வாழ்க்கைப்பயணத்தில் இவ்வளவு சீக்கிரம் இறங்குமிடம் வருமென்று வசீகரன் நினைத்து பார்க்கவில்லை. ஆசைகள், பேராசைகள், குறிக்கோள்கள் மற்றும் திட்டங்கள் என அனைத்துமே நொடிப்பொழுதில் தவிடுபொடியாகிவிட்டன. இந்த உலகமே இது வரை தான் பார்த்தது போல் இல்லாமல் முற்றிலும் வேறு மாதிரி தெரிந்தது!
‘தாம் இது வரை வாழ்ந்தது அனைத்துமே மாயை. பொய்யானது, போலியானது. உபயோகமற்றது’ என புதிதாக சிந்தனைகளும் தோன்றின!
இப்படிப்பட்ட பயணத்துக்காகத்தானா…?இறங்குமிடத்தை கூட நாம் முடிவு செய்யமுடியாத வாழ்க்கைப்பயணத்துக்காகத்தானா…? இத்தனை பொறாமைகளும், போராட்டங்களும், வன்முறைகளும், துக்கங்களும், துரோகங்களும், ஏக்கங்கங்களும், வெறுப்புகளும்….?!
முப்பது வயது இளைஞனின் மனதில் முக்திபெற்றவரின் எண்ணப்போக்கு வரக்காரணம் சிகிச்சைக்கு போனவனிடத்தில் மருத்துவர் சொன்ன ஒரே வார்த்தை “உன் உடலில் உயிர் வாழும் காலம் அதிகபட்சம் ஒரு வாரம்” என்பது தான்!
‘இறப்பு பாவமா? சாபமா? இயற்க்கை கொடுத்த வரமா? இந்த உலகில் நாம் கேட்காமல் கிடைப்பது ஒன்றே ஒன்று தான். அது மரணம். அழகு, பணம், பதவி, படிப்பு, உறவு, அன்பு, பாசம், காதல், நட்பு, பறவைகள், விலங்கினங்கள், காடுகள், மலைகள், மரங்கள், சொத்து, வீடு, வாகனம், வர்ணங்கள், பரிசுகள் இவையெல்லாம் தற்போது உபயோகமற்றவையாகத்தெரிந்தன.
‘பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை, காய்ப்பதெல்லாம் பழமாவதில்லை. பெரும் காற்றுக்கு பிஞ்சுகளும் உதிர்வதுண்டு’ என சிந்தித்தவனாய் மனதை சாந்தப்படுத்திக்கொண்டான்!
‘மனிதன் இந்த பூமிக்கு சுற்றுலா வந்துள்ளான். இங்கேயே உடலெடுத்து சுற்றிப்பார்த்து விட்டு விசா காலம் முடிந்த பின் உடலையும் கொடுத்து விட்டுப்போக வேண்டும். விசா காலத்தை நீடிக்கவோ, குறைக்கவோ யாராலும் முடியாது. மறுபடியும் வேறு உடலெடுத்து தான் புதிதாக மறுபடியும் விசா பெறமுடியும். நான் என்பது உடலில்லை. ஆத்மா. அதுதான் அடிக்கடி உடலை மாற்றிக்கொள்கிறது. ஆணாகவும் பிறக்கிறது, பெண்ணாகவும் பிறக்கிறது, இரண்டும் கலந்த பிறப்பையும் எடுக்கிறது. கொடிய விலங்காக, பறவையாக, மீனாக, பாம்பாகக்கூட பிறப்பதாக நமது துறவிகள், சித்தர்கள் கூறியுள்ளனர்’ என பழுத்த ஞானி போல சிந்தித்தான்!
‘இறந்த பின் ஆத்மா எங்கே போகும்? பேய், ஆவி என்பதெல்லாம் ஆத்மாதானா? இறந்தவருக்கு பசிக்குமென எதற்க்காக காகத்துக்கு உணவு வைக்கின்றனர்? திதி எதற்க்காக செய்கின்றனர்? சிலை வைத்து கும்பிடுவதால் இறந்த ஆத்மா அடுத்த பிறப்பு எடுக்காமல் சிலையை, சமாதியை வணங்குவோருக்கு உதவி செய்யுமா?’ என உறங்காமல் யோசித்தான்!
இது வரை திருமணமாகாததால் பிரச்சினை இல்லை. பெற்றோரை தம்பி பார்த்துக்கொள்வான் எனும் நம்பிக்கை இருந்தது. ‘தனது நிலையை பெற்றோருக்கு சொன்னால் இந்த ஒரு வாரமும் துன்பப்படுவார்கள், அல்லது தவறான முடிவு எடுத்து தங்கள் உயிரை பங்கப்படுத்திக்கொள்ள நேரும்’ என கருதி முகத்தை மகிழ்ச்சியாக இருப்பதாக, எப்பொழுதும் போல் இயல்பாகவே காட்டிக்கொண்டான். தன்னை நேசிக்கும் உறவுகளை, நட்புகளை மட்டும் அழைத்து ஹோட்டலில் விருந்து கொடுத்தான்.
‘இந்த வாழ்க்கையை இருக்கும் வரை கொண்டாட வேண்டும். யாருக்கும் ஒரு நொடி கூட, கடுகளவு கூட இடையூறு செய்யவே கூடாது. இது வரை நடந்து முடிந்த கடந்த காலங்களின் நினைவுகளை கண்முன் கொண்டு வந்தவன், ‘யார் மனதையாவது பாதிக்கும் படி செயல்பட்டிருக்கிறோமா?’ என நினைவு படுத்திப்பார்த்து தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். தனக்கு இடையூறு செய்ததால், தான் அவர்களை வெறுத்த நிலையை மாற்றி ‘அவர்களும் நன்றாக வாழட்டும். அறியாமையால் தவறு செய்திருப்பார்கள்’ என மானசீகமாக ஒவ்வொருவரையும் மன்னித்து விட்டதோடு, ‘தன்னால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தன்னை மன்னிக்க வேண்டும்’ என மானசீகமாகவே மன்னிப்பும் கேட்டுக்கோண்டான்.
‘இந்தப்பிறப்பின் காலத்தை ஒவ்வொரு நொடியும் வாழ வேண்டும். அனைத்தையும், அனைவரையும் நேசிக்க வேண்டும், பிறர் துன்பம் தீர உதவி செய்ய வேண்டும், இறப்பை துன்பமாக கருதாமல் மனதார ஏற்க வேண்டும், பேராசையை மனதில் குடிகொள்ள அனுமதிக்கக்கூடாது, பிறரைக்கஷ்டப்படுத்தி, நஷ்டப்படுத்தி, நாம் இஷ்டப்பட்டதை அடையக்கூடாது’ என்ற வாசகங்களை தமது வீட்டின் வரவேற்பறையில் எழுதி வைத்தான் வசீகரன்!