இப்படியும் ஒரு தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 1,880 
 
 

வேப்ப மரத்தின் கீழே அந்த குழந்தை கிடந்தது. பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை.. தொப்புள் கொடி நறுக்கப்பட்டு, ஒரு துணியில் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது.

வாசல் பெருக்க வந்த வனஜா குழந்தை சத்தத்தை கேட்டாள். முதலில் யார் வீட்டிலோ கத்துகிறது என்று தான் நினைத்தாள். வேப்ப மரம் அவள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம் தான். சற்று நேரத்தில் வேப்ப மரத்தடியில் நின்ற நாயும் அதன் அருகில் தான் குழந்தை சத்தமும் வருகிறது என தெரிந்தது.

நடந்து சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

குழந்தை வயிற்றில் இருந்து வடியும் ரத்தத்தை நாய் நாக்கால் சாப்பிட்டு கொண்டிருந்தது. நாயை முதலில் விரட்டினாள்.

அந்த குரூரத்தை உணர்ந்த அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது

“ஐய்யய்யோ ! பச்சை குழந்தை ! யாரு போட்டது “

குழந்தையை வீட்டுக்கு எடுத்து போகவும் மனசில்லை. அங்கேயே போட்டு போனாலும் நாய் மறுபடி வருமே என பயம். ” என்னங்க என்னங்க” என தன் கணவனை கூவி அழைத்தாள்.

வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தவன் எழுந்து வரவில்லை.

பக்கத்து வீட்டு சண்முகம் எட்டி பார்த்தார். ” என்னம்மா?”

“பிறந்த பச்சை குழந்தையை யாரோ கொண்டு வந்து போட்டுருக்காங்க; நாய் வந்து இங்கே நிக்குது”

வயதான சண்முகம் பதறி போய் ஓடி வந்தார். குழந்தை முகத்தில் ஆங்காங்கு கீறல்கள். நாயின் வேலையாய் இருக்கணும்

“என்ன பாக்குறே ? தூக்கு குழந்தையை ” என்றார்.

“தூக்கிட்டு போய் எங்கே வைக்கிறது? “

“உன் வீட்டுல வை; யார் என்னன்னு விசாரிப்போம்”

“என் வீட்டு காரர் என்ன சொல்வாரோ? “

” நான் பேசிக்கிறேன் தூக்கிட்டு போ “

சற்று தயங்கிய படி தூக்கினாள். குழந்தை வீரிட்டு அழுதது. உள்ளே தூக்கி வந்தவள், தன் கணவனை எழுப்பினாள்.

“என்னடி இவ்ளோ சீக்கிரம் எழுப்புறே ” என்று எழுந்தவனுக்கு வீட்டினுள் ஒரு குழந்தையை பார்த்ததும் ஒன்றும் புரிய வில்லை.

வனஜா அனைத்தையும் சொன்னாள். ” சண்முகம் சார் தான் இங்கே வச்சிருக்க சொல்லிருக்கார்; இப்போ வந்துடுவார்”

வனஜா நினைத்த மாதிரி அவள் கணவன் கோபிக்க வில்லை. “யார் பிள்ளையா இருக்கும்? யாராவது வேண்டாதவங்க எடுத்து கொண்டு வந்து போட்டிருப்பாங்களா ” என்றான்.

“தெருவில என்ன நடக்குதுன்னே உங்களுக்கு தெரியாது. எல்லாம் அந்த மூணாவது வீட்டுக்காரி தான் “

“யாரு? சரசா?”

“ஆமா “

“என்னாடி சொல்றே”

“பக்கத்து வீட்டு அக்கா கூட சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அவள் வயிறு பெருசா இருக்குன்னு. இதுக்குன்னே எப்பவும் வயிறை மறைக்கிற மாதிரி பெரிய துணியா போட்டுக்கிட்டு இருந்தா. வெளியிலேயே அதிகம் வர்றதில்லை. கமுக்கமா இருந்து பிள்ளை பெத்திருக்கா “

“வீட்டுலேயேவா பிள்ளை பெத்திருப்பாங்க ?”

“ஆமா. எல்லாம் அவள் அம்மா காரி கூட இருக்கால்ல. அவ தான் நைட்டோட நைட்டா பிரசவம் பாத்து காலையில் பிள்ளையை கொண்டு வந்து மரத்தடியில் போட்டுருக்காளுவ”

“அவள் புருஷன் வந்து போயிக்கிட்டா இருக்கான்? “

“எங்கே வந்தான்? அவன் எந்த ஊரில இருக்கானே தெரியலை. சண்டை போட்டுக்கிட்டு போயி மூணு வருஷம் ஆவுது. “

“அப்ப ? சே ! என்ன அசிங்கமோ?”

“அதான் விஷயம். புருஷன் கூட இல்லாம புள்ளை பெத்திருக்கா இல்ல. அதான் நைசா கொண்டு வந்து போட்டுட்டாங்க “

“இப்படி கூடவா இருப்பாங்க. நாய் கடிச்சு பிள்ளை செத்திருந்தா என்ன ஆவறது?”

“சனியன் பிடிச்சதுங்க. உருப்படவே மாட்டாளுங்க”

வனஜா மீண்டும் வெளியே வந்தாள். தெருவில் ஆங்காங்கு கூடி நின்று பேச ஆரம்பித்தார்கள். வனஜா வெளியே வந்ததும் அவளை நெருங்கி விபரம் கேட்டனர்.

“ஆமா. நான் பாத்தப்போ நாய் கவ்விட்டு இருந்துச்சு…..”

அதே கதை. அலுக்காமல் சொன்னாள்.

சண்முகம் நான்கைந்து வீடுகளுக்கு சென்று பேசி விட்டு சோர்வாய் வந்தார். ” யார் செஞ்சிருப்பாங்கன்னே தெரியலையே”

“சரசு வீட்டுலே கேட்டீங்களா? “என்றாள் வனஜா.

“எப்புடி கேக்குறது? கூட அவ புருஷன் இல்லையே? உங்க வீட்டு பிள்ளையான்னு அங்கே போய் கேட்க முடியுமா?”

பக்கத்த்து வீட்டு ரமணி நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி திட்ட ஆரம்பித்தாள்.

“கழிசல்ல போறவ.. எந்த சிறுக்கி இந்த வேலை பண்ணிருக்கா. நாய் வந்து கடிச்சிருக்கு. அப்படியே போட்டுருக்காளே. இவள்லாம் ஒரு அம்மாகாரியா?”

பல வீடுகளிலிருந்தும் ஆட்கள் வெளியே வந்து விட்டனர். சரசு வீட்டில் மட்டுமே யாரும் வெளியே வர வில்லை.

பலருக்கும் சரசு மீது தான் சந்தேகம்.

“எம் பொண்ணுக்கு வயித்துல கட்டி. ஆபரேஷன் செய்யணும்னு சொன்னுச்சு அந்தம்மா. ரெண்டு பேருமா சேர்ந்து என்ன பண்ணி வச்சிருக்காளுங்க பாரு “

ஆள் ஆளுக்கு ஜாடை மாடையாய் சரசுவையும் அவள் அம்மாவையும் திட்ட தொடங்கினர்.

“என்ன தான் பண்றது இப்போ?”

“போலிசுக்கு சொல்ல வேண்டியது தான்; அவங்க வந்து விசாரிக்கட்டும்”

உள்ளூர் காவல் நிலையத்துக்கு போன் செய்தார் சண்முகம். அரை மணியில் போலிஸ் ஜீப் வந்து சேர்ந்தது.

“யாரும்மா பார்த்தது? ” விசாரணை ஆரம்பமானது.

“தெருவில யாரும் மாசமா இருந்தாங்களா?”

“…………”

யாரும் பதில் சொல்ல வில்லை.

“என்ன யாரும் பதில் சொல்லலை”

“எங்களுக்கு தெரிஞ்சு யாரும் நிறை மாசம் இல்லீங்க “

“அப்ப வேறு ஏரியாவில இருந்து இங்கே கொண்டு வந்து போட்டிருக்கணும்”

” அப்படிங்களா?”

சரசு பற்றி ஏனோ யாருமே மூச்சு விட வில்லை. போலீசிடம் மாட்டி விட்டால், சண்டைக்காரியான அவள் அம்மா எல்லாரிடமும் சண்டை போடுவாள் என்கிற பயமா.. அல்லது வேறு என்ன காரணமோ?

“எங்க கூட ஸ்டேஷனுக்கு வந்து கம்பிலயின்ட் எழுதி குடுத்துட்டு வாங்க. ஏம்மா. நீதானே முதல்ல பார்த்தே. நீ வா..”

சண்முகம் , வனஜா, அவள் கணவன் குழந்தையுடன் போலிஸ் ஜீப்பில் ஏறினர்.

“சார் குழந்தையை என்ன பண்ணுவீங்க?”

“அநாதை குழந்தைங்க இல்லம் இருக்கு. அங்கே தான் விடணும்; அம்மா காரி மனசு மாறி வந்து வாங்கி கிட்டா உண்டு. முதல்ல நாய் கடிச்சதுக்கு டாக்டர் கிட்டே காட்டணும் “

போலிஸ் வண்டி புழுதியை கிளப்பி கொண்டு விரைந்தது.

வண்டி சென்று பத்து நிமிடம் கழித்து சரசு வீடு திறந்தது. வெளியே வந்தது சரசுவே தான். தெருவில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் பார்வை, நைட்டி அணிந்த அவள் வயிறு மீதே இருந்தது.

அவர்கள் பார்வையை முற்றிலும் புறக்கணித்த சரசு அருகிலுள்ள கடைக்கு சென்று ” ஒரு பாக்கெட் பிஸ்கட் குடுங்க” என்றாள்.

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *