ஆமியின் அரட்டை உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 2,190 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆமி ஓர் இங்கிலீஷ்காரி. அமெரிக்க டெக்சாஸ் நகரைச் சார்ந்தவள். நான் அரைகுறையாக ஆங்கிலம் தெரிந்தவன். எங்களுக்குள் இணையம் மூலம் 2015 முதல் மூன்றாண்டுகள் நட்பு இருந்தது. ஆமி, ஆண்ட்டி, ஆமி ஆண்ட்டி என்று எப்படி அழைத்தாலும் அவளுக்கு அதில் பிரியம். ஆமி என்ற வார்த்தையின் அர்த்தம்கூட அதுதான். Amy என்பதை em- mee என உச்சரிக்க வேண்டும். தமிழில் அதற்கு சரியான வெர்னகுலர் இல்லை. எனவே ஆமி என்று குறிப்பிடுகிறேன். எங்களின் சம்பாஷணைகள் டேக்ஸ்ட் வடிவம் கொண்டது. 

ஆரம்பத்தில் எங்கள் உரையாடல் காமம் கலந்ததாகத்தான் இருந்தது. ஆனால் அதில் விரசம் இருக்காது. அவர்களின் கலாச்சார பின்னணியில், அந்த வெளிப்படையான உரையாடலை அவள் எதிர் பாலின ஈர்ப்பு என குறிப்பிட்டதே இல்லை. அந்த அரட்டையை அவள் ஒரு ஃபன் டெக்ஸ்ட் என்பாள். அது உடல் சார்ந்திராத மன ஓட்டத்தின் வெளிப்பாடுதானே. முகம் பாராத எழுத்தின் வடிவ பரிமாற்றம்தானே என்பாள். 

“என்ன உடையில் இருக்கிறீர்கள்?” 

“டென்ட் ட்ரெஸ். இளஞ்சிப்பு வண்ணம்” 

“டென்ட் ட்ரெஸ். அது எப்படி இருக்கும்?” 

“டென்ட் போல கழுத்திலிருந்து கால்வரை லூஸாக”. 

“ஓ . . எனக்கு பிடித்த வண்ணம். முடி வெள்ளை. சரியா.?” 

“பழுப்பு நிறம்” 

“தேவதை!” 

“உங்களுக்குத் தெரிவது, எனக்குத் தெரியாது”. 

அவள் விவாகரத்து பெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். ஆதாம் என்று ஒரே மகன். சிறிய குடும்பம். எளிய வாழ்க்கை. ஆரம்பத்தில் வீடுகளை சுத்தம் செய்து கொடுப்பது அவள் பணி. நாமெனில் அதை கூட்டுபவள் அல்லது ஸ்வீப்பர் என்று கேவலமாகச் சொல்லுவோம். அங்கே க்ளீனர். தன் வீட்டிற்கு பக்கத்தில் ஆறு வீடுகள் பத்து கிலோமீட்டர் தள்ளி மூன்று வீடுகளில் பணிபுரிந்து வந்தாள். தூரத்தில் உள்ள மூன்று வீட்டிற்கு தன் சொந்த காரில் சென்று வேலை செய்து வருவாள். சுத்தம் செய்தல் என்பது இயந்திர மயமானதாக இருக்கும். தினந்தோறும் சென்று பணிபுரிய வேண்டியதில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சென்று வேக்கும் கிளீனர் மூலம் வீட்டை சுத்தம் செய்துவிட்டு வர வேண்டியதுதான். தற்போது அந்த பணியை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு அதே வீடுகள் மற்றும் கூடுதலாக சில வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து குறித்த நேரத்தில் கொடுப்பதே வேலை. பொருட்களை பஜாரில் தருவிப்பது சப்ளை செய்வது எல்லாம் காரில்தான். 

நட்பு மட்டுமல்ல, அவள் மூலம் நான் ஆங்கில மொழியிலும் என்னை மேம்படுத்திக்கொண்டேன். ஆரம்பத்தில் சில நாட்கள் எனக்குத் தெரியாத கடினமான பெரிய வார்த்தைகளை தவிர்த்து எளிமையாக எனக்காக பயன்படுத்தத் தொடங்கினாள். தெரியாத வார்த்தைகளென்றால் அனுமானத்தில் மழுப்பலான சம்பந்தமில்லாத பதிலை அளித்துவிட்டு சாவகசமாக அர்த்தத்தை தேடி கண்டு பிடித்து அதே வார்த்தைகளை பின்னர் நானும் பயன் படுத்துவேன். போகப்போக அவளின் பொது மொழியையும் அந்த பகுதியின் வட்டார வழக்கின் பல வார்த்தைகளைக்கூட தெரிந்து கொண்டேன். 

அவளின் அன்றாட வேலைகளை கவனித்துவிட்டு பிற்பகல் இரண்டு மணிக்குதான் இணைய பக்கம் வருவாள். அப்போது இங்கே பின்னிரவு என்பதால் பெரும்பாலான நாட்களில் இரவு மூன்று மணிக்குமேல் நான் தூங்கியதே இல்லை. 

அவள் விவகாரத்து பெற்றதற்கான காரணத்தைக்கூட நான் கேட்டது இல்லை. நாளடைவில் எங்கள் உரையாடல் நட்பு மிகுந்ததாக பரஸ்பரமான அக்கறை கொண்டதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. யார் வீட்டிற்குப் போனாள், குறிப்பிடும் படியான என்ன நிகழ்வுகள் நடந்தன, மகன் தாமதமாக வீட்டிற்கு வந்தது, கிரிக்கெட் விளையாட்டில் பந்து காலில் மோதி வலி தாங்காமல் துடித்தது, கார் வழியில் சிறு பழுது ஏற்பட்டது போன்ற தகவல் பரிமாற்றங்களை நானும் ஆவலோடும் ஈடுபாட்டோடும் கேட்பேன். என்னை பற்றியும் கேட்பாள். சொல்வேன். 

சில விஷயங்களை துருவித் துருவி வெளிக்கொணர முயற்சிப்பாள். அது என் வாழ்க்கை மீது அவளுக்கு இருந்த அக்கறையின் வெளிப்பாடாகவே உணர்ந்து நிகழ்ந்து போவேன். பொய் சொன்னால் அவளுக்கு தெரியவா போகிறது. ஆனால் சொல்ல வராது. 

“நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ள வில்லை சந்தோஷ்” என்றாள் ஒருநாள். 

“பிடிக்கவில்லை” 

“அதான் ஏன்?” 

“திருமணம் என்பது கட்டாயமில்லையே”. 

“அது சம்பிரதாயமாகிவிட்டதே” 

“உங்கள் மதத்தில் பாதர் இல்லை. நன்ஸ் இல்லை. எங்கள் நாட்டில் பிரமச்சாரிகள், துறவிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்”. 

“நான் கேட்டது பொதுவானது. இதே கேள்வியை உங்கள் உறவினர்கள் யாரும் கேட்கவே இல்லையா?” 

“கேட்டார்கள்” 

“பதில் என்ன?” 

“வேண்டாம். பிடிக்கவில்லை” 

“அதான்… ஏன்?” 

“விதிவிலக்குகளில் நானும் இருக்கக்கூடாதா என்ன?” 

“இருக்கலாம். சமூக வழக்கத்தை விட்டு தனியாக நின்றால் அதற்கான காரணம் ஏதேனும் இருக்கும்” 

அன்பழகன்ஜி 

“இருக்கும். இல்லாமல்கூட மொட்டையாய் தட்டையாய் இருக்கும்”. 

“இருந்தால், அதை என்னிடம் சொல்லத் தயங்கினால் வேண்டாம்” 

“ஆமியிடம் சொல்லாமலா!” 

“தென், டெல் மீ” 

“ஒரு பெண்ணிடம் கொஞ்சகாலம் பழக்கம் வைத்திருந்தேன்” 

“யாரவள்?” 

“என்னுடம் பணிபுரியும் விதவைப் பெண்” 

“ய்யா யா” 

“நான் அவளுடன் பழகத் தொடங்கியதே ஒரு உதவி செய்யும் இரக்கம் கலந்த காதல் மனநிலையில்தான். இளம் விதவை வாழ்நாள் முழுக்க ஏன் தனியே இருக்க வேண்டும்?” 

“இது என்ன வாதம் சந்தோஷ். நான்சென்ஸ். நீங்கள் இல்லை என்றால் அவளுக்கு வேறு யாரும் கிடைக்கமாட்டார்களா என்ன?” 

“கிடைத்தது. அதுதான் பிரச்சனை” 

“எப்படி?” 

“என்னைவிட வசதியானவன் கிடைத்ததும் அவனை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டாள்”. 

“அதுதான் காரணமா? எல்லா பெண்களையும் வெறுக்குறிங்க. . !” 

“இல்லையே. அவளைக்கூட வெறுக்கவில்லை. அப்படியென்றால் நான் எப்படி ஆமியுடன் பேசுகிறேன்” 

“முகம் தெரியாமல் இருக்கிறோமே” 

“இருக்கட்டுமே” 

“என்னுடைய முகத்தைப் பார்க்க ஆவல் இல்லையா சந்தோஷ்?” 

“இல்லை”. 

“ஏன்?” 

“உணர்வுகள் முகத்திலிருந்து வருவதில்லையே” 

“என் வயது ஐம்பது சந்தோஷ்” 

“எனக்கும் முப்பத்தி ஆறு ஆகிவிட்டது ஆண்ட்டி”. 

“விருப்பத்திற்கும் வயதிற்கும் தொடர்பில்லையோ”. 

“ஆம். தேசங்களுக்கும் மொழிகளுக்கும் விருப்பத்துடன் தொடர்பு இல்லை. அது ஆன்மாவிலிருந்து தோன்றும் கலப்படமற்றது”. 

“ஐ லைக் யூ சந்தோஷ்” 

“ஐ லவ் யூ ஆமி” 

“ஆமியின் முத்தங்கள்” 

“சந்தோஷமான தருணங்கள்” 

ஒருநாள் கணினியில் எங்களின் அரட்டையை தனது மகன் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். 

“என்ன? … தாயின் உரையாடலை மகன் ரசிக்கிறாரா?” 

“ஆம். அவனுடன் சாட் செய்கிறீர்களா?” என்றாள். 

“ஆம்” என்றதும் ; “ஹாய் அங்கிள்!” என்றான். 

“ஹாய். யுவர் ஸ்வீட் நேம்?” 

“ஆதாம்” 

“என்ன படிக்கிறீர்கள்” 

“சீனியர் செக்கேன்டரி. ஏனிங் வொயில் லேனிங்க்” என்றான். 

“கங்க்ராஜுலேஷன்ஸ். உங்கள் மம்மி எனக்கு நல்ல சிநேகிதி” 

“அடிக்கடி உங்கள் சாட்டை பார்த்திருக்கிறேன்” 

“அது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா ஆதாம்?” 

“இல்லை. உங்களுக்கு பொழுதுபோக்கு உனக்கு விளையாட்டு” 

“ஓகே. பெஸ்ட் ஆப் லக். ஸ்டெடி வெல்”என்றேன். 

“என்ன அங்கிள்?” 

“என்ன ஆதாம்?” 

“ஏதாவது ஸெக்ஸி ஃபன் ஸ்டோரி சொல்லுவிங்கன்னு நம்பிக்கொண்டு இருந்தேன்”. 

“அது மம்மி கிட்ட சொல்லுறது” 

“நோ. மம்மிகிட்ட பரிமாறிக்கிடுறது. என்கிட்ட சொல்றது” 

“ஹஹ்ஹா.. ஹ்ஹா” 

“உங்களிடம் ரகசியமாக உள்ளதை நாங்கள் வெளிப்படையாகச் சொல்கிறோம்” 

“நாங்கள் அதை நாகரிகம் என்கிறோம்” 

“ஆனால், கபடம் நாகரிகமாகாது அங்கிள்” 

“கபடமற்ற ஆன்ம புனிதமானதுதானே” 

“ஆம். அது இங்கேயும் இருக்கு. எங்கேயும் அங்கிள்” 

“சிறு வயதிலே நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ஆதாம்” 

“உங்கள் நாட்டு புத்தரை பற்றி நான் படித்திருக்கிறேன்” 

“ஓ. ஃபைன்.” 

“அங்கே எழுதிய வாட்ச்யானாவின் காமசூத்திரம் நூல் இங்கே ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவில் கிடைக்கிறது. கற்க வேண்டிய அற்புதமான நூல்” 

“உலகம் சுருங்கிவிட்டது இல்லையா. . !” 

“ஆம். நாம் எளிதில் சந்திக்கிறோமே!” 

ஆமியின் கொஞ்சல்கள் கோடை காலத்து நெடுஞ்சாலை வழியே காலைத் தென்றலில் கைகோர்த்து நடப்பதைப்போன்றவை. அவளின் ஆலோசனைகள் இறுகி வெடித்துப்போன களிமண் தரையில் விழும் மழைத்துளிகள் போன்று உள்வாங்கிக் கொள்ளத் தக்கவை. அவளின் அதிகாரம், கண்டிப்பு, மிரட்டல்கள், அதட்டல்கள், அறிவுரைகள் மடியில் படுத்து கிடக்கையில் பெறுகின்ற தாயின் வருடல்களுக்கு ஈடானது. 

அவள் உதவும் குணம் நிறைந்தவள். யாருக்காவது ஏதாவது கஷ்டம் என்றால் ஓடிப்போய் உதவி செய்பவள். தனது பொருளாதார சக்திக்கு மீறி வறியவர்களுக்கு உதவுவாள். கொங்கோ, சூடான், எத்தியோப்பியா போன்ற நாட்டு ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் அப்பகுதியில் இயங்கிவரும் சர்வதேச ஏழ்மை மீட்புக் குழுவில் அவளும் ஓர் உறுப்பினர் என்றும் அறிந்து கொண்டேன். 

ஏனோ, நீண்ட நாட்களாக ஆமியை இணைத்தில் காண முடியவில்லை. அவளது மகன் ஆதாம் வருகிறானா என தேடித்தேடி ஏமாந்து போனேன். அவன் பேயரில் வந்தால் கூட வேறுவேறு ஆதாம்களாக இருந்தார்கள். அதிஷ்ட வசமாக ஒருநாள் நான் தேடிய ஆதாம் கிடைத்துவிட்டான். ஹாய் சொன்னதும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டுவிட்டான். 

“நீண்ட நாட்களாக ஆமியை காணாமே ஏன்? நன்றாக இருக்கிறாளா?” என்றேன் 

“ஸாரி அங்கிள். ஷீ இஸ் நோ மோர்” என்றான். 

“ஓ மை காட்” என் பொழுது இருண்டு போனதுபோல் உணர்ந்தேன். 

“வாட் ஹேப்பண்ட் ஆதாம். ஒய்? ஒய்?” என என்னை அறியாமல் வாய்விட்டும் சத்தமிட்டுவிட்டேன். 

சற்று நேரம் அமைதியாக இருந்தான். 

“அம்மாவுக்கு என்னாச்சி ஆதாம்?” 

“ஆகஸ்ட் மாதம் வீசிய ஹார்வே புயலில் சிக்குண்டு என்னை விட்டுட்டு பொய்ட்டாங்க”என்றான். 

“ஸாரி. எப்படி? “

“வீட்டை விட்டு எவரும் வெளியே வரக்கூடாதுன்னு முதல் நாளே அறிவிச்சிட்டாங்க. விடிகாலை நாலு மணிக்கு அவங்க ப்ரண்ட் ட்ரீடி வீட்டிலிருந்து ஒரு போன் வந்தது. அவருக்கு சடன் கார்டியாக் அரெஸ்ட்ன்னு. மீட்புக் குழுவுக்கு சொல்லியாச்சி உடனே வந்துடுவாங்க நீங்க வர வேண்டாம்ன்னு சொல்லியும் கேக்காம காரை எடுத்துகிட்டு போனபோது பலத்த காற்றில் கார் உருண்டு ஒரு ஆழமான தண்ணீரில் மூழ்கிப் பொய்ட்டாங்க”. 

“கேட்க கனமா இருக்கு ஆதாம். எனக்கே தாங்கவில்லை” 

“இறப்பதற்கு முதல் நாள்கூட உங்களை பற்றி பேசினாங்க” 

“ஓ. . . என்ன சொன்னாங்க?” 

“நாம வசதியா இருந்தா சந்தோஷ இங்கே அழச்சி மேரேஜ் பண்ணிடுவேன் அப்படின்னாங்க. வயது வித்யாசம் இல்லையா மம்மின்னேன். 

“வயதான ஆண்கள் சின்ன பெண்ணுகள திருமணம் செய்யும்போது, நான் சந்தோஷ திருமணம் செஞ்சிகிட்டா என்ன தப்பு. எங்களுக்குள்ள பதினைந்து வயதுதான் வித்தியாசம்” என்றார். 

“அவர் திருமணமே வேண்டாம்ங்குறார்” என்றேன். 

“எப்படியும் ஒத்துக்கொள்ள வச்சிடுவேன்” என்றார். 

“நீங்க விக்டரோட பழக்கம் வச்சிருந்தது தெரிஞ்சா ஒத்துக்கமாட்டார் மம்மி” என்றேன். 

“அது அவருக்குத் தெரியும். பெருசா எடுத்துகிடல. தெரிஞ்ச பிறகும் லவ் யூ சொல்லுவாரு எனக்கு என்னவோ சந்தோஷ் இந்த கலாச்சாரத்துல பொறந்திருக்கணும்ன்னு தோனுது”. 

“என்ன மம்மி சொல்லுறிங்க” என்றேன். 

“முடிஞ்சா . . . வந்தா. . . நல்லாதான் இருக்கும்” என ஆதங்கப்பட்டார். இருவரும் சிரித்தோம் என முடித்தான் ஆதாம். 

“அங்கிள் உண்மையே அப்படின்னா நீங்க ஓகே சொல்லிருப்பிங்களா?” 

“யோசித்திருப்பேன் ஆதாம்” 

“அப்போ என்னோட மம்மிக்காக உங்க கொள்கையை மாத்தி இருப்பிங்களா?” 

“மேரேஜ் பண்ணிகிடாதது பெரிய கொள்கையில்ல. ஒரு விருப்பம் அவ்வளவுதான் ஆதாம்.” 

“கல்யாணம் பண்ணிகிடுறதும் ஒரு விருப்பம்ங்குறிங்க” 

“ஆமி சொன்ன மாதிரி சந்தர்ப்பம் கெடச்சிருந்தா யோசிக்க தோனிருக்கும் . அது ஆமிக்கான எனது விருப்பமா இருந்திருக்கும்” 

“மம்மி மரணம் எனக்கு மறக்க முடியாத துன்பம் அங்கிள். அது விலகிப் போகவே போகாது அங்கிள் ரொம்ப சப்பராகுறேன்” 

“மே காட் சேவ் யூ ஆதாம்” 

“தேங்ஸ் அங்கிள்”. 

“ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ஆதாம்” 

“ஷ்யூர் அங்கிள்”. 

“ஆமியோட போட்டோ இருந்தா ஒண்ணு அனுப்புறிங்களா?” 

“அப்படின்னா மம்மிய நீங்க போட்டோவுலகூட பாத்துல்லயா?” 

“இல்லையே. பலமுறை அனுப்புறேன்னாங்க. அன்புக்கு உருவம் எதுக்கு. மனசு போதுன்னுட்டேன்” 

“வாட் எலவ் தெட் இஸ்!” என்றவன் அடுத்த வினாடியே ஆமியை வெப்பில் அனுப்பி வைத்தான். 

தேவதைகள் என்றும் அழகுதான். ஆமி வயதான அழகான தேவதை. 

இனியும் அதற்கு மேல் அவளால் அழகாக முடியாது.

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை.

தமிழ்நாடு சிறைத்துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். சொந்த ஊர் வேதாரணியம் தாலுக்கா கடிநெல்வயல் என்ற கிராமம்.  தற்போதைய வாழிடம் திருச்சி.  இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. முகநூல் பக்கத்தில் நிறைய புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் பதிவிட்டுள்ளார். பல சிறுகதை போட்டிகளில் இவரது சிறுகதைகள் தேர்வுபெற்றுள்ளன. நாற்பதாண்டுகளுக்கு மேலாக நல்ல வாசிப்பு அனுபவம் கொண்ட வாசகர். இவரது படைப்புகள்:  (1)   பாதியும் மீதியும்(சிறுகதைத் தொகுப்பு)விலை ரூ. 120/- வெளியீடு :படைப்பு பதிப்பகம்,# 8 மதுரை வீரன் நகர்,கூத்தப்பாக்கம்,  கடலூர் - 607 002தமிழ்நாடு94893…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *