“ஏங்க நம்ம குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைச்சிட்டுப் போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துவிட்டு. அப்புறம் ஆபீஸ் போங்க” என்று சொன்னாள் நீலா.
“போடி எனக்கு ஆபீஸ்ல அவசரமான வேலை இருக்கு டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா’ என்று சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ராஜன்.
ஆமாம் பிள்ளையின் பாடப்புத்தகத்தை வாங்கி கொடுக்க கூட முடயாமல் அப்படி என்னதான் ஆபீஸ் வேலையோ போங்க என்று எரிச்சலாய் சொன்னாள் நீலா. சிறிது நேரத்தில், நீலா சமையலை முடித்து விட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று புத்தகங்கள் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தாள்.
அப்போது ராஜனின் முதலாளியின் மனைவியும் அவரது குழந்தைகளும் பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள். பின்னாடியே. முதலாளியின் குழந்தைகளின் புத்தங்களைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தான் ராஜன்,
அவன் முன்னாடி போய் நின்றாள் நீலா. “இதுதான் அவசரமான வேலையா?” என்று கேட்டாள்.
ராஜன் பதிலே பேச முடியாமல் பேய் முழி முழித்தான்.
– ஜூலை 2011