(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த அழகிய வீட்டின் வரவேற்பறையில் விரக்தியுடன் அமர்ந்திருந்த பொன்மணி. தனது தீனமான கண்களினால் பலமுறை அந்த இடத்தை வட்டம் போடுகிறள்.. அது ஒரு உண்மையைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
செம்மையான நேர்த்தியும் கலையம்சமும் பொருந்திய திரைச் சீலைகள். பளபளக்கும் சோபா செட்டுகள். சீராக அடுக்கிய புத்தகங்கள் நிறைந்த கம்பீரமான நிலவறை. கண்கவரும் கண்ணாடித் தொட்டியில் வண்ண வண்ண மீன்கள், அழகிய சரவா ஜாடிகளில் நிரம்பி வழியும் பூங்கொத்துக்கள். பளிச்சிடும் சுவரில் பளபளக்கும் வண்ண ஓவியங்கள்…!
பொன்மணி. உண்மையிலேயே சிலையாகி விட்டாளோ – என்ற தோரணையில் மௌனமாய். பிரமிப்பாய் அமர்ந்திருந்தாள். அவளுக்கு இந்த வசதி வாய்ப்புமிக்க இடத்திற்கு வரப் போகிறோம் என்பது சில மணி நேரங்களுக்கு முன்புதான் தெரிந்தது என்பதால் இத்தனையும் தெரிந்திருக்கவில்லைதான். ஆனால்…
அந்த பெரிய மனம் படைத்த டாக்டரைக் கண்ட முதல் நிமிடத்திலேயே அவர் மிகமிக உயர்ந்தவர் என்ற எண்ணம் மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. மூடிய கண்களுக்கிடையே. வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்கும் சக்தியும் இழந்தவளாய் அவள் அழுது கொண்டிருக்க, அந்த வாடிய முகத்தை தன் பக்கம் திருப்பி, கருணை பொங்கு பார்வையினால் அவள் மனத்தின் வெப்பத்தை மாற்றி, மீண்டும் இம்மண்ணில் வாழவேண்டும் என்ற நம்பிக்கையை அவளுக்கு ஊட்டிய அந்த மாபெரும் மனிதரை அவள் ஒரு முறை நினைக்கிறாள்…!
“டாக்டர் யாசீன்” யாரோ ஒரு டாக்டர் உரிமையுடன் அழைத்துக் கொண்டு உள்ளே வந்த யாசீன் கைகளைப் பற்றி குலுக்கி குசலம் விசாரித்த போதுதான் அன்பான மனிதரின் பெயர் இன்னதென்று அவள் தெரிந்து கொண்டாள். வேற்று மதக்காரர் என்ற எண்ணம் வந்து முன்னே நின்றது.
அவள் எத்தனையோ முறை சிறுமியாய் இருக்கும்போத மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறாள். அப்போது பார்த்த டாக்டர்கள் ஒரு சிலர் இப்போது அவள் கண்முன் வந்து நின்றார்கள். ஏதோ கடமைக்காக வந்து ரெடிமேடாகப் புன்னகை சிந்தி இயந்திரம் போல் இயங்கிச் செல்லும் டாக்டர்கள்தான் அவர்கள்… ஆனால்.. அந்த எல்லையை எல்லாம் தாண்டிதான் ஆண்டவனின் அருள் வடிவம் என்பது போல் அவள் கண்ணுக்கு யாசீன் தோன்றினார்.
மூன்று நாட்களுக்குப் பின் பெயர் வெட்டி வீட்டுக்குப் போகலாம் என்று நர்ஸ் கூறிய பின் பொன்மணி தட்டுத்தடுமாறி அந்த மருத்துவ மனையிலிருந்து வெளியே வந்து நின்றாள். புக்கிட்மேரே சாலையின் இருமருங்கிலும் கொடுக்குப் பிடித்துக் கொண்டு ஓடும் வாகனங்கள். தங்களது அவசரத்தை எடுத்துக்காட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தன…
பொன்மேனியை யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை… ஆனால், அதைப்பற்றி அவளும் கவலைப்படவில்லை. ஆவளது சிந்தனையெல்லாம் இனி போகவேண்டிய இடத்தைப்பற்றியே சுழன்றது. எங்கே போவாள். யாரிடம் போவாள். அவள் போக வேண்டிய இடம் அவளுக்கே மறந்து போன பின்பு அவள் நாடிச் செல்ல வேண்டிய உறவெல்லாம் அவளாகத் துறந்து ஓடிவந்தபிறகு..இனி எங்கே செல்லப்போகிறாள்..!
அனாந்தரமான வீதியில் தன்னந் தனியாய் நின்று தவிக்கும் துயரத்தில் தொண்டை அடைக்க எதிர்காலத்தைப் பற்றிய நினைவுகளின் புலம்பலினால் நா வறண்டு போக.. பொன்மணி தன்னை மறந்து அந்த சாலையோரத்தில் நின்று கொண்டிருக்கிறாள்…
தனிமை… யாருமே இல்லாத் தனிமை.. தன் மூப்பான செயலினால்தானே ஒதுங்கி ஓடி வந்து வலிய தேடிக் கொண்ட தனிமை… அந்தத் தனிமை அன்று தேனாக இனித்த வேளையில் அவள் கள்ளுண்ட வண்டாகப் பறந்தாள்.. ஆனால் அதுவே இன்று தீயாக மாறிச் சுடுகின்ற வேளையில் .. ஓ.. அவளது நிலை அறிந்து உதவ யாரே முன் வருவார்…? பொன்மணியின் துடிக்கும் இதயத்திற்கு ஆறுதல் கூறும் இதயம் இனி உண்டோ? கலைந்து போன ஆசைக் கனவுகளின் மயக்கத்திலிருந்துஅவள் விழித்துக்கொண்ட வேளையல்லவா இது…! அவ்வளவு எளிதில் தெளிவு கிட்டுமா அவளுக்கு..? பொன்மணியின் நினைவுத் திரைகளைக் கிழித்து எறிவதுபோல் சர்ரென்றுஅவளருகே வந்து நின்றது ஒரு கார்! சட்டென்று சுதாரித்துக் கொண்டவளாய் சற்றே ஒதுங்கி நிற்கிறாள்.
அவள் பக்கம் கதவைத் திறந்து விட்டு “ஏம்மா இன்னும் இங்கேயே நிக்கறே.. வீட்டுக்குப் போகலியா.. ? ஒரு தந்தையின் பரிவில்.. தமையனின் அன்பில் அந்தக் குரல் இழைந்தோடியது.. அவள் அதிர்ந்துபோய் உள்ளே பார்க்கிறாள்.. அங்கே..? அவளது கண்களுக்குக் கருணைக் கடலாய்த் தோன்றிய அதே டாக்டர் யாசீன்.
அவளால் எதையும் சொல்ல முடியாத நிலை..! வாய் மூடிய மௌனியாய் அந்தக் காரில் அவள் ஏறிக்கொள்ள.. அன்னமென ஊர்ந்து செல்கிறது அது. டாக்டர் அவளிடம் எதையும் கேட்கவில்லை… அவகை கேட்பதில் எந்தப் பயனும் இல்லை என்பது அவர் அறிந்த ஒன்றுதானே..
இருபது வயதுப் பெண்ணொருத்தி தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் கடலில் குதித்து, பின் பொது மருத்துவனைக்கு சொண்டு வரப்பட்ட போது. அவளுக்குச் சிகிச்சை செய்யும் நோக்கில் அங்கே பிரவேசித்தபோது டாக்டர் யாசீனுக்கு அவளது வாக்குமூலம் எல்லாவற்றையும் விளக்கி இருந்தது. அதனால்தானே என்னவோ. யாசீன் ஒரு மனோதத்துவ டாக்டரைப் போல் அவளிடம் மிகுந்த பிரியமாய் நடந்து கொண்டார். அரைமணி நேரப் பிரயாணத்துக்குப் பின் அந்தக் கார் ஒரு பெரிய ‘பங்களா முன்பு வந்து நின்றது.
அவளை வீட்டினுள் அழைத்து வந்து உள்ளே அமர வைத்துவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தவருக்காக அவள் காத்திருக்கிறாள். பெரிய மனிதர். பெரிய மனம் படைத்தவர், அவர் மனம் போலவே உயர்ந்த விசாலமான வீடு. ஒரு வித தெய்வீக ‘ஜமால் கஸ்துரா
மணம் அங்கே விரவி நிற்க, பொன்மணி.. தலை நிமிர்கிறாள்.. அவளெதிரே உடை மாற்றிக் கொண்டு டாக்டரும் அவர் துணைவியும் புன்னகை ததும்ப கோட்டும் சூட்டுமாய் வந்த டாக்டர் இஸ்லாமிய மார்க்கச் சம்பிரதாய முறையில் உடுத்தி வந்து நின்றபோது அவளால் தன் கண்களை நம்பவே முடியவில்லை… எல்லா மதத்தினருக்கும் பாரம்பரிய உடைதான் மனிதனுக்கு முழு கவுரவத்தையும் கம்பீரத்தையும் கொடுக்கிறது என்பதை அவள் அப்போதுதான் தெரிந்து கொள்கிறாளோ? அவரருகே நிற்கும் அந்த எழில் ஓவியத்தை அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள்… அவள் பார்வை மிகவும் தீவிரமாய் அந்தப் பொன்மொழி மேல் பதிய…
அவள் மந்திரத்தில் கட்டுண்டவளைப் போல் எழுந்து அவளருகே சென்று.. அந்தப் பெண்ணின் தோளைப் பற்றி…
“ஜமீலா!” என்றாள்… அந்தக் குரலில் வேகம் அந்தப் பெண்ணின் புலன்களனைத்தையும் துடிக்க வைத்ததோ எனனவோ? அவள் திகைத்து.. திணறி.. நீ.. பொன்மணியே.. தானே” என தடுமாறுகிறாள்… கண நேர சங்கமத்தில் இரு பெண்களும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்ள… அங்கே மடை திறந்த கண்ணீரின் வேகம் கண்டு டாக்டர் அங்கிருந்து மெல்ல நழுவிப் போகிறார்.
‘பொன்மணி நீ எப்படி இங்கே வந்தே… என் கணவரை உனக்கு எப்படித் தெரிந்தது…”ஆவலும் ஆதங்கமும் குரலில் இழைய ஜமீலா அவளைக் கேட்கிறாள்…
பொன்மணி, எதைச் சொல்லுவாள்! எப்படிச் சொல்லுவாள்?… கடந்து விட்ட அந்த ஐந்து வருடங்களுக்கு முன் அவள் அந்தக் கணமே திரும்பிப் பார்க்கிறாள். பதின்மூன்று பதினான்கு வயதுப் பருவ விளிம்பிலே அடி எடுத்து வைத்திருந்த காலம் அது.
கட்டுக்கடங்காத மிதப்பில் பொன்மணி மிதந்து கொண்டிருந்தாள். வசதி மிக்க வாழ்க்கை. அப்பா, அம்மாவுக்கு ஒரே செல்லப் பெண். அவள் வைத்ததே சட்டம். தந்தையின் நவநாகரிக வளர்ச்சியில் காட்டுப் பூவாய் மலாந்து மணம் வீசிக்கொண்டிருந்தவளைத் தாயின் எந்தக் கட்டுப்பாடும், கண்டனமும் திருத்த முடியாத பரிதாப நிலை… அம்மா ஒரு கட்டுப்பெட்டி, ஆறுமுழப் புடவையும் மஞ்சளும் குங்குமமும்தான் அவளுக்குத் தெரிந்த அலங்காரம். மிஞ்சிப் போனால் கோயிலும் குளமும்தான் பக்க துணை… ஆனால் தந்தையும் மகளும் மேல்நாட்டு இறக்குமதிச் சீவன்களாய்த் தங்களைக் காட்டிக்கொள்வதில் பெருமைப் பட்டன. ஒரு பருவப் பெண்ணுக்கு இல்லாத பொன்மணியைப் பார்க்கும்போது அவளை ஒத்த ஜமீலாவுக்கு வேதனையே மிஞ்சி நிற்கும்.
“பொன்மணி… நம்மை மாதிரி பெண்ணுங்க இந்தச் சமயத்தில் தாண்டி அடக்கமா இருக்கணும்…” என்பாள்.
அவளது சொல் கேட்டு பொன்மணி கலகலவென்று சிரிப்பாள்… போடி பைத்தியம். நீயும் அம்மா மாதிரியேதான்.. உனக்கும் அம்மாவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அவுங்களுக்கு முப்பத்தைந்து… உனக்குப் பதினைந்து”
கிடைக்கிற இந்த நேரத்தில அனுபவிக்க வேண்டியது உல்லாசமும் பொழுது போக்கும்தான். உன்னை மாதிரி… கட்டுப்பாடு, பண்பாடு. அடக்கம் அது இதுன்னு உளறிக்கிட்டு இருந்தா அப்புறம் அறுபது வயதிலேயா அனுபவிக்கிறது? பேசாம இதெல்லாம் தூக்கிப் போட்டுட்டு என்னோடு வா.. இன்னிக்கு என் புது நண்பனை உனக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன். என்பாள்.
ஜமீலா தன் இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக்கொள்வாள். “பொன்மணி, பெண்ணாகப் பிறக்கறதுக்குப் பெரும் புண்ணியம் பண்ணி இருக்கணும்னு சொல்லுவாங்க. மிகவும் புனிதமான இந்தப் பிறப்பை நீ அலட்சியப் படுத்தாதே! அப்புறம் ஆண்டவன் உன்னையே அலட்சியப் படுத்திடுவார்”
என அவளுக்கு அறிவுரை கூறுவாள். அது செவிடன் காதில் ஊதிய சங்காய் முடியும். ஆண்டுகள் கூடிக்கொண்டே போக அவர்களின் வயதும் கூடிக்கொண்டே போனது. பெட்டியுள் ஒளிரும் வைரமாய் ஜமீலாவும், வீதியில் பிரகாசிக்கும் கண்ணாடியாய் பொன்மணியும் வளர்ந்தனர்.
நாளொரு நண்பன். பொழுதொரு பழக்கம் என்று தன் போக்கில் திரிந்த பொன்மணியை, அவளது பலகீனம் ஒன்றையே துணையாகக் கொண்டு வீட்டை விட்டே, ஊரை விட்டே ஓடினான் சங்கரன். பொன்மணிக்குப் புது உலகைக் காட்டுகிறேன் என்று அவளிடம் போதையூட்டி விட்டிலிருந்து பொன்னும் மணியுமாய் அள்ளிவ வரச் செய்து…எல்லாவற்றையும் ஏப்பம்விட்டு அவளையும் ஏங்க விட்டு…
சங்கரன் பறந்தபோதுதான் அவளுக்குத் தெரிந்தது. அவள் ஏறி வந்தது மண் குதிரை என்று… இனி என்ன செய்யப்போகிறாள்? அவள் அவனைத் தேடி அலைந்தபோது அவன் நம் நாட்டு குடிமகனில்லை என்று… சாவை துச்சமாய் மதித்தாள் பொன்மணி. கரைபுரண்டு வரும் கடலில் குதித்தாள். ஆனால் விதி…
அவளை அவளது அன்பான தோழியிடம் கொண்டு வந்து சேர்த்தது. பெண் என்பவள் சீராக கட்டுக்குள் அடங்கிடும் நதியாக இருக்கும் வரைதான் அவள் போற்றப் படுகிறாள். மதிக்கப்படுகிறாள். ஆனால், அவள் கரையைத் தாண்டி அணை கடந்து ஓடும்போது நிச்சயம் பழிக்கும் பாவத்துக்கும் ஆளாகிவிடுவாள் என்பதை பொன்மணி தன்னைக் கொண்டே உணர்ந்து கொண்டாள்.
“ஜமீலா, உன்னோட உயர் குணங்களும் இறை நம்பிக்கையும். மதத்தின் பேரிலும் பண்பாட்டின் பேரிலும் நீ வெச்சிருக்கிற மரியாதையும்தான் உன்னை இந்த அளவுக்கு உயர்ந்த வாழ்க்கைக்கு கொண்டு வந்ததிருக்கு. ஒவ்வொரு பெண்ணும் தன் மத. இனக் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமா. அதைப் பாதுகாக்கும் பெட்டகமா பொறுப்புள்ளவளா இருந்தால்தான் இனமும் மதமும் கலாச்சார பண்பாடும் நிலை தடுமாறாம வளர முடியம். ஏன்னா ஒரு பெண்தான் தாயாகிறாள். அந்தத் தாயின் நல்ல குணங்கள்தான் தன் வாரிசுகளை நல்ல மார்க்கத்தில் கொண்டு செல்ல முடியும்… நீ இதைச் சிறு வயதிலேயே மனதில் பதிய வெச்சதாலே இப்ப நல்லா இருக்கே.
ஜமீலாவின் கைகளைப் பற்றியவள் அவளை எதுவும் பேச விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள். அவளுக்குத் தோழியைப் பார்த்துவிட்ட சந்தோஷம். சின்ன வயதில் இருவரும் ஹரிராயாவுக்கு என்னமாய்த் திட்டம் போட்டிருப்பார்கள். ஜமீலாவின் அம்மா கோழிக் குருமாவும் இடியாப்பமும் கொண்டு வந்து அன்போடு ஊட்டியது அவளுக்கு இப்போது கூட நினைவுக்கு வந்தது…
“மதங்கள் வேறு. ஆனால் மனங்கள் ஒன்று. இனங்கள் வேறு. ஆனால் இதயம் ஒன்று எனும் புதுக்கவிதை வரியை அசை போடுகிறாள். தான் பட்ட வேதனைகளை எல்லாம் மறந்து பளிச்சென்று முகம் மலர்ந்தது.
ஜமீலாவின் கண்களில் கோடி சூரியப் பிரகாசம் பெருகியது.
“ஆமாம் பொன்மணி. இறைவன் கருணை உள்ளவர். அதனால்தான் உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார். அப்பவும் சரி, இப்பவும் சரி நான் இதைத்தான் உனக்குச் சொல்வேன்… அவள் சொல்லி முடிக்கிறாள், ஒலி 96.8 காற்றிலே மிதந்து வருகிறது அந்த இனிய பாடல்…
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லை என்றே சொல்லுவதில்லை.
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் – அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை.
இருவரின் கண்களிலே.. ஆனந்தக் கண்ணீர் பெருக இணைந்ததைக் கண்ட யாசீமின் நெஞ்சிலே ஆனந்தம் பொங்க… அந்த அன்பு உள்ளம் ஒன்றை மட்டும் உறுதியாய் நினைக்க…. அதையே உதடுகளும் உச்சரிக்கின்றன… ஆண்டவனே. எல்லாப் பெருமையும் உனக்கே…!
– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.