கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: October 3, 2023
பார்வையிட்டோர்: 3,867 
 
 

1 | 2

அன்புள்ள கிளாரா,

இருபது பக்கங்கள் கிறுக்கிய கடிதத்திலிருந்து சொற்களைப் பொறுக்கி எடுத்து இந்த கடிதத்தை உனக்கு அனுப்புகிறேன். என்னை மீண்டும் உமிழ்ந்த எல்ப் நதியை சபித்தபடி ஒவ்வொரு நாளின் கொடிய விடியலை எதிர்பார்த்து நிற்கிறேன். எங்கோ ஒரு நினைவறையை தாங்கி நிற்கும் வலைகளை பிய்த்து எறிவது போல அவனது உருவத்தை அழிக்க முற்படுகிறேன். முன்னர் நாம் ஆஸ்த்ரிய பனிப்பாறை வெடிப்புகளைக் காணச் சென்றது வியாகூலமாக நினைவுக்கு வருகிறது. மீண்டும் மீண்டும். உறைந்து துண்டாகிவிடும் என நான் சொல்வதையும் கேளாது சிறுகுழந்தையைப் போல பனிப்பாரறைக்கு அடியில் ஓடிய நீரோசையைக் கேட்க காதைத் தரையில் அழுத்திப் படுத்துக்கிடந்தாயே. நீ புனல் நீரிடம் சொன்ன ரகசியத்தை எல்ப் நதி என்னை உமிழும் முன் பகிர்ந்துகொண்டது. நீராவி போல என்னுள்ளே மேலெழும்பி நெஞ்சு அதிர விழுந்தபடி உன்னுடைய சிமிக்ஞைகள் வெளியேற வாசலின்றி தவிக்கின்றன. காதலியின் மூச்சுக்காற்று என் இருப்பின் பதாகை போல எனப் பாடிய ஷூபர்ட்டிடம் கடன் வாங்கிய சில வரிகளை இத்துடன் இணைத்துள்ளேன். அந்த இசைக்கோப்பை உனது பியானோவில் மெல்ல இசைக்கவேண்டும், நதியிடம் கிசுகிசுப்பதைப் போல.

அன்பு முத்தங்கள்,
ராபர்ட் ஷூமன்.

வில்லியன் பென்னட் கடிதத்தை மூடி வைத்தார். தனது நடுங்கும் கைகளில் கத்தையாக ஷூமன்னின் கடிதங்கள். போதும். ஒன்று படித்தால் போதும். ரெண்டாக வெட்டிய மண்புழுவைப் போல உணர்ந்தார். மென்டல்சன் இறந்த நாள் முதல் மனம் அலைக்கழித்தபடி இருந்தது. ஏன் இப்படி கலைத்தன்மை திரண்டு பீறிடும் சமயங்களில் அகால மரணங்கள்? காற்றில் துடிக்கும் மெழுகுச் சுடர் போல அலைக்கழிப்புகளை கைக்கொள்ளத் தெரிந்த கலைஞனை துரத்தும் சாபக்கேடு.

மார்ச் மாதம் உருகி வழிந்து ஏப்ரலுக்குள் நுழையத் தொடங்கியது. 1865 ஏப்ரல். நேற்று டிரஸ்ட்னுக்கு வந்து இறங்கியதிலிருந்து கிளாராவோடு பேச முடியவில்லை. அவளைச் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் பயணம் முழுவதும் மனதை வியாபித்தது என்றாலும் ஷூமன் அதை விரும்பியிருக்க மாட்டார் என்பதை உணர்ந்திருந்தார் பென்னட்.

கடிதங்களிலிருந்து அலைபாயும் தனது மனதை திசை திருப்ப அறையை சுற்றிப் பார்த்தார். மிக விசாலமான படிக்கும் அறை. மத்தியில் டேனியல் சன்ஸ் பியானோ கம்பீரமான ராஜா போல வீற்றிருந்தது. ஓக் மரச் சட்டகத் தூண்களுக்குப் பின்னால் தனது வருகையை தேவ தூதுவர்களுக்கு அறிவிக்கும் மடோன்னாவின் ஆளுயர சிலை சுவரோடு ஒன்றியிருந்தது. மஞ்சள் நிற ஜன்னலிலிருந்து கண்ணுக்குத் தெரிவதெல்லாம் வானம் தான். தூரத்தில் டிரஸ்டன் நகரின் மதில்சுவர் தெரிந்தது. சட்டென பென்னட்டுக்குத் தோன்றிய வார்த்தை தவிப்பு. தவிப்பு. ஷூமன் மட்டுமல்ல கிளாராவின் தவிப்பு பிராம்ஸின் ஏக்கம் என அறையின் பரிமாணங்கள் மூச்சு முட்டுவது போலிருந்தது.

கையிலிருந்து கடிதங்களை மேசைக் குடுவைகளுக்கு அருகில் வைத்தபின் பியானோ அருகில் நின்றார். இந்த அகோர மெளனத்தை ஒரே ஒரு மீட்டலில் கலைத்துப் போட்டுவிடமுடியும். மரணத்துக்குப் பின் எஞ்சுவது நினைவுகள் மட்டுமே என எழுதிய ஷேக்ஸ்பியர் ஒரு முட்டாள். எதையும் அனுபவித்து அறியாதவன். எஞ்சுவது இழப்பு மட்டுமே. வெற்றிடம். அதைத் தாண்டி ஒன்றும் கிடையாது. இருப்பின் தவிப்பைப் போல இல்லாமையின் இழப்பு அபாயகரமானது. அப்பாவித்தனங்கள் நிறைந்த தைரியம் போல, ஓடும் ஆற்றில் குதித்த ஷூமன் போல. பியானோவை இசைக்க இயலாத தனது கைகளை வெறுத்தபடி ஜன்னலுக்கு அருகே சென்று ஆழமான மூச்சிழுத்தார். அருகில் இருந்த கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்க கொடுமையாக இருந்தது. பேயைப் பார்ப்பது போல வெளுத்த சருமம். ஸ்காத்லாந்து ரத்தத்தை தன்னுள் செலுத்திய பாட்டியின் வெண்மையான முகம். பனிக்கட்டியால் செய்தது போல. வறண்ட சதைக்கூண்டு.

ராபர்ட் ஷூமன் வெளியிடாத சிம்போனிகளைப் புரிந்து கொள்வது பென்னட்டுக்கு அத்தனை சுலபமான விஷயமாகத் தோன்றவில்லை. அதுவும் இருக்கும் அவகாசமோ குறைவு. மூன்றே மாதங்கள். லெப்சைக் இசை அரங்கத்தில் இன்னும் மூன்று மாதத்தில் நடக்க இருக்கும் இசை மாஸ்டர்கள் எனும் விழாவில் ஷூமன்னின் வெளியிடாத இசையை அரங்கேற்ற வேண்டும் என கிளாரா ஆசைப்படுவது நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. மூன்று மாதங்களில் ரெண்டு சிம்பொனிகள். ஐரோப்பாவின் பிரபலமான பியானோ கலைஞரான கிளாராவால் முடியாததை பென்னட் சாதிக்க வேண்டுமாம். சிறுவதிலேயே பெரியவள் போன்ற முதர்ச்சி வந்ததன் விளைவு. கணவனின் இழப்பை கையகப்படுத்தி மனதில் வியாபித்திருக்கும் பாரத்தின் அளவை கணிக்க முடியாத முதிர்ச்சி. மரப்பொம்மையை இழந்த குழந்தை உலகத்தையே கைமாறாகக் கொடுத்துப் பெற நினைக்கும் தவிப்பு அறியாத முதிர்ச்சி. அடுத்தது என்ன என தெளிவான திட்டங்களினால் கையில் கிடைக்கும் முத்துக் கல்லை கூழாங்கல் என நினைத்து ஆழ்கடலை நோக்கி தூர வீசும் முரட்டு முதிர்ச்சி.

தனது நெருங்கிய நண்பன் ஷூமன்னை மனநிலை மருத்துவமனைக்குச் சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுத்த கிளாரா. தனது ஒன்பதாவது குழந்தையைப் பார்த்திராத கணவனிடம் அவனைக் காட்டுவதற்குச் செல்லாத கிளாரா. கடைசி முறை காணச் சென்றபோதும் தனது காதலன் பிராம்சுடன் ஜோடி சேர்ந்து விரிசலை சாத்வீகமாக முன்மொழிந்த கிளாரா. உலகை வாய் வழியாக அறிய முற்படும் குழந்தை போல இசையை தனது இருப்பின் அடையாளமாக, உலகின் சாராம்சமாக உணர்ந்த மேதையை உதாசீனப்படுத்திய கிளாரா.

நினைத்துப் பாக்கும் ஒவ்வொரு நொடியும் பென்னட்டுக்கு வெறுப்பு கூடிக்கொண்டு போனது. எதற்காக டிரேஸ்டன் வரச் சம்மதித்தேன்? நாளை கிளாரா வந்தவுடன் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பவேண்டும். ஒரேடியாக. கப்பலில் போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தை சென்றடையும் சித்திரம் இப்போது நினைக்கையில் பெருத்த ஆசுவாசத்தை அளித்தது. விலைமதிப்பற்ற இழப்பை ஏற்றுக்கொண்டு அரவணைக்கத் தெரியாத பிணங்களின் நிழலை தரிசிப்பது கூட பாவச் செயல்.

காத்திருக்கும் நேரத்தில், ஷூமன்னின் சிம்பனி எண் மூன்று , நான்கு மற்றும் ஆர்கஸ்ட்ராவுக்காக எழுதிய சேம்பர் இசை கோப்புகளை பென்னட் பார்வையிட்டார். அவரால் அந்த இசைக்குறிப்புகளோடு மனம் ஒன்றமுடியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர் என அனைவராலும் முத்திரை குத்தப்பட்ட ஷூமன் ஏன் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். எழுதுபவர்களெல்லாம் சமநிலையோடு இருக்கிறார்களா என்ன எனக் கேள்வி கேட்டுக்கொண்டார். ஆனாலும் ஏன் இத்தனை வேகம்? அதுவும் கைவிரல்கள் பாதிக்கப்பட்டு உடலை அசைக்கவே சிரமப்பட்ட நேரத்திலும் இசை புனைய அவசியம் என்ன?

‘ஒரு கலைஞனைப் புரிந்துகொள்ள அவனது ஸ்டூடியோவுக்குச் செல்’ என ஷூமன் சொன்னதை நிழலாடியது. கருகிய சருகுகள் போன்ற ஸ்தூலமிலா வார்த்தைகள் நம் மேல் ஒட்டிக்கொள்ளும் வாசனைத் தடம். எண்ணிலடங்காத தத்துவங்களை ஷூமன் வாழ்க்கை முழுவதும் சொல்லியபடி இருந்தார். அது எந்தளவு அவரது வாழ்விலும் உண்மையாகிப்போனது?!

முதல்முதலாக பிராம்ஸ் எனும் சிறுவனை சந்தித்த நாளில் பென்னட்டுக்கு எழுதிய கடிதத்தில், ‘கடவுள் தந்த சொத்துகளை ரசிக்க ஒரு மனநிலை வேண்டும். அதிர்ஷ்டம் நம்மேல் படிவது போல், கலை நமது அழகில் வெளிப்பட்டுவிடும். இன்று பூத்த சூரியகாந்திப் பூ போன்ற இளமை பிராம்ஸின் முகத்தில். பியானோ கலைஞனின் விரல்கள் போல தடிமனானது அல்ல. உன் ஊரான யார்க்கில் விளையுமே அதைப் போன்ற மிருதுவான இளம் சிவப்பு கேரட். அவன் இசைக்கும்போது முகத்தில் தெரிந்த பொலிவை விட இசை என்ன சொல்லிவிடமுடியும்? கலைஞனின் ஆன்மா அவனது விரல்களில் இல்லை. அவனது கம்பீரத்தில். பல இரவுகளைப் போல இன்றிரவும் எனக்குத் தூக்கம் கிடையாது. மனவெழுச்சியினால்.’

நண்பனே, உன் சொற்களை விடவா உனது இசைக்கு பெருமை அதிகம்? ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் நிற்பவன் சிறு குன்றின் நிழலைக் கண்டு பதட்டப்படுவானா? எதற்காக நீ விட்டுச் சென்ற இசையைப் புரிந்துகொள்ள வேண்டும்? இதுவரை சொல்லாத எந்த ரகசிய சிமிக்ஞையை அதில் ஒளித்து வைத்திருப்பதாக கிளாரா எண்ணுகிறாள்? என்னை மன்னித்துவிடு நண்பா, உனது காதலின் மதிப்பை அறிந்த என்னால் அது சிறுமைப்படுவதை காண முடியாது. மழைமுன் வரும் வாசம் போல மனம் முழுவதும் பகுத்தறிய முடியா கோபம், ஆற்றாமை. தவிப்பின் உச்சகட்டத்தில் நிலைகொள்ளாமல் அறையைச் சுற்றி வந்துகொண்டிருந்தவர் திடீரென முடிவெடுத்தவர் போல வீட்டை விட்டு வெளியேறினார்.

பேயைக் கண்டதைப் போல வெளிறிய முகத்தோடு டிரேஸ்டன் நகரை விட்டு ஹாம்பர்க் நகரத் துறைமுகத்துக்கு விரைந்ததாக பின்னிரவில் வீட்டுக்கு வந்த கிளாராவிடம் வேலையாள் தெரிவித்தான்.

– தொடரும்…

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *