(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“தேகத்தில் வியாதி என்று சொல்லும்படியாக ஒன்றுமில்லை” என்றார் டாக்டர். “வெறும் ஹிஸ்டீரியா என்றே நினைக்கிறேன். அது மனசைச் சேர்ந்த உபத்திரவம் என்று உங்களுக்குத் தெரி யுமே! ஆகையால் மனசுக்குக் கிளர்ச்சி, ஆயாசம் ஒன்றுமில்லாமல் அமைதியாய் வைத்திருந்தால், எட்டு நாளில் தானாகவே சுவஸ்தமாய்விடும்.”
அச்சமயத்தில் நோயாளியின் பர்த்தாவாகிய வேங்கடராமையர் ஓர் ஐந்து ரூபாய் நோட்டை நீட் டவே, மூன்று ரூபாய் மட்டில் எதிர்பார்த்திருந்த டாக்டர், மறுபடியும் புத்திமதி கொடுக்க ஆரம்பித் தார் :
“எதற்கும் நான் ஒரு ‘டானிக் ‘கின் பெயரை எழுதிக் கொடுக்கிறேன். என்னுடைய கம்பவுண்ட ரிடம் கிடைக்கும். வேளைக்கு ஒரு அவுன்ஸாகத் தினம் மூன்று வேளை உபயோகித்து வந்தால், நாலு நாட்களிலே குணமுண்டாகும். இன்றைக்குப் புதன் கிழமைதானே?” என்று கேட்டுக்கொண்டே ஒரு கடிதத்தை எடுத்துச் சில எழுத்துக்களைக் கிறுக்கினார். கடிதமும் நோட்டும் கைமாறின. இரு கஷியாலும் வந்தனங்கள் முணுமுணுக்கப்பட்டன. டாக்டர் கிளம்பிப் போனார்.
“இருக்கே” என்று வேங்கடராமையர் தம் மனைவியிடம் ஆரம்பித்தார். “இருக்கே, எல்லா டானிக் மருந்துகளின் பெயரும் எனக்குத் தெரியும். இதென்னவோ, தெரியவில்லை. எப்படி வாசித்தாலும் ‘புதன்கிழமை’ என்று தான் எழுதியிருக்கிறாப் போலிருக்கிறது. அப்படி ஒரு பெயர் இருக்குமோ, ஒரு மருந்துக்கு? இருக்கே, நான் போய் இதை வாங்கிக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லி வேங்கடராமையரும் கிளம்பிச் சென்றார்.
டாக்டர் மிகவும் அனுபவப்பட்டவர். டானிக் என்று சொல்லி ஏதாவது ஒன்றைக் கொடுத்தால் மட்டுமே, நோயாளிகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும் திருப்தி அடைகிறார்கள் என்பதை அவர் நன்கு அறிந்தவர். ஆனால் கடைகளில் கிடைக்கும் ஆயிரத்தெட்டு டானிக்குகளின் மத்தியில், குணத்திலோ, குண ஹீனத்திலோ, ஒன்றுக்கொன்று அரிசி இடை வித்தியாசங்கூட இருப்பதாக அவர் கண்டதில்லை. ஆகையால், அவைகளுக்குள், செய் வதற்குச் செலவு மட்டான வையும், எறும்புக்குக் கூடக் கெடுதி செய்யாதவையுமாக ஏழு மருந்து களைப் பொறுக்கி, அவைகளை ஜாடி ஜாடியாகச் செய்து, அவர் தம்முடைய வீட்டில் வைத்திருந்தார். அவைகளுக்கு ஞாயிறு முதல் சனி ஈறாக ஏழு பெயர் களை அவர் இட்டிருந்தார் என்றால் அதன் அந்தரங் கத்தை நாமே ஊகித்துக்கொள்ளலாம். வியாதி எதுவாயிருந்தாலும் சிந்தனைக்கு அவசியமில்லா மல், மருந்தை அன்றன்றாடம் எழுதிக் கொடுப்பதில் டாக்டருக்குச் சௌகரியம். அதை எடுத்துக் கொடுப்பதில் கம்பவுண்டருக்குச் சௌகரியம். மேலும் அவருடைய மருந்துச் சீட்டை , எந்தக் கடைகளிலாவது கொண்டுபோய்க் கொடுத்து மருந்தை வாங்கிவிட முடியாது. ஆகவே, மருந்தி னால் ஏற்படும் லாபம் சரியான விலாசத்தையே அடையும் என்பது நிச்சயம். ‘புதன்கிழமை’ என் கிற மருந்தின் கூட்டுச் சரக்குகள் எலுமிச்சம் பழ ரசம், கொய்னாப் பொடி, குழாய் ஜலம் இம் மூன்றே . செலவு அடக்கம், புட்டியின் கிரயம் உள்பட, இரண்டேகாலணா. சாதாரண விற்பனை விலை ரூ. 1-12-0. யுத்தத்தினால் தற்கால விலை ரூ. 2-7-9.
இந்த விவரங்கள் ஒன்றையும் அறியாத வேங்கடராமையர், சீட்டைத் திருப்பித் திருப்பிப் படித்துக்கொண்டே டாக்டருடைய வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார்.
அச் சமயம் வேங்கடராமையருடைய பார்யை அம்மாளு அம்மாள் தலையை இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டு, தெய்வமே என்று அறையின் மூலையில் உட்கார்ந்து பெருமூச்சு விட்டுக்கொண் டிருந்தாள். ஒரு வருஷத்திற்கு முன்பே அவளுக்கு விவாகம் ஆயிற்று. இந்தச் சொற்ப காலத்திற்குள் அவள் இந்த ஸ்திதியை அடைய நேரிடும் என்று பந்தலில் இருந்த ஒருவரும் எண்ணியிருக்கமாட்டார் கள். ஏனென்றால் வதூவரர் இருவருமே குலம், கோத்திரம், நடை, அந்தஸ்து, சௌந்தர்யம் ஆக எல்லா விதத்திலும் நல்ல பொருத்தம் வாய்த்தவர் கள். அவருக்குப் போதுமான சொத்து உண்டு. இவளோ, இலக்கணம், பாக சாஸ்திரம், ஸங்கீதம், இவைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவளாதலால், குடும்பத்தை நல்ல மாதிரியில் நடத்திவரத் தக்க சாமர்த்தியமுள்ளவள்.
இவ்விதம் ஓர் அபூர்வ தாம்பத்தியத்தை எதிர் பார்க்க வேண்டியதாயிருக்க, இவளுக்கு ஹிஸ்டீ ரியா ஏற்படுவானேன் என்று கேட்டால் என்ன பதில் சொல்லலாம்? எல்லாம் ஈசுவரன் செயல் அல் லது விதியின் கொடுமை என்று தான் கூறவேண்டும். இவைகளின் வல்லமையால் அல்லவா ஒருசிறு துரும் பும் கொடிய வாளாக மாறுகிறது? நாம் எதை விசேஷ நன்மையாக எண்ணுகிறோமோ அதுவே விபரீதமாக முடிகிறது!
‘இருக்கே’ என்கிற ஒரு வார்த்தையை எடுத் துக்கொள்ளுங்கள். நமக்குத் தெரிந்தவர்களில் எத்தனையோ மனிதர்கள் – கிருகஸ்தர்கள் – விவேகி கள்-தாங்கள் பேசும் பொழுதெல்லாம் இருக்கே’ என்று தொடங்குவதில்லையா? “இருக்கே, நேற் றைய தினம் நல்ல மழை”, “இருக்கே, தெருவில் மலைப்பழம் விற்கிறான்” இம்மாதிரி பேச்சைக் கேட்பது நமக்குச் சாதாரணமாகத்தானே இருக்கிறது? ஆனால் அம்மாளு அம்மாள் மாதிரி நாமும் இலக்கணத்தில் முதல் வகுப்பில் தேறியிருந்தால், ஒரு வேளை வேறு விதமாக எண்ண நேரலாம். தன் னுடைய கணவன் ஒவ்வொரு வாக்கியத்தையும் ‘இருக்கே’ என்று சொல்லி ஆரம்பிக்கும் பொழுது, முதலில் சில தினங்கள் அவளுக்குச் சிரிப்பு உண் டாயிற்று. சுமார் எட்டாவது நாளாக இருக்கலாம்: அவளுடைய இலக்கண ஞானம் தலை எடுத்துக் குறுக்கே வர ஆரம்பித்தது.
“‘இருக்கே’ இருக்கே’ என்று என்ன வார்த்தை இது? எழுவாயா, பயனிலையா ? பெயர்ச் சொல்லா, வினைச் சொல்லா? அர்த்தமுமில்லாமல், உபயோகமுமில்லாமல் ஒரு வார்த்தையை எதற்காகப் பேசவேண்டும்?” என்று எண்ணலானாள். பதினைந் தாவது நாளில், எத்தனை தடவைதான் தினம் அவர் ‘இருக்கே’ என்று சொல்லுகிறார் என்று கணக்கிடத் தொடங்கினாள். முப்பத்தேழு- நாற் பத்திரண்டு – ஐம்பது! அன்று வள்ளிசாக ஐம்பது தடவை அந்த மந்திரத்தை அவர் உச்சாடனம் செய்யக் கேட்டாள். அது முதல் அவளுடைய மன சின் சாந்தத்தை இழந்தாள். ஏனென்றால், அதன் பிறகு, ஒவ்வொரு நாளும் காலை முதல் படுக்கப் போகும் வரை அவளுக்கு ஒரே எண்ணம் ஓங்கி நிற்கலாயிற்று. ‘இன்றைய தினம் அந்த ஐம்பதைப் பிடிப்பாரா, அதற்கு மேலே ஏறி, தம்மையே ஜயிப்பாரா, அல்லது தோல்வி யடைவாரா?’ இம் மாதிரி எண்ணம் குடிகொண்ட மனசில் மற்ற விஷயங்களெல்லாம் கவனத்தில் பின் வாங்கித்தான் நிற்கவேண்டிவரும். இவர் தம்மிலுள்ள சம்பாஷணையைச் சற்றுக் கவனிப்போம்.
“இருக்கே, கொஞ்சம் தீர்த்தம் கொண்டு வா.”
அவள் (மனசிற்குள்) :- முப்பத்தெட்டு. (வெளி யிட்டு) என்ன கேட்கிறீர்கள் ? ஷர்பத்தா? அங்க வஸ்திரமா?
அவர்:- இருக்கே, இன்றைக்கு சினிமாவுக் குப் போகலாமா? போய் ரொம்ப நாளாய்விட்ட தல்லவா?
அவள்:- (மனசிற்குள்):- முப்பத்தொன்பது. (வெளியிட்டு) ஆமாம், நாற்பது நாள் இருக்கும்.
அவர்:- நாற்பது நாளா? இருக்கே, போன வெள்ளிக்கிழமைதானே போனோம்!
அவள்:- ஆமாம். இப்பொழுது தான் நாற்ப தாச்சு. அதாவது, இன்னிக்குத்தான் ஏழு நாளாச்சுது.
இம்மாதிரி அவளுடைய பேச்சும் கணக்கும் தட்டுக்கெட்டுப் போயின.
இதோடு நிற்கவில்லை. அவருடைய பெற்றோர் களுக்கு வேங்கடராமையர் ஒரே குழந்தை. ஆகை யால் செல்லப்பிள்ளையாய் வளர்ந்தவர். சில சமயம் பாலர்கள் பேசுகிற மாதிரி ககர பாஷையில் பேசு வார். மேஜை என்று சொல்ல வேண்டுமானால் ‘கமே-கஜை’ என்பார். தவிர, தாம் எண்ணுவதே எப்போதும் சரி என்று, உலகத்தில் நூற்றில் நூறு பேருக்குள்ள அபிப்பிராயம் அவருக்கும் உண்டு. ஆகவே பாக சாஸ்திரத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற அம்மாளு அம்மாள் தயார் செய்த விருந்தை அருந்தும்பொழுது அவர், “இருக்கே, புடலங்காய் கூட்டில் கமு-கந்-கதி-கரி-கப்-கப-கரு-கப்-கபு-போட்டால் தான் ருசியாயிருக்கும்” என்று சட்டம் கூறுவார். இம்மாதிரி சமையலின் கண்டனத்தை மாத்திரமாவது ககர பாஷையை மாத்திரமாவது அவள் சகித்திருப்பாள். இரண்டும் சேர்ந்து வீசும்பொழுது அவளால் பொறுக்க முடியவில்லை.
சில மனைவிகளைப்போல் தன்னுடைய புருஷனிடத்தில் அவள் அசட்டையாயிருந்தால், அவருடைய தோஷங்களைக் குறித்தும் அசட்டையாய் இருக்க இயலும். அவளுக்கோ அவரிடத்தில் பூர்ண பிரேமையும் பக்தியும். அவரிடத்திலே குற்றம் கண்டு பிடிக்கிற மாதிரியில் நேரிட்டுப் பேசுவதற்கு அவளு க்கு நாவெழவில்லை. பிறரிடம் தெரிவிப்பதற்கு வெட்கம். நீராவி மாதிரி அடக்கி வைப்பதனாலேயே அவளுடைய சங்கடத்தின் வீர்யம் ஏறலாயிற்று.
இந்த ஸ்திதியில், ஒரு நாள் ஒரு பாட்டுக் கச்சேரியில், ‘ஜய ஜய கோகுல பால’ என்கிற பாட்டைக் கேட்டுவிட்டு வந்த வேங்கடராமையர் அது முதல் வீட்டில் அந்தப் பாட்டை அடிக்கடி பாடத் தொடங்கிவிட்டார். ஸங்கீத ஞானமுள்ள அம்மாளுவுக்கு இவ்வுலகத்திலேயே நரகமும் கலந்துகொண்டால் போல் தோன்றிற்று. இது வரையில் ஒருவரும் கேட்டிராத ஸ்வரங்களை அவர் அமைத்துப் பாடினார் என்பது மாத்திரமல்ல. அழுத்தம் திருத்தமாக,
‘சய சய்யக்கோ – க்குலப்பாலா’
என்று நீட்டுவார். ஒரு நாள் தைர்யத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, “‘ஜய ஜய’ என்றல்லவா வார்த்தைகள்?” என்று தன்னுடைய சந்தேகத்தை நிவர்த்திக்கிற மாதிரியில் அம்மாளு கேட்டாள்.
“ஆமாம். அதனால் என்ன? நான் இப்பொழுது ஏதாவது ஹோமத்திற்கு மந்திரம் சொல்லுகிறேனா, ஸம்ஸ்கிருதத்தில் உச்சரிக்க? தமிழில் தானே பாடுகிறேன்? தமிழ்ப்பாடையிலுள்ள சத்தங்கள் எனக்குக் கபோ-கது – கம்” என்று சொல்லி, சாணைக்காரன் அரிவாள்மணையைச் சாணை பிடிக்கையில் உண்டாக்கும் சப்தத்திற்கொப்பான குரலில் அவர் மறுபடியும் “பாட”த் தொடங்கிவிட்டார். ஈசுவரன் தன்னைத் திடீரென்று ஒரு செவிடியாக மாற்ற மாட் டானா என்று வேண்டிக்கொண்டு அம்மாளு பெரு மூச்சு விட்டாள்.
அவருடைய வழக்கம் அவளுடைய அருகில் நின்று புறப்படும் பொழுது, “சயச்சய்யக்கோ” என்று கத்திவிட்டு, பிறகு இரண்டு அறைகள் கடந்து சென்ற பின்பே, “டக்குலப்பாலா” என்று முடிப்பது.
ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டவுடன் அம்மா ளுவுக்குக் குற்றுயிராய் விடும். சங்கதி முடிந்த பிறகு தான் இனி பயமில்லை என்று மூச்சு வரும். ஒரு நாள் உலையில் கொதிக்கும் அன்னத்தை அவள் வடிக்கப்போகும் சமயத்தில், “பாட்டின்” ஆரம்பம் அவளுடைய காதில் விழவே, வழக்கப்படி ஸ்தம்பித் துப் போய்விட்டாள். பிறகு சிறிது நேரம் சென்றும் மிகுதிப் ‘பாட்டை”க் கேளா தபடியால், அதை எப்படியாவது முடியக்கேட்டு விமோசன மடையவேண்டிய கவலையுடன் கணவனைத் தேடி வாசல் பக்கம் வந்து பார்த்து, அவர் அதை முடிக் காமலே எங்கேயோ வெளியில் புறப்பட்டுப் போய் விட்டதை அறிந்துகொண்டாள். பிறகு அவள் குறைத் தூக்கத்தில் விழித்தவளைப் போலச் சமய லறைக்குச் சென்று இதற்குள் அளிந்து போய் விட்ட அன்னத்தை வடித்துச் சமையலைப் பூர்த்தி செய்தாள். அன்றைய போஜனத்தின்போது வேங் கடராமையர் பிரியத்துடன், “அம்மாளு! இன்று சாதம் கொஞ்சம் கஅ-களி-கங்-கது போய்விட்டாற் போலிருக்கிறதே? அதற்குக் ககா – கர – கண – கம் – என்னவோ?” என்று கேட்கவே, ஒட்டகத்திற்குக் கடைசியான துரும்புதான் முதுகை முறிக்கு மென்று சொல்லுவார்களே, அந்த மாதிரியில் இந் தச் சிறிய கொஞ்சு தலைப் பொறுக்க முடியாமல் அம்மாளு பாத்திரந்தைத் தொப்பென்று கீழே நழுவவிட்டுத் தானும் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டாள். வேகத்தில் டாக்டரைக் கூப்பி டப் போகும்படி நேரிட்டது.
