இன்னும் மறைந்து விடவில்லை மனிதாபிமானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 4,622 
 
 

காலையிலிருந்து நல்ல சவாரி கிடைத்துக்கொண்டிருந்த்து சரவணனுக்கு. இப்படியே பத்து இருபது நாட்கள் கிடைத்தால் சம்சாரத்தின் “பிரசவ” செலவை ஈடு கட்டி விட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவனை யாரோ கையை தட்டி கூப்பிடும் சத்தம் கேட்டவுடன் அனிச்சையாய் திரும்பி பார்த்தான்.

கை தட்டி கூப்பிட்டது அவனைத்தான் என்றவுடன் மீண்டும் ஒரு உற்சாகம் மனதுக்குள் வந்த்து. சர்ரென்று வண்டியை திருப்பி கூப்பிட்டவரின் அருகில் சென்றான்.

R.S. புரம் வரைக்கும் போய்ட்டு திரும்பி வரணும் எவ்வளவு கேக்கற? கேட்டவருக்கு அம்பதிலிருந்து அறுபது வயது இருக்கும். இடது தோளில் ஒரு தோல் பையை தொங்க வைத்திருந்தார். கையில் ஒரு துணிப்பையும் இருந்தது.

இவன் தொகையை சொன்னவுடன் அதிகமா கேக்கறேயே அப்பா? என்றவருக்கு வழக்கமான ஆட்டோக்காரர்கள் சொல்லும் வசனததையே சொன்னான். கொஞ்சம் யோசித்தவர் சரி என்று ஆட்டோவின் பின்புறம் ஏறிக்கொண்டார்.

இன்று யார் முகத்தில் முழித்திருக்கிறோம்? என்று நினைத்துக்கொண்டே வண்டியை எடுத்தான். அவன் சட்டைப்பையில் இருந்த செல் போன் கிண்கிணித்தது. வண்டியை சற்று நிறுத்தி, செல் போனை காதில் வைத்தவனின் முகம் சற்று கலக்கமடைந்தது.

வந்த போன் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து.அவன் மனைவிக்கு “வலி” ஆரம்பித்து பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம், கேட்டவுடன் முதலில் வந்தது பயம்தான். ஏதாவது ஆகி விடுமோ?அடுத்த பயம் செலவுக்கு என்ன பண்ணுவது.?ஏற்கனவே அப்படி இப்படி என்று சுற்றியுள்ளவர்களிடம் கைமாத்தாய் வாங்கிய கடன்சுற்றி சுற்றி அவனை வளைத்து இருந்தது.

இன்னும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என்று டாக்டர் சொல்லியிருந்தாரே? இப்பொழுது திடீரென்று வலி வந்து விட்ட்தே. குழப்பமாய் இருப்பவனின் முகத்தை பார்த்த அந்த பொ¢யவர் ஏம்ப்பா? ஏதாவது பிரச்சினையா? நான் வேணா வேற வண்டி பார்த்து போய்க்கவா? என்று கேட்டவுடன் தன்னிலை பெற்றவன் அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, சம்சாரத்த டெலிவரிக்கு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம், போன்ல சொன்னாங்க, முதல் பிரசவம் அதான் கொஞ்சம் பயமாயிருக்கு. அப்புறம் எங்களை மாதிரி ஆளுங்க, பொ¢ய ஆஸ்பத்திரியில சேர்த்து பாக்க முடியுங்களா? அதுக்கெல்லாம் வசதிக்கு நாங்க எங்க போக முடியும்? தானாக பேசிக்கொண்டே வண்டியை வேகமெடுக்க ஆரம்பித்தான்.

கவலைப்படாதப்பா எல்லாம் நல்லபடியா முடியும். அவர் சொன்னது அந்த வண்டி சத்தத்திலும் அவன் மனதுக்கு நிம்மதியாய் இருந்தது.அரை மணி நேரத்தில் அவர் சொன்ன விலாசத்தில் கொண்டு போய் வண்டியை நிறுத்தியவனை, இன்னும் அரை மணி நேரம் எனக்காக காத்திருக்க முடியுமா? என்று கேட்டார்.மனதில் மனைவி மருத்துவமனையில் இருக்கிறாள் என்றிருந்தாலும், தொழில் என்பது அவனது தர்மம் என்பதால் எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன் சார், நீங்க போயிட்டு வாங்க.

அரைமணி நேரம் என்பது ஒரு மணி நேரம் ஆயிற்று. இவனுக்கு மனது அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. இந்நேரம் மனைவிக்கு என்னவாயிற்றோ? மெல்ல எழுந்தவன் வண்டியை சுற்றி சுற்றி வந்தான்.

எதிரில் அவர் வேக வேகமாக வந்துகொண்டிருந்தார். மன்னிச்சுக்கப்பா ரொம்ப நேரம் பண்ணிட்டேன், சொல்லியபடி வண்டிக்குள் ஏறி உடகார்ந்தார். குரலில் ஒரு மகிழ்ச்சி தென்பட்டது போல் இருந்தது. இவன் வண்டியை வேகமாக கிளப்பினான்.

அவரை ஏற்றிய இடத்தில் கொண்டு போய் நிறுத்தியவனிடம் பேசிய தொகையை விட அதிகமாக பணம் கொடுத்தார். இவன் ஐயா காத்திருந்ததற்கு உண்டான பணம் மட்டும் சேர்த்துக்கொடுங்கள் போதும் என்றவன் மிச்சமுள்ள் தொகையை அவரிடமே திருப்பி கொடுத்து விட்டு வண்டியை எடுத்தான்.

எதற்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு போன் செய்து விசாரித்து விடுவோம் என்று முடிவு செய்து வண்டியை ஓரமாக நிறுத்தி பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் போட “அழைப்பு போய்க்கொண்டே” இருந்தது. யாரும் எடுக்கவில்லை. மனசுக்குள் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. கடவுளே ஏது ஏடா கூடம் ஆகி விடக்கூடாது, என்று மனதுக்குள் வேண்டி கொண்டான்.அவளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்ற கவலையும் இப்பொழுது கையில் ஆயிரம் ரூபாயும்தானே இருக்கிறது, என்ன செய்வது ? என்று மனம் வேறு அடித்து கொண்டது.

இவன் ஹாஸ்பிடல் போய் சேர்ந்து வண்டியை நிறுத்தி விட்டு பதை பதைப்புடன் உள்ளே ஓடி செல்ல எதிரில் பக்கத்து வீட்டுக்காரர் புன் சிரிப்புடன் “மாப்பிள்ளை” பொண்ணு பிறந்திருக்கு என்று சொல்ல இவன் மனம் அப்படியே ஆகாயத்தில் பறந்த்து. ஐந்து நிமிடங்களில் தன்னிலை பெற்றவன் “அண்ணே” ரொம்ப நன்றி அண்ணே என்று அவர் கையை பிடித்துக்கொண்டான்.

இதுக்கு எதுக்கப்பா நன்றி எல்லாம் சொல்லிகிட்டு, பக்கத்து பக்கத்துல இருக்கோம் இதைக்கூட செய்யலையின்னா அப்புறம் என்ன மனுசனா பிறந்துட்டு. யதார்த்தமாய் சொன்னவர் போய் பாரு இந்த வழியா போனயின்னா கடைசி ரூமு. சொல்லி விட்டு அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்.

இவன் வேக வேகமாய் சென்றான். உள்ளே அவன் மனைவியின் அருகில அமர்ந்திருந்த பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி இவனை கண்டவுடன் எழுந்து வாங்க வாங்க என்று சொல்லி குழந்தையை காண்பித்து விட்டு கணவனையும்,மனைவியையும் தனியே விட்டு விட்டு மெல்ல வெளியே வந்து விட்டாள்.

மனைவி மெல்ல இவன் கையை பற்றிக்கொண்டு கண்களால் குழந்தையை சுட்டி காட்டினாள். இவன் குழந்தையை ஆசையுடன் பார்த்து விட்டு மனைவியின் நெற்றியில் முத்த மிட்டவன், அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற நினைவு வந்தவுடன் மெல்ல மனைவியிடம் நான் போய் டிஸ்சார்ஜ் எப்பன்னு கேட்டுட்டு வர்றேன். பணத்துக்கு என்ன பண்ணப்போறீங்க? கவலை நிறைந்த குரலில் கேட்ட மனைவியை தட்டிக்கொடுத்து நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியே நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் மனைவியிடம் இப்ப வர்றேன் என்று ஹாஸ்பிடலின் கணக்கு அலுவலகத்துக்கு சென்றான்.

“டெலிவரி” நார்மல் ஆகிவிட்டதால், அதிகமான தொகை ஆகவில்லை. என்றாலும் பத்தாயிரம் ரூபாய் ஆகி இருந்தது. இவனுக்கு கண்ணை இறுக்கி கட்டியது. எப்படி கட்டப்போகிறோம், மனதுக்குள் பயத்துடன் வெளியே வந்தவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் பெஞ்சிலிருந்து எழுந்து வந்தார்.

என்னப்பா பாத்துட்டயா?எப்படியிருக்கறா உன் பொண்ணு? சிரித்துக்கொண்டே வந்தவர், இவன் முகத்தை பார்த்து என்னப்பா? ஏன் கவலையா இருக்கே? என்று அவன் தோளை தொட்டார்.

அண்னே பத்தாயிரம் ரூபாய் கட்ட சொல்றாங்க, எங்கிட்ட ஆயிரம் ரூபாய் தான் இப்ப கையில இருக்கு,கொஞ்சம் இவங்களை பாத்துக்குங்க, எனக்கு தொ¢ஞ்சவரு ஒருத்தர் கிட்ட போய் பணம் கடனா வாங்கிட்டு வந்துடறேன்.

சொன்னவனை கூர்ந்து பார்த்து எப்படி பணம் புரட்டுவ? இவன் மெல்ல திணறி, ஆட்டோவை ஒத்தி வச்சுத்தான்,என்று சொன்னவனை இவர் மெல்ல தொட்டு இந்தா என்று சட்டைப்பையிலிருந்து ஒரு கத்தை பணத்தை கொடுத்தார். போ போய் முதல்ல கொண்டு போய் பணத்தை கட்டிட்டு வா. டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போற வழிய பார்ப்போம்.

அண்னே என்று உணர்ச்சி வசப்பட்டு அவர் கையை பிடித்தவனின் கண்களிலிருந்து மள மள வென கண்ணீர் வழிந்தது. அழுகாதே, உன் சம்சாரத்துக்கு வலி வந்தவுடனேயே என் சம்சாரம் செஞ்ச முதல் வேலை அவ கையில இருந்த வளையலை கழட்டி, கொண்டு போய் அடகு வச்சு பணத்தை ஏற்பாடு பண்ணிட்டு வாங்க அப்படீன்னு என்னை அனுப்பிச்சுட்டு அதுக்கப்புறம்தான் இந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தோம்.

பணத்தை கட்டி மனைவியையும் குழந்தையையும் கூட்டி செல்ல விரைந்தான் சரவணன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *