தன் கைபேசியிலிருந்து அழைப்பு வரவே இந்த நேரத்தில் யாராக இருக்கும் என யோசித்தவாறே. சுமன் அதனை எடுத்து பேசினான், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சோகத்தினை நினைவு கூறும் நாள் அந்த நாள் என்பதால்தான் வெளி ஊருக்கு சென்றிருந்த, சுமனின் அப்பா வைத்தியநாதன் வியாபார வேலைகளை முடித்துவிட்டு உடனேயே; அவர் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருப்பதனை போன் மூலம் தெரிவித்தார். மிக முக்கிய வியாபாரம், அதுவும் அவருடைய பால்ய நண்பருடனானது என்பதனால் ,தன் எழுவதாவது வயதில் கூட தானே காரை ஒட்டிக்கொண்டு போய் வேலை முடித்துவிட்டு வந்தார். மற்றபடி சுமன்தான் அனைத்து வியாபாரங்களையும் கவனிப்பது.
தன் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவனான மதனை இருபத்தைந்து வருடங்களுக்குமுன், கொடிய விபத்து ஒன்றில் பறிகொடுத்திருந்தனர் வைத்தியனாதன் தம்பதியினர். அவனுடைய நினைவு நாளான அன்றைக்கு திதி கொடுப்பதற்கான ஏற்பாடுகளைப் பற்றி சுமனிடம் விசாரித்தறிந்தார்.
ஏன் நீலா? ஐயருக்கு சொல்லிவிட்டாய் அல்லவா? நாட்டுக் காய் கறிகளை சரிபார்த்துவிட்டாயா? நான் பூ பழங்களுக்கு சொல்லிவைத்துவிட்டேன். இப்போ வந்துவிடும்.
நீலாவிடம் பேசிக்கொண்டிருந்தானே தவிர அவனது எண்ண ஓட்டங்கள் கடந்த காலதிற்கு சென்றுவிட்டது. அவனும் அவனது சகோதரனும் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே ப்ரேக் பிடிக்காமல் தறிகெட்டு வந்துகொண்டிருந்த லாரி மோதி, உடன்பிறந்தவனை இழந்ததுடன், தானும் மருத்துவ மனையில் ஒரு மாதகாலம்வரை படுக்கையில் கிடந்த அந்த சோகத்தினை மறக்க அவனால் முடியவில்லை. அத்தகைய கொடிய நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டவுடன் மனம் பேதலித்து பைத்தியமாகிவிட்ட அத்தை பெண், நீலாவை எண்ணி கலங்கிய குடும்பத்தினரை நினைவு படுத்திக்கொண்டான். அவள் சுமன் மேல் வைத்திருந்த அன்பினால் அல்லவா மனம் பேதலித்துப் போனாள். அவள் குணமான பிறகு அவளை மணந்து அமைத்துக்கொண்ட அவனது இனிய இல்லறம் அவனின் உடைந்த உள்ளத்திற்கு அரிய மருந்தானது. திதி கொடுக்கப்பட்ட அந்த நேரத்தில் தனம் அம்மாள் கதறிய கதறல் எல்லோருடைய கண்களிலும் நீரை வரவழைத்து விட்டது.. வருடங்கள் இருபத்தைந்து கடந்த பின்பும் தாயின் பாசம் அனைவரையும் உருக வைத்துவிட்டது. பூஜைகள் முடிந்த பின்பு காக்கைக்கு உணவளித்துவிட்டு வந்த நீலாவிடம் “காக்கைகள் வந்தனவா நீலா?” என தனம் அம்மாள் கேட்டார்கள். “வந்தன. அத்தை. நாலைந்து முன்னதாகவே வந்து காத்திருந்தன போல. ப்ரசாதம் வைத்தவுடனேயே வந்து சாப்பிட்டன. தெய்வம் ஆகிவிட்ட மதன் அத்தான், நம் படையலை ஏற்றுக்கொண்டு, மகிச்சியுடன் நம்மை ஆசீர்வதிக்கிறார் என்றே தோன்றுகிறது. நீங்கள் கவலைப் படாதீர்கள் அத்தை” என்றாள்: “ஆமாம். நம் செயலுக்கெல்லாமே தெய்வம் போல துணை நிற்பான். அவன்” என்ற தனம் தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொள்வதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவ்விடம் விட்டு அவள் அவசரமாக அகன்றாள்.
நீலாவின் பிள்ளை பரத், ஹவுஸ் சர்ஜனாக பணிபுரிகிறான். அவன் தங்கை சதானந்தி கல்லூரியில் விரிவுரையாளர். இருவரும் அழகான அறிவான அன்பான பிள்ளைகள். அமைதியான நீலாவின் வாழ்க்கையில் புயல் ஒன்று உருவாக ஆரம்பித்தது. நிதர்சனத்தை நேராக எதிர்கொண்ட பொழுதில் அவள் செய்வதறியாது திகைத்துப் போனாள்.
ஒருநாள், சுமனின் வியாபார நண்பர்கள், ஆறு பேர் வீட்டிற்கு வந்திருந்தனர். அன்று பார்த்து பேரன் பேத்தியுடன் அவளுடைய மாமனாரும் மாமியாரும் வீட்டில் இல்லை. குற்றாலம் போய்விட்டிருந்தனர். மாலைப் பொழுதிலேயே சுமனின் நண்பர்கள் அரட்டை ஆரம்பமாகிவிட்டது. நாழியானது கூட பொருட்படுத்தாமல் அரட்டை அளவுக்கு மீறிப் போனது. இடையில் நண்பர்களில் ஒருவர் போய் மதுபானம் வாங்கி வந்தார். நீலா அனைவருக்கும் சாப்பாட்டை பரிமாறினாள். அதன் பிறகு மாடியில் தன் அறைக்கு தூங்குவதற்காக சென்றுவிட்டாள். அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள், நண்பர்களின் அட்டகாசமான இடிச்சிரிப்பு சத்தத்தில் விழிப்பு வந்து தூக்கம் கலைந்து எழுந்து கொண்டாள். அனைவரையும் தூங்கச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளும் எண்ணமுடன் அவர்கள் இருந்த அவ்வறை நோக்கி சென்றவள்; நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் செவிமடுத்தபின் தயங்கி வாசல் அருகேயே நின்றுவிட்டாள். சுமன், நீலாவைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தவை அவளுக்கு புதிராக இருக்கவே மலைப்புடன் அப்படியே நின்றுவிட்டாள். போதை தலைக்ககேறியதால் அவன் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தான். அவன் நண்பன் பரமேஸ்வரன் கேட்டார் “உங்கள் காதலை முதலில் பரிமறிக்கொண்டது நீயா? உன் மனைவியா?”
“அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. பெரியவர்கள் சொன்னார்கள் என்றுதான் கல்யாணம் செய்து கொண்டேன்.”
அடப் பாவி மனுஷா! வாயில் பொய் சரளமா வருதா? நீலா எண்ணிக்கொண்டாள்.
அவள் எண்ணியதையே ரமேஷ் கேட்டார், “பொய் சொல்லாதே சுமன். நீலா என் மனைவியிடம்; நீ அவளை உருகி உருகி காதலித்ததையும் , கடிதங்கள் பரிமாறிக்கொண்டதையும் மணமாகும் முன்னே உறவு கொண்டதையும், எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்.”
“ஏய்! தள்ளாடியபடி சுமன் கோபமாக எழுந்து ரமேஷின் ஷர்ட்டைப் பிடிக்கப்போக ரவி அவர்களை விலக்கிவிட்டார்.
“நான் சொல்துவதுதான் சத்தியம். அவளை என் அண்ணியாகத்தான் நினைத்திருந்தேன். கடவுளின் நினைப்பு வேறு விதமக இருந்துவிட்டது இது ரகசியம். சரியா?”
“ஏன்னடா உளறிக்கொட்டுகிறாய்? மதன் உன் அண்ணன் இல்லையா?”
“மதன் நானே. சுமனும் நானே”
“நல்லா விட் அடிக்கிறான்டா. ஹா ஹா “
குடிகாரர்களின் கும்மாளம் தொடர்ந்தது.
இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நீலாவின் உடல் நடுங்கியது. அவள் மூளைக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஒரே சமயத்தில் உதயமாக, அவள் “என் மூளை முன்பு போல் கலங்கிவிடக் கூடாது. நிதானம். நிதானம்.” என தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டாள். மேற்கொண்டு அவர்கள் பேசுவது எதையும் கேட்க அவள் தயாரில்லை. தன் அறைக்குச் சென்று படுக்கையில் வீழ்ந்தாள். யோசித்தாள். சுமனிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுவிட அவள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுத்தாள். நல்ல வேளையாக வீட்டில் பிள்ளைகளும் இல்லை. பெரியவர்களும் இல்லை. நண்பர்கள் கிளம்பிவிட்டார்கள் போலும். வீடு அமைதியாக இருந்தது.
நீலா மெதுவாக தளர்வுடன் கீழிறங்கி வந்தாள். அந்த அறைக்குள் சென்று பார்த்த போது சுமன் அங்கிருந்த சோஃபாவின்மேல் அலங்கோலமாக விழுந்து கிடந்தான். அவனருகே சென்று நின்ற நீலா பக்கத்திலிருந்த மேஜையை நோட்டம் விட்டாள். ஒரிரு பாட்டில்களில் மது இன்னும் மீதம் இருந்தது. அவற்றிலிருந்து ஒரு கோப்பையை நிரப்பி கையில் எடுத்துக் கொண்டு; தன் கணவனை எழுப்பினாள். மிகுந்த முயற்சிக்குப் பிறகு லேசாக கண்களைத் திறந்தவன், நீலா நீட்டிய மதுவை வாங்கி அருந்தத் துவங்கினான். எங்கே கீழே போட்டு விடுவானோ என நீலா அந்த கோப்பையைப் பிடித்தவாறு அவனை அருந்தச் செய்தாள்.
“மாலாவை ஏன் மறந்து போனீர்கள்?”அவள் கேள்வியினால் அவன் நிலைகுலைந்து போனான்.
“ம்ஹும். எந்த பயமும் வேண்டாம் மதன். சொல்லுங்கள். மாலாவே உங்களை விட்டுக் கொடுத்தாளா? நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.”
அவனோ “ ஸொல்லாதே யாரும் கேட்டால்…நான் சுமன்தான். ரகசியம் பரம ரகசியம்…” பாடிவிட்டு சோஃபாவில் சரிந்தான். அவனை உலுக்கி உலுக்கி பேசவைத்து, அவள் தெரிந்து கொண்ட விவரத்தினால் அவளுக்கு தலை சுற்றிக்கொண்டு வரவே அங்கிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்.பின் யோசனையில் ஆழ்ந்தாள்..
உண்மையில் அவன் சுமன் அல்ல. மதன்தான். இரட்டையர் இருவரும் அடையாளம் கண்டு பிடிக்கவே முடியாதபடி உருவ ஒற்றுமையுடன் இருந்தனர். சுமனின் நெற்றி வடு மட்டுமே அவனது அடையாளம். சுமன் அவளை உயிரெனக் காதலித்தான். அவளும் அப்படியேதான். இந்த விவரம் இரு வீட்டாருக்குமே தெரியும் அத்தை மகளும் அம்மான் மகனும் ஒரு சந்தர்ப்பத்தில் எல்லை மீறிவிட்டனர். அந்த நிகழ்ச்சிக்கு அடுத்த நாளிலேயேதான் அந்த கொடுமையான விபத்து நிகழ்ந்தது.
நீலாவுக்கு மனது பேதலித்துவிட இரண்டு குடும்பமும் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டது. மதன் அனேக எலும்பு முறிவுகளுடன் மருத்துவ மனையில் படுத்துக் கிடந்தான். எலும்பு முறிவுகளுடன் இருந்த அவனது கால்களை; இரண்டு குடும்பத்தாரும் பற்றிக்கொண்டு நீலாவை மணந்துகொள்ளும்படி கெஞ்சினர். போதாக்குறைக்கு அவன் நேசித்துக் கொண்டிருந்த மாலாவும் அதனையே வலியுறுத்தினாள். மாலாவின் வேண்டுகோள்; நீலா அவளிடம் பகிர்ந்து கொண்ட ரகசியத்தால்தான் என்பது அவளுக்கு விளங்கியது. சுமனுடன் எல்லை மீறிப்போன தன் உறவை தோழி என்ற முறையில் அவளிடம் சொல்லி இருந்தாள். நீலாவும், சுமனும் எல்லைமீறின அந்த விவரம், மாலாவிடம் நீலா சொல்லியிருக்கவேதான் மாலா இந்த முடிவை எடுத்திருக்கவேண்டும்.
சுமனுடைய அடையாளமான நெற்றி வடு, மருத்துவரால் மதன் நெற்றியில் வரையப்பட்டது. மதன் இதை எல்லாமே உளறிக்கொட்டியதால் நீலாவுக்கு எல்லாமே விளங்கியது. அப்படியானால், பரத், சுமனுடைய பிள்ளையாக இருக்கலாம். என்றும், சதானந்தி, மதனுடைய மகளாக இருக்கலாம். என்றும் அவளுக்கு தோன்றியது.
உலகம் தலை கீழாக சுற்றியது.
பந்தபாசங்கள் அவள் மனதிலிருந்து விடை பெற்றன. சொந்த பந்தங்கள் மனதிலிருந்து அறுந்து விழுந்தன. ஆசைகள் அனைத்தும் அழிந்து போயின. இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை. உண்மை ஒரு நாள் வெளிப்படே தீரும். இதோ அவள் வாழ்விற்கான அர்த்தம் ஒன்றுமே இல்லை என உண்மை தானாகவே வெளிவந்துவிட்டதே.. அந்த வீட்டின் மற்ற உறுப்பினர்கள் திரும்பி வரும் நேரம் ஆயிற்று.
அவள் எழுந்தாள், கண்ணாடி முன் நின்றாள். தலைமுடியை வேண்டும் என்றே கலைத்துக்கொண்டாள். ஒரு பைத்தியகாரி எப்படி சிரிப்பாள் என ஒத்திகை பார்த்துக்கொண்டாள். அப்புறம் என்ன? அவள் வாழ்வை அந்த மனநல மருத்துவமனையிலேயே இருக்கும்படி அவளாகவே பார்துக்கொண்டாள்.