டாக்டர் வீட்டிலிருந்து புதன்கிழமை’ மருந்தை வாங்கிக்கொண்டு வந்த வேங்கடராமையர் அம்மாளு விடம் என்ன சொன்னாரென்று நான் ஒரு பந்தயப் போட்டி வைக்கப் போவதில்லை. ஏனென்றால் இது வரை பொறுமையுடன் படித்து வந்த ஒவ்வொரு வரும் எளிதில் பந்தயத்தை ஜயித்துவிடுவார்கள்! ” அம்மாளு, கம- கரு -கந் — கதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன்” என்று சொல்லிப் பிரியத்துடன் அவளுடைய மோவாய்க்கட்டையைப் பிடித்துக்கொண்டு, வாய் கொண்ட அளவு வார்த் தார். எதை? முன் சொல்லியபடி எலுமிச்சம் பழ ரசம், குழாய் ஜலம், கொயினாப்பொடி இம் மூன்றும் அடங்கிய ரசாயனத்தை. மூன்றாவது சரக்கைக் கம்பவுண்டர் கைத்திட்டமாகக் கலந்ததில் தாராள மாகவே சேர்த்திருந்தான். (தற்கால விலையாகிய ரூ. 2-7-9ஐ உத்தேசித்து, இதைப்போல் ஐம்பது மடங்கு கொயினாவைக் கலந்திருந்தாலுமே டாக்டருக்கு லாபம் மிஞ்சுமல்லவா?) அம்மாளுவின் தொண்டையில் ரசாயனம் இறங்கி நாராசம் போல் பிடித்தது. இதுவரையில் ஓர் எலியைச் ‘சூ’ வென்று வெருட்டத் தைர்யம் படைக்காத அம்மாளு, அப்ப டியே மருந்து சீசாவைப் படீர் என்று அடித்துத் தள்ளிவிட்டு, ”நான் இப்பொழுதே எங்கம்மா ஆத் துக்குப் போகவேண்டும்” என்று சொல்லி மறுபடி யும் அழத் தொடங்கினாள். ‘ஹிஸ்டீரியா’ என்ற வார்த்தையைக் கேட்டது முதல் திகிலடைந்த வேங் கடராமையர் மறுபேச்சுச் சொல்லாமல் ஒரு வண் டியை அமர்த்தி அவளைத் தாயார் வீட்டிற்குக் கொண்டுபோய் இறக்கிவிட்டு, மறுபடியும் டாக்டரிடம் கவலையுடன் சென்றார்.
டாக்டர் தைர்யம் கூறினார். “நான் தான் அப்பொழுதே சொன்னேனே! அது ஒரு ஹிஸ்டீரியா கேசு. வியாதி உண்டாவதற்குக் காரணம் சொல்லி முடியாது. ஆனால் சிகிச்சா மார்க்கம் நிச்சயம். நீங்கள் ஒன்றும் எதிர்த்துப் பேசாதேயுங்கள். வற்பு றுத்தாதேயுங்கள். கடிதங்கூட எழுத வேண்டாம். தானாகவே இஷ்டப்பட்டு உங்களுடைய வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவாள். அது வரையில் பொறுமையாய் இருங்கள்.”
அம்மாளுவின் பெற்றோர் வீட்டில் அவளுக்கு இம்மாதிரி தைர்யம் சொல்லுகிறவர் கிடையாது. ‘ஏதோ தம்பதிகளுக்குள் மனஸ்தாபம். இது எல் லாருக்குமே நேருவதுண்டு. இதைப் போய் நாம் கிண்டிக் கிளறினால் அற்ப சமாசாரம் பெரியதாய் வளரும். தானாகவே அடங்கிப் போகட்டும்’ என்று எண்ணி இக்காலத்திய நாகரிகம் வாய்ந்த தாயும் தந்தையும், விசேஷம் ஒன்றுமே இல்லைபோல் நடந்துகொண்டார்கள்.
இதனால் அம்மாளுவின் சங்கடம் அதிகமாயிற்று. கலந்து பேசிப் புத்திமதியளிப்பவரில்லாத சிறுமியின் மனசு எதற்குச் சமானம்? சுக்கானில் லாத ஓர் படகு தான். முதல் நாள் முழுவதும் தன் பர்த்தாவின் சிறு தோஷங்களை மலைகளாக எண்ணி அழுகையில் போக்கினாள். மறுநாள் காற்று மாறிவிட்டது. தன் மேல் இவ்வளவு பிரியம், இவ்வளவு காதல் உள்ள பர்த்தாவிடத்தில், சில அற்ப, மிக அற்ப, தோஷங்கள் இருந்தால் அதைப் பொறுத்துக்கொள்ளாத தான் எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுக்காரப் பாதகியாக இருக்க வேண்டும் ? இவ் விதம் எண்ண எண்ணத் தன்னுடைய குற்றத்திற் கேற்ற தண்டனை விதிப்பது அவசியமாயிற்று. முன் காலங்களில் காளி சன்னிதியில் சிலர் தம்முடைய கழுத்தைத் தாமே அறுத்துப் பலி கொடுத்ததில் லையா? தீபம் வைப்பதற்குள் தீர்மானம் செய்தாள்.
“என் ஆருயிர்க் காதலனே” என்று எழுதினாள். அந்த நீண்ட வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று என்னைக் கேட்காதேயுங்கள். எனக்குத் தெரியாது. எழுதியது அம்மாளு அம்மாள். “என் ஆருயிர்க் காதலனே, நான் கல் நெஞ்சு படைத்த கொடிய பாதகி. உங்களுக்கு நான் அருகதை அல்ல. என்னை மறந்துவிட்டு, நீங்கள் எப்படியாவது சுகமாய் வாழ வேண்டுமென்பதுதான் தெய்வத்தினிடத்தில் என்னுடைய தீராப் பிரார்த்தனை.”
கடிதத்தை ஒட்டி, ஒருவரும் அறியாதபடி, தபால் பெட்டியில் போடும்படி தன்னுடைய சிறிய தம்பியின் கையில் கொடுத்தாள்.
மறு நாள் காலையில் அவளுடைய முகம் மலர்ந்தே இருந்தது. ஆனால் சாயங்காலம் வரையில் யாதொரு பதிலும் கிடைக்காமல் இருக்கவே, மறுபடியும் கலக்கமடைந்தது. நாளாக நாளாகத் தன்னுடைய வேண்டுகோளுக்குத் தன் பர்த்தா இணங்கிவிட்டாரோ என்கிற திகில் அவளைப் பிடித்துவிட்டது. ஒன்றும் பேச மாட்டாள். ஆனால் கண்களில் தாரை பெருகிக்கொண்டே இருக்கும். என்ன செய்வது என்று தகப்பனாருக்கு விளங்க வில்லை. ஏழாம் நாள், இதுவாவது இவளுடைய மனசைச் சற்று மாற்றட்டும் என்று விரும்பி, அன்று வெளிவந்த “மலய மாருத”த்தின் மலரை அவளுடைய கையில் வைத்தார்.
“மலய மாருத”ப் பத்திரிகையை அறியாதவர் தமிழ் நாட்டில் இல்லை. எழுத்துக் கூட்டியாவது படிக்கக் கூடியவர் எல்லோரும் அதைப் படிக்கிறார்கள். அதுகூடத் தெரியாதவர்கள் அதிலுள்ள சித்திரப் படங்களைக் கண்டு களிக்கிறார்கள்.
ஆனால் வேங்கடரமணையரைச் சிலரே அறிவர். வேங்கடராமையரின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி வசிப்பவர், இவர். ஆனால் தொழிலில் மிகவும் ‘ஹீன ஜாதி’. அதை வெளியிடுவதற்கு என்னுடைய பேனா கூசுகிறது. என்றாலும் வெளியிட்டுத்தான் ஆக வேண்டும். அவருடைய விருத்தி கதை எழுதல்.
இந்தக் கூட்டத்தாரை நீங்கள் நன்றாய் அறிவீர் கள். கேட்ட கேள்விக்குச் சரியாய்ப் பதிலளிக்கார். ஏனென்றால் அவருடைய ஞாபகமெல்லாம் தாம் அடுத்தபடி எழுதவேண்டிய கதையின்மேல் நிற்கும். சற்று இடம் கொடுத்தால் தாம் கடைசியாக எழுதிய கதையின் மகிமைகளை விஸ்தாரமாய் எடுத்துரைப் பார். கதாநாயகி தற்கொலை செய்துகொள்ளும்படி நேர்ந்தாலும் கதையைச் சுவாரசியமாக முடித்து விட்டதை எண்ணி ஆனந்திப்பார். ஆகையால அவ ளுக்காகத் தம்முடைய இடது கண் கலங்கி நிற்க, தம்முடைய சாதுர்யத்தைக் குறித்து வலது கண் ணில் ஒளி வீசும். இவருக்கு மற்றொரு பொதுக் குணம் உண்டு. ஏரிகரை உடைப்பு எடுக்கிற மாதிரி, ஒரு கதையைக் கொஞ்ச தூரம் எழுத ஆரம்பித்து விட்டால், பிற்பாடு கனவேகந்தான். ஆனால் ஆரம் பிக்கிறது தான் மிகப் பிரயாசை. எதைக் குறித்து எழுதலாம் என்று ஒரு யோசனையும் தோன்றாமல் வேதனைப்படும் சமயத்தில், அழகாய் வாரியிருக்கும் தலையைக் கலைத்துக்கொண்டு, சித்தப் பிரமையுள்ள வராய்க் காணுவார். இப்பேர்ப்பட்ட ஒரு சமயத்தில் வேங்கடரமணையருடைய கையில் தபால்காரன் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.
அதன் மேல் எழுதியிருந்த விலாசம் வேங்கட ராமையர், நம்பர் 21/2. இவருடைய விலாசமோ வேங்கடரமணையர் நம்பர், 22/1. ராத்திரி முழுவதும் பல் முளைப்பதற்காக அழுத குழந்தையுடன் சேர்ந்து கண் விழித்திருந்த தபால்காரன், விலாசத்தைச் சரியாய்க் கவனியாமல் தடுமாறிப்போய் அந்தக் கடி தத்தை இவரிடத்தில் கொடுத்ததைக் குறித்துக் கடிந்து பேசுவது நியாயமில்லை. வேங்கடரமண ஐயரை, அதைத் தமக்கே எடுத்துக்கொண்ட தற்காக நிந்தித்துப் பிரயோஜனமில்லை. ஏனென் றால், மேலே கூறியபடி இவர் மிகவும் ‘ஹீன ஜாதி’ மனிதர்.
கடிதத்தைப் பிரித்து வாசித்து, “ஹா!” என்று சொல்லி, சந்தோஷத்துடன் தம்முடைய தலை மயிரை மறுபடியும் படியவைத்தார். சந்தோஷத்திற் குக் காரணம் என்னவென்றால், அதிலுள்ள வாக்கி யங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, ஒரு கதை எழுதுவதற்கு, ‘ப்ளாட்’ என்கிற கதாம்சம் இவ ருடைய மூளையில் உடனே உதயமாயிற்று. அந்தக் கடிதம் யார் யாருக்கு எழுதியது என்கிற கவலை இவ ருக்கு இல்லை. இவர் படும் பாட்டில், மற்றவருடைய துயரங்களைக் குறித்த எண்ணங்களுக்கு இடமில்லை. ஆகையால், கூசாமல் தம்முடைய கதையின் ஆரம்பமாக அந்தக் கடிதத்தையே காபி செய்தார். மேல் எழுதிக் கண்டபடி ‘என் ஆருயிர்க் காதலனே’ என்று தொடங்கி, ‘தெய்வத்தினிடத்தில் என்னுடைய தீராப் பிரார்த்தனை’ என்று முடிய அப்படியே தம்முடைய கவனமாக உபயோகித்துக் கொண்டார். அதன் மேல் அவருடைய பேனா வெகு விரைவில் ஓடிற்று. அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட காதலனையும், அதை எழுதிய காதலியையும் அவர் என்ன ஆட்டம் ஆட்டி வைத்தார், கதையை எவ் விதம் முடித்தார் என்பதை யெல்லாம் நீங்களே ‘மலய மாருத’ த்தில் படித்திருப்பீர்கள்.
ஆனால், பாவம்! அம்மாளு அம்மாள் அந்தக் கதையைப் படிக்கவில்லை. முதல் ஐந்து வரிகளை மாத்திரமே வாசித்தாள். பெரிய ‘பைகா’ அக்ஷரத் தில் அச்சிடப்பட்டிருந்த தன்னுடைய கடிதத் தையே பத்திரிகையில் பார்த்துப் பிரமித்தாள். அதற்குக் கீழ் அவளுடைய பார்வை போகவில்லை. அவளுடைய ஹிருதயம் பொங்கிற்று. தான் எவ்வ ளவோ துயரத்துடனும் பிரியத்துடனும் எழுதி அனுப்பிய கடிதத்திற்குப் பதில் எழுதாமலிருந்தது போக, அந்தக் கடிதத்தை எவனுக்கோ கொடுத்து, அதை ஒரு கதைக்கு அஸ்திவாரமாக உபயோகிக் கச் செய்யவா? அவளுடைய ஹிருதயம் கொதித்தது என்று தான் மறுபடியும் சொல்ல வேண்டும்.
உஷ்ணத்தில் முறைப்படி காய்ச்சப்பட்ட இரும்பு, தன்னுடைய வளையும் சக்தியை இழந்து, வளையாத எஃகாக மாறும் அல்லவா? அந்த ஐந்து நிமிஷத் துயரத்தில் அம்மாளு அம்மாள் எஃகின் குணத்தைச் சம்பாதித்தாள்.
“அப்பா, நான் எங்காத் துக்காரரிடம் போகிறேன்” என்றாள். இந்த வார்த்தையைக் கேட்கக் கோரிக்கொண்டிருந்த தந்தை உடனே வண்டியைத் தயார் செய்தார். வழியில், “ஒருவர் எப்பொழுதும் ‘ஜய ஜய கோ குல பால’ என்று பாடினால் என்ன செய்யலாம்?” என்று கேட்டாள்.
அவருக்கு இந்தப் புதிர் புரியவில்லை. கிண்டிக் கேட்பதற்கும் பயம். ஆகையால், “வேறு என்ன செய்யலாம்? ‘க்ஷர ஸாகரசயனா’வைப் பதிலுக்குப் பாட வேண்டியதுதான்” என்று பாதிப் பரிகாசமாய் விடை கொடுத்தார்.
சற்று நேரம் கழித்து, “எல்லாத்திற்கும் அப் படித்தானே?” என்றாள்.
இதுவும் அவருக்கு விளங்கவில்லை. “அப்படித் தான்” என்று சொல்லுவதே உசிதமென்று எண்ணி, அவ்விதமே பதில் சொன்னார்.
“அம்மாளூ! உனக்கு உடம்பு சௌக்கிய மாய்விட்டதா?” என்று வேங்கடராமையர் கட்டி யணைத்துக்கொண்டார். அவளுடைய நெஞ்சு இளகிற்று.
“இருக்கே, நீ ஏன் எனக்குக் கடிதமே எழுதவில்லை?” என்று கேட்டார்.
அவள் பிரமித்தாள். பேசத் தொடங்கினாள். உடனே தன்னை நிறுத்திக்கொண்டு, இரண்டு தடவை மென்று முழுங்கிவிட்டு, “வந்து, வந்து, நான் தான் உங்களுக்கு அன்னிக்கே எழுதினேனே!” என்றாள்.
“கஎ-கன்-கனி-கக்–ககு?”
“பச-பனி-பக்-பகி-பழ-பமை.”
இந்தத் தடவை வேங்கடராமையர் சற்றுப் பிரமித்தார். “தபால்காரனைக் கேட்க வேண்டும்” என்றார். பிறகு புன்னகை செய்துவிட்டு, “சய சய்யக்கோ-க்குலப்பாலா ” என்று கதறினார்.
உடனே, அம்மாளு தெருவில் கேட்கும் விதமாக,
“ச்சீரச் சாக்கரச் சயனா” என்று பாடத் தொடங்கினாள்.
இது நடந்தது சென்ற ஆவணி மாதத்தில். சமீபத்தில் தீபாவளிக்காகப் பெண் மாப்பிள்ளைக் குப் புடைவை வேஷ்டியுடன் அம்மாளுவின் தாய் தந்தையர் வந்து தம்பதிகளை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்கள். அம்மாளுவுக்கு இப்பொழுது ஹிஸ் டீரியா இல்லை. முகத்தில் சதா சந்தோஷக் களை, ஆகையால் அவளைக் காட்டிலும் பாக்கியசாலி யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவர்களுடைய அந்தரங்க அபிப்பிராயம்.
– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.