ஆலமரத்தின் கீழே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 2,276 
 

(1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம்

சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள்
நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம்
நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ மொழிக
தேன் சிரிக்கும் வெண்மலர் மா தே.

இவை

பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாக்ஷி , 4 உதயலன், திருமலை சேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பால ரொமாயணம், பாலவிநோதக் கதைகள், பொது தர்ம சத்கீதமஞ்சரி, புதுமாதிரிக் கலியாணப் பாட்டு, ஆசாரச் சீர்திருத்தம், பாரிஸ்டர் பஞ்சந்தம், தில்லைக் கோவிந்தன் முதலிய பல பிரபலமான நூல்களின் ஆசிரியரும், பஞ்சாமிர்தம் பத்திராதிபருமான அ. மாதவையர் இயற்றியன.
சென்னை
ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் – புஸ்தகசாலை,
எட்வர்டு எலியட் ரோடு–மயிலாப்பூர்
1924

ஆலமரத்தின் கீழே

இந்தியாவிலே இவ்வித காட்சிகளைப்பரக்கக் காணலாம் :- விசும்பின் மேலே, வானவர் பல்லாயிரர் தமது கண்களை நன்றாகத் திறந்து, பூமியில் நிகழும் திருவிழாவைக் கண் குளிரக் காண்பதென்னும்படி, நக்ஷத்திரங்கள் பிரகாசித் துக்கொண்டிருந்தன; அவர்களது நேத்திரானந்தத் துக்கு இடையூறிழைக்க மேகம் ஒன்றுமேயில்லை ; சிறிய விண்மீன்களின் சிற்றொளியைத் தன் பேரொளியால் அகற்றும் திங்கள் இன்னும் உதயமாகவில்லை; வானத்துக்கும் தரைக்கும் இடையே, அசைவற்ற ஓசையற்ற அமைதியும் இருளும் அவ்வமயத்துக் கிசைந்து பொலியா நின்றன. கீழே பூமியிலே, சிறந்ததோர் தேவாலயம், வெண்சுதையாலும் செம் மண்ணினாலும் பட்டை பட்டையாகத் தீற்றிப் புனையப்பட்ட பெரிய மதிற் சுவரையும்; மனிதனது சரீரமானது ஏழு பகுப்புடைத்து என்பதை மறவாது குறியாநிற்கும் ஏழடுக்கு மாடிகளைத் தன்னுள் அடக்கி, சுவர்க்கத்தைச் சுட்டிக்காட்டுவது போல் மேல் நோக்கி நிமிரும் உன்னதமான கோபுரத்தையும் கொண்டு விளங்கிற்று. கோயிலின் அகத்தே நடன மாதரும் வாத் தியக்காரரும் தத்தம் தொழில் வன்மையைக் காட்டு தற் கும், பூசாரி பரிசாரகர்கள், வேண்டியவாறு, அப்பிராமணர் தம்மைத் தொடாமல் போய் வருவதற்கும் போதிய இட விசாலமின்றி, ஆள் நெருக்கமா யிருந்தது. மணிகளின் ஓதையும், வாத்திய முழக்கமும், வேத பாராயணமும், தேவாரம் திருவாசகம் ஓதொலியும், விழாவயர்வோர் ஒரு வரோடொருவர் உரத்துப்பேசும் கூக்குரலுமாகச் சேர் ந்து, ஓய்வொழிவில்லாத கடலினது ஆரவாரத்தை ஒத்திருந்தது; அன்றியும், தூபதீபங்களினாலும் ஜனங்களின் கெட்ட மூச்சினாலும் ஒரே புழுக்கமா யிருந்தது. திருத் தளியின் புறம்பிலும், சுற்றுறக் கூப்பிடு தூரத்துக்கு ஆள் கூட்டமும் பேரொலியும் குறைவில்லை. ஏனெனின் கோயிலைச் சுற்றித் திருவிழாக் கடைகள் செறிந்து நிறைந் திருந்தன. அக்கடைவீதிகளிலே பெறலாகும் பண்டங் கள் எண்ணி முடியா, ஏட்டில் அடங்கா. எவரெவர் ருசிக்கும், பண சௌகரியத்துக்கும், ஏற்ற வண்ணம் அறுசுவை அளாவிய தின்பன குடிப்பன பல்வேறு பண்டங்களும்; தேங்காய், பழவர்க்கங்கள், கரும்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, புஷ்பம், மரு, பச்சிலை, சூடம், சாம் பிராணி ஆகிய பொருள்களும்; வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம், ஈயம், இரும்பு, துத்தநாகம், ஸ்படம் (அலுமினியம்), வங்கம் (டின்), நிகலம் (நிக்கல்), மாக்கல், மாம், இவற்றாலான சிறியன பெரியன நானாவித வடிவு கொண்ட கலன்களும் ; ஒலை, மூங்கில், பிரம்பு, கோரை, விழல், கொடிகள் இவற்றால் பின்னி முடைந்த கூடைகள், பெட்டிகளும்; சீப்பு, கண்ணாடி, பாசிமணி, பவளம், வளை பல், பொன் மணி ஆபரணங்கள், பதுமைகள், விளையாட்டுச் சாமான்கள் முதலியன, மாதர்கள் பாலர்கள் மனங்களைக் கவரும் சில்லரைச் சாமான்களும், ஆடவர், மங்கையர், மைந்தர் யாவர்க்கும் ஏற்றனவாய், வானவில்லினும் காண வரிய பல வர்ணங்கள் புனைந்து மின்னும் ஆடைகள், அங்கி கள், குல்லாக்கள், பைகள் முதலிய துணியாலான சாமான் களும், கும்மி, நொண்டி, தில்லேனா, குறவஞ்சி, சிந்து, வண்ணம், உலா, கூத்து, நாடகம், கலம்பகம், பிள்ளைத் தமிழ், புராணம் ஆகிய, பலர் அறியும்படி அங்கேயே சில படித்துப் பாடப்படும், புஸ்தகங்களும்; இன்னும் கூறி முடியாத பல்வேறு பண்டங்களும், அந்த ஆவணங்களிலே காணப்பட்டன. கோயிலைச் சூழ்ந்துள்ள ஆவணங்களின் புறம்பே, ராட்டணம், ஊஞ்சல், தொட்டில் முதலிய விளையாட்டுக் கருவிகளும்; கருடி வித்தை , சிலம்பம், ஜாலக் கண்ணாடி, லாட்டரி இவை நிகழும் வேடிக்கைக் கூடங்களும்; மூன்று காலுள்ள கோழி, ஐந்து காலுள்ள ஆடு, தலையில்லாத மனுஷன், இரு தலையுள்ள மனுஷன், இவைபோன்ற வினோதக் காட்சிச் சாலைகளும், நெருங்கி விளங்கின. இவ்வளாகத்தின் ஊடும் வெளியிலும் நூற்றுக் கணக்கான வண்டிகள் நின்று கொண்டிருந்தன; சில இடங்களில் வாத்திய கோஷத்துடன் பஜனைகள் நடந்து கொண்டிருந்தன; கோயிலின் வலப்புறமாக மாட்டுச் சந்தை ஒன்றையும், இடப்புறமுள்ள திருக்குளக் கரை யின் மேல் அரிச்சந்திரன் சரிதையை ஆடிக் காட்டும் நாடகசாலை ஒன்றையும் காணலாம்; தீவட்டிகள், லாந் தர்கள், சனங்கள் ஆங்காங்கு மூட்டியுள்ள உலைகள், கணப்பு நெருப்புக்கள், இவற்றால் எங்கும் வெளிச்சமா யிருந்ததால், காட்சியின் பொதுத்தோற்றம் திருவிழாப் பாங்காயும் மங்களகரமாயுமே இருந்தது. ஆயின், பல்லா யிரர் திரண்டுள்ள அம் மாபெருங் கூட்டத்திலே, அகத்தே கனிந்த உண்மையான தெய்வபக்தியினால் தூண்டப்பட்டு ஆங்குற்றார், வாரிதியில் வலம்புரிபோல், மிகச் சிலரே என் பதையும், சுற்றிலும் பலகாவதத்துக் குட்பட்ட போக்கிலிகள், பிச்சைக்காரர்கள், தலைப்பா மாற்றிகள், திருடர்கள் முதலியோரும், அயல் ஜில்லாக்களி லிருந்தும் அத்தகையார் பலரும் தத்தம் தொழிலையே கைக்கொண்டு அங்கு வந்துள்ளார் என்பதையும்; பணம் பெருத்து மதி சிறுத்த தூர்த்தர் பலர், தத்தம் தோழர்கள், சோரநாயகிகள், பரி வாரங்களுடன் திருவிழாக் கண்டு களித்தற்கும், தமது போகபோக்கியங்களை உலகறியப் பிறர் முன் பெருமையாய்க் காட்டி உள மகிழ்தற்கும், வேறு வேலையின்றியும், ஆண்டு எழுந்தருளியுள்ளார் என்பதையும் நாம் மறவா விடின், அங்கே நிகழும் விஷயங்களை உட்புகுந்து ஆராய் ந்து பார்க்க நாணுவோம். அப்பெருங் கூட்டத்தினின் றும் விலகி, பயமுறும்படித் தன்னந் தனியாகவு மின்றி, ஓர் ஆலமரத்தின் கீழே, அம்மரத்தின் வேரே தலையணையாக, ஓர் அழுக்குப் புடவையின் மீது, தாயும் மகனுமாக இருவர் படுத்திருந்தனர். அப் பெண்பால், இன்னும் இளமை முற்றும் நீங்காதவளே; வயது முப்பதுக்கு அதிகம் மேலிராது; ஆயின், கவலையினாலும், வறுமையினாலும், நோயினாலும் வாடி மெலிந்து, இப்பொழுது பரிதபிக்கத்தக்க நிலைமையி விருந்தாள். சிறுவன் நிலைமை அவ்வளவு தாழ்வில்லை. தாயிருக்கப் பிள்ளை வாடுமோ? அவளை அணைத்துப் படுத்திருந்தான் அவன்.

“அம்மா! சாமி எப்பொழுது புறப்படும்?” என்று சிறுவன் கேட்டான்.

“பாதி ராத்திரிக்கு மேலாகும், அப்பனே! நீ இப் பொழுது உறங்கு; வாணவேடிக்கை நடக்கும் பொழுது நான் உன்னை எழுப்புகிறேன்” என்று, மெதுவான ஈன சுரத்தில் அவள் பதிற்சொன்னாள்.

“ஒருவேளை நீயும் உறங்கிப் போய்விட்டாலோ? அப்பொழுது வேடிக்கை ஒன்றும் பார்க்க முடியாதே?”

“நான் அப்படி உறங்கிவிட மாட்டேன் நான் உன்னை எழுப்புகிறேன்; நீ உறங்கு” என்றாள் தாய். சிறிது நேரம் பையன் பேசாது படுத்திருந்தான்; பின்பு, “அம்மா! எனக்கு உறக்கம் வரவில்லை, என்னால் உறங்க முடியவில்லை; எனக்கு ஏதாவது ஒரு கதை சொல்லமாட்டாயா? அதனால் ஒருவேளை உறக்கம் வரும்” என்று சொன்னான்.

“கதையா? எனக்கு என்ன கதை தெரியும் அப்பனே!”

“நீ என்னை விட மிகப்பெரியவள் இல்லையா, அம்மா? உனக்கு ஏதாவது ஒரு கதை தெரியாதா? ஒரு கதை சொல்லு; நான் கேட்டுக் கொண்டே உறங்கி விடுகிறேன்.”

தாய், சிறிது நேரம் யோசித்துப், பின்பு சொன்னதாவது:

“சரி; நீ இப்படிச் சொல்லுகிறதினாலே, எனக்கு ஒரே ஒரு கதைதான் தெரியும், அதைச் சொல்லி விடுகிறேன், அப்பனே! உனக்குச் சொல்லத் தகுந்த கதையல்ல அது; ஆனால் இன்றிராத்திரி அடிக்கடி அது என் ஞாபகத்துக்கும் வருகிறது. என் இடது தோள் துடிக்கின்றது. முருகக் கடவுள் என்ன நன்மையை நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?”

“அந்தக் கதையைச் சொல், அம்மா?” என்று, சிறுவன் ஆவலுடன் கேட்டான்.

தாய் :- ஒரு காலத்திலே, நீ பிறக்க வெகு நாளைக்கு முன்னாலே அது, கொழும்புப் பட்டணத்திலே ஒரு பெரிய பணக்கார வியாபாரி இருந்தார்; கொழும்பு பெரிய ஊர்; நீ பார்த்ததில்லை.

மகன் :- நம்ம மேலூரை விட அது பெரியதா, அம்மா?

தாய் :- ஓ! எவ்வளவோ பெரிது; அது ஒரு பட்டணமே; கிராமம் இல்லை. அந்த வியாபாரிக்கு ஒரு மகள் இருந்தாள். மற்றக் குழந்தைகளிலும் அவள் மேல் அவருக்கு அதிகப் பிரியம். அவளுக்கேற்ற மாப்பிள்ளை ஒருவர், நல்ல குடும்பத்தில் பிறந்த செல்வவான், அவ்வூரிலேயே கிடைத்தால், தம்மகள் எப்பொழுதும் தம் வீட்டிலேயே, அல்லது அந்தப் பட்டணத்திலேயே இருக்கலாகு மென்று அவர் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் வீட்டிலேயே, அவர் கடையில் கணக்கு வேலை பார்க்கும் ஒரு வாலிபர் இருந்தார்; அவருக்கு இந்தச் சீமை; யாரும் அறியாதபடி, அவரும் அந்த வியாபாரியின் மகளும் ஒருவரை ஒருவர் நேசித்து வந் தனர். ஒருவரை ஒருவர் முதல் முதல் பார்த்த வுடனே, அவர்களுக்குள் காதல் பிறந்து விட்டது; அது எப்படி, அவர்கள் எவ்வளவு ஆசைகொண் டிருந்தார்கள் என் பதை, உனக்கு நான் சொல்லமுடியாது. அந்தக் கணக்கப் பிள்ளை மிக ஏழை; அந்த வியாபாரியினும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்; ஆகவே, அவர்கள் விவாகத்துக்கு வியாபாரி எந்நாளும் இணங்கமாட்டார் என்பது அவர் களுக்குத் தெரியும். ஆயினும், அவர்கள் இரகசியமாக நேசித்து வந்தனர். இப்படி இருக்கும் பொழுது, ஒரு நாள், தம்மனதுக்கிசைந்த மருமகன் கிடைத்து விட்டதாகவும், தம்மகளின் மணமுகூர்த் தம் இன்ன தேதியில் நடக்குமென்றும், வியாபாரி சொன்னார். இதைக் கேட்க, காதலர் இருவர்க்கும் இடி விழுந்தாற்போ லிருந்தது. அவர்கள் கூடி ஆலோசனை செய்து, யாரும் அறியாமல் ஒரு நாளிரவு வீட்டினின்றும் வெளியேறி, ஓடிவிட்டனர். கொழும்புத் தீவைவிட்டு இந்தச்சீமைக்கு வந்துவிட்டார்கள். அவர் இங்கே அலைந்த அலைச்சலையும் பட்ட கஷ்டங்களையும் சொல்ல வெகு நாள் பிடிக்கும். ஆனால், அவர்களுக்குள் இருந்த காதலினால் அவர்கள் அவற்றை யெல்லாம் பாராட்ட வில்லை. கடைசி யில் ஒரு சிறு பட்டணத்தில் தங்கி வாழலானார்கள். அதற்குள், அவர்கள் கையிலிருந்த சொற்பப் பணமும், அவள் நகைகளை விற்றபணமும், எல்லாம் செலவாய் விட்ட படியால், அவர் முன் போல் வேறு ஒரு வியாபாரியிடம் கணக்கு வேலைக்கு அமர்ந்தார். அவர் அப்படி சம்பாதித்ததைக் கொண்டு அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் அவருக்குச் சுபாவத்திலுள்ள சமுசய குணத்தினால், சீக்கிரத்தில் அவர்கள் வாழ்வெல்லாம் பாழாக முடிந்தது. அவள் மேல் கரையற்ற காதலுடன் இச்சமுசய குணமும் இருந்த படியால், யாரேனும் வேறு புருஷர் அவளை முகமெடுத்து நோக்கினாலும், அவர் சமுசயமும் கோபமும் கொள்ள, அதனால் அடிக்கடி மனஸ்தாபமும் கவலைகளும் விளைந்தன. அவர்கள் குடியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டிலே, யௌவன புருஷன், பள்ளி உபாத்தியாயன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன், பார்க்க லக்ஷணமுள்ளவனாகவும், நடையுடை பாவனைகளில் டம்ப குணமுள்ளவனாகவும் இருந்தான். இந்தப் பள்ளி ஆசான், வியாபாரிமகளைக் கவனிக்கத் தொடங்கவே, அவள் புருஷனுக்கு அசூயை பிறந்து விட்டது. அன்று பிறந்த குழந்தை போலவும், கறந்த பால் போலவும், அவள் மாசு மறுவற்ற மனத்தூய்மை வாய்ந்தவ ளென் பது, அந்தக் கடவுளுக்குத் தெரியும்! மனம் மெய் மொழிகளால் ஒரு சிறிதும் வழுவாத பதிவிரதை; தன் கணவன் மேல் அளவற்ற மெய்க்காதல் உள்ளவள் அவள். அவ்வண்ணம் இல்லாவிடில், தன் வீட்டையும் பெற்றோ ரையும், ஐசுவரியத்தையும், மதிக்கத்தக்க மற்றும் யாவற்றையும் துறந்து, தாழ்ந்த குலத்தில் பிறந்த ஏழை ஒருவன், தன் தந்தையாரின் குமாஸ்தாவாக விருந்தவன் கூட, அவள் வெளியேறி இருப்பாளா? ஆனால் அசூயைக்குக் கண்ணேது? தோன்றுவதெல்லாம் அதற்கு விபரீதம் தானே! அவள் என்ன பிரமாணஞ் செய்து கொடுத்தும் அவள் கணவர் நம்பவில்லை. சமுசயம் வரவரப் பலத்து, அவருக்கு அதனால் பைத்தியம் பிடித்து விடும் போல் ஆய்விட்டது. அப்பொழுது அவள், அந்த வீட்டையும் தெருவையும் நீங்கி, அந்த ஊரில் மற்றொரு தெருவுக்குக் குடிப்போகும்படி அவரை வேண்டினாள்: அப்படிச்செய்யு முன், கொடிய விதிவசத்தினால், அவர்கள் வாழ்க்கையெல்லாம் ஒரு நாள் திடீரென்று பாழாக்கி விட்டது.”

தாழ்ந்த ஈனசுரத்தில் முதலில் பேசத் தொடங்கி, கதை மேற் செல்லச் செல்ல, ஆத்திரமும் பரபரப்பும் அதிகரித்து, இப்பொழுது அவள் சோகத்தினால் பேசமுடியாம லாகிவிட்டாள். சிறுவன் கொஞ்சம் பயமுற்றான்; ஆனால், அவள் சோகத்தையும் தாபத்தையும் அறியக்கூடிய பிராயம் ஆகாமையால், அவன் சற்றுப் பொறுத்து, பின்பு, “அப்புறம் என்ன நடந்தது, அம்மா?” என்று கேட்டான்.

மனதை ஒருவாறு அடக்கிக்கொண்டு, துயரம் தேக்கிய குரலில், தாய், மேற்கதையைக் கூறலானாள் :

“ஓர் இரவு, தம் எஜமானன் வேலையின் மேல் அய லூர் சென்றிருந்தபோது, அவள் புருஷர் நேடுநேரம் கழித் துத் திரும்பிவந்தார். வழக்கம்போல் வீட்டுத் தலைக்கதவு அடைத்து, உள்ளிருந்து தாழிடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டு வெளித்திண்ணையில் அந்தப் பள்ளி ஆசான் உட்கார்ந்திருந்தான். அவனைக்கண்டவுடன், அந்தப் புருஷனுக் குண்டான கோபத்துக்கு எல்லை இல்லை; இருவருக்கும் கடூரமான வாக்குவாதம் சிறிது நடந்தது; உடனே ஒரு பேனாக் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டு, அவ் வுபாத்தி யாயன் கீழே விழுந்தான்.”

இதைக் கூறும் பொழுது, அத்தாயின் உடல் முழுதும் பதறிற்று; சிறுவனும் அவளை இறுக அணைத்துக் கொண்டான். சிறிது தாழ்த்து, “அப்புறம், அந்த வாத்தியானைக் கொன்றவனை என்ன செய்தார்கள், அம்மா?” என்று சிறுவன் கேட்டான்.

“அவர், தன் அசூயையும் குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்; சர்க்காரால் ஏழு வருஷம் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டு, அவர் அவளை விட்டுப் பிரிந்தார்,” என்றாள் தாய்.

“பின்பு அவள் பாடு என்னவாயிற்று?” என்று, பக்கத்தில் புதிதாய் ஒரு கால் கேட்டது.

அப்பெண்பால் திகிலுற்றாள், எழுந்திருந்து நாற் புறமும் சுற்றிப்பார்க்க, சமீபத்தில், ஆலமரத்தின் மறைவில், ஒருவன் வீற்றிருப்பதைக் கண்டாள். அவள் எழுந்தவடன், அவன் மரத்தின் மறைவை விட்டு வெளிப்பட்டு, மறுபடியும், “பின்பு அவள் பாடு என்னவாயிற்று?” என்று கேட்டான். மரத்து நிழலினால் ஒருவர் முகம் மற்றவர்க்கு நன்றாகத் தெரியவில்லை; ஆனால், அவன், தாடியும் மீசையுமுள்ளவனும், காவியுடை யணிந்தவனுமான ஒரு பாதேசி என்பது மட்டும் துலங்கிற்று.

“வேறு ஒருவர் அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியாதே” என்றாள் அவள். “அதிருக்கட்டும்; அவள் பாடு என்னவாயிற்று?” என்று, மறுபடியும் பரதேசி ஆத்திரத்துடன் வினவினான்.

“அவள்பாடு என்ன வாயிற்றா? அவர் தீவாந்தரம் போகுமுன், தான் அவரால் கருவுற்றிருப்பது அவளுக்குத் தெரியவரவே, அவர்கள் காதலின் கனியாகிய அந்தச் சிசுவின் பொருட்டு அவள் பின்னும் உயிர் தாங்கி பிருந்தாள். திரும்பித் தன் பெற்றோர் வீட்டை நோக்க அவள் மனம் துணியாமல், இல்லாமையினாலும் வியாதியினாலும் துன் புற்று வருந்தி, கூலி வேலை செய்து எப்படியோ அக்குழந் தையையும் தன் உயிரையும் காப்பாற்றி வந்தாள்.

“ஆனால், அவள் அவனுக்கு உண்மையாகவே இருந்தாளா?” என்று கேட்டான் பாதேசி.

“ஆம், அதில் என்ன சந்தேகம்? அவரைத் திரும்பி இப்பிறவியில் கண்டாலுமே காணக்கிடையா விட்டாலுமே, அணுவேனும் அவள் கற்புத்தவறி ஒழுகவே மாட்டாள்” என்று, பரபரப்பாயும், சமுசயத்தினா லுண்டான கோபத்தோடும் பதில் சொன்னாள். பின்பு, சிறிது நேரம் கழித்து, பரதேசி : “அப்பனே! நான் உனக்கு ஒரு சிறுகதை சொல்லுகிறேன் கேட்கிறாயா? அல்லது உறக்கம் வருகிறதோ?” என்று கேட்டான்.

“சொன்னால் கேட்கிறேன்; ஆனால் இப்படி பயங்கரமான கதை வேண்டாம்” என்றான் சிறுவன்.

பரதேசி :- என் கதையும் உன் தாயின் கதையைப் போன்றதே; ஆனால், அதனால் என்ன? எல்லாம் சுபமாய் முடிந்தால் சரிதானே. ஓர் ஊரிலே ஒரு யௌவன புருஷன் இருந்தான். உன் தாயின் கதையில் வரும் குமாஸ்தாவைப்போல வைத்துக்கொள் அவனையும். அவன், அசூயையினால் உண்டான கோபாவேசத்தில் மற்றொருவனைக் கொலை செய்து விட்டான். அதற்காக அவனை ஒரு தீவிலே கொண்டு போட்டார்கள். பல வருஷங்கள் கடுமையான வேலை செய்து பிழைக்கவேண்டியதாயிற்று; ஆனால் அந்தக் காலமெல்லாம், தனக்குற்ற அவமானத்தையும் தான் படும் கஷ்டங்களையும் விட, தன் காதல் நாயகியை வேறொருவன் அனுபவித்துக் கொண்டிருப்பான் என்னும் எண்ணந்தான் அவன் மனத்தை வெதுப்பியது. இராப் பகலாக இந்த அசூயை தான் அவனைப் புண்படுத்தியது; ஏனெனில், அவன் கொலை செய்யும் பொழுது, தன் மனைவிமேல் அவனுக்குச் சமுசயமுண்டு. இந்த உலக வாழ்க்கை பாவங்களும் துன்பங்களும் நிறைந்த பாழே. ஆயினும், என் அப்பனே, அசூசையால் விளையும் மனக் கசப்பையும் வாதனையையும் நீ ஒரு பொழுதும் அனுபவியாது, கடவுள் அருள் செய்வாராக! விதித்த வண்ணம் தண்டனைகழிந்து, அந்தத் தீவைவிட்டு வெளியேறி, தூர தேசத்தில் ஓர் ஊரை அடைந்து, தான் தீவாந்தரத்தில் கற்றுக்கொண்ட ஒரு கைத்தொழிலினால் அங்கே அவன் வயிறு வளர்க்கலானான். ஆனால் அவன் மனத்தில் வேரூன்றியுள்ள தலைக்காதல் ஒரு சிறிதும் அடங்காமையினால், அவளைத் திரும்பவும் காணும் விருப்பம் அவனை வருத்தியது. அதனால் அவன் பரதேசியாகி, மன நிறைவையும் அமைதியையும் குறிக்கும் காவியுடைக்குள்ளே ஆயிரக்கணக்கான ஆசைகளும் பயமும் ஊசலாடித் தழைக்கும் உள்ளத்தினனாய், அவளை எப்படியாவது காணக் கருதி, தான் அவளுடன் முன்பு வாழ்ந்து வந்த இடங்களிலெல்லாம் ஒரு வருஷம் வரை தேடித்திரிந்தான். முருகக் கடவுள் கடைசியில் மனமிரங்கி விட்டார். கற்புக்களஞ்சியமாகிய தன் அருமைக்காதலியை அவன் மறுபடியும் இன்று கண்டது மட்டுமோ, அவன் பாழான மனத்திலுள்ள சந்தேகமும் தெளிந்து, அவள் கற்பு நிலை அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கிவிட்டது. என் அருமை மகனே! என் ஆருயிர்க்காதலீ! உங்களை நான் இவ்வளவு துன்பங்களுக்கும் இமிசைகளுக்கும் உள்ளாக்கினேனே! இதோ, உங்கள் பாதத்தில் விழுகிறேன். என்னை எப்படியாவது மன்னித்தருளி, ஏற்றுக் கொள்ளுங்கள்!”

– குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம், 1924, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, மயிலாப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *