இரவில் நடந்தது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 6,617 
 
 

“என்னைத்தொடாதீங்க” முதலிரவு அறையில் தன் மனைவி காரிகாவின் நெருப்பான பேச்சைக்கேட்டு அதிர்ந்தான் ராகவன்.

‘நம்மிடம் என்ன குறை கண்டாள் இவள்…? அப்படி எதுவும் குறை இருப்பது தெரிந்தால் திருமணத்துக்கு முன்பே கூறியிருக்கலாமே..‌?

முதல் ராத்திரியும் அதுவுமாக இன்பமாக சேர்ந்திருக்க வேண்டிய நேரத்தில் இப்படி துன்பமாக சோர்ந்திருக்க வைத்து விட்டாளே…?’ ஒரு புறம் கோபமும், மறுபுறம் கவலையுமாக தலையணையை எடுத்து கட்டிலுக்கு அருகே கீழே போட்டு படுத்தவாறு யோசிக்கலானான் ராகவன்.

என்ன யோசித்தும் அவனிடம்,அவனால் குறை எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. குழப்பமாக யோசித்ததில் மூளை சோர்வுற, உறங்கிப்போனான் ராகவன்.

காலையில் கண் விழித்து எழுந்த போது, தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தாள் காரிகா. ராகவன் இருமிய சத்தம் கேட்டு விழிப்பு நிலைக்கு வந்தவள் ,விழித்துப்பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் உடுத்தியிருந்த உடை, உடலிலிருந்து சற்று விலகியிருந்ததைக்கண்ட ராகவன், சற்றே சலனமடைந்த போதிலும் சமாளித்துக்கொண்டு,அருகில் கிடந்த போர்வையை எடுத்து அவள் மேல் போர்த்தி விட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

இதையெல்லாம் விழிக்காமல் விழிப்பு நிலையிலிருந்து உணந்த காரிகா நன்கு யோசிக்கலானாள்.

‘முரடனாக இருந்திருந்தால் வலுக்கட்டாயமாக துன்புறுத்தி தனது ஆசையை நிறைவேற்றியிருப்பான். ஆனால்,இவரோ “தொடாதீங்க” என்ற ஒரே வார்த்தைக்காக ஓரமாக ஒதுங்கிச்சென்று விட்டாரே. காதலித்த ரகு நமக்கு கிடைக்காமல் போனதற்கு இவரா காரணம்? இல்லை. நம் பெற்றோர்தான் காதலனுடன் சேர விடாமல் தடுத்து,வலுக்கட்டாயமாக இந்தத்திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தவர்கள். ஒரு வேளை நாம் காதலித்த விசயம் இவருக்கு முன்பே தெரிந்திருந்தால் திருமணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டாரோ…? சரி எது எப்படியோ,வேறொருவருக்கு மனைவியான பின்பு காதலனை நினைத்து இப்படிப்பட்ட உத்தமரை வெறுத்து ஒதுக்குவது நியாயமில்லாத செயல்’ என எண்ணியவளின் மனதிலிருந்து காதலன் ரகு வெளியேற ,கணவன் ராகவன் குடி புகுந்தான்.

அன்று இரவு கணவனுடன் முதலிரவைக்கொண்டாட மனதளவிலும்,உடலளவிலும் தயாரானாள் காரிகா.

(1997 ல் பாக்யா வார இதழில் வெளியான எனது சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *