“செல்லமக்கா! உங்கடை நாய் குட்டிபோட்டூட்டுதே?”
“உனக்கு வேறை கதையே இல்லையே…. எப்ப பார்த்தாலும் ஆடு மடிவிட்டூட்டுதே…. நாய் குட்டி போட்டூட்டுதே…. மாட்டிலை எத்தினை போத்தில் பால் கறக்கிறியள் எண்ட கதைதான்” என்று சலிப்புடன் கூறினார் செல்லமக்கா.
“செல்லமக்கா…. வீட்டிலை என்னவாலும் பிரச்சினை கிரச்சினையே? சள்புள்ளெண்டு விழூறியள். நாய் குட்டிபோட்டால் கவனமாய்ப் பாருங்கோ…. பிறக்கிற குட்டியளிலை ஒண்டுக்கு வீரன் எண்டு பேர் வையுங்கோ….”
“செல்லமக்கா! உங்கடை நாய் குட்டிபோட்டூட்டுதே?”
“உனக்கு வேறை கதையே இல்லையே…. எப்ப பார்த்தாலும் ஆடு மடிவிட்டூட்டுதே…. நாய் குட்டி போட்டூட்டுதே…. மாட்டிலை எத்தினை போத்தில் பால் கறக்கிறியள் எண்ட கதைதான்” என்று சலிப்புடன் கூறினார் செல்லமக்கா.
“செல்லமக்கா…. வீட்டிலை என்னவாலும் பிரச்சினை கிரச்சினையே? சள்புள்ளெண்டு விழூறியள். நாய் குட்டிபோட்டால் கவனமாய்ப் பாருங்கோ…. பிறக்கிற குட்டியளிலை ஒண்டுக்கு வீரன் எண்டு பேர் வையுங்கோ….”
“உன்னோடை இதே கதையாய்ப்போச்சு. ஒரு ஆம்பிளையெண்டால் நாலு ஊர்ப்புதினங்களைக் கதைக்கவேணும். நாலு இடத்திலை திரிஞ்சு வேலைசெய்து சம்பாரிக்கவேணும். இப்பிடியே இருந்து பாவம் உன்ரை கொப்பரையும் இந்த வயசான காலத்திலை ஏன்டாப்பா கஸ்டப்படுத்துறாய்?”
“அப்புவை இந்த வயசான காலத்திலை வேலைக்கு அனுப்பிப்போட்டு வீட்டிலை இருந்து சாப்பிட எனக்கென்ன ஆசையே? எல்லாம் என்ரை தலைவிதி. சாத்திரி சித்தம்பலத்தைக் கேட்டுப் பாருங்கோ…. எனக்கிப்ப நேரகாலம் சரியில்லையாம்…” என்று தனது இயலாமையைச் சாஸ்திரத்தின் மீது சுமத்தியவரைப் பார்க்கச் செல்லமக்காவுக்கு ஆத்திரமாகவும் வேதனையாகவும் வந்தது.
“இவனுடன் கதைக்கிறதிலை எந்தவிதமான பிரயோசனமும் இல்லை” என அவ்விடத்தைவிட்டு அகன்றார் செல்லமக்கா.
அந்த இவன்…. எங்கடை அம்மிணி மாமாதான்.
சிறுவர்களுக்கு அம்மிணி மாமா. பெரியவர்களுக்கும் அம்மிணி மாமாதான். வயதான அப்புவும் ஆச்சியும் அம்மிணி என்றுதான் அந்த நாற்பது வயதை நெருங்கும் பாலகனை ஆசையாக அழைப்பார்கள்.
அம்மிணி மாமாவின் உண்மையான பெயர்…. அதை ஏன் இப்போது? அதைப்பற்றி எவருக்குமே அக்கறையில்லை. பெயரில் உள்ள வித்தியாசம்போலவே அவரது நடை உடை பாவனைகளும் வித்தியாசமானவை. நடுத்தர வயதான பெண்கள் எங்கே கூட்டமாக இருந்து உரையாடுகிறார்களோ, அதுவே அவரது விவாதமேடை. எங்கே ஆடு, மாடு, நாய் போன்றவை உலாவுகின்றனவோ- அங்கே அவரது அன்புப் பரிபாசைகள். நாயை மடியில் வைத்துக் கொஞ்சுவார். பக்கத்து வீட்டு மாட்டுக்கு, அது போடும் கன்றுக்குட்டிக்கு நாமம் சூட்டி மகிழ உடனே ஆஜராகிவிடுவார்.
புதிதாக எவராவது மாடு வாங்கினால் பலநூறு கேள்விகள்.
“எணேய்…. மாட்டுக்குச் சிவப்பி எண்டு பேர் வையுங்கோ. எத்தனை போத்தில் பால் கறக்கும்? எத்தினை மணிக்குக் கறக்கிறனீங்கள்? வைக்கல்மட்டுந்தான் போடுறனீங்களோ? தவிடும் வைக்கிறனீங்களோ? தவிடு காந்தி கடையிலை மலிவே…?”
பெற்றோருக்கு ஒரே பிள்ளை. பலகாலமாகப் பிள்ளை இல்லாமல் கோவில் குளமென்று திரிந்து, விரதம் இருந்துதான் “அம்மிணி மாமா” பிறந்தாராம்.
“அம்மிணி…. அப்பு…. கவனமாய்ப் போவிட்டு வாணை. அங்கை இங்கை பிராக்குப் பாக்காதையணை.”
அம்மிணி மாமா எங்கேயாவது புறப்பட்டால் அந்த வயதான ஆச்சி இப்படித்தான் மகனை வழியனுப்புவார். பெற்றோரின் அளவுக்கு மீறிய செல்லம் அவரை இந்தளவிற்கு ஆளாக்கியிருந்தது.
சந்தியில் கூடும் பொடியங்கள்…. அவர்களுக்கு இவர் ஒரு பொழுதுபோக்குச்சாதனம். அம்மிணி மாமாவைக் கண்டால் பொடியங்களின் கேலிக்கும் சிரிப்புக்கும் குறைவில்லை. அவரை ஆத்திரப்படுத்தி, அவரிடம் வசைவாங்குவதில் அவ்வளவு ஆனந்தம்.
அம்மிணி மாமாமேல் இரக்கப்பட்டு அவரின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, அவரைத் திருத்த முயன்று தோல்வி கண்ட செல்லமக்கா போன்றவர்களும் இல்லாமலில்லை.
இப்படித்தான் ஒருமுறை…. பலரின் ஏச்சுக்களால்…. அறிவுரைகளால் பீடிக் கொம்பனி ஒன்றில் வேலைசெய்ய ஒப்புக்கொண்டார். ஆனால் அதிலும் ஒரு தடை. அம்மிணி மாமாவுக்குச் சைக்கிள் ஓடத் தெரியாது. முப்பத்தைந்து வயதுப் பாலகன் வாடகைச் சைக்கிளில் ஒரு கிழமை பழகியிருப்பார்…. கால் கைகளில் எல்லாம் ஒரே கீறல் காயங்கள். அந்த வயதான பெற்றோர்களுக்கு மனம் கேட்கவில்லை. வேலையும் வேண்டாம்- சைக்கிளும் வேண்டாம்- எங்கடை பிள்ளை வீட்டில் இருந்தாலே போதும் என்று பேசாமல் விட்டுவிட்டார்கள்.
அம்மிணி மாமாவுக்கு எவ்வளவுகாலந்தான் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்? அந்த வயதான பெற்றோர் செய்த புண்ணியமோ என்னவோ? தந்தை வேலைசெய்த பிடவைக்கடை முதலாளி அம்மிணி மாமாமீது பரிதாபப்பட்டு வேலை கொடுத்தார். கஸ்டமில்லாத வேலை. மனிதாபிமானமுள்ள முதலாளி. பிடவைக்கடையில் வேலைசெய்தாலும் அம்மிணி மாமாவின் பழக்க வழக்கங்களில் மாற்றமில்லை.
அவரது சிறுபிள்ளைத்தனமான குணாதிசயங்களைப் புரிந்துகொண்ட அந்தக் கடை முதலாளியே அவருக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைத்தார். திருமணமான புதிதில் உறவினர்களின் அறிவுரைப்படி நாய், பூனை, மாடுகள் பக்கம் செல்லாமல் ஒதுங்கியிருந்தவர், நாட்கள் செல்லச்செல்ல “பழைய குருடி கதவைத் திறவடி” என்ற கதையாகிவிட்டது.
மனைவியும் அவரைத் திருத்தமுடியாமல் ஏதாவது செய்யட்டும் என்று விட்டுவிட்டார்.
தற்போது அம்மிணி மாமாவுக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டும் பெண் பிள்ளைகள்.
“சுகந்தி….! கறுப்பிக்குத் தண்ணி வைச்சனியே பிள்ளை?”
“ஓம் அப்பா.”
கறுப்பி அவர் அன்போடு வளர்க்கும் ஆடு. சுகந்தி மூத்தவள். வயது பதினெட்டு இருக்கும். அம்மிணி மாமாவைப்போலச் சிவப்பு. ஆனால் குணம் தாயைப்போல….
இளையவள் வசந்தி. பத்துவயதுச் சிறுமி. வசந்திக்கு அப்பா என்றாலே பிடிக்காது. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அம்மிணி மாமா இனிப்புப் பண்டங்களைப் பிள்ளைகளுக்கோ, மனைவிக்கோ பகிர்ந்துகொடுக்காமல் தான்மட்டுமே சாப்பிடுவார். சுயநலத்தால் அல்ல- சிறு பிள்ளைத்தனந்தான் காரணம்.
அன்று அம்மிணி மாமா வழக்கம்போல வேலைமுடிந்து கடையில் இருந்து வந்தபோது, தலைவிரி கோலமாக அழுதுகொண்டிருந்த மனைவியைக் கண்டு திகைத்துவிட்டார். அருகில் செல்லமக்காவும் வேறு சிலரும் சோகமாக அமர்ந்திருந்தனர்.
முற்றத்தில் முடங்கிப் போயிருந்த “ஜோன்” என்ற அந்த நாய் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, மீண்டும் முடங்கிக்கொண்டது.
“சுகந்தி! தேத்தண்ணி கொண்டு வா பிள்ளை….”
சுகந்தியைக் காணவில்லை.
வசந்தி தாயின் பின்னால் சோர்ந்திருந்தாள்.
வழமையாக அவரைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டு பாய்ந்துவரும் “ஜோன்”கூட முடங்கிக் கிடக்கிறதென்றால், ஏதோ நடந்திருக்கவேண்டும் என்பதை அவரால் உணரமுடிந்தது.
செல்லமக்காதான் விசயத்தை ஆரம்பித்தார்.
“அம்மிணி! கவலைப்படாதை…. சுகந்தி நடேசின்ரை மூத்த மகனோடை ஓடீட்டாள்….”
ஓடீட்டாளா….?!
“அப்பா அம்மா வேண்டாம் என்றுதானே நேற்றுப் பார்த்த ஒருத்தனோடை ஓடீட்டாள்” என்று எண்ணியவராய், பிரமை பிடித்தவரைப்போலிருந்தவரின் பார்வை வசந்திமீது படர்ந்து, முற்றத்தில் படுத்திருந்த “ஜோன்”மீது நிலைத்தது.
“ஜோன்….!”
அழைப்புக்கேட்டு ஓடிவந்து காலை நக்கிய ஜோனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்.
“எணேய்! கறுப்பிக்குத் தண்ணி வைச்சனியே…?”
மகள் போய்விட்டாளே என்று கவலைப்படாமல், மனைவியை என்ன ஏதென்று விசாரிக்காமல், நாயை மடியில் வைத்துக்கொண்டு, ஆட்டைப்பற்றி விசாரித்தமை செல்லமக்காவுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
“என்ன பிறவி” என்பதுபோல் மற்றவர்கள் முகம் சுழித்தனர்.
“டேய் அம்மிணி! உனக்கென்ன விசரே? பெத்தமகள் ஒருத்தனோடை ஓடீட்டாள் எண்டு நாங்கள் எல்லாரும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறம். நீ விசரன்மாதிரி நாயோடை கொஞ்சிக்கொண்டிருக்கிறாய். உன்ரை மனமென்ன கல்லே?” என்று கோபத்துடன் ஏசிய செல்லம் அக்காவை நிமிர்ந்து நோக்கிய அம்மிணி மாமாவின் கண்கள் இலேசாகக் கலங்கியிருந்தன.
“செல்லமக்கா! என்ரை பிள்ளையளை ஒருநாள்கூடக் கைநீட்டி அடிச்சதில்லை. அவையின்ரை சாப்பாட்டுக்கோ, துணிமணிக்கோ எந்தக் குறையும் விடேல்லை. நேத்தைக்குக் கோபத்திலை ஜோனை உதைச்சன். ஆனா விடியவெள்ளண்ண வேலைக்குப் போகேக்கை வாலை ஆட்டிக்கொண்டு வலியவந்து வழியனுப்பி வைச்சுது. கறுப்பி ஆடு இதுவரைக்கும் எத்தினை குட்டிபோட்டிருக்கும்? அதுகளை எல்லாம் அதீட்டையிருந்து பிரிச்சு வித்தன். பாலைக் கறந்து குடிச்சன். அதுக்காகக் கறுப்பி என்னை வெறுக்கேல்லை. என்னைக் கண்டவுடனை தலையை ஆட்டி மகிழ்ச்சியைக் காட்டுது. ஆனா என்ரை இரத்தம் எண்டு வளர்ந்த சுகந்தி…. நடேசின்ரை பொடியனோடை போனதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனாப் போகேக்கை என்னட்டை ஒரு வார்த்தை சொன்னவளே?”
“இந்தப் பதினெட்டு வருசமாய் அவளை வளர்த்த என்னட்டைக்கூட ஒரு வார்த்தை சொல்லாமல் நேத்துப் பாத்தவனோடை போவிட்டாள். இப்ப நீங்களே அவளை “ஓடீட்டாள்” எண்டு சொல்லுறியள். நாளைக்கு இந்த வசந்தியும் ஓடீட்டாள் எண்டு பேரெடுக்கலாம்.”
“ஆனா செல்லமக்கா…. கறுப்பி ஓடமாட்டாள். ஜோன் ஓடமாட்டான். அவனுக்குத் தெரியும், நான் அவன்மேலை வைச்சிருக்கிற அன்பைப்பற்றி. அதாலை அவன் ஓடவேமாட்டான். சுகந்திமேலை வைச்சிருக்கிற அன்பை…. நான் அவள்மேலை வைச்சிருக்கிற பாசத்தை எல்லாம் இதுவரைக்கும் தெரியாமைப் பறந்துவிட்டாளே அவள்” என்று கூறியவர், உணர்ச்சிவசப்பட்டவராய்ச் சிறுகுழந்தையைப்போலத் தேம்பித்தேம்பி அழத்தொடங்கினார்.
அம்மிணி மாமாவின் பரிதாபத்தைப் பார்த்த செல்லமக்காவால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் போய்விட்டது.
(பிரசுரம்: கலைவிளக்கு-தை”1991)