உயிர் தொடும் அமுதம் நீ!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 4,008 
 
 

(2021ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4 

மாலதி பூட்டியிருந்த கதவை திறக்க, பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ‘ஆதி’ ஓடி வந்து மாலதியின் கால்களை கட்டிக் கொள்கிறான். அவளை தொடர்ந்து விஜயா வர, 

“ஆதி எதுவும் தொந்தரவு பண்ணினானா விஜி,”

“அதெல்லாம் இல்லை, ஸ்கூல் பஸ்ஸில் வந்து இறங்கி நேராக வீட்டிற்கு வந்து, அரைமணிநேரம் ஹோம் ஓர்க் செய்து விட்டு, இப்பத்தான் விளையாட ஆரம்பிச்சான். பால் மட்டும் குடிச்சான். ” 

“ரொம்ப தாங்க்ஸ் விஜி. உன்னையும் தொந்தரவு பண்றேன். கூட படிச்ச பாவத்துக்கு என் நிலைமை புரிஞ்சு பக்கத்திலேயே வீடும் பார்த்து தந்து… நிறைய உதவி பண்றே…” 

“என்ன பேச்சு மாலதி. உன் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. சரி உள்ளே போகலாம். உன்கிட்டே சில விஷயம் பேசலாம்னு தான் வந்தேன்” 

“பேக்கிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை ஆதியிடம் மாலதி தர, அதை வாங்கிக் கொண்டு ஓரமாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். 

“சொல்லு விஜி. என்ன விஷயம்”

கேட்டபடி, மடக்கி வைத்திருந்த ஸ்டீல் சேரை விரித்து விஜியை உட்கார சொல்கிறாள். 

“நீயும் குழந்தை பிறந்ததிலிருந்து இந்த நாலு வருஷமாக ஒரு ஊரிலும் நிலையாக இருக்க முடியாமல் ஊர் ஊராக சுத்திட்டு வர்றே. இந்த ஊரில் எத்தனை மாசம் இருக்கப் போறியோ தெரியலை. ஒரு இளம்பெண். கையில் நாலு வயது மகனுடன், தனியாக வாழறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் புரியுது மாலதி. இருந்தாலும் நீ எடுத்த முடிவு தப்புன்னு மனசுக்கு படுது” 

மாலதியின் கண்களின் கண்ணீர் தளும்பி நிற்கிறது. 

“இதுதான் சரியான முடிவு விஜி. அப்பா யாருன்னு அடையாளம் காட்ட முடியாமல் என் குழந்தையை நல்ல விதமாக எப்படி வளர்த்து ஆளாக்க முடியும். 

நல்லவன்னு நம்பி காதலிச்சவன் ஏமாத்திட்டு போயிட்டான். எனக்கு அடைக்கலம் தந்த அனாதை இல்லமும் நான் நடத்தை கெட்டவள்னு என்னை வெறுத்து ஒதுக்கிட்டாங்க. 

வயிற்றில் சுமையோடு யாருடைய ஆதரவும் இல்லாமல் நான் பட்ட கஷ்டம் அப்பப்பா…. 

நல்லவங்க நாலு பேர் இருந்ததாலே படிச்ச படிப்பு உதவ குழந்தையுடன் பொழுதை ஓட்ட ஆரம்பிச்சேன். 

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான தொந்தரவு, கஷ்டங்கள் போதும் விஜி. ஓடி ஓடி கலைச்சுட்டேன். 

என் மகனுக்கு ஒரு நல்ல அம்மா, அப்பா கிடைச்சால், அவனை தத்து கொடுத்துட்டு, எங்கேயாவது கண்காணாமல் போயிடறேன்” 

“பெத்த பிள்ளையை மறந்து உன்னால் வாழ முடியுமா மாலதி… உன் வாழ்க்கையை கெடுத்தவனை கண்டுபிடிச்சு, செருப்பால் அடிக்கணும். பாவி அவன் மட்டும் நல்லா வாழ்ந்திடுவானா.” 

“தப்பு என்னோடது. அன்புக்கு ஏங்கின நான், அவன் பேச்சில் மயங்கிட்டேன். அதன் பலனை இப்ப அனுபவிக்கிறேன். 

ஆஸ்திரேலியாவில் இருந்து நம்மோடு படிச்ச சுதா பேசி னா அவ ஹாஸ்பிடலில் எனக்கு வேலை வாங்கி தர்றதாக சொல்லியிருக்கா அதற்கான முயற்சியில் தான் இப்ப இறங்கியிருக்கேன். 

நான் கிளம்புவதற்குள், என் பிள்ளைக்கு ஒரு நல்ல அம்மா, அப்பாவை அடையாளம் காட்டணும். என் பிள்ளை என்னைப் போல அனாதையாக வளரக் கூடாது. அவன் வாழ்க்கை நல்லபடியாக அமையணும். எனக்கு நீ இந்த உதவியை செய்யணும் விஜி” 

“சரி, எனக்கு தெரிஞ்ச லாயர் இருக்காரு. அவர் கிட்டே பேசிட்டு எப்படி செய்யலாம்னு முடிவு பண்ணுவோம்” 

தன்னருகில் வரும் மகனை அணைத்து முத்தமிடுகிறாள் மாலதி. 


ஊரிலிருந்து மகனை பார்க்க வந்திருந்தாள் ஜானகி. “புவனா, அம்மா வந்தால் உனக்கும் வசதியாக இருக்கு ஊரில் தனியாக தானே இருக்காங்க. நம்மோடு இருக்கட்டுமே” 

கிரிதரன் சொல்ல, 

“அதெப்படி, மாப்பிள்ளை வீட்டில் இருக்கிறதுன்னு அம்மா நினைப்பாங்க. அதுமட்டுமில்லை கடல் மாதிரி சொத்து, சுகம் இருக்கு அனுபவிக்கட்டுமே…” 

எனக்கும் தங்கமான அப்பழுக்கில்லாத மாப்பிள்ளையை கட்டி வச்சுட்டோம்ங்கிற நிம்மதியோடு இருக்காங்க” 

“அப்படியா.. உன் புருஷன் தங்கம்னு உங்கம்மாவுக்கு தெரியுமா?” 

குறும்பாக சிரித்தபடி மனைவியின் அருகில் வர, 

“போதும், போதும் ரொமான்ஸ் பண்ற நேரம் இது இல்லை” கணவனை செல்லமாக தள்ளி விட்டவள், ரூமை விட்டு வெளியே வருகிறாள். 

சோபாவில் உட்கார்ந்திருந்த ஜானகி, புன்னகையோடு மகளை பார்க்கிறாள். 

அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, “மனசெல்லாம் நிறைஞ்சுருக்கு புவனா. நீ இப்படி குழந்தைகள், கணவன்னு சந்தோஷமாக வாழறதை பார்க்கும் போது, நாம் நிறைய புண்ணியம் பண்ணியிருக்கோம்னு தோணுது. உனக்கு மாப்பிள்ளை பார்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா. நம்ப கிட்டே இருக்கிற பணத்துக்கு ஆசைபட்டு, யார்கிட்டேயாவது ஏமாந்துடுவோமோன்னு பயந்தேன். 

நல்லவேளை கிராமத்தில் உங்க மாமனாருக்கு இருக்கும் மரியாதையையும், உங்க குடும்பத்துக்கு இருக்கும் கௌரவத்தையும் கேள்விப்பட்டு, தைரியமாக மாப்பிள்ளையை முடிவு பண்ணினேன்”

“அப்ப உன் மாப்பிள்ளையை பார்த்து முடிவு பண்ணலை. அவர் அப்பாவை நம்பி தான் பெண் கொடுத்தேன்னு சொல்றே அப்படித்தானே” 

சிரித்தபடி அம்மாவின் அருகில் உட்காருகிறாள். 

“சரி கேட்கணும்னு நினைச்சேன். உன் கொழுந்தனாருக்கு டீரிட்மெண்ட் போயிட்டிருக்குன்னு சொன்னியே. ஏதாவது நல்ல தகவல் இருக்கா” 

“இல்லம்மா… நந்தினி அக்காகிட்டே ஏதோ குறை இருக்காம். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பில்லைன்னு சொன்னாங்க. பாவம்தான். ஆனால் அதை பத்தி நாம் பேச முடியாது” 

“என்னடி இப்படி சொல்ற. கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சு. குழந்தை பிறக்காதுன்னு தெரிஞ்ச பிறகும்… அதை பத்தி பேசாமல் எப்படி இருக்க முடியும்..? உன் மாமனார் என்ன சொல்றாரு” 

“இப்போதைக்கு இதை பத்தி பேசவே எல்லாரும் தயங்கறாங்க. அதுமட்டுமில்லை, எங்களுக்கு குழந்தை இல்லாட்டியும் பரவாயில்லை. நானும் நந்தினியும் சந்தோஷமாக எங்க வாழ்க்கையை தொடருவோம்னு அவர் அண்ணன் சொல்லிட்டாரு” 

“இதெல்லாம் பேச நல்லா இருக்குமே தவிர, கதைக்கு ஆகாது. போகப் போக வாழ்க்கையே சலிச்சிடும். உங்க மாமனார் தோட்டம், துறவு, பண்ணை வீடுன்னு நிறைய சொத்து சேர்த்து வச்சுருக்காரு. நாளைக்கு வாரிசு வேணும்னு நினைக்க மாட்டாரா… எனக்கு ஒரு யோசனை தோணுது புவனா. 

“என்னம்மா சொல்ல வர்றே” 

அருகில் வந்த மகனை எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறாள்.

“உன் சித்தி மகள் புஷ்பாவுக்கு இன்னும் நல்ல இடமா அமையலை. வயசும் ஏறிட்டே போகுது. அவள ஏன் உன் கொழுந்தனுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைக்கக் கூடாது” 

கண்களில் அதிர்ச்சி தெரிய அம்மாவை பார்க்கிறாள். 

“அம்மா நீ புரிஞ்சுதான் பேசுறியா. நந்தினி அக்கா இருக்கும் போது எப்படி… முதலில் ரகு அத்தான்… இதுக்கெல்லாம் ஒத்து க்க மாட்டாரு. ஒரு குழந்தைக்காக இன்னொரு கல்யாணமா… 

“அடிமேல் அடி வச்சா அம்மியும் நகரும்னு சொல்வாங்க. வாழ்க்கையில் சலிப்பு வரும் போது அவரே ஏத்துப்பாரு. நந்தினிக்கு நிலைமையை புரிய வைப்போம். நல்ல சம்பாத்தியம் உள்ள டாக்டர், இரண்டு குடும்பத்தை நடத்த முடியாதா…”

நாளைக்கு குழந்தை பிறந்தால், தன்னால அவரே நந்தினி கிட்டேயிருந்து விலகிடுவாரு” 

“எப்படிம்மா இப்படியெல்லாம் யோசிக்கிற. இந்த பேச்சை இதோட நிறுத்திக்க. உன் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்” 

“போடி.. நீதான் உலகம் புரியாதவளா இருக்கே. நான் சொன்னதை நேரம் வரும் போது, உன் மாமியார் கிட்டே சொல்லிப் பார். அவங்க கட்டாயம் ஏத்துப்பாங்க. என்னவோபோ புஷ்பாவுக்கு அப்படியொரு பிராப்தம் இருந்தால் நடக்கும்” 

பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள் ஜானகி. 


கோயமுத்தூருக்கு மெடிக்கல் கான்பரன்சுக்காக வந்தரகுவரன், இரவு டின்னருக்கு வீட்டிற்கு வருவதாக சொல்ல, 

சமையல் ஆள் உதவியுடன் டின்னர் ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள் புவனா. 

“அம்மா, பால் பணியாரம் செய்றியா. ரகு அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும்” 

“செய்யறேன். பச்சரிசியும், உளுந்தும் ஊற வை. எப்ப வர்றாரு” 

“நைட் எப்படியும் ஒன்பது மணிக்குள்ள வந்துடுவாரு. இங்கே தங்கிட்டு காலையில் கிளம்பறதா சொன்னாரு” 

ரகுவரன் வந்திருக்க. அண்ணனும், தம்பியும் ஹாலில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள். 

மரியாதை நிமித்தம் புவனாவின் அம்மாவிடம் இரண்டு வார்த்தை பேசியவன், 

“உன் மாமியார் ஊரிலிருந்து வந்திருப்பதாக சொல்லியிருந்தால், நான் அப்படியே கிளம்பியிருப்பேன். இப்ப பாரு அவங்களும் நான் வந்திருக்கேன்னு தடபுடலாக டிபன் பண்ணிட்டு இருக்காங்க” 

தம்பியிடம் சொல்கிறான். 

“அதனாலென்ன உன்னை பார்த்து நாளாச்சு பார்க்கணும்னு அவங்களும் சொல்லிட்டு இருந்தாங்க..” அதற்குள் சாப்பிட அழைப்பு வர, டைனிங்ஹாலுக்கு வருகிறார்கள். 

“பெரிய மாப்பிள்ளை. கூச்சப்படாமல் சாப்பிடுங்க. இன்னைக்கு என் கையால உங்களுக்காக நிறைய பலகாரம் செய்திருக்கேன். பால் பணியாரம் உங்களுக்கு பிடிக்கும்னு புவனா சொன்னா அதுவும் செய்திருக்கேன்” 

“எதுக்கு அத்தை நீங்க சிரமப்பட்டுக்கிட்டு உங்களுக்கு சேவை செய்ய அத்தனை ஆட்கள் இருக்கும் போது… நீங்க எனக்காக சிரமப்படறீங்க.’ 

“அப்படி சொல்ல முடியுமா… எவ்வளவு பெரிய பணக்கார மாமியாராக இருந்தாலும், மாப்பிள்ளைன்னா, தனி மரியாதை தரணும் அது எங்க குடும்ப வழக்கம்” 

இருவருக்கும் புவனாவுடன் சேர்ந்து பார்த்து, பார்த்து பரிமாறுகிறாள் ஜானகி. 

“திருச்சியிலிருந்து வந்திருக்காங்கன்னதும் எனக்கு திருச்சியில் கட்டி கொடுத்த கவிதா ஞாபகம் வருது. அவளும் தில்லை நகரில் தான் இருக்கா” 

ஜானகி சொல்ல, 

“நீங்க யாரை சொல்றீங்க. குமரேசன் மாமா பெண் இரண்டாம் தாரமாக கட்டி கொடுத்தாங்களே அவளை சொல்றீங்களா… 

புவனா கேட்க, 

“யார் புவனா அது… எதுக்கு இரண்டாம் தாரமாக கட்டி கொடுத்தாங்க…” 

சாப்பிட்டபடி கிரிதரன் அவர்கள் பேச்சில் கலந்து கொள்கிறான். 

“அது ஒரு பெரிய கதை மாப்பிள்ளை. கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு. குழந்தை இல்லையாம். முதல் தாரத்திற்கு குழந்தை பிறக்காதுன்னு கல்யாணமான இரண்டு வருடத்திலேயே தெரிஞ்சு போச்சு. இருந்தாலும் இப்படியே காலத்தை ஓட்டு வாம்னு இருந்திருக்காங்க. ஒரு காலகட்டத்தில் கவிதாவுக்கு கட்டிக் கொடுத்த அந்த மாப்பிள்ளை வேலைக்கு போக விருப்பம் இல்லாமல் எதையோ பறி கொடுத்தது போல வாழ ஆரம்பிச்சுட்டாரு. 

முதல் தாரத்திற்கும் மலடியாக வாழறதில் அர்த்தமில்லைன்னு அவளே தன் புருஷனுக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சுட்டா. 

எங்க குடும்பம் வாழையடி வாழையாக தழைச்சு வாழற குடும்பம். அதனால அவங்க விருப்பப்பட்டு எங்க சொந்தக்கார பெண் கவிதாவை பெண் கேட்டு வந்தாங்க. 

இவங்களும் சம்மதிக்க போன வருஷம் தான் கல்யாணம் நடந்துச்சு. இப்ப ஒரு வயதில் குழந்தை இருக்கு. 

இப்ப கவிதா மாப்பிள்ளை என்ன சொல்றாரு தெரியுமா. நாலு வருஷத்தை இப்படி வெறுமையாக ஒட்டிட்டேன். முதலிலேயே இந்த முடிவுக்கு வந்திருந்தால், நாலு வயசில் பையன் இருந்திருப்பான்னு. 

இப்ப மூத்த தாரம் தான் முழுக்க முழுக்க குழந்தையை பார்த்துக்கிறாளாம். ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.” 

சொன்னவள், ரகுவரனிடம் வந்து, 

“மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் பால் பணியாரம் வைக்கட்டுமா” கேட்க, 

ஏதோ யோசனையில் இருந்தவன், ‘வேண்டாம்’ என மறுக்க, புவனாவை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் ஜானகி. 


“அம்மா நீ பாட்டுக்கு இப்படி ஒரு கதை கட்டி சொல்லிட்டே… ரகு அத்தான் பாவம் முகமே மாறிப் போச்சு…” 

“உலகத்தில் இதெல்லாம் சகஜம். இப்படியொரு முடிவெடு த்தால் வாழ்க்கை நல்லா இருக்கும்னு அவர் தெரிஞ்சுக்கட்டும்னு தான் அப்படி சொன்னேன். பாரேன், புஷ்பாவுக்கும், உன் கொழுந்தனுக்கும் நானே கல்யாணம் நடத்தி வைப்பேன். இது நடக்கும்” 

“உன் போக்கே எனக்கு புரிபடலை, சரி வா. சாப்பிடலாம்” அம்மாவுடன் கிச்சனுக்கு போகிறாள் புவனா. 

அத்தியாயம்-5

சாமி விளக்கேற்றுகிறாள் நந்தினி. 

ஜன்னல் திரையை விலக்கி, எதிர்வீட்டை பார்க்க, நாலைந்து சிறுவர்கள் சப்தமிட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரிகிறது. 

கண்களில் கண்ணீர் திரள்கிறது. 

“எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு குறையை வைத்தாய் கடவுளே” மனம் கசிகிறது. 

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு புறப்பட்ட போது, அண்ணன் சொன்னது, இன்றும் அவள் காதில் ஒலிக்கிறது. 

“நந்தினி, அம்மா இறந்தப்ப உனக்கு பத்து வயசு. விபரம் புரியாத வயதில் இருக்கும் உன் தங்கச்சிக்கு நீதான் எல்லாமுமாக இருக்கணும் குமரா… அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடு. உன் அப்பா குடிகாரர் அவரை நம்ப முடியாது” 

மரண படுக்கையில் அம்மா சொன்னாங்க நந்தினி. 

இப்பதான் என் மனசுக்கு நிம்மதியும், திருப்தியும் கிடைச்சிருக்கு. 

நானும் உன் அண்ணியும் எங்க குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கூட நினைக்கலை. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தரணும்ங்கிற குறிக்கோளோடு வாழ்ந்தோம். 

அது நிறைவேறிடுச்சி. தகுதிக்கு மீறி செலவு பண்ணி டாக்டர் மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்திட்டேன். 

நீ சந்தோஷமாக உன் புகுந்த வீட்டை அனுசரிச்சு வாழணும் நந்தினி. இனிமேல் தான் நானும் உன் அண்ணியும் எங்களுக்காக வாழப் போறோம். 

உன் வாழ்க்கையை நரகமாக்கிக்கிறதும், சொர்க்கமாக்கிக்கிறதும் உன் கையில்தான் இருக்கு. விட்டுக் கொடுத்து உன் குடும்ப நலனை முன் வைத்து எந்த முடிவையும் எடுத்தால், உன் வாழ்க்கை நிச்சயம் சொர்க்கமாக அமையும் நந்தினி” 

அண்ணன் அன்று சொன்னது… ‘என் குடும்பத்திற்காக நான் ஒரு முக்கிய முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறேன். எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது நிச்சயம் இன்னும் கொஞ்சநாளில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். இதை கேள்விபட்டதிலிருந்து அத்தையின் முகமே சரியில்லை. அதுமட்டுமில்லை இவரும் என்னிடம் தன்கவலையை மறைத்து சிரித்து பேசுகிறாரேதவிர, தனிமையில் எதையோ யோசித்தபடி இருக்கிறார். பழைய கலகலப்பு குறைந்து விட்டது. 

வாழ்க்கையில் எல்லாம் கிடைத்த மனிதர். உயிரை காக்கும் கௌரவமான டாக்டர் தொழில். அன்பான பெற்றவர்கள், எந்தவித குறையுமில்லாமல் ஏகப்பட்ட சொத்து சுகம். நான் மட்டும் தான் அவருக்கு தப்பானவளாக அமைந்து விட்டேன். 

இதற்கு ஒரே வழி. அவர் வாழ்க்கையில் இருந்து நான் சற்று ஒதுங்கி, அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைப்பது… இது என்னால் முடியுமா… அன்பும், பாசமும், காட்டும் என் கணவரை என்னால், விட்டுத் தர முடியுமா… அவரை இன்னொருத்தியோடு பங்கு போட என் மனம் இடம் தருமா…’

நினைக்க நினைக்க நந்தினியின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. 


“நந்தினி நாளைக்கு சன்டே வீட்டில் எதுவும் செய்ய வேண்டாம். காலையில் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு அப்புறம் ஷாப்பிங் போயிட்டு லஞ்ச் வெளியே சாப்பிட்டு வரலாம்” 

இரவு ரகுவரன் சொல்ல, 

தலையாட்டினாள் நந்தினி. 

“சொன்னது போல இருவரும் கோவிலுக்கு போய் விட்டு, கடைக்கு போக, ” உனக்கு பிடிச்ச மாதிரி, நாலைஞ்சு பட்டுப்புடவை எடுத்துக்க நந்தினி” 

“எதுக்குங்க, ஒன்று போதும், இப்ப எதுவும் விசேஷம் வரலையே… “

“அதனாலென்ன, என் வொய்புக்கு நான் வாங்கித் தரேன்” சிரிப்புடன் சொல்கிறான். 

நந்தினி புடவை செலக்ஷனில் மூழ்கியிருக்க. 

இரண்டு வயதுள்ள ஒரு குட்டி பையன், 

“அம்மா”, என்றழைத்தபடி நந்தினியை பின்னால் கட்டிப் பிடிக்க, 

அதிர்ச்சியுடன் திரும்புகிறாள். 

மலங்க மலங்க விழித்தபடி அந்த சிறுவன் அவள் முகத்தையே பார்க்க அதற்குள் அங்கு வந்த பெண், 

“ஸாரிங்க நீங்களும் என்னை மாதிரி கலரில் புடவை கட்டி இருப்பதால், நான்தான்னு நினைச்சு உங்களை கட்டி புடிச்சுட்டான்” சொன்னவள், 

“ஏய்.. வாலு… வாக போகலாம். ஒரு இடத்தில் இருக்க மாட்டியா…” 

சொன்னபடி சிறுவனை அழைத்து போக, 

“அம்மா” என்று அழைத்து பிஞ்சுகரங்களால் கட்டிப்பிடித்த அந்த நிமிடம். மெய் சிலிர்த்தாள் நந்தினி. 

வாழ்க்கையில் எத்தனை சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறேன். மனம் விம்மியது. 

அருகில் நின்ற ரகுவரனை காணாமல் அங்கும் இங்கும் பார்க்க. சற்று தொலைவில் இளம் பெண்ணுடன் சிரித்து பேசியபடி நின்று கொண்டிருந்தான் ரகுவரன். 

“என்னங்க புடவை செலக்ட் பண்ணிட்டேன்” 

பேசிக் கொண்டிருக்கும் அவனருகில் வருகிறாள் நந்தினி.

“மாலதி, இவங்க என் வொய்ப்… நந்தினி” 

உடனே அந்த பெண், மரியாதையுடன், 

“வணக்கம் மேடம்” 

என்று புன்னகையுடன் சொல்ல, 

புருவத்தை உயர்த்தி, இவள் யார் என்பது போல பார்க்க, “நம்ம ஹாஸ்பிடலில் புதுசா ஜாயின் பண்ணியிருக்கா பேர் மாலதி’ 

ரகுவரன் சொல்ல, அவளை பார்க்கிறாள். 

நல்ல கோதுமை நிறம், திருத்தமான முகம், எளிமையான அலங்காரத்திலும் பளிச்சென்ற அழகுடன் தெரிந்தாள். 

“சரி… நந்தினி நீ போய் கவுண்டரில் பில் போடு இவளோட பையன் பிறந்த நாளாம். டிரஸ் எடுக்க வந்திருக்கா. நான் போய் என் சார்பில் ஒரு டிரஸ் வாங்கி பிரசெண்ட் பண்ணிட்டு வரேன்”

“ஐயோ… அதெல்லாம் வேண்டாம் டாக்டர். நீங்க அவங்க ளாடு போங்க. நான் கிளம்பறேன்” 

“தெரிஞ்ச பிறகு அப்படியெல்லாம் விட முடியாது மாலதி. உன்னை பத்தி சாந்தி நிறையவே சொல்லியிருக்காங்க” 

ஒரு சின்ன கிப்ட் தான் வா போகாலம்”. சொன்னவன்.

“ஓ.கே. நந்தினி… ஒரு அஞ்சு நிமிஷம் வந்திடறேன்” அவளுடன் ஜோடியாக பேசியபடி போக, 

மனதில் சின்ன உறுத்தல், 

‘இவளைப் போல் ஒருத்தி இவருக்கு மனைவியாக வந்திருந்தால், இவருக்கும் ஒரு பையன் இருந்திருப்பான். அழகிலும் அவருக்கு பொருத்தமாக இருக்கிறாள்… 

சை… என்ன நினைப்பு இது… அந்த பெண் இன்னொருவரின் மனைவி.’ 

நினைவை ஒதுக்கியவளாய் நடந்தாள். 

அத்தியாயம்-6

மாலதி பீரோவில் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருக்க, ஆதி அருகில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். 

‘காலிங்பெல்’ அடிக்க, கதவை திறந்தாள் மாலதி. விஜி நின்றிருந்தாள். 

“வா விஜி. இன்னைக்கு சன்டேங்கிறதாலே கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டிருந்தேன். 

நானே உன்னை தேடி வரணும்னு இருந்தேன் விஜி. இன்னும் நாலு மாசத்தில் ஆஸ்திரேலியா கிளம்ப வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன். அதுக்குள்ள ஆதியை சேர்க்கணும். தெரியாமல் நான்தான் அடையா லல இடத்தில் வாழ்ந்துட்டேன். 

என் மகனாவது பேர் சொல்லும்படி வாழணும்” – குரல் கரகரக்க சொல்கிறாள். 

“அது விஷயமாக விபரம் சொல்லத்தான்வந்தேன்மாலதி. நம்ப லாயருக்கு தெரிஞ்ச நண்பர்கனடாவில் இருக்காராம். அவருக்கு பத்து வருடமாக குழந்தைக்கு ட்ரை பண்ணி சக்ஸஸ் ஆகாமல் ஆடாப்ட்’பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்காராம். பெரிய தொழிலதிபர். நம்ப ஊர்க்காரர். அதனால் வந்து ஒரு குழந்தையை தத்தெடுப்பதுன்னு முடிவு பண்ணி, அடுத்த மாதம் சென்னை வர்றாராம். 

லாயர் அவர்கிட்டே போனில் பேசி, உன்னை பத்தி சொல்லியிருக்காரு. பையனுக்கு நாலு வயது ஆகப்போகுதுன்னு சொன்னாராம். எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தால் ஒ.கே.ன்னு சொல்லிட்டாராம்.” 

மாலதியின் முகம் மலர்கிறது. 

“அப்படியொரு அதிர்ஷ்டம் என் மகனுக்கு இருந்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன் விஜி. எப்படியாவது இந்த இடத்தில் என் பிள்ளை போய் சேரும்படி ஏற்பாடு பண்ணு விஜி. காலமெல்லாம் உனக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்” “என்ன மாலதி இது. உன் நிலைமை புரிஞ்சு உதவ நினைக்கிறேன் அவ்வளவுதான்.” 

“கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே மாலதி. இந்த நாலு வருஷத்தில் உன்னை காதலிச்சு ஏமாத்திட்டு போனவனை கண்டுபிடிக்கணும்னு எந்த முயற்சியும் செய்யலையா? 

அவன் போட்டோ இருந்திருந்தால் போலீஸ் மூலமாக கூட ஏதாவது செய்திருக்கலாமே. உன் வாழ்க்கையை இப்படி வீணடிச்சி, உன் பிள்ளையையும் பிரிஞ்சு வாழப்போற துர்ப்பாக்கிய நிலைக்கு வந்துட்டியே மாலதி” 

தோழி மீது உள்ள உண்மையான அக்கரையில் கேட்கிறாள். 

“இல்லை விஜி. உண்மையான காதலாக இருந்திருந்தால் பரிபூரணமாக நம்பின என்னை ஏமாத்தியிருக்க மாட்டான். அவன் அன்பு போலியானது. அது தெரிஞ்ச பிறகு, அவனை கண்டுபிடிச்சு என்ன பிரயோசனம். 

இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். என் மகனாவது சீரும், சிறப்புமாக வாழட்டும். அது போதும் எனக்கு” 

மனம் நெகிழ சொல்கிறாள் மாலதி. 


மாலதி வேலை பார்த்துக் கொண்டிருக்க, அங்கு வந்த சாந்தி,

“நேத்து டாக்டரையும், அவங்க மிஸஸையும் கடையில் பார்த்தியா மாலதி” 

“ஆமாம். சிஸ்டர். என் மகனுக்கு அடுத்த வாரம் பார்த்டே வருது டிரஸ் எடுக்க போயிருந்தேன். அது தெரிஞ்சு டாக்டரே நல்ல விலை உயர்ந்த டிரஸ் வாங்கி ப்ரசென்ட் பண்ணினாரு. ரொம்ப நல்ல மனிதர்”

“டாக்டர், இங்கே ஹாஸ்பிடலில் வேலை பார்க்கிறவங்களை அவர் குடும்ப உறுப்பினர் போலத்தான் பார்ப்பாரு. இங்கே வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பளத்தை தாண்டி நிறையவே செய்திருக்காரு. பாவம் கடவுள் இன்னும் அவருக்கு குழந்தை பிராப்தத்தை கொடுக்கலை” 

“நானே கேட்கணும்னு இருந்தேன். டாக்டருக்கு குழந்தை இல்லையா” 

வருத்தம் தெரிய கேட்கிறாள். 

“இரண்டு பேரும் ட்ரீட்மெண்டில் இருக்காங்க. அந்த கடவுள் தான் கருணை செய்யணும். சரி நீ வேலையை பாரு டாக்டர் வர்ற நேரமாச்சு” 

சாந்தி உள்ளே போகிறாள். 


மதியம் லஞ்ச்-டயம் அரட்டையடித்தபடி அனைவரும் சாப்பிட, மாலதி அதில் கலந்து கொள்ளாமல் யோசனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

“சாந்தி சிஸ்டர், நீங்க டாக்டர் வீட்டிற்கு போயிருக்கீங்களா”

”ம்.. இரண்டு முறை போயிருக்கேன். வீடு பெரிய வீடுதான். இருந்தாலும் கிராமத்தில் இருக்கிற அவங்க பண்ணை வீடு அட்டகாசமாக இருக்கும்” 

“அப்படியா அங்கேயும் போயிருக்கீங்களா” 

“ஆமாம். போன வருஷம் ஒரு கல்யாணத்துக்காக அந்த பக்கம் போயிருந்தேன். டாக்டர் அந்த சமயம் அவங்க கிராமத்தில் தம்பி பையன் பர்ஸ்ட் பர்த்டேன்னு வரச் சொல்லி கூப்பிட்டாரு. அப்ப அவங்க குடும்பத்தில் இருப்பவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைச்சது. 

அப்பா, அம்மா, தம்பி, அவர் மனைவி குழந்தைங்கன்னு எல்லாரையும் பார்த்தேன். 

சுற்றிலும் மரம், செடிகள் சூழ, நடு நாயகமாக அமைந்திருந்த அந்த வீடு, ஒரு குட்டி பங்களா போல இருந்துச்சு. 

ஊரில் அவரோட அப்பாவுக்கு ஏகப்பட்ட மரியாதை . ஊர் ஜனங்க மரியாதையோடு “ஐயா”ன்னு தான் கூப்பிடுறாங்க. அன்னைக்கு ஊருக்கே தடபுடலாக விருந்து வச்சாங்க. 

காலம் காலமாக அந்த கிராமத்தில் கௌரவமாக வாழற குடும்பம் அதான் டாக்டரும் பெருந்தன்மையோடு இருக்காரு”

“நீங்க சொல்றதை பார்த்தால், எங்களுக்கும் அவர் கிராமத்திற்கு போய், பார்க்கணும் போல இருக்கு” 

“என் கிட்டே பர்த்டே சமயம் எடுத்த பிக்சர்ஸ் இருக்கு பார்க்கிறீங்களா…” 

“காண்பீங்க சிஸ்டர்” 

ஆவலுடன் அனைவரும் அவளை சூழ, 

செல்போனில் இருந்த படங்களை ஒவ்வொன்றாக காண்பிக்கிறாள். 

“இது தான் அவங்க வீடு. முகப்பே எவ்வளவு பெரிசா இருக்கு பாருங்க. 

இதுதான் டாக்டரின் அப்பா, அம்மா பார்க்கவே அவங்கப்பா கம்பீரமாக தெரியறாரு இல்லையா… 

இது டாக்டரோடதம்பியின் குட்டி பையன் அஜய், எவ்வளவு கியூட்டா இருக்கான் பாருங்க. இது அவனோட அக்கா அதிதி…

இது அவங்க பேமிலி போட்டோ… எல்லாரும் இருக்காங்க”

எல்லோரும் பார்க்க மாலதி அமைதியாக சாப்பிட்டு கை கழுவி வர, 

“என்ன மாலதி, டாக்டர் பேமிலி போட்டோவை நீ பார்க்கலையா… வந்து பாரு” 

சாந்தி கூப்பிட.. 

பார்க்காவிட்டால் தப்பாக நினைப்பார்கள் என்று மேலோட்டமாக பார்க்க, டாக்டரின் அருகில், மனைவியுடன் கையில் மகனை தூக்கியபடி சிரித்த முகத்துடன் நிற்பவன்… இவன்… என்னை ஏமாற்றியவன்…’ கண்கள் இருள மயங்கி விழுகிறாள். 

கண்மூடி படுத்திருக்கிறாள் மாலதி. 

“ப்ரஷர் அதிகமாகி மயங்கி விழுந்துட்டா. ஊசி போட்டிருக்கேன். ஒரு இரண்டு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். என்னாச்சு சாந்தி… மதியம் லஞ்ச் சாப்பிடலையா” 

ரகுவரன் படுத்திருக்கும் மாலதியின் அருகில் நின்று கேட்க,

“இல்லை டாக்டர்.சாப்பிட்டு முடிச்சபிறகுதான் இப்படியாச்சு. அவள் மனதில் ஏகப்பட்ட கவலை. அவ ஹஸ்பெண்ட் வெளிநாடு போனவன் திரும்ப வரவே இல்லையாம். நான்கு வயது பையனுடன் தனிமையில் கஷ்டப்படறதாக கேள்விபட் டன்”” 

சாந்தி சொல்ல, 

“பாவம், இந்த சின்ன பொண்ணுக்கு இந்த வயதில் இப்படியொரு கஷ்டமா… சரி சாந்தி மாலதி ரெஸ்ட் எடு க்கட்டும். ஈவ்னிங் பஸ்ஸில் போக வேண்டாம். என்காரிலேயே ட்ராப் பண்றேன். கண் விழிச்சதும் சொல்லுங்க. நான் ஓ.பி. பார்க்க போறேன்.” 

– தொடரும்…

– உயிர் தொடும் அமுதம் நீ!, தேவியின் கண்மணி இதழில் (03-11-2021) வெளியான நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *