ரேவதி மிக அவசரமாக வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.
“அம்மாடி இன்னைக்கு அந்த கல்யாண பெருமாள் கோவிலுக்கு போகணும் சிக்கிரம் வந்துடுமா.”என ரேவதியின் அம்மா மங்களம் கூற.
“அம்மா எனக்கு இந்த கோவில், புஜை இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, வேணா நீ போயிட்டு வா என்ன கூப்பிடாத” என கூறி ரேவதி வேலைக்கு சென்று விட்டாள்.
ரேவதி ஒரு தனியார் பள்ளியில், ஆசிரியர் வேலை பார்க்கிறாள்.
மாலை, மங்களம் தனது பக்கத்து வீட்டு தோழி காமாட்சியுடன் கோவிலுக்கு சென்று கல்யாண பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் இட்டார்.
அப்போது அங்கிருந்த இரண்டு பெண்மணிகள் , “அதோ பருடி அந்த அம்மாவும் தன் பொண்ணு கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்னு தான் விளக்கு போடுறாங்க” என
ஒரு பெண் கூற மற்றொரு வரோ,
“அடி போடி அந்த கூத்த ஏன் கேட்க, அந்த அம்மா பொண்ணுக்கு கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகுது, இப்போ புருஷன்ட்ட சண்ட போட்டு அம்மா விட்டுக்கு வந்து 2வருஷம் ஆகுது”என அந்த இரண்டாவது பெண்மணி கூற.
“என்னக்கா சொல்லுற? அப்படியா, என்ன பிரச்சனையாம்” என முதல் பெண் கேட்க.
“என்ன பிரச்சனை எல்லாம் தெரியாது , ஆனா அந்த பையன பார்த்த நல்ல பையனா அமைதியா இருப்பான், அவனும் இரண்டு, மூணு தடவை கூப்பிட்டு பார்த்தான், இவங்க மக தான் திமிர் புடிச்சு போக மாட்டேன்னு சொல்லிட்டு”- இரண்டாவது பெண்.
“என்னக்கா என்னால நம்ப முடியல கா” முதல் பெண்.
“அடியே போடி இப்போ புருஷன டைவர்ஸ் பண்ணிட்டு தான் இஷ்டப்படி சுத்துறதுதான் பேஷன் ,அதுகள சொல்ல கூடாது வளர்த்த வளர்ப்பு அப்படி”- இரண்டாவது பெண்.
என இருவரும் பேசிக்கொண்டிருந்தது, மங்களம், காமாட்சி காதில் விழ, மங்களம் மனமுடைந்து அந்த இடத்திலே தூணில் சாய்ந்து விட்டார்.
“ஏண்டிகளா நீங்க எல்லாம் கோவிலுக்கு சாமி கும்பிட வர்றேளா இல்லை, அடுத்தவா வீட்டு கதைய பேச வர்றேளா, அவா வீட்டு விஷயத்தை விட்டு உங்க வீட்டு காரியமா சாமி சேவிச்சுட்டு போங்கோ, மனசு பூரா அழுக்க வைச்சுட்டு வந்துட்டேள் விளக்கு போட, ச்சே இப்படியே பேசிட்டு திரிஞ்சேள் அவா சாபம் உங்கள சும்மா வுடாதிடி” என இருவரையும் காமாட்சி தனது பாசையில் திட்டி அனுப்பி விட்டாள்.
மங்களம் கண்கள் குளமாக இருக்க. “இதோ பாருடி அவா கிடக்கா பேசுறவா பேசின்டே தான் இருப்பா நீ கவலை படாத ஒம் பொண்ணுக்கு நல்ல வரனா அமையும் நீ வாடி” என காமாட்சி மங்கலத்தை அழைத்து கொண்டு வீட்டிற்க்கு வந்துவிட்டார்.
மாலை நேரம், ரேவதி “அம்மா எனக்கு தலைவலியாக இருக்கு ஒரு டீ தா மா” என கேட்டு விட்டு ரேவதி உடைமாற்ற சென்று விட்டாள்.
பின் தயாராகி ஷோபாவில் அமர்ந்த ரேவதியிடம் டீ யை கொடுத்தாள் மங்களம்.
தன் தாயின் முகம் சரியில்லை என்பதை அறிந்த ரேவதி அவளிடம் காரணம் கேட்க , கோவிலில் நடந்த அனைத்தையும் கூறினாள்.
“அதனால, நீ எத்தனை நாள் இப்படி தனியாக இருப்ப? நீ ஒரு கல்யாணம் பண்ணிட்டனா இவங்க எல்லாரும் பேசுறத விட்டுரு வாங்க , உனக்காக இல்லாட்டாலும் எங்களுக்காக நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோமா” என மங்களம் கூறவும்.
“ஏன் மா ஏன்? ஊர் ஆயிரம் பேசும், ஆனா எனக்கு மட்டும் தான் நான் அனுபவிச்ச கொடுமை தெரியும்.. என் வலியையும், வேதனையையும் யாருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை, தயவு செய்து இன்னொரு கல்யாணத்த பத்தி பேசாத” என கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் ரேவதி.
அறைக்கு சென்று அப்படியே கட்டிலில் சாய்ந்தாள் .அவளை அறியாமல் கண்ணில் நீர் திவலைகள், அவள் பழைய கால நிறைவோடு வழிந்தது,
ரேவதி கல்யாண வாழ்க்கை முதல் ஆறுமாதம் நன்றாக இருந்தது, அதன் பின் அவள் அத்தை மற்றும் கணவன் சொந்தங்கள் குழந்தை இல்லாததை பற்றி கேள்வி கேட்க முதல் ஒரு வருடம் அதை பெரியதாக , கணவன் மனைவி இருவரும் எடுத்து கொள்ள வில்லை. ஆனால் மாமியார் விடுவதாக இல்லை அதையே காரணமாக கூறி ரேவதியை கரித்துக்கொட்ட ஆரம்பித்து இருக்கிறார்.
ரேவதி என்ன செய்வது என தெரியாமல் ,தன் கணவனை அழைத்திருக்கிறாள் மருத்துவமனைக்கு… அவரும் வேலையை காரணம் காட்டி , இவளை மட்டும் போக சொல்லி இருக்கிறார்.
(இந்த உலகம் அதை தானே செய்யும் குழந்தை இல்லை என்றால் பெண்ணை மட்டும் தானே குறை சொல்லி ஒரு பட்டம் கொடுக்கும்)
ரேவதியும் வேறு வழியின்றி, மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் அவளுக்கு எந்த குறையும் இல்லை.. ஒரு தடவை உங்கள் கணவரையும் அழைத்து வருமாறு கூறினார் மருத்துவர்.
ரேவதி மருத்துவர் சொன்னதை , கணவரிடம் சொல்ல .. அவர் அவளிடம் பரிசோதனைக்கு வர மறுத்துவிட்டார்.. இருந்தாலும் ரேவதியும் நல்லது நடக்கும் என காத்திருந்தார்.
ஆனால், ரேவதியின் கணவர் தனியாக பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு குறை என்று தெரிய வர அன்றில் இருந்து பிரச்சனை ஆரம்பித்தது… அவர் குறையே அவருக்கு தாழ்வுமனப்பான்மையை உருவாக்க, தினமும் சண்டை பிரட்சனை, அடி என்று அவளுக்கு வாழ்க்கையே நரகமாகி விட்டது.. இருப்பினும், தன் கணவன் மனதை சரி செய்து சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார்கள்… அதன் பயன் அவள் வயிற்றில் 4 குழந்தைகள் உருவாகியது,
மாதம் மூன்று ஆனது, அப்போது தான் அது நடந்தது ஏற்கனவே நடத்தப்பட டெஸ்ட்கள், மருந்துகளால், அவளது கர்ப்பபை வலுவிழந்து விட்டது அதனால் இந்த குழந்தைகளை சுமக்க இயலாமல் இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிர்க்கு ஆபத்தான நிலையில் அந்த குழந்தைகள் வெளியேடுக்கப்பட்டது.
இதனால் மேலும் அவளுக்கு அவள் கணவன், மற்றும் மாமியாரால் தேவையில்லாத பிரச்சனைகள் வர வேறு வழியின்றி தன் மீது சிறிது கூட அன்பில்லாத, சுயநலம் பிடித்த அவரிடம் இருந்து பிரிந்து வந்து விட்டாள்.
நினைவுகளுடன், உறங்கிபோனாள். நாட்கள் செல்ல…தன் பெற்றோர்களின் வற்புறுத்தல் மற்றும், அவர்கள் நிம்மதிக்காக ஒரு முடிவெடுத்து அவர்களிடம் சம்மதம் தெரிவித்தாள்.
அவளுக்கு ஒரு வரன் வர அதை நிராகரித்து விட்டாள்.
“ஏண்டி இந்த மாப்பிள்ளைய வேண்டாம் ” என மங்களம் கேட்க.
“அம்மா அவருக்கு இது முதல் தாரம்… அவருக்குன்னு நிறைய கனவுகள் இருக்கும்… நான் எப்படி என் உடல்நிலை பற்றி எனக்கு தான் தெரியும், இன்று அவர் பெருந்தன்மையாட கட்டலாம் ஆனா நாளை அப்படி இருக்கும்னு சொல்ல முடியாது… அதனால, இரண்டாவது தரம் அதுவும் குழந்தை இருந்தால்.. அப்படி அமைந்தால், என் உடல் நிலைமையை பற்றி கூறியபின்பும் என்னை கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்பவர் வரட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கிடுறேன்” என கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
நாட்கள் நகர்ந்தது அவள் நினைத்தமாதிரி, அவள் உடல்நிலையை புரிந்த ஒரு நபர் கிடைத்து அவளுக்கு மறுமணம் நடந்தது.
விதவை மறுமணம் கூட இப்போது உள்ள காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் சமுதாயம், விவாகரத்து ஆன, பெண்ணை மிகவும் தவறாக பேசுகிறதே ஏன் ? அவள் எந்த நிலையில், எந்த நகரத்தில் இருந்து தப்பிக்க இந்த முடிவை எடுத்து இருப்பாள்,
இந்த சமுதாயத்தை பார்த்து அவர்கள் பேச்சுக்கு பயந்த பெண்கள் தங்கள் கல்யாண வாழ்க்கையில் நடக்கும் கொடுமைகளை தாங்கவும் முடியாமலும், அதை உதறி வெளியே வரமுடியாமலும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சமுதாயமே, அடுத்தவர் வாழ்க்கை பத்தின பேச்சுகள் நமக்கு வேண்டாம்… அவர்கள் வாழ்க்கைகான முடிவை நாம் நிர்ணயிக்க வேண்டாம்.
அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்…
N.Chandrasekharan நன்றி
கதை நன்று! இன்னும் கொஞ்சம் அதிகம் எழுதியிருக்கலாமமே! லென்ஸ்
அக்கா சூப்பர்.. தொடரட்டும் பணி