அவர்களின் மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 4,159 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தங்கம்மாவுக்கு அச்செய்தியைக் கேட்டதும் உலகமே திடீரென்று உடைந்து போனாற் போல அதிர்ச்சியுற்றாள். நிலைகுலைந்து போய் அப்படியே தள்ளாடியவளாய் திண்ணையிலே சரிந்தாள். வாயின் நடுக்கத்தை மீறிக் கொண்டு விசும்பல் ஒலித்தது. செல்லம், தங்கம்மாவிற்கு அருகாக வந்து, வாஞ்சை ததும்பி அவளின் முதுகிலே ஆதரவோடு தொட்டாள்.

“அக்கா….. ஆறுதல் சொல்லித் தீராத விஷயந்தான் ஆனாலும் என்ன செய்ய? இதைத் தாங்கிக் கொண்டு தான் ஆகவேணும் அ…க்கா…”

ஆறுதல் கூற வந்தவளுக்கே குரல் உடைந்தது. உடைந்த குரல் புலம்பலாய் இரைந்தது. தங்கம்மாவைக் கட்டிக் கொண்டே செல்லம் இப்போது விசும்பினாள்.

“அக்கா… கணேசன் உங்களுக்கு மட்டும் பிள்ளை யில்லை… இந்த ஊரிலே இருக்கிற ஒவ்வொரு தாய்க்குந் தான் மகன்…என்ன அருமையான பிள்ளை அவன். ஒழுக்கமும் துணிவுமுள்ள அவனுக்கு இப்படியொரு முடிவு வருமென்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?…….. கடவுளுக்குக் கூட கண்ணில்லாமல் போச்சுது?…” தலைதலையாய் அடித்துக் கொண்டாள் செல்லம்.

“அந்தப் பிஞ்சு உடம்பை எப்படியெல்லாம் சித்திரவதை பண்ணியிருக்கிறான்கள்… ராட்சதன்கள்….. மிருக வெறி பிடித்த அசுரன்கள்… இவங்களுக்கு என்றைக்குத்தான் அழிவு வருமோ? அயோக்கிய நாய்கள்….”

தங்கம்மா கேட்டாள்; உடலே தொய்ந்து, அந்தக் கம்பீரமான குரல் தளும்பிக் கலங்கிடக் கேட்டாள்;

“கணேசுவை எங்கை போட்டிருக்கிறாங்கள்? நான் போய் அவனை எடுத்துக் கொண்டு வர வேணும்’

சொல்லிக் கொண்டிருக்கையில் வெளியே ஆளரவச் சத்தம் கேட்டது. செல்லம் வெளிக்கதவைப் பார்த்தாள்.

மூன்று நான்கு இளைஞர்கள் கதவுப் பக்கமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களிடையே கணேசனின் தம்பி சுகுமாரனும் நின்றான். சுகுமாரனைக் கண்டதும் துடித்து அலறிக் கொண்டு எழுந்து போய் அவனைக் கட்டிக் கொண்டாள் தங்கம்மா. அவனுடைய விரிந்த மார்பில் மோதி மோதிப் புலம்பினாள்.

“அண்ணனைச் சுட்டிட்டாங்களாமடா… ஐயோ என்னுடைய அருமந்த செல்வத்தை இப்படி நாய்களும், நரிகளும் வேட்டையாட நான் விட்டிட்டேனடா சுகு. என்ரை ராசாவை இப்படி அனாதையாகச் செத்துப்போக விட்டிட்டமே…”

இளைஞர்களில் உயர்ந்த தோற்றத்தோடு நின்றவன் தங்கம்மாவிற்கு அருகாக வந்தான். தணிந்த குரலோடு அவளின் தோளிலே கையினால் தொட்டு ஆறுதல் படுத்தினான்.

“அம்மா … ஆறுதலாயிருங்க, கணேசனுடைய நண்பர்கள் நாங்கள், கணேசன் அனாதையைப் போலவோ, கோழையாகவோ செத்துப் போகவில்லை. பெரிய வீரனாக, லட்சியமொன்றிற்காக கடைசிவரை போராடி, இரண்டு சிப்பாய்களினுடைய கதையை முடித்து விட்டு ஒரு வீரனாகத்தான் அவன் செத்துப் போயிருக்கிறான். கடைசிவரை அவன் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாயிருந்தவன்…”

தங்கம்மா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. கண்ணீர் மல்குகிற கண்களிலே அந்த இளைஞன் தெளிவாக வந்து நின்றான். அவன் அங்கு அடிக்கடி வந்திருக்கிறான். அவளோடு வாஞ்சை ததும்ப “அம்மா அம்மா…” என்று கதைத்திருக்கின்றான் அந்த இளைஞ னான ரத்னா. ஒரு நாள் அவனைப் பார்த்து தங்கம்மா கேட்டாள்.

“உனக்கு சகோதரர்கள் இல்லையா தம்பி…?”அவன் சிரித்தான்.

“உங்களுடைய மகனும் எனக்குச் சகோதரன் தான், என்னைப் போல உள்ள எல்லோருமே எனக்குச் சகோதரர்கள் தான்…”

தங்கம்மாவிற்கு சிரிப்பாய் வந்தது. இதே போலத் தான் சிலவேளைகளில் கணேசனும் சொல்லுவான்,

“அது போலத்தான் எனக்கு நீங்களும் அம்மா தான்…”

தங்கம்மாவின் இதயத்தினுள் பெருமி தமும், வாஞ்சை யும் அவ்வேளையிலே ஆவேசத்தோடு பொங்கிற்று. மௌனமாகவே உணர்வு கொந்தளிப்புற அவனைப் பார்த்தாள்…

“எடே ரத்னா. நீ எப்பவும் எனக்கு மகன் தானடா…”

…தங்கம்மா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அந்த இளைஞனையே மௌனமாகப் பார்த்தவாறு நின்றாள்.

“அம்மா கணேசனைப் பொறுத்தவரை அவனுடைய வாழ்க்கை மிகப்பெருமையானது. என்றும் அவன் மறக்க முடியாதவன்… இதைத் தவிர இன்னொரு விஷயமும் இப்ப உள்ளது. கணேசனை வைத்து மற்ற எல்லோரையும் பிடிக்கிறதுக்கு இராணுவ அதிகாரிகளும், சி. ஐ. டிகளும் திட்டம் போட்டிருக்கிறார்கள்-கணேசன் உயிரோடை இருக்கும் வரை அதுக்கு கொஞ்சமும் இடங் கொடுக்கவில்லை… நாங்களும் இனி அதுக்கு இடங் கொடுக்கக் கூடாது…”

ரத்னா கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, தாழ்ப்பாள் போட்டு மூடியபின் மீண்டும் அவ்விடத்திற்கு வந்தான்.

“கணேசனை இந்தக் கிராமத்து எல்லையில் வைத்துத்தான் இராணுவம் சுற்றி வளைத்தது. ஆனபடியால் இந்தக் கிராமத்தில் அவனுடைய பிணத்தைக் கொண்டு வந்து போட்டு, தாங்களே இராணுவத்தினர் கொளுத்துவார்கள்….. அப்படிக் கொளுத்துகிற போது அவன் எந்தக் குடும்பத்துக்குரி யவன் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறார்கள்…”

ரத்னா சுகுமாரனை அர்த்தத்தோடு பார்த்தான்.

“…அடித்தோ மிரட்டியோ இந்தக் கிராம மக்களிட மிருந்து உண்மையை வரவழைக்க முடியாதென இராணுவத்தினர் அனுபவ ரீதியாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதோடு பயங்கரவாதத் தடுப்புச் சட்டப்படி இராணுவம் சுட்டுக் கொல்கிற எவரையும், எவ்விதமான விசாரணை இன்றியும் சுட்ட இடத்திலேயே தீயிட்டுக் கொளுத்தும் உரிமையும் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது…”

தங்கம்மா சுகுமாரனை இப்போது நோக்கினாள். தனது இறந்த மகனுக்காக, அவனது சடலம் எரிக்கப் படுகையிலே கடைசிமுறையாக அழுவதற்குக் கூட உரிமையில்லாமற் போய்விட்டதே என்று நினைக்கை யிலே இவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. குமுறிக் குமுறி அழ ஆரம்பித்து விட்டாள்.

கணேசன் வீரனாகவே இறந்தான். அவன் இறந்த பின்னர்தான் அவனது சடலத்தை தமது ஆயுதங்களால் குத்திக் கொதறியிருந்தனர் இராணுவத்தினர்.

அந்த மைதானத்திலே அவனது சடலம் வீசப்பட்டி ருந்தது. அவனது சடலத்தைச் சுற்றி துப்பாக்கிகளோடு இராணுவம். மைதானத்தைச் சுற்றி நிறையச் சனக் கூட்டம். அதிகமானோர் தாய்மார். தாய்மாரின் முகத்தையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டு நிற்கிற சி. ஐ. டி அதிகாரிகள்.

ஏளனமாகச் சிரித்தபடியே கணேசனின் சடலத்தின் மீது டயர்களைத் தூக்கிப் போட்டு பெற்றோலை ஊற்றிக்கொண்டிருந்தனர் இராணுவச் சிப்பாய்கள்.

மைதானத்தைச் சுற்றி நின்ற எல்லோரது கண்களிலும் கண்ணீர் மல்கிற்று. விசும்பலை அடக்கிக் கொண்டே அசைவற்று நின்றார்கள். கைகளைப் பிசைந்து கொண்டார்கள்.

சிப்பாய் தீக்குச்சியைத் தட்டிவைத்தான்.

செந்நெருப்பு, டயரின் பொசுங்கிய மணத்தோடு சுழன்று எழுந்தது.

“ஐயோ மகனே…”

தீனஸ்வரமாக எழுந்தது அந்த ஒற்றைக்குரல்.

சி. ஐ. டி அதிகாரிகள் மிகுந்த சந்தோஷத்தோடு அந்த ஒற்றைக்குரல் வந்த திசைக்கு விரைய…..

மறுகணமே,

“ஐயோ மகனே…” என்ற குரல்கள் ஒன்றாய், பத்தாய், நூறாய் அந்த மைதானமெங்கும் சீறிக் கொண்டே எழுந்தன. மைதானத்தில் நின்ற ஒவ்வொரு தாயும் அலறிய அந்தக் குரல் பேரொலியாய்த் தெறித்துக் கொண்டிருக்க சி.ஐ.டிக்களும், இராணுவ அதிகாரிகளும் அவசரமாக அங்கிருந்து குழப்பமும் அச்சமும் கலக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

– 1985

அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், முதற் பதிப்பு: டிசம்பர் 1985, தமிழோசைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *