அவள் மட்டும் துணையாக!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 13,466 
 
 

“”கவிதா, எங்கே போயிருந்தே நீ? மறந்துட்டியா? இன்னைக்கு நம்ம பேரனோட பிறந்த நாள் விழா ஆச்சே! நீ இன்னும் ரெடி ஆகலையா?” டிப் டாப்பாக உடையணிந்து வாசலில் நின்று கொண்டு அப்பொழுதே உள்ளே நுழைந்த அவர் மனைவியிடம் கேட்டார் ராகவன்.

“”அதெப்படி மறக்க முடியும். அதுக்கு தானே கோவிலுக்கு போய் நம்ம பேர குழந்தையோட பேருல அர்ச்சனை செஞ்சிட்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டே குங்கும பிரசாதத்தை அவரிடம் கொண்டுதந்தாள்.

அதை பக்தியோடு வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டே, “”சரி சரி வா. பிறந்த நாள் விழாவுக்கு நேரமாகுது” என்றார்.

“”நான் ரெடியாதான் இருக்கேன். உங்களுக்கு காபி ஏதாவது வேணுமா? கொண்டு வரட்டுமா?” பரிவோடு கேட்டாள் கவிதா.

“”கொஞ்சம் குடும்மா. ஆனா சீக்கிரம் வா நேரமாகுது. விழா தொடங்கிட போறாங்க” என்று அவசரப்படுத்தினார்.

தினமும் கை கால் வலி என்ற புலம்பி கொண்டிருப்பவர் இன்று பேரனுக்கு பிறந்த நாள் என்றதும் எங்கிருந்து தான் இவ்வளவு உற்சாகம் வந்து தொற்றிக் கொண்டதோ? நீண்ட நாள் ஆகிறது இவரை இப்படி உற்சாகமாக பார்த்து. மனுஷன் எவ்வளவு நொந்து போயிருந்தார். “”இந்த வயசுல பேரக்குழந்தையோட விளையாடுறதை விட வேறு என்ன சுகம் இருக்க முடியும். இது ஏன் நம்ம பசங்களுக்கு புரிய மாட்டேங்குது?” சமையல் அறையில் வழக்கம் போல் புலம்பிக் கொண்டே காபியை போட்டாள்.

“”கவிதா, பேரனுக்கு வாங்கின தங்க சங்கிலி எங்கே வெச்சிருக்கே?” ஹாலிலிருந்து குரல் கொடுத்தார்.

“”அங்கேயே தாங்க இருக்கு. நல்லா பாருங்க” பதிலுடன் காபியும் கொண்டு வந்தாள்.

“”பேரனுக்கு புது துணி வாங்கினோமே? அது எடுத்துக்கிட்டியா? எதையும் மறந்து விட கூடாது” என்ற எண்ணத்துடன் கேட்டார்.

“”எல்லாம் பத்திரமா பீரோ உள்ளேயே தான் இருக்குங்க. முதல்ல காபிய குடிங்க ஆறிடப் போகுது” சொல்லிக் கொண்டே புடவையை சரி செய்துக் கொண்டாள்.

“”சரி வா வா விழா தொடங்கிட்டாங்களோ? என்னவோ?” என்று ராகவன் அவசர அவசரமாக கணினியை உயிர்பித்தார்.ள்ந்ஹ்ல்ங்-ல் பேரனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை காண இருவரும் கணினி முன் அமர்ந்தார்கள்.

திடீரென்று மின்வெட்டு ஏற்பட இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஒரே மகனென்று செல்லமாக வளர்த்து படிக்க வைத்து நல்ல வேலை கிடைத்ததும் தனக்கென்று ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டான். ஒரே மகனின் விருப்பத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அவன் விருப்பப்படியே திருமணம் செய்தனர்.

திருமணமான ஒரு வருடத்திற்குள் வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் இருவரும் அங்கே சென்று தங்கிவிட்டனர்.

அவ்வப்போது பணம் மட்டும் வந்ததே தவிர, அவர்கள் வரவே இல்லை. பணம் அனுப்புவது மட்டுமே தங்கள் கடமை என்று நினைகிறார்களே தவிர, அந்தப் பணத்தையும் தாண்டி அன்பு, பாசம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை அவர்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை. பணத்தைச் சம்பாதிக்க செலவழிக்கும் நேரத்தில் சில நொடிகள் உறவுகளுடன் செலவழிக்க மறந்து விடுகிறார்கள்.

பின் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தபோது கூட, “”இந்த ஊரு குளிரை உங்களால தாங்க முடியாது”ன்னு சொல்லி பேரனை கூட முக நூலில் காட்டினார்கள்.

இன்று செல்லப் பேரனோட முதல் பிறந்த நாள் விழா கொண்டாட போவதாகவும் அதை ள்ந்ஹ்ல்ங்-ல் நேரடியாக பார்க்கலாம் என்று மகன் தொலைபேசியில் சொன்னதும் உற்சாகமானார் ராகவன்.

மின்வெட்டால் அதிர்ச்சி அடைந்த ராகவன், “”குழந்தையோட பிறந்த நாளை நேரில் பார்க்க முடியலைன்னாலும் இதுலையாவது பார்க்கலாமுன்னு நினைச்சேன். நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான் போல இருக்கு” என்று அவர் புலம்பிக் கொண்டிருக்க, அந்தப் புலம்பலை பொறுக்க முடியாமல் கரண்ட் வந்தது.

“”அப்பாடா கரண்டு வந்துரிச்சு. எங்கே பேரக் குழந்தையோட பிறந்த நாளை பார்க்க முடியாம போயிடுமோன்னு நினைச்சேன்” உற்சாகமாக குழந்தையை போல் துள்ளி ஓடி மீண்டும் கணினியை இயக்கினார்.

“”நல்ல வேளை கரண்டு வந்துரிச்சு. மருமகளையும் சுரேஷையும் பார்த்து கூட ரொம்ப நாளாச்சு… எப்படி இருக்காங்களோ? என்னவோ?” கரண்டு வந்த சந்தோசத்தில் உற்சாகமானாள் கவிதா.

ஆனால் எதிர் முனையில் யாரும் வரவில்லை.

இன்னும் விழா தொடங்கலை போல என்று அவரை அவரே சமாதானப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்புடனும் காத்திருந்தார்கள்.

ஆனால் காத்திருந்து காத்திருந்து நேரம் போனதே தவிர, அவர்கள் மகனோ பேரனோ கணினியில் வரவில்லை.

உடல் வலியையும் கை கால் வலியையும் பொருட்படுத்தாமல் பேரனுக்கு பிறந்த நாள் என்று ஒரு வாரமாக கடை கடையாக ஏறி இறங்கி பேரனுக்கு இது பிடிக்குமா அது பிடிக்குமா என்று பார்த்துப் பார்த்து ஆசை ஆசையாய் பரிசுப் பொருட்களையும் துணிமணிகளையும் வாங்கி பேரனிடம் காட்ட நினைத்தவர் இப்படி சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பதை பார்த்து மனமுடைந்து போனாள்.

நிலைமையை உணர்ந்து கொண்ட கவிதா, “”அவங்க ஊர்லயும் கரண்டு இல்லையோ என்னவோ? நேரமாச்சு வாங்க சாப்பிடலாம்” என்றாள்.

உண்மையைப் புரிந்து கொண்ட அவரும், அதை ஆமோதிப்பது போல், “”நீ சொல்றதும் சரி தான் கவி” சொல்லிக் கொண்டே,”” பேரனை இன்னைக்கும் பார்க்க முடியலை, ஆசை ஆசையாக அவனுக்காக வாங்கிய பொருட்களை அவனுக்கு காட்ட முடியலை” என்கிற வருத்தத்துடன் சோபாவில் இருந்து எழுந்தார்.

“”ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் கவி, எனக்கு நீ மட்டும் துணையாக இருந்த போதும் நான் என்னோட மிச்ச மீதி வாழ்க்கையை சந்தோசமா வாழ்ந்துடுவேன்”

தொண்டையை அடைக்கும் துக்கத்துடன் சொன்ன அவரைப் பார்த்து, “”நான் எங்கே போகப் போறேன். உங்களைத் தவிர வேற யாரு இருக்கா எனக்கு?” என்று அவர் தோளில் ஆதரவாக சாய்ந்தாள்.

– கோ.பிரபாவதி (ஜூன் 2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *