“நீ குடியானவம் பையனா? காத்தாள எந்திருச்சு இத்தன புழுதண்ணிய குடிச்சுப்போட்டு, ஆடுமாட்ட அவுத்து மேய உட்டுட்டு, காட்டுக்குள்ள இருக்கற வேலையப்பாக்காம, படிச்சுப்போட்டம்னு திண்ணைலயே குத்தவச்சு குக்கீட்டு, செல்போன நோண்டிட்டு இருக்கறயே… நீ எப்படிடா பொளைப்பே…?” கோவணத்துடன் வயக்காட்டில் வரப்பு வைக்கப்போக மம்பட்டியை தோளில் போட்டபடி கோபமாக பேசிய அப்பாவை கோபமாக பார்த்தான் கிரி.
நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் போக வெள்ளிங்கிரி மலை சிவனை வேண்டி பிறந்ததால் வெள்ளிங்கிரி என பெயர் வைத்தார் அப்பா குப்பணகவுண்டர். அதை சுருக்கி கிரி என வைத்துக்கொண்டான்.
“இத பாருங்கப்பா. என்னைய வேலைக்கு படிக்க வச்சுப்போட்டு இப்ப வெவசாயம் பாக்கச்சொன்னா நாயமில்ல… நாளைக்கே பெங்களூரு போயி வேல தேடறேன். இங்கிருந்தாத்தானே தண்ணி கட்டு, களவெட்டுன்னு பொலம்பிடிருப்பீங்க. ரொம்ப பேசுனீங்கன்னா போனா இந்த பக்கம் தல வச்சு படுக்கமாட்டேன் ஆமா” என கூறி தந்தையை அதிர வைத்தான் கிரி.
மகனின் பேச்சைக்கேட்டு மனமுடைந்த தந்தை, தோளிலிருந்த மம்பட்டியை கீழே போட்டுவிட்டு “ஏஞ்சாமி இப்படிச்சொல்றே…? ரொம்பநாள் கொழந்தையில்லாம நாங்க சாமிய வேண்டி நீ பொறந்தே. நாம் படிக்காட்டியும் உன்னப் படிக்க வச்சுப்போடோனும்னு ஆட்ட மேச்சு, மாட்டக்கறந்து, கோழிய வித்து உன்னக் காப்பாத்திப் போட்டேன். ஒன்னம் நாஞ்சாகற வரைக்கும் பாடுபட்டு உனக்குப்போட்டுருவேன். ஆனா இப்படிப்பேசுனீனா வேப்பமரத்துல தூக்கு போட்டு இப்பவே செத்துப்போவேன், ஆமா…” என்றவர் சோர்வுடன் திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் சமாதானமாகி காட்டுக்குள் சென்றார்.
பெங்களூர் சென்ற கிரிக்கு வேலை கிடைத்தது. வேலை கிடைத்ததால் பெண்ணும் கிடைத்து திருமணமாகி, குழந்தையும் பிறந்தது. வெளியே சென்று வர கார், சகல வசதிகளுடன் வாடகை வீடு, குழந்தையை அதிக கட்டணத்தில் படிக்க வைக்க என கணவன், மனைவி இரண்டு பேரும் வாங்கும் சம்பளம் சேமிக்க இயலாமல் கரைந்தது.
பிறந்த ஊருக்கு வருவதும், கிராமத்து உறவுகள் வீடுகளுக்கு செல்வதும் தகுதி குறைவாக நினைத்தனர். இப்படியிருக்க உலக பொருளாதார மந்த நிலையால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்த நிலையில், கிரியின் கம்பெனியும் வேலையை விட்டு நீக்கியதால் தம்பதியர் இரண்டு பேருக்கும் வேலை போனது. பின் பல கம்பெனிகளுக்கு வேலைக்கு விண்ணப்பித்தும் கிடைக்காமல், சேமிப்பும் இல்லாமல் வீட்டு வாடகை, பள்ளிக்கட்டணம், இதர செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில் காரை விற்று இருந்த கடனை அடைத்து விட்டு ஊர் திரும்பினர். வாழ்வே தலைகீழாகத் தெரிந்தது.
ஊருக்கு வந்த கிரி, தந்தைக்கு உடல்நலம் பாதிக்கவே விவசாய வேலைகளைத்தானே கவனித்தான். மனைவி மாடு வளர்த்து பால் விற்பதால் பணம் ஈட்டினாள். செலவு மிகவும் குறைந்து சேமிக்க முடிந்தது. பழைய வீட்டை புணரமைத்து மகிழ்ச்சியுடன் பேற்றோருடன் வாழத்துவங்கினான். நகர வாழ்வில் இருந்த கடன், கவலை, அவசரம், பயம், பதட்டம் எல்லாம் கிரியிடமிருந்து விடை பெற்றது. தோட்டத்து வேலையை உடற்பயிற்ச்சியாக எண்ணினான். முன்பை விட உடல் ஆரோக்யம் கூடியிருந்தது. உறவுகளின் அனைத்து நிகழ்வுகளுக்கும் சென்று வர முடிந்தது. ‘விவசாயம் கேவலமான தொழில்’ எனும் மன நிலை மாறி ‘உலகில் விவசாயமே உத்தமத்தொழில்’ என்பதை உணர்ந்து கொண்டான் கிரி.
நிதர்சனமான நீரோட்டமுள்ள கதை….