மைக் சத்தம் கேட்டவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டை குப்பையில் கொட்டி விட்டு, அழுத குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டாமல் கையில் எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு, மஞ்சள் பொடியையும், குங்குமத்தையும் தண்ணீர் ஊற்றி கலக்கி, சாப்பிட்ட தட்டில் எடுத்துக்கொண்டு வேகாத வெயிலில், அவசரத்தில் செருப்பு தொடவும் மறந்து, ஒரு வித படபடப்புடன் பாதையோரமாக, ஆரத்தி தட்டுடன் நின்றிருந்த மற்ற பெண்களுடன் வரிசையில் போய் நின்றாள் மாரியம்மா!
“ஏய், நீ நேத்தைக்கு டிவில வந்தே தெரியுமா…?” என்ற அண்டை வீட்டு அனுசுயா சொல்ல, “எந்த டிவி?” என்றாள் ஆர்வமாக!
“ரெண்டு கட்சி டிவிலயும் தான். நமக்கென்ன வந்தது லாபம். எனக்கு வசூல் தேவலை. ஒரு மாச கந்து கணக்க மைனருக்கு நேத்து ஒரே நாள்ல முடிச்சுட்டேன். நம்ம முதலாளிதான் ஒரு வாரமா நூறு தடவை போன் போட்டிருப்பாரு..! நான் எடுப்பனா என்ன..?” என அனுசுயா முடிக்கும் போது வேட்பாளர் வர, ஆரத்தி எடுத்த அனைவருக்கும் நல்ல கவனிப்பு!
“வேட்பாளர் நல்லா சினிமா நடிகர் மாதர இருக்கறாரு..?” என்ற தங்களது எண்ணத்தை கொட்டியபடி வீடு நோக்கி அனைவரும் நகர்ந்தனர்.
கடவுள் படத்தருகே நின்று ‘கடவுளே இப்படியே வருமானம் தெனத்துக்கும் வரோனும்’ என அப்பாவியாக வேண்டிக்கொண்ட மாரியம்மா, குழந்தையை பழைய சேலையால் கட்டிய தொட்டிலில் போட்டு விட்டு, கதவைச்சாத்தி தன் குடிசை வீட்டில் பாயை விரித்துப்படுத்தவள், உடல் சடவில் உறங்கிப்போனாள்.
காலையில் கடுகு டப்பாவை திறந்த போது கருக்கென்றது. ஒரு வாரமாக ஆரத்தியில் சேர்த்த சொத்து மொத்தமாக திருட்டு போயிருந்தது!
கணவனைத் தேடினாள். வாசலில் படுத்துக்கொண்டு போதை தெளியாமல் உளரிக்கொண்டிருந்தான். எடுத்ததைத்திருப்பிக்கொடுக்கும் பழக்கமோ, செலவானது போக மீதத்தை வீட்டுக்கு கொண்டு வரும் பழக்கமோ அவள் கணவனுக்கு என்றும் இருந்ததில்லை. தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிந்து விட்டதாக அனுசுயா வந்து சொல்லி விட்டுச்சென்றாள். ‘ஆரத்தியில் சேர்த்த பணம் ஆயிரமும் போயாச்சு. இனி செலவுக்கு வழி…?’ என யோசித்தவள், தினமும் வேலை கொடுக்கும் முதலாளிக்கு போன் போட்டாள்!
“என்ன மாரியம்மா, ஒரு வாரமா அனுசுயாவும், நீயும் போனே எடுக்கல. உங்களுக்கு பதிலா நாகம்மாவும், காஞ்சனாவும் வந்துட்டாங்க” என்று போனை முதலாளி கட் பண்ண, அதிர்ச்சியில் அப்படியே சுவற்றில் சரிந்து உட்கார்ந்து கண்ணீர் விட்டாள்!
‘ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுத்த கதை’ என்று தன் தந்தை அடிக்கடி சொன்னது நினைவுக்கு வந்தது மாரியம்மாவுக்கு!