ஆபத் சந்நியாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 9,093 
 
 

நாராயண அய்யர் அந்த முதியோர் இல்லத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார். இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. மனம் எதிலும் ஒட்டவில்லை. ‘டார்மெட்டரி’ யின் மற்ற உறுப்பினர்களோடு கலந்து கொள்ள முடியாத ஒரு அசெளகரியம்.

தன்னைத் தனிமைப்படுத்தியதுதான் அதிகப்படியான ஈகோவா? நாராயணனுக்குத் தெரியவில்லை.

எப்போதும் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களைச் சிறுமைப்படுத்த நினைக்கும் அத்தனை கீழ்த்தர மனிதர் இல்லை அவர். ஆனாலும் எங்கோ ஒரு சற்றே தூக்கலான அகம்பாவம் இதயத்தின் ஒரத்தில் பதுங்கி இருப்பது நிஜம்!

வாழ்வின் விஸ்வரூபங்களை இவர் என்றும் தரிசித்ததில்லை. தான் நினைத்திருக்கும் ரூபமே வாழ்க்கை என்று நினைப்பவர் இவர். அதனால்தான் இளவயதில் எந்த வேலையிலும் இவரால் பொருந்தி இருக்க முடியவில்லை. நல்லவேளை இவரின் தந்தை ஏதோ கொஞ்சம் நிலம், கொஞ்சம் பணம் என்று விட்டுச் சென்றிருந்ததால் குடியானவர் கொண்டு வந்து தரும் குத்தகைப் பணத்தில் வாழ்க்கையில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது!

வங்கியின் வட்டியில் வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது. இவரின் அன்பு மனைவியின் பெயர் சாரதா.

சாரதாவுக்குச் சங்கீதம் தெரியும். குடும்பத்தை நிர்வகிக்கவும் தெரியும். இவர் சாரதாவுக்குத் தந்த பெருமை?

இல்லத்தரசி!

மணி மகுடம் சூடா ராஜகுமாரியாக சாரதா எந்தவித விருப்பும், வெறுப்புமின்றி வாழப் பழகிக் கொண்டு விட்டாள்.

ஆரம்பத்தில் கண்ட சின்னச்சின்ன கனவுகள், சமையலறை சங்கீதத்தில் சிறைப்பிடிக்கப்பட்டன. குக்கருக்கு வெயிட் போட்டோமா, குழந்தைக்கும், கணவனுக்கும் ப்ரேக் பாஸ்ட் தயாரித்தோமா – என்று ஆலாபனை செய்யவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. இந்த சமையலறை சங்கீதமே வாழ்வின் ராகம், தாளம், பல்லவி ஆயிற்று.

ஒரு மகன். அவனை வளர்ப்பதில் அவளின் தாய்மையின் தாகம் தணிந்துவிட்டது. ஏக்கங்களும், பெருமூச்சுக்களும் மெளன ராகங்களாயின. இவளின் தனிமை தனி ஆவர்த்தனமாயிற்று!

ராஜாராமன் – அதுதான் மகனுக்குத் தந்தை வைத்த பெயர். அதுகூட இவர் தேர்ந்தெடுத்ததுதான்! ராஜாராமனை ராஜாவாகத்தான் வளர்த்தார். தப்பு அவனாக வளர்ந்தான்!

காலத்தின் மாற்றத்தில், நேரங்களின் நெருக்கடியில் வாழ்க்கை கரைந்து போனதே தெரியாமல் சாரதா வாழப் பழகிக் கொண்டு விட்டாள்.

எதிர்பார்ப்புக்கள் இல்லாத வாழ்வில் ஏக்கத்துக்கே இடமில்லை.

சமையலறையிலிருந்து வெளி வந்து இவள் ஹாலில் ஆரோக்கியக் காற்றை சுவாசித்ததே இல்லை!

இவளின் நெற்றி வியர்வையில் பெருங்காய வாசனைக்குத்தான் முதலிடம்!

வாழ்க்கை எனும் நாவலுக்குள் வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டுவிட்டு, அதன் தொடக்கமும், முடிவும் தெரியாமல் முதல் அத்தியாயத்தோடு நின்று விட்ட ரசிகை அவள்!

பரவாயில்லை. இதை மீண்டும் மீண்டும் படித்தால் மீண்டும், மீண்டும் பல புது அர்த்தங்களே தெரிகின்றன!

இப்படித்தான் வாழ்க்கையுடன் சமரசம் செய்து கொண்டாள் சாரதா.

ஆனால் ராஜாவால் முடியவில்லை. அப்பாவின் அதிகாரப் போக்கும், ஆணவமும் அவனைப் புரட்டிப் போட்டன. பள்ளியில் ‘எஸ்கர்ஷன்’ போவதிலிருந்து, கல்லூரியில் எந்த ‘சப்ஜெக்ட்’ படிக்க வேண்டும் என்பது வரை எல்லாமே அப்பாவின் ஆதிக்கம் என்பதை உணர்ந்தபோது ஒரு சிறைச் சாலையின் ஆயுட்கால தண்டனைக் கைதியாகத் தான் ஆக்கப்பட்டு விட்டதாக உணர்ந்தான்.

அந்த உணர்தலும், கோபமும் – ஏன் அவன் அப்பாவிற்கு இருக்கும் ‘ஈகோ’ இவனுக்கும் இருக்கக் கூடாதா என்ன? – இவனை அந்தக் குடும்பத்திலிருந்து அந்நியப்படுத்தியது.

நெற்றி குங்குமம் வியர்வையாக வழிய சமையல் அறையில் அடைப்பட்டுக் கிடக்கும் தன் அம்மாவின் வாழ்வில் இவனால் புதிய விடியலை உண்டாக்க முடியாது. ஆனால் தன் வாழ்வையாவது அஸ்தமித்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றியது.

சரியோ, தப்போ தான் காதலித்த நித்யாவுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு, கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனவன்தான்

சாரதாவால் அழக்கூட முடியவில்லை. கணவரின் கோபத்திற்க்குப் பயந்து அழத் திணறினாள், பயந்தாள். பாசத்தையும், நேசத்தையும் பந்தாடிய நாட்கள் அவை. தன் மன உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாத நாட்கள் அவை.

எப்படி வாய்விட்டு, மனம் விட்டுப் பேச முடியும்? ‘அவன் உனக்கு மட்டும்தான் பிள்ளையா? எனக்கில்லையா?’ – என்று கேட்டவர் நாராயணன்.

சோகத்தை மனத்துள் அடக்கி அடக்கி அதுவே வியாதியாகி விட்டது.

‘இதோ பார். அவன் மூஞ்சிலே முழிக்க மாட்டேன். நமக்கு அவன் திவசம் செய்ய வேண்டாம். உன்னோட காரியங்களை நான் பாத்துக்கிறேன். கவலைப்படாதே… அப்புறமா நான் ஆபத் சந்நியாசம் வாங்கிண்டு போயிடுவேன். சந்நியாசிக்குக் கர்மங்கள் தேவை இல்லை.

சமாதிதான். இவன் மந்திரம் சொல்லி எனக்குப் பிண்டம் போட்டா அதை வாங்கிக்க நான் வரமாட்டேன். வேண்டாம்! நான் ஆபத் சந்நியாசம் தான் வாங்கிக்கப் போறேன்’ – என்றார் நாராயணன்.

என்ன சொல்கிறார் இவர்? நீ சீக்கிரம் செத்து ஒழி. உன் சாவைவிட எனக்கு ஆபத் சந்நியாசம் தான் முக்கியம் என்கிறாரா?

ப்ரும்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்கிற நான்கு ஆஸ்சிரமங்களில் எதையும் இவர் சரியாகக் கடைப் பிடிக்கவில்லை.

பிரும்மச்சர்யத்தின் சிறப்பு தன் உணவிற்குத் தான் வழி தேடல் ‘பவதி பிக்ஷாந்தேஹி’ – என்று பிக்ஷை எடுத்தாவது பிரும்மச்சர்யத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தயவுசெய்து பிச்சையையும், பிக்ஷையையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

கிரஹஸ்தாஸ்சிரமத்தின் எந்த விதிமுறைகளையும் இவர் கடைப்பிடிக்கவில்லை. மனைவியைத் தாயாக்கிய ஒரு தகுதியைத் தவிர! வான ப்ரஸ்தத்தின் பற்றற்ற நிலையில் இருந்திருந்தால் மகனின் செயலை மன்னித்திருக்க மாட்டாரா?

இப்போது சந்நியாசம்! இதுகூட ஒரு கோபத்தின் வெளிப்பாடுதான்! ஆன்மாவை அழித்துக் கொண்டு பாடும் அவல ராகம்தான்! சாரதா பேசவில்லை. என்றுமே இவள் பேச்சடங்கியவள்தான்!

இப்போது மூச்சும் அடங்கியவள் ஆனாள்.

வியாதி முற்றி மாரடைப்பு ஏற்பட்டு சாரதாவை அவசரம் அவசரமாக ஆஸ்பத்திரியில் ‘ஐ.ஸி.யூவில் அட்மிட்’ செய்ய வாசலில் ஆம்புலன்ஸ் வந்தபோது மட்டும்தான் நாராயணனின் கண்கள் சற்றே கலங்கின!

இவர் கல்யாணம் அந்தக் கால கல்யாணம். இவர் பெற்றோர் பார்த்துப் பார்த்து செய்வித்த திருமணம், ஐந்து நாட்கள் திருமணம்.

தினம் தினம் கண்ணூஞ்சலும், நலங்கும், மாலை பாட்டுக் கச்சேரியும், திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் சீட்டுக் கச்சேரியும்…

மாப்பிள்ளை ஊர்வலமும்…

அந்த ஊர்வலத்தில் தான் இவர் தன் மனைவியுடன் பயணித்திருந்தார். அதன் பிறகு இந்த ஊர்வலம்!

அவசர ஆஸ்பத்திரி ஊர்வலம்!

இனி திரும்பிவரும் ஊர்வலம் எப்படி இருக்குமோ? இறுதி யாத்திரை ஊர்வலத்தில் முடியுமோ?

பதினைந்து நாட்கள் சாரதா ஐ.ஸி.யூவில் இருந்தாள். அடிக்கடி நினைவுகள் வருவதும், போவதும், இவரால் அங்கு போய்க் காத்திருக்க முடியவில்லை. ஒரு ஆயாவை ஏற்படுத்தி விட்டு இவர் ‘ஹாயாக’ வீட்டில் இருந்தார்.

ஆபத்சந்நியாசத்திற்கு ஏற்பாடு பண்ணவா?

ஆயிற்று சாரதாவின் காலம் முடிந்தது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, எந்தக் கோரிக்கையும் இன்றி, கிடைத்த வாழ்வை இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட விதி – என்று ஏற்றுக் கொண்டு வாழ்ந்து மறைந்து விட்டாள்!

வீட்டில் அவள் புகைப்படம் லாமினேட் செய்யப் பட்டுப் பூமாலை, ஊதுபத்தி மணத்துடன் சிரிக்கிறது.

இறக்கும்போதுகூட அந்த முகத்தின் சிரிப்பு மாறவில்லை. முகம் சோகமாகவில்லை.

மரணம் இத்தனை வலியற்றதா? மரணம் இத்தனை அழகானதா? அதன்பின்…?

மனைவி மறைந்தாலும் ‘ஈகோ’ மறையவில்லை. வீட்டை விற்றார். மகனாவது ஒன்றாவது! இனி ஆபத் சந்நியாசம், மகன் முகத்தில் விழிக்கக்கூடாது!

வீட்டை விற்ற பணத்தில் கொஞ்சம் வங்கியில் போட்டார். மாதம் வரும் வட்டியில் வாழலாம்.

சந்நியாசிக்கும் செலவுகள் உண்டே! காவி வஸ்திரம் வாங்க வேண்டும். கமண்டலம் வாங்க வேண்டும்!

ஒரு முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுத்து… அதற்கு ‘டொனேஷன்’ தந்துவிட்டு தன்னைத் தானே இங்கு வந்து சேர்ப்பித்துக் கொண்டு விட்டார்! இது தற்காலிகம்.

ஆனாலும் இன்னமும் ஆபத்சந்நியாசத்தை இவர் மறக்கவில்லை!

தன் தாய் இறந்தபோது கூட வராத மகன் இவர் இறந்த பின்னா வரப் போகிறான்! வேண்டாம்; அவன் வரவே வேண்டாம்!

அதற்குள் ஆபத் சந்நியாசம்…

மணிஓசை கேட்டது.

ஓ! மாலை பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது. அந்த முதியோர் இல்லத்தின் அனைத்து உறுப்பினர்களும் பிரார்த்தனைக்காக, பிரார்த்தனை மண்டபத்தில் ஒன்றாய் இணையும் நேரம்.

‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – பராசக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்’ – என்கிற தோத்திரப் பாடலுடன் பக்தி பெருகும்.

பிடிக்கிறதோ இல்லையோ இவர் இதிலும் கலந்து கொள்ளத்தான் வேண்டும்.

சரியோ தப்போ தாளம் போடத்தான் வேண்டும்.

பாடல் முடிந்து கற்பூர ஆரத்தி முடிந்து இவர் எழுந்தபோது – அந்த முதியோர் இல்லத்தலைவி இவர் அருகில் வந்தாள்.

‘உங்களைப் பார்க்க யாரோ ஒரு பெண் வந்திருக்கா, ரிசப்ஷன்லே உட்கார்ந்திருக்கா!’ இவருக்கு ஆச்சர்யம்! இவரைப் பார்க்கவா? யாரவள்?

ரிசப்ஷனுக்கு போனார். முப்பது முப்பத்தி ஐந்து வயதுள்ள பெண். ஐந்து வயதுச் சிறுமியும் உடன் அமர்ந்திருந்தாள்.

தலையில் முக்காடு போட்டு பாதி முகம் மறைத்திருந்தாள்! இவருக்கு புரிந்தது!

ஓ! மருமகளாகத்தான் இருக்கும். அம்மா இறந்த செய்தி தெரிந்து சொத்தையெல்லாம் தன் அப்பா அனாதை இல்லத்துக்குத் தந்துவிடப் போகிறாரோ என்ற பயத்தில் மகன் அனுப்பி இருக்கிறான்!

கூடாது… இப்போதே ஆபத்சந்நியாசம் வாங்கிக் கொண்டு விட வேண்டும்.

இவரைக் கண்டதும் அவள் தரை தொட்டு தலை வணங்கினாள். அந்தச் சிறுமியையும் வணங்கச் சொன்னாள். தலை குனித்தபடி ஒரு கடிதத்தைத் தந்தாள் அவள்.

‘என்ன இது…?’

‘லெட்டர்…’

‘யார். ராஜா அனுப்பினானா?’

‘இ. இல்லை அம்மா… அத்தை எங்கிட்டே கொடுத்தாங்க…’

அத்தை! யார்? இவர் மனைவியா? சாரதாவா? அவர் வியப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தார்.

அன்புள்ள என் கணவருக்கு,

அநேக நமஸ்காரம்…

நாம் திருமணமான புதிதில் பிரிந்திருந்த காலக்கட்டத்தில் கூட நான் கடிதம் எழுதியதில்லை. ஆனால் இந்த நிரந்தரப் பிரிவுக்கு முன் இந்தக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

நம் ராஜாவை நீங்க வெறுத்தாலும் அவனை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் உங்கள் மனசுக்குத் துன்பம் தரக்கூடாது என்று சில உண்மைகளை நான் உங்ககிட்டே மறைத்து விட்டேன். தப்புதான். என்னை மன்னித்து விடுங்கள்.

மரணம் கூட தப்புகளை மன்னிக்கும், மறக்கும். நீங்கள் மரணத்தைவிட நல்லவர். என்னை மன்னிப்பீர்கள்.

திருமணமாகி ஆறாவது மாதமே நம்ம ராஜா ஒரு விபத்தில் இறந்து போனான்! எனக்குச் செய்தி வந்த போது நீங்கள் அதிர்ந்து போவீர்கள் என்று நான் அழாமல் மனத்துள் அதிர்ந்து போனேன்! மரணச் செய்தியை மறைத்தேன். ராஜாவே மறைந்து போனான். அந்த மரணத்தை மறைத்தால் என்ன? உங்களுக்காக…

ராஜா உங்களுக்குத் திவசம் செய்ய மாட்டான்! நீங்கள் தான் அவனுக்குச் செய்ய வேண்டும்! ஆனால் அந்தக் கஷ்டத்தைக்கூட உங்களுக்கு வைக்காமல் டெல்லிக்குப் போயிருந்தபோது ராஜா இறந்து போனான்.

அங்கேயே எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு வரச் சொல்லி விட்டேன்! உங்களூக்காக…

என் மகனை என்னால் கடைசி வரை பார்க்க முடியவில்லை.

திருமணக்கோலத்திலும் சரி,

இறுதிச் சடங்குகளிலும் சரி, உங்களுக்காக…

நம் மருமகள் நித்யா நல்லவள். உங்களுக்குத் தெரியாமல் என்னுடன் அவ்வப்போது பேசுவாள். அதுவும் எனக்கு உடம்பு சுகமில்லாமல் ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆனபோது நித்யா தான் நர்ஸாக இருந்து எனக்குப் பணிவிடை செய்தாள்.

அந்தக் குழந்தையையும்… நித்யாவையும் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இது என் இறுதி வேண்டுகோள்.

நம் மகனுடன் நித்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் இருக்கிறது. பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

புரிந்தால்தான் வாழ்க்கை.

‘தீக்குள் விரலை வைத்தால் நின்னைத்
தீண்டு மின்பம் தோன்றுதடா’ – என்றான் பாரதி.

‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ – என்றான்.

‘நோக்க நோக்க களியாட்டம்’ – என்று இந்த உலகை நேசித்தான். எத்தனை கோடி இன்பங்கள்! அத்தனையையும் இழந்து விடாதீர்கள்.

மண்ணையும், மரத்தையும், பஞ்ச பூதங்களையும் நீங்கள் நேசிக்க வேண்டாம்.

மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

ஆபத்சந்நியாசத்தால் உங்கள் கோபத்திற்க்கு தீர்வு கிடைக்கலாம்.

ஆனால் அன்பால் எல்லாவற்றிற்குமே தீர்வு கிடைக்கும்.

அன்புடன்,

சாரதா…

கடிதம் படித்து அதிர்ந்தார் நாராயணன்.

விதையாய் முளைத்து விருக்ஷமாய் தழைத்தவளை இவருக்கு எப்படி அடையாளம் தெரியாமல் போயிற்று? தன் சுற்றத்திற்காகத் தன் சுகம் மறந்து சோகம் சுமந்தவளை எப்படி இவர் புரிந்து கொள்ளாமல் போனார்?

உண்மையான துறவி யார்? பந்தபாசங்களை அறுத்தெறிந்துவிட்டு ஜட வாழ்க்கை வாழ்ந்தாலும் வாழ்வை நேசித்தவள் அல்லவா சாரதா? மனித நேயத்தை சுவாசித்தவள் அல்லவா அவள்! பற்று விடுவதற்குப் பற்றற்றான் பற்றினைப் பற்றாமல் ‘இவரை மட்டுமே தொற்றிக் கொண்டும், தொங்கிக் கொண்டும் வெளவால் போல இருட்டில் வாழப் பழகிக் கொண்டவள் அல்லவா சாரதா! கண்கள் நிறைகின்றன்.

அப்போதுதான் நித்யாவைப் பார்க்கிறார் அவர்.

நெற்றி வெறுமையாக….

அந்த வெற்று இடத்தில் ராஜா சிரிக்கிறான்!

‘நீ எனக்குத் திவசம் பண்ணக் கூடாது…!’

இவர் தன் சாபத்தால் தானே அழிந்து போனார். வெற்றி யாருக்கு? கண்களில் நீருடன் அந்தச் சிறுமியைக் கட்டி அணைக்கிறார் நாராயணன்.

‘பாப்பா உன் பேர் என்ன?

சிரித்தபடி குழந்தை சொல்கிறாள்…

‘சாரதா!’

நன்றி: அபிராமி – ஏப்ரல்2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *