ஒத்தக் கம்மல் காது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 9,223 
 

“ஒத்தக் கம்மல் கோயிந்தனோடக் காத, அவன் குடிபோதை யில சாவடியில விழுந்து கெடந்தப்ப எவனோ ராத்திரியோட ராத்திரியா அறுத்துட்டுப் போயிட்டானாம்! காத அறுத்துட்டுப் போனவனக் கண்டுபுடிச்சு கசாப்பு போட்ற கொல வெறில அவெஞ் சொந்தக்காரய்ங்க மீசைய முறுக்கிக்கிட்டு இருக்காங்களாம். அறுத்தது யாருன்னுட்டு இன்னும் கண்டுபுடிக்க முடியலையாம்…” சம்பவம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்களாகியும்கூட ஊர்க்காரர்கள் வாய் முழுக்க இந்த வார்த்தைகளையே முணு முணுத்துக் கொண்டிருந்தன.

கடைவீதி, சலூன்கடை, கிராமத்துக்குப் பொதுவான சாவடி என எல்லா இடங்களிலும் இதே அரட்டைக் கச்சேரிதான் மிரட்டிக் கொண்டிருந்தது. சிவகாமிக்கும் இந்தச் சம்பவம் ஆச்சரியத்திற்குரியதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் இருந்தது. “எங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்ட அந்தச் சண்டாளன கடவுளு காதறுத்துத் தண்டிச்சிட்டான்…” எல்லோரிடமும் சொல்லி சிலாகித்தாள். ஏழாம் வகுப்பு படிக்கிற மகள் பாக்கியத்திற்கு நாளை பிறந்த நாள் என்பதால் வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்வதில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தாள் சிவகாமி.

சிறுமி பாக்கியமும், ஒத்தக் கம்மல் கோவிந்தனின் காது அறுபட்ட சங்கதியைக் கேள்விப்பட்டது முதல், “ஒத்தக் கம்மல் கோவிந்தன், இப்ப ஒத்தக் காது கோவிந்தன் ஆயிட்டான்!” என்று வீட்டிலும், தன் வயசுச் சிறுமிகளிடமும் வார்த்தைகளில் உற்சாகக் கும்மியடித்துக் கொண்டிருந்தாள். சிவகாமியின் துரத்தலால் நான்கு நாட்களுக்கு முன்பு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டிருந்த பதினாறு வயதே நிறைந்த சிறுவன் தவசியை, ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து வந்து, ‘இவெ அனாதப் பயலாம். பசிக்குது.

ஏதாச்சும் வேல குடுங்கன்னு கேட்டான். பாவமா இருந்துச்சு. சரி.. வாடான்னு கூப்டுக்கிட்டு வந்துட்டேன்!’ என்றான் சங்கிலி. அவளுக்கு இது அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஒருசில நிமிடங்கள் மனசு வெறிக்க யோசித்துவிட்டு, “சரி இருக்கட்டும்” என்று தலையாட்டவும், அதுவரையில் அச்சத்தில் வாடித் துவண்டிருந்த சிறுவனின் முகமெங்கும் சந்தோஷப் பச்சை. அப்போதே அந்தக் குடும்பத்தில் ஒருவனாக ஐக்கியமாகியிருந்தான் சிறுவன் தவசி.

ஆனாலும், சங்கிலியோ பாக்கியமோ வீட்டில் இல்லாத சமயங்களில் தவசியைப் பார்த்து, “எலேய்… பையா, நாங்க ஒண்ணும் டாடா பிர்லாவோ, எங்க வீடு சத்திரம், சாவடியோ கெடையாது தாராளமா வந்து தங்குறதுக்கும், திங்கிறதுக்கும். அன்னாடங் காய்ச்சிதான். ஒனக்கும் சேத்து பணிவிடை செய்ய என்னால முடியாது. சீக்கிரமா இந்த வீட்லருந்து கெளம்பப் பாரு. இல்லேன்னா, நானே ஒரு நாளு ஒன்ன அடிச்சுத் தொரத்திவிட்றாப்ல நெலம வந்துரும்…” என்று கண்களைத் திரட்டி முழித்து அதட்டுவாள்.

அவன் எதுவும் பதில் பேசாமல் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விடுவான். சிவகாமி தருகிற இந்த நெருக்கடியைப் பற்றி சங்கிலியிடமோ, பாக்கியத்திடமோ புகார் பண்ணுவதுமில்லை. எல்லாம் சிவகாமியைப் பற்றிய பயம்தான். தவசி இவர்களிடம் அடைக்கலமாகி வருடக்கணக்கில் ஆகியிருந்தும்கூட இதுவரையில் அவனைத் தேடி ஒருத்தரும் வந்திருக்கவில்லை. சாலையோரக் கருவாட்டுக் கடைக்கு காலையில் வருகிற தவசி, வியாபாரம் முடிந்து சாயங்காலம்தான் வீட்டுக்குப் போவான்.

இந்த நிலையில்தான் அந்த விரும்பத்தகாத சம்பவம் அரங்கேறியிருந்தது. கடந்த வாரத்தில் ஒருநாள், கருவாட்டுக்குக் கடைக்கு முன்பாக வேகமாய் சைக்கிளில் வந்திறங்கிய ஒத்தக் கம்மல் கோயிந்தன், “ம்… சட்டுன்னு காணிக்கைக் காச எடுப்பா சங்கிலி. என்னைக் காக்க வைக்காதே” என்று சைக்கிளில் உட்கார்ந்தவாறே காலைத் தரையில் ஊன்றியவாறு கேட்டான். அவனது பாஷையில் ‘காணிக்கை’ என்பதற்கு ‘மாமூல்’ என்று அர்த்தம். “என்னப்பா கோயிந்தா… தெனமும் சாயங்காலந்தானே மாமூல் கேட்டு வருவ.

இன்னிக்கி காலங்காத்தால வந்து காசு கேட்டா, என்னத்த வெச்சுத் தருவேன்? ஏற்கனவே ஏவாரம் ஈ மொய்ச்சுக் கெடக்குது…” சல்லைப்பட்டுச் சொன்னான் சங்கிலி. அவனது இந்த பதில் ஒத்தக் கம்மல் கோவிந்தனின் மனசுக்குள் தீப்பந்தம் கொளுத்தியது. எதிர்பாராத பதில் அதிர்வை உண்டாக்கிட, சரவெடிகளாய் விழுந்தன குரல் வலுத்த வார்த்தைகள். “ஈ ஓட்டிக் கெடக்கோ… எறும்பு ஓட்டிக் கெடக்கோ… அதெல்லாம் ஏங்கிட்ட ஒப்பிக்க வேணாம். என்னோட தேவையெல்லாம் பத்து ரூவா காணிக்கைதான்.

சாயங்காலம் வந்தாமட்டும் கல்லாப் பொட்டியவா காணிக்கையா தரப்போற? அதே பத்து ரூவாதான்… ம்… எட்ரா பணத்த… சாயங்காலம் என்னால வர முடியாது. எனக்கு வேற சோலி இருக்குது…” இத்தகைய அதட்டலை அவனிடமிருந்து எதிர்பார்த்திராத சங்கிலியின் நிம்மதி அப்போதே செத்தொழிந்தது. ஆனாலும், தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவாறு, “என்னப்பா கோயிந்தா… காசு இருந்தா நாங் குடுத்துற மாட்டேனா? பிச்சைக்காரனாட்டம் உன்னைக் கெஞ்ச வெச்சிட்டா இருப்பேன்?” சாஷ்டாங்கமாக அவனுக்கு முன்பு மண்டியிட்டன சங்கிலியின் வார்த்தைகள்.

‘பிச்சைக்காரனாட்டம்’ என்ற வார்த்தைகள் ஒத்தக் கம்மல் கோவிந்தனுக்குள் பெருத்த ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். தன்னை அவமதிப்பது போன்ற செயலை பக்கத்துக் கடைக்காரர்கள் வேடிக்கை பார்ப்பது ஒருவித கூச்சத்தை ஏற்படுத்தியது. “என்னடா சொன்ன…” என்றவாறு மடித்துக்கட்டப்பட்ட லுங்கியில் தோலுரிக்கப்பட்ட கருவேல மரம்போலக் கருமுண்டமாய்க் காட்சி தந்த வலது காலினால், முழு பலத்தையும் உபயோகித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருவாட்டுக் கூடைகளின் மீது ஒரு உதை விட்டான்.

அவ்வளவுதான், கருவாட்டுக் கூடைகள் அடுக்குக் குலைந்து சீட்டுக் கட்டாகச் சரிந்து திசைக்கொன்றாய் வீதியில் சிதறின. இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சங்கிலி நடப்பதறியாது துடித்துப்போனான். சிதறி விழுந்த கருவாடுகளைப் பார்த்துக் கதறியது மனசு. பதற்றப் பிரவாகத்துடன் நின்றிருந்த சிறுவன் தவசியும், சிவகாமியும் சட்டென சுதாரித்துக்கொண்டு சிதறிய கூடைகளையும் கருவாடுகளையும் சேகரிக்க ஆரம்பித்தனர்.”ஏம் பொழப்பு போச்சே..!

இப்டியாப்பா அக்ரமம் பண்ணுவ..! நீ திங்கிற சோத்துல மண்ணையா அள்ளிப் போட்டோம்?”என்றவாறு சிதறிக் கிடந்த கருவாடுகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி கூடையில் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ஒத்தக் கம்மல் கோவிந்தன் சங்கிலியின் கையை இறுகப் பற்றி, “என்னையே கேவலமாப் பேசிட்டியா? இனிமே இந்த ஏரியாவுல நீ கட போடக் கூடாது… ஓடிப்போயிரு!” என்று ஆள்காட்டி விரல் நீட்டி, அந்த இடமே அதிரும் குரலில் உறுமினான்.”எதுக்குக் கட போடக் கூடாதுன்ற? இது என்ன ஒன்னோட எடமா?

மீறிக் கட போட்டா என்ன பண்ணுவ?” பொறுக்கியெடுக்கும் கருவாடுகளை கூடையில் அடுக்கிக் கொண்டே வார்த்தைகளில் வரிந்துகட்டி பதிலுக்கு எகிறினான் சங்கிலி. “நாளைக்கி இந்த எடத்துல உன்னைக் கடை போட விட்டுட்டேன்னா ஏங்காத அறுத்துரு” வலது கையினால் தனது காதைப் பிடித்தபடியும் ஊளைச்சதை அதிரவும் உரக்கக் கத்திவிட்டு தனக்கேயுரிய பாணியில தாவிக் குதித்தேறி சைக்கிளில் உட்கார்ந்தபடி அங்கிருந்து கிளம்பினான் ஒத்தக் கம்மல் கோவிந்தன்.

இந்தச் சம்பவம் ராத்திரி பூராவும் தூக்கத்தைத் தூக்கில் தொங்கவிட்டு, நிம்மதியை நாக்குத் தள்ளச் செய்திருந்தது. மறுநாள் காலையில் கடைவிரித்து வியாபாரம் செய்வதற்காக கருவாட்டுக் கூடைகளைச் சுமந்தபடி சங்கிலி, சிவகாமி, சிறுவன் தவசி ஆகிேயார் மெயின் ரோடிலுள்ள சாலையோர சந்தைக் கடைப் பகுதிக்கு வந்தடைய, திகில் இடி தேகமெங்கும் இறங்கியது. நெற்றிப் பொட்டில் அறைந்ததுபோல கண்ணைக் கட்டியது. சங்கிலி வழக்கமாகக் கருவாட்டுக் கடை போடுகிற அந்த இடம், சாணம், ஹோட்டலின் எச்சில் இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த திடீர் குப்பைமேடாக மாறிப் போயிருந்தது.

“பாவிப்பய…” துயரக் குரல் தொனிக்கச் சொன்ன சங்கிலி தைரியத்தை வரவழைத்துக் கொண்டவாறு, குவிக்கப்பட்டிருந்த குப்பையை அகற்ற ஆயத்தப்படான். “இந்தா பாருய்யா… வெவகாரத்த வளர்க்க வேணாம். வார்த்தைங்கிற பேர்ல நாக்குல கொச்சையா நரகலக் கக்குற பய அந்த கோயிந்து. நமக்குத்தான் அசிங்கம். வாய்யா வீட்டுக்குப் போவோம். அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்…” சிவகாமி சொல்வதில் உண்மையிருப்பது உறைக்க, அந்த குப்பையை அகற்றும் முயற்சியைக் கைவிட்டிருந்தான் சங்கிலி.

கருவாடு வியாபாரத்திற்குப் பொருத்தமாக வேறு இடம் அமையாததாலும், கைவசம் இருந்த கருவாடுகள் விற்பதற்கு வழியில்லாமல் போனதாலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நஷ்டமாகியிருந்தது. அன்றாட ஜீவனப் பாட்டுக்கே மூச்சுத் திணற வேண்டிய இக்கட்டு. “களவாணிப்பய..! காத அறுத்துரு… காத அறுத்துருன்னு சொல்லியே காவாலித்தனம் பண்ணிப் பொழப்பக் கெடுக்குற அவெங் காத அறுக்குறதுக்கு இந்த ஊர்ல ஒருத்தனும் அசல் மீச வெச்ச ஆம்பள இல்ல போலிருக்குது…” அழுகையும்,

புலம்பலுமாக இருந்த சிவகாமி, அடுத்த இரண்டு நாட்களில் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து, திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் தவசியை, “எலேய்… தவசி… எலேய்…” என்று தோள்களை உலுக்கியவாறு உசுப்பினாள். அவன் போர்வையை விலக்கிக் கொண்டபடி திடுமென எழுந்து உட்கார்ந்தான். கண்கள் பருந்தைக் கண்டுவிட்ட கோழிக்குஞ்சின் பரிதவிப்புடன் உயிர் வலிக்க அலைந்தான். “என்னங்கம்மா..?” என்றான். சட்டென இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையிலிருந்து ஐம்பது ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்த அவள் அவனது கையில் திணித்தாள்.

“இந்தாடா தவசி… ஒன்னோட தரித்திரம் எங்களையும் புடிச்சு ஆட்டுது. தொழில், வருமானம் எல்லாம் போயி இப்ப நாங்களே கஞ்சி குடிக்கிறது கனாப்போல ஆயிட்டு வருது. இந்த லட்சணத்துல ஒனக்கும் எப்டி கஞ்சி ஊத்திக் காப்பாத்துறது? இப்பவே கெளம்பி எங்கிட்டாச்சும் ஓடிப்போயிரு…” கண்களைக் கசக்கியவாறு, வீட்டிலிருந்து வெளியேறினான் அவன். கருவாட்டுக் கடை முடங்கிப் போனதால் விவசாயக் கூலி வேலைக்குப் போய்விட்டு வந்த சங்கிலியிடமும், பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த மகள் பாக்கியத்திடமும்,

“அந்தப் பய தவசி சொல்லாமக் கொள்ளாம எங்கேயோ போயிட்டாம் போல. நானும் ஊர் பூராவும் தேடிப் பாத்துட்டேன். ஆளக் காணோம்…” பொய்யாய்ச் சொல்லிச் சமாளித்திருந்தாள் கிழவி. “ஏய்… இது என்னன்னு பாரு… நா வீட்டுக்கு வந்துட்டிருக்கையில, தபால்காரரு தந்துட்டுப் போனாரு..!” என்றவாறு வீட்டுக்குள் நுழைந்த சங்கிலி, பாக்கியத்தின் பிறந்த நாளான மறுநாளைக்கு கேசரி செய்வதற்குத் தேவையான பொருட்கள் நிறைந்த பையை ஒரு கையிலும், நன்றாக மடிக்கப்பட்ட அட்டைப் பெட்டியிலான பார்சல் பொட்டலம் ஒன்றை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு வந்தான்.

“என்னய்யா அது… நமக்கு இப்டி பார்சல் அனுப்புற அளவுக்கு யாரு இருக்கா?” “எனக்கென்ன படிக்கவா தெரியும்? நீதானே அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்க..! நீயே பாத்துச் சொல்லு…” என்றபடி அந்தப் பார்சலை சிவகாமியிடம் தந்தான் சங்கிலி. அதை வாங்கிப் பார்த்தாள் அவள். பொட்டலத்தின் மீது ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்!’ என்ற வாசகங்களுடன், ‘அனுப்புநர்: தவசி, கரூர்’ என்றும், ‘பெறுநர்: பாக்கியம்’ என்றும், வீட்டின் முழு முகவரியுடன் எழுதப்பட்டிருந்தது. “நம்ம தவசிதாங்க. பாக்கியத்துக்குப் பொறந்த நாள் பரிசு அனுப்பியிருக்கான்.

நாம அவனுக்கு செலவுக்குத் தந்த காச சேத்து வெச்சு, போன வருஷம் ரெண்டு சோடி கவரிங் கம்மல், வளையல் வாங்கித் தந்தான். இந்தப் பொறந்த நாளுக்கு என்ன அனுப்பியிருக்கானோ…” இணக்கமற்ற பொய்யான புன்னகையுடன் சொல்லிக் கொண்டே அதை வேகமாய்த் திறந்து பார்த்தவள், “ஐயோ…யோ.. ஐயய்யோ…யோ… காது… காது…” என்று அலறியவாறு அந்தப் பொட்டலத்தைக் கையிலிருந்து நழுவவிட்டாள். அதற்குள்ளிருந்து நான்கு வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்ட கம்மல் மாட்டியிருந்த காது ஒன்று அழுகிய நிலையில் கீழே விழுந்தது. இரண்டு கைகளாலும் தலையிலடித்துக் கொண்டு, உதடுகள் கிழிய பெருங்குரலெடுத்து அழுதாள் சிவகாமி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *