இதயத்தை சுட்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 4,965 
 
 

அதிகாலை ஐந்து மணியிருக்கும். இராமாயி தன்னோட புருஷன் வேலனைத்தட்டி எழுப்பினாள். ” ஏய்… ஏய்… எந்திரியா… இன்னும் தூங்கிட்டிருக்கிற. சட்டுபுட்டுன்னு எந்திரிச்சோம், காலவாசப் பக்கம் போயி, மண்ண கொலச்சுப் போட்டோமுன்னு இல்லாம… எந்திரியா” வேலன் முந்திய நாள் செஞ்ச வேலையினால உடம்பு கலச்சுப் போயிருந்தான். அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவன், இராமாயி போட்ட சத்தத்துல உடலை முறுக்கிக்கொண்டே மெதுவாக எழுந்தான். பக்கத்துல உள்ள கொடத்துல தண்ணிய அள்ளி மூஞ்சியக் கழுவிக்கொண்டான். மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு காலவாசலுக்குப் புறப்பட்டான்.

வேலன் மாங்கு மாங்குனு மண்ணை வெட்டி போட்டான். காலையில லேசாக குளிர் இருந்தாலும், அவனோட உடல் பூராவும் வியர்த்திருந்தது. அன்றைக்கு எவ்வளவு செங்கல் அறுக்க முடியுமோ அந்த அளவுக்கு மண்ணை வெட்டி, தண்ணி ஊற்றி கொலச்சுப் போட்டான். கிழக்கே சூரியன் உதித்துக் கொண்டிருந்தான். ஆனால் வேலவனுடைய வாழ்வில் புதிய உதயமே இல்லாததால், தினந்தோறும் உதிக்கும் சூரியன் அவனுக்கு எந்த அர்த்தத்தையும் தரவில்லை.

இராமாயி வேகவேகமாய் சமயல் வேலையை முடித்துக்கொண்டிருந்தாள். அம்மியில் தொட்டுக் கொள்வதற்கு தொவயல் அரைத்துக் கொண்டே “டேய்… டேய்… முத்து சீக்கிரம் கிளம்பு. பள்ளிக்கூடம் போக நேரமாச்சுள்ள” அக்கறையோடு தன்னுடைய ஒரே மகனைக் கூப்பிட்டாள். முத்துவுக்கு படிப்பில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. இந்த வருடம் ஏழாம் வகுப்பு முடித்து எட்டாவதுக்குச் செல்கிறான். “அம்மா ஸ்கூல் தொடங்கி இரண்டு வாரம் ஆவுது. இன்னும் யூனிபார்ம், புஸ்தகமெல்லாம் வாங்கல… அப்பாக்கிட்ட சொல்லுமா” முத்து நச்சரித்தான். ” சரி… சரி… இப்போ நீ பள்ளிக்கூடத்துக்கு போ, நான் கொப்பன்கிட்ட சொல்லி வழக்கம்போல் காலவாசல் முதலாளி கிட்ட கொஞ்சம் கடன் கேட்கச் சொல்றேன்” இராமாயி அவனை அனுப்பிவிட்டு, புருசனுக்கு கஞ்சி எடுத்துகிட்டு காலவாசலுக்கு புறப்பட்டாள்.

மண்ணை கொலச்சுப் போட்டவுடன், வேலன் செங்கல் அறுக்க வேண்டிய இடத்தை சுத்தம் செய்தான். ஓர் இடத்துல கொலச்சுப் போட்டுக்கிடக்கிற மண்ணை, செங்கல் அறுக்கத் தோதுவா பக்கத்துல அள்ளிப்போட்டான். கட்டையை எடுத்து இரண்டு செங்கலா, வரிசையா அறுக்க ஆரம்பித்தான். ஒரு நாளைக்கு ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு செங்கல்தான் இரண்டு பேரும் சேர்ந்து அறுக்க முடியும். ஆயிரம் செங்கலுக்கு நூறு ரூபா கூலி.

இராமாயி கஞ்சியைக் கொண்டுவந்து இறக்கி வைத்தாள். சூரியன் உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தான். ” இந்தாய்யா… வந்து கஞ்சியக் குடிச்சிட்டுப் போயி வேலையைச் செய் ” அவள் அக்கறையோடு புருசனைக் கூப்பிட்டாள். ” கொஞ்சம் பொறுடி இன்னும் இரண்டு வரிசைக்கல் அறுத்துட்டு கஞ்சிக் குடிக்கிறேன் “, குனிந்துகொண்டே பேசினான்.

இராமாயி, உடனே கஞ்சியை காக்கா வந்து கொத்தாம நல்லா மூடிவச்சுட்டு புருசனுக்கு இணையா அவளும் மண்ணை அள்ளி செங்கல் அறுக்க ஆரம்பித்தாள். இரண்டு வரிசை வேகவேகமாக கல்லு அறுத்த பிறகு”. சரி வாடி, கஞ்சியக் குடிச்சிட்டு வரலாம்.” வேலன் கூப்பிட்டான். கையை நல்லா கழுவிட்டு இரண்டுபேரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

“வெயிலு ஏறிக்கிட்டிருக்கு வா… வா… கல்ல அறுத்துப் போட்டுட்டு அப்புறம் சாவகாசமா உட்காரலாம்” என்றவாறே வேகமாகச் சாப்பிட்டு வேலன் கையைக் கழுவினான். மீண்டும் இருவரும் வேலை செய்ய ஆரம்பித்தனர். கடும் வெயில் அவர்களை வாட்டியது. வேலனின் உடம்பை வியர்வைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

“ஏய்யா”, “நம்ம முத்து புதுசா எட்டாவதுக்குப் போயி இரண்டு வாரம் ஆவுது. ஒரு புதுச்சட்டை வாங்கல… புஸ்தகம் வாங்கல…”. புலம்பினாள். இராமாயி “ம்… புரியுது… புரியுது, இன்னைக்கு சாயந்தரம் முதலாளியப் பார்த்து ஐநூறு ரூபாய் கடன் கேட்கிறேன்” என்றான் வேலன். கொலச்சிப் போட்ட மண்ணையெல்லாம் செங்கல்லா அறுத்துப்போட மணி ஒன்னாகிவிட்டது, சரியா ஆயிரத்து ஐநூறு கல்லு அறுத்து முடித்தனர். கைகால் முகம் கழுவிக்கொண்டு புளியமரத்தடிக்கு வந்தனர். ” பசிக்குதடி… சீக்கிரம் கஞ்சியிருந்தா ஊத்து ” வேலன் பசியோடு பேசினான். இருவரும் அமர்ந்து கஞ்சி குடித்தார்கள்.

புளியமரத்தடி நிழல் ரொம்ப அருமையாக இருந்தது. வேலை செய்து களைப்பில், அங்கேயே அசந்து தூங்கினர். வெயில் மூஞ்சியில் அடித்தவுடன் கண்விழித்துக் கொண்ட இராமாயி, “இந்தாய்யா பொழுது சாயப்போவுது எந்திரிய்யா… வேலனைத் தட்டி எழுப்பினாள்.

அவசராமாக எழுந்து கண்ணைத் துடைத்தான். “சரி நான் முதலாளிகிட்ட போயி கடன் கேட்டுட்டு வாறேன், நீ போயி குடிசையில கஞ்சியக் காச்சு” சொல்லிக் கொண்டே அவன் நடக்க ஆரம்பித்தான்.

“வாடா… வேலா என்னா விசயம்? இன்னைக்கு கல்லு அறுத்தாச்சா”? முதலாளி வேலனை விசாரித்தார். முதலாளியைப் பார்த்தவுடன் துண்டை எடுத்து கையில் போட்ட வேலன், “ஆமாயா காலவாசலேர்ந்துதான் வர்றேன்”, பணிவுடன் பேசினான்.

“ஐயா என்னுடைய பையனுக்கு புஸ்தகம், சட்டை துணிமணியெல்லாம் வாங்குறதுக்கு ஐநூறு ரூபா பணம் வேணும். “… வேலன் தயவுடன் கேட்டான். பணம் என்றவுடன் தன்னுடைய தொனியை மாற்றிக் கொண்ட முதலாளி, “இந்தா பாரு ஏற்கனவே நீ கட்ட வேண்டிய நாலாயிரத்துக்கு வட்டி ஏறிக்கிட்டே போவுது. அதவேற கட்டி முடிக்கல. அதுக்கு முன்னால இன்னும் கடனா கேக்குற, போயிட்டு நாளைக்கு வா பேசிக்கலாம்” என்று எரிச்சலுடன் பேசினார். மனதில் கோபத்துடனும் தன் வாடிய முகத்தோடும் வேலன் குடிசைக்குத் திரும்பி வந்தான்.

சாயந்திரநேரம். வெளியே லேசாக இருட்டி இருந்தது. பிள்ளைகள் குடிசை ஓரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேலன் மெதுவாகக் குனிந்து குடிசையில் நுழைந்தான். இராமாயி சமயல் வேலையை முடித்து விட்டு சாப்பிட தயாராய் இருந்தாள். அப்பா வந்ததைப் பார்த்து முத்து ஓடிவந்தான். கைகால் முகம் கழுவிக் கொண்டு அவனும் சாப்பிடத் தயாரானான். மூவரும் சாப்பிடும்போது, “நாளைக்கு புஸ்தகமெல்லாம் வாங்கித் தருவீங்களா”? முத்து ஏக்கத்தோடு கேட்டான். “டேய், முதல்ல சாப்பிட்டுப் போயி படு. எல்லாம் பிறகு பாத்துக்கலாம், ” வேலன் அதட்டினான்.

சாப்பிட்டு முடித்தவுடன் மூவரும் பாயை விரித்துப் படுத்தனர். வழக்கத்துக்கு மாறாக, வேலன் ஒன்றும் பேசாதிருந்தான். முதலாளி சொன்ன பதில் அவனை அமைதியாக்கிவிட்டது. இராமாயி வேலனுடைய முகத்தைப் பார்த்து பணம் கிடைக்கவில்லையென்று தெரிந்துகொண்டாள். ‘அப்பா, நாம வருசம், முழுவதும் செங்கல் அறுக்கிறோம். எத்தனையோ பேரு செங்கல் வாங்கிட்டுப்போயி வீடு கட்றாங்க. நம்ம வீடு மட்டும் ஏம்ப்பா வெறும் மண் குடிசையா நிக்குது?”

பதில் சொல்லத் தெரியாத வேலன், “டேய் பேசாமப் படுத்துத் தூங்குடா, பெரிய மனுசன் மாதிரி பேசுற” முத்துவை அதட்டினான். கொஞ்ச நேரம் கழித்து முத்துவும் இராமாயியும் தூங்கி விட்டனர். வேலனால், தூங்க முடியவில்லை. முத்து கேட்ட கேள்வி அவனுடைய இதயத்தைக் குத்திக் கொண்டிருந்தது.

வேலனுக்கு அடுத்த நாள் வழக்கமான செங்கல் அறுக்கும் வேலை கிடையாது. அறுத்த செங்கலை சூளையில் வைத்து தீப்போடுகிற வேலை. செங்கலுக்கு இடையே கட்டைகளை அடுக்கி விட்டு, தீப்போட ஆரம்பித்தான். அங்கே எரிந்த நெருப்பு செங்கலை மட்டுமல்ல, வேலனுடைய இதயத்தையும் சுட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *