(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அவள் மஞ்சளையும், குங்குமத்தையும், இழந்தவள்தான். ஆனால் அழகாகத்தான் இருந்தாள். அவள் பெயர் அமிர்தம்தான்! ஆனால் விஷமாகக் கருதப்பட்டாள்.
அவள் ‘அமிர்தம்’. ஒரு சீமானின் செல்வப் புதல்வி. அந்த சீமான் ஒரு சனாதனி, அவளுக்கு மணமான அண்ண ன் ஒருவன் இருந்தான். அவளுக்குச் ”சிவபெருமானின் திருவருளை” முன்னிட்டுத்தான், சோதிடர்கள் குறிப்பிட்டபடி கன்னியா லக்கினத்தில் கலியாணம் நடந்தது. பாவம்! அவளுடைய கணவன் கலியாணமான ஒரு வருடத்திற்குள்ளாகச் ‘சிவலோக பதவியை’ அடைந்து விட்டான்!
மாதங்கள் சில சென்றன. மாதவனின் மனைவி அமிர்தத்தின் அண்ணியாரும் ‘எம்பெருமான் திருவடி நீழலை’ அடைந்து விட்டாள்!
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மாதவனுக்கு மறுமணம்! அவன் ‘மாதவம் தான் செய்திருக்க வேண்டும். இந்த இந்து மதத்திலே ஆணாகப் பிறப்பதற்கு! பெண்ணாகப் பிறந்திருந்தால் மறுமணம் செய்து கொள்ள அவளுக்கு உரிமை இருந்திருக்குமா “எந்தையர்” ஏற்றுள்ள இந்து மதத்திலே!
மேனாட்டிலே, காலையில் மணவிலக்கு, மாலையில் மறுமணம், என அவள் படித்திருக்கிறாளே. ஆனால் இங்கோ?…கணவன் இறந்தாலுங்கூடக் காரிகைக்கு உரிமை கிடையாது மறுமணம் செய்து கொள்ள! அதற்குப் பதிலாகக் கட்டுப்பாடு, கைம்மையை மேற்கொள்ள, அவள் அண்ணனுக்கு மணம் நடந்ததல்லவா? அந்தக் கலியாணக் கூட்டத்திலே அவளைப் போல சில ‘அபசகுனங்களை’த் தவிர மற்றோர் தங்கள் கணவன்மாருடன் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்தாள். அவள் மிகவும் மனம் நொந்து கொண்டாள், இந்தச் சனியன் பிடித்த இந்து மதத்திலே பிறந்ததற்கு, சோகக்கடலில் மூழ்கினாள்! –
மாதவனுக்கு, அவளுக்குப் பிறகு மனைவியை இழந்த அவளது அண்ண னுக்கு மறுமணம், ஆனால் அவளுக்கோ…?
அமிர்தத்துக்கு வயது ஒன்றும் அதிகமாகி விடவில்லை. பதினெட்டு வயதுதான் இருக்கும். சமூகத்தின் கட்டுப்பாடுகளைத் திருட்டுத்தனமாக உடைக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டிருந்தாள். ஆனால் அச்செய்கையே ‘இறுதி’யைக் கொடுக்கும் என்று அவள் நினைக்கவேயில்லை.
அவள் இருக்கும் எதிர் வீட்டுக்கு யாரோ புதிதாகக் குடித்தனம் வந்திருந்தார்கள். அந்த வீட்டிலே உள்ள ஒரு வாலிபனின் வனப்பு அமிர்தத்தை அகமகிழச் செய்தது; அவன் ஆட்டத்தைச் சொல்ல முடியாது. அவன் ஒரு காமுகன், கயவன், அது அவளுக்கு எப்படித் தெரியும்? அவன் அழகில் அவள் மயங்கினாள்.
கோரிக்கையற்றுக் கிடக்கும் அக்காரிகையைப் பற்றி அமிர்தத்தைப் பற்றி அவன் அறிந்து கொண்டான். ‘தூண்டி முள்ளைப் போட்டான்’ ‘தூண்டிலிலே மாட்டிக் கொண்டாள்’ அவள். அவளும் மனிதப் பிறவிதானே? அவளுக்கும் இளமையுணர்ச்சி என்பதில்லையா?
சந்திப்புகள் நடந்தன. இதற்குள் ஊரிலேயுள்ள சந்து பொந்துகளிலும் விஷயம் பரவியது. அமிர்தத்தின் தகப்பனார் சோமு முதலியாரின் குலப் பெருமைக்குக் கேடாக வந்தாள் அமிர்தம் என்பது தலைமறைவுப் பேச்சு! அதுதான் கடைசி சந்திப்பு போலும். அமிர்தம் அவனைக் கேட்டாள் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட, அவன் நாளை சொல்லுகிறேன் என்று சொல்லிச் சென்றவன்தான்!
எதிர்வீடு ஒருநாள் காலியாவதைக் கண்டாள் அமிர்தம். அவனுக்கு–வாலிபனுக்கு கலியாணத்திற்கு வேற்றூர் பிரயாணம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். இதுவரையில் வம்பளப்புப் பேச்சில் கவலையில்லாதிருந்தும், அவன் மீது நம்பிக்கையும் கொண்டிருந்த அவளுடைய மனது தூண்டிலில் மாட்டிக் கொண்ட கெண்டைபோல் துடித்தது.
அவள் படித்திருக்கிறாள், ஆண்கள் தேனீக்கள், பெண்கள் மலர்கள் என்று. இருந்தும் அவன் வசமானாள். உலகத்தில் எது நடப்பதில்லை? விளக்கொளியை விரும்பும் விட்டில் பூச்சிகள் அதன் அருகிற் சென்று வெம்மையால் மாய்வதில்லையா? “காதலுக்காக எதையும் ஏற்றுக் கொள்வேன்! எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அஞ்சேன்” என்று அவன் சொன்னதுண்டு. அந்த அபலையோ, அவன் பேசுவது சூதுரை, நெடுங்காலமாகப் பெண்களை ஆண்கள் ஏய்க்கக் கற்றுக் கொண்ட பாடத்திலே ஒரு பகுதி என்று அறிந்து கொள்ள வில்லை. வைதீக அகராதியிலே, “விதவை” என்ற வார்த்தைக்குள்ள பொருள் வேறு, அறிவு உலகிலே அதற்கு அர்த்தம் வேறு என்றுகூட அவன் விளக்கினான். அவ்வளவும் வெறும் பாவனை, என்பதை அவனுடைய சொல்வேறு செயல்வேறு ஆன பிறகே அவள் உணர முடிந்தது! காலங்கடந்த முடிவு!
இன்பம் அடையலாம் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்த அவள் துன்பந்தான் அடைந்தாள். சமூகக் கட்டுப் பாட்டைத் திருட்டுத்தனமாக முறித்தெறிய முயன்ற அவளை அழித்துச் சமூகத்தின் அமைப்பு வெற்றி கொண்டது. அதோ அத்தி மரத்தடியிலே அவளின் உடல் காற்றிலே ஊசலாடிக் கொண்டிருக்கிறது! நம் சமூகம் சீர்படுமா?
– 04.11.1945, திராவிடநாடு.