மீன் தொட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 9,491 
 

“அப்பா..”

“என்னடா..”

“எனக்கு வேனும்பா..”

“திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா..?”

“எல்லா பிரண்ட்ஸ் வீட்லேயும் இருக்கு..”

“இந்தா..பாரு.. அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.. படிக்கிற பையன் நீ… அதையே பாத்துக்கிட்டு இருப்பே… படிப்புக் கெட்டுப் போகும்… தெரியுதா?..”

மோகன் ஆறாம் வகுப்பு இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிற பையன். நன்றாகப் படிப்பான். தன் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பான். கூடப்பிறந்தது ஒரு தங்கை மட்டும். அப்பா, தேவா, ஈபீ ஆபீஸில் கிளார்க். அம்மா, பாக்கியம், வீட்டோடு. சொந்த வீடு. எளிய இனிமையான வாழ்க்கை!

மோகனின் கண்களில் பனிப்படலம். முகம் வாடி விட்டது. சோர்வுற்றவனாய் பையையும், ரெடியாக இருந்த டிபன் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு, அம்மாவை ஏறிட்டு முறைத்து ஒரு பார்வை பார்த்து விட்டு, வெறுப்போடு ஸ்கூலுக்கு கிளம்பினான்.

தாய்க்குத் தெரியாதா தன் பிள்ளையின் ஏக்கம்? அவன் தன்னைப் பார்த்த பார்வையில் பொதிந்திருந்த அர்த்தத்தைப் புரிய முடியாதவளா அவள்? “நீ கையால் ஆகாதவள் தானே..”, என்பதை எவ்வளவு நாசூக்காய் தன் பார்வையால் தெரிவித்து விட்டுச் செல்கிறான்! அவளின் சதையும் ரத்தமும் தானே அவன்… கண்களில் கசிந்த நீரை முந்தானையால் ஒற்றிக் கொண்டாள்.

“ஏங்க… அவனும் தான் எத்தன நாளா கேட்டுக்கிட்டு இருக்கான்… வாங்கிக் கொடுத்தாதான் என்ன..? அப்படி என்ன கேட்டுட்டான்?.. அவன் வயசுப் பையன்க வீட்ல எல்லாம் இருக்காம்.. அதனால..” அதற்கு மேல் பாக்கியத்திற்கு வார்த்தைகள் வரவில்லை. தொண்டை அடைத்தது. நன்றாகத் தெரியும் தன் கணவரைப் பற்றி. யார் சொல்லியும் எதுவும் கேட்க மாட்டார். 15 வருட குடும்ப வாழ்க்கையின் அனுபவமல்லவா? அவராக எது செய்தாலும், அந்த முயலுக்குத் தான் நாலு காலு..! ஆனாலும் தன் பங்குக்கு கடனே என்று சொல்லி வைத்தாள் – பெத்த பாசமல்லவா?.

“பாக்கியம்.. டிபன் பாக்ஸ் ரெடியா?. நான் ஆபீஸ் போர வழியிலே மாசிலாமணி வீட்டுக்குப் போயிட்டுப் போரேன்.. அவங்க வீட்டுப் பை இங்க இருக்குல்லா.. அதைக்குடு.. எடுத்துட்டுப் போரேன்..” தேவா ஆபீஸ்க்கு ஆயத்தமானார்.

“வேண்டாங்க… அந்தப் பையில ஏதாவது போட்டுக் கொடுக்கனும். நான் பிறகு மோகன் கிட்ட கொடுத்து விடுறேன்..”

மாசிலாமணியும், தேவாவும் நல்ல நண்பர்கள். ஒத்த வயதினர். அதே போல் மாசிலாமணியின் மகன், குமாரும், மோகனும் உற்ற நண்பர்கள். இருவரும் ஒரே பள்ளிக்கூடம். ஒரே வகுப்பு.

மாசிலாமணியின் வீட்டை அடைந்த தேவாவை, பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த குமார் வரவேற்றான். குமார் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான்.

“அப்பா எங்கே?”

“நேற்று அப்பா ஒரு கண்ணாடி மீன் தொட்டி வாங்கிட்டு வந்தாங்க… அதப் பாத்துட்டு இருக்காங்க… நான் கூப்பிடுறேன்..” குமார் சொன்னான்.

“வேண்டாம் குமார்.., மீன் தொட்டி எங்க இருக்கு? நானும் பாக்கனும்..”, தேவா சொல்ல,

குமார்,“ஏங்கூட வாங்க.. இந்த ரூம்லதான் இருக்கு..”, என்று சொல்லி வழி நடத்த, தேவா பின் சென்றார்.

மீடியம் சைசில் ஒரு கண்ணாடித் தொட்டி. அதில் முக்கால் பாகத்துக்கும் மேலாகத் தண்ணீர். அதற்குள் கருப்பு, சிகப்பு, மஞ்சள், வெள்ளை… இப்படிப் பல கலர்களில் சின்னச் சின்ன அழகு மீன்கள். அவைகள் உற்சாகமாக அங்கும் இங்குமாக நீந்திக் கொண்டிருந்தன. தொட்டிக்குள் பச்சைக்கலரில் ஒரு பிளாஸ்டிக் தவளை. அது வாயைத் திறப்பதும் மூடுவதுமாய் ‘மூச்சு’ விட்டுக் கொண்டிருந்தது. வாயிலிருந்து வெளிவரும் காற்றுக் குமிழிகள் நீர் மட்டத்திற்கு மேல் வந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. தொட்டியின் கீழ்மட்டத்தில் கருப்பும், வெள்ளையுமாய் சிறு சிறு கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இருவகையான நீர்த்தாவரங்கள், பிளாஸ்டிக் கப்புகளில் தொட்டியில் வைக்கப் பட்டிருந்தன. தொட்டி பார்ப்பதற்கு மிககும் அழகாயிருந்தது..!

“குட்மார்னிங் தேவா..”

“குட்மார்னிங் மணி… என்ன இதெல்லாம் புதுசா..?”

“ஒன்னுமில்ல… குமார் கொஞ்ச நாளா கேட்டுக்கிட்டு இருந்தான். அதான் நேற்று சாயங்காலம் போய் வாங்கிட்டு வந்தேன்.. எப்படி இருக்கு?”

“நல்லா அழகா இருக்கு.. நான் கொஞ்சம் கைமாத்து கேட்டேன்லா, அதை வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்..”

“கொஞ்சம் இரு.. எடுத்துட்டு வாரேன்..” என்று கூறி மாசிலாமணி அடுத்த அறைக்குள் போனார்.

தனிமையில் தேவா வைத்த கண் வாங்காமல் மீன்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

திரும்பி வந்த மாசிலாமணி ஒரு கவரை தேவா கையில் கொடுத்து, “இதில் ஆயிரம் ரூபாய் இருக்கு..” என்று சொன்னார்.

“அடுத்த மாதம் தாரேன்,” என்று கூறி விடைபெற்றார் தேவா.

ஆபீஸில் இருக்கையில் அமர்ந்த தேவாவுக்கு, வேலை ஓடவில்லை. மனது பாரமாயிருந்தது. மீண்டும், மீண்டும் மீன் தொட்டியே கண்முன் வந்து போனது. மோகனும் இதைத்தானே கேட்டான்..? எல்லா பிரண்ட்ஸ் வீட்டிலும் இருக்கு… நம்ம வீட்டுக்கும் ஒன்னு வாங்கித் தாங்கன்னான். பாவம்.. காலைல கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் என்னமா சோர்ந்து போயிட்டான். எவ்வளவு வேதனையோடு பள்ளிக்கூடம் போயிருப்பான்..? இன்னைக்கு வகுப்பிலே, குமார், அவன் அப்பா அவனுக்கு மீன் தொட்டி வாங்கிக் கொடுத்ததைச் சொல்லியிருப்பான். சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் குமார் வீட்டுக்குப் போய் மீன் தொட்டியைப் பார்த்துட்டு வருவான். அவன் மனம் எவ்வளவு வேதனைப் படும்? நல்லா படிக்கிற பையன்.. இனி அவன் கவனம் படிப்பில் ஈடுபடுமா? பிஞ்சு மனம்..! ஏக்கம் அவன் மனதில் பாரமாய் படிந்து வடுக்களை அல்லவா உண்டாக்கிவிடும்…? இப்படியான எண்ணங்கள் தேவாவின் மனதில் அலை அலையாய் மோதின.

ஒரு முடிவுக்கு வந்தவராய் தேவா, பிற்பகலுக்கு அரைநாள் லீவு போட்டார். மாசிலாமணிக்கு போன் போட்டு கலர் மீன்கள் விற்கும் கடையைத் தெரிந்து கொண்டார்.

மதியத்திற்கு மேல் நேராக கலர் மீன் கடைக்குச் சென்றார். கூட்டம் இல்லை. சிறிதும் பெரிதுமாய் நிறைய வெற்று கண்ணாடித் தொட்டிகள் விற்பனைக்காய் இருந்தன. மற்றபடி, நீர் நிறைந்த பெரிய பெரிய கண்ணாடித் தொட்டிகளில், வகைக்கு ஒரு இனமாய் கலர் மீன்கள் ஒவ்வொரு தொட்டியிலும் இருந்தன. கோல்டு பிஷ், ஏஞ்சல் பிஷ், கப்பீஸ், பிளாக் மாலி, வொயிட் மாலி, பிளாட்டீஸ், இப்படியாக… மீன் வகைகள்..!

தேவா, பெரிய சைஸ் மீன் தொட்டி ஒன்று வாங்கினார். ஒவ்வொரு வகை மீனிலும் இரண்டு ஜோடி கேட்டார். கடைக்காரர் ஒரு பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பையில் தண்ணீர் நிரப்பி, அதில் கலர் மீன்களை வலை கொண்டு பிடித்துப் போட்டு, பிராணவாயுவையும் அடைத்து, பையின் வாயை ரப்பர் பேண்ட் போட்டு கட்டி, தேவா கையில் கொடுத்தார். பின்னும், நீர்த்தாவரங்கள், ‘மூச்சு’விடும் பிளாஸ்டிக் தவளை, மீன் பிடிக்கும் வலை, கூழாங்கற்கள், டப்பாவில் அடைக்கப்பட்ட மீன் உணவு, இவைகளையும் ஒரு பார்சலாகக் கட்டிக் கொடுத்து, ஒரு கணிசமான தொகையைக் கடைக்காரர் தேவாவிடம் பெற்றுக் கொண்டார்.

காலையில் மாசிலாமணியிடம் ஒரு அவசரக் காரியத்துக்காக கைமாற்று வாங்கிய பணம் இதற்கு உதவியது. எல்லா பொருட்களையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, அந்தக் கடையில் எடுபிடி வேலை செய்யும் சிறுவனையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு தேவா வீடு வந்து சேர்ந்தார். சிறுவன் பொருட்களையெல்லாம் இறக்கி வைத்தான்.

தேவாவின் மனைவிக்கு ஒரே ஆச்சரியம்! மோகன் கண்முன் தோன்றி மறைந்தான். சந்தோஷமாயிருந்தது! அதோடு கூட, வாழ்க்கையில் முதல் முறையாக, தான் கேட்டபடி தனக்காக தன் கணவர் ஒரு காரியம் செய்திருக்கிறார் என்பதாய் நினைத்துப் பூரித்துப் போனாள்! பாவம்..! காலையில் மாசிலாமணி வீட்டில் தேவா மீன் தொட்டி பார்த்தது… இதெல்லாம் பாக்கியத்துக்குத் தெரியாது..!

தேவா மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். அவரின் பேச்சும், செய்கையும் பெருமிதமாக இருந்தது. மனைவி அதை ரசித்தாள்!

மனைவியை ‘அதட்டலாக’, “பிளாஸ்டிக் வாளியில் நல்ல தண்ணி கொண்டு வா… மீன்தொட்டி மேல் காலை வெயில் விழனுமாம்… அதனால அந்த மேஜையை சுத்தப்படுத்தி இந்த ஜன்னல் பக்கம் போடு…, இப்படியான ஏவுதல்களோடு, கண்ணாடித் தொட்டியை மேஜை மேல் வைத்து, தண்ணீர் விட்டு, மீன்களை தொட்டிக்குள் குடியேற்றினார். சிறுவனும், பாக்கியமும் இதற்காக அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். சிறுவனுக்குப் பணம் கொடுத்து, நன்றி கூறி அனுப்பி வைத்தார். அதன் பின்பு கணவனும், மனைவியும் கண்ணாடித் தொட்டியில் கலர் மீன்கள் சுற்றிச்சுற்றி வலம் வருவதை இரசித்துக் கொண்டிருந்தார்கள்!

“அழகாருக்குல்ல…”, தேவா பேச்சில் பெருமை தொனித்தது!

“ஆமாங்க… இந்த மீன் பேர் என்னங்க…?”

சற்றும் எதிர்பாராத பாக்கியத்தின் இந்தக் கேள்விக்கு நிதானமாய் உண்மையைச் சொன்னார் தேவா, “எனக்குத் தெரியாது… இனிதான் தெரிஞ்சிக்கனும்..”

“இதுல ஆண் எதுங்க…? பெண் எதுங்க..? இதெல்லாம் முட்டை போடுமா..? குட்டி போடுமா..? என்ன இரை சாப்டும்…”

சட்டென கோபப்பட்ட தேவா, எரிச்சலுடன், “தெரியாதுன்னு சொன்னேன்லா… உன்னைப் போலத்தான் நானும்…”

மௌனத்தில் சில மணித்துளிகள் மறைந்தன.

“மோகனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்… இல்லையா..? அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும்… அப்புறம் நாமதான் இந்த மீன்களையும், தொட்டியையும் கவனிச்சிக்கனும். பத்திரமா பாதுகாக்கனும். அவன் படிப்பு இந்த மீன் தொட்டியால கெட்டுப் போகக் கூடாது… என்ன.. சரிதானே..?”, பேசும் போது தேவாவுக்கு தொண்டை கரகரத்தது..!

“அப்புறம்… சாயங்காலம் மோகன் வீட்டுக்கு வந்ததும் இந்த மீன் தொட்டியை திடீர்ன்னு பாப்பான்… ஒரு இன்ப அதிர்ச்சியாயிருக்கும்… ரொம்ப சந்தோஷப்படுவான்ல…? காலைல… பாவம் பிள்ள… ரொம்ப சோர்ந்து போயிட்டான்… இல்ல…?”

தேவாவின் கண்களில் உதித்த இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள், அந்த மீன் தொட்டியில் விழுந்து தண்ணீரோடு கலந்து போனது. அதைக் கண்டும் காணாதவள் போல் அந்த இடத்தை விட்டகன்றாள் பாக்கியம்… ஆம்…! அவள் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் கசிந்திருந்தது…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *