கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 6,803 
 
 

நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

அழகிய ஓவியம் போல, அன்று என்னைத் தனது நான்கு வயது மகளுடன் சந்தித்தவள் இன்று ஏன் இப்படிக் காய்ந்த சருகு போலானாள் என்ற கேள்வி என்னுள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. திடீரென சனநாடமாட்டம் மிக்க தெருவென்றும் பாராது உரத்து அழத் தொடங்கி விட்டாள். கன்னங்களில் பொலபொலவென்று வழிந்த கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.

“அழாதைங்கோ. என்னெண்டு சொல்லுங்கோ. நான் ஹெல்ப் பண்ணுறன்.”

“எனக்கு அவரைப் பார்க்கோணும். எல்லாருமா என்னை ஏமாத்தி கையெழுத்து வேண்டிப் போட்டு அவரை ஜெயிலிலை போட்டிட்டினம். எல்லாரும் பொய். எனக்கு அவரைப் பார்க்கோணும். அவர் அப்பிடிச் செய்திருக்க மாட்டார். குமுறினாள். குழறினாள்.”

எனக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்றதான உணர்வு. என்ன நடந்திருக்கும்..? ஏன் இப்படிப் பேசுகிறாள். எப்படி சாருகன் ஜெயிலுக்குப் போயிருப்பான்? நாட்டிலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அழைத்து வரும் ஏஜென்சி வேலை பார்த்திருப்பானோ?

எதுவானாலும் பேசுவதற்கு இதுவல்ல இடம். போவோரும் வருவோரும் என்னையும் அவளையும் ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். என்னைத் தெரிந்த சிலர், முகங்களில் கேள்விக்குறி தொக்க பார்வைகளை ஏளனம் கலந்து வீசிச் சென்றார்கள். இன்னும் சிலரோ இரக்கமாகப் பார்த்துச் சென்றார்கள்.

“வாங்கோ நாங்கள் அந்தக் தேநீர்க்கடைக்குள் போயிருந்து கதைப்பம்.”

“எனக்குக் தேநீரும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம்.”

“இஞ்சை பாருங்கோ. எல்லாரும் ஒரு மாதிரி எங்களைப் பார்க்கினம். கொஞ்சம் குளிராயும் இருக்கு. உள்ளை போயிருந்து ஆறுதலாக் கதைப்பம்.” அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்தத் தேநீர்க்கடைக்குள் அழைத்துச் சென்றேன். கூடவே அவளது நான்கு வயது மகனும் அவளது சுவெற்றரைப் பிடித்தபடி உள் நுழைந்தான். அவனது வாயைச் சுற்றி அவன் காலையில் சாப்பிட்ட சாப்பாடு வெண்மையாகப் படிந்து காய்ந்து போயிருந்தது. பார்ப்பதற்கு துப்பரவின்றி இருந்த அவனது தோற்றத்தை யேர்மனியர்கள் முகத்தைச் சுளித்த படி பார்த்தார்கள்.

கபேற்றறியாவின் உள்ளே ஒரு மூலையில் இடம் பிடித்துக் கொண்டேன். மது இப்படிப் பட்டவள் அல்ல. பன்னிரண்டு வருடங்களின் முன் சந்தித்த போது மகளை மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தாள். இப்போ என்ன நடந்தது? என் வீட்டுக்குக் கூட ஓரிரு தடவைகள் மகளோடு வந்திருக்கிறாள். பட்டுப் போல இருந்த அந்தக் குழந்தைக்கு இப்போ பதினாறு வயதாகியிருக்கும். அவள் எங்கே? கணப்பொழுதுக்குள் மனசுக்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் எழுந்தன.

மது எங்கோ வெறித்துப் பார்ப்பதுவும், மீண்டும் மீண்டுமாய் அழத் தொடங்குவதுமாய் இம்சைப் படுத்தினாள். பார்க்கப் பாவமாய், பரிதாபமாய்த் தெரிந்தாள். அவளை ஆசுவாசப் படுத்தி சரியான முறையில் கதைக்கத் தொடங்குவதற்கிடையில் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

“என்ன நடந்தது? ஏன் சாருகன் ஜெயிலுக்குப் போனவர்?”

“அவர் சரியான குடி. குடிச்சால் அவருக்குக் கண்மண் தெரியிறேல்லை.

குடிச்சுப் போட்டு எனக்கு அடிக்கிறதாலை…

“அடிக்கிறது பிழைதான். அதுக்கு இங்கை தண்டனையும் கிடைக்கும். ஆனால் இவ்வளவு காலத்துக்கு ஜெயில்லை போட மாட்டங்களே..? அடிக்கிறதெண்டு நீங்களோ பொலிசுக்கு அறிவிச்சனிங்கள்?”

“இல்லை… அவர் ஒருக்கால் அடிச்ச பொழுது எனக்கு காது வெடிச்சு நான் சாகக் கிடந்தனான். ஆஸ்பத்திரியிலை இரண்டு மாதத்துக்கு மேலை இருக்க வேண்டி வந்திட்டுது. அதுதான்…… மற்றது எங்கடை பக்கம் அக்கம் வீட்டு டொச் சனங்களும் பொலிசுக்கு அறிவிச்சிட்டுதுகள்.”

“அதுக்கு ஒரு நாளும் ஆறு வருசம் தண்டனை குடுக்க மாட்டாங்கள்.

வேறையென்ன நடந்தது என்று சரியாச் சொன்னால்தான் நான் ஏதும் உதவி செய்யலாம்.”

“அந்த டொச் சனத்துக்கு விசர். இவர் எங்கடை மகளோடை பிழையாப் பழகிறதெண்டும் சொல்லிப் போட்டுதுகள்.”

“பிழையா எண்டு…..”

“பள்ளிக்கூட ரூர் ஒண்டுக்கும் விடுறதில்லை. பள்ளிக்கூட நீச்சல் வகுப்புக்கு விடுறதில்லை. பள்ளிக்கூடம் தவிர்ந்த வேறையெந்த இடத்துக்கும் விடுறேல்லை. சினேகிதப் பிள்ளையளோடை பழக விடுறதில்லை……”

“அது பிழைதான். அதுக்காண்டி…”

“அதோடை அவர் பிள்ளையோடை பாலியல் தொடர்பு வைச்சிருக்கிறாரெண்டும் பொய் சொல்லிப் போட்டுதுகள். அதை அறிக்கையா எழுதி என்ரை மகளட்டையும் சைன் வாங்கி யூகன்ட்அம்ற்றிலை (Youth wellfare office) குடுத்திட்டுதுகள்.”

“அவர் சொந்தத் தகப்பன்தானே…”

“ஓம்.”

“அப்படியெண்டால் ஏன் அந்தச் சனங்கள் அப்பிடி எழுதினதுகள். சில நேரத்திலை அவர் பிள்ளையை வெளியிலை விடாமல் இருக்கிறதாலை அதுகளுக்கு அப்பிடியொரு சந்தேகம் வந்திட்டுதோ தெரியாது. உப்பிடி சில நேரத்திலை நடக்கிறதுதான். ஒண்டும் நடக்காமலே நடந்தது மாதிரியான சந்தேகங்களில் வழக்குகள் வாறதுதான். இதாலை பிள்ளையளைப் பெற்றோரிட்டையிருந்து பிரிச்செடுக்கிற அவலங்களும் நடந்திருக்கு. எங்கையாவது ஒரு சொந்தத் தகப்பன் தன்ரை மகளோடை பிழையா நடப்பானோ? நீங்கள் யோசிக்காதைங்கோ. எப்பிடியாவது லோயரோடை கதைச்சு அப்பீல் எடுத்தால் இதிலை வெல்லலாம். இது ஒரு பிழையான வழக்கு.”

இப்போது அவள் முகத்தில் ஒரு சிறிய மாற்றம். எனது பேச்சில் இருந்து.. கணவர் அப்படியொரு அநியாயமான தப்பைச் செய்திருக்க மாட்டாரென்ற பேருவகை. அவர் விடுவிக்கப் பட ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை.

எல்லாம் சில கணங்களுக்குத்தான். சடாரென்று அவள் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. “அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. விடமாட்டினமாம். கடைசியா நடந்த வழக்குக்குக் கூட என்னை உள்ளை விடேல்லை. லோயர்தான் போனவர்.” சத்தமெடுத்து அழுதாள். தேநீர்க்கடையில் இருந்த அனைவரது தலைகளும் ஒரு தரம் எம்பக்கம் திரும்பி மீண்டன.

“எங்கை உங்கடை அந்த மகள்? அவ குழந்தைப்பிள்ளையில்லையே! அவவுக்கு 16 வயது. அவ தன்ரை அப்பா தன்னோடை அப்பிடிப் பிழையா நடக்கேல்லை எண்டு கோர்ட்டிலை சொன்னால் பிரச்சனை முடிஞ்சுதுதானே…?”

“அவவிட்டை அந்த விசர்ச் சனங்கள் கையெழுத்து வேண்டிக் குடுத்துட்டுதுகள். இதாலை அவவுக்கும் கெட்ட பெயர். தமிழ்ச்சனங்களுக்கு முன்னாலை தலை காட்டேலாதாம். அதுதான் அந்த நகரத்தையே விட்டிட்டு இங்கை வந்திட்டம். இப்ப அவ பள்ளிக் கூடத்துக்குப் போட்டா.”

அப்படி ஏன் அந்த யேர்மனியச் சனங்கள் செய்யப் போகுதுகள்? என்ற கேள்வி எனது மூளையின் ஒரு புறத்தைப் பிறாண்டிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் மதுவைச் சமாளித்து என்னாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியளித்து அனுப்புவதற்கிடையில் நான் களைத்து விட்டேன்.

வீட்டுக்கு வந்த பின்னும் மனசுக்குள் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. யேர்மனியக் குடும்பங்களில் இப்படியான வழக்குகள் சில தடவைகள் வந்திருக்கின்றனதான். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் இது புதிய வழக்கு. ஒரு தந்தையால் தனது விந்திலிருந்து உருவான தனது குழந்தையை இப்படிப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட்படுத்த முடியுமா..?

இந்தக் கேள்விக்கு விடை தேடுமுகமாக எனக்குத் தெரிந்த பல அப்பாக்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். தம்பியின் மனைவியை, அண்ணனின் மகளை, மனைவியின் தங்கையை… என்று சபலப்படும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள்தான். ஆனால் சொந்த மகளையே….! முடியாது ஒரு நாளும் ஒரு தந்தையால் இது முடியாது. இது பிழையான வழக்கு. அநியாயமாக சாருகன் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கிறான். அவனை எப்படியும் ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும்.

தெரிந்த ஒரு யேர்மனிய வழக்கறிஞரோடு இது பற்றிப் பேசினேன். இப்படியானதொரு வழக்கு அவருக்குப் புதிதாக இருக்கவில்லை. ஆனாலும் நான் தமிழ்த் தந்தையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அவரை யோசிக்க வைத்தது. அப்படியொரு தவறை அந்தத் தந்தை செய்யாத பட்சத்தில், சரியான முறையில் முயற்சி செய்தால் மீட்கலாம் என்றார்.

ஒருவித நம்பிக்கையோடு மதுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமான கடிதங்கள், கோர்ட் தீர்ப்புகள் எல்லாவற்றையும் கொண்டு எனது வீட்டுக்கு வரச் சொன்னேன். வந்தாள்.. அதே வாட்டம். அதே ஏக்கம். எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டதான சோகம். மகன் மட்டும் கொஞ்சம் துப்பரவாக வெளிக்கிடுத்தப் பட்டிருந்தான்.

இருக்க வைத்து தேநீர் தயாரித்துக் கொடுத்து கதைப்பதற்குள் பலமுறை ஒப்பாரி வைத்து விட்டாள். அவள் கொண்டு வந்த பேப்பர் கட்டுக்குள்ளிருந்து யூகன்ட்அம்ற்றிலிருந்து (Youth wellfare office) வந்த 12 பேப்பர்கள் ஒன்றாகப் பின் பண்ணப் பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பார்த்தேன். அது பதினொரு மாதங்களின் முன் சாருகனின் வழக்கின் தீர்வையொட்டி எழுதப் பட்ட ஒரு கடிதம். படிக்கத் தொடங்கினேன்.

“இலங்கையைச் சேர்ந்த சாருகன், மதுமிதா தம்பதிகள் இங்கு யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். இவர்களது அரசியற் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதின் காரணமாக இவர்களுக்கு யேர்மனியில் வதிவிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

தற்போது 15வயதுடைய இவர்களின் மகள் சகானா, கருச்சிதைவு செய்து கொள்வதற்காக, இரண்டு தடவைகள் அவளது தந்தை சாருகனால் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளாள். மருத்துவருக்கும் அங்கு உள்ள மற்றைய உதவியாளர்களுக்கும் இது சம்பந்தமாகப் பலத்த சந்தேகம் ஏற்படவே கருவிற்கு யார் தந்தை என்ற டி.என்.ஏ(DNA) பரிசோதனையை மேற் கொண்டுள்ளார்கள். (இந்தச் சோதனைக்கான ஒரு தரத்துச் செலவு 750யூரோக்கள்.) இச் சோதனையின் போது சகானாவின் வயிற்றில் உள்ள கருவுக்குத் தந்தை அவளின் தந்தையாகிய சாருகன் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனாலேயே சாருகன் தற்போது சிறையில் வைக்கப் பட்டுள்ளார்.”

சரியான ஆதாரம் இருந்தும் கூட திருமதி சாருகன் இதை ஏற்றுக் கொள்கிறாரில்லை. ஒரு சட்டபூர்வமான உண்மையை ஓப்புக் கொள்ள மறுக்கும் சுபாவம் கொண்டவராக திருமதி சாருகன் இருப்பது பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதனால் சகானாவின் பாதுகாப்புக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

சகானா தனது தந்தையாலேயே பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளாள். அதனால் மனஉளைச்சல் பட்டுக் கொண்டிருக்கும் அவளை அரவணைக்க வேண்டிய அவளது தாய் மதுமிதா, மகளுக்குத் தாயாக மகளின் பக்கம் நிற்காது, கணவனுக்கு மனைவியாக நின்று கணவனை நியாயமுள்ளவனாகக் காட்ட முனைவது பெரும் விசனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இத்தனைக்கும் சாருகன் தனது மனைவியான மதுமிதாவை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமளவுக்கு மூர்க்கத்தனமாகப் பல தடவைகள் தாக்கியிருக்கிறார். எந்தக் கட்டத்திலும் மதுமிதாவை யேர்மனிய மொழி கற்றுக் கொள்ள சாருகன் அனுமதிக்கவில்லை. இத்தனை வருடங்கள் யேர்மனியிலிருந்தும் யேர்மனிய மொழியை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியாதவராகவே மதுமிதா இருக்கிறார்…….”

எனக்கு மேற்கொண்டு வாசிக்க முடியாமல் இருந்தது. அந்த அறிக்கையில் எழுதப் பட்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் என்னை அதிர வைத்தன. நிமிர்ந்து மதுவைப் பார்த்தேன். அவள் “அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்.” என்பதை ஒரு மந்திரம் போல உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.

புத்தி பேதலித்தவள் போலப் புலம்பிக் கொள்ளும் இவளிடம் போய் “டீ.என்.ஏ(DNA) பரிசோதனை மூலம் உனது மகளின் கருவுக்கான காரணி உனது கணவன்தான் என்பது நிரூபணமாகியிருக்கும் போது இனி இவ்வழக்கில் வெல்வதற்கு எதுவும் இல்லை” என்பதையும் “உனது கணவனுக்குச் சரியான இடம் அதுதான். அவன் அங்கேயே இருக்கட்டும்.” என்பதையும் எப்படிச் சொல்வது..?

யோசனை மேலிட, அந்தக் கடிதத்தை நான் அப்படியே மேசையில் வைத்து விட்டேன். அவள் மீண்டும் பொல பொலவென்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட “அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார். அவரட்டை நேரே பார்த்து “அப்பிடிச் செய்தனிங்களோ…?” எண்டு கேட்கப் போறன்……” புலம்பிக் கொண்டிருந்தாள்.

– 15.11.2004

சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யில் கல்வி கற்றவர். கணிதத் துறையில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *