கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 7,176 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

To live is like love, all reason is against
it, and all healthy instinct for it.
-Samuel Butter – 1835-1902

இடைவேளைக்கு முன்பே “சாகுந்தலம்” நாடகம் முடிவு பெற்று விட்டது. அன்றைய மாலை நிகழ்ச்சிகளின் பிற் பகுதியில் வேறு சில மாணவியர் வழங்கும் பல்சுவை விருந்து இடம் பெறும் என்பதை ராஜீவுக்கு ப்ரின்ஸிபால் தெரியப்படுத்தியவுடன், எப்படியாவது அங்கிருந்து கழற்றிக் கொண்டு போய் விட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிறிற்று.

அவன் வந்திருந்ததே உஷாவுக்காகத் தான். அன்று மாலை மீண்டும் உஷாவைக் காணும் வாய்ப்பு கிட்டப் போவதில்லை என்பதை உணர்ந்ததும், இனியும் தொடர்ந்து அங்கே உட்காருவதில் அர்த்தமில்லை என்று ராஜீவ் கருதினான்.

“வெரி ஸாரி மேடம், நான் இப்பவே புறப்படணும். ஒரு கல்யாண ரிஷப்னுக்குப் போக வேண்டியிருக்கு” என்று மிஸ் மைத்ரேயியிடம் புளுகிவிட்டு விடைபெற்றுக் கொண்டான்.

போகும் முன், சுரேஷிடம் பேனாவும் காகிதமும் வேண்டும் எனக் கேட்டான். பாக்கெட்டிலிருந்த சிறிய டைரியிலிருந்து ஒரு பக்கத்தை கிழித்து எடுத்து, அதையும் பேனாவையும் ராஜீவிடம் கொடுத்தான் சுரேஷ்.

அவசரமாக அதில் நான்கு வரிகளை கிறுக்கி விட்டு, காகிதத்தை மடித்து சுரேஷிடம் கொடுத்து, அவன் காதோடு ராஜ்வ ரசியமாக ஏதோ சொன்னான்.

அவன் சொன்னது சுரேஷுக்கு மிகுந்த வியப்பை உண்டாக்குவதாக இருந்தது. சுரேஷ் ஒரு கணம் தயங்கினான். ராஜீவை ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையில் அடக்கியிருந்த பொருள் “நீங்கள் செய்வது சரிதானா இது விவேகமுள்ளவர் செய்யும் காரியமா” என்னும் கேள்வி. அவர்களைச் சுற்றி நிறைய பேர்கள் இருந்ததால், சுரேஷ் உரக்க எதுவும் கூறவில்லை.

சுரேஷுடைய பயத்தை அகற்றி நம்பிக்கையூட்டும் வகையில் ராஜீவ் தலையை அசைத்தன். அந்த ஒரு அசைவினுள் அடக்கி யிருந்த அர்த்தம் “பரவாயில்லை. என்ன செய்கிறேன் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டுதான் செய்கிறேன்” என்ற பதில்.

சுரேஷ் லேசாக தனது தோள்களை உயர்த்தினான். அந்தச் செய்கையின் உள்ளர்த்தம் “சரி, இதன் விளைவு என்னவானாலும் அதற்கு நீங்களே பொறுப்பாளி! நீங்கள் இடும் கட்டளையை நான் நிறைவேற்றுகிறேன். அவ்வளவுதான்” என்பதே.

ராஜீவும் சுரேஷும் வெகு நாட்களாக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி விட்ட காரணத்தால், வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாத போதிலும், வெறும் பார்வையாலேயே, ஒருவன் மனத்தில் உள்ளதை மற்றவன் உடனே கிரஹித்துக் கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் இடையே ஒரு அபூர்வ மன ஒற்றுமை வளர்ந்திருந்தது.

ராஜீவ் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்ற சுரேஷ் சென்று விட்டான்.

ப்ரின்ஸிபாலும் மற்ற முக்கியஸ்தர்களும் வாசல் வரை வந்து வழியனுப்ப, ராஜீவ் தனது காரில் அமர்ந்து அங்கிருந்து புறப்பட்டுப்போய் விட்டான்.

மேடைக்குப் பின்னால் க்ரீன் ரூமில் உஷா தனது உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள், அச்சமயம் அவள் ட்ரெஸ்ஸிங் ரூமில் தனியாக இருந்தாள். மேடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த மற்ற நிகழ்ச்சிகளைக் காண, ”சாகுந்தலம்” நாடகத்தில் அவளுடன் பங்கு பெற்ற மற்ற பெண்கள் சென்று விட்டிருந்தனர். அதில் உஷாவுக்கு விருப்பம் இல்லாததால் பின்தங்கி விட்டாள்.

உஷா தனது கூந்தலிலிருந்த மலர்களை எடுத்து மேஜையின் மீது வைத்துக் கொண்டிருந்த போது, யாரோ கிரீன் ரூம் கதவின் மீது தட்டும் சப்தம் அவள் காதில் ஒலித்தது. ”கம் இன்” என்று அவள் குரல் கொடுத்தாள். சுரேஷ் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதும். உஷாவின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதாக விரிந்தன. அவனை உடளே அடையாளம் கண்டு கொண்டாள். சுரேஷ் உள்ளே வந்து கதவை சாத்தியதும், உஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

ராஜீவ் கொடுத்திருந்த மடித்த காகிதத்தை சுரேஷ் உஷாவிடம் நீட்டினான், “என் முதலாளி இதை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்”.

ஆச்சரியத்தால் உஷாவால் பேச முடியவில்லை, மௌனமாக அந்தச் சீட்டைப் பெற்றுக் கொண்டாள்.

“தனியா இருக்கும் போது இதைப் படியுங்கள்” என்று கூறிவிட்டு, வந்த வேகத்திலேயே சுரேஷ் வெளியேறி விட்டான்.

ஏதோ பிரமையில் இருப்பவள் போல். சிறிது நேரம் அவன் போன பிறகு, மூடிய கதவைப் பார்த்தபடியே உஷா நீன்றாள். எல்லாம் ஒரு நொடியில் நடந்து விட்டது. சுரேஷ் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.

உண்மையாக அப்படி நடந்ததா, இல்லை கரேஷ் வந்ததை கற்பனை செய்தாளா? நிதானமாகக் கண்களைத் தாழ்த்தி, கையில் இருந்த சீட்டைப் பார்த்தாள், அதைப் பிரித்தாள், படித்தாள்.

அழுத்தத்தோடு அழகாக அமைந்திருந்த ஒரு ஆணுடைய கையெழுத்தில் நான்கே வரிகள் எழுதப்பட்டிருந்தன.

“உன்னோடு தனியாகப்பேச விரும்புகிறேன். உன்னை எப்படி எங்கே அணுகுவதென்று தெரியவில்லை. என்னுடைய பர்ஸனல் அன்லிஸ்டட் (Unlisted) நம்பர் 76542. இது டைரக்ட் லைன்”.

அவ்வளவே தான். கடிதத்தின் கீழ் எந்த கையொப்பமும் இல்லை. என்றாலும், அதை ராஜீவ்தான் எழுதி இருக்க வேண்டும் என்பதை உஷா புரிந்து கொண்டாள்.

குழப்பம் அதிசயம், ஆனந்தம், அச்சம், பரவசம் எல்லாமும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு அவள் மனத்தில் போராட, மீண்டும், மீண்டும் அந்த மிகச் சுருக்கமான மடலைப் படித்தாள்.

ராஜீவ்! ராஜீவ் அவளோடு தனியாகப் பேச விரும்புகின்றாரா! அதற்காகத் தன்னுடைய பிரைவேட் அன்லிஸ்டட் டெலிபோன் நம்பரை அவளுக்குத் தந்திருக்கின்றாரா? ஏன்? எதற்காக?

இது கூடவா புரிய வில்லை!

“வேறு எதற்காக இருக்க முடியும்? அப்படியானால். அவர் என்னை விரும்புகின்றாரா? இல்லை! இருக்க முடியாது. அவரைப் போன்ற பெரிய மனிதர், என்னைப் போன்ற ஒரு சாதாரணப் பெண்ணை நேசிக்க முடியுமா? அப்படி என்னில் விசேஷமாக என்ன இருக்கிறது”

திரும்பித் தன் உருவத்தை கண்ணடியில் பார்த்துக் கொண்டாள். கண்கள் பளிச்சிட, கன்னங்கள் சிவந்திட, உதடுகள் துடித்திட, புதியதோர் உற்சாகம் உடல் முழுவதையும் குலுங்கச் செய்திட – கண்ணாடியில் அவள் தோற்றம் புதிய மெருகுடன் மின்னுவதைக் கண்டு தானே வியந்தாள், பூரித்துப்போனாள்.

”ஏன் அவர் என்னை நேசிக்கக் கூடாது? என்னில் என்ன இல்லை?”

ஆம். தான் ஒரு பேரழகி என்பதைத் தானே உணர்ந்து அகமகிழ்ந்தாள். உஷாவின் மனத்தில் எந்தப் போலித்தனத்திற்கும் இடமில்லை. மிகவும் தெளிவான நேர்மையான மனோபாவம் அவளுடையது. தான் அழகாக இருப்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அதை நேரிடையாக ஒப்புக் கொள்வதில் அவள் எந்தத் தவறையும் காணவில்லை. யாராவது அவள் அழகைப் புகழ்ந்தால், அவர்களுடைய பாராட்டுதலை நளினமாக ஏற்றுக் கொண்டு நன்றி கூறுவாளே தவிர, போலி தாழ்வுணர்வோடு, “சே, சே! அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் அப்படி ஒண்ணும் பெரிய அழகியில்லை” என்றெல்லாம் பொய் நாடகம் ஆடமாட்டாள்.

உஷா நேர்மையானவள். இனிமையானவள், புத்திசாலி – அதே சமயத்தில் வயதில் மிகவும் இளையவள், அவளுக்கு அப்போது தான் 18 வயது நிரம்பியிருந்தது. அன்பால் அரவணைக்கப்பட்டு, முழுமையான பாதுகாப்பில் செல்லமாக வளர்ந்தவள் ஆதலால், சிறு பிள்ளைத்தனம் நிறைந்தவளாக, வெளி உலகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதவளாக இருந்தாள். உஷாவின் மென்மையான உ ள்ளம். வாழ்க்கையின் ரம்மியமான பக்கத்தை மட்டுமே இதுவரை அறிந்திருந்தது. வாழ்க்கையின் கரடுமுரடான பக்கத்தைப் பார்க்க அவளுடைய குறைந்த அனுபவத்தில் இதுவரை சந்தர்ப்பமே இருக்கவில்லை.

மறுபடியும் அந்தக் கடிதத்தைப் படித்தாள். அவள் மனக் கோட்டையின் தலைவன்; அவள் கவுைகளில் மன்னன்; வெகு தூரத்திலிருந்து இதுவரை அவள் பூஜித்து வந்த அடைய முடியாத தெய்வம் என்று அவளால் கருதப்பட்டவர். அவள் சற்றும் எதிர்பாராத விதத்தில் திடீரென்று இத்தனை அருகில் வந்து விட்டார். வெறும் பகற்கனவு என நினைத்து ஏங்கியதெல்லாம் நனவாகும் வாய்ப்பு அவள் கைக்கு மட்டும் எட்டும் அளவில் இத்தனை அண்மையில் வந்து விட்டதா! ஆயிரம் ஆயிரம் பெண்கள் அவரை நினைத்து நினைத்து ஏங்கும் பொழுது, தனக்கு ஏற்றவள் என்று அவர் அவளைத் தேர்ந்தெடுத்துக் கௌரவித்திருக்கிறாரா! உஷாவின் உள்ளம் பரவசத்தில் பொங்கிப் பெருமிதத்தில் திளைத்தது.

சடாரென்று க்ரீன் ரூம் சுதவு திறக்கப்பட் டது. கூட்டமாகப் பல பெண்கன் உள்ளே வந்து விட்டனர்.

சட்டென்று விலை மதிப்பிட முடியாத பொக்கிஷமான அந்தக் காகிதத்தை மடித்து, உஷா அதனை தனது ரவிக்கைக்குள் ஒளித்து, நெஞ்சோடு இணைத்துக் கொண்டாள்….

அத்தியாயம்-6

ஓராயிரம் இளம் பார்வைகளில்
முழ்யுேம்
முன்பெல்லாம்
என் மனம் கரையவில்லை
இன்று – இது என்ன அதிசயம்!
ஒரே வினாடியில் உன் ஈரப்பார்வையில்
என் மனம் உப்பாகி விட்டதே!
-மீரா (கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள்)

கல்லூரி ஆண்டு விழா முடிந்து இரண்டு நாட்கள் நகர்ந்துவிட்டன. தாங்க முடியாத பொறுமையின்மையோடு ராஜீவ் தவித்துக் கொண்டிருந்தான். இதுவரை உஷாவிடமிருந்து ஃபோன் கால் வரவில்லை.

இதற்குள் ஆயிரம் தடவையாவது சுரேஷிடம் “நிஜமாகத்தான் என் சீட்டை உஷா கிட்டே கொடுத்தியா?” என்று ராஜீவ் விசாரித்திருப்பான்.

“நிஜமாத்தான் கொடுத்தேன் சார்.”

“இதோ பார், சுரேஷ், பொய் சொல்லாதே, உண்மையா அவள் கையிலேயே அதைக் கொடுத்தியா?”

“சத்தியமாச் சொல்றேன் சார். அவங்களைப் பார்த்து அவங்க கையிலேயே கொடுத்தேன்”

“என்னை நீ ஏமாத்தலையே சுரேஷ்?”

“சார், நான் ஏன் சார் அப்படிச் செய்யப் போறேன்?”

“இட்ஸ் ஆல்ரைட், சுரேஷ், நீ போகலாம்”.

ராஜீவ் மனத்துக்குள் புதைத்திருந்த சந்தேகம், சிக்கல் நிறைந்த விவகாரத்தில் தனது முதலாளி அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க, அந்தக் கடிதத்தை உஷாவிடம் கொடுக்காமலே சுரேஷ் பொய் நாடகம் ஆடுகின்றானா என்பதுதான். ஆபத்தான விளைவிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடேயே சுரேஷ் அப்படிச் செய்திருந்தால்?

உண்மையிலேயே உஷா விஷயத்தில் ராஜீவ் காண்பித்த பேராவல், சுரேஷூக்குச் சொல்லில் அடங்காத வியப்பைத் தந்தது. உலகில் நல்லதில் நம்பிக்கை அற்றவனாய், பெண்களைக் கைப்பாவைகளாகக் கருதிப் பயன்படுத்தி வந்த அதே ராஜீவ், இப்போது முதல் முதலாகக் காதல் கணையால் தாக்கப்பட்ட இளம் கல்லூரி மாணவனைப் போல நடந்து கொள்வதை சுரேஷால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

சுரேஷுக்கு மிகவும் கவலையாக இருந்தது. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? ஆழ்ந்த முன் யோசனை யின்றி ஒரு அடிகூட எடுத்து வைக்காத ராஜீவுடைய போக்கில் இந்தத் திடீர் மாற்றம் எதனால் ஏற்பட்டு விட்டது? உஷாவைப் பார்த்தால் ஒன்றுமே தெரியாத அப்பாவிப் பெண் என்று சுரேஷுக்குத் தோன்றியது. நல்ல குடும்பப்பெண் போலவும் தெரிந்தாள். என்றைக்கும் இல்லாமல் தனது முதலாளி நெருப்போடு விளையாட முற்பட்டு விட்டதை எண்ணி சுரேஷ் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளானான். இத்தனை ஆண்டுகளாக அரும் பாடுபட்டு அமைத்த மாபெரும் ராஜாங்கம். கேவலம் ஒரு சிறிய பெண் மூலம் சிதறி உருத் தெரியாமல் தாசமாகிவிடக் கூடிய நிலைமை ஏற்பட ராஜீவ் இடம் அளித்து விட்டாரே!

என்ன இருந்தாலும் சுரேஷ் ராஜீவிடம் கை நீட்டி ஊதியம் பெறுபவன். அவனோடு என்னதான் நெருங்கிப் பழகினாலும், அவனுக்கும் ஓர் எல்லை இருந்தது. அதை மீறி, அவனால் ராஜீவுக்கு உபதேசம் கூறும் அளவுக்குத் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள முடியவில்லை. ராஜீவ் எல்லோரையும் அப்படித்தான் வைத்திருந்தான். எவ்வளவு நெருங்கியவர்களாக இருந்தாலும் சரி, ஓரளவுக்கு மேல் ராஜீவிடம் சுவாதீனம் கொண்டாடப் பயப்படுவார்கள். எப்போதும் அவன் கொஞ்சம் விலகியே நிற்பான்.

சுரேஷ் மனத்தில் உள்ள அச்சம், கவலை, வருத்தம் எல்லாவற்றையும் ராஜீவால் உணர முடிந்தது. உண்மையில் தன் போக்கு அவனுக்கே புரியாத புதிராக இருந்தது.

கல்லூரி அரங்கத்தில் அந்தக் கடிதததை உஷாவுக்குக் கொடுத்து அனுப்பலாமா, வேண்டாமா என்பதைக் குறித்து மனத்துக்குள் நூறு முறை விவாதித்துக் கொண்டிருந்தான். கடைசி நேரத்தில் அதை எழுதி அனுப்பாமல் இருக்க முடியவில்லை.

சரி – ஆனது ஆகிவிட்டது. இனி அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?

உஷா ஏன் இன்னும் ஃபோன் செய்ய வில்லை? அவளுக்கு ஒருவேளை இதில் விருப்பம் இல்லையோ என்னவோ? சரி, அதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை. அவன்தான் முன்னெச்சரிக்கையோடு அந்தக் கடிதத்தின் கீழ் தனது பெயரை எழுதவில்லையே. வேறு யாராவது அதைப் படித்தாலும் ராஜீவ்தான் அதை எழுதினான் என்பதைக் கண்டு கொள்ள என்ன ஆதாரம் இருந்தது? ஒன்றுமே இல்லை. ஆனால் அந்த டெலிபோன் நம்பர்?அதற்கு போன் செய்து துப்பறிய வேறு யாராவது முயற்சி செய்தால்? பரவாயில்லை. இன்றே டெலிபோன் டிபார்ட்மெண்டுக்கு விண்ணப்பம் செய்து அந்த நம்பரை மாற்றி விடும்படி கேட்டால் போயிற்று!

ஆனால் உஷா ஏன் இன்னும் ஃபோன் செய்யவில்லை? மீண்டும் மீண்டும் அதே கேள்வி அவனை உநுத்திக் கொண்டிருந்தது. அப்படியானால். அன்று அவள் விழிகளில் அவன் பார்த்திருந்த தீவீர மோகம் உண்மை இல்லையா? எல்லாம் அவனுடைய முட்டாள்தனமான கற்பனையா? அவன் எழுதிய கடிதத்தைத் தனது தோழியரிடம் காட்டி அவனைப் பரிகாசம் செய்து சிரித்துக் கொண்டிருப்பாளோ என்னவோ? ஆனால்… ஆனால்….உஷா அப்படிப்பட்டவளாக இருப்பாள் என்று தோன்றவில்லையே! பின் ஏன் இன்னும் அவனுக்கு ஃபோன் செய்யவில்லை?

திடீரென்று ராஜீவுடைய படுக்கை அறையில் ஃபோன் மணி அடித்தது. இரண்டாம் முறை மணியை ஒலிக்க விடாமல் அவ்வளவு ஆதங்கத்தோடு பாய்ந்து ரிஸீவரை அவசரமாக எடுத்தான்

“ஹல்லோ… ஹல்லோ…”

“….”

‘”ஹல்லோ?” என்றான் ராஜீவ் மீண்டும். ஆவலுடன். பிறகு, மறுமுனையில் யாரோ மூச்சுத் திணறுவது போல் ஒரு சத்தம் கேட் டது. தயக்கத்துடன் ஒரு மெல்லிய; இனிய குரல், மிகவும் தாழ்ந்த ஓசையுடன் பேசியது.

”ஹலோ… நான் தான் போறேன்.”

பெயரைக் குறிப்பிடா விட்டாலும் பேசியது உஷா தான் என்று ராஜீவுக்கு உடனே புரிந்தது. ஓர் அசட்டுத்தனமான சந்தோஷம் அவன் மனத்தில் தோன்றிற்று, தாள முடியாத மகிழ்ச்சியில் அவன் உடல் முழுதுமே துடித்தது. உஷாவுக்கு அவன் மீது ஆசை இல்லாமல் இல்லை, ஃபோன் செய்து விட்டாளே!

“உஷா?”

“நான் தான்”

”எங்கிருந்து பேசறே?”

“காலேஜ்லே ஒரு டெலிபோன் பூத் இருக்கு. அதிலிருந்து போறேன்.” உஷா மிகவும் தாழ்ந்த குரலில் பேசியதால், அவள் கூறும் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள ராஜீவுக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தான். காலை 7.30 மணி ஆகியிருந்தது. ராஜீவுக்கு இது சற்று விசித்திரமாகப் பட்டது.

”இவ்வளவு சீக்கிரம் காலேஜுக்கு வந்துட்டியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

”நான் இங்கேதானே தங்கறேன் காலேஜ் ஹாஸ்டல்லே” என்று விளக்கினாள் உஷா.

”ஓ” ராஜீவ் இதை யூகித்து இருக்கவில்லை.

”ஏன்? மெட்ராஸ்லே வீடு இல்லையா? உங்க ஊர் எது?” என்று விசாரித்தான்.

”ஸ்ரீரங்கம்,”

”ஐ ஸீ, உங்க அப்பா அம்மா அங்கே இருக்காங்களா?”

“அப்பா இல்லே. அம்மா மட்டும் இருக்காங்க. நான் குழந்தையா இருக்கும் போதே அப்பா இறந்து போயிட்டார்” என்றாள் உஷா.

”ஓ! ஐ ஆம் ஸாரி”

உஷா லேசாகச் சிரித்தாள். “தட்ஸ் ஆல்ரைட் நீங்க எதுக்காக ஸாரி சொல்லணும்? எங்க அப்பா இறந்து போனதைப் பத்தி உங்களுக்கு எப்படித் தெரிஞ்சிருக்க முடியும்?”

“உஷா!”

“உம்”

“என் கடிதத்தைப் படிச்சதும் என்ன நினைச்சே?” என்று கேட்டான் ராஜீவ், ஆவலுடன்.

“முதல்லே என்னாலே நம்பவே முடியலை” என்றாள் உஷா.

“எதை நம்ப முடியலை?”

“அந்தக் கடிதத்தை நீங்கதான் எழுதி அனுப்பினீங்கங்கிறதை”

“அப்புறம் எப்படி நம்பிக்கை வந்தது?”

“உங்க செக்சட்டம் மிஸ்டர் சுரேஷ் தானே அதை எங்கிட்டக் கொடுத்தார்? அதனாலே நீங்கதான் எழுதியிருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன்.”

“ஏன் உஷா ரெண்டு நாளா ஃபோன் பண்ணலை?”

“பயமா இருந்தது.”

“எதுக்குப் பயம்?”

“தெரியலை!” என்றாள் உஷா குழம்பியவாறு.

ராஜீவ் சிரித்தான்:

”இப்போ எப்படித் தைரியம் வந்தது?” என்று கேட்டான்,

”தெரியலை. ஃபோன் பண்ணாமே இதுக்கு மேலே என்னால் இருக்க முடியலை” என்றாள் உஷா நாணத்தோடு, அவள் வார்த்தைகள் ராஜீவின் உள்ளத்தில் புதிய குதூகலத்தைப் பிறப்பித்தன.

“உஷா! ரெண்டு நாளா உன் ஃபோன் காலுக்காக எப்படி ஏங்கித் தவம் கிடந்தேன்னு உனக்குத் தெரியுமா?” என்றான்.

இதைக் கேட்டதும் உஷாவின் உள்ளம் பூரித்துப் போய் விட்டது.

“நிஜமாச் சொல்றீங்களா?” என்று கேட்டாள்.

“சத்தியமா! ஃபோன் எப்போ அடிக்கும்னு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்துக்கிட்டு இருந்தேன். நான் அந்தண்டை இத்தண்டை நகரலை!”

உஷா சிரித்தாள், “சும்மா சொல்றீங்க!”

“இல்லை, உஷா, ஐ மீன் இட்!”

“நீங்க சொன்னாச் சரி.”

”உ.ஷா!” அவன் குரலில் ஒரு திடீர் வேகம் தோன்றியது.

“யெஸ்?”

“உஷா… நான் உன்னைத் தனியா… பார்க்கணும்… சந்திச்சுப் பேசணும்!” என்றான் ராஜீவ் ஆர்வம் மிக்க குரலில்.

உஷாவிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

இன்னும் மறுமுனையில் மௌனம் நீடித்தது. ”சே! நான் ஒரு மடையன்! அவசரப்பட்டுப் பயமுறுத்தி விரட்டி விட்டேனா?” என்று தன்னைத் தானே கோபித்துக் கொண்டான்.

உஷா அவனுக்குத் தெரிந்த மற்ற பெண்களைப்போல் இல்லை. இவள் அனுபவம் இல்லாதவள். இது தானாகக் கனிய வேண்டிய மலர். நாசூக்காக கையாள வேண்டிய இளம் மொட்டு. பொறுமையை இழந்து அவளை அச்சுறுத்தித் துரத்தி விட்டேனா?

“உஷா…உஷா…!”

ஏன் அவள் பேச மறுத்தாள்?

– தொடரும்

– உறவின் கைதிகள், கல்கி வார இதழில் (22-06-1980 – 26-10-1980) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *