“இப்ப பொண்ணு பார்த்துட்டுப் போன மாப்பிள்ளைக்கு என்னம்மா குறை? நல்ல வேலை, கை நிறைய சம்பளம்?’ ஆதங்கமாய் கேட்ட சரவணனிடம்…
“அப்பா, என் ஃபிரெண்ட் சவிதா இதே கம்பெனியிலதான் வேலை பார்க்கிறா. அவ சொன்ன விவரத்திற்கும், இப்ப மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொல்லறத்துக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு! ஏதோ பொய் சொல்றாங்கப்பா…!’
ஸ்வேதா சொல்லி முடிக்கவும், விட்டுச்சென்ற செல்போனை எடுக்க வந்த மாப்பிள்ளை முரளி…
“சார், எங்க அப்பா, அம்மா சொன்ன மாதிரி அஸிஸ்டண்ட் மேனேஜரா நான் வேலை பார்க்கலை. சம்பளமும் அவங்க சொன்னதை விடக் குறைவுதான். ஏதோ பையனுக்குக் கல்யாணம் ஆகணும்கிற எண்ணத்துல அவங்க அப்படிச் சொல்லிட்டாங்க! அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!’ என கூறிவிட்டு செல்போனை எடுத்துச் சென்றான்.
“ஓ… மை காட்! நீ சொன்னது சரிதான் ஸ்வேதா! நல்லவேளை தப்பிச்சோம், இந்தக் கல்யாணத்தை நிறுத்திட வேண்டியதுதான்…!’
“இல்லப்பா, எனக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு!’
– நா.கி.பிரசாத் (மார்ச் 2012)