கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 13,106 
 
 

அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகவனும், பிருந்தாவும் ஹாலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தார்கள். ராகவனின் வயசான அப்பா சுந்தரம் அன்றைய தினசரி பத்திரிகையில் வந்த பரபரப்பான ஊழல் வழக்கு தொடர்பான செய்திகளில் மூழ்கியிருந்தார்.

பேரன் செல்வம் அந்த நேரம் ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்தான். பிருந்தா மகனை கூப்பிட்டுக் கேட்டாள்.

“ஏண்டா செல்வம்!…இந்த செமஸ்டரில் கணக்கிலே ஏன் உன் மார்க் குறைந்து போச்சு?….”

“ அம்மா!..அது தான் எனக்கே தெரியலே!..நல்லாத்தான் செய்திருந்தேன்!….எப்படி குறைந்ததுனே தெரியலை…”

“ சரி……போகட்டும்!…..அடுத்த செமஸ்டரிலாவது நீ “மேத்ஸிலே சென்டம்’ வாங்கிக் காட்டு!…..நீ அன்னைக்கு கேட்டாயே…மூணாறுக்கு உன் பிரண்ஸோட டூர் போக வேண்டுமென்று……..அதற்கு நானே ஏற்பாடு செய்து தருகிறேன்!…..டெம்போ டிராவல்ஸ் வைத்து உன் செலவுக்கும் பணம் தருகிறேன்!….”

“ஹைய்யா!…….” என்று குதித்துக் கொண்டு பத்தாவது படிக்கும் செல்வம் ஓடினான்.

“டேய்!….செல்வம் இங்கே வாடா!….உனக்கு ஒரு வேலையிருக்கு!… என்று செல்வத்தை கூப்பிட்டான் தந்தை ராகவன்.

“என்ன வேலையப்பா!…” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தான் செல்வம்.

“உங்க அத்தை வீடு வரை கொஞ்சம் போய் விட்டு வா!…”

“எதற்கு அப்பா?…”

“உங்க அத்தை நான் சென்னிமலைக்கு போனா நல்ல பெட்ஷீட் நாலு வாங்கி வரச் சொன்னா….நேற்று சென்னிமலை ஒரு வேலையாப் போயிருந்தேன்!…அவ சொன்னபடி நாலு பெட்ஷீட் வாங்கி வந்தேன்.. அந்த பார்சலை நீ எடுத்திட்டுப் போய்….அத்தையிடம் கொடுத்து விட்டு அது ஒன்றின் விலை நானூறு ரூபாய் …..நாலுக்கு ஆயிரத்தி ஆறுநூறு ரூபா என்று சொல்லு… அத்தை அதற்கு பணம் கொடுப்பா…அதை பத்திரமா கொண்டு வந்து என்கிட்டத் தா!..”

“ அப்பா!….அம்மாவிடம் ராத்திரி பேசும் பொழுது..நீங்க பெட்ஷீட் விலை முன்னூறு ரூபா என்று தானே சொன்னீங்க?..”

“ அட….இவன் வேறே!…சரி நீயும் தெரிஞ்சுக்கோ!…இந்தக் காலத்தில் யாரும் எந்த வேலையும் சும்மா செய்ய மாட்டாங்க!..அப்படி ஒருவன் செய்தா அவனை பொழைக்கத் தெரியாதவன் என்று சமூகமே ஒதுக்கி வச்சிடும்!…பெற்ற மகன் வேலையாக இருந்தாலும் அதிலும் நாலு காசு பாக்கிறவன் தான் புத்திசாலி!…சரி…சரி.. நீ அத்தையிடம் உளறி வைக்காதே!…அதில் நூறு ரூபா உன் கமிஷனா வச்சுக்க!…நேற்று உனக்குப் பிடிச்ச விஜய் படம் ரிலீஸ் ஆச்சே! அதற்கு நீ ..சந்தோஷமா போய் விட்டு வா!….” என்று ராகவன் சொன்னான்.

செல்வம் குதி போட்டுக் கொண்டு ஓடினான்.

அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த அவன் தந்தை சுந்தரம் ராகவனைக் கூப்பிட்டார்

“தினசரி பத்திரிகை படிக்கும் பொழுது நாட்டிலே லஞ்சமும், ஊழலும் ஏன் தான் இப்படி பெருகிப் போச்சேனு..நினைச்சு வருத்தப் பட்டேன்! ..இப்ப ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது என்று புரிகிறது!…………குழந்தைகளை பெற்றோர் இப்படி வளர்த்தா அவங்க பெரியவங்களாகி பொறுப்புக்கு வந்தா லஞ்சம் வாங்கமே…..ஊழல் செய்யாமே எப்படி இருப்பாங்க?!.. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?….குழந்தைகளிடம் இப்படிச் சொல்லியா வளர்ப்பது?..” என்று சத்தம் போட்டார்.

– பாக்யா ஜூன் 12-18

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *