இல்லாத க்விங்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,569 
 
 

“ஹே… தாத்தா வந்திருக்காரு… தாத்தா வந்திருக்காரு. தாத்தா… யூ நோ சம்திங். நான் அடுத்து சிக்ஸ்த் ஸ்டாண்டர்டு போகப் போறேன், போகப் போ…றே…னே…”

உள் அறையில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு, அம்முவின் பிஞ்சுக் குரல் கேட்டது. அப்பா, இப்படிச் சொல்லாமல்கொள்ளாமல் புறப்பட்டு வருபவர் இல்லை. இப்படித் திடீரென்று…

சிறிது பதற்றத்துடன் வெளியில் வந்தேன். அப்பா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தார். கூடவே, அவர் கை விரல்களில் மூன்றை மட்டும் பற்றிக்கொண்டும், அவர் மேல் ஈஷிக்கொண்டும், தாத்தாவின் எதிர்பாரா வருகையில் பூரித்த முகத்துடன் அம்மு.

காலை 10 மணிக்கே, சித்திரை வெயிலின் கடுமையில் அப்பாவின் சட்டை வியர்வையில் நனைந்து இருந்தது. நீறு அணிந்த நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்பி, சிறிய ஓடைபோல் கன்னத்தில் வழியத் துவங்கியிருந்தது.

“சௌக்கியமா கண்ணா?” – அப்பா தன் வழக்கமான புன்னகையுடன் கேட்டார். ‘கண்ணா’ என்று முடியும்போது அந்த ‘ஆ’காரம் கொஞ்சம் தேவைக்கு அதிகமாக நீண்டுதான் முடியும். எவ்வளவு நீளமாக ‘கண்ணா’ இருக்கிறதோ, அதற்கு ஏற்றாற்போல, அப்பாவின் மனநிலையைக் கணித்துவிடலாம். இன்று ‘கண்ணா’வில் சம நிலை.

“நல்லா இருக்கேம்ப்பா. என்னப்பா? சொல்லி இருந்தா, நானே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அழைச்சுட்டு வந்திருப்பேன்ல? இப்படி வெயில்ல வரணுமா?” – பேசிக்கொண்டே மின் விசிறியைச் சுழலவிட்டேன்.

“நேத்து படுக்கறப்போ சட்டுனு தோணிடுத்து, அம்முவைப் பார்த்து நாளாச்சேனு. காலைல முதல் பஸ்ஸைப் பிடிச்சாச்சு. சரி, ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா, உன்னை ஏன் தொந்தரவு பண்ணுவானேன்னு நானே வந்துட்டேன். பொழுது சாயுறப்போ கிளம்பிடலாம்னு இருக்கேன்” – அப்பா தன் தும்பைப் பூ தலைமுடியைக் கோதிக் கொண்டார்.

“என்ன மாமா அவசரம்? அதான் வயலைப் பார்த்துக்கிடறதுக்கு சண்முகம் இருக்கான்ல?” – பேச்சுச் சத்தம் கேட்டதில் சமையல் அறையில் இருந்து மாலதி வெளியில் வந்தாள். இது வழக்கமான உரையாடல்தான். இவள் அவரை இருக்கச் சொல்லி வற்புறுத்துவதும், அப்பா நெல் அறுவடையையோ, நாத்து நடவையோ, களை எடுப்பையோ காரணம் சொல்லி, வந்த அன்று மாலையே புறப்படுவதும் வாடிக்கை. ஆனாலும், ஒவ்வொரு முறையும் இந்தக் கேள்வியும் பதிலும் அவசியமாகத்தான் இருக்கிறது. ஆறுதலாகவும்கூட.

அம்மா காலமான பிறகு, அப்பாவுக்கு அம்மா வாசம் இல்லாத எந்த அறையிலும் தூங்க முடியாது என்று தோன்றுகிறது. படுக்கையில் விரித்திருப்பது, போர்த்திக்கொள்வது எல்லாம் அம்மாவின் புடவைகள்தான். ஒரு சிறிய இடைவெளியில், அம்மாவைப்பற்றிப் பேசாமலேயே, அம்மா வந்து எங்கள் மத்தியில் நின்றுகொண்டதுபோல் இருந்தது.

அப்பா அந்த அமைதியை உடைக்க விரும்பாதவர்போல் மெலிதான குரலில் சொன்னார், “அம்முவைப் பார்க்கிறப்போ எல்லாம் எனக்கு உங்க அம்மாவைப் பார்க்கிற மாதிரி இருக்குடா.”

நான் அம்முவைப் பார்த்தேன். தன் வெள்ளை கமீஸ§க்கும் தாத்தாவின் வெள்ளை வேட்டிக்கும் இடையிலான வெண்ணிறத்தின் ஒற்றுமை – வேற்றுமையை ஆராய்ந்துகொண்டு இருந்த அம்முவுக்கு நாங்கள் பேசிக்கொண்டு இருந்த எதுவும் காதில் விழுந்து இருக்காது. என்னைப் பெற்றவளையும் நான் பெற்றவளையும் இணைக்கும் ஒரு மெல்லிய நூல் இழையைத் தன் தாத்தாவின் வேட்டி நுனியில் இருந்து உருவிக்கொண்டு இருந்தாள்.

“சரி மாமா. நீங்க குளிச்சிட்டு வாங்க. சமையலுக்கு ஏற்பாடு பண்றேன்” என்றவாறு சமையல் அறைக்குள் நுழைந்தாள் மாலதி.

அப்பா, அம்முவை மடியில் தூக்கி அமர்த்திக்கொண்டார். அம்மு, எப்போதும்போல், செவப்பிப் பசு, ரோசி கன்னுக்குட்டி, ஷைலஜா சேவல், ராசு நாய்க்குட்டி என்று அவளுடைய சிநேகிதர்களின் நலம் விசாரிக்க, தாத்தா சொல்லும் கதைகளை விழிகள் விரியக் கேட்கத் துவங்கினாள். அவர்களைத் தனியே விட்டுவிட்டு நான் மறுபடியும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கிப்போனேன்.

எப்படித் தூங்கிப்போனேன் என்று தெரியவில்லை. விழித்தபோது அப்பா குளித்துவிட்டு துவாலையால் தலையைத் துவட்டிக்கொண்டு நிற்பது தெரிந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் வைத்திருந்த வெண்கலப் புத்தர் சிலை மேல் அப்பாவின் விரல்கள் படர்ந்திருந்தன. அம்மாச்சிகள், அப்பத்தாக்கள்போல் காது வளர்த்த புத்தர். தலைக்கு மேல் உயரத் தூக்கிப் போடப்பட்ட கொண்டை. கண்கள் மூடியிருக்க… சாந்தமான புன்னகையுடன் அமர்ந்து இருந்தார். அப்பாவின் கண்கள் மிக்க வாஞ்சையுடன் புத்தரைப் பார்த்துக்கொண்டு இருந்தன. விரல்கள் ஒருவித ஆதூரத்துடன் புத்தரின் முடிக் கற்றைகளைத் தடவிக்கொண்டு இருந்தன.

“எப்போ வாங்கினது கண்ணா? போன தடவை நான் வந்தபோது இல்லைதானே?” என்று கேட்டார், புத்தரிடம் இருந்து கண்களை விலக்காமல்.

“ஆமாம்பா… போன வாரம் ஆபீஸ் டிரெய்னிங் விஷயமா மும்பை போயிருந்தப்போ, எலிஃபென்ட்டா கேவ்ஸ் போனோம். அங்கே வாங்கினது.”

மூவாயிரத்துச் சொச்சம் கொடுத்து வாங்கியது. புத்தர் சிலைக்கு முன் அமர்ந்து தியானம் செய்தால் நன்மை கிட்டும் என்று யாரோ சொன்னதை நம்பி வாங்கியது. தியானம் செய்தேனோ இல்லையோ, ‘பற்றைத் துற’ என்று சொன்ன புத்தரின் சிலை மேல் ஒரு தனிப் பற்றை வளர்க்கத் துவங்கி இருந்தேன்.

அப்பா பார்வையைப் பார்த்தால், கேட்டுவிடுவாரோ என்று பயமாக இருந்தது. நல்லவேளை. மாலதி உணவருந்த அழைக்க, எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துக்கொண்டு யோசனையுடன் உணவு மேஜைக்குச் சென்றார்.

சாப்பிட்ட பிறகு, தாத்தா – பேத்தியின் சளைக்காத கேள்வி – பதில்கள் தொடர்ந்தன. பின் இருவரும் களைத்து உறங்கிப்போனார்கள்.

அப்பா அன்று மாலை கிளம்பும்போது வாசலில் நின்று சொன்னார், “நல்லாருக்குடா கண்ணா அது.” அவர் எதைச் சொன்னார் என்று எனக்குப் புரிந்தே இருந்தது.

அம்முவுக்கு ஆண்டுப் பரீட்சை முடிந்தாலும் முடிந்தது, வீட்டை இரண்டாக்கிக்கொண்டு இருந்தாள். பரணில் இருந்த சாமான்கள் எல்லாம் நடு வீட்டுக்கு வந்தன. டீச்சர் விளையாட்டு விளையாடுகிறேன் என்று, அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைக் கூட்டிவைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டு இருந்தாள். போதாக்குறைக்கு எங்களுக்குப் பதில் தெரியாத கேள்விகளை எங்களைச் சுற்றிச் சுழலவிட்டுக்கொண்டு இருந்தாள். ‘பூனை ஏன் மரத்தில் ஏறுகிறது? அதற்கு அங்கு கூடு இருக்கிறதா?’, ‘நமக்கு இருப்பதுபோல் பறவைகளுக்கு எல்லாம் பள்ளிக்கூடம் இருக்கிறதா? பனிஷ்மென்ட் கொடுக்கப்படும் பறவை எப்படி முழங்கால் போடும்?’, ‘தயிரைத் திரும்ப எப்படிப் பாலாக மாற்றுவது?’ ‘பல் விழுந்த பின், அது நட்சத்திரம் ஆகிவிடுமாமே? தாத்தாவின் பல் நட்சத்திரம் எங்கே காட்டு பார்க்கலாம் வானத்தில்?’

அவளைச் சமாளிப்பதற்குள் மாலதிக்கு வழக்கமான இடுப்பு வலியுடன் தலை வலியும் அடிக்கடி எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. ‘முடியலப்பா என்னால. இவளும் இவளோட ஆருயிர்த் தோழி பக்கத்து வீட்டு ஷாலுவும் செய்கிற வால்தனம்’ என்று அவள் அரற்றிய ஒரு மாலையில், அம்முவை அழைத்தேன். வெளியே போகலாம் என்றதும் ஆட்டுக் குட்டிபோல் குதியாட்டம் போட்டுக்கொண்டு தயாராகி வந்தாள்.

“எங்கேப்பா போறோம்?” என்றவளிடம், “உனக்கு கிரேயான்ஸ், கலர் பென்சில் எல்லாம் வாங்க” என்றபோது முகத்தில் வந்த பிரகாசத்தைப் பார்க்க வேண்டுமே! “அப்பா, உன் பெட்ரூம் முழுக்க ஆரஞ்சு கலர் பூ வரைஞ்சு தர்றேன், என்ன?” என்று கண்கள் ஒளிரக் கேட்டபோது எனக்குப் பகீரென்றது. ஏதேது வம்பை விலை கொடுத்து வாங்குகிறோமோ!

சரி, மெதுவாகச் சரிசெய்துகொள்ளலாம். இப்போது சொன்னால் முதலில் அதைத்தான் செய்வேன் என்று அடம்பிடிப்பாள்.

கிட்ஸ் கார்னர் என்று நியான் விளக்குகள் போட்ட கடைக்குள் நுழைந்து மிக்கி மவுஸ், டொனால்டு டக் போட்ட கலர் சமாசாரங்கள் எல்லாம் வாங்கி, பில் போடும்போது அம்முவிடம் சொன்னேன், “அம்மு, அப்பா உனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிற நோட் புக்கில்தான் வரையணும். சுவரில் எல்லாம் கிறுக்கக் கூடாது. சரியா?”

“சரி” என்றாள். நான் ஆசுவாச மூச்சு விடுவதற்குள், “ஆனா, அப்படின்னா, எனக்கு நீ க்விங் வாங்கித் தரணும்” என்று ராகம் போட்டாள் என் சின்னக் கள்ளி.

“க்விங்கா?”

“அங்கே பாரு” என்று அவள் நீட்டிய திசையில் ஒரு பெங்குவின் பொம்மை. அதுபோல் வேறு ஒன்று கடையில் இல்லை. மெலிதான சாம்பல் நிறத்தில் முதுகுப் புறம் இருக்க, வயிற்றுப் பகுதி நல்ல வெண்மையில் இருந்தது. சிறிய இறக்கைகளும் மூக்கும் கரு நீலத்தில். கோலிக் குண்டுபோல் சின்னக் கண்கள். கால் விரல்கள் மட்டும் சம்பந்தம் இல்லாமல் ஒவ்வொன்றும் சின்ன கேரட்டுகள்போல் இருந்தன, கருநீல நகங்களுடன். அப்படி ஒரு பாந்தமான சிநேகத்துடன், சின்ன முகத்தில் ஒளித்துவைக்கப்பட்ட சிணுங்கலான சிரிப்புடன், ஒரு சாண் உயரத்துக்கு உட்கார்ந்திருந்தது. பார்க்கப் பார்க்க எனக்கே அதை எடுத்து கட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்க, அம்முவைச் சொல்லிக் குற்றம் இல்லை. மறு பேச்சு இல்லாமல் அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

மாலதிக்கு ஒரே அங்கலாய்ப்பு. “இவ வயசுப் பிள்ளைகள் எல்லாம், டெடி பேர், நாய்க் குட்டி பொம்மைன்னு வாங்கினா, கழுதை எதை வாங்கி வந்திருக்கு பாரு” என்று அலுத்துக்கொண்டாலும், மகளின் வித்தியாசமான ரசனையான தேர்வு குறித்த பெருமிதத்தின் வெளிப்பாடாகவே பட்டது எனக்கு அது.

‘க்விங்’ வந்ததில் இருந்தே அம்மு எங்களை மறந்துவிட்டாள். காலையில் எழுந்து பல் துலக்குவதில் இருந்து, சாப்பிடுவது, விளையாடுவது என்று சகலமும் ‘க்விங்’ இல்லாமல் நடப்பது இல்லை. தூங்குவதுகூட ‘க்விங்’கோடுதான். காலையில் பார்த்தால் படுக்கையில் அம்மு ஒரு புறம் இருக்க, அவள் பக்கத்தில் மல்லாந்து வானம் பார்த்து அப்பிராணியாகப் படுத்திருக்கும் ‘க்விங்’ கின் ஒரு பக்க இறக்கை மட்டும் அம்முவின் கரங்களுக்குள் சிக்கியிருக்கும். அம்மு ‘க்விங்’கைக் கொஞ்சுவதற்கு என்றே தனி மொழி வைத்து இருந்தாள். அது என்ன மொழி என்று அம்முவுக்கும் ‘க்விங்’குக்கும் மட்டுமே வெளிச்சம். ‘க்விங்’குக்குப் புரிந்திருக்கும்போல. எப்போதும் மெலிதான புன்னகையுடனே இருந்தது.

அன்று இரவு உணவின்போது, மாலதி கிண்டலாகக் கேட்டாள், “ஏ அம்மு, இவ்வளவு பாசமா இருக்கியே அது மேல. உனக்கு ஷாலு இருக்கிற மாதிரி அதுக்கு ஒரு பெங்குவின் ஃப்ரெண்ட் வேணும்னு அதுக்குத் தோணாதா?” சாதாரணமாகக் கேட்கப்பட்ட கேள்வி அம்முவை யோசிக்கவைத்துவிட்டது.

“ஆமா, நீ சொல்றது சரிதான்” என்றவளைச் சற்று அதிர்ச்சியுடன் பார்த்தோம். அம்மு உடனே செயலில் இறங்கிவிட்டாள். ஷாலு வீட்டுக்குப் போய் பேசிவிட்டு வந்தாள். “அப்பா, ஷாலுவும் நானும் நிறைய பிளான் பண்ணி இருக்கோம். நாளைக்கு சண்டேதானேப்பா. உனக்கு நாளைக்கு ஆபீஸ் இல்லைல்ல?” என்று பெரிய மனுஷித் தோரணையுடன் கேட்டுவிட்டு தூங்கப் போனாள்.

என்ன ‘பிளான்’ என்று மறு நாள்தான் எனக்குத் தெரிந்தது. என் பைக்கை எடுக்கச் சொல்லி அம்முவும் ஷாலுவும் ‘க்விங்’குடன், பின்னால் உட்கார்ந்துகொள்ள, நகரத்தில் இருந்த அத்தனை கடைகளிலும் விசாரித்தோம். இன்னொரு ‘க்விங்’ வகையறாவுக்காக. என்ன தேடியும் ‘க்விங்’குக்கு ஒரு ஃப்ரெண்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கூடச் சோர்ந்துபோனேன். வேறென்ன செய்வது? ‘க்விங்’ காத்திருக்க வேண்டியதுதான். எங்கள் அலைச்சல் கதையைக் கேட்ட மாலதி தலையில் அடித்துக்கொண்டாள்.

“இப்படியே இவளை வளர்த்துவிடுங்க. நாளைக்கு எல்லாம் அவ வெச்ச சட்டமாத்தான் இருக்கும்.” நான் வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டேன். என் பெண்ணின் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. என் பெங்குவினின் மேலும்கூட என்று நினைத்துக்கொண்டேன். மீண்டும் சிரிப்பு வந்தது.

மறு நாள் மாலை, ஏற்கெனவே சோகத்தில் இருந்த அம்முவுக்கும் ஷாலுவுக்கும் மேலும் ஒரு சோகமான செய்தி. வங்கியில் மேலாளரான ஷாலுவின் அப்பாவுக்கு வட இந்தியாவுக்கு மாற்றலாகி இருந்தது. அம்முவும் ஷாலுவும் எங்கள் வாசல் படிக்கட்டில் கன்னத்தில் கை வைத்து எதுவும் பேசாமல் அமைதி யாக அமர்ந்திருந்தது, மாலதிக்கும்கூடக் கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். அவள் செய்து கொடுத்த குலோப் ஜாமூன்களை இருவரும் தொடக்கூட இல்லை.

இரவு வீட்டுக்குள் நுழைந்த அம்மு, மாலதியைக் கட்டிக்கொண்டு, “அம்மா… ஷாலு போறாம்மா… அடுத்த சாட்டர்டே” என்று அழுதது மனதை என்னவோ செய்தது. அம்மு எதுவும் சாப்பிடாமல் படுத்துக் கொண்டாள்.

ஒரு வாரத்தில், ஷாலு குடும்பத்தினர் வீட்டைக் காலி செய்து கிளம்பிக்கொண்டு இருந்தனர். வாசலில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் பரபரப்பாகத் திரிந்துகொண்டு இருக்க, ஷாலு எங்களிடம் சொல்லிப் போக வந்தாள்.

“அங்கிள், ஆன்ட்டி… போயிட்டு வர்றேன். அம்மு… போயிட்டு வர்றேன்” – கலங்கிய கண்களுடன் ஷாலு சொல்ல, “ஷாலு, ஒரு நிமிஷம் இரு” என்றவாறு படுக்கை அறைக்குள் ஓடினாள் அம்மு. திரும்பி வந்தபோது அவள் கையில் ‘க்விங்’. ஷாலு கையில் அதைக் கொடுத்து, “வெச்சுக்கோ” என்றாள். ஷாலு முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி. இவள் விரல் களைக் கொஞ்ச நேரம் பிடித்துக்கொண்டு இருந்து விட்டு… பின் ஒரு திருப்தியான புன்னகையுடன் கிளம்பிப் போனாள்.

நான் குழப்பமாக அம்முவைப் பார்த்தேன். “அம்மு, உனக்கு ‘க்விங்’ அதுக்குள்ள சலிச்சுப் போயிடுச்சா? பிடிக்கலையா?”

என் கேள்வியால் காயம்பட்ட உணர்வோடு அம்மு என்னைப் பார்த்தாள். “ரொம்பப் பிடிக்கும்பா.”

“பின்ன ஏன் அதை ஷாலுகிட்ட கொடுத்தே? நம்ம ஊர்ல க்விங் மாதிரி வேற ஒண்ணு கிடைக்கக்கூட இல்லையே!”

“அதனாலதான் கொடுத்தேம்ப்பா.”

நான் புரியாமல் பார்க்க, அம்மு தொடர்ந்தாள், “அப்பா, எனக்கு ஷாலுவைப் பிடிக்கும். ஷாலுவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எங்க ரெண்டு பேருக்குமே க்விங் நிறையப் பிடிக்கும். ஷாலு நிச்சயம் என்னையும் க்விங்கையும் மிஸ் பண்ணுவாப்பா. அவளால என்னை அவகூட கூட்டிட்டுப் போக முடியாது. ஆனா, ‘க்விங்’கைக் கூட்டிட்டுப் போகலாம்தானே? அதான் கொடுத்துட்டேன்.”

ஒரு நிமிஷம் அம்மு அமைதியாக இருந்தாள். பின், “அப்பா, இங்க இருந்த க்விங்கைவிட இப்ப இல்லாத க்விங்தான் நல்லாயிருக்கு” என்றாள்.

சொன்ன வார்த்தைகளின் கனத்தை உணராது, மொட்டைமாடிக்குப் போகிறேன் என்று ஓடிவிட்டாள் அம்மு.

எனக்குத் திடீரென்று, புத்தரின் தலையைத் தடவிய அப்பாவின் ஆதூர விரல்கள் சரேலென நினைவுக்கு வந்தன!

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *