாத்திக்கிட்டேன். புதுசா வாங்கின சொத்துக்களை அந்தப் பெயருக்கே மாத்திட்டேன். இங்கே நான் பூவும் பொட்டோடவும் இருந்தா, மறுபடியும் சுத்தி இருக்கிறவங்க என்னைப்பத்திப் பல கேள்விகள் கேட்டிருப்பாங்க. இவ கணவன் எங்கே, இவ ஏன் குழந்தையோட தனியா வாழ்ந்துக் கிட்டிருக்கா-இப்படிப்பட்ட கேள்விகளை நிச்சயம் சமாளிக்க வேண்டியிருக்கும்.

“அதனாலே, ஒரேயடியா. நான் ஒரு விதவைன்னு சொல்லிக்கிட்டு, எந்தக் கேள்வியும் எழறதுக்கு இடமே இல்லாமே செய்துட்டேன். விதவை மாதிரியே பூவும் பொட்டும் இல்லாமே. வெண்ணிற ஆடையை உடுத்த ஆரம்பிச்சேன். மனசுக்கு இது தவறாப்படலை.

“உன்னை ஆசையா, அருமையா வளர்க்கிறதிலே என் வாழ்க்கையை அர்ப்பணிச்சிட்டேன். அப்புறமா பத்திரிகைகள் மூலமா அவர் தன்னுடைய பெயரை ராஜீவ் குமாராக மாத்திக்கிட்டுச் சினிமா நடிகரா பிரபலமடைஞ்சதைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அதைப் பற்றி நான் கவலையே படலை.

“அவருக்கும் எனக்கும் சம்பந்தம் இருந்ததாக இங்கே யாருமே பூவத்துப் பார்த்திருக்க முடியாது. நான் உன்கிட்ட இருந்தும் உண்மையை மறைச்சுட்டேன். நீ உங்க அப்பாவப் பத்திக் கேட்கும்போதெல்லாம் இவர்தான் உங்கப்பாங்கிற உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு நினைச்சுட்டேன். எவ்வளவு பெரிய தவறைச் செய்துட்டேன்!

“நீ காலேஜ் படிப்புக்காக மெட்ராஸ் போறதிலே எனக்குத் துளியும் இஷ்டம் இருக்கலை. ஆனா பிடிவாதமா இருந்தே. சரி, மெட்ராஸுக்குப் போனாலும் கூட, உங்க அப்பாவைச் சந்திக்கிறதுக்கு வாய்ப்பு எங்கே இருக்கப் போகுதுன்னு நினைச்சேன்.

“விதி உங்க ரெண்டு பேரையும் இப்படிச் சேர்த்து வைக்கும்னு நான் எப்படி உஷா எதிர்பார்த்திருக்க முடியும்? தன் வினை தன்னையே சுடும் என்கிற மாதிரி, நான் செய்த தவறுதான் இந்த விபரீதத்துக்குக் காரணம். உண்மையாள குற்றவாளி நான் தான்.

“உஷா, என் கண்ணே! என்னை மன்னிச்சிடும்மா, என்னை மன்னிச்சிடு! இதுக்கெல்லாம் காரணம் நான்தான்! உன்னாலே என்னை மன்னிக்க முடியுமாம்மா?”

கெஞ்சுகின்ற பாவனையோடு கல்யாணி தனது இரு கரங்களையும் நீட்டினாள்.

மிகவும் தாழ்ந்த குரலில், “அம்மா, என்னைத் தனியா இருக்க வீடுங்க ப்ளீஸ்!” என்றாள் உஷா.

“உஷா…!” மகள் அருகில் சென்று அவள் தோள் மீது கல்யாணி ஒரு கையை வைக்கப் போனாள்.

சடாரென்று சூடு பட்டவள் போல உஷா பின்வாங்கினாள். தன்னைத் தொட அனுமதிக்கவில்லை. “ப்ளீஸ்!… அம்மா.. என்னைத் தனியா இருக்க விடுங்க” என்றாள் மீண்டும்.

தோல்வியுற்றவள் போல், சோர்ந்த நடையுடன் கல்யாணி உஷாவின் அறையை வீட்டு, தனது சொந்த அறைக்குள் சென்றாள். அன்று முழுவதும் உஷாவும், கல்யாணியும் அவரவர் தனி அறைக்குள். உள்ளிருந்து தாழ் போட்டுக் கொண்டு, தனியாக இருந்தனர்.


கல்யாணி தன்னைத் தானே நொந்து கொண்டாள். ”நான் ரொம்பக் கெட்டிக்காரின்னு பெருமைப்பட்டுக்கிட்டேன். ரொம்பவும் புத்திசாலித்தனமாக நடந்துக்கிட்டதா நீனைச்சேன், நான் ஒரு பாவி! ஒரு முட்டாள்! என் கண்மூடித்தனத்தாலே, என் பிடிவாதத்தினாலே, என் உயிருக்கு உயிரான ஒரே மகளுடைய வாழ்க்கையை நானே பாழாக்கிட்டேனே…!”

உஷா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தாள்.

“ராஜீவ்… எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், உங்களை நினைக்கும்போது, ‘ராஜீவ்’னுதான் அழைக்க வர்றதே தவிர, ‘அப்பா’ன்னு என்னாலே மனசுக்குள்ளே கூட உங்களை அழைக்க முடியலையே!

“ராஜீவ் நமக்குள்ளே ஏற்பட்ட பந்தம் அபூர்வமானது. ஆனால், தந்தை – மகள் என்கிற உறவின் கைதிகள் ஆகிவிட்டோமே!

“நான் ஊருக்குப் புறப்படும்போது ‘நம்ம குழந்தையைப் பத்திரமாப் பார்த்துக்க’ன்னு சொன்னீங்களே! நம்ம குழந்தை! இது பிறக்க முடியாத, பிறக்கக் கூடாத குழந்தையாப் போயிடுச்சே!”

இரண்டு பேருடைய அறைக் கதவுகளின் மீது தட்டி, “சாப்பிட வர்றீங்களாம்மா?” எனக் கேட்டாள் தங்கம். கதவைத் திறவாமலே இருவரும் “வேண்டாம்” என்று மறுத்து விட்டனர்.

நாள் முழுவதும் இருவரும் அவரவர் அறைகளை விட்டு வெளியே வரவேயில்லை. வழக்கம்போம் தங்கம் சமையற் கட்டிலும், பழனியப்பா முன் வராந்தாவிலும் படுத்து உறங்கி விட்டார்கள்.

கண் விழித்துப் பார்த்தால் உஷாவை எங்கேயும் காணவில்லை. பதறிப் போய், “எல்லா இடத்திலும் தேடிப் பாருங்க!” என்று கதறினாள் கல்யாணி.

கடைசியில். வீட்டுக்குப் பின் புறத்தில் இருந்த கிணற்றில், உஷாவின் பிணத்தைக் கண்டுபிடித்தார்கள்.


உஷாவுக்கு வாக்களித்திருந்தபடி சரியாகக் குறிப்பிட்ட தேதி ராஜீவ் ஸ்ரீரங்கம் வந்து சேர்த்தான். உஷா அவனுக்கு அளித்திருந்த கல்யாணி அம்மாளின் விலாசத்தைக் கண்டு பிடித்து, தானே காரை ஓட்டிக் கொண்டு கேட்டுக்குள் நழைந்தான்.

வீடு வெறிச்சோடிக் கிடந்த மாதிரி தோன்றியது. காரின் சப்தத்தைக் கேட்டவுடன் உஷா அவனை வரவேற்க வெளியே வருவாளென்று எதிர்பார்த்திருந்தான். யாருமே வரவில்லை.

வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றான். வாசற்படியைத் தாண்டியவுடன் அவன் கண்களைத் தாக்கிய காட்சி அவனைக் கதிகலங்கச் செய்துவிட்டது.

அதோ, அவனுக்கு எதிரில். உஷாவின் பெரிய பிரேம் போட்ட உருவப் படம் தெரிந்தது. படத்தின் மீது மலர் மாலை. அதற்கு முன்னால், தரையில் ஓர் ஒற்றை அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

விளக்கின் அருகே, தரையில் ஒரு நடுத்தர வயதுப் பெண் உட்கார்ந்திருந்தாள்.

ராஜீவின் கால் நடை ஓசையைக் கேட்டதும், கல்யாணி குனிந்திருந்த தனது தலையை நிமிர்த்தி யார் வந்திருக்கிறார்கள் எனப் பார்த்தாள்.

ராஜீவும் கல்யாணியும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்ட மறுகணமே, ஒருவரை யொருவர் உடனே அடையாளம் கண்டு கொண்டு விட்டனர்.

ஒரு நிமிஷம் ராஜீவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“கமலா! நீயா! நீ எப்படி.. இங்கே?”

ஒரு கையால் கல்யாணி உஷாவின் படத்தைக் காண்பித்தாள். “நான் அவளுடைய அம்மா”.

ராஜீவ் திகைத்துப் போனான்.

“என்ன.. அவளுடைய அம்மாவா? அப்படின்னா….உஷா….”

”உங்க மகள்தான். உங்க மகளா இருந்தான்னு சொல்லணும். இப்ப அவள் இல்லை. செத்துப் போயிட்டா… தற்கொலை. கிணத்திலே குதிச்சிட்டா. நான் சொல்லித்தான் நீங்க காரணத்தைத் தெரிஞ்சுக்கணுமா என்ன?” ஜீவனில்லாத வறண்டுப் போன குரலில் ஏதோ பாடத்தை ஒப்பிப்பது போல் பேசினாள் கல்யாணி. ராஜிவ் அதிர்ந்து போனான். அப்படியே மலைப்பில் சில நிமிஷங்கள் மௌனமாக அவளையே வெறித்துப் பார்த்தான். பேசும் வலிமையை மீண்டும் பெறச் சிறிது நேரம் ஆயிற்று.

“ஆனா… ஆனா… நமக்கு ஒரு குழந்தை இருக்கிறதாவே எனக்குத் தெரியாதே! அப்படின்னா என்னை விட்டுப் பிரியும்போதே நீ கர்ப்பமா இருந்திருக்கணும்! இதைப் பத்தி ஏன் என்கிட்டச் சொல்லவேயில்லை!” தாள முடியாத ஆத்திரத்தினால், துக்கத்தினால், அதிர்ச்சியினால் அவன் உடல் முழுவதுமே துடித்து நடுங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று மின்சாரம் பாய்ந்தது போல் கல்யாணி உயிர் பெற்றாள். வெறுப்பால் கனல் கக்கும் கண்கள் பளிச்சிட சடாரென்று எழுந்து நின்றாள்.

“உங்களை மாதிரி ஓர் அப்பா இல்லாம இருக்கிறதே அவளுக்கு நல்லதுன்னு நினைச்சேன்! அதனாலேதான்! நான் யூகிச்சது கடைசியலே சரின்னு நிரூபணம் ஆயிட்டதா இல்லையா? நீங்க நினைச்சிருந்தா வேறே ஆயிரம் பெண்கள் உங்களுக்குச் கிடைச்சிருப்பாங்க! ஆனா ..ஆனா, அழுக்குப் படிஞ்ச, காமவெறி பிடிச்சு உங்க கைகளிலேருந்து உங்க சொந்த மகளைக்கூடத் தப்பவிடலை இல்லை? அவளைக் கூட உங்களாலே விட்டு வைக்க முடியலை இல்லை?”

“வாயை மூடும் பாவி!” தனக்கு ஏற்பட்ட முழு ஆவேசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உரக்கக் கத்தினான் ராஜீவ். “அடி நாசக்காரி! பாதகி! பேசாதே! பேச உனக்கு என்னடீ உரிமை இருக்கு? உஷா மேலே நான் வைச்சிருந்த அன்பை உன் அசிங்கம் பிடித்த நாவால் களங்கப்படுத்தப் பார்க்காதே! இந்த உலகத்திலே நான் யாரையாவது உண்மையா, ஆத்மார்த்தமா நேசிச்சேன்னா அது உஷாவைத்தான்.

“இந்த விபரீதத்துக்கு எல்லாம் யாருடீ காரணம்? யோசிச்சுப் பார்! உஷா சாகக் காரணம் யார்? நீதான்! நீ ஒரு… ஒரு… கொலைகாரி.

“யோசிச்சுப் பாருடீ: பழசை யெல்லாம் நினைச்சுப் பார்! எத்தனை தடவை திரும்பி வான்னு உன்னைக் கெஞ்சிக் கேட்டேன், உன் முகத்தைக்கூட எனக்குக் காட்ட மறுத்திட்டியே! அப்போதாவது நீ கர்ப்பமா இருந்த விஷயத்தை எனக்குத் தெரியப் படுத்தியிருந்தா – இப்படியெல்லாம் இன்னிக்கு நடந்திருக்குமா? நீ கர்ப்பமா இருந்தேன்னு தெரிஞ்சு கூட விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தியே! என்ன நெஞ்சழுத்தம்டீ உனக்கு!

“நான் ஒரு தகப்பன் ஆகப் போகிறேங்கிற உண்மையை என்கிட்ட இருந்து மறைக்க உனக்கு என்ன உரிமை இருந்தது? அந்த உண்மை மட்டும் அப்போ எனக்குத் தெரிஞ்திருந்தா, நான் டைவோர்ஸுக்குச் சம்மதிச்சே இருக்க மாட்டேனே! குழந்தையின் எதிர்காலத்தை நினைச்சு, அதுக்காக, உன் தலைமுடியைப் பிடிச்சாவது தரதரன்னு உன்னைத் திரும்ப இழுத்துக்கிட்டு வந்திருப்பேனே!

”அப்படிச் செய்வேன்னு பயந்து, அதனாலேதானே விஷயத்தை என்கிட்டேயிருந்து மறைச்சே! அடி. சுயநலக்காரப் பேயே நீயும் ஒரு பெண்ணா! எனக்கு ஒரு குழந்தை இருக்காங்கிற விஷயத்தையே எனக்குத் தெரியப்படுத்தாம இருக்க உனக்கு எப்படி மனசு வந்தது? அப்படிச்செய்ய உனக்கு என்ன உரிமை இருந்தது? ஏன், அவள் உனக்கே சொந்தமா? எனக்கு மட்டும் சொந்தமில்லையா?

“சரி, அப்புறமா நீ எங்கே இருந்தேன்னு எனக்குத்தான் தெரியலை. ஆனா நடிகனா பிரபலமானதும், நிச்சயமா நீ என்னைப் பத்திக் கேள்விப் பட்டிருப்பியே? நான் எங்கே இருக்கேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கணுமே? அப்போதாவது என் கிட்ட உண்மையை சொன்னியா? நான்தான் அவளுடைய அப்பாங்கிற உண்மையை உஷா கிட்டச் சொன்னியா? இல்லை!

“இந்தக் கொடுமைக்கெல்லாம் யாருடீ காரணம்? பதில் சொல்லுடீ, நாசகாரி! தன்னுடைய அப்பா இறந்து போயிட்டதாக நம்பிக்கிட்டு இருந்த உஷாவா? எனக்கு ஒரு மகள் இருக்காங்கிற விவரமே தெரியாத நானா? இல்லை இல்லை. இத்தனைக்கும் காரணம் நீ! நீ! நீயேதான்! உன்னைத் தவிர வேறே யாரும் இதுக்குப் பொறுப்பில்லை! குற்றவாளி நீ மட்டும்தான்!

“உன்னுடைய அர்த்தமற்ற பிடிவாதம் எவ்வளவு பெரிய விபரிதத்துக்கு வழிவகுத்திருக்கு! இப்போ திருப்திதானே? என் வாழ்க்கையை எப்பவோ பாழாக்கிட்டே. உன் வாழ்க்கையையும் நீயே பாழாக்கிக்கிட்டே! அதெல்லாம் போதாதுன்னு பொக்கிஷமா யிருந்த நம்ம உஷாவினுடைய பூத்துக் குலுங்க வேண்டிய வாழ்க்கையை அடியோட பாழடிச்சிட்டியேடீ.!

“நீ செய்த இந்தப் பாவத்துக்குக் கடவுள் கூட உன்னை மன்ணிக்க மாட்டார்! சாதிச்ச மகா சாதனையை நினைச்சு நினைச்சு ஆனந்தப்படு! திருப்திப்பட்டுக்கோ! நரகத்திலே கூட உனக்கு இடம் கிடைக்காது. ராட்சசப் பேயே!”

அத்துடன் திரும்பிக்கூடப் பார்க்காமல் ராஜீவ் அங்கிருந்து போய்விட்டான். கார் புறப்பட்டுப் போகும் சப்தம் கேட்டது. அப்படியே சுருண்டு கல்யாணி தரையில் விழுந்தாள், அவள் கண்கள் வெறுமையாக எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.


இரண்டு நாட்கள் கழித்து எல்லா முக்கிய தினசரிகளிலும் திகைப்பூட்டும் செய்தி பிரசுரமாகியது.

“பிரபல திரைப்பட நடிகர் ராஜீவ் குமார் தற்கொலை! படுக்கை அறையில் செத்துக் கிடந்தார்!

“நேற்று முன் தினம் அவர் திருச்சிக்குப் பயணமானார். அன்றிரவே சென்னை திரும்பி விட்டார். திரும்பி வந்தது முதல் சோகமாகக் காணப்பட்டார் என்று கூறுகிறார் அவருடைய காரியதரிசி திரு சுரேஷ்.

“அன்று இரவே தனது வக்கீல் திரு என்.ரங்கராஜனை வரவழைத்து, ராஜீவ் குமார் புதிய உயில் ஒன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டுமென்று வற்புறுத்தினாராம். அப்பொழுதே புதிய உயில் தயாரிக்கப்பட்டு சாட்சிக் கையெழுத்தும் போடப்பட்டது.

“உயிலின்படி, ராஜீவ் குமார் தனக்குச் சொந்தமாயிருந்த தொழிற்சாலைகளை அதிதொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கே எழுதி வைத்திருக்கிறார். சென்னை அருகேயுள்ள ஒரு தோட்டத்தை அதனைக் காவல் காக்கும் தோட்டக்காரர் கிருஷ்ணன் பேருக்கு எழுதி வைத்திருக்கிறார்.

”காரியதரிசி சுரேஷ்க்கு ரூ.5 லட்சம்; வீட்டில் உத்தியோகம் செய்து வந்த வேலையாட்களுக்குத் தலா ஒரு லட்சம் வழங்கப்பட வேண்டும் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார். மற்றபடி, சென்னையில் ராஜீவ் குமார் வசித்து வந்த பெரிய வீடு, அவருக்கிருந்த மற்ற ஏராளமான சொத்துக்கள் அனைத்தையும் மாநில அரசாங்கம் மேற்கொண்டு தர்ம காரியங்களுக்கும், பொது நலனுக்கும் அவை பயன்படுத்தப்பட வேண்டும் – இதுவே தனது இறுதி வேண்டுகோள் என்று ராஜீவ் குமார் உயிலில் குறிப்பிட்டிருக்கிறார்.

“நேற்று பிற்பகல் பன்னிரண்டு மணி ஆகியும் ராஜீவ் குமார் எழுந்திருக்கவில்லை. அவர் அறைக் கதவைத் தட்டியபோது பதில் ஏதும் வரவில்லை, மனத்தில் சந்தேகம் உண்டாகவே, காரியதரிசி சுரேஷும் வீட்டு வேலையாட்களும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜீவ் குமார் படுக்கையில் செத்துக் கிடந்தார்.

“சுரேஷ் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். ராஜீவ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அளவுக்கு மீறித்தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் ஏற்பட்ட மரணம் இது – சந்தேகமின்றி இது தற்கொலைதான் என்று போலீசார் கூறுகின்றனர்.

“புகழின் உச்சியில் நிலைத்திருந்து, வேறு எந்தத் தமிழ் நடிகரும் இதுவரை பெறாத வெற்றியும், புகழும், செல்வாக்கும். செல்வமும் ஒருங்கே பெற்றிருந்த ராஜீவ்குமார் திடீரென்று தற்கொலை செய்துகொள்ளக் காரணம் என்ன? இதுவே புரியாத புதிராக இருக்கிறது. காரியதரிசி சுரேஷும் இதர வேலைக்காரர்களும் எவ்வளவுதான் விசாரித்தும் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்றே கூறுகின்றனர்.”


இரண்டு வாரங்கள் கழித்து,சென்னையில் கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனைக்கு முன் ஓர் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

வெள்ளை சீருடை அணிந்திருந்த உதவியாளர்கள் முதலில் இறங்கினார்கள். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியைக் இறக்கி விட்டார்கள்.

இரு பக்கமும் கைத்தாங்கலாக உதவி யாளர்கள் பற்றிக்கொள்ள, அவள் ஆஸ்பத்திரிக்குள் நடத்திச் செல்லப்பட்டாள்.

வாசலில் ஒரு கணம் அவள் நின்றாள். ஒரே முறை திரும்பிப் பார்த்தாள், இறுதி முறையாக கல்யாணி திரும்பி வெளி உலகத்தைப் பார்வையிட்டாள். அவள் கண்கள் அப்படியே, வெறுமையாக, வெறித்து, உயிரற்றவையாக ஒன்றும் புரியாமல் விழித்தன. வலுக்கட்டாயமாகக் கல்யாணியை உள்ளே கொண்டு சென்றனர்.

கதவுகள் அவளுக்குப் பின்னால் இழுத்து மூடப்பட்டன. உலகம் வெளியே தள்ளிப் பூடப்பட்டது. அவள் மனம் உள்ளே தள்ளிப் பூட்டப்பட்டிருந்தது. தாள முடியாத, சகித்துக் கொள்ள முடியாத நினைவுகளின் சுமையைத் தாங்கமாட்டாது, கல்யாணியின் மனம் பயங்கரான யதார்த்தத்திலிருந்து விடுதலையை நாடி, தப்பித்து எங்கோ பறந்து சென்றுவிட்டது.

(முற்றும்)

– உறவின் கைதிகள், கல்கி வார இதழில் (22-06-1980 – 26-10-1980) வெளியான தொடர்கதை.

2 thoughts on “உறவின் கைதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *