ஆடம்பரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 4,916 
 

அசோக் தன் மனைவி அன்பரசியோடு சென்னை வந்து சேர்ந்தான். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. அன்பரசி ஆறு மாதம் கர்பிணியாக வேறு இருந்தாள். தனக்குச் சொந்தமாகக் கடை இருக்கிறது. என் பெயரில் சொத்துக்கள் நிறைய இருக்கிறதென்று சொல்லி அன்பரசியைத் திருமணம் முடித்தான். ஆனால், திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் அவன் ஏமாற்றியது எல்லாம் வெளியில் வந்தது.

கடை அவன் சொந்த கடை இல்லை. ஐந்தாயிரம் சம்பளத்திற்கு அந்தக் கடையில் அவன் வேலை செய்திருக்கிறான். அவன் பெயரில் ஒரு குண்டுமணி சொத்து கூடக் கிடையாது. அசோக் செய்த மோசடி தெரிந்ததும் அன்பரசி வீட்டார் ஏமாற்றியதற்காக அவனை அடித்துத் துவம்சம் செய்துவிட்டார்கள்.

அன்பரசிதான் அவனுக்காகப் பேசி, “எங்களுக்குக் கல்யாணமாகி இப்போ ஆறு மாச குழந்தை வயித்துல இருக்கு. அதனால், அவங்களை எதுவும் செய்ய வேண்டாம். அவருக்கு வேற ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்க. இந்தக் காலத்துல அஞ்சாயிரம் சம்பளத்துல குடும்பத்தை நடத்துறது கஷ்டம்.” என்று கணவனுக்காகப் பரிந்து பேசினாள்.

அன்பரசி வீட்டாரும் சரி என்று ஒப்புக் கொண்டு, “நீங்க ரெண்டு பேரும் இனிமேல் இங்க இருக்க வேண்டாம். எங்க கூட ஊருக்கே வந்திருங்க. இனிமேல், எங்க கண் முன்னாடிதான் இருக்கனும். நீ கர்ப்பமா இருப்பதால் இவனை நம்பி உன்னை இங்க விட்டுட்டுப் போக முடியாது.” அசோக் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துவிட்டதால் கண்டிப்புடன் சொன்னார்கள்.

அசோக் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்திருந்தான். அங்கு அவர்கள் இருவருக்கும் போதுமானச் சிறிய வீடு ரூபாய் இரண்டாயிரத்தில் வாடகைக்கு எடுத்திருந்தனர். வீட்டிற்குத் தேவையான அனைத்து சாமன்களும் வாங்கி வைத்திருந்தனர். அசோக் பட்டதாரி என்றும் பொய் சொல்லியிருந்தான். அவனுக்கு வேலை தேடுவதற்காகச் சான்றிதழ்களைக் கேட்ட போது அதுவும் பொய் என்று தெரிய வந்தது.

அன்பரசி வீட்டார் திரும்பவும் அவனை அடிக்கப் போக அன்பரசிதான் யாரையும் அடிக்கவிடாமல் தடுத்துவிட்டாள். அவள் இப்போது இருக்கும் நிலையில் அவளைக் கஷ்டப் படுத்த வேண்டாமென்று விட்டு விட்டனர். பத்தாம் வகுப்பு முடித்தவனுக்கு என்ன? வேலைப் பார்த்துக் கொடுப்பது என்று யோசித்து மளிகை கடையில் காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் வேலை. மாதம் பத்தாயிரம் சம்பளம் என்று வேலை வாங்கிக் கொடுத்திருந்தனர்.

ஊரிலிருந்து வந்த அன்றே கடைக்குச் சென்றுவிட்டான். அன்பரசி வீட்டாரிடம் வாங்கிய அடி ஞாபகத்தில் இருந்ததால் வீடு விட்டால் கடை கடை விட்டால் வீடு என்று நல்ல பிள்ளையாகச் சென்று வந்தான். தன் மனைவி அன்பரசியையும் நன்றாகக் கவனித்துக் கொண்டான். அன்பரசிக்கும் பேறுகாலம் நேரம் வர முதல் பேறுகாலம் என்பதால் அந்தச் செலவு முழுவதையும் பிறந்த வீட்டினரே செய்தனர்.

அன்பரசி சாயலில் அழகாக மகன் பிறந்திருந்தான். அவன் பிறந்த மூன்றாவது மாதம் தன் வீட்டிற்கே அழைத்து வந்தான். குழந்தையும் வளரத் தொடங்கியது. குழந்தையின் முதல் பிறந்த நாளை மிகவும் ஆடம்பரமாகச் செய்தான். அன்பரசி வீட்டார் இப்போதைக்குத் தேவையில்லாத செலவு வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அதைச் செய்தான். அன்பரசியும் அவனுக்காகப் பரிந்து பேசியதால் அவர்களும் விட்டு விட்டனர்.

அசோக் கடையில் வேலை பார்த்துக் கொண்டே கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நன்றாகப் பழகத் தொடங்கினான். அப்படி ஒருவரிடம் ஏற்பட்ட பழக்கத்தில் அவர் வேறு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அதில் இதைவிட அதிகச் சம்பளம் கிடைக்குமென்று ஆசைக் காட்ட அவனும் கடை வேலையை விட்டுவிட்டு அவருடன் சென்றான்.

அன்பரசி அப்பா கேட்டதுக்கும், “அங்க நல்ல சம்பளம் கிடைக்கும் மாமா. அதான், அந்த வேலைக்குச் போறேன்.” அவர்களும் எப்படியாவது சம்பாதித்தால் சரி என்று என்ன வேலை என்று கேட்கவில்லை. அவன் பொண்டாட்டிப் பிள்ளைகளை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும் என்று இருந்தனர்.

அசோக் புதிய வேலையில் சேர்ந்ததும் சிறிது சிறிதாக அவன் நடவடிக்கைகள் எல்லாம் மாறத் தொடங்கியது. தான், ஒரு பெரிய கம்பெனியின் மேலாளர் என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டான்.

மேலாளர் பேருந்தில் போவது நன்றாக இருக்காது என்று ஒன்றரை லட்சத்தில் பைக் வாங்கினான். “என்னங்க, பைக் வாங்க இவ்வளவு பணம் ஏது?” என்று அன்பரசி கேட்டதற்கு, “கம்பெனில பைக் வாங்க பணம் கொடுத்தாங்க.” அசோக் சொன்னதும் மேற்கொண்டு அன்பரசியும் எதுவும் கேட்கவில்லை.

ஒரு வருடத்தில் கார், 40 இஞ்ச் அளவில் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி, தன் மனைவிக்கு நூறு பவுனில் நகைகள் என அனைத்தும் வாங்கியிருந்தான். அவர்கள் மூவருக்கும் சொகுசான வீடு வாடகைக்கு எடுத்திருந்தான். ஒரு வருடத்தில் அவர்களின் வாழ்க்கை முறையே தலைகீழாக மாறியது.

அன்பரசி வீட்டார் “நீ என்ன வேலைக்குப் போற? ஒரு வருஷத்தில் எப்படி இவ்வளவு பணம் வசதி வந்துச்சு?” என்று கேட்டனர்.

“அதை எதுக்கு நீங்க கேட்கீங்க? நாங்க ஒரு வருஷத்தில் வசதியா இருக்கோம்னு பொறமையா இருக்கா?” அசோக் பேசியதைக் கேட்டு அன்பரசியும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் பேசுவது சரியே என்று இருந்தாள்.

பணம் வந்ததும் சொந்தம் என்பதை மறந்து விட்டார்கள். இனிமேல், இங்கு வந்தா நமக்கு மரியாதை இருக்காது என்று அன்றோடு அன்பரசி வீட்டார் அங்கு வருவதை நிறுத்தி விட்டனர்.

பணம் என்னும் போதைத் தலைக்கேறியது. அதனால், அன்பரசியும் அவனுடன் சேர்ந்து ஆடத் தொடங்கினாள். அவன் கொண்டு வரும் பணத்தைச் சேமிக்கவும் மறந்து இருந்தனர்.

உழைத்துச் சம்பாதிக்கும் பணம் என்றால் அதன் கஷ்டம் என்னவென்று தெரிந்திருக்கும். வீட்டில் சமைப்பதே கிடையாது. தினமும் ஓட்டலில்தான் சாப்பாடு. அதுவும், விலை உயர்ந்த ஓட்டல்களுக்கு மட்டுமே செல்வார்கள்.

ஓட்டலில் அளவுக்கு அதிகமாக ஆர்டர் கொடுத்ததால் சாப்பிட முடியாமல் அதைப் பார்சல் செய்து வாங்கி வந்தனர். அன்பரசியின் அண்ணனிடம் கொடுக்க, “உங்களுக்குதான் வாங்கிட்டு வந்தோம்.” பார்சலைக் கொடுக்க அதைப் பார்த்ததுமே அவர்கள் சாப்பிட்ட மீதி என்று தெரிந்தது. அதை, அவர்கள் முன்னாடியே குப்பையில் எறிந்தார்.

“இன்னைக்குப் பணம் வசதி வந்திருச்சுன்னு ஆடாத. வசதி வந்தாலும் முதல்ல மற்றவங்களை மதிக்கக் கத்துக்கோங்க. பணம் வசதின்னு வந்துட்டா எல்லாம் உனக்குக் கீழன்னு நினைச்சு ஆடாதீங்க. நாங்கப் பிச்சையெடுக்கலைப் பிச்சைப் போட. அப்படியே பிச்சை எடுத்தாலும் உங்ககிட்டக் கையேந்தி நிற்க மாட்டோம். வெளியே போங்க.” அன்பரசியின் அண்ணன் கோபத்தில் கத்தினார்.

“நீ, வா அன்பரசி நாமக்கு வசதி வந்துட்டுன்னு பொறமையில் பேசுறாங்க. எவ்வளவு பேசனுமோ பேசட்டும் வா போலாம்.” தன் தவறை உணராமல் அசோக் அவளை அழைத்துச் சென்றான்.

தன் மகனுக்கும் கஷ்டம் என்னவென்று தெரியாமலே வளர்த்து வந்தார்கள். போகப் போக இவர்களின் ஆட்டமும் அதிகமாகியது. நன்றாகச் சென்று கொண்டிருந்த இவர்களின் ஆட்டம் தள்ளாட்டம் ஆடத் தொடங்கியது. கம்பெனியின் மேனேஜர் என்று சொன்னது பொய். அந்தக் கம்பெனியில் கமிஷன் அடிப்படையில் வேலை பார்த்து வந்திருக்கிறான்.

கம்பெனித் தயாரிக்கும் பொருட்களுக்கு அதிகமாக ஆர்டர் வாங்கிக் கொடுத்தால் கமிஷனும் சம்பளமும் கிடைக்கும். நல்ல முறையில் சென்று கொண்டிருந்த நிறுவனம் கீழே இறங்கத் தொடங்கியது. அதனால், ஆட்களை வேலையிலிருந்து எடுத்தனர். அதில் அசோக்கும் ஒருவன்.

வேலை போனதும் ஒவ்வொரு கம்பெனியாகச் சென்று வேலைக் கேட்கப் படிப்பு இல்லையென்று திருப்பி அனுப்பப்பட்டான். அப்படியே வேலைக் கிடைத்தாலும் இவன் வசதிக்கேற்றச் சம்பளம் இல்லை. அதுமட்டுமில்லை இந்த மாதிரி வேலைப் பார்த்தால் என் கௌரவம் என்ன ஆவதென்று ஒவ்வொரு வேலையாகத் தட்டிக் கழித்தான்.

வேலை வேலைத் தேடித் தேடி வீட்டில் இருந்த நகை, கார் அடமானத்திற்குச் சென்றது. எவ்வளவு நாட்கள் அடமானம் வைத்த பணத்தில் சாப்பிட முடியும். அதனால், அன்பரசி அருகில் இருந்த ஒரு கடையில் வேலைக்குச் சென்றாள். ஆனால், அசோக் வேலைக்கும் போகனும் என்பதையே மறந்திருந்தான்.

அடமானம் வைத்த எந்தப் பொருட்களுக்கு வட்டியும் கட்டாமல் அதை மீட்கவும் முடியவில்லை. இவர்களிடம் சேமிப்பு என்பதும் எதுவுமில்லை. கடைசியில் இரண்டாயிரம் வாடகைக் கூடக் கொடுக்க முடியாமல் ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

அன்பரசி அவளின் தாய் வீட்டிற்குச் செல்ல, “சம்பாதிச்சப் பணத்தை அளவோடு செலவு செஞ்சு சேமிச்சு வச்சிருந்தா? இன்னைக்கு, இந்த நிலைமை உனக்கு வந்திருக்காது. அவன் ஆடினாலும் குடும்பத்தைப் பொறுப்போடு கவனிக்க வேண்டிய நீயும் சேர்ந்து ஆட்டம் போட்ட. உனக்கு அந்தக் கஷ்டம் என்னன்னுத் தெரியனும். அதனால், உனக்கு நாங்க எந்த உதவியும் செய்யமாட்டோம். உங்க உழைப்புல உழைச்சு முன்னேறுங்க. அப்போதான் வாழ்க்கைல கஷ்டம்ன்னா என்னன்னுப் புரியும். போய்ட்டு வா” அவர்கள் செய்த தவறை உணரும் விதமாகச் சமரசமாகவே பேசி அனுப்பினார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *