இருட்டிலும் கூட…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 3,571 
 
 

எங்கும் நிசப்தம். மிரள வைக்கும் மெளனம்.

அன்று இரவு அவர் எங்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் எனது ஒட்டு மொத்த உலகமும் சுக்கு நூறாகிவிட்டதைப் போல நான் உடைந்து போனேன்.

பதினைந்து ஆண்டு கால வாழ்க்கையில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மலரும் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்க, எனது பத்து வயது மகளுடன் நான் தன்னந்தனியாக நின்றேன்.

நான் அவரிடம் பலமுறை மன்றாடினேன். ஆனால் அவரோ எங்கள் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டார். அவர் மனதில் குற்ற உணர்வு துளியும் இல்லை. தன்னுடன் பணி புரியும் ஒருத்தியுடன் அவர் ஆழமான உறவு கொண்டிருந்தது அவரது நண்பர்கள் மூலமாக எனக்குத் தெரிய வந்தது.

நான் துடித்துப் போனேன். உடனே ஆக்ரோஷத்துடன் விஷத்தைக் குடித்து விட்டேன். அன்றே நான் இறந்திருக்க வேண்டியது. ஆனால் என் மகள் மூலமாக எப்படியோ பிழைத்துவிட்டேன்.

அவரைத் தாண்டி எங்கள் திருமண வாழ்வைக் கடந்து என்னால் எதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நான் உயிருக்கு உயிராக நேசித்துத் திருமணம் செய்துகொண்ட எனது கணவரை இன்னொரு பெண்ணுடன் பார்க்க எனக்குத் தைரியமில்லை. நிஜத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனது வாழ்க்கைத் துணையை வேறொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்ள நான் தயாரில்லை. வலியும் பொறாமையும் என்னைச் சூழ்ந்து கொண்டது. அவர் வாழ்வில் புதிதாக வந்திருக்கும் அந்தப் பெண்ணை நான் சபித்தேன்.

இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விடவில்லை என்று புரிந்துகொண்டேன். பல சம்பவங்கள் என் நினைவுக்கு வந்து இதனுடன் தொடர்புபடுத்த உதவின.

நான் ஒன்றும் அவ்வளவு அழகல்ல. சிறிய வேலையில் குறைந்த சம்பாத்தியம்தான். அவர் என்னை ஏளனமாக பார்க்கத் தொடங்கினார். “நான் உன்னை அடைய ரொம்ப அதிர்ஷம் செய்திருக்க வேண்டும்” என்று சொன்னவர், “நீ என் வாழ்வில் ஒரு துரதிருஷ்டம்” என்று ஆரம்பித்தார். “நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்” என்பது “நீ எனக்குப் பொருத்தமானவள் அல்ல” என்று மாறிப்போனது.

அவரது நாகரீகமான காதலியின் முன்னால், நான் நாட்டுப் பூசணிக்காய் போலத் தோன்றினேன் போலும். திடீரென்று அவர் கண்களுக்கு நான் சரியாக ஒப்பனை செய்து கொள்ளாதது போல தோன்றியிருக்கிறது. உனக்கு ஆங்கிலம்கூட பேசத் தெரியாது. உனக்கெல்லாம் யார் வேலை கொடுத்தார்கள்? என்று இடித்துரைப்பார்.

அவருக்கு பொருத்தமான பெண் நானில்லை என்று தோன்றியது. நாளடைவில் நண்பர்களுடனான சந்திப்பு; விருந்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் செல்வதை சுத்தமாக நிறுத்திவிட்டார்.

நான் மிகவும் நேசித்த ஒருவர் என்னைத் தனியாக விட்டுவிட்டார். என்னை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார். மெதுவாக எல்லா அன்பும் கரைந்து காணாமல் போனது. ஏதோ தவறு நடக்கிறது என்று தோன்றியது. அதை சரி செய்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் ஓர் இரவில் அவர் என்னைப் பிரிந்து சென்றார்.

அவர் வேறு வீட்டில் அவளுடன் வாழத் தொடங்கினார். நான் என் மகள் மற்றும் மாமனார் மாமியாருடன் அதே வீட்டில் இருந்தேன். நான் அந்த வீட்டில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அவர் திரும்ப வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் நான் அங்கு தொடர்ந்து இருந்தேன்.

ஒவ்வொரு முறை கதவைத் தட்டும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவராகத்தான் இருக்குமோ என்று ஆவலோடு ஓடிப்போய் கதவைத் திறப்பேன். ஆனால் கொரியரோ, தபால்காரனோ, பால்காரனோ அல்லது வேலைக்காரியோ வந்திருப்பதைப் பார்த்ததும் என் மனம் உடைந்து போய்விடும்.

இன்னாள் வரையில் எனது வாழ்க்கை அவரைச் சுற்றியே இருந்தது. எனக்கு வயதாகி விட்டது. இனி புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கக் கூடிய காலமில்லை இது.

இந்த வாழ்க்கையைப் பாதுகாக்க நான் போராடியே தீரவேண்டும். நான் தனியாகப் போராடினேன். எனது உணர்வலைகளைப் புரிந்துகொள்ள என் மகளுக்கு வயது போதாது. எனது உடல் நலம் சிதைந்துகொண்டே வந்தது. இருப்பினும் அவருடைய தோள்களில் ஓய்வெடுக்கவே நான் ஏங்கினேன்.

அவர் ஏற்படுத்திய காயங்களுக்கு அவரே மருந்தளிக்க முடியும்; என் மனதிற்கு சிகிச்சை அளிக்க அவர் வேண்டும். அவர் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் நான் போராடினேன்.

என்றோ இறந்துவிட்ட எங்கள் திருமண வாழ்வைக் காக்க, என் வாழ்விலேயே இல்லாத ஒருவருக்காகத்தான் நான் போராடிக் கொண்டிருக்கின்றேன் என்பதை உணரவே எனக்கு மூன்று ஆண்டுகள் ஆயின.

இறுதியில் நான் சோர்ந்து போய்விட்டேன். நீதிமன்றப் படிகளில் ஏறி ஏறி, வழக்கறிஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, சட்ட ரீதியான செலவுகளைச் சமாளித்து தோல்வியுடன் சோர்ந்துபோய் விட்டேன். இறுதியாக நான் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டேன்.

இதனால் நமது பழமைவாத சமூகத்தில் எந்த மரியாதையும் பெற்றுத்தராத ‘விவாகரத்தானவள்’ என்ற புதுப்பட்டம் எனக்குக் கிடைத்தது. அப்போது எனக்கு வயது நாற்பது. குடியிருக்க ஒரு வீடு தேடுவதே எனக்கு முதல் சவாலாக இருந்தது. நான் பல கேள்விகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.

உங்கள் கணவர் எங்கே? ஏன் உங்களுடன் அவர் வரவில்லை? அவர் என்ன வேலை செய்கிறார்? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அவைகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. அதே சமயம் அவரைப் பற்றிய எனது ஏக்கத்திலிருந்தும் வெளியே வர நான் விரும்பவில்லை.

என்னுடைய தோழிகள்தான் இதிலிருந்து நான் வெளியேவர எனக்கு உதவினார்கள். அவர்கள் என் வாழ்வில் வந்த தேவதைகள்.

எனக்குள் இருந்த தைரியத்தை ஒன்று திரட்டி கணவனால் கைவிடப்பட்ட பெண் என்று இந்தச் சமூகம் அழைப்பதை நான் துணிச்சலுடன் ஏற்க என்னை தயார் படுத்தினார்கள். அது அவ்வளவு சுலபமானதல்ல. வெகுசில நாட்களிலேயே அவர் அந்தப் பெண்ணை மணந்து கொண்டார்.

இந்த நேரத்தில்தான் எனது பெற்றோர்களும் காலமானார்கள். எனது வாழ்வில் இரண்டு பாகங்கள் மட்டுமே. இருந்தன. ஒன்று எனது வேலை. மற்றொன்று எனது மகள்.

எனது வேலையில் அதிகக் கவனம் செலுத்தினேன். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தேன். நிறைய படிப்பதிலும், எனது பொது அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதிலும் ஈடுபாட்டுடன் இறங்கினேன்,

எனது கணவருக்காக சமைப்பதற்கு பதிலாக, எனது தோழிகளுக்காக சமைத்தேன். விருந்துகள் வைத்தேன். குறுகிய பயணங்கள் மேற்கொண்டு புது நினைவுக் களஞ்சியங்களை உருவாக்க நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.

அவரது பிரிவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அந்த இடங்களில் எனது தோழிகளை வைத்துப் பார்க்க முயற்சித்தேன். அது என்னைச் சுற்றி ஒரு பெரிய உலகம் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது.

என் குடும்பம் மட்டும்தான் என் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது எனது பிரபஞ்சத்தை விரிவு படுத்திக்கொண்டேன்.

வருடங்கள் ஓடின…

நான் பணியிலிருந்து ஏராளமான பணத்துடன் ஓய்வு பெற்றேன். என் மகள் ஒரு நல்ல வேலையில் கைநிறைய சம்பளத்துடன் அமர்ந்தாள். நல்ல தெம்பான மாற்றங்கள் ஏற்பட்டன.

சமுதாயத்தில் பிறர் போன்ற உரிமைகள் பெறப்படாத குழந்தைகளுக்காக செயல்படும் ஒரு நிறுவனத்தில் தன்னார்வலராக என்னை இணைத்துக் கொண்டேன். இது எனக்கு மிகப்பெரிய சக்தியின் பிறப்பிடமாக ஆனது. மன நிம்மதியைக் கொடுத்தது.

நான் சகஜ வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினேன். எனது பலம் எது என்று உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில் படித்து முனைவர் பட்டம் பெற்றேன். ஒரு தனி மனுஷியாக நின்று போராடி வெற்றி பெற்றேன். வெட்கப் படுவதற்குப் பதிலாக நான் சமூகக் கூட்டங்கள் மற்றும் திருமணங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

அழகான புடவைகள் கட்டிக்கொண்டு நன்றாக அலங்காரம் செய்து கொண்டேன். விவாகரத்தான ஒரு பெண் எப்போதும் சோகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு என் அமைதியான ஆனால் உறுதியான பதில் இதுவே.

நான் ஒரு சுதந்திரமான பெண்ணாக மறுபிறவி எடுத்தேன். இன்று எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை.

ஆம்… தனியாகவும் தைரியமாகவும் என்னால் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியும். இருட்டிலும் கூட…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *